வெள்ளாவி - தூமையாடைகளின் துயரம்

பரஞ்சோதி, தன் தாய் மாதவியுடன் வசிக்கிறாள். குடும்பச்சூழ்நிலை காரணமாக மாதவி பெரிய இடங்களை கொஞ்சம் ‘அனுசரித்து’ போகவேண்டி நேரிடுகிறது. தாயின் நடத்தை பற்றி  தெரிந்துகொள்ளும் மகள் அடிக்கடி தாயோடு சண்டை பிடிக்கிறாள். பருவ வயதில் மகளை வைத்துக்கொண்டு, தன்னைச் சுற்றும் கண்களிடமிருந்தும் மகளைக் காப்பாற்ற வேண்டுமே என்று, தாய்மனம் தவிக்கிறது.  மருமகனான  நாகமணிக்கு  மகளைக் கட்டிவைக்க மாதவி முயல்கிறாள். வயது வித்தியாசத்தால் தயங்குகிறான் நாகமணி. 

திடீரென்று ஏற்படும் மாதவியின் நோய் காரணமாக தாயும் மகளும் சமாதானமாகும் சந்தர்ப்பத்தை காலம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. ஆனால் சில நாட்களிலேயே மாதவி அஞ்சியது நடந்து விடுகிறது. சொல்லாமல் கொள்ளாமல் கர்ப்பமடையும் பரஞ்சோதி, “யாரால் என்று தெரியாது” என்று சொல்லிவிடுகிறாள். அது யாரென்று ஊகித்து அவனை நான்கு கேள்வி கேட்கச் செல்லும் மாதவி, அவளே எதிர்பாராத கேள்விகளால் திக்குமுக்காடுகிறாள். அன்றிரவே துக்கம் தாளாமல் இறந்தும் விடுகிறாள்.  

அதன் பின் நாகமணி என்ன செய்தான், பரஞ்சோதியின் நிலைமை என்ன ஆனது, தன் குழந்தையின் தகப்பன் யாரென்று  பரஞ்சோதிக்குத் தெரிந்ததா, என்ற கேள்விகளுடன் சுவாரசியமாக நகரும் கதை, எதிர்பாராத திருப்பத்துடன் முடிந்து விடுகிறது.


விமல் குழந்தைவேலின் “வெள்ளாவி” நாவலின் சுருக்கம் இது. எழுத்தாளரின் சொந்த ஊரில் இடம்பெற்ற உண்மைச்சம்பவத்தின் தழுவலாக எழுதப்பட்ட இக்கதை, எழுதப்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வந்திருக்கிறது. 


“வெள்ளாவி”யின் கதைக்களமான அக்கரைப்பற்று கோளாவில் கிராமம், இக்கட்டுரையாளனின் பிறந்தகம் தம்பிலுவில்லிலிருந்து வடக்கே பத்து கி.மீ தொலைவில் அமைந்தது. பேச்சுவழக்கிலோ நடைமுறைகளிலோ இரு ஊர்களுக்கும் அத்தனை பெரிய வித்தியாசமும் இல்லை. பாத்திரங்களை மிக நெருங்கி உணர்ந்துகொள்ள வேறென்ன வேண்டும்? 

பெயர் சொல்வது போலவே, நாவல் சலவைத்தொழிலாளர் சமூகத்தையே பின்னணியாகக் கொண்டிருக்கிறது. அந்த சமூகம் சந்திக்கின்ற சவால்கள், அயலில் வாழும் உயர் சாதிகளின் மேலாதிக்கம். அந்தப் போராட்டத்தின் ஊடே கசியும் ஈரம். பிரதிபலன் எதிர்பாராத அன்பு, உள்நாட்டு யுத்தம் என்று பல களங்களைத் தொட்டு நகர்கிறது வெள்ளாவி. 

முதன்மைப் பாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பதால், பல இடங்களில் ஆதிக்க சாதியினரின் மேட்டிமைத்தனம் கதைப்போக்கிலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. வெள்ள நிவாரணத்தால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட ‘வண்ணார ஆக்களை’ விடுத்து, ஆதிக்க சாதியினர் நிவாரணங்களை பெற்றுக்கொள்வது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, திருவெம்பாவைக் காலத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடும் கோஷ்டி எங்கள் ஊருக்குள் வரவேண்டும் என்று சதாசிவம் கடிதம் எழுதுவது, அதை ஆதிக்க சாதியினர் அவமானமாக எடுத்துக்கொள்வது, குடிவண்ணானுக்கு மரியாதை செலுத்தும் சடங்கைக் கண்டு, தம்பி மனைவி கோபித்துக்கொண்டு வெளியேற முயல்வது என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. 

ஆனால் சாதியம் சார்ந்த சமூக முரணியக்கமும் அதே போக்கிலேயே பதிவாகி இருக்கிறது. ஆதிக்க சாதியின் ஒட்டுமொத்த உருவகமாக வருகின்ற போடியார் பொஞ்சாதி, சாதித்திமிரைக் காட்டும் அதே வேகத்திலேயே மாதவி மீது காட்டும் பரிவு, வரட்சியால் தங்கள் வயல் பாதிக்கப்பட்டபோதும், அவள் மாதவிக்கு  நெல் கொடுத்து உதவும் பாங்கு, வண்ணார் சமூகத்துக்குக் கொடுக்கப்படும் மரியாதையைக் கண்டு தம்பி மனைவி கோபித்துக்கொண்டு சென்றபோது, அதற்கு ஒரு முதியவர் கொடுக்கும் விளக்கம் என்பனவெல்லாம் உறுத்தாத விதத்தில், அதேவேளை  நெஞ்சைத் தொடும்படி வெகு இயல்பாகக் கூறப்பட்டுள்ளது. 

முதல்பாதியில் இருந்த வேகம் மாதவி இறந்தபின் வருகின்ற இரண்டாம் பாதியில் இல்லை. ஆனால் ஆயுதப்போராட்டத்தின் தொடக்க காலத்தை இரண்டாம் பாதி விவரிக்கும் இடங்கள் சில குறிப்பிடத்தக்கவை. 

பரஞ்சோதியின் அருகிலேயே வாழ்ந்த முதிய கதைசொல்லியொன்று சொல்வது போன்ற நடையிலேயே இந்நாவல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் எழுத்து வழக்கும் வருகின்றது. ஊரைவிட்டுப் பிரிந்து வெகுகாலமாகி விட்டது என்பதால், இக்கதையை முழுக்க முழுக்க பேச்சுவழக்கில் எழுதுவதில் தான் எதிர்கொண்ட சவாலை ஆசிரியர் முன்னுரையில் விவரித்திருக்கிறார். அதில் தவறேதும் இல்லை. ஆனால், இடையிடையே “எடியேய், கதைச்சிப்போட்டினம், வருவினம்” என்றெல்லாம் வடபகுதிப் பேச்சுவழக்கு வருவது? அல்லது உண்மையிலேயே சில ஆண்டுகளுக்கு முன் கிழக்கிலும் அந்தப் பேச்சுவழக்கு நிலவியதா? எனக்குத் தெரியவில்லை.


நாவல் வாசித்து முடிந்ததும் கண்ணை மூடினால் நாயகியான பரஞ்சோதியை உச்சி முதல் பாதம் வரை அப்படியே காணலாம். அத்தனை யதார்த்தமான விவரிப்புகளோடு வலம் வருகிறாள் அவள். தன் மகன் வீட்டை விட்டு ஓடுவதை ஏன் அவள் அத்தனை எளிதாக எடுக்கிறாள் என்பதை ஆராய்ந்தால் அவளது பாத்திர வார்ப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். எல்லோரிடமும் ”தெரியாது”, “தெரியாது” என்றே சொன்னாலும், நாவலின் உச்சக்கட்டத்துக்கு வரும் வரை, தன் குழந்தைக்கு அப்பன் யார் என்பதில் பரஞ்சோதி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால், தன்னோடு அந்த இரவில் இருந்தவன் வரதன் தான் என்று அவள் நம்பினாள்.  ஆனால், வரதன் மீது தான் மறைத்து வைத்துள்ள காதல், தன் மீது பரிதாபப்பட்டு தனக்குக் கணவனாக வாழும் நாகமணிக்கெதிரான துரோகம் என்பதை அறிந்திருப்பதால் தான், அந்த உறவின் எச்சமாக அவள் கருதும் மகன் மீது அவளுக்கு அவ்வப்போது ஒவ்வாமை வருகிறது. 

தன் மகன் வரதனுக்குப் பிறக்கவில்லை என்பதை அறிந்த அடுத்தகணமே அவள் தத்தளித்துப்போகிறாள். நாகமணிக்குத் தான் துரோகமிழைக்கவில்லை என்ற மிகப்பெரிய நிம்மதியும் கூடவே, இவனோடா ஓரிரவு இருந்தோம் என்ற அருவருப்பும் அந்தக்கணத்தில் சேர்ந்தே வந்துவிடுகிறது. தனக்கு இனி மகன் இல்லை என்பதை அத்தனை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் ஒரு அசாதாரண மனநிலையாக அவளில் வெளிப்படுவது அந்த உணர்வு தான்.

நாவலின் இறுதியில், நாகமணியின் சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குச்  செல்லும் பரஞ்சோதி, “வாட்டுல நிப்பாட்டினாலும்”  என்று தனக்குள் சொல்லியபடி, முகப்பகுடரையும் கண்ணாடித்துண்டையும் பன்வேக்கில் செருகிக் கொள்வாள். அதுவரை காதில் தோடு கூடப்போடாமல், தோடை முள் சொருகியபடி திரிந்தவள் அவள். தன் மகனுக்கு யார் அப்பன் என்று தெரிந்தபின்னர், தன் மகன் பற்றி இனிக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்று தெரிந்தபின்னர் அவளில் ஏற்படும் இந்த மாற்றம் தான் “வெள்ளாவி”. வெள்ளாவி போட்டபின்னர் அழுக்குத் துணிகள் புத்தம் புதிதாய் மாறிவிடுகின்றன. பரஞ்சோதியும் மாறிவிட்டாள்.     

துன்பியல் பாத்திரமாக வலம் வரும் பரஞ்சோதியின் தாய் மீது கதைப்போக்கிலேயே வாஞ்சை ஏற்பட்டுவிடுகிறது. அவள் இறக்கும் போது ஏனோ இதயம் கனக்கிறது. ஓரிடத்தில் அவளது வாழ்வை இரண்டே வரிகளில் படம் பிடித்துக் காட்டிவிடுகிறார் ஆசிரியர். “இப்பயாகுதல் தாயாரப் பாப்பமெண்டு நினைச்சி மாதவி எட்டிப்பார்த்தாள். மூலஸ்தானத்துல இருந்த அம்மாள பார்க்கேலாதளவுக்கு  பந்தலுக்குள பொங்கல் மலையாக மறைச்சிருந்திச்சி. மாதவி கடைசி வரைக்கும் கண்ணகியப் பார்க்கயில்லத்தான்.”


வெள்ளாவி போன்ற பிராந்திய நாவல்களின் முக்கியத்துவம் தான் என்ன? கற்பனையோ, உண்மையோ, அவை மண்ணின் மணத்தை ஆவணப்படுத்துகின்றன. ஒரு வாசகனாக, இந்த நாவலின் கதைக்களம், எனக்கு இரண்டு தலைமுறைக்காலம் முந்தியது. எனவே இன்று அடியோடு மறைந்துவிட்ட எத்தனையோ வழக்கங்கள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை பால்யவயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண்டிருந்த எனக்கு அவற்றை நினைவுகூர்ந்து புன்னகைக்க முடிகின்றது. “இந்தப் புத்தகத்திலிருந்த சில மரபுகள் நம் மண்ணில் இருந்தன” என்று சொல்லி என் அடுத்த சந்ததிக்கு இந்த நாவலைத் தூக்கிக் கொடுக்கமுடியும். உதாரணத்துக்கு ஒருசில:

- பூப்பெய்திய பெண் வீட்டுக்கு முறைமாமன் வீடுகளிலிருந்து சீர்வரிசைகள் செல்லும் “கலியாணம் செஞ்சி போற சடங்கு”.  

- பெண்பிள்ளை பெரியாளாகி ‘இரண்டாம் தண்ணி’ வார்க்கும் போது, குடிவீட்டு வண்ணாருக்குக் கடமை செய்வது.

- குத்திய காது ஒட்டிவிடக்கூடாது என்பதற்காக தோடு இல்லாத ஏழைப்பெண் தோடைமரமுள் பொருத்திக்கொள்வது.

- குடிவண்ணார் தத்தம் வீடுகளுக்கான ஆடைகள் மாறிவிடாதிருப்பதற்காக அடையாளம் வைப்பது,   

- "முதல் கண்டீண்ட மாட்டுல இருந்து கிடைச்ச பாலையும் அதுல இருந்து வாற தயிர் நெய்யையும் குடும்பத்துல உள்ளாக்களத் தவிர வேறாக்களுக்கு குடுத்தா கண்டீண்ட மாட்டுக்கு ஆகாது" என்ற நம்பிக்கை.

இது தவிர, கிளவளங்கட்டிக் கல்லுடன் ஒத்தி விளையாடுவது. அதில் வரும் “றைற்ரோ” . கால் கோட்டில் பட்டு “முள்ளி” ஆவது.  வெள்ளம் வந்தால் ஒரு ஏனத்தால குனிஞ்சி எட்டி அள்ளுமாப் போல கைவிட்டு நீரை அள்ளக்கூடிய கிணறுகள், அன்னாசிப் பிஞ்சி. பப்பாசிப் பிஞ்சி. சூரமீன் பயன்படுத்தி கருக்கலைப்பது, என்று  வேறு சிலவற்றையும் சொல்லலாம்.  

தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை, வரம் வாங்கி வந்தவர்களாக நான் நினைப்பது குமரி மாவட்டத் தமிழர்களை. தினுசு தினுசாகத் தங்கள் வட்டார வழக்கில் எழுதுவோரைப் பெற்ற பாக்கியவான்கள் அவர்கள். அந்த மொழிவழக்கை கஷ்டப்பட்டு உள்வாங்கி நாம் படிப்பதற்கும், ஒரு குமரித்தமிழன் இயல்பாகப் படிப்பதற்கும் எத்தனை வித்தியாசம் இருக்கும் என்று சிந்தித்திருக்கிறேன். சொந்த வட்டார வழக்கிலே ஒரு புதினத்தையாவது வாசிக்கும் ஒரே ஒரு வாய்ப்புக் கூட, கிடைக்காமல் போய்விட்டதே என்று பெருமூச்சு விட்டிருக்கிறேன். வரம் வாங்காவிட்டாலும், தெய்வத்தின் கடைக்கண் பார்வையாவது உனக்கு இருக்கிறது என்பதைச் சொல்லிப் புன்னகைத்தது வெள்ளாவி. இனி கசகறணம் படித்து இறும்பூது எய்தவேண்டும். விமல் அண்ணனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.


விமல் குழந்தைவேல், 2004, வெள்ளாவி, உயிர்மை பதிப்பகம்.

2 comments:

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner