கிவுலக்கடவலைக் கல்வெட்டு: வரலாற்றில் புது ஒளிக்கீற்று


ஓரிரு மாதங்களுக்கு முன்னர், திருக்கோணமலையின் கோமரங்கடவைப் பிரதேசத்திலுள்ள கிவுலக்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்கல்வெட்டு, இலங்கை ஆய்வுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இக்கல்வெட்டைப் படித்த பேராசிரியர் .புஷ்பரட்ணம் (2021:6-7), மற்றும் கலாநிதி கா.இந்திரபாலா (2021:8,18) ஆகியோர் இக்கல்வெட்டு தொடர்பான புதுமையான அருமையான தகவல்கள் அடங்கிய காத்திரமான கட்டுரைகளை பொது ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர். இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் காலிங்க விஜயவாகுவை, அவர்களால் கலிங்க மாகோனாக அடையாளம் காண முடிந்ததே இக்கல்வெட்டின் சிறப்பாக இருந்தது. கலிங்க மாகோனை  பாலி - சிங்கள நூல்கள் கொடுங்கோலனாகவும்இலங்கைத் தமிழ் நூல்கள் சரித்திர நாயகனாகவும் சித்தரிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

 

கிவுலக்கடவலைக் கல்வெட்டின் வாசகம் வருமாறு:

 

[சிதைந்த வடமொழி சுலோகம்] 

ஸ்வஸ்திஸ்ரீ …….[த்திகள்?] [ஸ்ரீகுலோ]த்துங்கசோழக் காலிங்கராயனேன் ஈழ [மண்டலமான மும்முடிச்] சோழமண்டலமெறிந்தும் கங்கராஜ காலிங்க விஜயவாகு தேவற்கு வீராபிஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட[நேமி பூசை கால]ங்களில் ஆதிக்ஷேத்ரமாய் ஸ்வயம்புவுமான திருக்கோ[ணமாமலை]யுடைய[1] நாயனாரை தெண்டன் பண்ணி இந்நாயனாற்கு [க்தி]ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நாச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு [ப்ராப்தமாய்] வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்[][2] நாட்டில் லச்சிகா[]புரம்[3] இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நிலமும் …….. இதில் மேல் நோக்கிய மரமும் கீழ் நோக்கிய கிணறும்  பேருடரை நீக்கி குடிமக்களுள்பட  இந்நா[ச்சியார்க்கு திருப்]படிமாற்றுக்கும் மண்டபக் கொற்றுக்கும் சாந்த்ராதித்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோதகம் பண்ணிக் குடுத்தேன்.  ....லுள்ளாரழிவு படாமல்……. பெறுக்கிவுண்டார்கள் []ய் நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும்மாக . . டையார் பி... கெங்கைக் கரையிலாயிரங்குரால் பசுவைக் கொன்றா[ர்பாவ]ங் கொண்டார்கள் ஆயிரம் ப்ராஹ்மணரைக் கொன்றார் பாவ[ங் கொண்]டார்கள் மேலொரு..மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின் [சொல்படி] ..[?]த்தியஞ் செய்வார் செய்வித்தார்”  



கிவுலக்கடவலை தமிழ்க் கல்வெட்டு
(படம்: மரு.த.ஜீவராஜ் அவர்கள்)


இக்கல்வெட்டின் சுருக்கம் இது தான்.  ஈழமாகிய மும்முடிச்சோழமண்டல நாட்டை வென்று, கங்கராஜன் காலிங்க விஜயவாகு தேவருக்கு முடி சூட்டிய குலோத்துங்கசோழக் காலிங்கராயனாகிய நான், தான்தோன்றியாக அருளும் திருக்கோணமலை இறைவனை வணங்கி வழிபட்டு, இங்குள்ள சிவாலயத்தில் சக்திக்குத் தனிக்கோவில் இல்லாததால், ஒரு தனிச்சன்னதி அமைத்தேன். எனக்கு உரித்தான காலிங்கராயப்பற்று பிரதேசத்தில் அடங்கும் மானாமத்தப் பிரிவிலுள்ள லச்சிகாமபுரம் ஊரில் அடங்கும் நான்கு கிராமங்களின் நிலத்தையும் குடிமக்களையும், மேற்கே மரத்தையும் கிழக்கே கிணற்றையும் எல்லையாகக் கொண்டு இந்த அம்மனுக்கென கையில் நீர்வார்த்து தத்தம் செய்து தானம் கொடுத்தேன். அவற்றின் மூலம் வரும் வருமானம் சூரிய, சந்திரன் உள்ளவரை இந்தப் புதிய சன்னதி அம்மன் கோவிலில் குறித்த கிரியைகளையும் திருப்பணிகளையும் செய்வதற்கும் தொடர்ச்சியாகப் பயன்படவேண்டும். இந்தக்கொடை சரியாகப் பயன்படாமல் தடைசெய்பவர்கள், அடுத்த பிறவியில் காகமும் நாயுமாகப் பிறப்பார்கள்; கங்கைக்கரையில் ஆயிரம் காராம்பசுக்களைக் கொன்ற பாவத்தை அடைவார்கள்; ஆயிரம் அந்தணர்களைக் கொன்ற பாவத்தை அடைவார்கள். இப்படிக்கு காலிங்கராயரின் சொற்படி நடப்போம் என சத்தியம் செய்தவர்களும் செய்வித்தவர்களும்.


காக்கையும் நாயுமாகப் பிறப்பர்

இந்தக் கல்வெட்டின் அருகே சிதைந்த நிலையிலான சிவாலயம் ஒன்றும் காணப்படுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் லச்சிகாமபுரம் இந்த இடமே ஆகக்கூடும். சோழப்பேரரசின் காலம் வரை, சிவாலயங்களில் கருவறையிலேயே சிவனும் சக்தியும் வழிபடப்பட்டு வந்தனர். அதன்பிறகே அம்மனுக்கு சிவன் கோவிலில் தனிச்சன்னதி அமைக்கும் வழக்கம் வந்தது. இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட அம்மன் சன்னதிகளை காமக்கோட்டம் என்றழைக்கின்றன தமிழகக் கல்வெட்டுக்கள். இலங்கையில் இருந்த சிவன் கோவில்களிலும் இதையொட்டி காமக்கோட்டங்கள் அமைக்கப்படலாயின என்ற தகவலை முதன்முதலில் சுட்டிக்காட்டும் கல்வெட்டு இது என்கிறார் பேராசிரியர் சி.பத்மநாதன் (புஷ்பரட்ணம் 2021). 

 

ஆனால் இக்கல்வெட்டில் ஆய்வாளர்களுக்கு சுவாரசியமூட்டிய தகவல் வேறொன்று. கிவுலக்கடவலையிலுள்ள சிவாலயத்தில் அம்மன் கோவில் அமைத்த குலோத்துங்கசோழக் காலிங்கராயன், கங்கராஜ காலிங்க விஜயவாகுவுக்கு வீராபிஷேகம் பண்ணியிருந்தான் என்ற தகவல் அது. அந்தக் காலிங்க விஜயபாகு வேறு யாருமில்லை, கலிங்க மாகோன் தான் என்று கூறுகிறார்கள், கலாநிதி. கா.இந்திரபாலாவும், பேராசிரியர் .புஷ்பரட்ணமும். 

 

இலங்கையில் காலிங்க விஜயபாகு என்று குறிப்பாக அறியப்பட்டவர்கள் மூவர். 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நிகாய சங்கிரகய என்ற நூலின்படி கலிங்கமாகோனுக்கு காலிங்க விஜயபாகு என்ற பெயர் இருந்தது (Dharmakirti 2020:96). இன்னொரு பழைய நூலான ராஜரத்தினாகர தம்பதெனிய அரசைத் தோற்றுவித்த மூன்றாம் விஜயபாகுவை (1220-1224) காலிங்க விஜயபாகு என்கின்றது (Ranawella 2007:222).  அதே பெயரில் அழைக்கப்பட்ட மூன்றாமவன், மாகோனுக்கு பதினைந்தாண்டுகள் முன்பு பொலனறுவையை ஆண்ட சாகசமல்லன் (1200-1202).  

 

சாகசமல்லன் சிங்கள மன்னர் காலவரிசையில் வெறும் இரண்டாண்டுகளையே பிடித்துக்கொள்ளும் அத்தனை முக்கியத்துவமற்ற மன்னன். பொலனறுவையில் ஒரு சிங்களக் கல்வெட்டைப் பொறித்தது தவிர, சொல்லிக்கொள்ளும்படி அவன் பெரிதாக ஒன்றும் செய்யவும் இல்லை. ஆனால் சாகசமல்லனது அந்தக் கல்வெட்டு  வரலாற்றுலகுக்கு அளித்த கொடை கொஞ்சநஞ்சமல்ல. சாகசமல்லனது பொலனறுவைக் கல்வெட்டு, புத்த ஆண்டைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கை வரலாற்றில் மிகச்சரியான  காலப்புள்ளியொன்றைக் கணக்கிட உதவிய மிகப்பழைய ஆதாரமாகும்அது சொல்வதன் படி, சாகசமல்லன், பொ.பி 1200ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை அன்று முடிசூடிக்கொண்டான் (Wickramasinghe 1994:219).

 

சாகசமல்லன் கலிங்க நாட்டின் சிங்கபுரத்தை ஆண்ட ஸ்ரீகோப மன்னனுக்கும் லோகமாதேவிக்கும் பிறந்தவன். அவனுக்கு முன் பொலனறுவையை ஆண்ட நிசங்கமல்ல மன்னனுக்கு ஒன்று விட்ட சகோதரன்.  நிசங்கமல்லன் மறைந்தபின்னர் அடுத்து பொலனறுவையில் ஆட்சியில் அமர்வது யார் என்பதில் பல்வேறு குழப்பங்கள் நேரிட்டன. அப்போது இலங்காதிகாரன் என்ற பதவியை வகித்த லொலுபெல குலத்தைச் சேர்ந்த ஆபோநாவன், புதல்நாவன் ஆகிய இரண்டு அலுவலர்கள்,  நிசங்கமல்லனின் தம்பியான சாகசமல்லனை முடிசூட்ட முடிவெடுத்தார்கள். கலிங்க நாட்டவனான மல்லிகார்ச்சுனன் என்பவனை அவர்கள் தூதனாக அனுப்ப, மல்லிகார்ச்சுனன் சாகசமல்லனை சோழநாட்டின் கங்கைகொண்ட பட்டணத்துக்கு அழைத்து வந்தான். அங்கு அவனுக்கு ஆரவாரமான வரவேற்பும், ஆடையாபரணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

இதனால் இரு இலங்காதிகாரர்களாலும் மன்னனொருவன் இல்லாமல், தாங்களே ஆட்சிக்கு வர விரும்பிய ஏனைய பொலனறுவை அமைச்சர்களின் கொட்டத்தை அடக்க முடிந்தது. சாகசமல்லன் கடல்வழியே அழைத்து வரப்பட்டு ஸ்ரீசங்கபோதி காலிங்க விஜயபாகு என்ற பெயரில் முடிசூட்டப்பட்டான். ஓராண்டு கழிந்தபின்,  ஆபோநாவனுக்கு இலங்காதிகாரனை விட உயர்வான செனவிரத் (சேனாதிபதி) பதவியளித்த சாகசமல்லன், அவனை தன் முதலமைச்சனாகவும் நியமித்தான்.  இந்தத் தகவல்களை விரிவாகக் கூறும் சாகசமல்லனின் பொலனறுவைக் கல்வெட்டு, ஆபோநாவனுக்கு சாகசமல்லன் அளித்த கொடைகளையும், அவற்றை எதிர்காலத்தில் காக்க வேண்டிய கட்டாயத்தையும் கூறிச்சென்று முடிகிறது. (Wickramasinghe 1994:219-29).

 

இதில் நாம் ஊன்றிக் கவனிக்கவேண்டிய விடயம், சாகசமல்லன் சோழநாட்டு கங்கைகொண்ட பட்டணத்துக்கு அழைத்துவரப்பட்டு, அதன் பின்னரே இலங்கையை வந்தடைகிறான். இக்கல்வெட்டைப் படித்த அக்கால ஆய்வாளர்கள், “கங்ககொண்ட பட்டண” என்று கல்வெட்டில் உள்ள சிங்களச்சொல்லை கஹகொண்ட பட்டணம் என்றும் தங்ககொண்ட பட்டணம் என்றும் வாசித்து “சோழநாட்டில் இருந்த கஹகொண்ட / தங்ககொண்ட என்ற துறைமுகம்” என்று விளக்கமளித்திருக்கிறார்கள். ஆனால் கஹ கொண்ட, தங்க கொண்ட என்ற பெயர்கள் தமிழில் அசாதாரணமானவை. தமிழில் பட்டணம் என்றால் பெருநகரம் என்று பொருள். ஆனால் பட்டினம் என்றால் துறைமுகம் அருகே அமைந்த நகரம். பட்டணம் என்ற சொல்லை துறை எனப்பொருள்படும்படி பட்டினம் என்று வாசித்தது தவறு. இன்றும் இந்த பட்டினம் - பட்டணம் இருசொற்களையும் தமிழில் பொருள்மயங்கிப் புரிந்துகொள்வது வழக்கமாக இருக்கிறது.

 

சிங்களத்தில் தற்போதும்  பட்டுன என்ற சொல்லுக்கு துறை, நகர் என்ற இரு அர்த்தங்களும் சொல்லப்படுகின்றன[4]. சாகசமல்லனின் சிங்களக் கல்வெட்டில் இருப்பது  தெளிவாகவே பட்டண என்ற சொல் தான்.  எனவே அது கங்கைகொண்ட பட்டணம். அந்தப்பெயரில் சோழரின் துறைமுகங்கள் எதுவும் அழைக்கப்பட்டதாக ஆதாரங்களில்லை. ஆகவே கங்கைகொண்ட பட்டணத்துக்கு கங்கைகொண்ட மாநகரம் என்றே பொருள் கொள்ளமுடியும். சோழநாட்டில் அந்நாளில் அந்தப்பெயரில் புகழ்பெற்றிருந்த பட்டணம் ஒன்றே ஒன்று தான். சோழத்தலைநகரான கங்கைகொண்ட சோழபுரம்.

 

என்றால், இலங்கையில் முடிசூட்டுவதற்கென்று சாகசமல்லன் கலிங்க நாட்டிலிருந்து சோழநாட்டின் தலைநகரத்துக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறான். அங்கு அவன் வந்தபின்னர் இலங்காதிகாரர்களால் இலங்கையில் இருந்த ஏனைய அமைச்சர்களின் கலகங்கள் அடக்கப்படுகின்றன. பின்னர் சாகசமல்லன் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு முடிசூட்டப்படுகிறான். 

 

சாகசமல்லன் நேரடியாக கலிங்க நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டியது தானே? முடிசூட்டப்படுவதற்கு முன்னர், அவன் ஏன் சோழநாட்டுக்குச் செல்லவேண்டும்?  என்றால் சாகசமல்லனின் இலங்கை வருகையில் சோழப்பேரரசின் பங்களிப்பு நிச்சயம் இருந்திருக்கிறது. இலங்கை தன் பிடியிலிருந்து நழுவி பல்லாண்டுகள் ஆனபின்னரும், அந்நாட்டின் சிம்மாசனத்தின் மீது, சோழம் தொடர்ச்சியாக ஒரு கண் வைத்திருந்தது என்பதை இதன் மூலம் நாம் ஊகிக்கலாம்.

 

ஆக, கிவுலக்கடவலைக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் காலிங்கராயனால் முடிசூட்டப்பட்ட காலிங்க விஜயபாகு, சாகசமல்லன் தானா? இல்லை. ஆபோநாவன், புதல்நாவன் ஆகியோரின் அனுசரணையில் தான் முடிசூடியதைச் சொல்ல பொலனறுவையில் சிங்களக் கல்வெட்டுப் பொறித்திருக்கும் சாகசமல்லன், தனக்கு முடிசூட்டியதில், சோழருக்கோ சோழப்பிரதிநிதிக்கோ பங்கு இருந்ததாக, அக்கல்வெட்டில்  எங்குமே குறிப்பிடவில்லை. சோழநாட்டுக் கங்கைகொண்ட பட்டணம் பற்றிய குறிப்பின் மூலம் சாகசமல்லன் இலங்கையின் அரசனாவதற்கு சோழப்பேரரசின் மறைமுக ஆசீர்வாதம் இருந்தது என்பதை அவன் கல்வெட்டு சொல்லும்போதும்,  அப்போது ஒரு படையெடுப்பு  நிகழ்ந்தே பொலனறுவையின் அரசனாக அவன் பீடமேறினான் என்ற தகவலேதும் இக்கல்வெட்டில் இல்லை. மகாவம்சம் உட்பட இலங்கையின் ஏனைய வரலாற்றிலக்கியங்களும் சாகசமல்லனை சோழரோடு தொடர்புபடுத்தாமல்  மௌனம் சாதிப்பதால், குலோத்துங்கசோழக் காலிங்கராயன், சாகசமல்லனோடு தொடர்புடையவனல்ல என்றே முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. 

 

என்றால் காலிங்க விஜயவாகு என்ற பெயரை, தம்பதெனி அரசன் மூன்றாம் விஜயபாகுவோடு இணைத்துப் பார்க்கலாமா? இல்லை. அவன் மாகோனுக்கு அஞ்சி விலகிச்சென்று தம்பதெனி அரசை உருவாக்கியவன். இக்கல்வெட்டு கண்டறியப்பட்ட திருக்கோணமலைப் பகுதியில் இவன் ஆட்சி செலுத்தவில்லை. சோழரின் ஆதரவு இவனுக்கு இருந்தது என்பதற்கும் சான்றேதும் இல்லை. இத்தனைக்கும் ஸ்ரீசங்கபோதி காலிங்க விஜயபாகு என்ற மன்னனால் பொறிக்கப்பட்ட இன்னொரு சிங்களக் கல்வெட்டு, கண்டி உடதும்பறைக்கு அருகே கிவுல்கமத்தில் கிடைத்திருக்கிறது. மூன்றாம் விஜயபாகுவின் மிகக்குறுகிய ஆட்சிப்பரப்பைக் கவனத்தில் கொண்டு இந்தக் கல்வெட்டும் இவனுடையதல்ல; சாகசமல்லனுடையது என்றே கருதுகிறார்கள், சிங்கள ஆய்வாளர்கள் (Ranawella 2007:222).  எனவே, இப்போதைக்கு எல்லா வரலாற்றாய்வாளர்களும் சொல்வது போல, கிவுலக்கடவலைக் கல்வெட்டின் காலிங்க விஜயபாகுவை கலிங்க மாகோனாக இனங்காண்பதே  சரி போலத் தெரிகிறது.

 

கிவுலக்கடவலைக் கல்வெட்டில் வருவது மாகோன் தான் என்று உறுதியாகச் சொல்வதற்கு, வேறேதும் ஆதாரங்கள் இருக்கின்றனவா? ஆம், இருக்கின்றது. நம் வசம் நான்கு சான்றுகள் இருக்கின்றன. முதலாவது சான்று, மாகோனுக்கு ஆதரவாக தமிழரும் கேரளரும் அடங்கிய பெரும்படை இலங்கை மீது போர் தொடுத்ததை, மகாவம்சம் மூலமும் ஏனைய சிங்கள நூல்கள் மூலமும் அறியமுடிகின்றது. இப்படி சோழர் படையின் ஆதரவு சாகசமல்லன் மற்றும் மூன்றாம் விஜயபாகு பற்றிய மகாவம்ச வரிகளில் இல்லை என்பதால் தான். இக்கல்வெட்டை அவர்கள் காலத்தையது அல்ல என்று தவிர்க்கின்றோம். மாகோனுக்கு ஆதரவாக பெரும்படை வந்ததென்றால், அது சோழப்பேரரசின் அனுமதியின்றி இலங்கை வந்தடைந்திருக்கமுடியாது. பேராசிரியர்கள் .புஷ்பரட்ணமும், கா.இந்திரபாலாவும் தெளிவாகச் சுட்டிக்காட்டுவதன் படி, மாகோன் படையெடுப்பு மூன்றாம் குலோத்துங்கசோழன் காலத்தில் இடம்பெறுகின்றது. மாகோனுக்கு முடிசூட்டிய தளபதிக்கு குலோத்துங்கசோழ என்ற பட்டமும் இருப்பது நம் கவனத்தை ஈர்க்கிறது. 

 

இரண்டாவது சான்று, மாகோன் இலங்கையைக் கைப்பற்றிய ஓராண்டு காலத்தில் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டிய அரசு மீண்டெழுகின்றது. அக்காலத்தில் சோழ - பாண்டிய முரண்பாடு மிகுந்த தீவிரமாக இருந்ததை தமிழக வரலாற்றிலும் காண்கிறோம். பொலநறுவையை அப்போது ஆண்டுகொண்டிருந்தவன் பராக்கிரம பாண்டியன் எனும் பாண்டிய இளவரசன். இலங்கைச் சிங்கள அரசு எப்போதும் பாண்டியருக்கே ஆதரவாக இருந்ததாலும், இலங்கையை ஆள்பவன் தங்களுக்கு அச்சுறுத்தலாக வளர்ந்துகொண்டிருந்த பாண்டியர் குல இளவல் என்பதாலும், சோழர் தரப்பு மாகோனுக்கு ஆதரவளித்திருக்கலாம் என்பது வெள்ளிடைமலை. 

 

மூன்றாவது சான்று, மகாவம்சத்தின் படி (80:73), மாகோனோடு வந்த படைத்தளபதிகள், மானாபரணனின் தலைமையில், பராக்கிரம பாண்டியனை சித்திரவதை செய்து கொன்று, காலிங்க மாகனுக்கு புலத்திநகரியில் வீராபிஷேகம் செய்விக்கின்றார்கள். மானாபரணன் என்பவன் இலங்கையை முற்றுகையிட்ட படையினரின் தலைமைத் தளபதியாகக் காட்டப்படுவதால்,  மாகோன் வேறொரு படையின் துணையுடனேயே இலங்கை அரசை கைப்பற்றி இருக்கிறான் என்பது தெரிகிறது. தமிழ், கேரள வீரர்கள் அடங்கிய படையைக் அவனுக்கு வழங்கிய அந்த அரசு தென்னகத்தில் சோழ அரசு தவிர்ந்த வேறொரு பலம் வாய்ந்த அரசாக அக்காலத்தில் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. இவ்வாறு, சோழ அரசின் கீழ் இங்கு வந்து காலிங்க விஜயவாகுவுக்கு வீராபிடேகம் செய்த குலோத்துங்கசோழக் காலிங்கராயனே மகாவம்சத்தில் மானாபரணன் என்று சொல்லப்படுகின்றான் என்று கொண்டால் அது தவறாகாது..

 

இறுதிச் சான்று, குலோத்துங்கசோழக் காலிங்கராயன், கிவுலக்கடவலை சிவன் கோவில் தேவிக்கு கொடையாகக் கொடுப்பது, காலிங்கராயப் பற்றிலுள்ள மானாமத்த நாட்டிலுள்ள லச்சிகாமபுரத்தை. லச்சிகாமபுரம் என்பது இன்றைய கிவுலக்கடவலையை அண்மித்தே இருந்திருக்கிறது என்று கொண்டால், இக்கோவில் அமைந்துள்ள இன்றைய கோமரங்கடவலப் பிரதேசமே மானாமத்த நாடாக இருக்கவேண்டும். இந்த மானாமத்த நாடு. மாகோன் மற்றும் ஜயபாகுவின் படைகளின் கோட்டைகள் அமைந்திருந்த இடங்களில் ஒன்றாக மகாவம்சத்திலும் வருகிறது (மகாவம்சம் 83:17). எனவே மானாமத்த நாட்டில் கிடைத்த கல்வெட்டில் குறிப்பிடப்படும் காலிங்க விஜயபாகு, மாகோன் தான் என்று உறுதிப்படுத்திகொள்ளலாம். 

 

காலிங்க விஜயவாகு காலிங்க மாகோன் தான் என்பது உறுதியாவதால், மாகோன் படையெடுப்பில் சோழப்பேரரசின் பாரிய பங்களிப்பு இருந்தது என்ற செய்தி தெரியவந்திருக்கிறது. இதுவரை இலங்கை ஆய்வுலகில் அது ஒரு ஊகமாக இருந்ததே தவிர, உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விதத்தில் கிவுலக்கடவலைக் கல்வெட்டு இலங்கைத்தமிழர் வரலாற்றிலும் முக்கியமான இடமொன்றைப் பெற்று விடுகிறது. 

 

ஆனால் நாம் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டிய மேலும் சில விடயங்கள் இருக்கின்றன.  காலிங்க மாகோன்  ஏன் இங்கு கங்கராஜன் என்று அழைக்கப்படுகிறான்? முதலில் சாகசமல்லனுக்கும் பின்னர் மாகோனுக்கும் ஆதரவளித்து அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்குமளவுக்கு அப்போது அப்படி என்ன அரசியல் நெருக்குதல்கள் சோழர்களுக்கு இருந்திருக்கும்? 


 --------

முதல் ஐயத்தைப் பார்ப்போம். கங்கர் என்ற பெயர்கொண்ட இரண்டு வம்சத்தினர் இந்திய வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள். முதலாமவர் இன்றைய கன்னடப் பகுதியை ஆண்ட மேலைக்கங்கர்கள். இவர்கள் தாங்கள் சூரியவம்சத்தில் உதித்தவர்கள் என்று சொல்லிக்கொண்டதுடன், வடநாட்டு இக்ஷ்வாகுவின் சத்திரிய மரபுடன் தங்களை இணைத்துக்கொண்டார்கள். ஆனால் வரலாற்றாதாரங்களின் படி, இவர்கள் தமிழக கொங்குநாடு, கர்நாடக மற்றும் ஆந்திராவின் தென் எல்லைப் பகுதிகளிலேயே தோன்றியிருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது. பொபி 350 அளவில் ஆரம்பித்த மேலைக்கங்க அரசு,  100ஆம் ஆண்டளவில் இராஜராஜ சோழனால் கங்கபாடி வெல்லப்பட்டு சோழநாட்டுடன் இணைக்கப்பட்டதுடன் மறைந்துபோகிறது.

 

கங்கர் என்ற பெயர் கொண்ட இரண்டாவது குலத்தினர் இன்றைய ஒடிசா மாநிலத்தை மையமாக வைத்து ஆண்ட கீழைக்கங்கர்கள். இவர்கள் தங்களை சந்திர வம்சத்தில் தோன்றியதாகச் சொல்லிக்கொண்டார்கள். பொபி 500 அளவில் தோன்றிய கீழைக்கங்க அரசு பெரிதும் கலிங்க அரசு என்றே அறியப்பட்டதுடன், 1434இல் கஜபதி அரசின் கீழ் வீழ்ச்சி கண்டது. கீழைக்கங்க அரசு, சோழப்பேரரசுடனும் கொண்டும் கொடுத்தும் உறவைப் பேணிவந்தது. உதாரணமாக கலிங்க மரபில் தோன்றிய மாவீரனான அனந்தவர்மன் சோடகங்கனைச் (1078-1147) சொல்லலாம். இவன் இராஜசுந்தரி என்ற சோழ இளவரசியின் மகன் என்று சொல்லப்படுகிறான் (Singh 1973:69-71). சோழர், கங்கர் இணைப்பைச் சொல்லும் சோடகங்க என்ற இவனது பெயர் கவனிக்கத்தக்கது.

 

மாகோன் நமது கல்வெட்டில் கங்கராஜன் என்று அழைக்கப்படுவதையும் அவன் காலிங்க குலத்தவன் என்று சொல்லப்படுவதையும் ஒப்பிட்டு அவனை கீழைக்கங்க வம்சத்தில் தோன்றியவன் என்று கூற இயலும். ஆனால் இந்த முடிவுக்குப் போவதில் நம்மைக் குழம்பச் செய்வது என்னவென்றால் இலங்கையில் ஆட்சியுரிமை கோரிய மாகோனுக்கு முற்பட்ட சகல கலிங்க குலத்தாரும் தங்களை சூரிய வம்சத்தில் பிறந்தவர்களாகவே அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால் கலிங்க நாட்டின் கீழைக்கங்கர்கள் அவர்களின் கல்வெட்டுச் சான்றாதரங்களின் படி சந்திர வம்சத்தினர். அப்படியென்றால் இலங்கையை ஆள முயன்ற கலிங்க குலத்தினர், கீழைக்கங்கர்களாக இருக்க முடியாது.

 

ஆனாலும், நாம் சமாதானம் காண்பதற்கு இரண்டு ஊகங்கள் இருக்கின்றன. முதலாவது, ஒடிசாவின் கீழைக்கங்கர் போலன்றி, கர்நாடகத்து மேலைக்கங்கர்கள் தங்களை சூரியவம்சம் என்றே சொல்லிவந்திருக்கின்றார்கள். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் தங்கள் அரசு மறைந்த பின்னர், சோழரின் கீழ் சிற்றரசர்களாக விளங்கிய மேலைக்கங்கர்கள், தங்கள் கிழக்குப் பங்காளிகளான கலிங்கரின் பெயரையும் தரித்து தம்மை சூரியவம்சத்தினராக அடையாளப்படுத்தி இருக்கலாம். 

 

இரண்டாவது ஊகம், அரச குலங்கள் தங்கள் அரசுரிமையை உறுதிப்படுத்துவதற்காக பிற்காலத்தில் புனைந்துகொண்ட தொன்மக்கதைகள் தான் தாம் சூரியவம்சமா, சந்திரவம்சமா என்பதெல்லாம். கீழைக்கங்கரின் அரசக்கோவிலான பூரி ஜெகநாதர் கோவிலின் வரலாற்றைச் சொல்லும் இலக்கியமான மடல பஞ்சியின் படி, கலிங்கர்கள் சூரிய வம்சம் தான் என்பதால், கீழைக்கங்கர் சில இடங்களில் தங்களை சூரியவம்சமாக இனங்காட்டியிருக்கலாம் (Kanungo 2004:29). சூரியனின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான கோனாரக், கீழைக்கங்க மன்னனொருவனால் 13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது 

 

எது எவ்வாறோ, மாகோனின் பட்டமாக கங்கராஜன் என்ற பெயர் வருவதால் அவன் இரண்டில் ஒரு  கங்க வம்சத்தைச் சேர்ந்த கலிங்கன் என்பதை மட்டுமேனும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். கங்கர்கள் கங்கைக்கரையிலிருந்து வந்தோராக தம்மைச் சொல்லிக்கொண்டவர்கள். இலங்கையின் ஆறுகளையெல்லாம் கங்கை (மகாவலி கங்கை, களு கங்கை, வளவை கங்கை..) என்றும், வெள்ளத்தை கங்கைநீர் (கங்வதுற) என்றும் அழைக்கும் மரபு, சிங்களமொழியில் இன்றும் நீடிப்பதன் மூலம், கங்கர் குலத்தாரின் ஆட்சியின் செல்வாக்கை இலங்கையில் உய்த்துணர முடியும். 

 

இனி, இரண்டாவது கேள்விக்கு வருவோம். இலங்கை  சோழர்களிடமிருந்து கைநழுவிப் போனபின்னரும் அதன் அரசைக் கைப்பற்ற முயலும்படி சோழரைத் தூண்டியது என்ன? சாகசமல்லனுக்கும் மாகோனுக்கும் ஏன் சோழர் ஆதரவளிக்கவேண்டும்? 

 

இந்த இடத்தில் சோழர் - கலிங்கர் உறவையும், சிங்கள - பாண்டியர் உறவையும் நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அக்கால தென்னக வரலாறு நமக்கு தெட்டத்தெளிவாகப் புரிந்திருக்கவேண்டும். இன்றைய தமிழ் - சிங்கள இனத்தேசிய முரண்பாடுகளுக்குள் அடைத்துப் பார்த்துக்கொண்டிருந்தால் நமக்கு அடியும் விளங்காது, நுனியும் விளங்காது.

 

இலங்கை வரலாற்றை அறிந்தவர்களுக்கு சோழராட்சியின் பின்னர்  பொலனறுவையில் உச்சமடைந்த ஆரிய - கலிங்க குலச்சண்டை பற்றித் தெரியாமல் இருக்காது. பொலனறுவையின் அரியணையில் அமரத்தகுதியானவர் யார் என்பதில் ஆரியவம்சமும் கலிங்கவம்சமும் மாறிமாறிப் போட்டி போட்டு முரண்பட்டுக்கொண்டிருந்தன. இதில் ஆரியவம்சம் என்பது உரோகணத்தைச் சேர்ந்த சிங்கள அரச குலம். கலிங்கவம்சம் என்பது பொலனறுவையில் வாழ்ந்த கலிங்கநாட்டின் நேரடிக் குருதி அரசகுலம். இலங்கைத்தீவின் முதல் அரசன் விஜயன் காலத்திலிருந்து  கலிங்க குலத்துக்கே இலங்கை அரசு உரிமையானது என்று கோரியது கலிங்க வம்சம். இலங்கையின் பூர்விக மணவுறவில் வந்த ஆரியர்களான தங்களுக்கே பொலனறுவை மணிமகுடம் உரிமையானது என்று வாதாடியது ஆரியவம்சம்.  இலங்கையில் சோழராட்சி முடிவுற்ற 1070ஆம் ஆண்டிலிருந்து, பொலனறுவை அரசு மறைந்த 1236ஆம் ஆண்டு வரை, இந்த ஆரிய-கலிங்கப் பூசல் மிகச்சூடாக நிகழ்ந்ததற்கான சான்றுகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. 

 

இன்றைய தமிழ் - சிங்கள தேசியவாத முரண்களுக்குள் நின்றுகொண்டு பழைய வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது என்று கூறியிருந்தோமல்லவா? இந்த இரு குலங்களுக்குள், ஆரியவம்சம் பாண்டியரோடு நேரடி மணவுறவு கொண்டிருந்தது. எனவே அது சந்திரவம்சம். கலிங்கர்கள் தங்களை இக்ஷ்வாகு வம்சத்தினராக சொல்லிக்கொண்டனர். எனவே அவர்கள் சூரியவம்சம்.  தமிழ்நிலத்தின் சோழர்களும் தங்களை சூரியவம்சத்தினராக சொல்லிக்கொண்டவர்கள். இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருந்த ஆரிய - கலிங்கப்பூசல், என்பது தமிழ் நிலத்தில் நீடித்துக்கொண்டிருந்த  பாண்டிய - சோழப் பூசலின் இன்னொரு வடிவம் தான். 

 

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், சிங்களவர்களுக்கு இது தாய் - தந்தை இடையேயான சண்டை. இலங்கையின் முதல் மன்னன் விஜயனின் தாய்வழி அரசமரபு, கலிங்ககுலம். அவன் மணந்துகொண்ட முதல் பட்டத்தரசி பாண்டிமாதேவியின் அரசமரபு, ஆரியகுலம்.

 

என்ன, வியப்பாக இருக்கிறதா? மகாவம்சத்தில் இதெல்லாம் மிக வெளிப்படையாகவே பதிவாகி இருக்கிறது.  மகாவம்சத்தின் படி (59:41) முதலாம் விஜயபாகு மன்னனின் தங்கை மித்திரையின் கணவன் ஒரு பாண்டிய இளவரசன். குலம் தந்தை வழியில் கடத்தப்படுவதால் மித்திரையின் மகன்மாரும் பாண்டிய வம்சத்தினர் ஆகின்றனர். ஆனால் முதலாம் விஜயபாகுவும் அவன் மகன் விக்கிரமபாகுவும் கலிங்கவம்சம். 

 

மித்திரையின் மூத்த புதல்வனான மானாபரணன் விக்கிரமபாகுவிடம் போரில் தோற்றபின்னர் தனக்குள் எண்ணுவதாக ஒரு வரி மகாவம்சத்தில் வருகின்றது: நாங்கள் எல்லா அரச வம்சங்களிலும் தலையானதாக, உலகில் போற்றப்படுகின்ற தூய்மையான சந்திர வம்சத்தில் உதித்தவர்கள்.  நாங்கள் எங்கள் புறத்தோற்றத்தால் பொறாமைப்பட வைப்பவர்கள், தகுதியால் எங்கள் தனித்துவத்தைக் காட்டுபவர்கள், ஆயகலைகளில் நிபுணர்கள், யானை, குதிரை முதலியவற்றை கையாள்வதில் வல்லவர்கள், ஆனாலும் நாங்கள் ஒற்றை ஆளாய் நிற்கும் விக்கிரமபாகு முன் சண்டையில் மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டே இருக்கிறோம். இந்தக் கறையை அழிக்கத்தக்க ஒரு மகன் எனக்குப் பிறக்கமாட்டானா.!”  (62:5-10)

 

சூரியவம்சத்தில் வந்த கலிங்ககுலத்தை விட, சந்திரவம்சத்து ஆரியகுலத்தினரான தாங்கள் தகுதி, உரிமை என்பவற்றில் மேம்பட்டவர்கள் என்ற சிந்தனை மானாபரனனின் மனவோட்டத்தில் தொனிப்பதை நாம் அப்பட்டமாகக் காணமுடியும். இந்த மானாபரணன் தான் மகாவம்சத்தின் கதாநாயகர்களுள் ஒருவனான முதலாம் பராக்கிரமபாகுவின் தந்தை. ஆம், மகாவம்சத்தின் மகத்தான வீரர்களுள் ஒருவனான பராக்கிரமபாகு ஆரியகுலம் தான். சற்று விரக்திச்சிரிப்போடு சொல்லுவதென்றால், பாண்டிய வம்சம்!

 

பராக்கிரமபாகு பிறந்து சிலநாள்களிலேயே அவன் தந்தை மானாபரணன் இறந்துவிட, தாய் இரத்தினாவளி, பராக்கிரமபாகுவுடனும் அவனது இரு தமக்கையருடனும், தன் கணவனின் தம்பி கீர்த்திஸ்ரீமேகனிடம் தஞ்சம் புகுகின்றாள். அங்கு, தன் ஆரியக்குருதியை உறுதி செய்ய, பராக்கிரமபாகுவின் மூத்த அக்கையான மித்திரைக்கு தன் மகனை மணமுடித்து வைக்க முயல்கின்றான் கீர்த்திஸ்ரீமேகன். 

 

உறவுமுறையில் இது சிற்றப்பன் மக்களுக்கிடையிலான திருமணம். இலங்கையின் அரசவம்சங்களிடையே வேறெந்தக் காலத்திலும் இத்தகைய திருமணங்கள் இடம்பெற்றதாக மகாவம்சத்தில் குறிப்பில்லை.  ஆனால் இக்காலத்தில் ஆரிய-கலிங்கப் பூசலின் விளைவால் குருதித் தூய்மையை உறுதிப்படுத்த ஒரே குலத்தினர் -  குறிப்பாக ஆரிய குலத்தினர் -  தங்களுக்குள் முறைமீறி மணம்புரிந்துகொண்டார்கள் என்பது தெரிகிறது. பராக்கிரமபாகுவும் அவனது பட்டத்தரசியான லீலாவதியும் கூட சிற்றப்பன் மக்கள் தான். அதாவது, பராக்கிரமபாகுவின் தந்தை மானாபரணனும், லீலாவதியின் தந்தை ஸ்ரீவல்லபனும் உடன்பிறந்தவர்கள். 

 

பராக்கிரமபாகுவின் தாயான இரத்தினாவளி இதைக் கடுமையாக எதிர்த்தாள். அவள் முதலாம் விஜயபாகுவின் மகள். கலிங்ககுலத்து மாதரசி. அவள் தன் சொந்த மருமகனும் கலிங்ககுலத்தவனுமான கஜபாகுவையே தன் மூத்த மகள் மணக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். வரலாற்றில் இரண்டாம் கஜபாகு என்றறியப்படும் இவன், இரத்தினாவளியின் கூடப்பிறந்த அண்ணன் விக்கிரமபாகுவின் மகன். 

 

கஜபாகு மித்திரையை மணந்துகொண்டால், கலிங்ககுலக் கஜபாகு, ஆரியகுல மித்திரைக்கு இடம்கொடுத்ததாக ஆகும். அது கலிங்க ஆட்சியை விரும்பாத ஆரியர்களையும் அவனுக்குச் சார்பாக சாய்த்துவிடும்.  இது நடந்தால் தானும் தன் ஆரியகுலமும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுவிடுவோம் என்பது தெரிந்தே கீர்த்திஸ்ரீமேகன் மித்திரையை தன் மகனுக்கு மணமுடிக்க ஆசைப்பட்டிருக்கிறான். இதுவும் மகாவம்சத்தில் பதிவாகி இருக்கிறது (மகாவம்சம் 63:7-11). தன் அமைச்சர்களுடன் மந்திராலோசனை செய்யும் கீர்த்திஸ்ரீமேகன் இப்படிச் சொல்கிறான்: கலிங்கவம்சத்தில் வந்த  இளவரசர்கள் இலங்கைத்தீவின் ஆட்சியுரிமையை பலதடவை அனுபவித்திருக்கிறார்கள். கலிங்கமரபில் வந்த கஜபாகுவை மணப்பதற்கு இந்த அரசி தன் மகளை அனுப்பினால், அந்த உறவின் மூலம் அவன் வலுப்படுவான். [ஆரியகுலத்து] என் மகனோ அத்தனை ஆதரவையும் முற்றிலும் இழந்துவிடுவான். எனவே நம்மை வலுப்படுத்துவதற்காக இளவரசியை என் மகனுக்கே மணமுடிக்கவேண்டும்.

 

 

கலிங்ககுலத்துக்கு அணிகலன் போன்றவளும், இந்தத் திருமணத்தை சிறிதும் விரும்பாதவளுமான சூரிய வம்சத்தில் உதித்த அரசி [இரத்தினாவளி] அரசனிடம் இப்படி விடையளித்தாள்:  இயக்கர் அத்தனை பேரையும் அழித்து மனிதர் வாழத் தகுதியுள்ள நாடாக இலங்கைத்தீவை விஜயன் எனும் பேர்கொண்ட இளவரசன் மாற்றினான். அன்றிலிருந்து விஜயனின் பரம்பரையோடு திருமணம் மூலம் இணைந்தவர்கள், எல்லோரையும் விட அதிகமாக, கலிங்க வம்சத்தின் வாரிசுகளே. ஓரிருதடவை சந்திரவம்சத்தினரை மணந்தது தவிர, வேறுகுலத்து இளவரசர்களுடன் நாங்கள் மணம் மூலம் இணைவதும் வழக்கமில்லை. இவ்வாறிருக்க, உன் மகன் என்பதாலேயே ஒரு ஆரியகுலத்து இளவரசனை எப்படி நாங்கள் மணம்புரியச் சம்மதிக்க முடியும்?

 

இரத்தினாவளியின் வாதப்படி, இலங்கையை ஆளத்தகுதியானவர்கள் கலிங்கவம்சத்தின் வாரிசுகள் தான். மித்திரையின் தந்தைவழி ஆரிய அடையாளத்தைப் புறக்கணித்து அவளையும் தனது கலிங்கவம்சமாகவே இரத்தினாவளி கருதுகிறாள் என்பது இங்கு தெரிகிறது. அல்லது, தந்தைவழிச் சமூகமான ஆரியர் போலன்றி, கலிங்கர்கள் தாய்வழிச்சமூகமா என்பதையும் ஆராயவேண்டும். "நீங்கள் பாண்டியருடன் கலந்ததால் மட்டும் நீங்கள் முன்வைக்கும் ஆரியகுலம் முறையான சந்திரவம்சமாகிவிட முடியாது" என்பதே இரத்தினாவளியின் வாதத்தின் சுருக்கம். எது எவ்வாறோ, இறுதியில் இரத்தினாவளியின் தரப்பு தோற்கிறது. மித்திரை பலவந்தமாக இளைய மானாபரணனுக்கு மணமுடித்து வைக்கப்படுகிறாள் (மகாவம்சம் 63:11-17).

 

பொலனறுவையில் விஜயபாகு, விஜயபாகுவின் தம்பி ஜயபாகு, விஜயபாகு மகன் விக்கிரமபாகு, அவன் மகன் கஜபாகு என்று முதலாம் பராக்கிரமபாகு வரை, கலிங்ககுலமே புலத்திநகரி அரியணையை அலங்கரித்துக்கொண்டிருந்தது. ஆனால் ஆரியகுலத்தில் உதித்த பராக்கிரமபாகுவுக்குப் பின்னர் நிலைமை மாறியது. அரியணையில் அமர்வது யார், எந்தக் குலத்தவர் என்ற போராட்டம் உச்சத்தை அடையத் தொடங்கியது. 

 

கலிங்க குலத்தினர் கலிங்க நாட்டில் பிறந்த நேரடி கலிங்கக்குருதி அரசர்களை   இங்கு அழைத்து முடிசூட்டுவதில் ஆர்வம் காட்டினர். நிசங்கமல்லன், சாகசமல்லன் போன்றவர்கள் இத்தகையவர்கள். இதுபோலவே ஆரியகுலத்தினர் தங்கள் நேரடிக்குருதியினரான பாண்டியரின் கீழ் ஆளப்படுவதை விரும்பினார்கள். அப்படி வந்தவனே மாகனால் கொல்லப்பட்ட பராக்கிரம பாண்டியன்.

 

தங்கள் குலத்தில் தகுந்த அரசன் இல்லாமையால், ஆரியகுலத்துக்குச் சார்பானவர்கள் பராக்கிரமபாகுவின் அரசி லீலாவதியின் பெயரில் அடிக்கடி அரசைக் கைப்பற்ற முயன்றுகொண்டிருந்தார்கள். எனவே லீலாவதியால் விட்டு விட்டு மூன்று தடவை அரசாள முடிந்தது. ஆரியவம்சத்து லீலாவதியைப் போலவே, கலிங்கவம்சத்தினர் நிசங்கமல்லனின் அரசி கல்யாணவதியைப் பயன்படுத்தி அரசாங்கம் நடாத்திக்கொண்டிருந்தனர். 

 

கலிங்க குலத்துக்குள்ளேயே பல்வேறு தரப்புக்கள் பிரிந்து அரசுரிமைக்காகப் போராடியதையும் மகாவம்சம் சொல்கிறது. உதாரணமாக அடுத்தடுத்து ஒருவரையொருவர் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய நிசங்கமல்லனின் மகன் வீரபாகு, வீரபாகுவின் மாமன் இரண்டாம் விக்கிரமபாகு, விக்கிரமபாகுவின் தங்கை மகன் சோழகங்கன் என்போரைக் குறிப்பிடலாம். மோதல் உச்சத்தை அடைந்தபோது, ஆரிய - கலிங்க வம்சங்களில் அடங்காத, குலிங்கர், சோழர் முதலிய குலத்தாரும் அரசாட்சியில் பங்கெடுக்குமளவு பொலனறுவை அரசு, ஸ்திரமற்றதாக நீடித்து வந்தமை தெரிகிறது. 

 

எனில் இதில் சோழர்களின் பங்கு என்ன? 10ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியனின் முடியும் வாளும் பாதுகாப்புக்காக உரோகண அரசன் மகிந்தனிடம் ஒப்படைக்கப்பட்டதன் காரணம் அவர்கள் இருவருமே ஒரே ஆரியகுலத்தினர் என்பதால் தான். முதலாம் நூற்றாண்டில் ஐந்து பாண்டியர், ஐந்தாம் நூற்றாண்டில் ஆறு பாண்டியர் என்றெல்லாம் வரிசையாக பாண்டியர் இலங்கை வந்து இங்கு முடியுரிமை கோரியதற்கு இந்த ஆரிய குல உறவே அடிப்படையாக இருந்திருக்கவேண்டும். ஏனெனில், பாண்டிய வம்சத்துக்கு சிங்கள அரசை ஆளும் அதிகாரம், முதலாவது சிங்கள வேந்தன் விஜயனின் பட்டத்தரசி பாண்டிமாதேவி மூலம் கிடைத்த ஒன்று.

 

எனவே,   பொலனறுவையில் ஆரியகுலம் முடி தரிப்பது என்பது, பாண்டிய அரசு அங்கு முடிதரிப்பதாகவே கொள்ளப்படும். இது மதுரையை மீட்கப் போராடிக்கொண்டிருக்கும் பாண்டியர்களுக்கும் நல்ல வாய்ப்பாகப் போய்விடும். அப்படி ஆரிய அரசனான பராக்கிரமபாகு கோலோச்சியபோது தான்  பாண்டியர்களுக்கு ஆதரவான சிங்களப் படையொன்று சோழரை எதிர்த்துத் தமிழகம் சென்றிருந்தது. 

 

எனவே பொலனறுவை அரசை குழப்பநிலையில் வைத்திருக்கவே சோழ அரசும் விரும்பியிருக்கும். ஆரிய கலிங்க குலப்பூசல் இதற்கொரு வாய்ப்பாகப் போயிருக்கிறது. இலங்கை விடயத்தில் கலிங்கரை தன் பக்கம் வளைத்து ஆரிய குலத்துக்கெதிராக தொடர்ச்சியாக  அவர்களைப் போராடவைக்கும் முயற்சியிலேயே சோழம் ஈடுபட்டிருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.  கலிங்கர்கள் சோழர்களைப் போலவே தங்களைச் சூரியவம்சம் என்று சொல்லிக்கொண்டதும்,  கீழைக்கங்கர்களுடன் சோழர்களுக்குப் பிற்காலத்தில் மணவுறவுகள் ஏற்பட்டதும்,  இந்தக் கலிங்கச்சார்புக்கான துணைக்காரணங்களாக இருக்கலாம். 

 

ஆரியகுலத்து லீலாவதி பொலனறுவையை ஆளும் போது, கலிங்க குல சாகசமல்லனை சோழர்கள் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வரவேற்று இலங்கைக்கு அனுப்பி வைத்தது பாண்டியர்க்கு ஆரியரின் துணை கிடைக்கக்கூடாது என்பதால் தான். அதே சோழர்கள் அதே லீலாவதி இரண்டாம் தடவை முடிசூடியபோது, தாங்களே நேரடியாகக் களத்தில் இறங்கி அணிகங்கன் எனும் சோழத்தளபதியை அனுப்பி ஆரியகுலத்தின் ஆட்சியைக் கவிழ்க்கிறார்கள். மூன்றாவது தடவை சுந்தரபாண்டியன் மதுரையை மீட்பதில் தன் உச்சவிசையைப் பயன்படுத்திக்கொண்டிருந்த போதும் இதே சூழ்ச்சி நடந்தேறியிருக்கிறது., இலங்கையில் மூன்றாண்டுகள் அமைதியாக ஆட்சிபுரிந்து கொண்டிருந்த பராக்கிரமபாண்டியன், மதுரைச் சுந்தரபாண்டியனுக்கு படையுதவி புரியலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் தான், மாகோனுக்குத் துணையாகப் பெரும்படையை அனுப்பி, ஆரியகுலம் வேரறுக்கப்படுவதற்கு சோழம் பங்காற்றியிருக்கிறது. எவ்வாறெனினும், பாண்டிய அரசு பழையபடி தலைநிமிர்வதை சோழர்களால் முற்றாகத் தவிர்க்கமுடியவில்லை. 

 

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, பொலனறுவை அரசில் ஆரியர்களை விட கலிங்கர்களே பலம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.  ஆனால் கலிங்க மாகோனின் வருகையுடன் கலிங்ககுலத்தின் ஆதிக்கம் சரிந்தழிகின்றது. கலிங்கத்தின் எதிரியான ஆரியம் மேலெழுவதை பிற்காலத்தில் தென்னிலங்கையில் முதலாம் புவனேகபாகுவின் வரலாற்றில் காண்கிறோம். மகாவம்சம் உண்மையான ஆரியன் அல்லன் என்று தொண்டையைச் செருமும் ஆரியச்சக்கரவர்த்தியின் வருகையும், யாழ்ப்பாண அரசின் மலர்ச்சியும் இதே காலத்தில் தான் வட இலங்கையில் நிகழ்கிறது. இலங்கைத்தீவின் வடக்கும் தெற்கும் ஆரிய வம்சங்கள் பெருமிதத்துடன் நிலைபெறுகின்றன. கலிங்க வம்சம் அதன் பிறகு இலங்கையில் தலைநிமிரவே இல்லை. 

 

இப்படி, சோழரும் கலிங்கரும் ஒன்றிணைந்து, பாண்டியர் - சிங்களர் கூட்டை  முறியடிக்க முயன்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான புதியதோர் சான்று கிவுலக்கடவலைக் கல்வெட்டின் வழியே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சோழர், பாண்டியர், சிங்களர், ஆரியர், என்ற பதங்களுக்கெல்லாம் இன்றுள்ள பொருள் வேறு.  குறுகிய கண்ணோட்டத்துடன் அவற்றைப் படித்து   தமிழரும் சிங்களவரும்  அடையும் இனப்பெருமிதமும் வேறு. இடையே எண்ணூறாண்டுகள் இடைவெளியில் அத்தனையையும் புரட்டிப் போட்டு கெக்கலி கொட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறது காலம்.  வரலாற்றின் அபத்தத்தை எண்ணும் போதெல்லாம் வெறும் பெருமூச்சன்றி வேறெதுவும் எஞ்சுவதில்லை.



(கனடாவிலிருந்து வெளியாகும் "தாய்வீடு" சஞ்சிகையின் பெப்ரவரி மாத இதழில் வெளியான கட்டுரையின் திருத்திய வடிவம். தாய்வீடு இதழை இலவசமாக தாய்வீடு வலைத்தளத்தில் படிக்கலாம். இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருந்த போது, ஆக்கபூர்வமான உரையாடல்கள், கருத்துப்பரிமாற்றங்கள் மூலம், பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருந்த வைத்தியகலாநிதி .ஜீவராஜ்பேராசிரியர் சி.மௌனகுருதிரு சொ.பிரசாத் ஆகியோருக்கு என் நன்றிகள்.)


அடிக்குறிப்புகள்

[1] பார்க்க, புஷ்பரட்ணம் 2021. கல்வெட்டில் பேராசிரியர் இரகுபதி அவர்களால் “திருக்கோயிலையுடைய” என்று வாசிக்கப்பட்ட இடத்தில் “திருக்கோணமாமலையுடைய” என்ற வாசகமும் பொருந்தும். அப்படி இனங்காணக்கூடிய சிதைந்த எழுத்துக்களே கல்வெட்டில் தென்படுகின்றன. தகவல்: வைத்தியகலாநிதி.த.ஜீவராஜ்

[2] பேராசிரியர் புஷ்பரட்ணம் இதை லச்சிகாதிபுரம் என்று வாசிக்கிறார். பார்க்க:மேலது.

[3] மானாமத்[து] என்று வாசிக்கப்பட்டது. இலக்கியங்களில் மானாமத்த என்று சொல்லப்படுகின்றது. மகாவம்சம் 83:17

[4] පටුන, paṭuna – City, Content, Contents, Port, Sea Port, Table of Contents.

Madura Sinhala - English Online Dictionary, http://www.maduraonline.com


உசாத்துணைகள்

·       இந்திரபாலா, கா. (2021.11.28). “கலிங்க மாகன் பற்றிய கல்வெட்டு முக்கியத்துவம் பெறுவது ஏன்?”, ஈழநாடு  வாரமலர், பப:8,18

·       புஷ்பரட்ணம், . (2021.11.22). “இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத தமிழ்க்கல்வெட்டு கண்டுபிடிப்பு”, வீரகேசரி, http://www.virakesari.lkஇலிருந்து மீள்விக்கப்பட்டது.

Dharmakirti, S. (2020). The Theravāda Lineage: The Nikāya Saṅgrahaya or Sāsanāvatāra (Anandajothi Bhikku Rev. ed. and C.M.Fernando Trans.) Anandajothi Bhikku. (Original Work Published R.W.F.Gunawardhana Rev. ed. on 1908).

Kanungo, H. (2004). "The Origin of Ganga Dynasty: A New Insight". Orissa Historical Research Journal, 47:2, pp.15-33.

Ranawella, G.S. (2007). “95.2 Kevulgama Pillar Insciption”, Inscriptions of Ceylon, Volume VI, Sri Lanka: Department of Archaeology. pp.222-23.

Singh, D. (1973). The History of Eastern Ganga Dynasty circa 1038 - 1238 AD [Doctoral Thesis, University of London]. University of London. https://eprints.soas.ac.uk/29002/1/10673246.pdf

Wickramasinghe, D.M.D.Z. (1997). “No.86 Polonnaruwa: Slab Inscription of Sāhasamalla”, Epigraphia Zeylanica Volume III, New Delhi & Madrs: Asian Educational Studies. pp. 219


0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner