எம்.ஐ.எம்.சாக்கீரின் "சம்மாந்துறை - பெயர் வரலாறு"

பொதுவாக இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றெழுத்துகளில் மூன்று விதமான குறைபாடுகள் இருப்பதுண்டு. ஒன்று, அது கருத்துவாதி ஒருவரால் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்படுவது. வரலாற்றாளர் தனது இனம் சார்ந்ததாக, அல்லது மொழி சார்ந்ததாக, அல்லது மதம் சார்ந்ததாக, சில முன்முடிவுகளை எடுத்துக்கொண்டு,அதை நிரூபிப்பதற்காக வரலாற்றைக் குறுக்குவது, திரிப்பது முதலான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்த வகை. இப்படிச் சொல்வதை, மதம், இனம், மொழி சார்ந்த எல்லா வரலாறுகளுமே குறைபாடானவை என்று சொல்வதாகக் கொள்ளக்கூடாது. அத்தகைய வரலாறுகளை எழுதும் ஆசிரியர்கள், சில இடங்களில் என்றாலும், நடுநிலைப் பார்வையைக் கொண்டிருக்க முயல்வதில்லை என்பது தான் இப்படிச் சொல்வதன் சரியான பொருள். 

இரண்டாவது குறைபாடு தொன்மங்களை வரலாறு ஆக்குவது. தொன்மங்கள் (அதாவது ஐதீகங்கள், நம்பிக்கைகள், செவிவழிக் கதைகள்) எல்லாப் பண்பாடுகளிலுமே தவிர்க்க முடியாத இடம் வகிப்பவை. ஆனால், தொன்மங்களை அப்படியே நடந்தவை என்று நம்புவதும், அவை மறுக்கமுடியாத வரலாற்றுச் சம்பவங்கள் என்று கொள்வதும் வரலாற்றுக்கு இழைக்கப்படும் அநீதி. தொன்மத்தில் கூறப்படும் வரலாறு என்ன என்பது நன்கு பகுப்பாயப்பட்ட பின்னரே, அதை வரலாறாக ஏற்கவேண்டும். ஆனால், யாதொரு சரித்திர முக்கியத்துவமும் இல்லாத தொன்மங்களை வரலாறு என்று நிரூபிக்க முனைவதிலேயே நம்மில் பலர் பெருமளவு காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். 

உதாரணமாக, சீதையை இழந்து விட்டதால் வெகுண்ட இராமர் கடலைச் சுட்டிக்காட்டி “அந்த மான் நிக்கோ பார்” என்று கேட்டாராம், அதனால் தான் அந்தத் தீவுகளுக்கு அந்தப்பெயர் வந்ததாம் என்பது சுவையான ஒரு தொன்மம். இந்தக் கட்டுரையாளனின் பிறந்தகமான அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் கிராமத்துக்கும் இப்படி ஒரு தொன்மம் கூறப்படுவதுண்டு. அதாவது இராம இலட்சுமணர்களை வெல்வதற்காக நிகும்பலை யாகம் செய்ய முயன்ற இராவணன் மகன் இந்திரசித்து, இங்கிருந்த சிவன் கோவிலில் அடைக்கலம் புகுந்ததாகவும், இராமர் இலட்சுமணரைப் பார்த்து “தம்பி, இழு வில்லை” என்று சொல்லியதை அடுத்து இலட்சுமணன் அம்பால் இந்திரசித்து கொல்லப்பட்டதாகவும், எனவே தான் இந்த ஊர் “தம்பிஇழுவில்” என்றானது என்றும் ஒரு கதையை சொல்லுவார்கள். 

இந்த இரு தொன்மங்களுமே வேடிக்கைத் தன்மை வாய்ந்தவை, கேட்கவும் இரசிக்கவும் அருமையானவை. ஆனால், இந்த இரு கதைகளையும் வரலாற்று ஆதாரமாகக் கொள்ளமுடியுமா? வெறும் தொன்மங்களை ஆதாரமாக வைத்து மேற்குறிப்பிட்டு தீவுகளும், ஊரும் இராமாயணத்தோடு தொடர்புடையவை என்று சொல்லமுடியுமா? எத்தனை பெரிய அபத்தம் அது? 

மூன்றாவது குறைபாடு, காலவரிசை தொடர்பானது. நடந்து முடிந்த விடயமொன்று, இரு வேறு மூலங்களில் இருவேறு விதமாகச் சொல்லப்பட்டால் அதில் காலத்தால் முந்தையதையே வலுவான ஆதாரமாகக் கொள்ள வேண்டும். காலத்தால் பிற்பட்ட விடயத்தில் பல இடைச்செருகல்களும் பின்னிணைப்புகளும் இருக்கலாம். உதாரணமாக மீண்டும் இராமாயணத்துக்கே போவோம். வரலாற்று ரீதியாக இராமன் என்ற அரசனின் வாழ்வை அறிய சரியான மூலம் வடமொழி வான்மீகி இராமாயணமா, அதற்கு பல நூற்றாண்டுகள் பிந்தைய தமிழ் கம்ப இராமாயணமா என்று கேட்டால், அக்கேள்விக்குப் பதில், வடமொழி வான்மீகி இராமாயணம் என்பதே. ஆனால், நம்மவர்கள், அவை இரண்டுக்கும் இடையேயுள்ள காலவேறுபாட்டைக் கருத்தில் கொள்ளாமல், இரண்டிலுள்ள விடயங்களையும் ஒன்றாகக் கூறி குழப்பி அடித்துக் கொள்வார்கள். 

ஆக, இந்த மூன்று குறைபாடுகளும் இல்லாத, அல்லது இந்த மூன்று குறைபாடுகளைத் தவிர்க்க முயன்ற ஒரு ஆய்வையே திருத்தமான வரலாற்று ஆய்வு என்று சொல்லவேண்டும். இது மூன்றையும் கருத்தில் எடுக்காத எந்தவொரு ஆய்வும் மீள்பரிசீலனைக்குரியதே. 

இத்தகைய ஒரு தெளிவை இந்தக் கட்டுரையாளன் பெற்றுக்கொள்வதற்கு நிறைய வாசிக்க வேண்டி இருந்தது, நிறைய பக்குவப்பட வேண்டியிருந்தது. ஆனால், இத்தகைய தெளிவை வெறும் இருபத்தொரு வயதிலேயே பெற்றுக்கொள்வதும், ஒரு நூலொன்றை எழுதி வெளியிடுவதும், எத்தகைய ஒரு சாதனை? அதுவும், கிழக்கிலங்கையில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன் இத்தகைய பரந்த அறிவைப் பெற்றுக்கொள்வதென்பது எத்தகைய மகத்தான தேர்ச்சி? 

அந்த இளம் ஆய்வாளர், சம்மாந்துறையைச் சேர்ந்த மொஹமட் இப்ராஹிம் மொஹமட் சாக்கீர். இருபத்தொரு வயதில் அவரால் எழுதப்பட்டு சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்டத்தால் வெளியிடப்பட்ட நூல் “சம்மாந்துறை - பெயர் வரலாறு”. 


சம்மாந்துறை கிழக்கிலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நகரம். ஐரோப்பியர் ஆவணங்களில் “மட்டக்களப்பு” என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்ட பண்டைய மட்டக்களப்புத் தேசத்தின் தலைநகர், சம்மாந்துறையை அண்டித்தான் அமைந்திருந்தது. சம்மாந்துறை, அந்தத் தலைநகரின் நீர்ப்போக்குவரத்துக்கான துறையாகவும், வர்த்தகக் குடியிருப்பாகவும் அமைந்திருந்தது. அத்தகைய பழம்பெரும் நகரின் இடப்பெயராய்வே இந்நூலின் பிரதான பேசுபொருள். 

நூலின் ஆரம்பத்தில் அமைந்த முக்கியமான சம்மாந்துறை ஆளுமைகளின் விதப்புரைகள், க.பொ.த உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு சாக்கீர் செய்த ஆய்வுகளையும், அந்த ஆய்வுகளை கண்டு அவர்கள் கொண்ட வியப்பையும், அந்த ஆய்வுகளிலுள்ள பக்கச்சார்பின்மையையும் புகழ்வனவாக அமைந்துள்ளன. 

உள்ளே நூலானது, இடப்பெயர் ஆய்வு, சம்மாந்துறை, பின்னிணைப்புகள் ஆகிய முப்பெரும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அத்தியாயங்களும் தோண்டத் தோண்டத் தெவிட்டாத தகவல் சுரங்கங்கள் என்பதே அவற்றின் அழகு. 

இடப்பெயர் ஆய்வு எனும் முதல் அத்தியாயத்தில், இடப்பெயர்கள் இயற்கையையும் ஆட்பெயரையும் அடிப்படையாக வைத்து எப்படித் தோன்றுகின்றன என்பது விரிவாக ஆராயப்படுகின்றது. “தொல்பொருளாய்வில் காணப்படாததும் வரலாற்றுச் சான்றுகளில் திரிபடைந்து அல்லது புறக்கணிக்கப்பட்டுக் காணப்படுவதுமான மொழியியற் செய்திகளை இடப்பெயர்கள் முழுமையாகத் தருகின்றன”, “வரலாறு மௌனமாகும் போது இடப்பெயர்கள் வாய்திறந்து பேசக்கூடும்” முதலான சிறப்பான மேற்கோள்களுடன் இவ்வத்தியாயம் விறுவிறுப்பாக நகர்கிறது. 

இரண்டாவது அத்தியாயமான “சம்மாந்துறை”, பண்டைய கிழக்கிலங்கை வரலாற்றிலும், வாணிப உலகிலும் அது பெற்றிருந்த முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டியபடி ஆரம்பமாகிறது. சன்னாதிபுர ராசன் (ஜனநாதபுரம் – இன்றைய பொலனறுவை) காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் “கலியாணச்செப்பு” எனும் கவிப்பாடல், அதன் ஆரம்பத்தில் அமர்ந்து ஆர்வத்தைக் கூட்டுகிறது. 

சம்மாந்துறை நாமவியல் எனும் அடுத்த பகுதி, சம்மாந்துறையின் சொற்பிறப்போடு இணைக்கப்படும், சம்பா, செம்மண், சாமான், சம்மான்காரர், சம்பான் ஆகிய சொற்களை விரிவாக ஆராய்கின்றது. மட்டக்களப்பு மான்மியத்தின் படி, பழைய மட்டக்களப்பு நகர், வாவியின் தென் அந்தத்திலிருந்தது என்பது சுட்டிக்காட்டப்பட்டு, இன்றும் சம்மாந்துறையிலுள்ள “மட்டக்களப்புத்தரவை” எனும் கிராம சேவகர் பிரிவும் வேறு பல வரலாற்றாவணங்களும் சான்று காட்டப்படுகின்றன. 

அடுத்து, சம்மாந்துறையிலுள்ள “துறை” என்பது, இன்று சம்மாந்துறையின் வடக்கே உள்ள “அல்லை” எனும் களப்புப் பகுதி தான் என்பது, புவியியல் சான்றுகளின் மூலம் இனங்காட்டப்படுகின்றது. சம்மாந்துறையின் போக்குவரத்து மற்றும் வணிக முக்கியத்துவத்தை நிரூபிக்க வீரமுனை சிந்தாத்திரைப் பிள்ளையார் ஆலயம், சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் என்பன சார்ந்த தொன்மங்கள் வரலாற்றுப் பார்வையில் எடுத்தாளப்படுகின்றன. கூடவே, இலங்கை வரலாற்றில் தவிர்க்கமுடியாத இடம்பெற்ற பிலிப்பஸ் பால்டியஸ், டி ஒய்லி, ஸ்பில்பேர்கன், ஆர்.எல்.புரோகியர், தொலமி உள்ளிட்ட ஐரோப்பியப் பயணிகள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளில் சம்மாந்துறை இடம்பெற்றுள்ளமை சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது. 
நூலாசிரியர் எம்.ஐ.எம்.சாக்கீர்

இனி, சம்பா, செம்மண், சாமான், சம்மான் முதலிய பெயர்கள் எவ்வாறு சம்மாந்துறை என்ற பெயரோடு பொருந்திப்போகின்றன என்பது தர்க்கபூர்வமாக ஆராயப்பட்டு, 'சம்மான் என்ற கந்தோனிய மொழிப் பெயரே சம்மாந்துறைக்குப் பெயர் தந்திருக்கவேண்டும்' என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படுகின்றது. இந்த நிரூபணத்துக்காக பயன்பட்டுள்ள பிறமொழி ஆவணங்கள், இணைக்கப்பட்டுள்ள படங்கள், தரப்பட்டுள்ள சான்றுகளைக் காணக் காண நமக்கும் வியப்பில் விழிகள் விரிகின்றன. 

அதில் குறிப்பிடத்தக்க ஒன்றை சுட்டிக்காட்டலாம். கிழக்கிலங்கைக்கே சிறப்பான குடிவழிப் பாரம்பரியத்தை இன்றும் கட்டிக்காக்கும் மண் சம்மாந்துறை. இஸ்லாமியக் கிராமங்களிலே அதிகளவு குடிகளைக் கொண்ட ஊரான சம்மாந்துறையில், “சம்மானோட்டிகுடி” என்ற குடியை இன்று அவதானிக்கமுடியவில்லை. “ஆனால் இன்றைய 'சேர் முஹம்மது குடி'யின் பழைய பெயர் சம்மானோட்டிகுடி” என்பதை நூலாசிரியர் விவரிக்கும் பாங்கும், அவரது ஆய்வுத்திறனுக்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப் போதுமான ஒரு சான்று. 

பின்னிணைப்புகள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் கிழக்கிலங்கைப் பண்பாட்டு விரும்பிகளுக்கும் அற்புதமான விருந்தாக அமையக்கூடியவை. ஓவ் கெட்டே எனும் டானிஷ் பயணியின் சம்மாந்துறையூடான கண்டிப் பயண வரைபடம், சம்மாந்துறை முஸ்லிம்கள் மத்தியில் இன்றுள்ள குடிகள், சம்மாந்துறையின் காலவரிசைப்படுத்திய பெயர் அட்டவணை, கவி முதலிய கிராமிய இலக்கியங்களில் சம்மாந்துறையின் பெயர், அங்குள்ள ஏனைய இடப்பெயர்கள் என்பன மானுடவியலாளரும் சமூகவியலாளரும் மேலும் மேலும் மூழ்கி முத்தெடுக்கக்கூடிய அற்புதமான ஆய்வுக் கடல். 

தொடக்கத்திலேயே கூறியது போல, ஒரு ஆய்வு, பக்கச்சார்பின்மை - தொன்மங்களை பகுப்பாய்வுக்குட்படுத்தல் - காலவரிசைப்படுத்தல் என்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் போது, அது கூறும் வரலாறு முழுமையானது, குறைகளேதும் அற்றது என்று உறுதியாகச் சொல்லலாம். அந்த விதத்தில் சம்மாந்துறையின் இடப்பெயரை பல்வேறு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தும் இச்சிறுநூல் ஆய்வுலகில் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக்கொள்கிறது. அதை மிக இளம்வயதிலேயே எழுதிச் சாதித்ததன் மூலம் நண்பர் சாக்கீர் எதிர்கால வரலாற்றுலகில் தனக்கெனக் காத்திருக்கும் இன்றியமையா இடத்தையும் சுட்டிக்காட்டுகிறார். இதைப் பின்பற்றி, சம்மாந்துறை மாத்திரமன்றி இலங்கை தொடர்பான, இலங்கை முஸ்லீம்கள் தொடர்பான, விரிவான வரலாற்று நூல்கள் எழ வேண்டும். ஆசிரியரும் அதில் தன் பங்களிப்பைத் தொடரவேண்டும். அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அப்பெருஞ்செயலை இயற்றுவதில் அவருக்குத் துணையிருக்கட்டும். 

நூல்: சம்மாந்துறை - பெயர் வரலாறு 
ஆசிரியர்: எம்.ஐ.எம்.சாக்கீர் 
வெளியீடு: சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்டம் 

[அரங்கம் பத்திரிகையின் 48ஆம் இதழில் (24.01.2019) வெளியான கட்டுரை. ]

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner