மரபு : எஞ்சியிருப்பதைத் தக்க வைத்தல்.

0 comments

நிறையத்தடவை எழுதி அழித்துவிட்டுப் பதிவு செய்கிறேன். இதை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் இதை வாசிக்கும் பெரும்பாலானோரை இந்தப்பதிவு மகிழ்ச்சிப்படுத்தப் போவதில்லை என்பதை அறிவேன். அப்படி இருந்தும் எழுதுவதற்கான காரணம் மூன்று.

முதலாவது, இந்தச் சம்பவம் ஒரே ஒரு ஊரில் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருப்பது.

இரண்டாவது, முழு தமிழ்க் கூட்டு மனமுமே இதை சரியென அங்கீகரிக்கின்றது. இதில் தவறேதும் இருப்பதாக அது எண்ணவில்லை. அந்த அபத்தத்தை யாராவது சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.

மூன்றாவது நடந்தது நடந்தது தான். எதிர்காலத்திலாவது கொஞ்சம் இருப்பவற்றை காத்துக்கொள்ள மாட்டோமா என்ற நப்பாசை.

சரி. என்ன தான் பிரச்சினை?

தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு இடம்பெற்று இனிதே நிறைவுற்றிருக்கிறது.

ஆம், அதனால் என்ன?

கோவில்களில் திருப்பணிகள் இடம்பெறும்போது இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

முதலாவது, கோவிலின் அடிப்படைக் கட்டமைப்பில் பழைமை மாறுமளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பதை.

இரண்டாவது, கோவிலின் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை.
முதலாவது பிரச்சினைக்கு வருவோம்.

கோவிலைத் திருத்திக் கட்டும்போது, மண்டபங்களை பெரிதாக்கிப் புதுப்பிக்கிறோம். அதனால் கோவிலின் அழகு கூடியிருக்கிறது. பழைமை வேண்டும் என்பதற்காக அப்படியே இடிந்துவிழும் நிலையில் கோவிலைப் பேணவேண்டுமா?

அப்படிச் சொல்லவில்லை. ஆலயங்கள் திருத்திக் கட்டவேண்டியவை தான். ஆனால் ஆகமப்படி அமைந்த கோவில்களுக்கு மட்டுமே கட்டுமானங்களில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. மடாலயங்களுக்கு அப்படி விதிகளே இல்லை என்பதால் இருந்ததை இருந்தவாறே திருத்திக் கட்டினால் போதும்.

அங்குள்ள தூண் நம் அம்மப்பா, அப்பம்மா தொட்டு விளையாடியது, நமக்கு முன் வாழ்ந்து மறைந்த எத்தனையோ அடியவர்கள், மகான்கள் நடந்த, இருந்த மண்டபம் இது என்ற உணர்வு புல்லரிப்பை ஏற்படுத்துவது. அத்தனை பேரின் வேண்டுதல்களும் வழிபாடும் தான் அங்கு தெய்வத்தை வீற்றிருக்கச் செய்கிறது. அவர்கள் தொட்டு வழிபட்ட, சாய்ந்து அமர்ந்த ஓட்டுக்கூரை மண்டபங்களை அடியோடு மாற்றுவது கடவுளின் இருப்பையும் இல்லாமற் செய்வது தான்.

தம்பிலுவில் அம்மன் ஆலயத்தின் வடக்கு முகப்பு. அங்கிருந்த பரிகல வைரவர் கோவிலும் இன்று பரிவார ஆகம சன்னதியாகி விட்டது.


என்ன… பழைய ஓட்டுக்கூரை மண்டபமா! இப்போது கோவில் எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா?

யார் இல்லை என்றது, ஆனால் ஓடுவேய்ந்த கூரைகளே தமிழர் பாரம்பரியம்; கொங்கிரீட் சுவர்த் தளங்கள் அல்ல. பெரும்பாலான கிழக்கிலங்கையின் கோவில்கள் ஓட்டுக்கூரை கொண்டவையாகவே இருந்தன. நம் ஊரில் அல்லது பக்கத்து ஊரில் இடிக்கப்பட்டு தற்போது ஆடம்பரமாகக் கட்டப்பட்டுள்ள எல்லாக் கோவில்களினதும் 2004 - 2009இற்கு முந்தைய பழைய கட்டுமானத்தை நினைவுகூர்ந்து பாருங்கள்.

தம்பிலுவில் கண்ணகைக்கு அருகில் சுற்றிவர இருந்த எல்லா அம்மன் கோவில்களையும் இதே போல் இடித்து தூபியோடு ஆகமப்படி பெருங்கோவில்களாகக் கட்டிவிட்டோம். இப்போது அவற்றுக்கும் கண்ணகை கோவிலுக்கும் என்ன வேறுபாடு? எல்லாவற்றையும் அச்சில் வார்த்தாற்போல் ஒரே மாதிரி இப்படி இடித்து இடித்துக் கட்டி என்னத்தைக் காணப்போகிறோம்?

ஓடுவேய்ந்த மரக்கூரை கொண்ட கோவில்கள் ஈழத்தமிழரின் தொன்மையான கட்டடக்கலை மரபின் எஞ்சியுள்ள சாட்சிகள். வலுக்கட்டாயமாக அதை மாற்றுவதால் ஒரு பண்பாட்டு அம்சத்தை இழந்தவர்களாவோம் என்பது தவிர, பயனேதுமில்லை. பண்பாடு அழிக்கப்படுகிறது, சமயம் ஒழிக்கப்படுகிறது, இனம் நசுக்கப்படுகிறது, அந்நியர் ஆக்கிரமிக்கிறார்கள் என்று புலம்பும் நமக்கு, அதே பண்பாட்டு - வரலாற்று அடையாளமொன்றை நாசுக்காக நாமே அழித்து அப்புறப்படுத்தி விடுகின்ற அபத்தம் புரிவதே இல்லை. கொஞ்சம் குற்றவுணர்வு கூட இருப்பதில்லை.

ஓடுவேய்ந்த கூரைக் கோவில்களைக் கண்டால் உடனே “கேரளப்பாணி” அல்லது “சிங்களப்பாணி” என்று சொல்லத்தெரிந்த நமக்கு, “இலங்கைத்தமிழ்ப் பாணியும்” அதுவே என்று சொல்லத் தெரியாது. கிழக்கில் மண்டூரும் தெற்கே கதிர்காமமும் கூட அந்த மரபின் தொன்மைக்கு ஆதாரங்கள். எத்தனையோ வழிபாட்டு - கட்டுமான மாற்றங்கள் நடந்தபிறகும் அங்கெல்லாம் ஏன் இன்றும் “தெய்வம் பேசுகிறது” என்பதற்கான காரணம் மறைந்திருப்பது அங்கு தான்.



தெய்வம் நின்று பேசுவதற்குத் தான் கும்பாபிடேகம். ஆகமமே பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை கும்பாபிசேகம் செய்யச் சொல்கிறது.

தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவில் ஒரு மடாலயம். ஒரு மடாலயத்துக்கும் ஒரு ஆகமக்கோவிலுக்குமான வேறுபாட்டை அக்குவேறு ஆணிவேறு படித்துத் தானே எல்லோரும் சமயபாடத்தில் ஓ எல்லில் சித்தி பெற்றிருக்கிறோம்? இரண்டையும் குழப்பிக் கொள்வானேன்?

சரி, குடமுழுக்குக் கிரியைகளுக்கான விதிமுறைகள் சொல்லப்பட்டிருப்பது ஆகமங்களிலும் அவற்றின் வழி வந்த வடமொழிப் பத்ததிகளிலும். கண்ணகி அம்மனுக்கான கும்பாபிடேகத்துக்கான கிரியைகள் எந்த ஆகமப்படி அல்லது எந்த ஆகமப்பத்ததியின் படி நடைபெற்றன? “கண்ணகா பரமேசுவரி” பற்றி எந்த ஆகமம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது?

இது என்ன புது வழக்கமா? ஏற்கனவே 2000இன் ஆரம்பத்தில் குடமுழுக்கு நடந்தது, சில ஆண்டுகளுக்கு முன்வரை சங்காபிடேகமும் நடந்தது தானே?

ஒரு தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் அது சரியாகிவிடாது. கண்ணகை அம்மன் ஆலயம் மடாலயம். அதற்கு கும்பாபிடேகமோ சங்காபிடேகமோ செய்யக்கூடாது. செய்யமுடியாது. கண்ணகி ஆகமத்தெய்வம் அல்ல. அவளுக்கு குடமுழுக்குச் செய்வது – செய்தது, பிழை பிழை தான்!

மடாலயங்கள் சற்றுக் கீழானவை, ஆகமக்கோவில்களே மேலானவை என்ற உளநிலை இருப்பதால் நாம் மடாலயங்களை ஆகமக்கோவில்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். சமூகவியல் ஆய்வாளர்கள் இந்தச் செயற்பாட்டின் பின்னணியில் ஒரு ஆதிக்க சக்தி இருப்பதாகக் கருதி இதை முன்பு “சம`ச்கிருத மயமாக்கம்” என்றார்கள். அப்படியொன்றும் இல்லை. எவரது திணித்தலும் திட்டமிடலும் இல்லாமலே அது அடித்தட்டு மக்கள் உட்பட எல்லோராலும் இயல்பாகவே செய்யப்படுகின்றது என்பதையும் இப்படிச் செய்து ‘தனது “தாழ்ந்த” பண்பாட்டை “உயர்த்த” வேண்டும்’ எனும் தாழ்வு மனப்பான்மை அதன் பின்னணியில் இருப்பதையும் பிறகு தான் அவதானித்தார்கள். எனவே இந்த செயன்முறையை இன்று “மேல்நிலையாக்கம்” என்று அழைக்கிறார்கள்.

இன்று நீங்கள் குடமுழுக்கு நடந்தது சரி என்கின்றீர்கள் என்றால், அங்கு இடம்பெறும் மேல்நிலையாக்கத்தை அங்கீகரிக்கிறீர்கள் என்று பொருள். அதன் விளைவு நினைத்துப்பார்க்க முடியாதது. கப்புகனாரும் வழக்குரை பாடலும் கதவு திறத்தலும் இல்லாத கண்ணகை அம்மன் கோவிலை, ‘குளித்தில்’ நடக்காத தம்பிலுவில் ஊரை, கற்பனை பண்ணிப் பார்க்கமுடிகிறதா உங்களால்?
ஈழத்தமிழ்ப் பாணியில், ஓடுவேய்ந்த பழம்பெரும் கண்ணகி கோவில். இன்று கருவறை தவிர்ந்த முன்மண்டபங்களும் வீதி சுற்றுமண்டபமும் கொங்கிரீட் கட்டடங்களாகி எழுந்து சூழ்ந்திருக்கின்றன.

(2006ஆம் ஆண்டு படத்திலுள்ள நாகதம்பிரான் கோவில் இன்று இல்லை. அதன் விமானத்தூபியிலும் சுவர்களிலும் செதுக்கப்பட்டிருந்த புடைப்புச்சிற்பங்கள் மட்டக்களப்புத் தேசத்தின் மரபார்ந்த சிற்பக் கலையின் எச்சங்கள். ஒரோவழி எஞ்சியிருந்த அக்கலை இன்று முற்றாக அழிந்தொழிந்து போயிற்று.)





அப்படி எல்லாவற்றையும் மாற்ற அனுமதிக்க மாட்டோம். கும்பாபிடேகம் மட்டும் தானே நடந்திருக்கிறது?

கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றம் வழிபாட்டையும் மாற்றியே தீரும். குடமுழுக்கு இடம்பெற்ற எல்லாக் கண்ணகி கோவில்களும் இப்படித் தான் பழைய வழிபாட்டு முறைகளிலிருந்து விடுபட்டு மெல்ல மெல்ல மாறிவருகின்றன. யாழ்ப்பாணம் முழுக்க கண்ணகி கோவில்களுக்கு நடந்தது இதுதான். பக்கத்திலேயே காரைதீவும் செட்டிபாளையமும் மிகச்சிறந்த உதாரணங்கள். (செட்டிபாளையத்தில் குடமுழுக்குக்குப் பிறகு சைவப்பூசகருக்கும் கட்டாடியாருக்கும் கருவறை நுழைவில் பெரிய முரண்பாடே ஏற்பட்டது).

“குடமுழுக்கு நடந்துவிட்டது என்பதால் ஆகமவிதிப்படி தினமும் ஆறுகாலப்பூசையோ முக்காலப்பூசையோ இடம்பெறவேண்டும், இனி கதவு திறப்பது, ஏனைய நாள்களில் திரைக்கு பூசை செய்வது எல்லாம் ‘ஆகாது’. எனவே நித்திய பூசை செய்வோம். ஆகமவிதிப்படி கப்புகனார் கருவறை நுழையமுடியாது என்பதால் அவரை விலக்கிவிட்டு சிவாச்சாரியாரை நியமிப்போம். ஆகமத்தில் குறிப்பிடப்படாத குளிர்த்திச் சடங்கையும் வைகாசிப் பொங்கலையும் கைவிட்டுவிடுவோம், பதிலாக வைகாசி மாதம் கொடியேற்றி ‘கண்ணகா பரமேசுவரிக்கு’ மகோற்சவம் நடாத்தினால் சரி” என்று எவராவது கிளம்பி வந்தால் அதற்கு நாம் கூறக்கூடிய பதில் என்ன?



அப்படி என்றால் என்ன செய்திருக்கவேண்டும்?

வீட்டிற்கு ஒரு தடவை தான் குடிபுகுவோம். வீட்டைத் திருத்தி வண்ணமடிக்கும் ஒவ்வொரு முறையும் குடிபுகுவதில்லை. மடாலயங்களும் அவ்வாறே. தேவையென்றால் தூண்களை தாராளமாக இடித்துக் கட்டியிருக்கலாம், வண்ணம் பூசியிருக்கலாம், ஆனால் நம் பாரம்பரிய அடையாளமான மண்டபங்களின் ஓட்டுக்கூரைகளையேனும் விட்டு வைத்திருக்க வேண்டும்.

உண்மையில் நம் மடாலயங்களின் வழிபாட்டு விதிமுறைகள் எல்லாம் தமிழிலேயே எழுதப்பட்ட “பத்தாசிகளில்” இருக்கின்றன. தமிழ்ப்பத்தாசிகள் ஆகமப்பத்ததிகளுடன் ஒப்பிடும் போது சுருக்கமானவை, எளியவை. அவற்றில் ஆலயக்கட்டுமானம் பற்றியோ பரிகாரங்கள் பற்றியோ விரிவான விளக்கங்கள் கிடையாது. நீங்கள் கோவிலொன்றில் ஆகமத்தை இறுக்க இறுக்க அங்கு வடமொழி நுழையும். தமிழ் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும்.



என்றால் கோவில்களை ஆகமமயப்படுத்துவது தமிழுக்கு எதிரானதா?

கோவில்களை அமைப்பதற்கும், அவற்றை ஆகமப்படி பெருங்கோவில்களாகக் கட்டுவதற்கும் எவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இங்கு சொல்லப்படுவது தொன்மையான மடாலயக் கோவில்களை மேனிலையாக்கி ஆகமமயப்படுத்துவது பற்றி மட்டுமே. அது நிச்சயமாகத் தமிழுக்கு எதிரானது தான்.

இனம், மதம், அரசியல் சார்ந்து பல்வேறு அச்சுறுத்தல் தொடரும் போதும், கிழக்கிலங்கையில் சைவப்பற்று மங்கி மறையாமல் நீடிப்பதற்கான முக்கியமான ஒரு காரணம் ஏற்கனவே பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள எல்லாத் தமிழ் ஊர்களிலும் இருக்கும் “இரட்டை வழிபாட்டு முறைமை.”

கிழக்கிலங்கையின் எல்லா ஊரவர்களுமே தங்கள் ஊரில் அல்லது பக்கத்து ஊரில் அமைந்துள்ள ஆகமப்படி வழிபாடு நிகழும் தேசத்துக்கோவில் அல்லது திருப்படைக்கோவில் அல்லது பெருங்கோவில் ஒன்றுடன் வழிபாட்டு ரீதியாகப் பிணைக்கப்பட்டிருப்பார்கள். அதேநேரம் தமிழ்ப்பத்தாசி முறையில் வழிபடப்படும் மடாலய ஊர்க்கோவில் ஒன்றையும் தமக்கெனக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இவை இரண்டும் அருகருகே அமைந்திருப்பதும் உண்டு. ஆகம பிள்ளையார்/முருகன் கோவில் - பத்தாசி அம்மன் கோவில் என்றவாறு.

ஊர்க்கோவில்களாக மடாலயங்களும் அங்கு தமிழ் முறையில் சடங்கு/ பள்ளய/ வேள்வி/ கலியாணப்படிப்பு வழிபாடும் எஞ்சியிருந்ததால் தான் தமிழகத்தில் பெரும் எடுப்பில் நிகழ்ந்த - நிகழும் ‘தனித்தமிழ் வழிபாட்டு இயக்கம்’ சார்ந்த முன்னெடுப்பு எதுவும் கிழக்கிலங்கையில் தாக்கம் செலுத்தவில்லை. இன்று அந்த ஊர்க்கோவில்கள் எல்லாவற்றையுமே தூபியும் இராசகோபுரமும் கொண்ட பெருங்கோவில்களாக்கி அழகுபார்க்கிறோம். வடமொழி - ஆகமப் பெருங்கோவில், தமிழ் - மடாலய ஊர்க்கோவில் என்ற இரட்டை வழிபாட்டு முறைமை கண்முன்னே அழிந்துகொண்டிருக்கிறது.

ஏற்கனவே நாமும் நம் முன்னோரும் தவறிழைத்திருக்கிறோம். 1980களில் இந்த மண்ணின் வாத்தியங்களான பறையையும் சொர்ணாளியையும் கண்ணகி கோவிலிலிருந்து அகற்றி நாதசுரம் - மேளத்தை உள்நுழைய அனுமதித்தோம். வைகாசி தவிர்ந்த நாட்களில் பூட்டப்பட்டிருந்த கோவிலில் வெள்ளிப்பூசை, செவ்வாய்ப்பூசை என்று இரு வாரப்பூசைகளைக் கொணர்ந்தோம். மரபு மாறாமல் வைகாசி மாதத்தில் மட்டும் ஒருவாரம் திறந்திருந்த அவள் கதவை 2000களில் தைப்பொங்கலன்றும் திறந்து மூட அனுமதித்தோம். மட்டக்களப்புத் தேசத்தின் பண்டைய சிற்பக்கலையின் எச்சசொச்சங்கள் நீடித்த அழகான நாகதம்பிரான் கோவிலை இடித்தழித்து ஆகமப்படி அமைந்த புதிய பரிவாரக்கோவிலொன்றை உள்வீதியில் அமைத்தோம். அதுவரைக்கும் போதும் என்று தான் இருந்தது. ஆனால் இன்று நிகழ்ந்தது அவ்வாறல்ல.

பரிவார பிள்ளையார் கோவில். இதன் தூபியும் பழைய நாகதம்பிரான் கோவில் போல கிழக்கிலங்கையின் மரபார்ந்த சிற்பங்களால் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

எல்லாம் முடியும் வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது பேசி என்ன பயன்?

ஊரே மகிழ்வோடு கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு நிகழ்வை எதிர்ப்பதை எண்ணி வருந்துகிறேன். இதில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் பெரும்பாலானோர் வேண்டுமென்றோ திட்டமிட்டோ இதில் ஈடுபடவில்லை என்பதும் தெரியும். ஆனால் இந்த எதிர்ப்பு பதிவுசெய்யப்பட்டாக வேண்டும் என்று விரும்புகிறேன். நடந்தது நடந்ததாகட்டும், இனியாவது நாம் தவறிழைக்கக்கூடாது.

ஆகமக்கோவில்களை ஆகமப்படியும் மடாலயக் கோவில்களை தமிழ்ப்பத்தாசி முறைப்படியும் பேணுவதில் நாம் உறுதி பூணவேண்டும்.

அதிகம் வலிப்பது வேறொன்று. கிழக்கிலங்கையின் மிகப்பழைய கண்ணகி கோவில்கள் தம்பிலுவில், பட்டிமேடு, காரைதீவு ஆகிய மூன்றும் தான். காரைதீவு 1980களின் முற்பாதியிலேயே கருவறையில் தூபி எழுந்து ஆகமக்கோவிலாகி விட்டது. பட்டிமேடு கடந்த பத்தாண்டுகளுக்கு முன் முற்றாக இடிக்கப்பட்டு தூபியோடு குடமுழுக்குக் கண்டு ஆகமக்கோவிலாகி விட்டது. எஞ்சியிருந்தது தம்பிலுவில் கோவில் மட்டும் தான். 2000ஆம் ஆண்டளவில் நாகதம்பிரான், பிள்ளையார் பரிவாரக்கோவில்களிலும், முன்மண்டபத்திலும் செய்யப்பட்ட விரிவாக்கங்கள் தவிர அதன் கட்டுமானம் நூறாண்டுகளுக்குக் குறையாத பழைமை வாய்ந்தது.

ஒரு ஆய்வாளனாக, பண்பாட்டு ஆர்வலனாக இந்த மண்ணுக்குத் தனித்துவமான ஓடுவேய்ந்த கூரை கொண்ட கட்டடக்கலை எஞ்சியிருக்கும் கண்ணகியின் ஒரேயொரு பழங்கோவில் என் தாய்மண்ணில் மாத்திரமே உள்ளது என்று இறுமாந்திருந்தேன். குழந்தை தன் விளையாட்டுப்பொருளைக் காட்டி பெருமைபீற்றுவது போல, நான் சந்திக்கக் கிடைத்த ஆய்வாளர்கள், அறிஞர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அதன் கட்டடக்கலைத் தனித்துவத்தைக் காண்பித்து இறும்பூது எய்திக்கொண்டிருந்தேன். இனி அது இயலாது. என்றைக்குமென ஓர் பாரம்பரியச் சின்னம் அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது. அது மீளப்போவதே இல்லை என்பதை நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது.

கேரளப்பாணி - அல்ல - சிங்களப்பாணி - அல்ல - ஈழத்தமிழ்ப் பாணி கருவறைக்கூரை. அதன் அழகைக் கெடுக்க உள்வீதியில் ஆர்ப்பாட்டமாக எழுந்த சுற்றுமண்டபம். பழைய கூரையின் கட்டமைப்பும் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தளவு எஞ்சியிருப்பதை எண்ணியே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டியது தான்.

அத்தனை வேதனைக்குப் பின்னும் சிறிது நிம்மதிப் பெருமூச்சு விட வைப்பது எஞ்சியுள்ள அவளது கருவறைக்கூரை. புதிய ஓடு மாற்றப்பட்டிருந்தாலும், பழைமை மாறாத ஓட்டுக்கூரை. கேரள, இல்லை, சிங்கள, இல்லை ஈழத்தமிழ்ப்பாணி ஓட்டுக்கூரை. கொங்கிரீட் சுவர்களில் தீந்தைகளில் மின்னிக்கொண்டிருந்த முன்மண்டபங்களின் அத்தனை ஆர்ப்பாட்டங்களின் பின்னும் தான் குடியிருக்கும் கூரை மாறத் தேவையில்லை என்று திருவுளம் கொண்டிருக்கிறாளே! அதுபோதும். இப்போதைக்கு பத்தாண்டு கழிந்த பின்னர் வரும் தலைமுறை அதையும் ஒழித்து மாற்றாதிருந்தால் போதும்.
🙏

மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner