கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டு



ஒரு கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டு.
எப்போது என் கையில் வந்தது
என்று தெரியவில்லை
கிழிந்திருக்கிறது என்று
கடைக்காரன் திருப்பித்தந்தான்.
அவனிடம் தான் இறுதியாக
பொருள் வாங்கியிருந்தேன்.
அவனே தான் அதை
எனக்கு தந்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எப்படி
அத்தனை விரைவாக
அது கிழிந்திருப்பதை அறிந்தான்?

அதை நினைவு கூர்வதற்குள்
நெடுந்தொலைவு வந்திருந்தேன்.
இந்த ஐநூறு ரூபாய்
மிகவும் உறுத்துகிறது.
வீதியில் அழுதபடி தொடர்ந்து வந்து
பிச்சை கேட்கும் குழந்தை போல.
பேருந்தில் அருகே வந்து நின்று கொண்ட
அழுக்கான முதியவர் போல.
எத்தனை சீக்கிரம் விலகுகிறோமோ
அத்தனை சீக்கிரம் ஆறுதல்.

இரண்டு தடவை அதன் பிறகு
வேறு கடைகளுக்கு சென்றேன்
இரண்டு தடவையும்
அதை கொடுக்க முயன்று தயங்கி
மீண்டும் பையிலே வைத்துக் கொண்டேன்
கிழிந்த நோட்டை நீட்டுவது
அத்தனை பெரிய குற்றமா?
அல்ல;
அதை தெரிந்து கொண்டே கொடுப்பது கூசச் செய்கிறது

பணப்பையை தொடும் போதெல்லாம்
அதன் நினைவே வந்தது.
அதை மறக்க முயன்றேன்.
அப்படி ஒரு பணநோட்டு
என்னிடம் இல்லை என்று
என்னை நம்பவைக்க முயன்றேன்
என் பணப்பையில்
கை தொடாத பகுதியில்
அதை மறைத்துக் கொண்டேன்
ஆம். இப்போது கிழிந்த பணநோட்டு எதுவும் என்னிடம் இல்லை.

இன்று உணவகத்தில்
உணவுண்டு எழும்போது
பணப்பை தவறி வீழ்ந்து விட்டது
ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு நழுவிப் பறந்தது
கட்டணச்சீட்டுடன் வந்த பரிமாறுநர்
புன்னகைத்த படி அதை வாங்கிச் சென்று விட்டார்.

நினைவு வந்துவிட்டது.
அந்த நோட்டு தான்.
புத்தம்புதியது.
மூலையில் அதே சிறு கிழிசல்.
நன்று.
தானே நழுவி விலகிச் சென்று விட்டது.

ஏனோ நிம்மதிக்கு பதில்
சஞ்சலத்தை அடைந்தேன்.
அது என்னால் வெறுக்கப்பட்டது
ஐநூறு ரூபாய் என்பதால் தானே?
ஒரு கிழிந்த ஐம்பது ரூபாய் நோட்டுக்கும்
கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டுக்கும்
எத்தனை வித்தியாசம்?
கிழிந்த ஐம்பது ரூபாய் நோட்டு
கையில் இப்படி பாரமாக இருப்பதில்லை.
இத்தனை அசௌகரியத்தை
யாருக்கும் கொடுப்பதும் இல்லை.

நம்மை சுற்றி நிறைய இருக்கின்றன
புதிதாய் இருந்தும்
பெறுமதியாய் பிறந்தும்
யாரோ ஒருவரின் கவனயீனத்தால்
மதிப்பிழந்த ஐநூறு ரூபாய் நோட்டுகள்
கற்றவர்களாய் இருந்தும்
நல்லவர்களாய் இருந்தும்
சந்தர்ப்பத்தின் சிறு தவறால்
மதிப்பிழந்த மனிதர்கள்.

நழுவிப் பறந்த நோட்டு போல
தன்னை வெறுக்கும் உலகிடமிருந்து
அவர்களாகவே விலகிக் கொள்கிறார்கள்
பெருந்தன்மையுடன்,
அல்லது
புறக்கணிப்பின் கண்ணீருடன்.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner