சிவனொளிபாதப் புகழ் அறிவீரே!

0 comments

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டுவரும் விடயம், சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றம். இலங்கையின் புகழ்பெற்ற யாத்திரைத்தலமான சிவனொளிபாதத்தில் இதுநாள் வரை இருந்த “சிவனொளிபாதம்” என்ற பெயரை நீக்கி, தமிழிலும் “புத்த ஸ்ரீபாதஸ்தானம்” என்று மாற்றப்பட்டுள்ள ஒரு பெயர்ப்பலகை தற்போது பரவலாகப் பகிரப்படும் ஒன்றாக மாறியிருக்கின்றது.

சிவனொளிபாத மலை (படம்: http://refreshingsrilanka.blogspot.com)


உண்மையில், இந்தப்பெயர்ப்பலகை கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளைச் சந்தித்து வரும் ஒன்று. இப்பலகையில் முன்பு , சிங்களத்தில் “ஸ்ரீபாதய” என்றும், தமிழில் “சிவனொளிபாதமலை” என்றும், ஆங்கிலத்தில் “அடம்ஸ்பீக்” என்றும் எழுதப்பட்டிருந்தது.
2012இல் எடுக்கப்பட்ட  புகைப்படம். (நன்றி: https://gate20.com)

ஆனால், 2016ஆமாண்டு, இதில் இருந்த “அடம்ஸ்பீக்” எனும் ஆங்கிலவரிகள் விஷமிகளால் அழிக்கப்பட்டிருந்தன.  சிவனொளிபாதச் சூழலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியுடன் சுற்றுலாவிடுதிகள் அமைக்கப்பட இருப்பதாக பரவிய செய்தியையும், அதை மறுத்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையையும் அடுத்தே இந்த விஷமச்செயல் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.  
2016 உருச்சிதைக்கப்பட்ட பெயர்ப்பலகை
நன்றி:dailynews.lk

அடுத்த ஆண்டே மீண்டும் இப்பலகை சரிசெய்யப்பட்டுவிட்டது. எனினும் இப்போது “அடம்ஸ்பீக்” இல்லாமல், “ஸ்ரீபாத” எனும் சொல்லே  ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.
2017 புகைப்படம். நன்றி: https://notesofanortherner.com

தற்போது, தமிழ் வரிகளும் மாற்றப்பட்டு “கௌதம புத்தபகவானின் ஸ்ரீபாதஸ்தானம்” எனும் வரிகள் இடம்பெற்றுள்ள பெயர்ப்பலகையொன்றின் படம் சமூகவலைத்தளங்களில் உலவுகின்றது.  இதன் உண்மைத்தன்மை என்ன என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை.  இந்தப்பலகை கருநிறமாக இருக்கின்றது. உபயம் எழுதப்பட்டுள்ள சிங்களப்பெயர்களோ படத்தின் பின்னணியோ, பழைய மஞ்சள் பலகை அமைந்திருந்த அதே இடம் தானா என்று உறுதியாகச் சொல்வதில் தயக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால், புகைப்படத்தை பகிர்ந்தவர்களுக்கு பொய்யான தகவலைப் பகிர வேண்டிய அவசியம் இல்லை என்பதால், பெயர் மாற்றம் உண்மை என்றே கொள்ளவேண்டி இருக்கிறது.  அப்படியே, சர்ச்சைக்குரிய குறித்த மஞ்சள் பலகையின் இடத்தில் இல்லை என்றாலும், எங்கோ ஓரிடத்தில் சிவனொளிபாதத்தின் பெயர் மாற்றப்பட்ட பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் உண்மை.

 

உலகில் அதிக மொழிகளால் அதிக சமயங்களால் போற்றப்பட்ட ஒரே தலம், சிவனொளிபாதம்.  இங்கு தமிழரின் – தமிழ்ச்சைவரின் வகிபாகம் என்ன? அதைப் பார்ப்பதற்கு முன், சிவனொளிபாதம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை காலவரிசைப்படி பார்ப்பது நலம் தரக்கூடும்.

இலங்கைச் சிங்கள வரலாற்று நூல்களான தீபவம்சத்திலும் (பொ.பி 4ஆம் நூற்.)  மகாவம்சத்திலும்  (பொ.பி  6ஆம் நூற்.)  புத்தபிரான் தன் திருவடிகளை  பதித்த இடமாக “சுமணகூட பர்வதம்” சொல்லப்படுகின்றது. சீனப்பயணியான பாகியன் 411-12ஆம் ஆண்டளவில் இலங்கையிலிருக்கும் புத்தரின் பாதச்சுவடு உள்ள இரண்டு மலைகளைப் பற்றி விவரிக்கிறார். ஆனால், சிவனொளிபாதம் தொடர்பான விரிவான செய்திகள் யாவும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவை.  11ஆம் நூற்றாண்டிலே முதலாம் விஜயபாகு மன்னன் (1065-1119), சமந்தகூட மலையின் ஊழியத்துக்காக கிளிமலை எனும் கிராமத்தை ஒதுக்கியது தொடர்பான கல்வெட்டுச் சான்று அவற்றில் முதன்மையானது. 
சிவனொளிபாதம், மார்க்கோ போலோவின் நூலிலிருந்து
இலங்கைக்கு 1298இல் வந்த இத்தாலிய வணிகரான மார்க்கோபோலோ, அம்மலைக்குத் தான் சென்றதை பதிவு செய்திருக்கிறார். அது ஆதமின் கல்லறை என்றும் சாக்கியமுனியின் கல்லறை என்றும் ஒரேநேரத்தில் நம்பப்பட்டதை அவர் குறிப்பிடுகிறார்.  1344இல் இலங்கைக்கு வந்த அரேபியப் பயணி இபின் பதூதா இம்மலைக்குத் தான் சென்றதையும் ஏறுவதற்குக் கடினமான இடங்களில் இரும்புச்சங்கிலிகள் அமைக்கப்பட்டுள்ளதையும்  விவரிக்கிறார். அவருக்கு ஐந்தாண்டுகள் கழித்து 1349இல் இத்தாலியப் பயணியான ஜோன் மெரிக்னோலி இலங்கைத்தீவில் இருந்த பெரியதோர் மலையைக் குறிப்பிடுகிறார். அம்மலைக்குத் தன்னுடன்  ஸ்பெயினிலிருந்து வந்த இன்னொரு யாத்திரிகரைப் பற்றி மெரிக்னோலி விவரிப்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது.

1411இல் காலியில் தமிழ், பாரசீகம், சீனம் ஆகிய மும்மொழிகளில் கல்வெட்டொன்றைப் பதித்த சீனப்பெருவீரன் செங்ஹே, தமிழில் தேனவரை நாயனாரையும், சீனத்தில் இந்த சீலன் மலையின் புத்தரையும் புகழ்ந்து காணிக்கைகள் அளித்திருக்கிறார்.  1421இல் இலங்கைக்கு வந்த மா குவான் என்னும் இன்னொரு சீனப்பயணி  உயர்ந்த மலையுச்சியில் அமைந்திருந்த பாரிய பாதத்தடக்குழியில் நீர் தேங்கி நின்றதையும் அதை யாத்திரிகர்கள் பக்தியுடன் தலைமீது தெளித்துக் கொண்டதையும் அவதானித்திருக்கிறார்.   

1571இல் ஜெரோனிமோ ஒசோரியோ எனும் போர்த்துக்கேயர் தானெழுதிய நூலொன்றில், இந்த “மலைக்கருகே உள்ள சிறுகோவிலுக்கு மக்கள் செல்கின்றனர். அங்கு உலகின் முதல் தந்தையும் தாயும் (ஆதமும் ஏவாளும்) அடக்கம் செய்யப்பட்டுள்ளனராம்” என்ற செய்தியை கூறுகிறார். அஷ்ரப் எனும் 15ஆம் நூற்றாண்டு பாரசீகக் கவிஞரின் குறிப்புகளிலும் மலையுச்சியில் உள்ள ஆதமின் கல்லறை பற்றிய வரிகள்  வருகின்றது.  1600களின் இறுதியில் இங்கு வந்த ஜேர்மானியப் பயணி ஒருவர், ஆதம் மற்றும் அவரின் மைந்தரின் கல்லறைகள் வழிபாட்டில் இருப்பதைக் கூறுகிறார்.  1681இல் எழுதப்பட்ட ரொபர்ட் நொக்சின் புகழ்பெற்ற நூலில், புத்தாண்டு காலத்தில் இலங்கையர் அம்மலைக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்ற குறிப்புக் காணப்படுகிறது.  

சிவனொளிபாத மலையுச்சி, 1888 ஆமாண்டு ஓவியம்.

இப்படி சிவனொளிபாதமலையைப் பற்றிய வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள் நமக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்தவாறே இருக்கின்றன. இவை இலங்கைத்தீவின் மத்தியிலிருந்த சிவனொளிபாதமலை, எல்லா உலக மதங்களிலும் பெற்றிருந்த மதிப்பையும் மரியாதையையும் எடுத்துக் காட்டுவனவாகவே உள்ளன. சில இடங்களில் இம்மலையின் “சமனல”, “சமந்தகூட” முதலான பெயர்களைக் காணமுடிகின்றது.  எனினும், பெரும்பாலான குறிப்புகளில் அம்மலையின் பெயர் என்ன என்ற தெளிவான விவரங்கள் எதுவும் இல்லை. சில இடங்களில் “ஆதாமின் கல்லறை உள்ள மலை” என்ற அடையாளப்படுத்தலையும் காணமுடிகின்றது.  வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஆதாமின் கல்லறை என்று சொல்லத்தக்க எதுவும் இன்று சிவனொளிபாதமலையில் இல்லை.   

இத்தனையும் சரி. ஆதம் தொடர்பாகவும் புத்தர் தொடர்பாகவும் இத்தனை குறிப்புகள் இருக்கும் போது,  சிவனொளிபாதத்தின் மீது சைவத்தின் உரிமைகோரல் சரியா? சைவம் தொடர்பாக சிவனொளிபாதத்துக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை பற்றி எங்கேனும் குறிப்புகள் கிடைத்திருக்கின்றனவா?

நாம் சைவம் என்று மாத்திரமன்றி,  சிவனொளிபாதம் தொடர்பாகக் கிடைக்கும் எல்லாத் தமிழ்ச்சான்றுகளையும் தொகுத்துப் பார்ப்போம். தமிழின் மிக முக்கியமான ஒரு சான்று, சிங்கள வரலாற்று நூல்களுக்கும், பாகியனின் குறிப்புகளுக்கும் சமகாலத்தையது. அது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை! தமிழ்கூறு நல்லுலகில்  சிவனொளிபாதம் புகழ்பெற்றிருந்ததற்கும், அது பௌத்தம் சார்ந்து சமந்தம், சமனொளிமலை ஆகிய பெயர்களில் போற்றப்பட்டது என்பதற்கும்  பொ.பி 3 – 5 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட நூலான மணிமேகலை சான்று கூறுகின்றது.

ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து. 
ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங்கிழவோன் அடி இணை ஆகிய 
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் 
அறவி நாவாய் ஆங்குளது ஆதலின் 
தொழுது வலம்கொண்டு வந்தேன் 
- பாத்திரம் பெற்ற காதை  (மணி. 11:30) 
இதனருகே  இரத்தினத்தீவில் ஓங்கி உயர்ந்த சமந்த மலையின் உச்சியில் உள்ள, பிறவிக்கடலைக் கடக்க உதவும் படகுகளான அறத்தேவனின் திருவடிகளை தொழுது வலம் வந்தேன். 

…………. ஆங்கு இருந்த எல்லையுள் 
இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் 
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் 
தரும சாரணர் தங்கிய குணத்தோர் 
கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர் 
-கச்சிமாநகர் புக்க காதை (மணி.28:110)

“இலங்கைத்தீவில் சமனொளி எனும் மலையை வலம் வந்து மீள்கின்ற தரும சாரணர்கள், முகில்கள் மீது இயங்கி வான்வழி வந்து இறங்குவர்” 

தமிழ்ச்சான்றுகள் மணிமேகலையோடு முடியவில்லை.

கருதிடின் வலவை மாவலிகங்கை கம்பளை கல்லணை யென்னும்
தருசமனொளி சூழ் நதிகணான்கிடமாஞ் சாதி நான் கந்தணன் வெள்ளை
பரிவுறு  மரசன் சிவப்புவாழ் வணிகன் பச்சைசூத் திரன்கறுப் பவைதா
மருவிய பெயர்கோ மளங்குரு விந்தம் பதுமரா கம்பணா மணியே  

இரத்தினங்களில் அந்தணன் வெண்ணிற வைடூரியம், அரசன் செந்நிற மாணிக்கம், வணிகன் பச்சைநிற புஷ்பராகம்,  சூத்திரன் கருநிற நாகமணி. இவை நான்கும் சமனொளிமலையின் நாற்புறமும் பாய்கின்ற வலவை (வளவை கங்கை), (மகாவலி) கங்கை,  கல்லணை (களனி கங்கை), கம்பளை  (களு கங்கை)  ஆகிய நான்கு நதிகளிலும் விளைகின்றன.   
- நம்பி திருவிளையாடல் புராணம் (25:12) 


நாள மைந்தபூங் கருங்குழற் பாகர்தா ணண்ணி
மீள வந்துயர் சமனையை வலங்கொண்டு மேவி
வாளை சென்றுகண் மாவலி கங்கைநீர் வந்து
காள கண்டர்தங் கிரியடி விளக்குதல் கண்டு

கூந்தலில் பூச்சூடிய உமையைப் பாகம் கொண்டவரின் பாதங்களிலிருந்து தோன்றி, சமனை மலையை வலம் வந்தபடி, வாளை மீன்கள் விளையாடப் பாயும் மாவலி கங்கையானது, கோணேசருடைய மலையின் அடிவாரத்தைப் பணிகிறது.
- திருக்கரைசைப் புராணம் (2:31)

தென்கயிலைக்கு அணித்தாக  மச்சேந்தியமலை, கந்தமலை, சிவனொளிபாதம் சமனாசலம்,….. முதலான சகல மலைகளும் …….இருக்கின்றன. சிங்களதேசத்துக்கொப்பான தேசம் வேறெங்கும் இல்லை. 
- தட்சிணகைலாச மான்மியம்.

சங்கரன் “எமக்குப் பிரியமான கங்கைகாள்! உங்களுக்கு நல்லஸ்தலம் சொல்கின்றோம். நமது சிவனொளிபாதமலை நமது வடிவமானது. நமக்குப் பிரியமானது. அந்த இடத்தில் நமது பாதநடுவிலும்… நீங்கள் மகிழ்வோடிருங்கள்” என்றருளிச்செய்தார்…. மகாபலிகங்கை, மாணிக்ககங்கை, காவேரிகங்கை ஆகிய நதிகள் மூன்றும் சிவனொளிபாதமலையில் சிவபாதமத்தியில் சுபநாளில், சுபலக்கினத்தில் சதாகாலமும் பெருகிக்கொண்டிருக்கும்.”
- தட்சிணகைலாச மான்மியம் 

இந்தச் சான்றுகளில் நம்பி திருவிளையாடல் புராணம் பொ.பி 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருக்கரைசைப்புராணமும் தட்சிண கைலாச மான்மியமும் இலங்கையில் தோன்றிய நூல்கள். அவற்றின் திருத்தமான காலங்கள் இதுவரை அறியக்கூடவில்லை. அவை திருக்கோணமலையை மிகைபடப் புகழ்வதால், அவை கோணேச்சரம் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட காலத்துக்கு (பொ.பி 1622) முன்பின்னாகவே இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். எனவே அவை இரண்டும் குறைந்தது 17ஆம் நூற்றாண்டுக்கு முந்தியவை என்று தீர்மானிப்பது பொருத்தமானது. 

மணிமேகலையின் குறிப்பிலிருந்து இலங்கையிலிருந்த சமந்தகூடம் தமிழகத்தார் மத்தியில் பெற்றிருந்த சிறப்பை அறியமுடியும்.   ஈழத்தமிழ் இலக்கியங்கL தரும் தகவல்களிலிருந்து அது சைவம் சார்ந்தும் புகழ் பெற்றதையும், சிவனொளிபாத மலையில் இருப்பது சிவனது திருவடிகள் என்ற நம்பிக்கை ஆழ வேரூன்றியிருந்தமையையும் காணக்கூடியதாக இருக்கிறது. மணிமேகலை, நம்பி திருவிளையாடல் புராணம் என்பவற்றில் சமந்தகூடம், சமனையங்கிரி என்ற பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளதால், அதுவே இம்மலையின் பழைய உள்ளூர்ப் பெயர் என்பதும் தெளிவாகின்றது. சிவனொளிபாதம் என்ற பெயரை, தட்சிணகைலாச மான்மியத்திலேயே முதன்முதலாகக் காணமுடிகின்றது.  அதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. அப்பெயர் குறைந்தது முந்நூறாண்டுகள் பழைமையானதே என்பது அதிலிருந்து நாம் எடுக்கும் முடிவு.

பெயர்ச்சான்று, இலக்கியச்சான்று என்பவற்றுக்கு மேலதிகமாக, சைவம் சார்ந்த நேரடி வரலாற்றுச் சான்றுகளும் சிவனொளிபாதமலையில் கிடைத்துள்ளன. அவற்றில் தீர்க்கமான சான்று, 16 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை, சிவனொளிபாதமலையின் உச்சியில் வழிபாடுகளை மேற்கொள்ளும் அதிகாரம், சிங்களத்தில் “ஆண்டியா” (ஆண்டி?) என்று அறியப்பட்ட சைவ சன்னியாசிகளுக்கே வழங்கப்பட்டிருந்தது என்பதே. சைவ சமயத்தவனான முதலாம் இராஜசிங்கன் (1581 - 1593) காலத்துக்குப் பிறகு, கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1734 - 1782) காலத்திலேயே பௌத்த பிக்குகள் சிவனொளிபாதமலைக்கு மீண்டும் வந்தார்கள் என்ற வரலாற்றுக்குறிப்பும் இங்கு முக்கியமானது.  

சிவனொளிபாதம் தொடர்பான ஐரோப்பியக் குறிப்புகளில் மிக இளையது, 1860இல் சேர். ஜேம்ஸ் எமர்சன் டெனண்ட் எனும் ஆங்கில அதிகாரியின் குறிப்பு. அதன்படி “தொன்றுதொட்டே பழங்குடிகளால் இப்பாதம் வழிபடப்பட்டுள்ளது. இன்று பிராமணர்கள் இது சிவனுடையது என்றும், பௌத்தர்கள் புத்தருடையது என்றும், முகமதியர்கள் ஆதமுடையது என்றும், யூத – கிறிஸ்தவ ஞானக்கொள்கையர் ‘லியூ’ உடையது என்றும் நம்புகிறார்கள். அது புனித தோமா உடையதா அல்லது எதியோப்பிய கிறிஸ்தவ திருநங்கையுடையதா என்பதில் போர்த்துக்கேயரிடையே சர்ச்சை நீடிக்கிறது”  

ஆக,  சிவனொளிபாதம்,  பௌத்தர், இஸ்லாமியர், சைவர், கிறிஸ்தவர், ஆகிய நான்கு மதத்தினர்க்கும் வெவ்வேறு காரணங்களால் வழிபாட்டுக்குரியதாக விளங்கியிருந்திருக்கிறது.  பழைய சான்றுகளான பாகியனின் குறிப்புகள், சிங்கள வரலாற்று நூல்கள், மணிமேகலை மூன்றும் பௌத்தச் சார்புடையவை. அவற்றில் எங்கும் சைவ அல்லது கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கைகள் சொல்லப்படவில்லை -  சொல்லப்படவேண்டிய அவசியமும் இல்லை. மார்க்கோ போலோவுக்கு முந்திய வேறு மேற்குலகக் குறிப்புகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை என்பதால், ஆதம் தொடர்பான நம்பிக்கை எப்போது தோன்றியது என்றும் உறுதிபடக் கூறமுடியவில்லை. 

திருவிளையாடல் புராணத்தில் வரும் குறிப்பு, சிவனொளிபாதம் சைவருக்கு -  சைவத்தமிழருக்கு நன்கு அறியப்பட்ட இடம் என்பதைச் சொல்கின்றது. சிவனது அடியும் முடியும் எவர் கண்ணுக்கும் புலப்படாதவை என்பது மரபார்ந்த சைவத்தின் நம்பிக்கை. எனவே,  சிவனது திருவடிகள் இம்மலையில் உள்ளன என்ற சைவ பாமர மக்களின் நம்பிக்கை விடயத்தில், சைவ இலக்கியங்கள் மௌனம் சாதித்திருந்தால், அதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.  

வட இந்தியாவின் மகாதேவர் (சிவன்) ஆலயங்கள் பல, முகலாயருக்கும் பிரித்தானியருக்கும் ஆதாமின் வழிபாட்டிடம் என்று அறிமுகப்படுத்தப்பட்டமையையும் மலாய மரபுரைகள் சிவனை ஆதமின் மகனாகச் சொல்வதையும், ஆதமின் மகன்களது 'கல்லறைகள்' பற்றி  ஜேர்மானியப் பயணி ஒருவர் சொல்வதையும் இந்த இடத்தில் நாம் ஒப்பிடலாம்.  ஒருவேளை பழைமையான சான்றுகளைக் காட்டி மதவழியில் பௌத்தம் சைவத்தின் உரிமைகோரலை நிராகரித்தாலும், இனவழியில் தமிழர் சமனையங்கிரிக்கு என்றும் உரிமையானவர்களே. அதற்கான தார்மீகப் பாரம்பரியத்தை, தமிழருக்கு  மணிமேகலையே தன் காலத்திலிருந்து கொடுக்கின்றது.

எது எப்படியோ, மொழிசார்ந்தும், இனம் சார்ந்தும், மத வழிபாட்டுத்தலங்கள் மீதான உரிமைகோரல்கள் விவாதிக்கப்படும்  போதெல்லாம் மிகப்பெரும் சோர்வு வந்து அப்பிக்கொள்கின்றது. ஏனென்றால், இலங்கையைப் பொறுத்தவரை கைநழுவிச் சென்ற எந்தவொரு மதவழிபாட்டுத் தலங்களையும் மீள உரிமைகோருவதால் அவை மீண்டும் உரியவர் வசம் வந்து சேரப்போவதில்லை. அதற்கான எந்தவொரு வாய்ப்பும் இனிக் கிடைக்கப்போவதும் இல்லை. எனவே இழந்தவற்றில் ஆற்றலைச் செலவழிப்பதை விட்டுவிட்டு, இருப்பதையேனும் முடிந்தவரை காப்பாற்ற முயலலாம்.  சமந்தகூடம், கதிர்காமம் என்பவற்றில் கலந்திருக்கும் நம் முன்னோரின் பாதத்தூளிகளை காலமெல்லாம் நினைவுகூர்வோம். கூடவே,  கோணேச்சரத்தையும் முன்னேச்சரத்தையும் மட்டுமாவது இன்றுள்ளவாறே  வருங்காலச் சந்ததியினர்  வசம் ஒப்படைக்க முயல்வோம்.

குறிப்பு:
இக்கட்டுரையில் தட்சிணகைலாச மான்மியம் என்று குறிப்பிடப்படும் நூல் அதேபெயரில் கிடைத்த வடமொழி நூலொன்றை மொழிபெயர்த்து 1928இல் யாழ்ப்பாணம்  வதிரி நாகலிங்கப்பிள்ளையால் “தட்சிணகைலாச புராணம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. தட்சிணகைலாய புராணம் என்று ஆய்வுலகில் அறியப்படும் தமிழ்ப்புராணம் வடமொழி மச்சேந்திய புராணத்தின் மொழிபெயர்ப்பாகக்  கொள்ளப்படுவது. காலத்தால் முற்பட்டது.  நாகலிங்கப்பிள்ளையவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட தட்சிணகைலாச புராணமும், தமிழ் தட்சிண கைலாய புராணமும் வேறுவேறு. 
மேலும் வாசிக்க »

வெள்ளாவி - தூமையாடைகளின் துயரம்

2 comments
பரஞ்சோதி, தன் தாய் மாதவியுடன் வசிக்கிறாள். குடும்பச்சூழ்நிலை காரணமாக மாதவி பெரிய இடங்களை கொஞ்சம் ‘அனுசரித்து’ போகவேண்டி நேரிடுகிறது. தாயின் நடத்தை பற்றி  தெரிந்துகொள்ளும் மகள் அடிக்கடி தாயோடு சண்டை பிடிக்கிறாள். பருவ வயதில் மகளை வைத்துக்கொண்டு, தன்னைச் சுற்றும் கண்களிடமிருந்தும் மகளைக் காப்பாற்ற வேண்டுமே என்று, தாய்மனம் தவிக்கிறது.  மருமகனான  நாகமணிக்கு  மகளைக் கட்டிவைக்க மாதவி முயல்கிறாள். வயது வித்தியாசத்தால் தயங்குகிறான் நாகமணி. 

திடீரென்று ஏற்படும் மாதவியின் நோய் காரணமாக தாயும் மகளும் சமாதானமாகும் சந்தர்ப்பத்தை காலம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. ஆனால் சில நாட்களிலேயே மாதவி அஞ்சியது நடந்து விடுகிறது. சொல்லாமல் கொள்ளாமல் கர்ப்பமடையும் பரஞ்சோதி, “யாரால் என்று தெரியாது” என்று சொல்லிவிடுகிறாள். அது யாரென்று ஊகித்து அவனை நான்கு கேள்வி கேட்கச் செல்லும் மாதவி, அவளே எதிர்பாராத கேள்விகளால் திக்குமுக்காடுகிறாள். அன்றிரவே துக்கம் தாளாமல் இறந்தும் விடுகிறாள்.  

அதன் பின் நாகமணி என்ன செய்தான், பரஞ்சோதியின் நிலைமை என்ன ஆனது, தன் குழந்தையின் தகப்பன் யாரென்று  பரஞ்சோதிக்குத் தெரிந்ததா, என்ற கேள்விகளுடன் சுவாரசியமாக நகரும் கதை, எதிர்பாராத திருப்பத்துடன் முடிந்து விடுகிறது.


விமல் குழந்தைவேலின் “வெள்ளாவி” நாவலின் சுருக்கம் இது. எழுத்தாளரின் சொந்த ஊரில் இடம்பெற்ற உண்மைச்சம்பவத்தின் தழுவலாக எழுதப்பட்ட இக்கதை, எழுதப்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வந்திருக்கிறது. 


“வெள்ளாவி”யின் கதைக்களமான அக்கரைப்பற்று கோளாவில் கிராமம், இக்கட்டுரையாளனின் பிறந்தகம் தம்பிலுவில்லிலிருந்து வடக்கே பத்து கி.மீ தொலைவில் அமைந்தது. பேச்சுவழக்கிலோ நடைமுறைகளிலோ இரு ஊர்களுக்கும் அத்தனை பெரிய வித்தியாசமும் இல்லை. பாத்திரங்களை மிக நெருங்கி உணர்ந்துகொள்ள வேறென்ன வேண்டும்? 

பெயர் சொல்வது போலவே, நாவல் சலவைத்தொழிலாளர் சமூகத்தையே பின்னணியாகக் கொண்டிருக்கிறது. அந்த சமூகம் சந்திக்கின்ற சவால்கள், அயலில் வாழும் உயர் சாதிகளின் மேலாதிக்கம். அந்தப் போராட்டத்தின் ஊடே கசியும் ஈரம். பிரதிபலன் எதிர்பாராத அன்பு, உள்நாட்டு யுத்தம் என்று பல களங்களைத் தொட்டு நகர்கிறது வெள்ளாவி. 

முதன்மைப் பாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பதால், பல இடங்களில் ஆதிக்க சாதியினரின் மேட்டிமைத்தனம் கதைப்போக்கிலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. வெள்ள நிவாரணத்தால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட ‘வண்ணார ஆக்களை’ விடுத்து, ஆதிக்க சாதியினர் நிவாரணங்களை பெற்றுக்கொள்வது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, திருவெம்பாவைக் காலத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடும் கோஷ்டி எங்கள் ஊருக்குள் வரவேண்டும் என்று சதாசிவம் கடிதம் எழுதுவது, அதை ஆதிக்க சாதியினர் அவமானமாக எடுத்துக்கொள்வது, குடிவண்ணானுக்கு மரியாதை செலுத்தும் சடங்கைக் கண்டு, தம்பி மனைவி கோபித்துக்கொண்டு வெளியேற முயல்வது என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. 

ஆனால் சாதியம் சார்ந்த சமூக முரணியக்கமும் அதே போக்கிலேயே பதிவாகி இருக்கிறது. ஆதிக்க சாதியின் ஒட்டுமொத்த உருவகமாக வருகின்ற போடியார் பொஞ்சாதி, சாதித்திமிரைக் காட்டும் அதே வேகத்திலேயே மாதவி மீது காட்டும் பரிவு, வரட்சியால் தங்கள் வயல் பாதிக்கப்பட்டபோதும், அவள் மாதவிக்கு  நெல் கொடுத்து உதவும் பாங்கு, வண்ணார் சமூகத்துக்குக் கொடுக்கப்படும் மரியாதையைக் கண்டு தம்பி மனைவி கோபித்துக்கொண்டு சென்றபோது, அதற்கு ஒரு முதியவர் கொடுக்கும் விளக்கம் என்பனவெல்லாம் உறுத்தாத விதத்தில், அதேவேளை  நெஞ்சைத் தொடும்படி வெகு இயல்பாகக் கூறப்பட்டுள்ளது. 

முதல்பாதியில் இருந்த வேகம் மாதவி இறந்தபின் வருகின்ற இரண்டாம் பாதியில் இல்லை. ஆனால் ஆயுதப்போராட்டத்தின் தொடக்க காலத்தை இரண்டாம் பாதி விவரிக்கும் இடங்கள் சில குறிப்பிடத்தக்கவை. 

பரஞ்சோதியின் அருகிலேயே வாழ்ந்த முதிய கதைசொல்லியொன்று சொல்வது போன்ற நடையிலேயே இந்நாவல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் எழுத்து வழக்கும் வருகின்றது. ஊரைவிட்டுப் பிரிந்து வெகுகாலமாகி விட்டது என்பதால், இக்கதையை முழுக்க முழுக்க பேச்சுவழக்கில் எழுதுவதில் தான் எதிர்கொண்ட சவாலை ஆசிரியர் முன்னுரையில் விவரித்திருக்கிறார். அதில் தவறேதும் இல்லை. ஆனால், இடையிடையே “எடியேய், கதைச்சிப்போட்டினம், வருவினம்” என்றெல்லாம் வடபகுதிப் பேச்சுவழக்கு வருவது? அல்லது உண்மையிலேயே சில ஆண்டுகளுக்கு முன் கிழக்கிலும் அந்தப் பேச்சுவழக்கு நிலவியதா? எனக்குத் தெரியவில்லை.


நாவல் வாசித்து முடிந்ததும் கண்ணை மூடினால் நாயகியான பரஞ்சோதியை உச்சி முதல் பாதம் வரை அப்படியே காணலாம். அத்தனை யதார்த்தமான விவரிப்புகளோடு வலம் வருகிறாள் அவள். தன் மகன் வீட்டை விட்டு ஓடுவதை ஏன் அவள் அத்தனை எளிதாக எடுக்கிறாள் என்பதை ஆராய்ந்தால் அவளது பாத்திர வார்ப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். எல்லோரிடமும் ”தெரியாது”, “தெரியாது” என்றே சொன்னாலும், நாவலின் உச்சக்கட்டத்துக்கு வரும் வரை, தன் குழந்தைக்கு அப்பன் யார் என்பதில் பரஞ்சோதி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால், தன்னோடு அந்த இரவில் இருந்தவன் வரதன் தான் என்று அவள் நம்பினாள்.  ஆனால், வரதன் மீது தான் மறைத்து வைத்துள்ள காதல், தன் மீது பரிதாபப்பட்டு தனக்குக் கணவனாக வாழும் நாகமணிக்கெதிரான துரோகம் என்பதை அறிந்திருப்பதால் தான், அந்த உறவின் எச்சமாக அவள் கருதும் மகன் மீது அவளுக்கு அவ்வப்போது ஒவ்வாமை வருகிறது. 

தன் மகன் வரதனுக்குப் பிறக்கவில்லை என்பதை அறிந்த அடுத்தகணமே அவள் தத்தளித்துப்போகிறாள். நாகமணிக்குத் தான் துரோகமிழைக்கவில்லை என்ற மிகப்பெரிய நிம்மதியும் கூடவே, இவனோடா ஓரிரவு இருந்தோம் என்ற அருவருப்பும் அந்தக்கணத்தில் சேர்ந்தே வந்துவிடுகிறது. தனக்கு இனி மகன் இல்லை என்பதை அத்தனை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் ஒரு அசாதாரண மனநிலையாக அவளில் வெளிப்படுவது அந்த உணர்வு தான்.

நாவலின் இறுதியில், நாகமணியின் சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குச்  செல்லும் பரஞ்சோதி, “வாட்டுல நிப்பாட்டினாலும்”  என்று தனக்குள் சொல்லியபடி, முகப்பகுடரையும் கண்ணாடித்துண்டையும் பன்வேக்கில் செருகிக் கொள்வாள். அதுவரை காதில் தோடு கூடப்போடாமல், தோடை முள் சொருகியபடி திரிந்தவள் அவள். தன் மகனுக்கு யார் அப்பன் என்று தெரிந்தபின்னர், தன் மகன் பற்றி இனிக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்று தெரிந்தபின்னர் அவளில் ஏற்படும் இந்த மாற்றம் தான் “வெள்ளாவி”. வெள்ளாவி போட்டபின்னர் அழுக்குத் துணிகள் புத்தம் புதிதாய் மாறிவிடுகின்றன. பரஞ்சோதியும் மாறிவிட்டாள்.     

துன்பியல் பாத்திரமாக வலம் வரும் பரஞ்சோதியின் தாய் மீது கதைப்போக்கிலேயே வாஞ்சை ஏற்பட்டுவிடுகிறது. அவள் இறக்கும் போது ஏனோ இதயம் கனக்கிறது. ஓரிடத்தில் அவளது வாழ்வை இரண்டே வரிகளில் படம் பிடித்துக் காட்டிவிடுகிறார் ஆசிரியர். “இப்பயாகுதல் தாயாரப் பாப்பமெண்டு நினைச்சி மாதவி எட்டிப்பார்த்தாள். மூலஸ்தானத்துல இருந்த அம்மாள பார்க்கேலாதளவுக்கு  பந்தலுக்குள பொங்கல் மலையாக மறைச்சிருந்திச்சி. மாதவி கடைசி வரைக்கும் கண்ணகியப் பார்க்கயில்லத்தான்.”


வெள்ளாவி போன்ற பிராந்திய நாவல்களின் முக்கியத்துவம் தான் என்ன? கற்பனையோ, உண்மையோ, அவை மண்ணின் மணத்தை ஆவணப்படுத்துகின்றன. ஒரு வாசகனாக, இந்த நாவலின் கதைக்களம், எனக்கு இரண்டு தலைமுறைக்காலம் முந்தியது. எனவே இன்று அடியோடு மறைந்துவிட்ட எத்தனையோ வழக்கங்கள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை பால்யவயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண்டிருந்த எனக்கு அவற்றை நினைவுகூர்ந்து புன்னகைக்க முடிகின்றது. “இந்தப் புத்தகத்திலிருந்த சில மரபுகள் நம் மண்ணில் இருந்தன” என்று சொல்லி என் அடுத்த சந்ததிக்கு இந்த நாவலைத் தூக்கிக் கொடுக்கமுடியும். உதாரணத்துக்கு ஒருசில:

- பூப்பெய்திய பெண் வீட்டுக்கு முறைமாமன் வீடுகளிலிருந்து சீர்வரிசைகள் செல்லும் “கலியாணம் செஞ்சி போற சடங்கு”.  

- பெண்பிள்ளை பெரியாளாகி ‘இரண்டாம் தண்ணி’ வார்க்கும் போது, குடிவீட்டு வண்ணாருக்குக் கடமை செய்வது.

- குத்திய காது ஒட்டிவிடக்கூடாது என்பதற்காக தோடு இல்லாத ஏழைப்பெண் தோடைமரமுள் பொருத்திக்கொள்வது.

- குடிவண்ணார் தத்தம் வீடுகளுக்கான ஆடைகள் மாறிவிடாதிருப்பதற்காக அடையாளம் வைப்பது,   

- "முதல் கண்டீண்ட மாட்டுல இருந்து கிடைச்ச பாலையும் அதுல இருந்து வாற தயிர் நெய்யையும் குடும்பத்துல உள்ளாக்களத் தவிர வேறாக்களுக்கு குடுத்தா கண்டீண்ட மாட்டுக்கு ஆகாது" என்ற நம்பிக்கை.

இது தவிர, கிளவளங்கட்டிக் கல்லுடன் ஒத்தி விளையாடுவது. அதில் வரும் “றைற்ரோ” . கால் கோட்டில் பட்டு “முள்ளி” ஆவது.  வெள்ளம் வந்தால் ஒரு ஏனத்தால குனிஞ்சி எட்டி அள்ளுமாப் போல கைவிட்டு நீரை அள்ளக்கூடிய கிணறுகள், அன்னாசிப் பிஞ்சி. பப்பாசிப் பிஞ்சி. சூரமீன் பயன்படுத்தி கருக்கலைப்பது, என்று  வேறு சிலவற்றையும் சொல்லலாம்.  

தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை, வரம் வாங்கி வந்தவர்களாக நான் நினைப்பது குமரி மாவட்டத் தமிழர்களை. தினுசு தினுசாகத் தங்கள் வட்டார வழக்கில் எழுதுவோரைப் பெற்ற பாக்கியவான்கள் அவர்கள். அந்த மொழிவழக்கை கஷ்டப்பட்டு உள்வாங்கி நாம் படிப்பதற்கும், ஒரு குமரித்தமிழன் இயல்பாகப் படிப்பதற்கும் எத்தனை வித்தியாசம் இருக்கும் என்று சிந்தித்திருக்கிறேன். சொந்த வட்டார வழக்கிலே ஒரு புதினத்தையாவது வாசிக்கும் ஒரே ஒரு வாய்ப்புக் கூட, கிடைக்காமல் போய்விட்டதே என்று பெருமூச்சு விட்டிருக்கிறேன். வரம் வாங்காவிட்டாலும், தெய்வத்தின் கடைக்கண் பார்வையாவது உனக்கு இருக்கிறது என்பதைச் சொல்லிப் புன்னகைத்தது வெள்ளாவி. இனி கசகறணம் படித்து இறும்பூது எய்தவேண்டும். விமல் அண்ணனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.


விமல் குழந்தைவேல், 2004, வெள்ளாவி, உயிர்மை பதிப்பகம்.

மேலும் வாசிக்க »

மரபில் அறிமுகம் வேண்டும் (02)

0 comments
படம்: slguardian.org


இந்தப்படம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அழகான மகரதோரணம்? ஏதாவது சிற்பத்தின் எஞ்சிய பகுதி? அல்லது ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் பகுதி? சரி. இன்னும் கொஞ்சம் தள்ளி நின்று பார்ப்போம்.

படம்: freewalker.infoபடம்: dhammika.blogpost.com
 இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? நம்பாவிட்டால் போங்கள். இது இலங்கையின் ஒரு பழங்காலக் கழிப்பகம்!


இலங்கையின் அனுராதபுரம், பொலனறுவை, கண்டி, முதலான எல்லாப் பண்டைய அரசிருக்கைகளிலுமே கழிவறைத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சில புத்த துறவிகளின் மடங்களுக்கருகிலும் அரண்மனை இடிபாடுகள் அருகிலும் அமைந்திருக்கின்றன. சில இடங்களில் இந்தக் கற்கழிப்பகங்களின் அடியில் கழிவுநீர்க் குழிகளும், அவற்றில் வடிநீரை சுத்திகரித்து நிலத்திற்கு விடும் மண்பானைகளும் கூட கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 
மிகப்பழைய கழிவறைக் கட்டமைப்பு. கீழே கழிவுப் பானைகள் வைக்கப்பட்டிருந்தன.
படம்:flickr.com
படம்:lakdasun.com


கால்களை ஊன்றும் தளப்பகுதி, சிறுநீர் - மலம் கழிக்கும் இரு குழிகள் என்பன தவிர, இந்தக் கற்கழிப்பகங்களிலுள்ள அலங்கார வேலைப்பாடுகள் கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியவை. (அதுகள ரசிச்சுக்கொண்டே "போயிருக்கக்கூடிய" விஜயபாகுக்களையும் பராக்கிரமபாகுக்களையும் அவர்களது அரசியரையும் கற்பனை பண்ணிப்பார்த்தேன் )

சரி, ஏன் திடீரென்று இந்தக் "கக்கா" ஆராய்ச்சி? ;)

இந்தியர்கள் போல் குந்திக் "கழிக்கும்" கழிவறைகளே நல்லவை; மேலை நாட்டவர் போல் அமர்ந்து கழிக்கும் கழிவறைகள் உடல்நலத்துக்குக் கேடானவை என்று செல்லும் பதிவொன்றை அண்மையில் படிக்க நேர்ந்தது. ஆயிரமாண்டுகளுக்கு முன், மேலைநாட்டவன் - கீழைநாட்டவன் என்ற வேறுபாடின்றி எல்லோருமே "குந்தித்" தானே கழித்திருப்பார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பதிகின்றார்களே என்பதை எண்ணியபோது தான் முன்பு சுற்றுலாவொன்றில் கண்ட இந்த அரச கழிப்பகங்கள் நினைவுக்கு வந்தன.

வெள்ளையர் ஆட்சி நமக்கு நிறையவே தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மிகச்சிறந்தவை அனைத்துமே மேலைநாட்டிலிருந்தே வந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து வெளியே வரவேண்டுமென்றால், நாம் கொஞ்சம் வரலாற்றையும் தெரிந்திருக்கவேண்டும் - கழிவறை உட்பட!
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner