இலங்கைத் தமிழ் அடையாளமும் சைவமும்

இலங்கைத் தமிழரின் இன அடையாளத்தில் மதத்தின் பங்களிப்பு என்ன? இந்தத் தலைப்பிலான விவாதத்தை முன்பொருமுறை எங்கோ வாசித்த நினைவு. அதைத் தொகுத்து அப்போது நான் புரிந்துகொண்டது இது. இணைய விவாதங்களில் இப்போது சிறிது கூட நம்பிக்கை இல்லை என்ற நிலையிலும், இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் கருதி இங்கு இதைப் பதிவுசெய்ய விழைகிறேன்.

திருக்கோணமலைக் கடலில் பழைய கோணேச்சரத்தின்  எச்சங்கள் 





1. உலகின் 90 வீதமான இனங்கள், மொழி சார்ந்தே தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. தேசியம், இனத்துவ அடையாளம் என்பன பொதுவாக மொழி சார்ந்தவையே.

2. இன அடையாளம் பேசும் மொழி சார்ந்தது என்பதால், மதம், சாதி, பிரதேசம் சார்ந்த ஏனைய அடையாளங்களை நிராகரிக்கும் முற்போக்குவாதிகள் கூட, மொழிசார்ந்த இனத்துவ அடையாளங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். எதிர்காலத்தில் தொழிநுட்பம் சார்ந்த ஒரு பண்பாட்டுப் புரட்சி ஏற்படும் போது, அதுவும் அழிந்து போகும், அதுவரை வேறு வழியில்லை என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.

3. ஆனால் இன அடையாளம் எப்போதும் மொழி சார்ந்து இருப்பதில்லை. முன்பும் சுட்டிக்காட்டிய பல உதாரணங்கள் இருக்கின்றன. மூன்றை முக்கியமாகச் சொல்லலாம்.
அ) ஒரேமொழியைப் பேசியபடி ருவாண்டாப் படுகொலையை மாறிமாறி நிகழ்த்திய டுட்சி, ஹூடு இனங்கள், 
ஆ) ஒரேமொழியின் வட்டார வழக்குகளைப் பேசியபடி யூகோஸ்லாவியாவின் உடைவுக்கு வழிவகுத்த சேர்பிய, பொஸ்னிய, குரோசிய இனங்கள்.
இ) பேஜா, அரபு, திக்கரே எனும் 3 மொழிகளைப் பேசினாலும் தம்மை ஒரே இனமாகக் காட்டிக்கொண்ட சூடானின் பேஜா இனம்.

4. இந்த இடங்களில், மொழி, இன அடையாளத்தைக் கட்டமைக்கவில்லை என்றால், அந்த அடையாளத்தைக் கட்டமைத்தது எது?
அ) ஹூடுக்கள் கிறிஸ்தவ மதமாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட பெரும்பான்மை உழைப்பாளர் சமூகம். டுட்சிகள், மதமாற்றத்தை எதிர்த்த சிறுபான்மை அரச குடும்பங்கள். (இன்று எல்லோருமே கிறிஸ்தவர்கள் தான்) .
ஆ) சேர்பியர்கள் பழைமைவாதக் கிறிஸ்தவர்களாகவும், குரோசியர்கள் கத்தோலிக்கர்களாகவும், பொஸ்னிக்குகள் இஸ்லாமியராகவும் இருந்தனர். 
இ) வெவ்வேறு மொழி பேசும், பேஜாக்கள் தம்மை ஒன்றிணைக்கும் பாலமாகக் கண்டுகொள்வது, தாம் அனைவரும் பின்பற்றும் இஸ்லாத்தை.

5. ஆக, சில இடங்களில் மொழியை விட வலுவான இனக்கட்டமைப்பு அலகாக மதம் இருந்திருக்கிறது, இருக்கவும் முடியும்.

6. இலங்கையைப் பொறுத்தவரை, பெரும்பான்மை இனமான சிங்களவர், பௌத்தம் சார்ந்தே தம்மை முன்னிறுத்துகின்றனர். இன்னொரு சிறுபான்மை இனமான சோனகரும் இஸ்லாம் சார்ந்தே தம்மை தனி இனமாகக் காட்டிக்கொள்கின்றனர்.

7. பௌத்த, இஸ்லாமிய முனைவாக்கங்கள் தமிழர் நிலங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதை விளக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இலங்கைத்தமிழர் மொழி சார்ந்தே தம்மைத் தனி இனமாகக் கட்டமைத்தவர்கள்.

8. தமிழரின் பெரும்பான்மைச் சமயம் என்ற இடம் சைவத்துக்கு உண்டெனினும், அதை தமிழ் அடையாளத்தோடு முன்வைப்பதில் எவரும் அத்தனை தீவிரமாக இருந்ததில்லை. இன்றும் தமிழ் முற்போக்குவாதிகளும், இடதுசாரிகளும் அந்தத் தரப்பை வெறுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

9. ஆனால், மும்முனைச் சமர்க்களத்தில் இரு சமூகங்கள் இனம், மதம் எனும் இரு ஆயுதங்களுடன் நிற்கும் போது, தமிழர் மட்டும் மதம் என்ற ஆயுதமின்றி எதிர்ப்பதன் வெற்றிடம் பலருக்கும் புரிவதில்லை. அதன் விளைவு இப்போது புரியப்போவதும் இல்லை.

10. இலங்கைத் தமிழரின் பண்பாடு என்பது சைவப்பண்பாடே. விளக்கேற்றுவது, பன்னீர், சந்தனம், குங்குமம் கொடுப்பது, நிறைகுடம் வைப்பதிலிருந்து தாம்பூலம் தரிப்பது வரை, சைவத்தில் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளே.

11. இலங்கை இனப்போராட்டத்தில், தமிழர் சார்பில் முன்னின்றவர்களில், தமிழ் பேசும் கிறிஸ்தவருக்குள்ள வகிபாகத்தை மறுப்பதற்கில்லை. ஆனால் சிங்களபௌத்தம், சோனக இஸ்லாம், என்பன போல, மூன்றாம் இனத்தின் அடையாளமாக முன்னிறுத்த வேண்டியது, தமிழ்ச்சைவம்.

12. இங்கு கிறிஸ்தவத்தை பின்னுக்குத் தள்ளுவதில் இன்னொரு காரணமும் இருக்கின்றது. இலங்கையில் கடந்த நூறு ஆண்டுகளுக்குள் பாழடைந்த ஒரு கிராமத்துக்குள் செல்கிறீர்கள். ஒரேயொரு வழிபாட்டிடத்தின் இடிபாடுகள் எஞ்சியிருக்கிறது. அது ஒரு விகாரை என்றால் அது சிங்களக்கிராமம். ஒரு மசூதியின் சிதைவுகள் தென்பட்டால், அது இஸ்லாமியக்கிராமம். ஒரு கோவிலின் எச்சங்கள் காணப்பட்டால் அது தமிழ்க்கிராமம். அதுவே ஒரு தேவாலயத்தின் இடிபாடுகள் என்றால்? தமிழ்க்கிராமம் என்பதா? சிங்களக்கிராமம் என்பதா?

13. சில சிங்கள கத்தோலிக்கர்களைச் சந்தித்திருக்கிறேன். "ஆனால் நாங்கள் புத்தரை நேசிக்கும் குடும்பம். நண்பர்களோடு சிலவேளைகளில் விகாரைக்கும் போவதுண்டு" என்பார்கள். தமிழ்க்கத்தோலிக்கரது பொதுவான நிலைப்பாடும் அதுவே.

14. இலங்கையின் சைவக் கோவில் திருவிழாக்களில் கத்தோலிக்கர்கள் கலந்துகொள்வதுண்டு. அங்கு திருநீறு தரிப்பதில்லை. தெய்வங்களை வணங்குவதில்லை. ஆனால் பொட்டுவைத்து பூச்சூடி, வேட்டி கட்டி, மாமிசம் விலக்கி சைவரோடு கைகோர்த்து நிற்பார்கள். சிங்களக் கத்தோலிக்கன் எந்தளவு பௌத்தப் பண்பாட்டை நேசிக்கிறானோ, ஒரு தமிழ்க்கத்தோலிக்கனும் அந்தளவு சைவப்பண்பாட்டை நேசிக்கிறான். (நான் பார்த்தவரை! ஏனைய கிறிஸ்தவர்களுக்கோ வேறு கத்தோலிக்கருக்கோ அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம்.)

15. தனிப்பட்ட ரீதியில், அரசியல் என்பது மதச்சார்பின்மை கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம், அது சைவமாகவே இருந்தாலும் கூட. இந்த "மதச்சார்பின்மை" என்பது தமிழக திராவிடக் கட்சிகள் நடத்திக்காட்டிய "மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம்" கணக்கான மதச்சார்பின்மை அல்ல. அரசு இயந்திரம் ஒரு மதத்தைச் சார்ந்து இயங்கியபடியே, ஏனைய எல்லாச் சமயங்களுக்கும் சம முன்னுரிமை கொடுக்கும் மத(ப்பக்க)ச்சார்பின்மை.

16. சைவம் மீது கொள்ளும் நம்பிக்கைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கிருமிகண்ட சோழன், கலிங்க மாகோன் ஆகிய இருவர் தவிர, சைவத்தின் வரலாற்றில் எதிர்மறையாகப் பதிவு செய்யப்பட்ட மன்னர்கள் இருந்ததில்லை. தமிழ்நாட்டின் சோழர், பாண்டியரிலிருந்து, இந்தோனேசியாவின் மஜாபாகித் பேரரசு, கம்போடியாவின் கெமர் பேரரசு வரை, சைவம் ஒப்பீட்டளவில் சமத்துவமான அரசாட்சியையே எல்லாச் சமய மக்களுக்கும் கொடுத்திருக்கிறது.

17. ஆக, தமிழரின் இனத்துவ அடையாளத்தில் எவ்வித தயக்கமுமின்றி சைவத்தையும் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த சைவம் ஒரு மறுபரிசீலனைக்குள்ளான, தனது பிற்போக்கான அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்காத, அதிகாரத்தில் இருப்பவர்களின் நம்பிக்கைகளை மற்றவர்களுக்கும் திணிக்காத, இலட்சிய சைவமாக இருக்கவேண்டியது அவசியம்.

18. "சைவத்தை வளர்த்தல்" என்றாலே நம்மவர்கள் "மதமாற்றத்தை ஒழித்தல்" என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். எதிர்க்கும் பலர் "பிராமண ஆதிக்கத்தை அதிகரித்தல், இந்துத்துவ அரசியலை முன்னெடுத்தல்" என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். சைவத்தை ஆதரித்தோ எதிர்த்தோ இங்கு கூக்குரலிடும் பலருக்கு சமயமே தெரியாது. அவ்வளவு ஏன், அடிப்படை "பஞ்சபுராணமே" கூடப் பாடத் தெரியாது.

எதிர்ப்பவர்களுக்கோ ஆதரிப்பவர்களுக்கோ சமயம் ஒழுங்காகத் தெரியாது என்பது முதலாவது பிரச்சினை. இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து தமிழ்ச்சைவ அடையாளத்தை சகல சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் தளங்களிலும் முன்னிறுத்துவது எப்படி என்பது இரண்டாவது பிரச்சினை. சிங்கள பௌத்த அடையாளத்துக்குள் சிங்கள கிறிஸ்தவர்கள் எத்தகைய பாதுகாப்பையும் ஒன்றிணைவையும் உணர்கிறார்களோ, அதே பாதுகாப்பையும் ஒன்றிணைவையும் தமிழ்க் கிறிஸ்தவர்கள் உணர்வதற்கான சுதந்திர வெளியையும் உத்தரவாதத்தையும் தமிழ்ச்சைவர்கள் ஏற்படுத்திக்கொடுப்பது எப்படி என்பது மூன்றாவது பிரச்சினை.

கல்லில் நார் உரிக்கும் வேலை தான். ஆனால், வாழை, கல் போல் தோற்றமயக்கம் காட்டும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner