சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை

0 comments
கடந்த ஒருமாத காலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் மரபுவாதிகளைக் கொந்தளிக்கச் செய்யும் சர்ச்சைக்குரிய மூன்று தீர்ப்புகளை வழங்கியிருந்தது. மூன்றுமே பாலினம், பாலியல்  தொடர்பானவை. முதலாவது, ஒருபாலுறவு குற்றம் அல்ல. இரண்டாவது, திருமணத்துக்கு அப்பாலான கரவுத்தொடர்புகள் குற்றம் அல்ல. மூன்றாவது, சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதற்கு எவ்வித தடையும் இல்லை.
சபரிமலை ஐயப்பன் கோவில்.
  
முதல் இரு தீர்ப்புகளைப் பொறுத்தவரை, அவை மறைமுகமாகவோ சிறிய அளவிலோ ஏற்கனவே நம் சமூகத்தில் வழக்கில் இருந்து வந்தன. புராணங்களில் பாலினச்சிறுபான்மையினர் பற்றிய குறிப்பு எதுவும் தெளிவாக இல்லை. என்றாலும், ஆண் பெண்ணாக மாறுவது (மோகினி,  இளை), பெண் ஆணாக மாறுவது (சிகண்டி), திருநங்கைகள் (பிருகன்னளை) பற்றிய குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கின்றன. பத்தாம் நூற்றாண்டு கஜூராகோ கலவிச்சிற்பங்களிடையே ஆண்-ஆண் கலவியும், பெண்-பெண் கலவியும் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். திருமணத்துக்கு அப்பாலான உறவுகளுக்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான புராண - இதிகாசக் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. 

இதெல்லாம் ஏன் இன்று குற்ற உணர்வுடனும், ஒவ்வாமையுடனும் பார்க்கப்படுகின்றன? ஏனென்றால் இவை இன்றைய சமூக விழுமியங்களுக்கு அந்நியமானவை; பொருத்தமற்றவை. ஆனால் ஏதோ ஒரு காலத்தில், அவை நம் இதே சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்கமுடியாத அம்சங்களாக நிலவியிருந்திருக்கும். இதில் மரபுவாதிகள் அஞ்சுவதற்கு எதுவுமே இல்லை.  காலத்திற்கேற்றால் போல் ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒன்று இன்று தவிர்க்கப்படுகிறது என்பதற்காக, அது என்றுமே தவிர்க்கப்பட்டது, தவிர்க்கப்படவேண்டும் என்று அர்த்தம் இல்லை.  எதையும் காலமே தீர்மானிக்கிறது. இந்தத் தீர்ப்புகள் நடைமுறையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஆனால், சபரிமலை தொடர்பான மூன்றாம் தீர்ப்பு விடயத்தில் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. அதற்கு முன்பு ஒன்றைச் சொல்லவேண்டும். நான் சைவம் மீது பற்றுள்ளவன் என்ற வரையில் ஐயனை நேசிப்பவன். எனவே, சிவாகமப் புறம்பான ஐயப்ப வழிபாட்டில் ஆர்வமற்றவன். தலயாத்திரைக்கென நூற்றுக்கணக்கான தலங்களை தமிழ்ச்சைவர் பண்டுதொட்டே கொண்டிருக்கையில், நவீன ஊடக மற்றும் அரசியல் காரணங்களால் ஊக்குவிக்கப்படும் ஐயப்ப வழிபாடு மீது தனிப்பட்ட விமர்சனங்களும் உண்டு. 

ஆனால் இன்னொரு புறம்  ஐயப்ப பக்தர்கள் மீது பெருமதிப்பும் ஏற்பட்டு வருகிறது. கார்த்திகை மாதமானாலே இங்கு இலங்கையில் கூட கறுப்பாடைகளில் சுற்றிவரும் ஐயப்பன் அடியார்களைக் காண்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இளைஞர்கள். ஏனைய நாட்களில் குடி, புகை, கலாட்டா என்று வாழ்க்கையைக் கழிப்பவர்கள். ஆனால், ஐயப்ப விரத காலம் முழுவதும் அவர்களில் வந்து கூடும் அமைதியைக் கண்டால் வியப்பு ஏற்படும்.

சபரிமலை 2010 யாத்திரைக்காலத்தில்

இடையே நீங்கள் ஒரு குறுக்குக் கேள்வி கேட்கலாம். நாளெல்லாம் ரவுடித்தனம் செய்துவிட்டு நாற்பத்தெட்டு நாள் மட்டும் மாலை போட்டு நல்லவனுக்கு நடித்தால் போதுமா? நிச்சயம் போதும். அதற்குப் பெயர் பயிற்சி. சமயத்தின் பெயரில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் மரக்கறி உணவு உண்டு, ஏனைய நாட்களில் மாமிசம் உண்டு பம்மாத்து காட்டுகிறீர்களே, அதனால் என்ன பயன்  என்று உங்களில் சிலர் கேட்கும் மொண்ணைத்தனமான கேள்விக்கும் பதில் இது தான். பயிற்சி.

பரமசாதுவான பிள்ளைப்பூச்சி ஒருவன் அமைதியாக இருந்தால் யாராவது வியப்படைவீர்களா?  ஒரு பிராமணன் மரக்கறி உணவை உண்டால் பார்த்து ஆச்சரியம் அடைவீர்களா? இல்லை, ஏனென்றால் அது இயல்பு. அமைதியானவனால் அமைதியாக இருப்பதோ, தொடர்ந்து மரக்கறி உணவை உண்பவன் அதே உணவை உண்பதோ கடினமான செயல் அல்ல. ஆனால் பயங்கர அட்டகாசம் செய்யும் ஒருவன் ஐந்தாறு நாள் அமைதியாக இருக்கிறான் என்றால், மாமிசம் தவிர வேறேதும் உண்ணாத ஒருவன் ஏழெட்டு நாள் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்காமல் இருக்கிறான் என்றால் ஊரே வாயில் விரல் வைக்கும். "அதெப்படி, சாத்தியமே இல்லையே?" என்று தானே நாம் கேட்போம்?

வாரத்துக்கொருநாள் மரக்கறி வழக்கத்தில் நான் காண்பது இதைத்தான். அசைவப்பிரியர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் அந்த ஒரு நாள் அதை முற்றாகத் துறந்து வாழ்கிறார்கள். அல்லது வாழ முயல்கிறார்கள். "வாரத்துக்கொரு நாள்" என்று விதியைப் போட்டு அன்று மட்டுமாவது மாமிசம் ஒறுத்து வாழமுயல்வது. முடியாவிட்டால் அடுத்தமுறை முயல்வது. இது மெல்ல மெல்ல, வாரத்துக்கு இரண்டு நாள், மூன்று நாள், நாளுக்கு ஒரு வேளை என்று அதிகரித்து இறுதியில் முற்றிலும் புலால் மறுத்தோராக வாழ்வதற்கான பயிற்சியை வழங்கும். ஐயப்ப விரதம் என்பதும் அதே கதை தான். முரடர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் ஆறு வாரங்கள்! இன்று அவர்கள் எப்படி என்றாலும் என்றோ ஒருநாள் அவர்கள் சீர்திருந்துவார்கள். அந்த விரதம், அந்தப் பயிற்சி, அவர்களை சீர்திருந்த வைக்கும்.

சரி, மீண்டும் சபரிமலை விடயத்துக்கு வருவோம். இன்றைய நவீன உலகில் மதத்தின் பெயரில் பாலினப் பாகுபாடு காட்டுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தகாததே. சபரிமலையில் பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு அந்த விதத்தில் வரவேற்கத்தக்கது. ஆனால், பொதுச்சமூக மனப்பான்மையில் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?

உண்மையில் சபரிமலையில் பெண்கள் நுழைவது தடை என்பது மேம்போக்கான குற்றச்சாட்டு. பருவமடைந்ததிலிருந்து விலக்குநிறுத்தம் (Menopause) வரையான காலப்பகுதி மட்டுமே அங்கு பெண்கள் நுழைய முடியாது. பெண்குழந்தைகளும் முதிய பெண்டிரும் இன்றும் அங்கு வழிபட்டு வருகிறார்கள். ஐயப்பன் மணவொறுப்பு (பிரமச்சர்யம்) கைக்கொண்ட தெய்வம் என்பது அதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, ஆணையோ, பெண்ணையோ தன் வழிபாட்டுக்கு அனுமதிக்காத தெய்வங்கள் இன்றும் நிறைய உண்டு. சபரிமலை அமைந்துள்ள அதே கேரளத்தின் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் அவர்களில் குறிப்பிடத்தக்கவள். அவள் உண்மையில் கண்ணகி. ஆண்குலத்தால் வஞ்சிக்கப்பட்ட அன்னைத்தெய்வமொன்றின் கடுங்கோபத்துடன் அங்கு வீற்றிருக்கிறாள். மாசி மாதம் அங்கு இடம்பெறும் பொங்காலா வைபவத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. ஆண்கள் கோவில் வளாகத்தில் என்ன, ஊருக்குள்ளே கூட நுழைய முடியாது. அதுவே அங்கு விதி. அது ஆணின் எந்த உரிமையையும் பறிக்கவில்லை. அதில் -  அந்த நம்பிக்கையில் பாலினப்பாகுபாடு, பாலினச்சமத்துவம் என்றெல்லாம் புரட்சி பேசிக்கொண்டு ஆண்கள் உள்நுழைந்தால் அந்தக் குறியீடு, அந்தப் படிமம் என்ன ஆவது?
ஆற்றுக்கால் பொங்காலா -  பெண்களாலான உலகு.

இன்றும் கிழக்கிலங்கையின் சில கிராமங்களில் கண்ணகிக்குக் கொம்புமுறிக்கும் போது அப்பகுதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொம்புமுறி மழை வேண்டி நிகழும் ஒரு வளச்சடங்கு. ஆணும் பெண்ணும் பத்தியம் காத்து பிள்ளை பெறுவது போல் வானாகிய தந்தைத் தெய்வமும் மண்ணாகிய அன்னைத் தெய்வமும்  ஊடல் முறிந்து கலவி கொள்ளவேண்டும்; மழை எனும் உயிர்த்துளிகளை மண் அன்னை மீது வான் தந்தை பொழியவேண்டும் என்பதே கொம்புமுறியின் மானுடவியல் நோக்கு. கொம்புச்சந்தி ஆண்களால் மட்டுமே ஆனது. பாலியல் கிளர்ச்சியூட்டும் பாடல்களும், ஆபாச வார்த்தைகளும் அங்கு சர்வசாதாரணம். ஆனால், கொம்புமுறி என்பது மழைவேண்டி பத்தியம் காக்கும் ஒரு விரதம். எனவே பெண்கள் விலக்கப்படுகிறார்கள். கொம்புமுறியின் இறுதி நாட்களில் அவர்கள் அங்கு வரலாம். ஊடல் தவிர்ந்து தத்தம் ஆடவருடன் கூடல் கொள்ளலாம். வெளியே மழைத்துளிகள் பெருகும்; வீடுகளில் உயிர்த்துளிகள் பெருகும். 

தமிழகத்தின் சில ஔவையாரம்மன் கோவில்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குமரிப் பகுதியில் பெண்கள் ஆடி மாதம் கடைப்பிடிக்கும் அவ்வை நோன்பைப் பார்க்கவோ கலந்துகொள்ளவோ ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வடநாட்டின் கார்த்திகேய மந்திர்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. "ஆண்வாடை" பிடிக்காமல் காட்டிலும் ஊர் ஒதுக்குப்புறத்திலும் போய் அமர்ந்துகொண்ட காளிகள், பேச்சிகள் பற்றிய கதைகளை இன்றும் கிராமப்புறங்களில் கேட்கலாம். இதெல்லாம் அந்தந்தத் தெய்வங்கள், அவை சார்ந்த தொன்மங்கள் உருவாக்கி வைத்திருக்கும் குறியீடுகள், படிமங்கள். அவற்றை மறுதலிப்பது என்பது அந்தத் தெய்வத்தின் தனித்துவத்தை இல்லாமல் செய்கின்ற காரியங்கள். தெய்வத்துக்கு அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. பாதிப்பு என்னவோ அவற்றை வழிபடுகின்ற பாமர மக்களுக்குத் தான்.  

சபரிமலை ஐயப்பன் கோவில், உண்மையில் ஒரு ஐயனார் கோவிலே. கேரளத்து தாந்திரீக வழிபாட்டு நடைமுறை மாற்றங்களால் அது ஐயப்பனை தனித்துவமான தெய்வமாக மாற்றிக்கொண்டது.  1940களுக்குப் பின்பு திரைப்படங்கள், வெகுசன ஊடகங்கள் கொடுத்த விளம்பரங்கள் என்பன காரணமாக யாத்திரைத் தலமாகப் புகழ்பெறத் தொடங்கியது. ஆயினும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள மரபின் படி, அந்த இறைவன் மணவொறுப்பு நோன்பு கொண்டவன். எனவே அவனைப் பெண்கள் நெருங்கக்கூடாது. அவனை வழிபடும் அடியவர்களும் மணவொறுப்பும் கடுமையான விரதங்களும் மேற்கொண்டே அவனைத் தரிசிக்கச் செல்லவேண்டும்.  

கேரளத்தின் பழைய ஐயன் கோவில்கள் பல இன்று ஐயப்பன் கோவில்களாகவே அடையாளம் காணப்படுகின்றன. எனினும் அங்குள்ள மூலவர்கள் "தர்மசாஸ்தா" என்ற பெயரில் தம் பழைய ஐயன் அடையாளத்தை எஞ்சவைத்திருக்கிறார்கள். (சாஸ்தா என்பது ஐயனின் "சாத்தன்" எனும் பெயரின் வடமொழி மரூஉ.) குளத்துப்புழாவில் வீற்றிருக்கும் தர்மசாஸ்தா பாலகன். அதே போல், அச்சன்கோவில் எனும் தலத்தில், பூரணை, புஷ்கலை எனும் இரு தேவியருடன் வீற்றிருக்கும் தர்மசாஸ்தா  மணக்கோலநாதன். அங்கெல்லாம் பெண்கள் சென்று வழிபடத் தடையில்லை. ஆனால், சபரிமலை போல்  தர்மசாஸ்தா மணவொறுப்பு நோன்பு மேற்கொண்டுள்ள ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலிலும் பத்து முதல் ஐம்பது வரையான வயதுள்ள பெண்கள் உள்நுழைய முடியாது.

ஆணும் பெண்ணும் ஒருவர் இன்னொருவருக்கு கீழடங்குபவர் அல்லர். ஒருவரை ஒருவர் நிரப்புவதாலேயே ஒருவருக்கொருவர் சமனானவர், ஒருவர் இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாதவர்.  மற்றும்படி, ஆண் ஆண் தான்; பெண் பெண் தான்.  அதற்கு மேல் இயற்கையாலோ அறிவியலாலோ வேறெந்த விதத்திலும் அந்தச் சமத்துவத்தை நிரூபிக்கமுடியாது என்பதே உண்மை.   இந்த விடயத்தில் பெண்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்படவும் இல்லை. இன்றும் பெண்கள் உலாவும் ஐயப்ப அடியவர்கள் பலரது வீடுகளில் ஐயப்பனின் உருவப்படம் வைத்து வழிபடப்படுகிறது. ஐயப்பன் பெயரில் தமிழகத்திலும் இலங்கையிலும் உருவாகியுள்ள ஓரிரு ஆலயங்களிலும் பெண்கள் சாதாரணமாகத் தான் சென்று வருகிறார்கள். 

குறிப்பிட்ட பாலினத்தவர் குறித்த தெய்வத்தின் கோவிலுக்குள் நுழையமுடியாது, நுழையக்கூடாது என்பது மிகத்தொன்மையான நாட்டார் நம்பிக்கை. ஆண்மை, பெண்மை சார்ந்த சிக்கலான மானுட உறவுகள் மோதும் சமர்க்களங்கள் அவை. அவற்றின் குறியீட்டு அழகியலை இரசிக்கலாமே தவிர,  பாலினச்சமத்துவம் முதலான நவீனக்கொள்கைகளை அங்கு திணிப்பது அர்த்தமற்றது. அப்படி, பாலினச்சமத்துவம் தான் நோக்கம் என்றால் அதேபோல் பெண்கள் 'ஒடுக்கப்படும்'  ஆரியங்காவு மீதோ, ஆண்கள் 'ஒடுக்கப்படும்' ஆற்றுக்கால் மீதோ ஏன் இத்தகைய நீதிமன்ற வழக்குத்தாக்கல்கள் செய்யப்படவில்லை? சிக்கல், சபரிமலை ஒரு சுற்றுலாத்தலம் போல் மாறிவிட்டது என்பது தான். அந்தக் கொண்டாட்ட மனநிலையை, சிலர் பெண் என்ற ஒரே காரணத்தால் ஏன் அனுபவிக்கக்கூடாது என்று கேட்கும் அறியாமை.

காலவோட்டத்தில் இத்தகைய நம்பிக்கைகள் இயல்பாக மாற்றமடைய வாய்ப்புகள் அதிகம். ஐயப்பனை மணமுடிக்கக் காத்திருக்கும் மஞ்சள்மாதாவின் வேண்டுகோள் ஐயனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தொன்மத்தை ஏற்றி அதை நிகழ்த்திக்காட்டவும் முடியும். அப்படி இயல்பாக நிகழும் போதே அதை சமூகக்கூட்டுமனம் ஏற்றுக்கொள்ளும். அதை விடுத்து, இப்படி சட்டம் போட்டு  நம்பிக்கையைச் சீண்டுவதை, தன் அடிவயிற்றில் கைவைப்பதாகவே அடியவன் ஒருவன் உணர்வான். அதன் விளைவுகள் விரும்பக்கூடியவை அல்ல. ஐயனுக்கு நீதிமன்று தீர்ப்பளித்து விட்டது. மாளிகைபுரத்தம்மைக்கு அவன் தீர்ப்பு என்ன?

ஐயப்பனுக்காக காத்திருக்கும் மாளிகைபுரத்தம்மை 



மேலும் வாசிக்க »

இலங்கைத் தமிழ் அடையாளமும் சைவமும்

0 comments
இலங்கைத் தமிழரின் இன அடையாளத்தில் மதத்தின் பங்களிப்பு என்ன? இந்தத் தலைப்பிலான விவாதத்தை முன்பொருமுறை எங்கோ வாசித்த நினைவு. அதைத் தொகுத்து அப்போது நான் புரிந்துகொண்டது இது. இணைய விவாதங்களில் இப்போது சிறிது கூட நம்பிக்கை இல்லை என்ற நிலையிலும், இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் கருதி இங்கு இதைப் பதிவுசெய்ய விழைகிறேன்.

திருக்கோணமலைக் கடலில் பழைய கோணேச்சரத்தின்  எச்சங்கள் 





1. உலகின் 90 வீதமான இனங்கள், மொழி சார்ந்தே தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. தேசியம், இனத்துவ அடையாளம் என்பன பொதுவாக மொழி சார்ந்தவையே.

2. இன அடையாளம் பேசும் மொழி சார்ந்தது என்பதால், மதம், சாதி, பிரதேசம் சார்ந்த ஏனைய அடையாளங்களை நிராகரிக்கும் முற்போக்குவாதிகள் கூட, மொழிசார்ந்த இனத்துவ அடையாளங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். எதிர்காலத்தில் தொழிநுட்பம் சார்ந்த ஒரு பண்பாட்டுப் புரட்சி ஏற்படும் போது, அதுவும் அழிந்து போகும், அதுவரை வேறு வழியில்லை என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.

3. ஆனால் இன அடையாளம் எப்போதும் மொழி சார்ந்து இருப்பதில்லை. முன்பும் சுட்டிக்காட்டிய பல உதாரணங்கள் இருக்கின்றன. மூன்றை முக்கியமாகச் சொல்லலாம்.
அ) ஒரேமொழியைப் பேசியபடி ருவாண்டாப் படுகொலையை மாறிமாறி நிகழ்த்திய டுட்சி, ஹூடு இனங்கள், 
ஆ) ஒரேமொழியின் வட்டார வழக்குகளைப் பேசியபடி யூகோஸ்லாவியாவின் உடைவுக்கு வழிவகுத்த சேர்பிய, பொஸ்னிய, குரோசிய இனங்கள்.
இ) பேஜா, அரபு, திக்கரே எனும் 3 மொழிகளைப் பேசினாலும் தம்மை ஒரே இனமாகக் காட்டிக்கொண்ட சூடானின் பேஜா இனம்.

4. இந்த இடங்களில், மொழி, இன அடையாளத்தைக் கட்டமைக்கவில்லை என்றால், அந்த அடையாளத்தைக் கட்டமைத்தது எது?
அ) ஹூடுக்கள் கிறிஸ்தவ மதமாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட பெரும்பான்மை உழைப்பாளர் சமூகம். டுட்சிகள், மதமாற்றத்தை எதிர்த்த சிறுபான்மை அரச குடும்பங்கள். (இன்று எல்லோருமே கிறிஸ்தவர்கள் தான்) .
ஆ) சேர்பியர்கள் பழைமைவாதக் கிறிஸ்தவர்களாகவும், குரோசியர்கள் கத்தோலிக்கர்களாகவும், பொஸ்னிக்குகள் இஸ்லாமியராகவும் இருந்தனர். 
இ) வெவ்வேறு மொழி பேசும், பேஜாக்கள் தம்மை ஒன்றிணைக்கும் பாலமாகக் கண்டுகொள்வது, தாம் அனைவரும் பின்பற்றும் இஸ்லாத்தை.

5. ஆக, சில இடங்களில் மொழியை விட வலுவான இனக்கட்டமைப்பு அலகாக மதம் இருந்திருக்கிறது, இருக்கவும் முடியும்.

6. இலங்கையைப் பொறுத்தவரை, பெரும்பான்மை இனமான சிங்களவர், பௌத்தம் சார்ந்தே தம்மை முன்னிறுத்துகின்றனர். இன்னொரு சிறுபான்மை இனமான சோனகரும் இஸ்லாம் சார்ந்தே தம்மை தனி இனமாகக் காட்டிக்கொள்கின்றனர்.

7. பௌத்த, இஸ்லாமிய முனைவாக்கங்கள் தமிழர் நிலங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதை விளக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இலங்கைத்தமிழர் மொழி சார்ந்தே தம்மைத் தனி இனமாகக் கட்டமைத்தவர்கள்.

8. தமிழரின் பெரும்பான்மைச் சமயம் என்ற இடம் சைவத்துக்கு உண்டெனினும், அதை தமிழ் அடையாளத்தோடு முன்வைப்பதில் எவரும் அத்தனை தீவிரமாக இருந்ததில்லை. இன்றும் தமிழ் முற்போக்குவாதிகளும், இடதுசாரிகளும் அந்தத் தரப்பை வெறுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

9. ஆனால், மும்முனைச் சமர்க்களத்தில் இரு சமூகங்கள் இனம், மதம் எனும் இரு ஆயுதங்களுடன் நிற்கும் போது, தமிழர் மட்டும் மதம் என்ற ஆயுதமின்றி எதிர்ப்பதன் வெற்றிடம் பலருக்கும் புரிவதில்லை. அதன் விளைவு இப்போது புரியப்போவதும் இல்லை.

10. இலங்கைத் தமிழரின் பண்பாடு என்பது சைவப்பண்பாடே. விளக்கேற்றுவது, பன்னீர், சந்தனம், குங்குமம் கொடுப்பது, நிறைகுடம் வைப்பதிலிருந்து தாம்பூலம் தரிப்பது வரை, சைவத்தில் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளே.

11. இலங்கை இனப்போராட்டத்தில், தமிழர் சார்பில் முன்னின்றவர்களில், தமிழ் பேசும் கிறிஸ்தவருக்குள்ள வகிபாகத்தை மறுப்பதற்கில்லை. ஆனால் சிங்களபௌத்தம், சோனக இஸ்லாம், என்பன போல, மூன்றாம் இனத்தின் அடையாளமாக முன்னிறுத்த வேண்டியது, தமிழ்ச்சைவம்.

12. இங்கு கிறிஸ்தவத்தை பின்னுக்குத் தள்ளுவதில் இன்னொரு காரணமும் இருக்கின்றது. இலங்கையில் கடந்த நூறு ஆண்டுகளுக்குள் பாழடைந்த ஒரு கிராமத்துக்குள் செல்கிறீர்கள். ஒரேயொரு வழிபாட்டிடத்தின் இடிபாடுகள் எஞ்சியிருக்கிறது. அது ஒரு விகாரை என்றால் அது சிங்களக்கிராமம். ஒரு மசூதியின் சிதைவுகள் தென்பட்டால், அது இஸ்லாமியக்கிராமம். ஒரு கோவிலின் எச்சங்கள் காணப்பட்டால் அது தமிழ்க்கிராமம். அதுவே ஒரு தேவாலயத்தின் இடிபாடுகள் என்றால்? தமிழ்க்கிராமம் என்பதா? சிங்களக்கிராமம் என்பதா?

13. சில சிங்கள கத்தோலிக்கர்களைச் சந்தித்திருக்கிறேன். "ஆனால் நாங்கள் புத்தரை நேசிக்கும் குடும்பம். நண்பர்களோடு சிலவேளைகளில் விகாரைக்கும் போவதுண்டு" என்பார்கள். தமிழ்க்கத்தோலிக்கரது பொதுவான நிலைப்பாடும் அதுவே.

14. இலங்கையின் சைவக் கோவில் திருவிழாக்களில் கத்தோலிக்கர்கள் கலந்துகொள்வதுண்டு. அங்கு திருநீறு தரிப்பதில்லை. தெய்வங்களை வணங்குவதில்லை. ஆனால் பொட்டுவைத்து பூச்சூடி, வேட்டி கட்டி, மாமிசம் விலக்கி சைவரோடு கைகோர்த்து நிற்பார்கள். சிங்களக் கத்தோலிக்கன் எந்தளவு பௌத்தப் பண்பாட்டை நேசிக்கிறானோ, ஒரு தமிழ்க்கத்தோலிக்கனும் அந்தளவு சைவப்பண்பாட்டை நேசிக்கிறான். (நான் பார்த்தவரை! ஏனைய கிறிஸ்தவர்களுக்கோ வேறு கத்தோலிக்கருக்கோ அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம்.)

15. தனிப்பட்ட ரீதியில், அரசியல் என்பது மதச்சார்பின்மை கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம், அது சைவமாகவே இருந்தாலும் கூட. இந்த "மதச்சார்பின்மை" என்பது தமிழக திராவிடக் கட்சிகள் நடத்திக்காட்டிய "மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம்" கணக்கான மதச்சார்பின்மை அல்ல. அரசு இயந்திரம் ஒரு மதத்தைச் சார்ந்து இயங்கியபடியே, ஏனைய எல்லாச் சமயங்களுக்கும் சம முன்னுரிமை கொடுக்கும் மத(ப்பக்க)ச்சார்பின்மை.

16. சைவம் மீது கொள்ளும் நம்பிக்கைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கிருமிகண்ட சோழன், கலிங்க மாகோன் ஆகிய இருவர் தவிர, சைவத்தின் வரலாற்றில் எதிர்மறையாகப் பதிவு செய்யப்பட்ட மன்னர்கள் இருந்ததில்லை. தமிழ்நாட்டின் சோழர், பாண்டியரிலிருந்து, இந்தோனேசியாவின் மஜாபாகித் பேரரசு, கம்போடியாவின் கெமர் பேரரசு வரை, சைவம் ஒப்பீட்டளவில் சமத்துவமான அரசாட்சியையே எல்லாச் சமய மக்களுக்கும் கொடுத்திருக்கிறது.

17. ஆக, தமிழரின் இனத்துவ அடையாளத்தில் எவ்வித தயக்கமுமின்றி சைவத்தையும் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த சைவம் ஒரு மறுபரிசீலனைக்குள்ளான, தனது பிற்போக்கான அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்காத, அதிகாரத்தில் இருப்பவர்களின் நம்பிக்கைகளை மற்றவர்களுக்கும் திணிக்காத, இலட்சிய சைவமாக இருக்கவேண்டியது அவசியம்.

18. "சைவத்தை வளர்த்தல்" என்றாலே நம்மவர்கள் "மதமாற்றத்தை ஒழித்தல்" என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். எதிர்க்கும் பலர் "பிராமண ஆதிக்கத்தை அதிகரித்தல், இந்துத்துவ அரசியலை முன்னெடுத்தல்" என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். சைவத்தை ஆதரித்தோ எதிர்த்தோ இங்கு கூக்குரலிடும் பலருக்கு சமயமே தெரியாது. அவ்வளவு ஏன், அடிப்படை "பஞ்சபுராணமே" கூடப் பாடத் தெரியாது.

எதிர்ப்பவர்களுக்கோ ஆதரிப்பவர்களுக்கோ சமயம் ஒழுங்காகத் தெரியாது என்பது முதலாவது பிரச்சினை. இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து தமிழ்ச்சைவ அடையாளத்தை சகல சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் தளங்களிலும் முன்னிறுத்துவது எப்படி என்பது இரண்டாவது பிரச்சினை. சிங்கள பௌத்த அடையாளத்துக்குள் சிங்கள கிறிஸ்தவர்கள் எத்தகைய பாதுகாப்பையும் ஒன்றிணைவையும் உணர்கிறார்களோ, அதே பாதுகாப்பையும் ஒன்றிணைவையும் தமிழ்க் கிறிஸ்தவர்கள் உணர்வதற்கான சுதந்திர வெளியையும் உத்தரவாதத்தையும் தமிழ்ச்சைவர்கள் ஏற்படுத்திக்கொடுப்பது எப்படி என்பது மூன்றாவது பிரச்சினை.

கல்லில் நார் உரிக்கும் வேலை தான். ஆனால், வாழை, கல் போல் தோற்றமயக்கம் காட்டும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.
மேலும் வாசிக்க »

சின்னக்கலட்டி டெலே - ஓர் ஆணவம் அழிந்த கதை!

2 comments
பழைய இடச்சு இலங்கை வரைபடமொன்றில் கிழக்குக் கரையில் முனைப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்த இடங்களில் ஒன்று, Chinnacalatte delle. சொல்லிப்பார்த்தால் சின்னாகலட்டே டெல்லே என்றோ சின்னச்சலட்டே டெல்லே என்றோ ஒலித்தது. இன்னொரு இடச்சு வரைபடத்தில் அதே பெயரில் அமைந்திருந்த இடச்சுக் கோட்டை ஒன்றின் படம் சித்தரிக்கப்பட்டிருந்தது.

17ஆம் நூற்றாண்டு இடச்சு வரைபடமொன்றில், Chinnecalette delle

Chinnecalette Delle கோட்டை வரைபடம், 1695ஆம் ஆண்டு.

கண்டி அரசு, 1672இல் இக்கோட்டை மீது படையெடுத்திருக்கிறது என்ற செய்தியை இன்னொரு குறிப்பு சொல்லியது. ஆக,  அந்த இடம், ஏதோ ஒருவிதத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரிந்தது.  ஆனால் நிச்சயமாக அந்த ஊரின் இன்றைய பெயர் அது இல்லை. அந்தப் பெயரில் எந்தவொரு ஊரும் கிழக்கில் இன்று அழைக்கப்படவில்லை. அந்த இடம் எது?  தேடுதல் வேட்டை தொடங்கியது.


மேலே நாம் பார்க்கும் 17ஆம் நூற்றாண்டு வரைபடத்தில், அந்த இடத்துக்கு அருகே கல்முனை, பாண்டிருப்பு ஆகிய  ஊர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே அந்த ஊர் இன்றைய கல்முனைக்கு அத்தனை தூரத்தில் இருந்திருக்கமுடியாது. கிழக்கிலங்கை என்பதால் நிச்சயமாக அது தமிழ்க்கிராமம் தான்.  “கின்னா”, “கலட்டி”, “டெல்லே”, “சின்னா”, “சலட்டே”, “டெல்” இந்தச் சொற்கள், அல்லது இவற்றை ஒத்த தமிழ்ச்சொற்கள் ஏதாவது ஒலிக்கும் ஊர்கள் கல்முனைக்கு அருகில் இருக்கின்றனவா?

கீழைக்கரையிலுள்ள கல்முனை நகரமும் அதன் அயல் ஊர்களும்
(கூகிள் வரைபடம்)

Chinnacalatte delle...... “சின்ன” என்ற சொல் கவனத்தை ஈர்க்கிறதே? “சின்ன” என்று தொடங்கும் ஊர்கள் ஏதாவது? ஊகூம். அப்படி ஒன்றும் அந்தப்பக்கம் இல்லை.  சரி. மாறி யோசித்துப் பார்ப்போம் ‘சின்ன’ இருந்தால் பக்கத்தில் ‘பெரிசு’ ஏதாவது இருக்கவேண்டும். “பெரிய” என்று தொடங்கும் ஊர்கள் ஏதாவது? "பெரிய நீலாவணை" இருக்கிறது. பக்கத்தில் "துறைநீலாவணை"யும் இருக்கிறது. ஒருவேளை துறைநீலாவணையாக இருக்குமோ? 

சின்னநீலாவணை.... Chinnacalatte.... ம்ம்… ஒலிப்பு ஒத்துவரவில்லையே. அது ஒருபக்கம் இருக்கட்டும், வேறேதாவது பெரிசு...?  ஓ! “பெரிய கல்லாறு” இருக்கிறது. பக்கத்தில் “கோட்டைக்கல்லாறு”! சொல்லிப்பார்ப்போம் Cinnacalatte.. சின்னக்கல்லாற்று….! அட, அதேதான்! “delle” என்ற சொல் புரியவில்லை. “தலை” என்றோ “தாழை” என்றோ சொல்லிப்பார்த்தால் ஒலிப்பு சந்தேகத்துக்கு இடமின்றி ஒத்துப்போகிறது.  Cinnacalatte delle… சின்னக்கல்லாற்று தலை/தாழை.

கோட்டைக்கல்லாறு, கூகிள் வரைபடம்.

கண்டி அரசிடமிருந்து கீழைக்கரையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் புலியன்தீவிலிருந்து (இன்றைய மட்டுநகர்) காத்தான்குடி வரையான சிறு நிலப்பரப்பை மாத்திரமே தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். அவர்களின் கோட்டையை 1638இல் கைப்பற்றிய ஒல்லாந்தர் ஏனைய மட்டக்களப்பின் பகுதிகளுக்கும் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தினர். மட்டக்களப்புத் தேசத்தின் மத்தியில்  போரைதீவுப்பற்று, எருவிற்பற்று, கரைவாகுப்பற்று ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் மத்தியில், மட்டக்களப்பு வாவியின் முகத்துவாரங்களை ஒட்டி இருந்த சிறுதீவான  சின்னக்கல்லாறு முக்கியமான புவியியல் அமைவைப் பெற்றிருந்தது. அங்கு ஒல்லாந்தர்கள் கோட்டை ஒன்று கட்டிக்கொண்டார்கள். வேறு காரணங்களால் 1680களில் மட்டக்களப்பின் தலைநகரை புளியந்தீவிலிருந்து காரைதீவுக்கு மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, சின்னக்கல்லாற்றுத் தலையிலிருந்த ஒல்லாந்து வீரர்களை காரைதீவுக்கு வரவழைப்பது என்ற முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. (அது செயலாக்கம் பெறவில்லை) 

ஒல்லாந்தரின் கோட்டை அமைந்திருந்த இந்த சின்னக்கல்லாறு பின்னாளில் கோட்டைக்கல்லாறு ஆனது. இன்று அங்கு கோட்டை எதுவும் இல்லை. எனினும் கோட்டையொன்று இருந்ததன் அடையாளமாக "கோட்டைவாசல் வீதி" என்ற பெயர் இன்றும் அங்கு வழக்கத்தில் உள்ளது.
கோட்டைக்கல்லாற்றில் இன்றும் உள்ள கோட்டைவாசல் வீதி.

இதையெல்லாம் நுணுகி ஆராய்ந்தபின், எனக்கோ பெருமை பிடிபடவில்லை. முக்கியமான வரலாற்றுத் துருப்பைக் கண்டுபிடித்த பெருமிதம். வரலாற்றில் மறைந்த ஒரு ஊரைத் தோண்டிக் கண்டறிந்த பேரானந்தம். யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு ஓடவேண்டும் போல் இருந்தது. எல்லாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும் வரையில் தான்.


பேர்குசனின் நூலின் 1998 இரண்டாம் பதிப்பின் அட்டைப்படம். 

The Earliest Dutch Visits to Ceylon” என்பது, 1927-1930 காலப்பகுதியில் பிரசுரமான நூல். எழுதியவர்  டொனால்ட் வில்லியம் பேர்குசன்.  ஸ்கொட்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட ‘பேர்குசன்’ வம்சாவளியில் 1853இல் பிறந்த ஆய்வாளர். தமிழ், சிங்களம் உட்பட பத்து மொழிகளில் வல்லுநராக இருந்த அவர் இலங்கை வரலாற்றில் பல ஆய்வுகள் செய்து நூல்களை வெளியிட்டார். 1910இல் அவர் இறந்தபின்னரும் அவரது சேகரங்கள் தனி நூல்களாக வெளியாகின. அப்படி அவர் மறைந்தபின்னர், அவரால் மொழிபெயர்க்கப்பட்ட இடச்சு ஆவணங்களின் தொகுப்பாக வெளியான நூல் தான் இந்த "The Earliest Dutch Visits to Ceylon." அந்த நூலில் "Chinnacalatte" என்ற சொல் இடம்பெறும் ஓரிடத்தில் அடிக்குறிப்பாக இப்படிச் சொல்கிறார் பேர்குசன்.

“வான்கூலன் என்பவரது வரைபடத்தில் Chinnacalatte எனும் சிறுதீவும் அதன் அருகே Periacalette எனும் இடமும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே இவை இரண்டும் சந்தேகமின்றி இன்றைய கோட்டைக்கல்லாறும் பெரியகல்லாறும் தான்.”

இன்று ஹாயாக கணினி முன் அமர்ந்துகொண்டு இலவச மின்னூல்களை, இலவச வரைபடங்களைச் சாதாரணமாகத் துருவிக்கொண்டு நான் கண்டறிந்த “Chinnacalatte =  கோட்டைக்கல்லாறு” என்ற வரலாற்றுச் செய்தியை, குறைந்தது நூற்றியெட்டு ஆண்டுகளுக்கு முன், எவ்வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில், இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் கப்பலில் நாயாய் பேயாய் அலைந்தபடி, வேற்றுமொழி ஆவணங்களை மொழிபெயர்த்து, வரைபடங்களை ஒப்பிட்டுக் கண்டுபிடித்து, எவ்வித அலட்டலும் இல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார் ஒரு மனிதர்.
டொனால்ட் வில்லியம் பேர்குசன்
(நன்றி: archeology.lk)

இந்தத் தலைக்கனம் தான் எத்தனை பெரியது! நூறுநூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரின் உழைப்பை உணராமல், அவர்கள் சிந்திய வியர்வையை அறியாமல், எத்தனை இலகுவாக, நான் செய்தேன் நான் செய்தேன் என்று கூவியபடி கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர முடிகின்றது! காலமெனும் முடிவிலிக்கு முன், கண்முன்னே பிறந்திறந்து மடியும் எறும்பு போலத்தானே நாம் என்பதை  எத்தனை எளிதாக மறந்துவிடுகிறோம்? 

டொனால்ட் வில்லியம் பேர்குசன்…..
வெட்கித் தலைகுனிகிறேன் ஐயா.
நூறாண்டுகள் பிந்தி வந்தவன்,
அந்த நூறாண்டுகள் பிந்திய என் சிற்றறிவை மன்னிக்குக. 
எங்கிருந்தோ வந்து, எவன் நாட்டுக்காகவோ உதிரத்தை அர்ப்பணித்த
உம் உழைப்பை, உயர்வை, உன்னதத்தைப் பணிகிறேன். 
“இத்தர்மம் இரட்சித்தான் அடி என் முடி மேலினே.”
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner