ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 02

 முந்தைய பாகம்:

ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 01



6.2  பொபி 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் ஆறுமதங்களையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக ஆக்கி, அதைப் பின்பற்றும் துறவியர் மரபை உருவாக்கினார். ‘ஷண்மத சங்கிரகம்’ என அது அழைக்கப்படுகிறது. கவனியுங்கள் ஆறு religionகளை அவர் ஒன்றாக்கவில்லை. ஆறு தரப்புகளை ஒன்றாக்கினார். அதாவது ஆறு வழிபாட்டுமுறைகளை இணைத்தார்.

 

இலங்கையின் பாடநூல்களிலும், உயர்கல்வியிலும் இது மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு மறுக்கமுடியாத உண்மையாக நிறுவப்பட்டுள்ளது.  இந்து மதம் ஆறு பிரிவுகளைக் கொண்டது. அவை சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, முருகன், சூரியன் ஆகிய ஆறு பேரையும் முழுமுதல் தெய்வங்களாக முறையே வழிபடும் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் எனும் ஆறு பிரிவுகள் ஆகும். இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளையும் தாபித்தவர் ஆதிசங்கரர். எனவே அவர் ஷண்மதஸ்தாபகர்.

 

ஆனால், உங்கள் கட்டுரையில் ஷண்மதஸ்தாபனம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், நாசூக்காக “ஷண்மத சங்கிரகம்”, ஆறு சமயங்களின் ஒன்றிணைப்பு, சங்கரர் ஆறு ‘தரப்புகளை’ ஒன்றிணைத்தார் என்று கூறிக் கடந்துசெல்கிறீர்கள். ஆனால் இன்றுவரை வெளியாகிக் கொண்டிருக்கும் அத்தனை ‘இந்துமத’ நூல்களும் வலைத்தளங்களும் ஷண்மதஸ்தாபனம், ஷண்மதஸ்தாபகர் என்றே சொல்லிக்கொண்டிருக்கின்றன. எது எப்படியோ ‘இந்துமதத்தின்’ தரப்புக்காக வாதாடும் ஒருவர், ‘ஸ்தாபனத்திலிருந்து’ ‘சங்கிரகத்துக்கு’ இறங்கிவந்ததே ஒரு விதத்தில் நல்லூழ் என்று நினைக்கிறேன்.

 

சங்கரர், சைவம், வைணவம் உட்பட ஆறு சமயங்களை தாபித்தார் என்ற தொன்மம் சைவ  - வைணவ நூல்கள் எதிலும் பதிவாகவில்லை. சொல்லப்போனால், தமது சமயத்தை சங்கரரே ஸ்தாபனம் செய்தார் என்பதை சைவரும் வைணவரும் ஏற்றுக்கொள்வதுமில்லை. வரலாற்று ரீதியாகப் பார்க்கப்போனால் கூட, சங்கரர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகின்ற நிலையில், சைவத்துக்கும் வைணவத்துக்குமான தொல்லியல் வரலாற்றுச் சான்றுகள், பொது ஆண்டையும் முந்திச் செல்கின்றன.

 

6.2.1 காணாபத்தியமும் கௌமாரமும்

சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம் என்ற ஆறும் ஷண்மதங்கள் என்றும், அவை இந்துப்பெருநெறியின் ஆறு கிளைகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு இன்று நிறுவப்பட்ட உண்மையாகவே மாறிவிட்டது. உண்மையில் வரலாற்றுத் தொல்லியற் சான்றுகள் கிடைப்பது, சைவம், வைணவம், சாக்தம், சௌரம் ஆகிய நான்குக்குமே.

 

காணாபத்தியம், கௌமாரம் பற்றிய வாதங்கள் எழும் போது, திருமுருகாற்றுப்படை, மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை முதலிய முருகன், பிள்ளையார் தோத்திரங்களே கௌமார, காணாபத்திய நூல்களாகச் சொல்லப்படுகின்றன. இவை பன்னிரு சைவத்திருமுறைகளில் அடங்கியுள்ளன என்பது கூட அவ்வாறு வாதிப்போருக்குத் தெரிவதில்லை.

 

தற்போது கிடைக்கின்ற தரவுகளின் படி,  காணாபத்தியம் பெருஞ்சமயமாக மாறியது,  16 – 17ஆம் நூற்றாண்டில் மராட்டியத்தில் வாழ்ந்த மோரியா கோசவியுடன் தான். அவருக்கு முன் பிள்ளையார் தனிமதத்தின் முழுமுதலாக வழிபடப்பட்டார் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இல்லை. வடமொழியில் கணபதியை முழுமுதலாகப் போற்றும் கணேச உபநிடதம், முத்கல புராணம், எல்லாமே 15ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரேயே காலம் கணிக்கப்படுகின்றன.

 

காணாபத்தியத்தின் நிலை இப்படியென்றால், கௌமாரம் என்ற சமயம் பற்றித் தரவுகளே கிடையாது. கந்தன் குப்தர் காலத்தில் வழிபடப்பட்ட பிரதான தெய்வங்களில் ஒருவன் எனினும், அவன் வழிபாடு தனிமதமாகவில்லை. முருகனை இஷ்ட தெய்வமாக வழிபடும் சைவர்கள் இன்றும் உள்ளார்கள் தான். ஆனால் முருகனை தனிப்பரம்பொருளாக நிலைநிறுத்தும் முதல் நூல்களெதுவும் இன்று எங்கும் வழக்கிலில்லை. இன்று ஒரு சிலர் கௌமார சமய நூல்களாக சுட்டிக்காட்டும் திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம், அருணகிரிநாதரின் நூல்கள் என்பன தமிழிலேயே எழுந்தவை. வடமொழியில் முருகனைப் பரம்பொருளாகச் சித்தரிக்கும் நூலான குமார தந்திரம் கூட, சிவாகமங்கள் இருபத்தெட்டினுள் ஒன்றான லலித ஆகமத்தின் உப ஆகமம் தான்.  

 

6.2.2 ஷண்மதஸ்தாபனத்தை நிரூபிக்கும் வரலாற்று ஆதாரங்கள்.

முதலில் இவ்வாறு ஆதிசங்கரர் ஆறு மதங்களை தாபித்தார்  - ஷண்மதஸ்தாபனம் செய்தார் என்ற தகவல் எங்கேயாவது பதிவாகியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.  தமிழில் “ஷண்மதஸ்தாபனம்” பற்றிய ஆரம்பக் குறிப்புகளில் ஒன்று, 1976இல்  ரா.கணபதியால்   தொகுக்கப்பட்டு ஏழு பாகங்களாக வெளியிடப்பட்ட “தெய்வத்தின் குரல்” நூலில் தான் கிடைக்கிறது.  

 

காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அருளுரைகளின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ நூலில் “உருத்திராக்கம் அணிவதாலும் திருநீறு பூசிக்கொள்வதாலும் புறத்தோற்றத்தை வைத்து, தங்களை சைவர் என்றே பலரும் கருதிக்கொள்கிறார்கள். ஆனால் தாங்கள் சைவர்கள் அல்ல; ஸ்மிருதிகளைப் பின்பற்றும் ஸ்மார்த்தர்கள். நாங்கள் பூசும் விபூதி சிவசம்பந்தமுடையது அல்ல; வேதசம்பந்தமுடையது.” என்று அவரே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். மெய்யியல் தளத்தில் சங்கரரின் அத்வைத மெய்யியலையும், சடங்கியல் தளத்தில் பூர்வமீமாம்சையை அல்லது சுமிருதிகளை முன்வைக்கும் இந்த சுமார்த்த மதம் பற்றி யாரும் பெரிதாகப் பேசுவதில்லை.

 

சிவனோடு விஷ்ணு, கணபதி, சக்தி, சூரியன் ஆகிய ஐந்து தெய்வங்களை சமனாகக் கருதி வழிபடும் “பஞ்சாயதன பூசை” சுமார்த்தர்களுக்குத் தனித்துவமானது. இஷ்ட தெய்வம் சிவனா, விஷ்ணுவா, சக்தியா என்பதைப் பொறுத்து அவர்கள் சுமார்த்தரில் சைவரா, வைணவரா, சாக்தரா என்றெல்லாம் அடையாளப்படுத்திக்கொள்வார்கள்.  ஆனால், இங்கு கூட ஐந்து தெய்வங்கள் தானே இருக்கின்றன, ஆறாவது முருகன் எங்கே?

 

அது ஒருபக்கம் இருக்கட்டும்.  “ஷண்மதஸ்தாபனம்” பற்றி சந்திரசேகர சரஸ்வதி என்ன சொல்கிறார்?

 

“ஆசார்யாள் காஞ்சீபுரம் வந்ததை அநேகமாக அவரது அத்தனை சரித்ர புஸ்தகங்களுமே சொல்கின்றன. காஞ்சியிலிருந்து கொண்டுதான் அவர் ஆறு சிஷ்யர்களை தேசமெல்லாம் அனுப்பிவைத்து ஷண்மதங்களை நிலைப்படுத்தினாரென்று ‘ஆனந்தகிரீயம்’, ‘(ச்ருங்கேரி) குருவம்ச காவ்யம்’ இரண்டிலும் இருக்கிறது……..ஆறு சிஷ்யர்கள் தேசம் முழுதும் போய் யாராருக்கு எது இஷ்ட தேவதையோ, அதை வைதிகமாக, இதர தேவதா நிந்தையில்லாமல் அவற்றோடு சேர்த்தே பூஜிக்கும்படியாகச் செய்தார்கள். இப்படி ஷண்மத உபாஸனையை நிலை நிறுத்திவிட்டுக் காஞ்சீபுரம் திரும்பி வந்து ஆசார்யாளுக்கு ஸேவை செய்து கொண்டிருந்தார்கள்………………(ஆதிசங்கரர்) ஷண்மத ஸ்தாபனமும், அதற்கு சிகரமாக அத்வைத ஸ்தாபனமும் செய்ததற்குப் பட்டாபிஷேகம் மாதிரி ஸர்வஜ்ஞ பீடாரோஹணம்..” 

-         தெய்வத்தின் குரல்: ஐந்தாம் பாகம்: காஞ்சியில் ஆசார்யாள்

 

காஞ்சி மடாதிபதியின் இந்த வரிகளுக்கான அடிக்குறிப்பில் இப்படிச் சொல்கிறார் தொகுப்பாசிரியர். 

‘ஆனந்தகிரீயம்’ – பிரகரணங்கள் 67-72; ‘குருவம்ச காவியம்’ – சர்க்கம் 3, சுலோகம் 36-ம், அதற்கு நூலாசிரியரே எழுதியுள்ள விரிவுரையும். அனைத்து சங்கர விஜயங்களுக்கும் முந்தைய ‘பிருகச்-சங்கர விஜய’த்திலும் ஆசார்யாள் காஞ்சி வாசத்தின்போது ஷண்மத ஸ்தாபனம் செய்த விவரம் உள்ளதாக ‘குரு ரத்னா மாலா’வின் 33-வது சுலோகத்திற்கான ‘ஸுஷமா’ விரிவுரையின் மேற்கோளிலிருந்து தெரிகிறது. சித்விலாசீய சங்கர விஜயம் 31-ம் அத்தியாயம் 15-24 சுலோகங்களும் இவ்விஷயத்தைக் கூறுகின்றன.

 

ஆக, ஆறு மதங்களை சங்கரர் தாபித்ததற்கான முதன்மையான ஆதாரங்கள் அதே தெய்வத்தின் குரல் நூலிலேயே கிடைத்துவிட்டன. ஐந்து நூல்கள். ஆனந்தகிரீயம், சிருங்கேரி குருவம்ச காவியம், பிருகத் சங்கரவிஜயம்,  குருரத்னமாலா, சித்விலாசீய சங்கர விஜயம். 

 

இவற்றில் ஆனந்தகிரீயம், பிருகத் சங்கர விஜயம், சித்விலாசீய சங்கரவிஜயம் ஆகிய மூன்று நூல்களும், சங்கரரின் திசைப்பயணங்களைச் சொல்லும் “சங்கர விஜயம்” என்ற வகையறாவுக்குள் அடங்குகின்ற நூல்கள்.   இவற்றில் பிருகத் சங்கரவிஜயம் இன்று கிடைப்பதில்லை. அதே பெயரில் அறியப்படும் பிற்கால நூல்கள் பற்றி பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. ஆனால் சங்கர விஜயங்களின் காலம் 14ஆம் நூற்றாண்டுக்குப் பின் என்றே ஆய்வாளர்கள் பலர் சொல்கிறார்கள். குறிப்பாக, அனந்தானந்தகிரீயம், சித்விலாசியம், மாதவீயம் என்பனவற்றின் இன்றுள்ள பிரதிகள் குறைந்தது 18ஆம் நூற்றாண்டில் எழுதி முடிக்கப்பட்டவை என்று தான் கருதப்படுகிறது. 

 

தெய்வத்தின் குரல் அடிக்குறிப்பில் குறிப்பிடப்படும் அடுத்த நூலான சிருங்கேரி குருவம்ச காவியம், 1735ஆம் ஆண்டு காசி இலட்சுமண சாஸ்திரி என்பவரால் எழுதப்பட்டது. சிருங்கேரி மடத்தில் கிடைத்த இந்நூல், மரபான சங்கர வரலாற்றுடன் பல இடங்களில் முரண்பட்டதால், நீண்டநாட்கள் அச்சுவாகனம் ஏறாமல் கிடந்து 1900ஆம் ஆண்டு தான் முதல் பதிப்பு கண்டது. 

 

இன்னொரு நூலான குருரத்னமாலா, 1740களில் வாழ்ந்த அத்வைத அறிஞர் சதாசிவ பிரமேந்திராளால் எழுதப்பட்டது. அந்நூலுக்கு “சுசமா” என்ற பெயருடைய உரையை எழுதியவர், 1814 - 1890 இடையே வாழ்ந்த ஆத்மபோதேந்திர சரஸ்வதி என்பவர். ஆக நாம் மூலநூல்களைப் படிக்காமலேயே கூட, “ஷண்மதஸ்தாபனம்” என்ற தொன்மம் உருவானது, 1700இற்குப் பின்னர் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். 

 

அப்படியே சங்கரர் தாபித்த ஷண்மதங்கள் பற்றிய விரிவான விபரங்கள் கிடைக்கும் என்றெண்ணி இந்நூல்களைப் படிக்க முயன்றால், எல்லா நூல்களுமே சங்கரர் ஷண்மதத்தை ஸ்தாபித்தார் என்று கூறுகின்ற போதும், அந்த ஆறு மதங்களும் இன்ன இன்ன என்ற விபரத்தைத் தெளிவாகக் கூறவில்லை. “ஆனந்தகிரீயம்” என்று  குறிப்பிடப்படும் அனந்தானந்தகிரீயத்தில் மட்டும் அந்த ஆறு மதங்களின் பெயர்கள் கிடைக்கின்றது. அவையாவன: சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணாபத்தியம், காபாலிகம்!

 

ஆம். சங்கரரின் ஷண்மதஸ்தாபனப் பட்டியலில் எங்குமே கௌமாரம் என்ற பெயரில்லை. காபாலிகம் தான் அங்கு இருக்கிறது. அதற்கு அனந்தானந்தகிரீயத்திலேயே ஒரு கதை சொல்லப்படுகின்றது. பரமத காலானலர் (சைவர்), லட்சுமணரும் கஸ்தாமலகரும் (வைணவர்கள்),  திரிபுராகுமாரர் (சாக்தர்), திவாகரர்  (சௌரர்), கிரிஜாகுமாரர் (காணாபத்தியர்) ஆகிய ஆறு தலைமைச் சீடர்கள் தாம் பின்பற்றி வந்த ஐந்து சமயங்களை வேத வழியில் தாபிக்கும் அனுமதியை சங்கரரிடம் பெற்று நாட்டின் பல்வேறு திசைகளுக்குச் சென்றுவிடுகிறார்கள்.  வேதத்திற்கு மாறான காபாலிக சமயத்தைப் பின்பற்றி சங்கரரால் மனம் திருந்திய வடுகநாதர் எனும் சீடர், மேற்படி ஐந்து தலைமைச் சீடர்களுக்கும் பணிவிடை செய்துகொண்டிருந்தவர். (ஆறு தலைமைச் சீடர்கள் எப்போது ஐந்து தலைமைச் சீடர்கள் ஆனார்கள்? அங்கு கஸ்தாமலகரை தவிர்த்துவிடவேண்டும் என்று சொல்வார்கள் உரையாசிரியர்கள்.)

 

வடுகநாதர் தனது காபாலிக மதத்திற்கும் சங்கரரின் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். வடுகநாதரின் கோரிக்கையை ஏற்கும் ஆதிசங்கரர், வைதிக வழியில் நடந்துகொள்ளும் தகைமையை இழந்துவிட்ட பிராமணர்களும் பாமரர்களும் ஈடேறுவதற்காக அவரது காபாலிக மதத்தை ஆறாவது மதமாக அங்கீகரித்து அதைப் பரப்ப அனுமதியளிக்கிறார்.. 

 

ஷண்மதஸ்தாபனக் கதைகளில் எங்குமே ஆறு சமயங்களின் பெயர் கூறப்படவில்லை என்பதையும், குறிப்பிடப்பட்ட ஓரிடத்திலும் கௌமாரம் அல்லாமல் காபாலிகமே இருக்கிறது என்பதையும் இங்கு ஊன்றி நோக்கவேண்டும். என்றால் கௌமாரம் எப்படி இன்று கூறப்படும் பட்டியலில்  சம்பந்தமில்லாமல் வந்து சேர்ந்திருக்கின்றது?

 

அத்வைத ஆசாரியாரில் ஒருவரான மாதவ வித்தியாரணியர் (பொபி 14ஆம் நூற்றாண்டு) பராசர சுமிருதிக்கு எழுதிய உரையான பராசர மாதவீயத்தில் ஓரிடத்தில் கௌமாரம் உள்ளிட்ட ஆறு சமயங்களைக் குறிப்பிடுகிறார்.  ‘குமார’ என்ற வேரடியில் பிறந்த ‘கௌமார’ என்ற சொல், குமாரனான முருகனின் வழிபாட்டைக் குறிக்காமல், அப்போது புகழ்பெற்றிருந்த நிம்பார்க்க வைணவப் பிரிவான குமார சம்பிரதாயத்தைக் குறிப்பிட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் சங்கரரின் ஷண்மதப் பட்டியலில் காபாலிகம் இணைக்கப்பட்டிருப்பதன் பொருத்தமின்மையை உணர்ந்துகொண்ட யாரோ ஒருவர் தான், பராசர மாதவீயத்தின் பட்டியலில் இருந்த கௌமாரத்தைக் கொணர்ந்து பிற்காலத்தில் ஷண்மத ஸ்தாபனப் பட்டியலை மாற்றியிருக்கவேண்டும். 

 

6.2.3 ஆறு சமயங்களும் சீடர் சமயம் பரப்பிய தொன்மமும்

சைவம், வைணவம், சாக்தம் உள்ளிட்ட பிரிவுகளை சங்கரர் தாபித்த கதை, அந்தந்தப் பிரிவுகளின் தொன்மங்களில் கூறப்படாத நிலையில், அபூர்வமாக அனந்தானனந்தகிரீயம் முதலியவற்றில் மட்டும் நமக்குக் கிடைக்கும் ஷண்மதஸ்தாபனக் கதையின் மூலத்தை நாம் ஆராயவேண்டும்.

 

சமயங்கள் ஆறு என்ற தகவல் வேறெங்காவது கிடைக்கிறதா? ஆம். 7-9ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த நாயன்மார் “சமயங்கள் ஆறு” என்ற தகவலை மீண்டும் மீண்டும் பாடியிருக்கிறார்கள். ஆனால் அவை எதிலும் ஆறு சமயங்கள் இன்ன இன்ன என்ற தகவல் இல்லை. எனினும் தமிழின் மிகப்பழைய நிகண்டு நூலான சேந்தன் திவாகரத்தில், அறுசமய வகைப்பெயர் சொல்லப்பட்டுள்ளது. வைசேடிகம், நையாயிகம், மீமாஞ்சை, ஆருகதம், பௌத்தம், பிரதிலோகாயிதம் எனும் ஆறும் அவை. முதல் மூன்றும் வைதிக தரிசனங்கள். இறுதி மூன்றும் அவைதிக தரிசனங்கள்.

 

பத்தாம் நூற்றாண்டு பிங்கல நிகண்டில் அகச்சமயம் ஆறு, புறச்சமயம் ஆறு என்ற வகைப்பாடு காட்டப்பட்டுள்ளது.  அவை சொல்வதன் படி, வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்னும் ஆறும் உட்சமயம். உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சாராத்திரம், பட்டாசாரிய மதம் என்னும் ஆறும் புறச்சமயம்.  உட்சமயமாகக் கூறப்படும் ஆறும், சிவனை முழுமுதலாகக் கொண்டவை என்பதால், உட்சமயம் என்ற சொல்லை ‘சைவப்பெருஞ்சமயத்தின்’ உட்சமயம் என்றே படிக்கவேண்டும். சிவாகமங்களிலும் கல்வெட்டுக்களிலும் பெருமளவில் குறிப்பிடப்பட்ட ஆதிமார்க்க சைவப்பிரிவுகள் மூன்று (பாசுபதம், காபாலிகம், காளாமுகம்), மந்திரமார்க்க சைவப்பிரிவுகள் மூன்று (சித்தாந்தம் அல்லது சைவம், வாமம், தட்சிணம் அல்லது வைரவம்) ஆகிய ஆறுமே பிங்கலந்தையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

நாயன்மார் பாடிய ஆறுசமயங்கள் என்னென்ன என்ற தகவல் இன்று கிடைக்காத நிலையில், பிங்கலந்தை குறிப்பிடும் ஆறு உட்சமயங்களையே அவர்கள் பாடியிருக்கலாம் என்று மட்டுமே தற்போதைக்கு ஊகிக்க முடிகின்றது. சேந்தன் திவாகரத்தில் சைவதவப்பாலோர் என்ற பெயரில் மாவிரதியர், காளாமுகர், பாசுபதர் ஆகிய மூவர் பெயரும், தேவாரங்களில் மாவிரதியர், கபாலிகள், சைவர், பாசுபதர் ஆகிய நால்வர் பெயர்களும் ஒன்றாகக் குறிப்பிடப்படுவதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.  ஆக, ‘சமயங்கள் ஆறு’ என்ற எண்ணிக்கையை சங்கரவிஜய நூல்கள், தென்னக வழக்கிலிருந்தே, குறிப்பாக சைவம் முதலிய மரபுகளிலிருந்தே பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பது தெளிவாகின்றது.

 

ஷண்மதஸ்தாபனக் கதையில் சொல்லப்படும், “தங்கள் சமயக்கொள்கைகளை ஒரேநேரத்தில் அல்லது ஒன்றன்பின் ஒன்றாக நாட்டின் பல்வேறு திசைகளுக்கும் குறித்த சமயச் சீடர்கள் எடுத்துச் சென்று பரப்பினார்கள்” என்ற தொன்மமும் சைவ - வைணவர்களிடம் நீண்ட காலமாக நிலவி வந்த ஒன்று தான். உதாரணமாக, திருமந்திரத்தில் சனகாதி முனிவர் நால்வர், திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோகமுனி என்று எட்டுப்பேர், நந்திதேவரிடம் சைவத்தைக் கற்று, எட்டுத்திசைகளுக்கும் சைவத்தை எடுத்துச் சென்றதாக ஒரு குறிப்பு வருகின்றது.

 

வைணவ மரபின் படி, திருமகள், பிரம்மா, உருத்திரன், சனகாதிமுனிவர் ஆகிய நால்வரின் சீடர் பரம்பரையிலேயே இராமானுஜ  வைணவம், மாத்வ சம்பிரதாயம், விஷ்ணுஸ்வாமி சம்பிரதாயம், நிம்பார்க்கி சம்பிரதாயம் ஆகிய நான்கு வைணவ சம்பிரதாயங்கள் கற்பிக்கப்பட்டு பரப்பப்பட்டன.  சாக்த மரபில், காலசங்கர்ஷணி (காளி), திரிபுரை, குலேசுவரி, குப்ஜிகை என்ற தேவியின் வடிவங்களை மையமாகக் கொண்ட நான்கு சாக்தப்பிரிவுகள் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளுக்கு நான்கு சீடர்களால் பரப்பப்பட்டது என்ற கதை இருக்கிறது. 

 

சைவ – வைணவ – சாக்த நூல்களை மாதிரியாக வைத்தே ஆறு சீடர்களால் ஆறு சுமார்த்தப்பிரிவுகள் நாடெங்கும் எடுத்துச் செல்லப்பட்ட தொன்மம் உருவாகியுள்ளது என்பதையும், அதிலுள்ள முரண்பாடான தகவல்களையும், அவற்றைக் கூறுகின்ற நூல்களின் காலத்தையும் வைத்து ஷண்மதஸ்தாபனக்கதை மிகப்பிற்காலத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

 

சரி, பிந்தியதோ முந்தியதோ, இந்துமதத்தின் ஒரு தரப்பான சுமார்த்தம் எனும் சமயத்துக்கு மாத்திரம் பொருந்தும் இந்தக் கதையை சைவரும் வைணவரும் ஏற்றாக வேண்டும் என்ற தேவையை ‘இந்து’ மதம் ஏன் வலியுறுத்துகிறது? அப்படித் தங்கள் சமயங்களின் கோட்பாடுகளை விடுத்து, புறச்சமயமொன்றின் தொன்மத்தை நம்பி நிற்கும் தேவை சைவ வைணவருக்கு, என்ன தவிர்க்கமுடியாமையால்  கட்டாயப்படுத்தப்படுகிறது?

 

ஷண்மதஸ்தாபனக் கதை, பிற்காலக் கதை, புறச்சமயக் கதை, அத்தனைக்கும் மேல் கௌமாரம் என்ற இல்லாத மதத்தைப் புனைந்துரைத்து இன்று முருகனை இஷ்டதெய்வமாக வழிபடும் சைவர்களில் பலரை கௌமார சமயத்தவராக அடையாளப்படுத்தும் அறியாமைக்கு வழிகோலிய கதை.  இத்தனையையும் சகிக்க முடிந்தாலும், சைவத்தால் இக்கதையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு வலுவான காரணம் ஒன்றுண்டு.

 

ஏனென்றால் சைவர்களுக்கென மதங்களை வகைப்பிரிக்கும் ஒரு நீண்ட மரபு இருக்கிறது. ஆரம்பத்தில் அகம் ஆறு, புறம் ஆறு என்று இருந்து, இன்று அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என தலைக்கு ஆறாகப் பிரிக்கும் மிகத்தெளிவான ஒரு சைவசித்தாந்த பாகுபாட்டு முறைமை.

 

அந்த வகைப்பிரிப்புக்கு தெளிவான நிபந்தனைகளும் உள்ளன. அகச்சமயங்கள் வேதங்களையும் சிவாகமங்களையும் ஏற்றுக்கொண்டவை. அகப்புறச்சமயங்கள் வேதங்களையும் சிவாகமங்கள் அல்லாத சைவநூல்களையும் ஏற்றுக்கொண்டவை. புறச்சமயங்கள் வேதங்களை ஏற்றுக்கொண்டு எல்லாச் சைவநூல்களையும் நிராகரிப்பவை. புறப்புறச்சமயங்கள் ஒட்டுமொத்தமாக வேதங்களையும் சிவாகமங்களையும் நிராகரிப்பவை. ஆறு என்ற எண்ணிக்கையைத் தவிர்த்துப் பார்த்தால், காலம் கடந்துவிட்டாலும், இன்றுள்ள கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட உலகின் எல்லாச் சமயங்களையும் சைவத்தின் இந்தச் சட்டகத்தில் கொணர்ந்து பொருத்திப் பார்க்க முடியும். சைவர்களுக்கு அளவுகோல் இந்த வகைப்பாடு மாத்திரமே.

 

ஷண்மதப்பட்டியல் வகைப்பாடு சைவத்தின் அக-அகப்புற-புற-புறப்புறச் சமய வகைப்பாட்டுக்கு எதிரானது. அப்படியே இந்தத் தொன்மத்தை ஏற்பதென்றாலும், சைவக்கோட்பாடுகளுக்கு மாற்றான, சைவத்தைக் கண்டித்த, புறச்சமயம் என்று சைவம் வரையறுக்கும் ஒரு மதத்தின் ஆசாரியரால் சைவம் நிலைநிறுத்தப்பட்டது அல்லது ஒன்றிணைக்கப்பட்டது என்று சொல்வதை, சைவர்கள் ஏற்பது அவர்களுக்கே இழுக்காய் வந்து முடியும்.

 

7. சைவம் தனிமதமாகவே கருதப்பட வேண்டியது ஏன்?

 

முக்கியமான கேள்வி இது தான். சைவம் தற்போதும் சாதியாசாரங்களில் உறைந்துபோய் பழம்பெருமை பேசுவோரின் சமயமாகவே எஞ்சியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தின் எழுச்சியுடன், சைவ மறுமலர்ச்சிக்கான ஒரு களம் உருவானதும், சைவத்தில் இயல்பாகவே இருந்த வைதிக எதிர்ப்பு மனநிலை, சைவத்தின் வைதிக அம்சங்களை எதிர்த்து, தனித்தமிழ்ச் சைவத் தூய்மைவாதம் பேசுமளவு தீவிரமடைந்ததையும், பின்னாளில் திராவிட இயக்கத் தோற்றம், தமிழக அரசியல் மாற்றங்கள் என்பவற்றின் பின்னணியில் சைவ மறுமலர்ச்சி இயக்கம் வீழ்ச்சி கண்டதையும் நீங்களே பல இடங்களில் எழுதியிருக்கிறீர்கள்.

 

ஆனால் சைவ மறுமலர்ச்சி இயக்கம் முற்றாக நீர்த்துப்போகவில்லை. அதன் கூறுகள் இன்றும் எஞ்சியே உள்ளன. சாதிக்கட்டுப்பெட்டித்தனத்திலும் நாத்திகப்போர்வையிலும் மறைந்திருந்து தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக மட்டும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் “இந்து எதிர்ப்பு சைவக்குரல்” எழுப்புவோரை நான் சொல்லவில்லை.

 

வரலாற்று ஒழுக்கில் சைவம் இன்று வந்து சேர்ந்துள்ள இடத்திலிருந்து அதன் முழுச்சித்திரத்தையும் புரிந்துகொண்டு, அந்நெறியால் பழைய இயல்புக்கு மீளமுடியும் என்ற நம்பிக்கையுடன் அதற்கான முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கும் சில செயற்பாட்டாளர்களை நான் அறிவேன். அது வெல்லுமா, தோற்குமா என்பதெல்லாம் காலத்தின் கையில். ஆனால், அந்த மீட்டுருவாக்க முயற்சிக்கு, சைவத்துக்கு மாற்றான மெய்யியல் கோட்பாடுகளையே முடிந்த முடிபாக முன்வைக்கும் இன்றைய ‘இந்து மத’ அடையாளம் தடையாகத் தான் இருக்கிறது, இருக்கவும் இயலும். அந்தத் தடையை மீறி, சைவம் தனிச்சமயமாக அடையாளம் பெறவேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது?

 

7.1 “இந்து” அடையாளத்தில் சைவத்துக்கு இழப்புக்கள் ஏற்படுகின்றன.

சைவ மறுமலர்ச்சி இயக்கத்தை திசைமாறிக் கைவிட்டதிலும், தம் குறைகளை இனங்கண்டுகொண்டு அவற்றைத் திருத்திக்கொள்ளாமையிலும் சைவர் தரப்பில் பல பிழைகள் உள்ளன என்பதை மறுக்கவியலாது. ஆனால், “இந்து” என்ற ஒருகுடையின் கீழ் சைவம் அமரமுற்படும் போது, அதிலும் சங்கர அத்வைதச் சார்பான சுமார்த்தத்தின் தலைமைத்துவத்தின் கீழ் அமைய வற்புறுத்தப்படும் போது, சைவம் எதிர்நோக்கும் இழப்புக்கள் வேறுவிதமானவை.

 

சைவர் இந்துமதத்தவராகத் தொடரும்போது, அவர்கள் எண்ணிப்பார்க்க இயலாத விட்டுக்கொடுப்புகளுக்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். முன்பே கூறியது போல், எது எது சைவம், சைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நியாயத்தராசை வேதாந்தியரும் சுமார்த்தருமே ஏந்திக்கொள்கின்றனர்.  மூவருக்கும் மேலானவன் என்ற சைவ முழுமுதல் கடவுளுக்கு, மும்மூர்த்திகளில் ஒருவனாக மட்டுமே ‘இந்து’க்கள் மத்தியில் இடம் கிடைக்கின்றது.

 

சிவாலயங்களில் ஆதிசங்கரர் சிலைகளும், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சிலைகளும் ஆகமவிதிகளுக்கு மாறாகத் திணிக்கப்படுவது அண்மையில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. ஆதிசைவ சிவாச்சாரியார்கள், சுமார்த்தப் பிராமணர்களால் மூன்றாந்தரப்பாக நடாத்தப்படுவது இன்னொரு பக்கம் விவாதங்களுக்கு உள்ளானது. இந்து – சைவ முரணுக்கு ஆணிவேரான இந்த சுமார்த்த – சைவ மோதலை இங்கு விரிவஞ்சிப் பேசாது தவிர்க்கிறேன்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, சைவ சமூகக்கூட்டுநனவிலியில் உருவாகி எழுந்துகொண்டிருந்த ஆயிரமாயிரம் ஆண்டு சைவ ஆழ்படிமங்கள் இந்து மத அடையாளத்தின் கீழ் கேள்விக்குறியாகி வருகின்றன. உதாரணமாக “செய்யமேனியன், பவளம் போல் மேனி” என்றெல்லாம் தமிழில் பாடப்பட்ட சிவன், “கற்பூரகௌரம் கருணாவதாரம்” என்றெல்லாம் வடக்கே பாடப்பட்ட சிவன், இன்று புராணங்களின் தமோகுண நீலலோகித உருத்திரனாகிப் புன்னகைத்துக்கொண்டிருக்கிறான். தமிழிலும் வடமொழியிலும் சிவன் சிவந்தவன். கண்டம் மட்டும் கறுத்த அவனை நவீன ஓவியர்கள் முழுக்கறுப்பாகவே சித்தரித்துக்கொண்டிருக்கிறார்கள்.  ஆலால நஞ்சைக் கழுத்தில் வைத்துக்கொண்ட அனாதிசைவனின் திருமேனி நீலமாகச் சித்தரிக்கப்படுகிறது, விடமுண்ட சைவம் இருள்மண்டிக் கிடக்கிறது.

 

7.2 இந்துப் பொது அடையாளம் இந்தியர் அல்லாத இந்துக்களுக்கு அச்சுறுத்தலாகின்றது.

 

ஒரு இந்தியத் தேசியவாதியாக தாங்கள் இந்தியநலனை முன்னிறுத்தி இந்து ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதையும், இந்துப் பண்பாட்டை தனிமதமாக முன்வைப்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. இமயம் முதல் குமரி வரை பரந்துள்ள இந்தியப் பெருநிலத்தின் பண்பாட்டு ஒருமைக்காக, தேசியத்துக்காக “இந்து, இந்துத்துவம்” எனும் சமூக – அரசியல் எண்ணக்கருக்கள் மீள மீள வலியுறுத்தப்படுகின்றன. அவற்றின் பின்விளைவுகள், பிற உலகநாடுகளில் வதியும் ‘இந்து’க்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதை இந்தியர்கள் சிந்தித்தாகவேண்டும்.

 

சரியாகப் போயிற்று. தன் தேசமக்களை மாத்திரமன்றி, பிறநாட்டாரின் ‘இந்து’ அடையாளம் பற்றியும் இந்தியாவே கவலைப்படவேண்டுமா? தேவையில்லை தான். ஆனால் இந்தியாவின் ஒவ்வொரு நகர்வும், இந்தியா விரும்பியோ விரும்பாமலோ, பலநூறாண்டுகளாகவே இந்தியப்பண்பாட்டு உறவில் தவிர்க்கமுடியாத வகிபாகம்  வகிக்கின்ற இலங்கை, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஏனைய ‘இந்துக்கள்’ வாழும் நாடுகளையும் பாதிக்கிறது.

 

தமக்குரிய அரசியல் – புவியியல் காரணிகளைச் சுட்டிக்காட்டி “நாங்கள் இந்து” என்று சொல்லும் ஒரு இந்தியத் தேசியவாதி ஒருவரிடம் “அப்படி உங்கள் விருப்பத்துக்கு நீங்கள் மதத்தை வரையறுத்துக்கொள்வது தவறு. பாதிக்கப்படுவது நாங்களும் தான்” என்று தலைநிமிர்த்திச் சொல்வதற்கான தார்மிக உரிமை ஈழத்துச் சைவனுக்கு கிடைப்பது இந்தப் பண்பாட்டு உறவால் தான்.

 

உண்மையில் இந்துத்துவத்தின் ஒற்றைப்படையாக்கத்தால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுபவர்கள் இலங்கைத்தமிழர். இலங்கையில் சைவ சமயம் என்ற பெயர் இங்கு போன தலைமுறை வரை, கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பௌத்தர்களுக்கும் கூட நன்கு தெரிந்திருந்தது. பாடநூல்களில் கூட சிங்களத்தில் “சைவ தர்மய” என்று குறிப்பிட்டிருப்பார்கள்.  கத்தோலிக்கரும் தாங்கள் அல்லாத தமிழரை, அவர்களின் சமயத்தை வைத்து “சைவக்காரர்கள்” என்றே அடையாளப்படுத்தினார்கள்.

 

இலங்கையில் சமயம் பதினோராம் வகுப்பு வரை ஒரு கட்டாயப்பாடம். எனவே  சைவத்தமிழ் மாணவர்கள் “சைவநெறி” என்ற பாடத்தைக் கற்கிறார்கள். பன்னிரண்டாம், பதின்மூன்றாம் வகுப்புகளில் கலைப்பிரிவைத் தேர்ந்தெடுக்கும் சில மாணவர்கள், இந்து நாகரிகம் அல்லது இந்து சமயம் எனும் விருப்பப் பாடங்களைக் கற்கிறார்கள். (இந்து நாகரிக / இந்து சமயப் பாடங்களில் கற்பிக்கப்படும் முதல் விடயமே இந்து மதத்தின் ‘ஷண்மதப்பிரிவுகள்’ தான் என்பது தனிக்கதை). எது எப்படியோ அடிப்படையில் சைவமும் இந்துவும் வேறு வேறு விடயப்பரப்பைக் கொண்டவை என்ற தெளிவு இங்கு கொஞ்சப்பேருக்காவது உள்ளது.

 

இலங்கையில் சைவத்துக்கு மதரீதியான அச்சுறுத்தல்கள் ஒருபுறம் பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய பிறமதங்களால் வருகின்றதென்றால், இன்னொரு விதமான அச்சுறுத்தல் வருவது இந்துத்துவ அமைப்புகளால். “சைவம் என்ற அடையாளம் வேண்டாம், இந்து என்றே இருக்கவேண்டும்” என்று  வெளிப்படையாகவே கூறியபடி ஒரு கும்பல் இயங்குகிறது. அவர்களில் பெரும்பாலானோர் இந்துத்துவ அமைப்புக்களின் நேரடி அல்லது மறைமுகப் பிரதிநிதிகளாகத் தங்களை அறிவித்து இயங்கிக்கொண்டிருப்பவர்கள்.

 

இந்த அச்சுறுத்தல்களுக்கு நான்கு உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். இந்துக்கள் வாழும் இலங்கையில் பாடசாலைக் கல்வித்திட்டத்திலுள்ள “சைவநெறி” என்ற சமயபாடம் தவறானது, அது சிங்கள அரசியல்வாதியொருவரின் திட்டமிட்ட சதி. அதை “இந்து சமயம்” என்று மாற்றவேண்டும் என்று ஒரு தரப்பு பொதுவெளியிலேயே எழுதி வருகிறது. நகைச்சுவை என்னவென்றால், இலங்கையில் நெடுநாளாகவே  சைவசமயம் என்ற பாடம் பள்ளிகளில் இருந்துவருகிறது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவப் பாடசாலைகள் ஆரம்பமானபோது, அவற்றுக்கு ஏட்டிக்குப்போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட சுதேச பாடசாலைகள் “சைவப்பள்ளி” அல்லது “சைவப்பாடசாலை” என்றே இங்கு அறியப்பட்டன.

 

இரண்டாவது உதாரணம், புத்திந்து (Neo Hindu) அமைப்புக்களின் பெருக்கம். இலங்கையில் தற்போது தமிழகத்தில் வழக்கத்தில் இருக்கும் ஈஷா, நித்தியானந்தா, அம்மா பகவான், இஸ்கான், பிரம்மகுமாரிகள், சத்திய சாயி, சீரடி சாயி, உள்ளிட்ட அத்தனை புத்திந்து அமைப்புக்களுக்கும் பின்பற்றுநர்கள் உண்டு. இந்த வழிபாடுகள் மத்தியதட்டு வர்க்கத்தை குறிவைத்தே பரவுவதும், அவற்றில் இணைவோர் மரபான சைவத்தில் காட்டும் உதாசீனமும்,  திணிக்கும் மாற்றங்களும் இங்கு பல இடங்களில் ஒவ்வாமையைப் பதிவுசெய்து வைத்திருக்கின்றன. சிவன் கோவில் வாசல்களில் வேண்டுமென்று அமர்ந்து, குறித்த புத்திந்து அமைப்பின் நூல்களை விற்பனைக்குப் பரப்பி, “நீங்கள் கும்பிடும் சிவன் வெறும் தேவன், கடவுளல்ல” என்று அங்கே வைத்தே மதப்பரப்புரை செய்யும் ஒரு புத்திந்துப் பின்பற்றுநரை விட, வீடுவீடாகச் சென்று மதப்பிரசாரம் செய்யும் விவிலியக் குழுக்கள் ஒன்றும் இழிவான செயலைச் செய்யவில்லை.

 

மூன்றாவது எடுத்துக்காட்டு, இந்துக்கூறுகளால் ஏற்பட்டு வரும் வழிபாட்டு மாற்றங்கள். உதாரணம், சபரிமலை. ஐயப்பனுக்கு மாலை போடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஈழத்திலிருந்த பழம்பெருமை வாய்ந்த ஐயனார் கோவில்களில் பல இன்று ஐயப்பன் கோவில்களாக மாறியுள்ளன. 

 

ஆகமஞ்சாரா ஐயன் கோவிலொன்றை, ஆகமப்படி திருத்தி அமைக்க முயன்றபோது சிற்பாசாரியார், “மூலவராக ஐயனாரை வைக்கக்கூடாது அவர் உக்கிரமூர்த்தி, சாந்தமாக சபரிமலை ஐயப்பனை வைத்து வழிபடுங்கள்” என்று சொன்ன சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இன்னொரு ஐயனார் கோவிலில் புதிதாக ஐயப்பனை நிறுவி, சபரிமலை நடைமுறைப்படி பெண்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காது மகரஜோதி விசேட பூசை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பின் பக்தர்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. 

 

ஐயப்பன் கோவிலாகக் குடமுழுக்குக் கண்ட ஒரு ஐயன் கோவில், இலங்கை
(படம்: kurunews.com)

ஐயப்பனுக்குப் புதிதாகக் கோவில் கட்டுவதையோ சபரிமலைக்கு யாத்திரை செல்வோரின் வழிபாட்டுரிமையையோ வலுக்கட்டாயமாகத் தடுக்கும் உரிமை சைவருக்கு அல்ல; யாருக்குமே இல்லை தான். ஆனால், பழைய ஐயன் கோவில்களை ஐயப்பன் கோவில்களாக மாற்றும் மனநிலை இவர்களுக்கு ஏன் வருகிறது? ஐயனைக் குலதெய்வமாகக் கொண்ட இலங்கையின் பலநூறு சைவக்குடும்பங்களை “அவர் உக்கிரமூர்த்தி, சபரிமலையானைக் கும்பிடுங்கள்” என்று சொல்லும் தேவை சிலருக்கு எங்கிருந்து எழுகிறது?

 

தெய்வ உபாசனைகளில் செய்யப்படும் மாற்றங்கள் உருவ வழிபாட்டாளனொருவனின் ஆழ்மனதில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆன்மிகத்தளத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. பூரணை – புட்கலையோடு வீற்றிருந்த இல்லறத்தான் ஐயன், பிரம்மச்சாரியான யோகநிலை ஐயப்பனால் பிரதியீடு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறான். இதனால் இறைநம்பிக்கைத் தளத்தில் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னென்ன? ஏற்கனவே உள்நாட்டு அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டுநனவிலியில் அதன் பாதிப்பு என்ன?

 

(இந்த வரிகளை எழுதும்போது நீங்கள் நாராயணகுரு குடித்தெய்வங்களை அழித்து சிவன், விஷ்ணு முதலிய பெருந்தெய்வங்களை நிறுவியதன் தத்துவார்த்தப் பின்னணியை விளக்க முயன்றது நினைவுக்கு வருகிறது. அதில் கூட அத்வைத வேதாந்தம் மற்றும் சைவ – வைணவங்களின் கருத்தியல்களுக்கிடையிலான முரணைக் காணலாம். ஆனால், ஐயன் மறைக்கப்பட்டு ஐயப்பன் எழும்போது நிகழ்வது நாராயணகுரு செய்த மாற்றமும் அல்ல; சிறுதெய்வம் பெருந்தெய்வமாகும் சமூக முன்னகர்வும் அல்ல. ஓரிரு அரைகுறை அறிவாளிகளின் நம்பிக்கை அடிப்படையில் அறியாமையோடு செய்யப்படும் வெறும் இறையுருவத் திரிப்பே அது).

 

நான்காவது உதாரணம், சர்வதேச பௌத்தக்கொடி இலங்கையில் தான் உருவானது. அந்தப்பின்னணியில் விடைக்கொடிச்செல்வர் திரு.சி.தனபாலாவின் பணிப்புரையின் பேரில் சைவக்கொடியான இடபக்கொடி மதுரை இரவீந்திர சாஸ்திரியால் உருவாக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து இங்கு நிகழும் சமயநிகழ்வுகளில் பயன்பட்டு வருகிறது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 2010களின் பின், சமய நிகழ்வுகளில் விடைக்கொடிக்குப் பதிலாக காவிக்கொடியே பயன்படுத்தப்படவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. “காவிக்கொடியையே நாங்கள் குருவாக ஏற்றுள்ளோம்.” என்ற மகுடவாசகத்துடனேயே இலங்கையின் இந்துத்துவ அமைப்பொன்று மதநிகழ்வுக்கு அழைப்பிதழ் வெளியிடும் அளவுக்கு, விடைக்கொடி மீது காழ்ப்பு நிறைந்திருந்தது.

 

சைவ சமயத்தில் விடைக்கொடிக்கு வழங்கப்பட்டுள்ள இடம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். அல்லது தமிழகத்துப் பல்லவர், ஈழத்துச் சிங்கையாரியர்களின் கொடி என்னவென்ற வரலாற்றுணர்வாவது அவர்களுக்கு இருக்கவேண்டும். வேறொரு நாட்டுக்கு நாம் செல்கின்றபோது, அந்நாட்டின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதே முறை.  இலங்கையில் முன்பு இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடி ஒன்று இல்லாமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை. இங்கு ஏற்கனவே இருக்கின்ற ஒன்றை வலுக்கட்டாயமாக அகற்றும் அளவுக்கு, இந்துத்துவ அமைப்பொன்றுக்கு, அந்த அடையாளம் ஏன் எரிச்சலூட்டுகிறது?

 

7.3 சைவத்தின் எதிர்காலப் பொருத்தப்பாடு

விஞ்ஞானம் அதீத வளர்ச்சி பெற்று உலகையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில், எதிர்காலத்தில் சமயங்கள் தேவைப்படுமா, அப்படியே தேவைப்பட்டாலும், அவை எவ்வாறு நிலைத்திருக்கும் என்பதெல்லாம் இந்தக் கணத்தில் நின்றபடி நம்மால் எதிர்வுகூற முடியாத விடயங்கள். ஆனால் அடிப்படையான இரு விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.  சிலவற்றை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.

 

பல்வேறு கோட்பாடுகளின், சிந்தனைகளின் முரண்கள், இணைவுகள், மறைவுகள் அத்தனையும் தொகுக்கப்படும்போது, உலகின் சமயப் பொருண்மை இருவிதமாக  நீடிப்பதற்கே சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று, அனைத்தையும் அழித்து எஞ்சிய ஒன்று, கருப்பு வெள்ளைப்படமாக நீடிப்பது, அல்லது இயற்கைத் தேர்வில் தக்கன பிழைக்கும் எனும் கூர்ப்புக் கோட்பாட்டின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட சமயங்கள் அப்படியே நீடிப்பது. இத்தனையாயிரம் உலக வரலாற்றில், இயற்கை  என்றுமே கறுப்பு வெள்ளையாக – ஒற்றைப்படையாக இருந்ததில்லை. எனவே, எதிர்காலத்துக்கும் பல்வகைமையே பொருத்தமாக நிலவக்கூடும் என்று ஊகிக்கலாம்.

 

இந்த ஊகம் சரி என்றால், எதிர்காலத்துக்கென ஒற்றைப்படையாக்கத்தை எதிர்க்கும், பல்வகைமையை ஆதரிக்கும் சிந்தனைகளையே முற்கொண்டுசெல்லவேண்டும். அப்படி,பல்வகைமையை ஆதரிக்கும் எதிர்கால உலகில், ஒரு சமயம் நிலவவேண்டுமென்றால், அதற்கு இரு இயல்புகள் இருக்கவேண்டும். ஒன்று அது பிற சமயங்களின் இருப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். அச்சமயம் கோட்பாட்டு அடிப்படையில் பிறசமயங்களை நிராகரிக்கலாம், எதிர்க்கலாம், ஆனால் தனக்கு ஒவ்வாதது என்ற ஒரு காரணத்தாலேயே பிற சமயமொன்று அழிந்துபோகவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டதாக இருக்கக்கூடாது.

 

இரண்டு, மனிதன், விலங்குகள், இயற்கை அத்தனையையும் சமமாக மதிக்கும் மனப்பாங்கு அச்சமயத்தவனுக்கு இருக்கவேண்டும். வருங்காலச் சந்ததியினருக்கு வளங்களை விட்டுச்செல்லவேண்டும் எனும் மனநிலையை வலியுறுத்தும், ஐ.நாவின் “வளங்குன்றா வளர்ச்சி / நிலைபேறான அபிவிருத்தி” (Sustainable Development), சமத்துவமும், ஒப்புரவும் (Equality and Equity) உயிர்ப்பல்வகைமையைப் பேணல், என்பதெல்லாம் எதிர்காலம் கருதி விரிவாக உரையாடப்படும் இந்நாள்களில் சூழல்நேச மனப்பாங்கு கொண்ட ஒரு சமயமே நிலைபெறத் தகுதியானது.

 

சைவம், இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்திசெய்கின்றது. அகம் – அகப்புறம் – புறம் – புறப்புறம் எனும் சமயப்பகுப்பைக் கொண்டுள்ள சைவத்துக்கு புறச்சமயங்களின் இருப்பை ஏற்கும் இயல்பான தகுதி இருக்கிறது. மனிதர்களுக்குச் சமனாகவே கள்ளிச்செடிக்கும் எறும்பு, யானை, சிலந்தி முதலிய உயிர்களுக்கும்  வீடுபேறு அளித்த இறைவனை வழிபடுவது சைவம். மிகமுற்பட்ட காலங்களில் இருந்தே சாதிமறுப்பை, வருண மறுப்பை வலுவாகப் பதிவு செய்த சமயமும் சைவமே.

 

பொது ‘இந்து’ அடையாளத்தில் வருணாச்சிரமப்பாகுபாடு, சாதிய ஒடுக்குமுறை, பாலினச் சமமின்மை முதலிய பிற்போக்கான அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட பல சமயத் தரப்புகள் உள்ளடங்குகின்றன. கோட்பாட்டுப் பிடிப்பற்ற பல குறுமதங்களும், தனிமனித வழிபாடுகளும் ‘இந்து’ மதத்தால் பேதமின்றி ஆதரிக்கப்படும் நிலையில்,  அவற்றின் அடையாள அழிப்பை மீறி சைவம் எழுந்துவருவதற்கு நாள் எடுக்கும். இத்தனை காரணங்களுமே சைவம் ‘இந்து’ அடையாளத்துக்குள் அன்றி, தனிமத அடையாளத்திலேயே நீடிக்கவேண்டும் என்பதற்கான வலுவான வாதங்களாகின்றன.

 

ஆனால், சைவத்தின் தனித்துவம் அழிகின்றது என்ற வாதம் எங்கு எழுந்தாலுமே, அது இந்து ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ‘இந்து’ அடையாளத்தில் திருப்தியுற்ற ஒருவன், ஏன் அந்த அடையாளத்தை மறுத்து இன்னொரு அடையாளத்தை கையில் எடுக்கப்போகிறான்? அதிலுள்ள நியாயங்கள் புரியாமல், தன் சுயத்துக்காகக் குரல் கொடுப்பவனை உடனே மதமாற்றக் கைக்கூலியாகச் சித்தரித்து தாக்குதல் நடாத்தப்படுகின்றது. இன்றும் எங்காவது,  “நாங்கள் சைவர்” என்ற குரல் கேட்டாலே, பல ‘இந்து’ செயற்பாட்டாளர்கள் ஓடிவந்து தயாராக வைத்துள்ள “சைவ மிசனரி”, “கிறிஸ்தவ கைக்கூலி” பட்டங்களை அப்படிச் சொல்பவர்களுக்கு அன்போடு சூட்டிவிட்டுச் செல்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் நாகரிகமாக “இந்து அல்ல சைவம் என்பவர்கள் அனைவருமே கிறிஸ்தவ அமைப்புகளிடம் பெருந்தொகைப் பணம் பெறுகிறார்கள்.” என்கிறீர்கள். பெரிய வித்தியாசமொன்றும் இல்லை.

 

ஒருவேளை அப்படியே கோடிகோடியாக ஐரோப்பாவிலிருந்து பணம் வருகிறது என்றால், மதமாற்றத்துக்குத் துணைசெய்பவர்கள் சைவ ஆதரவாளர்களா, அல்லது ‘இந்து’ ஆதரவாளர்களா என்ற ஐயம் நெடுநாளாகவே உள்ளது. செழுமையான சமயத்தைச் சார்ந்த ஒருவன், அந்தச் சமயத்தை அறிந்த ஒருவன் எதற்காக மதம் மாறப்போகிறான்? மதம் மாறியோர், மாறுவோர் நிறையப்பேர், சமய அறிவு இல்லாதவர்கள் தானே?

 

இந்துத்துவ ஆதரவாளர்கள் தன் பின்பற்றுநனைப் பார்த்து சொல்வதெல்லாம் “மதம் என்பது வெறும் எண்ணிக்கை மாத்திரம் தான். பிறமதத்தான் எண்ணிக்கையில் அதிகரித்து உன் உரிமைகளை, வளங்களைப் பறிக்கப்போகிறான். மரபுக்கல்வி, சமய அறிவு என்று எதுவும் தேவையில்லை. சும்மா கூட்டத்தோடு கூட்டமாக வந்து நின்று பிறமதங்களுக்கு எதிர்ப்புத் தெரிவி. மதம் வளர்ந்துவிடும்” என்பதை மட்டும் தான்.

 

“சமயம் என்பது மதம் தரும் அறிவுத்தொகை அல்ல; பிறமதங்கள் மீதான காழ்ப்பு மட்டுமே” என்று சொல்லி அவர்களால் வளர்க்கப்படும் தற்குறிகளும், மத அறிவே இல்லாத அந்தத் தற்குறிகளின் அடுத்தடுத்த தலைமுறைகளும் தான்  மதமாற்றிகளுக்குத் தேவையானவர்கள். இப்படி கத்தியின்றி இரத்தமின்றி மதமாற்றத்தை இலகுபடுத்தும் பொறிமுறை சத்தமில்லாமல் இடம்பெற்றுக் கொண்டிருக்க, அதற்கு ஆதரவளிப்பவர்கள் பாதிக்கப்படுபவர்களாகவும், தங்கள் தனித்துவத்தைக் காக்கப் போராடுபவர்கள் அடக்குமுறையாளர்களாகவும் ஏன் சித்தரிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலில் வெளிநாட்டு நிதியுதவிகளின் மர்மம் மறைந்துள்ளது என்று ஊகிக்கலாமல்லவா?

 

8. இந்தியாவில் தீவிர வைணவர்கள், தீவிர சைவர்கள் என சொல்லத்தக்கவர்கள் மிகமிகக் குறைவானவர்கள்…… இந்திய மக்கள் தொகையில் இந்துக்கள் ஏறத்தாழ அறுபது கோடி என்றால் அதில் மொத்தமாக ஐம்பதுலட்சம் பேர் சைவர்கள் அல்லது வைணவர்கள் என தனியாக அடையாளம் கொண்டவர்கள். எஞ்சியோர் இன்று நாம் இந்து மதம் என்று சொல்லும் பொதுவான வழிபாட்டு முறையிலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள். எல்லா தெய்வங்களையும் வழிபடுகிறார்கள்.

 

சைவர்கள், சிவ முழுமுதன்மையை ஏற்றுக்கொண்டவர்களே தவிர, கட்டாயமாக சிவனை மாத்திரமே வழிபடுபவர்கள் அல்ல என்பது முன்பே சுட்டிக்காட்டப்பட்டது. சிவாகம வழிபாட்டிலேயே கூட திருமாலிலிருந்து கன்னியர், தவ்வை வரை எல்லாத் தெய்வங்களுக்கும் இடம் இருக்கிறது. ஒரு பெருஞ்சக்கரவர்த்தியாக சிவன் அமர்ந்திருக்க, அவரைச் சூழ அத்தனை தேவதேவியரும் பரிவாரங்களாக அமர்ந்திருக்கும் சித்திரமே ஆகமங்களில் வருகிறது. நேத்திர தந்திரம் உள்ளிட்ட சைவதந்திரங்கள் பௌத்த, சமணத் தெய்வங்களையும் சிவாச்சாரியார் ஸ்தாபனம் செய்து வழிபடலாம் என்ற விதிவிலக்கை ஏற்றிருக்கின்றன. 

 

“இந்துமதம்” இன்று செய்துகொண்டிருப்பதாகச் சொல்லும் இணைவுச் செயற்பாட்டை இந்து சமயத்திற்கு பலநூறாண்டுகள் முன்பேயே சைவமும் வைணவமும் செய்திருக்கின்றன. சமணத்தெய்வங்கள் அமெரிக்காவில் இருநூறாண்டுகளுக்குப் பின் இந்துத்தெய்வங்களாவது ஒருபுறம் இருக்கட்டும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பேயே தாரா, புத்தர் உள்ளிட்ட சமண, பௌத்தத் தெய்வங்கள் சைவத்தெய்வங்களாகவும், வைணவத் தெய்வங்களாகவும் மாறியிருக்கின்றன.

 

சிவலிங்கத்துக்குக் கல்லால் எறிந்த புறச்சமயி ஒருவருக்கு “சாக்கியநாயனார்” என்று உயரிய இடத்தை சைவம் கொடுத்தபோது இந்துமதம் தோன்றவில்லை. தன் மீது பத்திமை பூண்ட புறச்சமயப்பெண்ணொருத்திக்கு “துலுக்கநாச்சியார்” என்ற கௌரவத்தை திருவரங்கநாதன் கொடுத்தபோது இந்துமதம் தோன்றவில்லை. இந்து என்ற பொது அடையாளம் இருந்தால் தான் இந்த ஒருங்கிணைவும் அங்கீகாரமும் நிகழுமா? சைவம், வைணவம் என்று இருந்தால் ஆகாதா?

 

தங்கள் கட்டுரையைப் படிக்கும் போது வேதனை தந்த வரிகள் இவை. ஒரு கணக்குச் சொல்கிறீர்கள், இந்தியாவின் இந்துக்கள் அறுபது கோடியில் ஐம்பது இலட்சமே சைவர், வைணவர் என்று தனியாக அடையாளம் கொண்டோர் என்று. மகிழ்ச்சிக்குரிய விடயம் அல்ல அது. அந்த எஞ்சிய “ஐம்பத்தொன்பது கோடியே ஐம்பது இலட்சம் பேர்” இயல்பான காரணிகளால் இந்துக்களாக உருவாகி வந்தவர்களல்ல. முகலாயப்படையெடுப்பு, ஐரோப்பியக் காலனியாதிக்கம், அதைத் தொடர்ந்து உருவான மதம் நீக்கப்பட்ட அரசு, அதன்வழி தூண்டப்பட்ட மதமிலாக் கல்வித்திட்டம் என்று பல காரணிகள் சேர்ந்தே சைவர் அல்லது வைணவர் என்று மரபு சார்ந்து அடையாளப்படுத்த முடியாத வெற்று இந்துக்களை உருவாக்கி வைத்திருக்கின்றன.

 

இந்து என்ற பொது அடையாளத்தில், தேடலுள்ள ஓரிருவரே மெய்ஞ்ஞானம் பக்கம் வருகிறார்கள். மீதி அத்தனை பேரும் வெறும் பாமரச் சடங்களாகவே மறையப்போகிறார்கள். இன்னும் பத்து இருபதாண்டுகளில் அந்த ஐம்பது இலட்சம் பேர் அல்லாத மீதிப்பேர் நூறுகோடிப் பேராக மாறி, தம்மை “சமயமற்றோர்” என்றே அடையாளப்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்.

 

ஏனெனில் அவர்களுக்கு சமயம் என்று தெரிந்ததெல்லாம், வெறும் சோதிடமும்  பரிகாரங்களும் பூசை புனஸ்காரங்களும் மாத்திரமே. அதற்கு மேல் உயரிய மெய்யியல்களும் தத்துவங்களும் இருக்கின்றன என்பதோ, சைவம் வைணவம் சார்ந்த தொன்மையான பழங்குடி வழிபாடுகளில் நம்மை முன்னோரோடு இணைக்கும் ஆழ்படிமங்கள் மறைந்திருக்கின்றன என்றோ அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. நவீனக்கல்வியும் நுகர்வு ஊக்குவிப்பும் ஐரோப்பிய வழிபாட்டு மனநிலையும் அவர்களைக் கொண்டு சென்று நிறுத்தப்போவது, சமயமற்றோர் எனும் நிலைக்கு மாத்திரமே.

 

சமகாலத்தில் இந்திய மக்களின் பண்பாட்டு அசிரத்தையை, மரபில் அறிமுகமின்மையை, மதத்தையே நுகர்வுவெறியாகப் பார்க்கும் மொண்ணைத்தனத்தை நீங்கள் பல இடங்களில் கண்டித்திருக்கிறீர்கள். நிறையப் பயணக் கட்டுரைகளில் இடித்துரைத்திருக்கிறீர்கள். ஓரிரு இடங்களில் வருந்திக் கண்ணீரும் சிந்தியிருக்கிறீர்கள். அதெல்லாவற்றுக்கும் ஆதார அடிப்படையான எளிய காரணம் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. மதம் என்பதை ஜோதிடமும் பரிகாரமும் வியாபாரமும் என்று மாத்திரமே பார்க்கும் வெற்றுக்கூச்சல் கூட்டமாக மாறி, இந்தியமண்ணின் மகத்தான சமயங்களான சைவத்திலிருந்தும் வைணவத்திலிருந்தும் அம்மக்கள் முழுமையாகத் தங்களைத் துண்டித்துக்கொண்டது தான் இந்தியப்பண்பாடு – இந்துப்பண்பாடு இன்று அடைந்துள்ள நிர்க்கதியான நிலைக்குக் காரணம். வேறெதுவுமில்லை.

 

ஆம். சமயம் என்பது ஆதீனங்களிலும் மடங்களிலும் உறைந்துகிடக்கவில்லை. அது நம் குடும்பங்களில் இருந்தது. குடும்ப மரபுகளாகவும் சமூகநெறிகளாகவும் நிலாக்கதைகளாகவும் தாத்தா-பாட்டி, பேரன்-பேத்தி என்று தலைமுறை வழியே தான் சமயங்கள் கடத்தப்பட்டன. இன்றைய உலகில் நவீன தொழிநுட்பமும் போன தலைமுறையின் போலிப் பகுத்தறிவுவாதமும் தலைமுறை இடைவெளியைக் கூட்டி மரபுத்தொடர்ச்சியை அறுத்துவிட்டிருக்கிறது. சமயம் தரும் தலைமுறைஞானத்தை தங்கள் சந்ததிக்குக் கடத்தும் தகைமையை முந்தைய தலைமுறையினர் இழந்துவிட்டார்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எண்ணமும் வெறும் பரிகார வழிபாடுகளில் மட்டுமே ஆர்வமும் கொண்ட மந்தை மனநிலையிலுள்ள மக்களே இன்று இந்துக்கள் என எஞ்சியிருக்கிறார்கள். நவீன சந்ததியின் தர்க்கபூர்வமான வினாக்களுக்கு அவர்களிடம் பதிலில்லை. எனவே அடுத்தடுத்த சந்ததியினர் நிச்சயமாக ‘இந்துக்களாக’ இருக்கப்போவதில்லை.

 

இன்று சைவ – வைணவ சமயங்களில் தீவிரமானவர்கள் பொதுவெளியில் வம்பு தும்புக்குப் போவது மிகக்குறைவு. ஆனால் தீவிர இந்துக்கள் என்று இன்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்வோர் ஆபத்தானவர்கள். அவர்கள் கூண்டோடு அழிப்பது நீக்கள் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கும் இந்த நெடிய மகத்தான மரபை, கலாசாரத்தை, இந்திய மண்ணின் மகத்துவத்தை.

 

இந்தச் சூழலில், மறக்கடிக்கப்பட்டுள்ள கடவுள் நம்பிக்கை சார்ந்த தொன்மையான அறிவுத்தொகையை அவற்றின் சுயரூபத்தில்  முன்வைக்கும் சைவ வைணவர்கள் சிறுபான்மையராக மாறியுள்ளதுடன், அவர்கள் “தீவிர” பட்டம் சுமந்து தீவிரவாதிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவர்களின் எண்ணிக்கை குறைவதும், சமய அறிவிலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும், ‘பகுத்தறிவு என்பது இறைமறுப்பு மட்டுமே’ என்பவர்களுக்குத் தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தவேண்டும். உண்மையான இந்துப் பண்பாட்டு வளர்ச்சியை, அல்லது முன்னகர்வை விரும்பும், அதற்காகப் பங்களித்துக் கொண்டிருக்கும் தங்களைப் போன்றவர்களுக்கல்ல.

 

9. சைவம் – இந்து, வாதங்களின் சாரம்:

-  ரிலிஜன் எனும் ஐரோப்பியக் கருத்துருவாக்கத்துக்கு திருத்தமான வரையறையேதும் இல்லை. ஆனால் சைவம், வைணவம் என்பன இந்தியக் கருத்தில் பலநூறு வருடங்களாக நீடிக்கும் தனித்தனி மதங்கள். மதத்துக்கு உலகெங்கும் அச்சொட்டான ஒற்றை வரையறை இல்லை என்பதால், சைவம், வைணவம் முதலியன அவ்வாறே தனித்தனி சமயங்களாகக் கொள்ளப்படலாம். அதில் தவறில்லை.

 

-         இந்து என்று இன்று சொல்லப்படுவது ஒரு பண்பாட்டு அடையாளமே தவிர, மத அடையாளம் அல்ல.  அதைத் தனியே சமயம் என்று வரையறுப்பதற்கான எவ்வித உறுதியான சான்றுகளும் இன்றுவரை கிடைக்கவில்லை.

 

-  பல்வேறு துணைச்சமயங்களை உள்ளடக்கும் சைவம், ஒரு தனித்த பெருஞ்சமயமாக  வரையறுக்கத்தக்கது.  அப்படி வரையறுப்பதற்கான பல தனித்துவங்கள் அச்சமயத்தில் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றில் சிவனை முழுமுதலாக வழிபடுதல் என்ற பொதுத் தனித்துவம் முதன்மையானது. முப்பொருள் உண்மையை ஏற்றுக்கொள்ளல் -  தீட்சை பெறல் – கோவில் வழிபாடு முதலான  சிறப்பான தனித்துவங்கள் பல.

 

-    சிவனை மட்டுமே வழிபடுவோர் சைவர் என்று ஆகார். சக்தி, முருகன், பிள்ளையார் போன்றோரின் வழிபாடும் சைவமே. இதற்கு வழிபாடு, ஒரு மதமாகப் பரிணமிக்கும் வரலாறு தெரிந்திருக்கவேண்டும்.

 

-    வரலாற்றுக் காரணங்களை ஆராயும் போது, இயற்கையாக உருவான மதம் என்று சைவத்தையே சொல்லமுடியும். அப்படி மதமாக வரையறுப்பதற்கான வரலாற்றுக் காரணிகள் இந்துப் பண்பாட்டுக்குப் பொருந்தா.

 

-         இந்து என்பதைத் தூய இயற்கை மதம் என்று வரையறுக்கமுடியாது. அதில் தீர்க்கதரிசன மதங்களின் அம்சங்களும் கலந்துள்ளன. சைவ வைணவங்களில் பல தீர்க்கதரிசிகள் /  ஞானிகள் தோன்றியுள்ளனர். ‘இந்து’ மதத்துக்குள்ளே தனிமரபுகளாக இன்று உருவெடுத்துள்ள சீரடி, சத்தியசாயி, ஈஷா, இஸ்கான் முதலியன கூட தீர்க்கதரிசன மதங்களின் கூறுகளைக் கொண்டவையே. இத்தனை மரபுகளை இணைத்த ‘இந்துப் பண்பாட்டை’ ‘இயற்கை மதம்’ என வரையறுப்பது கடினம்.

 

-         சைவம், வைணவம் என்பன தனித்தனித் தரப்புகளாக இருந்தன, ஆனால் ஒரே  அமைப்பின் பாகங்களாக இருந்தன என்பது ஏற்கமுடியாத வாதம். ‘ஒரே அமைப்பின் பாகங்களாக விளங்கின’ என்ற வரையறையை மீறாத சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் என்பன இன்று தனித்தனிச் சமயங்களாக அடையாளப்படுத்தப்படும் போது, சைவத்துக்கு அந்த அடையாளம் மறுக்கப்படுவதில் எவ்வித நியாயமும் இல்லை.

 

-         அப்படியே இந்துமதம் என ஒன்று இருந்தாலும், அதில் சைவம் அடங்கமுடியாது. ஏனெனில், இந்துமதம் தன் குருவரிசையாக முன்வைக்கும் சங்கரரும் சித்பவானந்தரும் சைவத்தை நிராகரித்தவர்கள்.

 

-         இந்துமதத்துக்குள் சைவம் அடங்கமுடியாது என்பதற்கான இன்னொரு காரணம், சைவமும் வைணவமும் முன்னிலை வகித்த ஒரு பண்பாட்டுப்பரப்பில், வேதாந்த மெய்யியலையும் சுமார்த்த மதத்தையும் இந்துமதம் முன்னிறுத்துகிறது. அதற்காக சுமார்த்த மதத்தின் கோட்பாடான “சங்கரரால் உருவாக்கப்பட்ட ஆறு சமயங்களின் ஒன்றித்த வடிவம்” என்ற தொன்மம் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு இன்று முடிந்த முடிபாயிருக்கிறது. “ஆதிசங்கரரின் ஷண்மதஸ்தாபனம்” என்ற தொன்மத்துக்கு வரலாற்றிலும் ஆதாரமில்லை; சைவ – வைணவ நூல்களிலும் சான்றில்லை.

 

-         ஆறு சமயங்கள் பற்றிய இன்றுள்ள நம்பிக்கை 15ஆம் நூற்றாண்டின் பின்பேயே உருவானது. ஆறு சமயங்களில் ஒன்றான காணாபத்தியம் 16 – 17ஆம் நூற்றாண்டில் மராட்டியத்தில் உருவானது. முருகனை முழுமுதலாக வழிபடும் கௌமாரம் என்ற சமயம் நிலவியது என்பதற்கு அத்தகைய பிற்காலச் சான்றுகள் கூட இல்லை. அப்படிக் காட்டப்படும் சான்றுகளும் தமிழ் மண்ணில் சைவ மரபில் தோன்றிய நூல்களே.

 

-         சைவத்தை இன்றும் ஒரு தனிமதமாக முன்வைப்பதற்கான தேவைகளும் காரணங்களும் உள்ளன. இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் மட்டும் வைத்துப் பேசாது, எதிர்காலத்திலும் சைவத்துக்குத் தேவைப்பாடு இருக்கக்கூடும் என்பதற்கான பொதுமானுடம் தழுவிய எண்ணக்கருக்கள் சைவம் வசம் உள்ளன. இந்த ‘இந்து’ மத அடையாளம் தொடரும் போது அவையும் சைவத்திலிருந்து மங்கி மறையும்.

 

இந்தக் கட்டுரை சொல்வது அத்தனையும் சரி என்றே ஆகட்டும்.  சைவர்கள் இனி என்ன செய்யலாம்? இலிங்காயதர்கள் போல தனிமதத்துக்குக் குரல் கொடுக்கவேண்டுமா? என்றால் இன்று ‘மதம்’ என்று கட்டமைக்கப்பட்டுள்ள இந்துப்பண்பாட்டின் நிலை என்ன?

 

“இந்து மதம் (Hinduism) என்று சொல்லக்கூடாது, இந்து மதங்கள் (Hinduisms) என்றே சொல்லவேண்டும்” என்ற குரல் புலமைத்தளத்தில் அண்மைக்காலத்தில் ஒலிப்பது அறிஞர்கள் மத/பண்பாட்டு வேறுபாட்டை ஓரளவுக்கேனும் தெளிவாக உணர்ந்துகொண்டதால் தான். உண்மையிலேயே ‘இந்து மதம்’ பன்மைத்துவத்தை வலியுறுத்துகிறது என்று சொல்பவர்கள், தங்களுக்குள் உள்ள பன்மைத்துவத்தை அங்கீகரித்து “இந்துமதங்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கத் தயங்கக்கூடாது. அது தானே உண்மையான “வேற்றுமையில் ஒற்றுமை”!

 

ஒரே வேரைக்கொண்டவை என்ற புரிதலுக்காக யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற தனித்தனி மதங்களை இணைத்து ‘ஆபிரகாமியச் சமயங்கள்’ என்று அழைப்பதுண்டு.  இந்தியமண்ணில் தோன்றிய சைவம், வைணவம் முதலான சமயங்களையும் அப்படி அவை தோன்றிய புவியியல் ஒற்றுமையைச் சுட்டி “இந்துச்சமயங்கள்” என்று பண்பாட்டுரீதியாக அடையாளப்படுத்துவதில் தவறில்லை.

 

எனினும் ‘இந்து’ அடையாளம் அவசியம் என்பவர்கள், அதை மதமாக அன்றி, ஒற்றைப் பண்பாட்டு அடையாளமாகவே முன்னெடுத்துச் செல்லவேண்டும். அவ்வாறின்றி சைவத்தை தொடர்ந்தும் இந்துப்பண்பாடு ஒடுக்கினால், இலிங்காயதம் போலவே சைவமும் விரும்பத்தகாத சமூக விளைவுகளுக்கு வழிகோலக்கூடும்.

 

உலகளாவிய ரீதியில் கவனிப்பைப் பெற்றுவிட்ட “இந்து” என்ற மத அடையாளம் வலுவடைந்து விட்டது. அந்த அடையாளத்தில் தாங்கள் முகம்கொடுக்கும் புறக்கணிப்புக்களையும் மரபு உருமாற்றத்தையும், அகப்பகைச் சமயங்களின் ஆக்கிரமிப்பையும் கையாளும் கலையை சைவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். வேண்டுமென்றால் தாங்கள் நிறுத்திவைத்துள்ள சைவ மறுமலர்ச்சி இயக்கத்தை மீள ஆரம்பிப்பதாலேயோ, அல்லது தொடர்ச்சியான சமூக அறிவியக்கச் செயற்பாடுகள் வழியாகவோ, அவர்கள் “சைவர்” என்ற தனி அடையாளத்தைச் சூடிக்கொள்ளலாம். நானறிந்தவரை அதற்கான அமைப்புப் பலமோ, கருத்தொருமிப்போ, தூரநோக்கோ இன்றுள்ள சைவ நிறுவனங்களிடம் இல்லை. எப்போதாவது எழும் அரசியல் ஆதாயக்குரலாகவோ, அல்லது தனிப்பட்ட செயற்பாட்டாளர்கள் சிலரின் எச்சரிக்கைக் குரலாகவோ மட்டும் அது அடிக்கடி எழுந்து அடங்கி விடுகின்றது. அதற்காக இது எப்போதுமே இப்படித்தான் இருக்கும் என்றும் கூற இயலாது.

 

தமிழகம், இலங்கை, மலேசியா முதலிய நாடுகளில் இன்றுவரையும் தனிச்சமயப் பெயர் அடையாளத்தில் நீடித்த - நீடிக்கும் சைவம் எனும் சமயம், இந்து மதத்துக்குள் கரைந்து அடையாளமிழப்பதற்கு, அத்தியாவசியமான சூழல் ஒன்றும் தற்போது உருவாகவில்லை. இந்தப் பலநூறாண்டுப் பரிணாமத்தில் பல்வேறு இற்றைப்படுத்தல்களைச் சந்தித்த சைவம் இனியும் சந்திக்கலாம்; அல்லது அப்படியே உறைந்துருகி மறையலாம். அதைக் காலம் தீர்மானிக்கட்டும். அதுவரை சைவம் சைவமாகவே திகழட்டும்.

 

“உண்மை ஒன்று, அதை அடைய வெவ்வேறு சமயங்கள் இருக்கின்றன” என்று தான் எல்லா ஞானியரும் பாடியிருக்கிறார்களே தவிர, “எல்லாமே ஒரே உண்மை தான், எல்லாச் சமயங்களுமே ஒற்றை அடையாளம் தான்” என்று யாருமே கூறவில்லை. பவானியையும் நொய்யலையும் காவிரி என்பதல்ல இங்கு பிரச்சினை. எல்லாம் தமிழகத்தில் தான் பாய்கிறது, எல்லாவற்றிலும் தண்ணீர் தான் பாய்கிறது, எல்லாம் கடலுக்குத் தான் போகிறது, எனவே பொருநையும் வையையும் கூடக் காவிரி தான் என்று வாதிடுவது தான் சிக்கல். அத்தனையும் ஒன்றென்பவர்கள் சைவத்தை நிராகரித்தவர்கள்.

எனவே தான், சைவனான எனக்கு,  எல்லாம் ஒன்று என்பவர்களின் “இந்து மதம்” என ஒன்று இல்லை.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner