ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 01

 (எழுத்தாளர் ஜெயமோகனின் "இந்துமதம் என ஒன்று உண்டா" தொடருக்கான மறுப்பு)


இந்துமதம் என ஒன்று உண்டா (1)


இந்துமதம் என ஒன்று உண்டா (2)


இந்துமதம் என ஒன்று உண்டா (3)




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். தங்கள் நலம் விழைகிறேன். '

வாசிக்கும் நண்பர்களுடன் ஏதாவது உரையாடும் போது உங்கள் பெயர் வந்துவிடும். உரையாடும் எல்லோருமே எங்கோ ஓரிடத்தில் உங்களோடு முரண்படுபவர்கள். ஆனால் தமிழ் இலக்கிய உலகிலும் சமகால  அறிவியக்கத்திலும் உங்கள் தவிர்க்கவியலாமையை ஏற்றுக்கொண்டவர்கள். ஓராண்டுக்கு முன் தங்கள் வாசகர்களுள் ஒருவனான நீதுஜன் பாலாவின் அழைப்பின் பேரில் “திகட சக்ர” அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வெண்முரசு பற்றிய விவாதமொன்றில் நடுவராகப் பணியாற்றியிருந்தேன். அந்தப் பின்னணியில் பலநாளாகவே எழுதி வெளியிடாது வைத்திருந்த என் வெண்முரசு அனுபவத்தை அண்மையில் தான் முழுமைப்படுத்தி என் வலைப்பதிவில் வெளியிட்டுள்ளேன்.  இலக்கிய உலகில் ஓய்வின்றி தாங்கள் படைத்துக்கொண்டிருக்கும் சாதனைகளுக்குப் பாராட்டு.

 

உங்கள் “நான் இந்துவா” கட்டுரை தான் எனக்கு உங்கள் வலைத்தளத்தை அறிமுகஞ்செய்து வைத்தது என்பதை என் முந்தைய மடலிலும் குறிப்பிட்டிருக்கிறேன். ‘இந்து’ அடையாளத்தையும் ஈழத்தமிழ்ச் சூழல் எனக்களித்த சைவ அடையாளத்தையும் சார்ந்து எழுந்த ஏராளமான சந்தேகங்களுக்கு விடை கண்டுகொண்ட பின்னர் தான், நான் ‘அலகிலா ஆடல்’ நூலை எழுதினேன்.

 

சிலநாட்களுக்கு முன் ஆதிசங்கரர் சிலைகளை சைவக்கோவில்களில் நிறுவுவது தொடர்பாகவும், இராஜராஜசோழனின் சமயம் பற்றியும் சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றபோது, என் வேறு சில ஊகங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.   தற்போது “இந்து மதம் என ஒன்று உண்டா” என்ற உங்கள் கட்டுரைத்தொடரை வாசித்தேன். சற்று நிதானமாக நேரமெடுத்து இந்த நீண்ட மறுப்பைப் பதிவுசெய்கிறேன். கட்டுரையிலுள்ள சிக்கல் தன்மையைக் குறைக்க விடயங்களும் அவற்றுக்கான விளக்கங்களும் எண்ணிடப்பட்டுள்ளன.

 

தங்கள் விரிவான தொடரின் இறுதி இடத்திலிருந்தே ஆரம்பிப்பது பொருத்தம் என்று கருதுகின்றேன்.

 

“இந்துமதம் என்று சொல்லி, இன்றுவரை பல்வேறு வழிபாட்டுமுறைகளின் தொகுப்பாக இருக்கும் இந்த மரபை எதிர்காலத்தில் ஒற்றைத்தரப்பாக ஆக்கினால் காலப்போக்கில் சைவமும் வைணவமும் பிற வழிபாட்டு முறைகளும் தங்கள் தனித்தன்மையை இழக்கக்கூடும் என்றும், ஒற்றை நிர்வாகமும் ஒற்றை கருத்தியலாதிக்கமும் உருவாகிவிடக்கூடும் என்றும் [சிலர்] அஞ்சுகிறார்கள். அந்த அச்சம் நியாயமே என்றும், அவ்வாறு இந்து மதம் என்னும் ஒற்றை அமைப்பு உருவாகக்கூடாது என்றும் நான் திரும்பத்திரும்ப இருபதாண்டுகளாக எழுதி வருகிறேன்……ஆனால் அதற்கும் இன்று சைவம் வேறு இந்துமதம் வேறு என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது…………இன்று சைவம் வேறு இந்துமதம் வேறு என்று கூச்சலிடுபவர்கள் எவரும் நேற்றுவரை சைவத்தில் ஆர்வம் கொண்டவர்கள் அல்ல.”

 

தங்கள் தரப்பு என்ன என்பதை இதில் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். ஆனால் இந்துத்துவத்தின் ஒற்றைப்படையாக்கத்தை எதிர்ப்பவர்களின் தரப்பொன்று உள்ளது; அவர்களுக்கு ஆதரவாக இருபதாண்டுகளாக நானும் எழுதிவருகிறேன் என்று பதிவு செய்யும் தாங்கள், அந்தக் குரல்களும் இந்த வாதங்களினூடே ஒலித்ததைக் கவனித்துத்தான் இருப்பீர்கள். அந்தத் தரப்பின் வினாக்களை நீங்கள் வெறுமனே கும்பல் மனநிலைக் கூச்சல் என்று கூறி உதாசீனம் செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இங்கு நான் அந்தத் தரப்பின் பிரதிநிதியாகவே பேசவிழைகிறேன்.   

 

இந்தப்பகுதியில் என் தரப்பின் நியாயங்களைச் சொல்வதற்கு முன், இன்றுள்ள சமயங்களை வரையறுப்பதற்காக தாங்கள் முன்வைக்கும் சித்திரத்தை மீள எனக்கு நினைவூட்டிக் கொள்கிறேன்.

 

1. சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்ற சொற்களுக்கு பண்டைய பாரதத்தில் புரிந்துகொள்ளப்பட்ட பொருளும், ஐரோப்பியரின் தற்போதைய “Religion” என்ற கலைச்சொல்லின் பொருளும் வேறுவேறு.

 

சரியே. Religion என்ற நவீனக் கருத்துருவாக்கத்துக்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தமான ஒற்றை வரைவிலக்கணம் ஒன்றும் கிடையாது. ஆனால் இந்திய நிலத்தில் விளங்கிய சமயம், சம்பிரதாயம், தரிசனம், தர்மம், மதம், மார்க்கம் என்று அழைக்கப்பட்டவற்றில், அனைத்தையும் இல்லாவிட்டாலும், ஓரிரு மரபுகளையாவது இன்றைய ‘சமயம்’ என்ற வரையறைக்குள் அடக்கலாம். அந்தப்பெயரிலுள்ள ஏதாவதொன்றைப் பின்பற்றும் ஒருவன், தன்னை நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு தனிச் ‘சமயியாகக்’ கருதுகிறானா என்பதே நாம் பார்க்கவேண்டியது.

 

1.1 ‘இந்து’ என்பது ஒரு பண்பாட்டு அடையாளம்; மத அடையாளம் அல்ல!

ஐரோப்பிய வரைவிலக்கணப்படியோ, இந்திய மரபுப்படியோ, அல்லது இரண்டுக்கும் அப்பாற்பட்டோ, ‘இந்து’ என்று இன்று அறியப்படும் ஒன்றை மதமாக வரையறுக்க முயல்வதில் ஏற்கத்தகாத பொருந்தாமை ஒன்று உண்டு. இந்து என்று தாங்கள் சொல்வது இந்திய நிலப்பரப்பில் நிலவும் பண்பாட்டை, மரபை, பண்பாட்டு மரபுரிமையை. இன்னும் திருத்தமாகச் சொல்வதானால், இந்து என்ற சொல் “இந்தியப் பண்பாடு சார்ந்த” அல்லது “இந்தியத் துணைக்கண்டப் பண்பாடு சார்ந்த” என்றே பொருள்கொள்ளத்தக்கது.

 

பண்பாடு என்பது புவியியல் பிராந்தியமொன்றிலுள்ள சமூகமொன்றின் நடத்தைகள், வழக்காறுகள், கலைகள், என்பன அனைத்தையும் அடக்கிய ஒரு பொதுப்பதம். அந்தப் பண்பாட்டில் மதமும் ஒரு அம்சமே தவிர, மதமும் பண்பாடும் ஒன்று அல்ல. ஒரு வீம்பு கொண்ட சைவனாக “தமிழ்ப்பண்பாடு என்பதும் சைவப்பண்பாடு என்பதும் ஒன்று தான்” என நான் வாதாடலாம். ஆனால், அது உண்மையாகிவிட முடியாது. தமிழ்ப்பண்பாட்டை உருவாக்குவதில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட தமிழ்நிலத்தின் அத்தனை சமயங்களுக்கும் உரிமை உள்ளது.

 

மேலைத்தேயக் கருத்துருவாக்கத்திலும், இந்தியக் கருத்துருவாக்கத்திலும், “சமயம்” என்று வரையறுக்கத்தக்க பல்வேறு மதங்களை, மெய்யியல்களை, வழிபாட்டுமுறைகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடும் “இந்து” எனும் சொல், இன்றைய பார்வைக்கோணத்தில் ஒரு பரந்த பண்பாட்டு அடையாளமாகவே இனங்காணத்தக்கது. அது எவ்வாறு என் மத அடையாளம் ஆகின்றது? 

 

‘இந்து’ என்பது, புவியியல் ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும், இந்தியாவில் அல்லது இந்தியத்துணைக்கண்டத்தில் வாழும் அத்தனை சமூகங்களையும் உள்ளடக்கும். உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்டு அந்த மண்ணில் நீடிக்கும் சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், சமணம், உள்ளிட்ட எல்லாச் சமயங்களின் பண்பாடும் ஒருகுடைக்கீழ் அமையும் பொதுச் சொல்லே இந்து. அப்படித்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் “இந்து” என்ற சொல்லை வரையறுக்கிறது.

 

எனவே, இந்து என்பது ஒரு பண்பாட்டு அடையாளம். அது என் மத அடையாளம் ஆகமுடியாது. எனக்கான மத அடையாளத்தின் பெயர் சைவம். ‘இந்து’ என்ற பொதுப் பண்பாட்டு அடையாளத்தை மதமாகக் கட்டமைத்துவிட்டதால், உண்மையான மத அடையாளங்களான சைவம், வைணவம் என்பனவற்றைப் பற்றிப் பேசும்போது, பண்பாட்டுப் பிடிப்புக் கொண்ட பலர், அதைப் புரிந்துகொள்ள முடியாமல் பிரிவினைவாதமாகவும் அடிப்படைவாதமாகவுமே பார்க்கிறார்கள்.

 

1.2 சைவத்தை தனிச்சமயம் எனலாம் – முதன்மையான தனித்துவம்

சைவம் எப்படி தனிச்சமயம் ஆகும்? அப்படிச் சொல்ல இயல்வதற்கான இரண்டு அடிப்படையான தனித்துவங்களை சைவம் கொண்டிருக்கிறது. முதலாவது, “சிவனை முழுமுதல் இறையாக வழிபடுகின்ற சமயம் சைவம்”. அது ஒன்றே சைவத்தை ஒற்றை வரியில் வரையறுக்கப் போதுமானது. ‘சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது’ என்கிறது திருமந்திரம் (1512).

 

பாசுபதம், கபாலிகம் முதலிய பல்வேறு சைவப்பிரிவுகள் மதம் அல்லது சமயம் என்றே அறியப்பட்டுள்ளன. சைவம் என்பது சில இடங்களில் ‘சைவ சித்தாந்தத்தின்’ ஒத்தகருத்துச் சொல்லாகப் பயன்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் அது வேறு சைவப்பிரிவுகளைக் குறிப்பிடவும் பயன்பட்டுள்ளது. ஆனால் எல்லா சைவப்பிரிவுகளையும் ஒன்றிணைத்து ‘சைவப்பெருஞ்சமயம்’ என்ற ஒன்று இருந்தது என்பதற்கான  தருக்கபூர்வமான சான்று ஏதும் கிடைக்கின்றதா?

 

ஆம். இரண்டு சான்றுகள் கிடைக்கின்றன. முதலாவது சான்று, இலக்கியங்கள்.  தேவாரத்தில் அப்பர் “விரிசடை விரதியர், அந்தணர், சைவர், பாசுபதர், காபாலிகள்” முதலிய வெவ்வேறு சைவக்கூட்டத்தினர் திருவாரூர்த் தெருவில் ஒன்றாகப் பொலிந்ததைக் கண்டு மகிழ்கிறார் (திருமுறை 4:20:3). பெரியபுராணத்தில் மானக்கஞ்சாறர் - சிறுத்தொண்டர் முதலிய நாயன்மாரை, மாவிரதம், வைரவம் உள்ளிட்ட சைவமதத்தாரின் வேடம் தரித்து வந்தே சோதிக்கிறான் ஈசன். இங்கெல்லாம் ஒரு சைவப்பிரிவினர் இன்னொரு சைவப்பிரிவினரை பேதம் பாராது சிவனடியாராக மட்டுமே பார்க்கின்றனர் என்பதைக் கவனிக்கவேண்டும்.

 

எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய திவாகர நிகண்டில் மாவிரதியர், காளாமுகர், பாசுபதர் ஆகிய மூவர் பெயரும், ‘சைவ தவப்பாலோர்’ என்ற பெயரில் ஒன்றாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சைவக்கிளைகள் ஒரே சைவப்பெருஞ்சமயத்தின் பாகங்களாகவே கருதப்பட்டன என்பது இந்த இலக்கியச் சான்றுகளிலிருந்து தெளிவாகின்றது.

 

இரண்டாவது ஆதாரம் வரலாற்றுச் சான்றுகள். காஷ்மீர சைவஞானியான அபிநவகுப்தர், தான் தாபித்த திரிக மெய்யியலை நிலைநாட்டும்போது, சித்தாந்த சிவாகமங்கள் சொல்லும் ஐந்து சைவப்பிரிவுகளை ஏற்றுக்கொள்வதுடன், தான் முன்வைக்கும் கௌலம் சிவனது ஆறாவது முகத்தில் உதித்ததாக உரிமை கோருகிறார். ஏகாந்தட ராமையா எனும் காளாமுக ஞானி, வீரசைவர்களால் விரும்பிப் போற்றப்பட்டிருக்கிறார். வீரசைவர்களின் இறையடியார்களான ‘சரணர்களின்’ பட்டியலில் சைவ சித்தாந்த நாயன்மார், ‘புராதனரு’ என்ற பெயரில் இடம்பிடித்துள்ளனர். குறிப்பிடத்தக்க அளவு சைவ மன்னர்களைக் கொண்டிருந்த இந்தியப் பேரரசுகள், வியட்நாமின் சாம் பேரரசு, இந்தோனேசியாவின் சஞ்சய - மஜாபாகித் பேரரசுகள், கம்போடியாவின் அங்கோர் பேரரசு முதலியனவும் இன்ன பிறவும் வெவ்வேறு சைவக்கோட்பாடுகளின் பரம்பலோடே எழுச்சி கண்டவை என்பது அங்கங்கு கிடைக்கும் கல்வெட்டுச் சான்றுகளால் உறுதியாகின்றது.

 

இந்த எல்லாச் சான்றுகளும் தனித்தனிப்பிரிவுகள் ஒரே சைவப் பெருஞ்சமயத்தின் அங்கமாகவே கருதப்பட்டமைக்கு வலுவான ஆதாரங்களாகின்றன. முத்தாய்ப்பாக அப்பரே இன்னோரிடத்தில் “ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும் கங்காதரனுக்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுள்” என்கிறார் (திருமுறை 6:95:10) சிவனை வழிபடும் ஒருவன், எவனாயிருந்தாலும் சரி, அவன் இன்னொரு சைவனின் அன்புக்குரியவனே.

 

1.3 சைவத்தை தனிச்சமயம் எனலாம் – ஏனைய தனித்துவங்கள்

மெய்யியல் அடிப்படைகளில் வேறுபட்ட பல்வேறு சைவப்பிரிவுகள் இணைந்தும் பிரிந்தும் சிவனை முழுமுதலாக வழிபடுகின்ற சைவப்பெருஞ்சமயத்தை அமைக்கின்றன. இந்தச் சைவமெய்யியல்களில் இன்னும் பல ஒற்றுமைகள் இழையோடுகின்றன. அவற்றில் முதன்மையானது, பெரும்பாலான சைவப்பிரிவுகள் பதி, பசு, பாசம் எனும் முப்பொருள் உண்மையை ஏற்றுக்கொள்வதாகும்.

 

சைவத்தை வேதாந்தப் பார்வையில் நிலைநாட்ட முயன்ற அப்பைய தீட்சிதர், ஹரதத்தர் முதலியோரின் ‘சிரௌத்த சைவம்’ உட்பட, எல்லாச் சைவப்பிரிவுகளும் ‘இறைவன் வேறு, உயிர்கள் வேறு’ என்பதில் மாற்றுக்கருத்தின்றி இருக்கின்றன. உயிர்கள் முக்தி நிலையில் இறைவனோடு எப்படி அடையாளப்படுத்தப்படும் என்பதில் அவற்றுக்கிடையே மெய்யியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சைவத்தைப் பொறுத்தவரை, இறைவனும் உயிர்களும் வேறுவேறு. சிவனே அந்த ஒருதனி இறைவன்.

 

சைவப்பிரிவுகளிடையே இனங்காணப்படுகின்ற ஏனைய தனித்துவங்களை  அவற்றின் மூலநூல்கள் (ஆகமம்/தந்திரம்…..), நூல்வரிசை (திருமுறை, மெய்கண்ட சாத்திரங்கள்…), ஞானியர் வரிசை (நாயன்மார், சரணர்…), சிவசின்னங்கள் (திருநீறு, உருத்திராக்கம், ஐந்தெழுத்து…), சிவதீட்சை, சிவாலய வழிபாடு என்று பலவாறு பட்டியற்படுத்தலாம். இவை பிரிவுக்குப் பிரிவு மாறுபடும். ஆனால் சைவம் அல்லாத ஏனைய இந்தியச் சமயங்களால், இந்த சைவத்தனித்துவங்கள் எதுவும் பிரதானமாகக் கருதப்படவில்லை.

 

1.4 சைவர்களில் வீரசைவ மரபினரே சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். மற்றமரபினரில் தீட்சை எடுத்துக்கொண்ட சிலர் மட்டுமே சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். எஞ்சியோருக்கு அந்த தடைகள் இல்லை.

 

“சிவனை முழுமுதலாக வழிபடும் எல்லாக் குழுமதங்களும் சைவம்” என்ற சைவத்திற்கான முதன்மை வரையறையை நாம் ஊன்றிக் கவனிக்கவேண்டும். சைவத்தில் சிவன் முழுமுதல் கடவுள் தானே தவிர, சிவனைத் தவிர வேறு யாரையும் வழிபடாமை என்பது சைவத்தின் கட்டாயமான நிபந்தனையாகாது. அப்படி, சக்தியை, முருகனை, கணபதியை சிவாம்சமாகக் கருதி வழிபடுவோர் சைவர் ஆகார் என்று கூற யாராவது முயல்வார்களென்றால் அவர்கள் முதலில் பன்னிரு சைவத் திருமுறைகளை நிராகரிக்கவேண்டும்.

 

ஏனெனில் முருகனைப் பாடும் திருவிசைப்பா அடங்கிய ஒன்பதாம் திருமுறையையும், சக்தியைப் புகழும் திருமந்திரப் பாடல்கள் அடங்கிய பத்தாம் திருமுறையையும், திருமுருகாற்றுப்படை, பிள்ளையாரைப் போற்றும் மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை முதலிய பதிகங்கள் அடங்கிய பதினோராம் திருமுறையையும், மறுத்துத் தான், “சைவம் என்றால் சிவன் மட்டும்” என்று நிரூபிக்கமுடியும். சக்திக்கும், சிவ குமாரர்களான பிள்ளையார், முருகனுக்கும் முக்கியத்துவம் வழங்கும் சைவத்தின் இந்த இயல்பை ஏனைய சைவப்பிரிவுகளிலும் காணலாம்.

 

சைவத்தில் சிவனுக்குச் சமானமாக சக்தியும் கணபதியும் கந்தனும் இருப்பதை, அச்சமயத்தின் மெய்யியலுக்கு வெளியே எப்படிப் புரிந்துகொள்வது? அதற்கு தெய்வமொன்றின் வழிபாடு, அத்தெய்வம் சார்ந்த மதமாக மாறுகின்ற வரலாற்றுப்பரிணாமம் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

 

தெய்வமொன்றை அடியவன் ஒருவன் தனக்கென அல்லது தம்மவருக்கென வரித்துக்கொண்டு பக்திபூர்வமாக பணிந்து போற்றி வருவது தான் வழிபாடு. வழிபாட்டின் அடுத்த கட்ட நகர்வே மதம்.  நெடுங்காலமாக இடம்பெற்று வரும் தெய்வமொன்றின் வழிபாட்டின் பின்னணியில் ஏற்கனவே உருவாகி வந்துள்ள சடங்குமுறைகள், ஆசாரங்கள், விதிமுறைகள், குறித்த தெய்வத்தின் சமூக ஏற்பு என்பவற்றின் அடிப்படையில் அத்தெய்வத்தை வழிபடும் பல அடியவர்கள் ஒரு பொதுச் சட்டகத்தில் தம்மைப் பொருத்திக் கொள்ளுவது தான் மதம்.

 

வழிபாடு ஒரு தனிநபரால் அல்லது பல தனிநபர்களால் நிகழ்த்தப்படுவது. அந்தத் தனிநபர்கள் தங்களுக்குள் உணரும் சமூகக்கூட்டுணர்வே மதம். மதம் ஒன்று உருவாக முன்பே, ஒரு தெய்வத்துக்கு வழிபாடு நடந்திருக்கும். ஆகவே, மதத்திற்கு முன்பும் தெய்வம் இருக்கும். ஆம். பெயர் சூட்ட முன்பே விண் உடுக்கோலங்களை மானுடக்கண்கள் கண்டிருக்கும் அல்லவா?

 

இப்போது சைவத்தையே எடுத்துக்கொள்வோம். சைவத்தில் சிவனது வழிபாடு – மதம் ஆகிய இரு பொருண்மைகள் பற்றி மட்டும் பார்ப்பதற்காக தேர்ந்தெடுத்த சில சரித்திரத் தகவல்களைத் தொகுத்துக்கொண்டோமென்றால்,

 

சிவனது வழிபாடு, ஆரம்பத்தில் பழங்குடிகளிலும் வெவ்வேறு இனக்குழுக்களிலும் பல பெயர்களில் பல வடிவங்களில் இடம்பெற்றிருக்கும். இனக்குழுக்கள் ஒன்றோடொன்று கலக்கும் போது,  அந்த வடிவங்களுக்கு பொதுவான பெயரும், பொதுவான வடிவமும் ஏற்படுகிறது. இவ்வாறு தனிப்பட்ட வழிபாடுகளின் தொகுதிக்கு  ஒரு பொதுவடிவம் தோன்றுகிறது.  இந்த ஒன்றிப்பு இடம்பெற்ற காலத்தில் உருவான சதபதப்பிரமாணம், “அவனது பெயர்கள் பல. கிழக்குப்பகுதி மக்களிடம் சர்வன். பாஹ்லிகர்களிடம் பவன். பசூனாம்பதி, உருத்திரன். அக்கினி என்பனவும் அவன் பெயர்களே” (1.7.3.8) என்று பதிவுசெய்திருக்கிறது. 

 

பிற்காலத்தில் இத்தகைய பொதுவடிவம் பெற்ற வழிபாடுகள் மக்கள் ஏற்பையும் அரச ஏற்பையும் பெற்று, தனிமதமாக வளர்கின்றன. சதபதப்பிரமாணத்துக்கு பிந்தியதாகக் காலம் கணிக்கப்படுகின்ற பாணினியின் அஷ்டாத்யாயியில் “சிவபாகவதர்கள்” என்ற தனிச் சமயத்தினர் தோற்றம் பெற்றுவிட்டார்கள். பொது ஆண்டு காலத்தில் வடமேல் இந்தியாவில் நிலவிய இந்தோ-கிரேக்க, இந்தோ-ஈரானிய அரசுகளிலும், பின்னர் குஷாணர், குப்தர் மத்தியிலும் சிவவழிபாடானது ஒரு மதமாக மாறி அரச செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டது என்பதற்கான ஏராளமான தொல்லியல், இலக்கியச் சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆக, சிவவழிபாடு பிற்காலத்தில் நியமப்படுத்தப்பட்டு சைவசமயம் எனும் ஒரு மதமாக வளர்ச்சி கண்ட  வரலாற்றுக்கட்டங்களை இந்தக் காலவரிசையில் நாம் தொகுத்தெடுக்கலாம்.

 

இதேபோல, விஷ்ணு/கிருஷ்ணன், கந்தன், சக்தி, பற்றிய பல்வேறு தெய்வங்களின் வழிபாடுகள் பொது ஆண்டுக்கு முந்திய காலத்திலிருந்தே நமக்குக் கிடைத்தாலும், சிவன் தவிர, விஷ்ணு அல்லது கிருஷ்ணனின் வழிபாடு மட்டுமே ஒரு மதமாக அப்போது வளர்ந்திருந்தது. சொல்லப்போனால் சிவவழிபாட்டுக்கு சற்று முன்பிருந்தே கிருஷ்ண வாசுதேவன் வழிபாட்டுக்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

 

எஞ்சிய கந்தனோ சக்தியோ கணபதியோ வழிபடு தெய்வங்களாக நீண்ட நாள் நீடித்திருக்கிறார்கள். இந்த வழிபாடுகளில் சக்தி வழிபாடு, சாக்த மதமாக அடையாளம் பெறுவது, வடமொழி ஸ்காந்தபுராணம் உருவான காலத்தில் (அண்ணளவாக 6 - 8ஆம் நூற்றாண்டு) என்பார் பேரா. அலெக்சிஸ் சாண்டர்சன். இன்னொரு விதத்தில் சொன்னால், சக்திக்கென தனியே சாக்தம் எனும் சமயம் தோன்றுவது, சைவம் உருவான பின்னர் தான். இப்படிப் பார்த்தால், சாக்தத்தின் தோற்றத்துக்கு முன்பிருந்தே சைவத்தில் சக்தி வழிபாடு தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றுவிட்டிருக்கும்.

 

எவ்வாறெனினும், முருகவழிபாடோ, கணபதி வழிபாடோ தனிமதங்களாக வளர்ச்சியடைந்திருந்தன என்பதற்கான எத்தகைய பழைய சான்றுகளும் கிடைக்கவில்லை. அவர்களது வழிபாடு சுதந்திரமாக நடைபெற்றபோதிலும், அவர்கள் சிவகுமாரர்கள் ஸ்தானம் பெற்று, சைவ சமயத்திலேயே  இடம்பிடித்திருந்தார்கள்.  ஆக, சக்தி, கணபதி, கந்தன் ஆகியோரின் வழிபாடுகள் சைவத்தோடு இணைந்தது என்பது தான் வரலாற்றுண்மையே தவிர, சக்தி – கணபதி – கந்தனுக்காக வளர்ச்சி கண்டு விளங்கிய மூன்று தனி மதங்கள் சைவத்துடன் இணைந்தன, அல்லது சைவத்தால் உள்ளீர்க்கப்பட்டன என்று பொருளாகாது.

 

2. அடுத்து, உலகச்சமயங்களை தீர்க்கதரிசன மதங்கள், இயற்கை மதங்கள் என்று பிரிக்கும் தாங்கள், ‘இந்து’ ஒரு இயற்கை மதம் என்கிறீர்கள்.

இயற்கை மதத்தின் வளர்ச்சியில் நீங்கள் குறிப்பாக நான்கு அம்சங்களை இனங்காண்கிறீர்கள்:

 

2.1. இயற்கை மதங்களில், முன்னோரும், இயற்கை அம்சங்களும், குலக்குறிகளும் வழிபடப்படும்.

ஆம், சிவன் நீத்தோர் எரியும் சுடுகாட்டில் வாழ்பவன். இறந்தோரின் மண்டையோடுகளும் எலும்புகளுமே அவன் அணிகள். பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் சிவலிங்கத்துக்கு வேர் தேடுவோர் உள்ளனர். சைவம் பற்றிய தமிழின் மிகப்பழைய குறிப்புக் கிடைக்கும் மணிமேகலையிலேயே சிவன் ஐம்பூதங்கள், சூரியன், சந்திரன், உயிர் எனும் எட்டு வடிவங்களாக உள்ளான் என்று சொல்லப்படுகிறது. வெள்ளைவிடை, மான் மழு, பாம்பு, சூலம் என்பன ஆரம்பத்தில் சிவனை வழிபட்ட வெவ்வேறு இனக்குழுக்களின் குலக்குறிகளாக இருந்திருக்கக்கூடும். சைவத்தில் இப்படி முன்னோர் வழிபாடு, இயற்கை அம்சங்களின் வழிபாடு, குலக்குறி வழிபாடு என்பன இணைந்திருப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது.

 

2.2 இந்த வழிபாடுகள் இணைந்து குறுமதங்கள் ஆகி, குறுமதங்கள் பல இணைந்து பெருமதங்கள் ஆகின்றன.

 

நிச்சயமாக. சைவத்தின் மிகப்பழைய வடிவம், பாசுபதம். அதிலிருந்து இலகுலீசம் தோன்றி பின்னாளில் காளாமுகமாக வளர்ந்து அதிலிருந்து காபாலிகம் தோன்றியது. ஆதிமார்க்கங்கள் என்று வரையறுக்கப்பட்ட இவை மூன்றுமே, தனிப்பட்ட ஆன்மிக ஈடேற்றத்தை முன்வைக்கும் குறுங்குழுக்களாகவே ஆரம்பத்தில் விளங்கின.

 

இவற்றிற்குச் சமாந்தரமாக, கோவில் வழிபாட்டையும் சமூக ஒன்றிணைவையும் முன்வைத்த மந்திர மார்க்க சைவப்பிரிவுகள் தோன்றி வளர ஆரம்பித்தன. அவற்றில் முக்கியமானது சித்தாந்தம். அது வங்கம், தமிழகம், தென்கிழக்காசியா முதலிய இடங்களில் பேரரசர் ஆதரவு பெற்று சைவப்பெருநெறியாக வளர்ந்தது. சித்தாந்தத்துடன், வாமம், நேத்திரம், பைரவம் முதலிய சைவப்பிரிவுகள் தோன்றி வளர்ச்சி கண்டன. காஷ்மீரத்தில் பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய அபிநவகுப்தர், திரிக மெய்யியலுக்குப் புத்துயிரூட்டினார். இவ்வாறு பாரதநிலமெங்கும் சிவவழிபாட்டை மையமாக வைத்து உருவான சைவக்குறுமதங்கள், தங்களுக்குள் கொண்டும் கொடுத்தும் உரையாடல்களை நிகழ்த்தி சைவப்பெருஞ்சமயமாக மாறின.

 

2.3 பெருமதங்களின் வளர்ச்சியில் பெருமதங்களோடு புதுப்புது குறுமதங்கள் தோன்றி இணைவதும், இருக்கின்ற குறுமதங்கள் பெருமதங்களிலிருந்து பிரிந்து மறைவதும் கூடவே நடந்துகொண்டிருக்கும்.

 

உண்மை. தும்புரு தேவரையும் நான்கு தேவியரையும் வழிபடும் வாம சைவம், ஒருகாலத்தில் கம்போடியாவில் புகழ்பெற்றிருந்தபோதும், பத்தாம் நூற்றாண்டளவிலேயே இந்தியாவில் மறைந்துவிட்டது. இந்தோனேசியாவில் பதினாறாம் நூற்றாண்டில் டாங்யாங் நிரார்த்தா எனும் சைவ அறிஞர் ஏற்படுத்திய புரட்சியின் விளைவாகவே, பாலித்தீவின் இன்றைய ‘ஆகம இந்து’ சமயத்துக்கு அடிப்படையான “ஆகம தீர்த்தம்”  எனும் சமயம் உருவானது.

 

தத்துவப்பிரகாசம் எனும் சித்தாந்த நூல், முப்பதுக்கும் மேற்பட்ட சைவப்பிரிவுகளைப் பட்டியலிடுகிறது. சைவத்தின் பரந்த மனப்பாங்குக்கு அடையாளமாகப் புகழப்படும் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் எனும் இருபத்தைந்து சமயவகைப்பாட்டில் சிவஞானமுனிவர் 13 சைவப்பிரிவுகளை சிவஞானமாபாடியத்தில், வரிசைப்படுத்துகிறார். அந்த சைவக்குறுமதங்களில் இன்று எஞ்சியவை மிகச்சிலவே. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சைவப்பின்னணியில் உருவாகிப் பிரிந்து வளர்கின்ற புதிய குறுமதங்களாக வள்ளலாரின் சன்மார்க்க சபையையும், தனித்தமிழ்ச் சைவ அமைப்புக்களையும் சொல்லலாம்.

 

2.4 இப்படிப் பன்னெடுங்காலமாக உருவாகி பல்வேறு பெருமதங்கள் இணைந்தும் கலந்தும் உருவாகி இன்று நிலைத்திருப்பதே இந்துமதம்.

 

இங்கு தான் ஒரு சைவ வாசகனுக்கு திடுக்கிடல் ஏற்படுகிறது. இதே திகைப்பு ஒரு வைணவ வாசகனுக்கும் ஏற்படக்கூடும். சைவத்துக்கு அல்லது வைணவத்துக்குப் பொருந்திவரும் உங்கள் முந்தைய மூன்று கட்டங்கள் மறைந்து சட்டென ‘இந்து’ எனும் புதியதோர் மதம் அங்கு வந்து அமர்ந்துவிடுகின்றது. இந்தப்புள்ளி வரை, நீங்கள் சொல்லிவந்த வரலாற்றுக் காலவரிசையில் சைவத்தையோ, வைணவத்தையோ படிப்படியாக வைத்துப் பார்த்து வருவதில் எவ்வித குழப்பமும் நேரவில்லை. குறுமதங்கள் இப்படி இணைந்தும் பிரிந்தும் தான் சைவமும் வைணவமும் நீடித்தன -  நீடிக்கின்றன. தெய்வங்களில் - வழிபாடுகளில், அவை தம்முள் கரைத்து தன்மயமாக்கியவையும், நிராகரித்து வெளியே தள்ளியவையும் நூறு நூறு. ஆனால் இன்றும் சைவம் சைவமாகவே நீடிக்கிறது, வைணவம் வைணவமாகவே நீடிக்கிறது.

 

நியாயமாகப் பார்த்தால், இன்றுள்ள பெருமதங்களான சைவமும் வைணவமும் இயற்கை மதங்கள் என்று தான் இந்த வரி முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றின் நெடிய வரலாற்றை ஒரே பாய்ச்சலில் தாண்டிக் கடந்து, ‘இந்து’ ஆக்கிவிட்ட பின்னரே ‘இயற்கை மதம்’ என்ற வரையறைக்கு வருகிறீர்கள்.

 

மரபார்ந்த சைவர்களுக்கோ வைணவர்களுக்கோ மிகுந்த மனவிலக்கம் வருவது இங்கு தான். கடந்த இருநூறு ஆண்டுகளில் இந்தியமண்ணில் எண்ணிறந்து தோன்றிப் பெருகியுள்ள இந்து மறுமலர்ச்சி அமைப்புக்களுக்காக, நவவேதாந்த அமைப்புக்களுக்காக, பொதுவெளியில் பெரிய அடையாளமில்லாத ஸ்மார்த்தம் முதலிய வைதிக நெறிகளுக்காக, தொடர் பண்பாட்டுப் படையெடுப்புக்களால் தம் மதச்சுயம் இழந்துவிட்ட வடநாட்டு இந்துக்களுக்காக, சைவரும் வைணவரும் தங்கள் நீண்ட பாரம்பரியத்தை மறந்து, தங்கள் அடையாளத்தை இழந்து, தங்கள் தனித்துவமான மரபுகளைக் கைவிட்டு சட்டென இந்துவாகிவிட வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள். இத்தனைக்கும் ‘இந்து’ என்ற பொதுப் பண்பாட்டு அடையாளத்தின் ஆகிவந்த தன்மையை நிறுவிக் காட்ட தாங்கள் எடுத்துக்கொள்ளும் வரலாற்றுப் படிகள் அத்தனையுமே சைவத்துக்குரியவை, வைணவத்துக்குரியவை.

 

2.5 இந்துவையோ, சைவத்தையோ தூய ‘இயற்கை மதம்’ என வரையறுக்க முடியாது.

 

மதங்களை இயற்கைமதம், தீர்க்கதரிசன மதம் என்று இரண்டாக வரையறுக்கிறீர்கள். சைவசமயம் ஒரு இயற்கை மதம் என்பது உண்மை. ஆனால் அதில் தீர்க்கதரிசன மதங்களின் கூறுகள் இல்லை என்று முற்றாக மறுக்க இயலாது.

 

காளாமுகம், கௌலம், இலிங்காயதம் என்றெல்லாம் சைவப்பிரிவுகள் பிறந்ததும் இந்த நிலமெங்கும் பரந்ததும் இலகுலீசர், அபிநவகுப்தர், பசவர் முதலிய ஞானிகளின் சீடர் வரிசையால் தான். இலகுலீசரிலிருந்து திருமூலர், மெய்கண்டார் வரை ஒவ்வொருவரையும் சைவத் தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். தங்களுக்கு முன் இருந்த, அல்லது இருந்ததாக அவர்களே சொல்லிக்கொள்கின்ற ஒரு குருபரம்பரையிலேயே, அவர்கள் தங்களை இணைத்துகொள்கிறார்கள்.

 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சைவம் வளர்ந்தது, காஷ்மீரத்துக்கும் கன்னியாகுமரிக்கும் நடையாய் நடந்து சைவம் பரப்பிய ஞானியரால் தான். கிழக்கு மேற்காக, இந்த சைவ சன்னியாசிகளின் வலை, இந்தோனேசியா முதல் ஆப்கானிஸ்தான் வரை பரந்து நிலவியிருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் சீனப்பயணி சுவான்சங்கால் ஆப்கானின் நூரிஸ்தான் பகுதியிலும், பதினாறாம் நூற்றாண்டில் மேலைத்தேயப் பயணிகளால் அசர்பைஜானின் தீக்கோவிலிலும், சைவ சன்னியாசிகள் அவதானிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

இன்று சைவம் இமயத்துக்கும் இலங்கைக்குமிடையே ஓரளவுக்கேனும் தலைநிமிர்ந்து நிற்கக் காரணம், இந்த சைவ தீர்க்கதரிசிகளின் – சைவ ஞானிகளின் இடையறாத யாத்திரைகளும், போதனைகளுமே. ஊரூராய்த் திரிந்து நாயன்மாரும் பிறரும் எழுப்பிய சைவ பக்தி இயக்கத்தின் துளிக்கனலே இன்றும் இங்கு அணையாமல் எஞ்சியிருக்கிறது;.

 

சைவம் மட்டுமல்ல; இன்னொரு இந்துப் பண்பாட்டுப் பெருஞ்சமயமான வைணவமும் ஆழ்வார்கள் முதலிய வைணவத் தீர்க்கதரிசியராலும்  ஞானியராலும் கடல் கடந்து நிலைநிறுத்தப்பட்டிருந்த புகழ்பெற்ற வரலாற்றுக்குச் சொந்தமானது. எனில், சைவமும் வைணவமும் அடங்குவதாகக் கட்டமைக்கப்படும் ‘இந்துமதம்’ ஒரு தூய இயற்கை மதமாக முடியாது.

 

அவை மட்டுமல்ல; கடந்த இருநூறாண்டுகளாக இம்மண்ணில் முளைத்தெழுந்தபடி இருக்கும், சீரடி சாயி, சத்திய சாயி, அம்மா பகவான், மேல்மருவத்தூர் அம்மா, ஈஷா, நித்யானந்தா, இஸ்கான் எல்லாமே இன்று உலகெலாம் பரவி தீர்க்கதரிசிகளின் மதங்களாகிக் கொண்டிருக்கின்றன. எனவே அவற்றையும் தனது கூறுகளாக ஆரத்தழுவிக்கொள்ளும் ‘இந்துமதம்’ ஒரு தூய இயற்கை மதமாக முடியாது. ஆக, இயற்கை மதம், தீர்க்கதரிசன மதம் எனும் பாகுபாடே மேலோட்டமானது என்றாகிவிடுகிறது.

 

3. இந்தியாவில் இன்று நாம் இந்துமதம் என்று சொல்லும் இந்த அமைப்பு இன்றிருக்கும் வடிவில் ஒன்றாகவே இருந்துள்ளது. ஒருவர் அதற்குள் சைவத்தையோ வைணவத்தையோ பின்பற்றலாம். ஆனால் பிற வழிபாட்டு மரபுகளுடன் இணைந்தே இருந்தாகவேண்டும். ஆலயங்கள் விஷ்ணுவுக்கோ சிவனுக்கோ உரியதாக இருக்கலாம். ஆனால் அங்கே மற்ற வழிபாட்டு மரபுகளின் தெய்வங்களும் இருக்கும்.

 

மீண்டுமொருமுறை இந்து என்ற பண்பாட்டு அடையாளத்தை ஒரு மதமாகக் காட்டி அதில் உண்மையான மதங்களான சைவம், வைணவம் முதலியவை ஒன்றுடன் ஒன்று பிணைந்தே இருந்தன என்கிறீர்கள்.  எல்லா இந்திய மதங்களுக்கும் மெய்யியல் ரீதியாகவும் சடங்கியல் ரீதியாகவும் இரண்டு இயங்கு தளங்கள் இருந்தன, இருக்கின்றன.  பௌத்தம், சமணம் என்பன கூட சடங்கியல் ரீதியாக தங்களுக்கென விகாரங்களையும் பள்ளிகளையும் தனிச்சடங்குகளையும் வகுத்துக்கொண்டன.

 

இந்தச் சமயங்கள், பிற சமயங்கள் தொடர்பில் தங்கள் வழிபாட்டாளனை கறாராகக் கட்டுப்படுத்தினவா என்பது சரியாகத் தெரியாதபோதிலும் தங்கள் அளவில் ஒவ்வொன்றும் தனித்தனியே தான் இயங்கின என்றே கொள்ளமுடிகிறது. இதற்கு அவ்வவ் கோவில்களில் வழக்கத்திலிருந்த சைவ/வைணவ/சாக்த/சுமார்த்த ஆகமங்கள்/தந்திரங்களே சான்றாகின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் அக்கோவில் சார்ந்த சமயம் சார்ந்த சடங்கியல் நூலொன்று இருக்கும். அவை சார்ந்தே அக்கோவில்கள் இயங்கின. அக்கோவில்களில் இடம்பெற்றிருந்த அத்தனை தெய்வங்களையும் வழிபடும் முறைமைகள் அக்கோவிலுக்கு அடிப்படையான சடங்கியல் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

உதாரணமாக சித்தாந்தம் சார்ந்த ஆகமொன்றின்படி அமைக்கப்பட்ட சிவாலயமொன்றில் பைரவ அல்லது தக்ஷிண சைவத்தின் முழுமுதல் இறையான வைரவர் சேத்திரபாலராக நிறுவப்பட்டார். காளாமுகம் அல்லது லகுலீச பாசுபதத்தின் முழுமுதலான இலகுலீசர் சண்டிகேசுவரர் என்ற பெயரில் இறுதிவழிபாட்டுக்குரியவரானார். பிரமனையும் விஷ்ணுவையும் சிவாலயக் கோட்டத்தெய்வங்களாக நிறுவி வழிபடும் மரபும் இருந்தது. ஆனால் எல்லாத் தெய்வங்களுக்குமே, அந்த ஆலயத்துக்கு அடிப்படையான சிவாகமம் விதித்தபடியே வழிபாடுகள் இடம்பெற்றன.

 

சிவாலயமொன்றின் பரிவார தெய்வமான விஷ்ணு வந்திக்கப்படுவது, சிவாகமங்கள் விதிக்கும் விஷ்ணுஸ்தாபன நடைமுறைகளுக்கமையத்தான். அங்கு பாஞ்சாராத்திரமோ வைகானசமோ பயன்படுவதில்லை. ஒரே கோவில் வளாகத்துக்குள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட சடங்கியல் மரபுகளைச் சேர்ந்த பத்ததிகள் வழக்கத்துக்கு வந்தது, கோவில் வழிபாட்டுரிமை அல்லது பரிபாலன உரிமை சார்ந்த முரண்பாடுகளும், கோவில் மரபு பற்றிய தெளிவின்மைகளும் ஏற்பட்ட மிக அண்மைக்காலத்திலே தான்.

 

சைவமோ, வைணவமோ, தமக்கான தெய்வங்களைத் தேர்ந்தெடுப்பதில், தம் சமயம் தாண்டியும் சுதந்திரம் எடுத்துக்கொண்டன என்பது உண்மையெனினும், புறத்தெய்வமொன்று ஒரு சம்பிரதாயத்தில் இணைந்த போது, சம்பிரதாயமும் தெய்வமும், ஒரு சமரசத்தை மேற்கொள்ளவேண்டி இருந்தது. எனினும், சைவ வைணவ சமயங்கள் தங்கள் எல்லைக்குள் பிற வழிபாட்டு மரபுகளை பூரண தனித்துவங்களுடன் நீடிக்க அனுமதித்ததற்குச் சான்றுகள் கிடைக்கவில்லை.

 

4.  இந்த வழிபாட்டுமுறைகள் எல்லாம் முற்றிலும் வெவ்வேறு ‘மதங்கள்’ (Religions) ஆக இருந்து திடீரென்று ஏதோ ஒரு சதிவேலையால் ஒன்றாக ஆனவை அல்ல.……இந்த வழிபாட்டு முறைகள் தனித்தனித் ‘தரப்புகள்’ ஆக இருந்தபோதிலும் ஒரே அமைப்பின் பகுதிகளாகவே இருந்தன.

 

சைவத்தின் உட்பிரிவுகளோ, வைணவத்தின் உட்பிரிவுகளோ ஏற்கனவே தனித்தனிச் சமயங்களாக இருந்து, ஒரு சதிவேலையால் ஒன்றாக மாறவில்லை என்பது சரி தான். ஆனால், சைவமும் வைணவமும் பிறவும் ‘இந்து’ என்று சொல்லக்கூடிய ஒரே அமைப்பின் பகுதிகளாக இருந்தன என்று எப்படி உறுதியாகச் சொல்வது?

 

பொதுவெளியில் எந்தவொரு தரப்பும் இறுக்கமான மூடிய தரப்புகளாக விளங்குவதில்லை. நெடுங்காலமாகத் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த சைவத்திலும் வைணவத்திலும், அந்த இடையறா உரையாடலால் தென்படுகின்ற ஒற்றுமையை வைத்துக்கொண்டு அவை ஏற்கனவே நிலவிய ஒரே அமைப்பின் பகுதிகள் என்று கூறமுடியாது. தனித்தனித் தரப்பு என்பதே அவை தனித்தே இருந்ததைச் சொல்வது தானே.

 

கடந்த நூற்றாண்டு வரை, சைவத்திலோ வைணவத்திலோ கிறிஸ்தவம் - இஸ்லாத்தின் தாக்கம் இருப்பது கூட விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது. தாங்களே முன்பொருமுறை சைவ நாயன்மாரின் வரலாற்றிலுள்ள ‘வதைக்கப்படல்’ அம்சமானது கிறிஸ்தவப் புனிதர்களின் வரலாற்றிலிருந்து பெறப்பட்டிருக்கக்கூடும் என்று ஊகித்திருந்தீர்கள். உரையாடுவன அத்தனையும் ஒரே அமைப்பின் பாகங்களாக முடியும் என்றால், “இன்று தனித்தனித் தரப்பாக இருக்கும் இஸ்லாம், கிறிஸ்தவம் என்பன கூட ‘இந்து’ எனும் ஒரே அமைப்பின் பகுதிகள் தான்” என்றும் வாதாடலாம். அப்புறம் அவற்றுக்கு எதற்குத் தனிமத அடையாளம்? “இந்தியாவில் இந்து என்ற ஒரேயொருமதம் தவிர வேறொன்றில்லை” என்றே கூறிவிடலாமே.

 

இன்று சமய அடையாளமாக நீடிக்கும் ஒரு பண்பாட்டு அடையாளம், ‘இந்து’ என்ற மதப்பெயராகவே நீடிக்கவேண்டும்; மெய்யான மதங்களான சைவம் – வைணவம் அதற்குள் கரைந்தொழிந்து போகவேண்டும் என்று சொல்வதும் ஒரு திணிப்புத்தான். ஒரு ஆக்கிரமிப்புத் தான்.

 

சைவரின் எளிய வினா ஒன்றே. இந்திய அரசியலமைப்பின் ‘இந்து’ வரையறையை மீறி, பௌத்தமும், சமணமும், சீக்கியமும் இந்தியாவில் தனித்தனிச் சமயங்களாகக் கருதப்படலாம் என்றால், இதே இந்தியமண்ணில் இன்னும் இரு தரப்புகளாக நீடித்துவந்து, இங்கிருந்த மதங்களுடன் கடந்த ஆயிரமாண்டுகளாக இடைத்தாக்கம் புரிந்து வரும் இஸ்லாமும் கிறிஸ்தவமும் தனித்தனிச் சமயங்களாக நீடிக்கலாம் என்றால், சைவமும் வைணவமும் தனித்தனிச் சமயங்களாக நீடிப்பதில் மட்டும் என்ன பிழை?

 

5. ஏறத்தாழ ஆயிரத்தைநூறு ஆண்டுகளாக இது இவ்வாறுதான் இருந்தது என்பதற்கான மாபெரும் சான்று தமிழில் சிலப்பதிகாரமே. குமாரசம்பவம், ரகுவம்சம் இரண்டையும் எழுதிய காளிதாசன் சைவனா, வைணவனா? காளியை வழிபடும் உவச்சர் குடியில் பிறந்து ராமாயணம் எழுதிய கம்பன் சாக்தனா வைணவனா?

 

மாபெரும் ஆளுமைகள், கவிஞர்கள் பண்பாட்டு வெளியில் சஞ்சரிப்பவர்கள். சீரிய கனவுகளில் திளைப்பவர்கள்.  சிலப்பதிகாரம் ஒரு இலட்சியக் காவியம், மூவேந்தர் நாட்டையும், அந்நாட்டின் பல்வேறு குடிகளின் பண்பாடுகளையும் ஒன்றிணைத்து சேரமன்னர்குடியில் பிறந்த ஒரு மகத்தான தமிழ்க்கவிஞன் கண்ட இலட்சியக்கனவு அது. உண்மையிலேயே அப்போது புறவுலகிலும் நீடித்த தமிழகம் தானா அது என்பது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் முடிந்தபாடில்லை.

 

எனினும் சிலம்பு காட்டும் சித்திரம் நிஜமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு பிற்காலத்தைய சான்று ஒன்று உண்டு. இந்தோனேசிய நண்பன் விஜயோத்துங்கவர்மன் நாகையில் பௌத்த சூடாமணி விகாரமும், தமக்கை குந்தவை திருமலையில் சமண ஜினாலயமும், தானே வைணவ இரவிகுல மாணிக்க விண்ணகரமும் எழுப்பிய ஓர் காலத்தை நிகழ்த்திக் காட்டியவன் “சிவபாதசேகரன்” இராஜராஜ சோழன்.

 

சமயப்பொறை என்பது இம்மண்ணுக்குத் தனித்துவமான ஒரு பண்பாட்டு அம்சம் என்பது இங்கு மீண்டும் உறுதியாகின்றது. ஆனால் சிலம்போ, ராஜராஜன் கல்வெட்டுக்களோ காட்டும் காட்சியை இங்கு நிலவிய ஒற்றைச் சமயமாக உருத்திரிப்பது, பெரும்பிழை. இந்த மதநல்லிணக்க அம்சம் இப்படித்தான் ஆயிரம் ஆண்டுகளாக -  ஆயிரத்தைநூறு ஆண்டுகளாக பாரத நிலத்தில் நீடிக்கின்றது. அதற்காக, இந்துப் பண்பாட்டு அடையாளத்தை மத அடையாளமாகக் கட்டமைப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளமுடியாது. 

 

6. ஒன்றோடொன்று முரண்படும் போதும், ‘இந்து’ பண்பாட்டுக்குள் அடங்கும் எல்லா அம்சங்களையும் ஒற்றை மதமாக ஒன்றுதிரட்டி ஒட்டுமொத்தமாக நிலைநிறுத்துவிடலாம் என்று கருதுகிறீர்கள். அப்படி ஏன் எல்லாம் ஒன்றாக ஒருங்கிணைய முடியாது என்பதற்கான இரண்டு அப்பட்டமான பதில்கள், உங்கள் கட்டுரையிலேயே இருக்கின்றன.

 

6.1 இந்துமதம் முன்வைக்கும்  ஞானியர் வரிசை சைவத்தால் ஏற்க இயலாதது.

 இப்படி எழுதுகிறீர்கள்.

இந்து மரபு சென்ற ஆயிரம் ஆண்டுகளாக மெல்லமெல்ல ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்பை நிகழ்த்தியவர்கள் சங்கரர் முதல் சித்பவானந்தர் வரை நாம் வழிபடும் மாபெரும் ஞானிகள். தொடர்ச்சியான தத்துவ உரையாடல்கள் வழியாக, மெய்ஞ்ஞானப் பரிமாற்றம் வழியாக இந்த இணைப்பும் தொகுப்பும் நடைபெற்றுள்ளது.”

 

ஞானியர் வரிசையை இருவரைக் கொண்டு எல்லை வகுக்கிறீர்கள். சங்கரர் முதல் சித்பவானந்தர் வரை. சங்கரர், சித்பவானந்தரை சைவத்தரப்பு ஏற்கமுடிந்தால், அவர்களை ‘சைவரும் வழிபடும்’ ஞானியர் வரிசை என்று தாராளமாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த இருவரும் ஏற்கப்படுவதும்  கொண்டாடப்படுவதும், முழுமையாக சங்கர வேதாந்தத்தை ஏற்றுக்கொண்டோரால் மட்டுமே. சங்கரரோ சித்பவானந்தரோ, அவர்கள் முன்வைக்கும் சங்கர அத்வைதத் தரப்போ சைவமரபுக்கு அத்தனை நெருக்கமானவர்கள் தானா?

 

6.1.1 சங்கரர் சைவ மெய்யியலைக் கண்டித்தவர்.

பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றான பிரம்ம சூத்திரத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் “இறைவன் உலகுக்கு நிமித்த காரணன்” என்ற பாசுபத சைவக் கொள்கை கண்டிக்கப்படுகிறது. பாசுபதத்திற்கு என்ன, இன்றும் சைவ சித்தாந்தத்தின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றே, இறைவன் உலகுக்கு நிமித்த காரணன் (Efficient Cause, செயலொன்றை நிகழ்த்தும் புறக்காரணி) என்பது தான்.  பிரம்ம சூத்திரத்தின் அவ்வத்தியாயத்திற்கான உரையில் மிக விரிவாக சைவ மெய்யியலைக் கண்டிக்கிறார் ஆதிசங்கரர்.

 

சங்கரரின் வேதாந்த ஒருமைவாதக் கோட்பாடு, சைவத்துக்கு அந்நியமானதல்ல என்று காண்பிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அபிநவகுப்தரிலிருந்து ஸ்ரீகண்டர், ஸ்ரீகரர் வரை பல சைவ அறிஞர்களால் பிரம்மசூத்திரம், பகவத் கீதை உள்ளிட்ட நூல்களுக்கு எழுதப்பட்ட சைவ உரைகள், ஏனைய வேதாந்தத் தரப்பினராலும் சைவரில் பெரும்பான்மையோராலும்  இன்று எந்த இடத்தில் வைத்து நோக்கப்படுகின்றன என்பதை ஆராய்ந்தாலே இந்த முயற்சிகள் எத்தகைய படுதோல்விகள் என்பதைச் சொல்லிவிடலாம்.

 

வேதங்களோடு தன்னை நிலைநாட்டிக்கொள்வதற்கு, பிரம்ம சூத்திரத்துக்குப் புறம்பான வேறு ‘சூத்திர’ நூல்களை சைவம் உருவாக்கவேண்டியிருந்தது. மெய்கண்டாரின் சித்தாந்தம் எழுந்தது, தமிழில் பன்னிரு சூத்திரங்களாலான சிவஞானபோதத்தால். திரிகம் வடக்கே காஷ்மீர சைவமாக உயர்ந்தது, வசுகுப்தரின் சிவசூத்திரத்தால். 

 

சைவத்தின் “உயிர்களைத் தாண்டி இறைவன் ஒருவன் உள்ளான்” என்ற கூற்றும், சங்கரரின் “உயிர்களும் இறைவனும் ஒன்று தான்” என்ற கூற்றும் எவ்வாறு ஒன்றாக முடியும்? சங்கர அத்வைதத்துடன் சைவம் கரம்கோர்ப்பது இயலாத காரியம். சைவத்தைக் கண்டித்த சங்கரரே அதை ஏற்கமாட்டார்.

 

6.1.2 சித்பவானந்தர் சைவ மெய்யியலையும் கூடவே சைவக் குரவரையும் கண்டித்தவர்

நீங்கள் தங்கள் ‘இந்து’ சமயத்தின் ஞானிகளின் வரிசையை முடிக்கும் பெயரான சித்பவானந்தரும் அவ்வாறே.  உபநிடத வரிகளை ஒப்பிட்டு அவர் திருவாசகத்துக்கு அருமையான உரையொன்றை எழுதியுள்ளார். விடயம் தெரிந்தவர்களிடம் கேட்டால், திருவாசகத்துக்கான மிகச்சிறந்த உரைகளில் ஒன்று என்று கூட சித்பவானந்தர் உரையையே கைகாட்டுவார்கள். ஆனால், அந்த நூலே சித்பவானந்தர் சைவத்தை, சைவஞானியரை நிராகரித்தவர் என்பதற்கான மறுக்கமுடியாத ஆதாரமாக இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை தான்.

 

திருவாசகம் ஒரு சைவநூல். ஒரு சைவநூல் சைவக்கருத்தைத் தான் பாடும். ஆனால் சித்பவானந்தர் என்ன செய்திருக்கிறார்? அவரது திருவாசக உரைக்கான அறிமுக முகவுரையில் இப்படியோர் பகுதி வருகிறது.

 

“திருவண்டப் பகுதியில்……..'அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும் வீடுபேறாய் நின்ற....கிழவோன்" என்று மாணிக்கவாசகர் மொழிகிறார். இக்கூற்றுக்கு விளக்கமாக சிவன்தான் அறுசமயத்தவர்க்கும் முக்தி நல்குகிறான் என்று சொல்லுவது சமயவாதிகளின் குறுகிய பான்மையாகும். ஆறு சமயங்கள் தோறும் வேறு வேறாய் விளங்குபவன் ஒரே பரம்பொருள் எனக் காண்பவர் மெய் காண்கின்ற தத்துவ தர்சிகளாகின்றனர்.”

 

மணிவாசகர், சிவனே ஆறுசமயத்தவர்க்கும் முக்தி நல்குகிறான் என்று வெளிப்படையாகத் தான் பாடுகிறார். சைவ வழக்கு அதுவே. “அமணர் தேரர் சொன்ன சொற்களான பொய் ஆக்கி நின்றவனே” (தி.2:51:10) என்று சம்பந்தர் சொல்வதும் இந்தப் பரந்த மனப்பான்மையைத் தான். “விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து எரிவினாற் சொன்னாரேனும் எம்பிரானுக்கு ஏற்றதாகும்” (தி.4:60:9) என்று அப்பர் சொல்லும் சமரசமும் அதுதான்.

 

அத்தனை சமயங்களும் அரன் படைப்பே என்று தெளிந்து, ஆனால் அத்தனைக்கு மேலானது சைவம் என்று உணர்ந்து, அதன் மூலம் சமய சமரசம் கொள்வது தான் சைவ வழக்கே தவிர,  தன் சமயத்தின் அடிப்படையே தெரியாமல் “எம்மதமும் சம்மதம்” என்று சொல்லி அறியாமையுடன் புன்னகைப்பது அல்ல. 

 

ஆனால் தங்களுக்கென ஒரு இறையைத் தேர்ந்து, அவனே எல்லாச் சமயங்களையும் படைத்தான் என்ற கோட்பாடுள்ள சைவர்கள் -  மணிவாசகர் உட்பட -  சித்பவானந்தரின் பார்வையில் குறுகிய மனப்பான்மை கொண்ட சமயவாதிகள் ஆகிவிடுகிறார்கள். சிவனும் பிரம்மத்தின் ஓர் வடிவமே, பிரமமே எல்லாச் சமயங்களினதும் தெய்வமாக விளங்குகிறது என்று கூறும் வேதாந்தக் கருத்துக்கொண்டவர்கள் தான் “மெய் காண்கின்ற தத்துவ தர்சிகள்” ஆகின்றார்கள்.  இதை சித்பவானந்தர் சொல்வது, “மிண்டிய மாயாவாதத்தை” மறுக்கும் ஒரு சைவநூலில்!

 

தொடர்ந்து இப்படிச் சொல்கிறார்:

 “பரப்பிரம்மத்துக்கு ஒரு மானுட வடிவம் கொடுத்தால் அந்த மூர்த்தியின் இரண்டு கண் போன்றவர்கள் சிவனும் விஷ்ணுவும்……..சிவனுக்குரிய ஆயிரம் பெயர்களிலும் விஷ்ணுவுக்குரிய ஆயிரம் பெயர்களிலும் தத்துவ ஆராய்ச்சி பண்ணுமிடத்து விஷ்ணு ஸஹஸ்ரநாமங்கள் சிவ ஸஹஸ்ரநாமங்களைவிட மேலோங்கியிருக்கின்றன…….உண்மை இப்படியிருக்க, மாணிக்கவாசகர் மஹாவிஷ்ணுவை பிரம்மதேவனோடு ஒப்பிட்டுப் புறக்கணிப்பது முறையன்று. ஞானியர் ஏற்றுக்கொள்ளார். உலகம் இச்செயலைச் சரியென்று ஏற்றுக்கொள்ளாது”

 

நாலாயிரத்திவ்விய பிரபந்த உரைகளில் சிவனை உருத்திரனாகத் தாழ்த்துவது தவறென்று யாரும் சொல்வதில்லை. ஏனெனில் அது வைணவரின் நூல். வைணவர்களுக்கு உருத்திரன் திருமாலுக்குக் கீழ்ப்பட்ட ஒரு தேவன். அவ்வளவே. முஸ்லிம்கள் ஏசு கிறிஸ்துவை ஈசா(அலை) என்று வெறுமனே இறைதூதராகப் பார்க்கக்கூடாது. அவர் கிறிஸ்தவரின் தேவகுமாரன் என்று இஸ்லாமியர்களிடம் போய் யாரும் சொல்லமுடியாது. சொல்வதும் தவறு. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு மதங்கள்,  வெவ்வேறு கோட்பாடுகள்.

 

நிலைமை இப்படியிருக்க, திருவாசகம் ஒரு சைவநூலென்பதை மறந்து, அங்கு விஷ்ணுபரத்துவம் நாட்டப்படவில்லை என்று சித்பவானந்தர் வருந்துகிறார். ஆனால், தன் நெறியில் சரியாய் நின்ற மணிவாசகரை முறையின்றி நடந்தவர் என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார். மணிவாசகரையோ மணிவாசகர் சொன்னதையோ ஞானியர் ஏற்கார், உலகம் ஏற்காது என்று முடிவுகட்டும் உரிமையை சித்பவானந்தருக்கு அளித்தது யார்? சிவபரத்துவம் பேசும் சைவர், ஞானியர் அல்ல என்று முடிவுகட்டும் கொள்கை கொண்ட ஒருவர்,  ஞானி அல்லாத சைவ மணிவாசகரால் பாடப்பட்ட திருவாசகத்துக்கு உரை எழுத வந்து அமர்ந்ததே தவறு என்றல்லவா ஆகிறது.

 

“….படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களும் சேர்ந்தே அமைந்திருக்கின்றன. ஆதலால் மும்மூர்த்திகளும் சம அந்தஸ்துப் பெறுகின்றனர்…….ஆனால் மாணிக்கவாசகர் அயனையும் அரியையும் செருக்குற்ற சிறு தெய்வங்களாக வகைப்படுத்துகிறார்……தற்பெருமை பூண்டிருந்த திருமாலும் படைப்புத் தெய்வமும் பரமனுடைய அருளுக்குப் பாத்திரமாகாது என்றென்றும் தவித்துக்கொண்டிருக்கின்றனர் என்னும் கருத்தைத் திருவாசகத்தில் அடுத்து அடுத்து அவர் அறுபத்தொன்பது தடவை இயம்பியுள்ளார். தத்துவத்துக்கு ஒவ்வாத இக்கருத்து சமயப்பிணக்கை வளர்க்கும்; சான்றோர்க்கு இது ஏற்புடையதாகாது.”

 

சைவத்துக்கெனத் தனியே ஒரு மெய்யியல் பரப்பு உண்டு என்பதை முதலில் சித்பவானந்தர் அறிந்திருக்கவேண்டும். முப்பத்தாறு தத்துவங்களை வகைப்படுத்தும் சைவ சித்தாந்தம், உருத்திரர்கள் பலரை அத்தத்துவங்களுக்கு உட்பட்ட ஆன்மாக்களாகக் கூறுவதுடன், அவர்களுக்கெல்லாம் மேம்பட்டவனாகவே சிவனைத் துதிக்கிறது. பரம்பொருளாகிய சிவம் மூவருக்கும் மேலானது என்பது சைவக் கொள்கை. பரம்பொருளாகிய பிரமமே மூவராக விளங்கும் என்பது வேதாந்தக் கொள்கை.

 

சைவ மெய்யியலில் தெய்வங்களுக்கு அணுபட்சம் (தெய்வப்பதவியை வகிக்கும் ஆன்மா), சம்புபட்சம் (அணுபட்ச ஆன்மாவை அந்தத் தெய்வப்பதவியில் உள்நின்று இயக்கும் சிவாம்சம்) எனும் இருவடிவங்கள் முன்வைக்கப்படுகின்றன. காட்டாக, திருமாலுக்கு அணுபட்சம், சம்புபட்சம் என்று இருவடிவங்கள் உள்ளன.  சைவத்தின் பார்வையில் அவதாரங்கள் எடுத்த திருமால், விஷ்ணு பதவியை வகிக்கும் ஓர் ஆன்மா. சம்புபட்ச நாராயணன் என்பது அத்திருமாலை உள்நின்று இயக்கும் சிவாம்சம். “நூறுகோடி பிரம்மர்கள் நொந்தனர் ஆறுகோடி நாரணர் அங்ஙனே” என்று திருமுறை பாடுவது அணுபட்ச பிரமவிஷ்ணுக்களை. அதே திருமுறையில் “அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்று சிவசக்தியின் வடிவாகச் சொல்லப்படுபவர், சம்புபட்சத் திருமால். திருமால், பிரமர் மாத்திரமன்றி, அணுபட்ச உருத்திரர்கள் பற்றிக்கூட சைவ மெய்யியல் விவரிக்கின்றது.

 

இந்தக் கோட்பாட்டு முரணை சித்பவானந்தர் நன்கு தெளிந்திருக்கவேண்டும். சித்பவானந்தர் எளிமைப்படுத்தி விளக்குவது போலன்றி, ‘விஷ்ணுவா சிவனா பெரியவர்’ என்ற பக்குவம் குறைந்தோர் புரியும் சாதாரண வாதத்தை சைவநூல்கள் பாடவில்லை. அத்தனை பிரமர்களுக்கும் விஷ்ணுக்களுக்கும் உருத்திரர்களுக்கும் அப்பாற்பட்ட முழுமுதற்பொருளாகிய பரசிவத்தையே திருவாசகமும் முன்வைக்கிறது. அதை வெறும் ‘யார் பெரியவர்’ சண்டையாகப் புரிந்துகொண்டு “தத்துவத்துக்கு ஒவ்வாத இக்கருத்து பிணக்கை வளர்க்கும். சான்றோர்க்கு இது ஏற்புடையதாகாது” என்கிறார் சித்பவானந்தர்.

 

தனது வேதாந்தத் தத்துவத்தால் இக்கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாது என்பதற்காக, தான் புரிந்துகொண்ட வரை இக்கோட்பாட்டை தன்னால் ஏற்கமுடியவில்லை என்பதற்காக, தான் உரையெழுத வந்த நூல் சார்ந்த மதத்தின் கோட்பாட்டையே “சான்றோர்க்கு ஏற்புடையதாகாது” என்று சித்பவானந்தர் சொல்லும் வார்த்தைகளில் தொனிப்பது ஆணவமும் அலட்சியமும் தானே?

 

சித்பவானந்தரின் வேதாந்த மேலாதிக்க மனப்பங்கை அவரது “சைவன் யார்” நூலிலும் காணலாம். அதெப்படி, மாற்றுச் சமயம் பற்றி எழுத வந்தமர்ந்த ஒருவரால், அதே நூலில் சொல்லப்படும் மாற்றுச்சமயக் கருத்துக்களையும் அதைச் சொல்லும் நூலாசிரியரையும் ஏளனத்தோடு எள்ளி நகையாடிச் செல்ல முடிந்திருக்கின்றது?  ஒரு சைவநூலில் சைவக்கோட்பாட்டின் படி சிவனுக்கு முழுமுதன்மை சொல்லிப் பாடுவது அத்தனை பாரதூரமான குற்றம் போலும். அதனால் தான், ஆயிரமாண்டுகளாக இன்றைய ‘இந்து’ மதத்துக்கான அடித்தளத்தைக் கட்டியமைத்த இந்த ஞானியர் வரிசையால் சைவத்தை அங்கீகரிக்க முடியாமல் போயிருந்திருக்கிறதோ என்னவோ.

 

6.1.3 ஆக, சைவத்தை நிராகரித்த சங்கரரும் சித்பவானந்தரும் சைவர்களுக்குக் குருவாய் அமரமுடியாது.

 

இந்த இரு வாதங்களிலும் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், சங்கரர் தான் சார்ந்த ஒரு மாற்று மெய்யியலொன்றைத் தாபிப்பதற்காக சைவத்தை மறுக்கிறார். அதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சித்பவானந்தர் செய்த பணி, சைவர்களால் ஏற்கமுடியாதது. சைவம் என்று தங்களுக்குள் சைவர்கள் சொல்லிக்கொள்வது சைவமே அல்ல என்கிறார் அவர். சைவக்கொள்கைக்ளை “ஞானியர் ஏற்கார், உலகம் ஏற்காது” என்கிறார். ஒரு மாற்றுச் சமய நூலுக்கு உரை வகுக்கும் போது, அந்நூலாசிரியரின் கோட்பாட்டில் குறை காண்கிறார். இறுதியில் சைவக்கோட்பாடுகளுக்கு மாற்றாக, தன் சங்கரவேதாந்தக் கருத்துக்களைத் முன்வைக்கிறார்.

 

சங்கரரை விட, சித்பவானந்தர் சைவர்க்குச் செய்த ஊறு மிகப்பெரிது. அவர் நவீன கல்விமுறையை அறிந்தவர், சமகாலத்து ஆளுமை என்ற தரவுகளின் நடுவே வைத்து, அவர் சைவத்துக்கு இழைத்தது என்ன என்பதை ஆராயும்போது, ஒரு சராசரிப் பாமர சைவனொருவனுக்கு ஏற்படும் அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல.

 

இப்போது தங்களைப் போன்றவர்கள், சங்கரரிலிருந்து சித்பவனாந்தர் வரை ஒரு கோடு இழுக்கிறீர்கள். அதையே முறையான ‘இந்து’ சமயத்தின் வழிபாட்டுக்குரிய குருவரிசையாக நியமப்படுத்துகிறீர்கள். தங்கள் குருவரிசை, ஆதிசங்கரரிலிருந்து சித்பவானந்தர் வரை செல்லும் என்றால், அவர்கள் தான் நீங்கள் நம்பும் “இந்து எனும் இன்றைய ஒற்றைத்தொகுப்புக்கு” கால்கோளிட்டவர்கள் என்றால், சைவத்தைக் கண்டிக்கும், சைவத்தை நிராகரிக்கும் தங்கள் குருவரிசை சைவர்களை ஏற்கனவே புறக்கணித்துப் புறந்தள்ளிவிட்டது. அல்லது, அவர்கள் திரட்டிக்கொடுத்த ‘இந்து’ எனும் ஒற்றைத்தொகுப்பில் சைவர்கள் இல்லை.

 

ஒரு வாசகனாக, ஒரு மெய்யியல் மாணவனாக, எனக்கு ஆதிசங்கரரும் சித்பவானந்தரும் மாபெரும் அறிஞர்கள், ஆளுமைகள்.  ஆனால் ஒரு சைவனாக எனக்கு அவர்கள் ஞானிகளோ வழிகாட்டிகளோ அல்லர். திருமூலர் முதல் வள்ளலார், கபீர் முதல் காந்தி என்ற வேறிடங்களில் தாங்கள்  குறிப்பிடும் ‘இந்து’ ஆசிரியர் வரிசைகள் கூட உறுத்தவில்லை. ஆனால், சங்கரர் முதல் சித்பவானந்தர் என்ற ‘இந்துக்’ குருவரிசையை என்ன நம்பிக்கையில் ஒரு சைவன் சாதாரணமாக ஏற்றுக்கொண்டு இயல்பாகக் கடந்து செல்ல முடியும்?  சைவத்துக்கு எதிரான குருவரிசை ஒன்றை முன்னிறுத்தும் ‘இந்து’ எனும் அதிகார அமைப்பு, ‘அதெல்லாம் பிரச்சினையில்லை சைவர்களின் மரபுகள், மதநம்பிக்கைகள் காக்கப்படும்’ என்பதற்கு அளிக்கக்கூடிய உத்தரவாதம் தான் என்ன?


தொடர்ச்சி: ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை  02

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner