சின்னக்கலட்டி டெலே - ஓர் ஆணவம் அழிந்த கதை!

பழைய இடச்சு இலங்கை வரைபடமொன்றில் கிழக்குக் கரையில் முனைப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்த இடங்களில் ஒன்று, Chinnacalatte delle. சொல்லிப்பார்த்தால் சின்னாகலட்டே டெல்லே என்றோ சின்னச்சலட்டே டெல்லே என்றோ ஒலித்தது. இன்னொரு இடச்சு வரைபடத்தில் அதே பெயரில் அமைந்திருந்த இடச்சுக் கோட்டை ஒன்றின் படம் சித்தரிக்கப்பட்டிருந்தது.

17ஆம் நூற்றாண்டு இடச்சு வரைபடமொன்றில், Chinnecalette delle

Chinnecalette Delle கோட்டை வரைபடம், 1695ஆம் ஆண்டு.

கண்டி அரசு, 1672இல் இக்கோட்டை மீது படையெடுத்திருக்கிறது என்ற செய்தியை இன்னொரு குறிப்பு சொல்லியது. ஆக,  அந்த இடம், ஏதோ ஒருவிதத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரிந்தது.  ஆனால் நிச்சயமாக அந்த ஊரின் இன்றைய பெயர் அது இல்லை. அந்தப் பெயரில் எந்தவொரு ஊரும் கிழக்கில் இன்று அழைக்கப்படவில்லை. அந்த இடம் எது?  தேடுதல் வேட்டை தொடங்கியது.


மேலே நாம் பார்க்கும் 17ஆம் நூற்றாண்டு வரைபடத்தில், அந்த இடத்துக்கு அருகே கல்முனை, பாண்டிருப்பு ஆகிய  ஊர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே அந்த ஊர் இன்றைய கல்முனைக்கு அத்தனை தூரத்தில் இருந்திருக்கமுடியாது. கிழக்கிலங்கை என்பதால் நிச்சயமாக அது தமிழ்க்கிராமம் தான்.  “கின்னா”, “கலட்டி”, “டெல்லே”, “சின்னா”, “சலட்டே”, “டெல்” இந்தச் சொற்கள், அல்லது இவற்றை ஒத்த தமிழ்ச்சொற்கள் ஏதாவது ஒலிக்கும் ஊர்கள் கல்முனைக்கு அருகில் இருக்கின்றனவா?

கீழைக்கரையிலுள்ள கல்முனை நகரமும் அதன் அயல் ஊர்களும்
(கூகிள் வரைபடம்)

Chinnacalatte delle...... “சின்ன” என்ற சொல் கவனத்தை ஈர்க்கிறதே? “சின்ன” என்று தொடங்கும் ஊர்கள் ஏதாவது? ஊகூம். அப்படி ஒன்றும் அந்தப்பக்கம் இல்லை.  சரி. மாறி யோசித்துப் பார்ப்போம் ‘சின்ன’ இருந்தால் பக்கத்தில் ‘பெரிசு’ ஏதாவது இருக்கவேண்டும். “பெரிய” என்று தொடங்கும் ஊர்கள் ஏதாவது? "பெரிய நீலாவணை" இருக்கிறது. பக்கத்தில் "துறைநீலாவணை"யும் இருக்கிறது. ஒருவேளை துறைநீலாவணையாக இருக்குமோ? 

சின்னநீலாவணை.... Chinnacalatte.... ம்ம்… ஒலிப்பு ஒத்துவரவில்லையே. அது ஒருபக்கம் இருக்கட்டும், வேறேதாவது பெரிசு...?  ஓ! “பெரிய கல்லாறு” இருக்கிறது. பக்கத்தில் “கோட்டைக்கல்லாறு”! சொல்லிப்பார்ப்போம் Cinnacalatte.. சின்னக்கல்லாற்று….! அட, அதேதான்! “delle” என்ற சொல் புரியவில்லை. “தலை” என்றோ “தாழை” என்றோ சொல்லிப்பார்த்தால் ஒலிப்பு சந்தேகத்துக்கு இடமின்றி ஒத்துப்போகிறது.  Cinnacalatte delle… சின்னக்கல்லாற்று தலை/தாழை.

கோட்டைக்கல்லாறு, கூகிள் வரைபடம்.

கண்டி அரசிடமிருந்து கீழைக்கரையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் புலியன்தீவிலிருந்து (இன்றைய மட்டுநகர்) காத்தான்குடி வரையான சிறு நிலப்பரப்பை மாத்திரமே தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். அவர்களின் கோட்டையை 1638இல் கைப்பற்றிய ஒல்லாந்தர் ஏனைய மட்டக்களப்பின் பகுதிகளுக்கும் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தினர். மட்டக்களப்புத் தேசத்தின் மத்தியில்  போரைதீவுப்பற்று, எருவிற்பற்று, கரைவாகுப்பற்று ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் மத்தியில், மட்டக்களப்பு வாவியின் முகத்துவாரங்களை ஒட்டி இருந்த சிறுதீவான  சின்னக்கல்லாறு முக்கியமான புவியியல் அமைவைப் பெற்றிருந்தது. அங்கு ஒல்லாந்தர்கள் கோட்டை ஒன்று கட்டிக்கொண்டார்கள். வேறு காரணங்களால் 1680களில் மட்டக்களப்பின் தலைநகரை புளியந்தீவிலிருந்து காரைதீவுக்கு மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, சின்னக்கல்லாற்றுத் தலையிலிருந்த ஒல்லாந்து வீரர்களை காரைதீவுக்கு வரவழைப்பது என்ற முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. (அது செயலாக்கம் பெறவில்லை) 

ஒல்லாந்தரின் கோட்டை அமைந்திருந்த இந்த சின்னக்கல்லாறு பின்னாளில் கோட்டைக்கல்லாறு ஆனது. இன்று அங்கு கோட்டை எதுவும் இல்லை. எனினும் கோட்டையொன்று இருந்ததன் அடையாளமாக "கோட்டைவாசல் வீதி" என்ற பெயர் இன்றும் அங்கு வழக்கத்தில் உள்ளது.
கோட்டைக்கல்லாற்றில் இன்றும் உள்ள கோட்டைவாசல் வீதி.

இதையெல்லாம் நுணுகி ஆராய்ந்தபின், எனக்கோ பெருமை பிடிபடவில்லை. முக்கியமான வரலாற்றுத் துருப்பைக் கண்டுபிடித்த பெருமிதம். வரலாற்றில் மறைந்த ஒரு ஊரைத் தோண்டிக் கண்டறிந்த பேரானந்தம். யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு ஓடவேண்டும் போல் இருந்தது. எல்லாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும் வரையில் தான்.


பேர்குசனின் நூலின் 1998 இரண்டாம் பதிப்பின் அட்டைப்படம். 

The Earliest Dutch Visits to Ceylon” என்பது, 1927-1930 காலப்பகுதியில் பிரசுரமான நூல். எழுதியவர்  டொனால்ட் வில்லியம் பேர்குசன்.  ஸ்கொட்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட ‘பேர்குசன்’ வம்சாவளியில் 1853இல் பிறந்த ஆய்வாளர். தமிழ், சிங்களம் உட்பட பத்து மொழிகளில் வல்லுநராக இருந்த அவர் இலங்கை வரலாற்றில் பல ஆய்வுகள் செய்து நூல்களை வெளியிட்டார். 1910இல் அவர் இறந்தபின்னரும் அவரது சேகரங்கள் தனி நூல்களாக வெளியாகின. அப்படி அவர் மறைந்தபின்னர், அவரால் மொழிபெயர்க்கப்பட்ட இடச்சு ஆவணங்களின் தொகுப்பாக வெளியான நூல் தான் இந்த "The Earliest Dutch Visits to Ceylon." அந்த நூலில் "Chinnacalatte" என்ற சொல் இடம்பெறும் ஓரிடத்தில் அடிக்குறிப்பாக இப்படிச் சொல்கிறார் பேர்குசன்.

“வான்கூலன் என்பவரது வரைபடத்தில் Chinnacalatte எனும் சிறுதீவும் அதன் அருகே Periacalette எனும் இடமும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே இவை இரண்டும் சந்தேகமின்றி இன்றைய கோட்டைக்கல்லாறும் பெரியகல்லாறும் தான்.”

இன்று ஹாயாக கணினி முன் அமர்ந்துகொண்டு இலவச மின்னூல்களை, இலவச வரைபடங்களைச் சாதாரணமாகத் துருவிக்கொண்டு நான் கண்டறிந்த “Chinnacalatte =  கோட்டைக்கல்லாறு” என்ற வரலாற்றுச் செய்தியை, குறைந்தது நூற்றியெட்டு ஆண்டுகளுக்கு முன், எவ்வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில், இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் கப்பலில் நாயாய் பேயாய் அலைந்தபடி, வேற்றுமொழி ஆவணங்களை மொழிபெயர்த்து, வரைபடங்களை ஒப்பிட்டுக் கண்டுபிடித்து, எவ்வித அலட்டலும் இல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார் ஒரு மனிதர்.
டொனால்ட் வில்லியம் பேர்குசன்
(நன்றி: archeology.lk)

இந்தத் தலைக்கனம் தான் எத்தனை பெரியது! நூறுநூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரின் உழைப்பை உணராமல், அவர்கள் சிந்திய வியர்வையை அறியாமல், எத்தனை இலகுவாக, நான் செய்தேன் நான் செய்தேன் என்று கூவியபடி கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர முடிகின்றது! காலமெனும் முடிவிலிக்கு முன், கண்முன்னே பிறந்திறந்து மடியும் எறும்பு போலத்தானே நாம் என்பதை  எத்தனை எளிதாக மறந்துவிடுகிறோம்? 

டொனால்ட் வில்லியம் பேர்குசன்…..
வெட்கித் தலைகுனிகிறேன் ஐயா.
நூறாண்டுகள் பிந்தி வந்தவன்,
அந்த நூறாண்டுகள் பிந்திய என் சிற்றறிவை மன்னிக்குக. 
எங்கிருந்தோ வந்து, எவன் நாட்டுக்காகவோ உதிரத்தை அர்ப்பணித்த
உம் உழைப்பை, உயர்வை, உன்னதத்தைப் பணிகிறேன். 
“இத்தர்மம் இரட்சித்தான் அடி என் முடி மேலினே.”

2 comments:

  1. அண்ணே உங்கட இந்த வரலாறு எல்லாத்தையும் ஒரு படி எடுத்து வையுங்கோ.. உங்கட வலைத்தளத்திற்கு ஏதாவது நிகழ்ந்தாலும் அதைப் பிறகு வெளியிடலாம் கண்டியளோ!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. ஏற்கனவே அப்படி ஒருமுறை நடந்திருக்கிறது. இப்போது பின்சேமித்த ஆக்கங்களே வலைப்பதிவில் வெளியாகின்றன. அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      Delete

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner