ஆழ்ந்த இரங்கல்கள், RIP!

பிறந்த நாளுக்கு யாரும் வாழ்த்துச் சொன்னால், அதற்கு 'நன்றி' என்று பதில் சொல்லாமல் போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  நான் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே நடந்துகொண்டிருக்கிறேன்.  அதற்குக் காரணம்  இருக்கிறது. நான் நன்றி சொல்லாமல் கடந்து செல்கின்ற பிறந்தநாள் வாழ்த்து இது தான். "hbd"

பிறந்தநாள் ஒவ்வொன்றும் நாம் கடந்த பாதையையும் கடக்கப் போகும் பாதையையும் நினைவுறுத்தும் மைல்கற்கள் என்பதாலேயே முக்கியம் பெறுகின்றன. அதில் உண்மையான அன்புடனும், மனம் நிறைந்த கனிவுடனும் வாழ்த்தும் ஆசியும் தெரிவிப்போர் என்றென்றும் நம் நன்றிக்குரியவர்கள் தான். நான்கைந்து நாள் கடந்து சென்ற பின்னாலும், பேஸ்புக்கிலோ கைபேசியிலோ வாழ்த்துச் சொன்ன யாரையுமே தவறவிடாமல் நன்றி சொல்வதே என் வழக்கம். உண்மையைச் சொல்லப்போனால், பேஸ்புக்கில் பிறந்தநாள் தென்படுவதை முடக்கி வைத்திருப்பதே வாழ்த்துவோர் எண்ணிக்கை அதிகரித்து யாரும் தவறவிடப்படக் கூடாதே என்ற அச்சத்தால் தான். 

ஆக, இந்த 'HBD' பேர்வழிகளைப் பொறுத்தவரை, 'கடமைக்கு ஒரு வாழ்த்து தெரிவித்து விட வேண்டும்', அவ்வளவு தான். நம் பிறந்தநாளுக்காக தன் வாழ்க்கையின் ஒரு சில கணங்களைக் கூட, "பிறந்தநாள் வாழ்த்து" என்றோ "Happy Birthday" என்றோ தட்டச்சுவதில் செலவழிக்க விரும்பாத இவர்களின் வாழ்த்தால் நமக்கு அப்படி என்ன ஆசி கிடைத்துவிடப் போகிறது?  நெருங்கியவர்கள் என்றால் 'ஏண்டா இவனுக்கு விஷ் பண்ணம்?' என்று யோசிக்க வைக்குமளவுக்கு, நேரில் காணும் போது நன்றாகக் கிழிப்பேன்.  கொஞ்சம் மரியாதை கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் என்றால் வேறு வழியில்லை. எனவே அவர்களுக்கு மட்டும்  பதில் அளிப்பதுண்டு "T.u" 😊


பிறப்பு அளவுக்கு அதே முக்கியத்துவத்தைப் பெறுவது, மரணம். இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் எங்கேனும் மரணச் செய்திகளைக் காணக்கிடைத்தால் கருத்துரைப் பெட்டிகள் முழுவதும் ஒரே வார்த்தையால் நிரம்பி இருக்கும். "RIP".


HBD அளவுக்கு எனக்கு அருவருப்பூட்டும் இன்னொரு சொல் இந்த RIP. ஆங்கிலத்தில் சொற்குறுக்கம் (Abbreviation) என்பது அனுமதிக்கப்பட்டது தான். அதற்காக எதற்கு எதற்கெல்லாம் சொற்குறுக்கம் செய்வது என்று ஒரு விவஸ்தை வேண்டாமா? மரணச்செய்தியில் துயர் பகிர்வதற்கு, ஆறுதல் சொல்வதற்குக் கூட சொற்குறுக்கமா? 😕

 RIP தட்டச்சும் பலருக்கும் அதன் முழு விரிவாக்கம் என்னவென்றே தெரியாது. அது Rest In Peace. இலத்தீன் "Requiescat in pace" என்ற கிறிஸ்தவ பிரார்த்தனையின் ஆங்கிலவாக்கம் அது. இரண்டுக்கும் பொருள்  "அமைதியில் ஓய்வு பெறுக". 

இறந்தவர்கள் மறுமை நாளில் உயிர்ப்பிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதன் மூலம் நித்தியமான சொர்க்கத்தை அல்லது நரகத்தை அடைவர் என்பது கிறிஸ்தவம், இஸ்லாம் முதலான ஆபிரகாமிய நெறிகளின் நம்பிக்கை.  தீர்ப்புநாள் வரை அந்த ஆன்மா ஓய்வாக இருக்கட்டும் என்ற பிரார்த்தனையே "அமைதியில் ஓய்வு பெறுக." என்று கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகிறது. 

எனினும் இவ்வழக்கம் கத்தோலிக்கர், ஆங்கிலிக்கர் மெதடிஸ்தர் முதலிய சில திருச்சபைகளில் மட்டுமே வழக்கமாக இருக்கின்றது. சில புரட்டஸ்தாந்து திருச்சபைகள், இது திருவிவிலியத்தில் குறிப்பிடப்படாத வழக்கம் என்பதால் தங்கள் பின்பற்றுநர்கள் "RIP" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்று அழைப்பு விடுத்துள்ளன


'RIP'இன் பயன்பாடு நம் மரபுக்கும் பண்பாட்டுக்கும் அந்நியமானது.  அது  மேலைநாட்டு ஆதிக்கம் சார்ந்த ஓர் அடையாளம், இறந்தோரை ஓய்வெடுக்கக் கோருவது.  இதையெல்லாம் சுட்டிக்காட்டி, சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் அடிக்கடி விவாதிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  அந்த விவாதங்களில் முக்கியமாக எழுந்த கேள்வி, இந்தியப் பண்பாட்டினர் அல்லது சைவர்கள், 'RIP'இற்குப் பதிலாக என்ன சொல்லலாம் என்பது.



இஸ்லாத்தில் ஒருவர் இறந்ததும், "இன்னாலில்லாஃகி வ இன்னா இலைஃகி ரச்சிவூன்"(ஆண்டவனிடமிருந்தே வந்தோம், ஆண்டவனிடமே செல்வோம்) என்பார்கள்.  யூதர்களிடம்  எல் மலே ரச்சமிம் (El Malei Rachamim) என்று அறியப்படும் இறந்தோர் பிரார்த்தனை ஒன்று உள்ளது. பௌத்தர்கள் இப்போது உலகளாவிய ரீதியில்  "May he attain supreme bliss of Nibbana" (பரிநிர்வாணப் பேரின்பத்தை அடைவாராக!) என்று சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில் இந்து மதங்களையோ, சைவ - வைணவ நெறிகளையோ பார்த்தால், அவர்களுக்கென்று இத்தகைய இறந்தோர் பிரார்த்தனை எதையும் வளர்த்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

(Nibbana - நிப்பான என்பது நிர்வாண என்பதற்குச் சமனான பாலி மொழிச் சொல். சமஸ்கிருதம் சார்ந்தும் வளர்ந்திருந்தாலும், பௌத்தம் பாலிக்குக் கொடுத்து வந்த முன்னுரிமையை இன்றும் கைவிடவில்லை. எங்களுக்கு இஸ்கோன் இருக்கிறது என்று வைணவர்களும், எங்களுக்கு ஹவாய் சைவ ஆதீனம் இருக்கிறது என்று சைவர்களும் பெருமைபீற்றிக் கொண்டாலும், பௌத்தம் அளவுக்கு இந்துக்கிளைநெறிகள் அறிவியல் பூர்வமாக சர்வதேசத்தைச் சென்றடையவில்லை என்பதே உண்மை).

இத்தனைக்கும் இந்தியப் பண்பாடு இறந்தோர்க்கு மிகுந்த மரியாதையும் வழிபாடும் செலுத்தும் மரபைக் கொண்டது. பிராந்திய மொழி இலக்கியங்களிலிருந்து நமக்கேற்ற இத்தகைய பொதுப்பிரார்த்தனை ஒன்றை உருவாக்கிக் கொள்ளமுடியும். கல்வெட்டியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள், இன்று பொதுவெளியில் பயன்படுத்தக்கூடியதாக,   இத்தகைய மரித்தோர் மரியாதை வாசகங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்க்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் என்ன செய்வது?

இந்திய மரபில் பிறவிச்சுழல், நல்வினை -  தீவினை முதலிய கோட்பாடுகள் வேரூன்றி இருந்தாலும், ஒரு ஆன்மாவின்  இறுதி இலக்கு மோட்சம், முக்தி (வீடுபேறு, விடுதலை) என்று கொள்வதே வழக்கம். இந்த வீடுபேறு பழந்தமிழில் "துறக்கம்" (துறக்கப்பட்டது) என்று அழகாக அழைக்கப்பட்டிருக்கிறது.  மோட்சத்தை அல்லது துறக்கத்தை ஒரு விடுதலையுணர்வு என்றே நம் மெய்யியல்கள் குறிப்பிட்டாலும், அதை  ஒரு இன்ப நிலையாகவே அவை இனங்காண்கின்றன. விடுதலை என்பதே இன்ப உணர்வு தானே?

ஆக, இந்தியப்பண்பாட்டினர் நமக்கு நெருக்கமான பௌத்தர்கள் சொல்லிக்கொள்வது போல, "அன்னார் மோட்சப் பேரின்பத்தை அடைவாராக" - "May (s)he attain the supreme bliss of Moksha(m)" என்று பிரார்த்திக்கலாம்.

சைவர்களும் வைணவர்களும் முறையே தத்தம் இறைவர்களின் உறைவிடங்களான திருக்கயிலை, வைகுண்டம் ஆகியவற்றை உயிர்கள் அடைவதாக நம்புகின்றனர். எனவே விரும்பினால், முக்தி, மோட்சம் என்பவற்றை கைலாசம், வைகுண்டம் மூலம் அவர்கள் பிரதியிட்டுக்கொள்ளலாம்.
"May (s)he attain the supreme bliss of Kailāṣam"
"May (s)he attain the supreme bliss of Vaikuntham"

சைவம், வைணவம் என்று வரும் போது, சிக்கல் ஒன்று இருக்கிறது. முக்தி, மோட்சம், கைலாயப்பேறு, வைகுந்தப்பேறு என்றெல்லாம் பொதுவாக சொல்லிக்கொண்டாலும் அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மரபார்ந்த பிரிவும் சொல்கின்ற வரைவிலக்கணங்கள் வேறுபடுகின்றன.

உதாரணமாக சைவ சித்தாந்தத்தில் முக்தி என்பது நான்கு வகை. தான் ஆள் உலகு இருத்தல் (சாலோகம்), தன்பாடு இருத்தல் (சாமீபம்), தான் ஆம் பதம் பெறல் (சாரூபம்), தான் ஆகுதல் (சாயுச்சியம்). சித்தாந்தம்,  சிவமாம் தன்மை (சிவனோடு இரண்டறக் கலத்தல்) என்று இன்னும் கூர்ந்து சொல்வதை, மேலைத்தேய ஆய்வாளர்கள், Śivahood அல்லது Śivaness என்று மொழியாக்குக்கிறார்கள்.  எனவே ஆழ்ந்த சைவமொழியில் "May (s)he attain the supreme bliss of Śivahood / Śivaness" என்றும் சொல்லமுடியும். இப்படியே வைணவத்தில் கைவல்யம் முதலிய வீடுபேறு சார் கலைச்சொற்கள் பயன்பட்டுள்ளன. இவற்றில் எவற்றை பொதுத்தளத்தில் எடுத்துச் செல்வது, எவ்வாறு ஆள்வது என்பதில் முரண்கள் ஏற்படக்கூடும்.

ஆக, ஒரு இந்துப் பண்பாட்டினனாக Moksham சார்ந்த முதல் பிரார்த்தனையையே பரிந்துரைப்பேன். சைவனாக  Kailasam, Sivahood சார்ந்த இரு பிரார்த்தனைகளுமே எனக்கு திருப்தியானதாக இருக்கிறது. இறந்தவர் சைவர் என்றால், இரண்டாம் மூன்றாம் பிரார்த்தனைகளையும், பொதுவாக என்றால் முதலாம் பிரார்த்தனையையும் பயன்படுத்துவேன்.

இந்தச் சமய வெங்காயங்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை; மறுமை, மோட்சம், மறுபிறவி இந்த நம்பிக்கையெல்லாம் உன்னோடு வைத்துக்கொள், நான் இறைமறுப்பன் (Atheist), இறைநொதுமலன் (Agnostic) என்று கூறியபடி சண்டைக்கு வருவீர்களென்றால், இருக்கவே இருக்கிறது "ஆழ்ந்த இரங்கல்கள்". நீங்கள் "Deepest Condolences" அல்லது "Sincere Sympathies" ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு:
இந்தப் பதிவு, இந்து சமயிகள் RIPஇற்கு மாற்றாக, உலகளாவிய ரீதியில் முன்வைக்கக் கூடிய பண்பாட்டு ரீதியான மாற்றுச் சொல்லாடல் தொடர்பானது. தமிழில் "அன்னார் இறைவன் திருவடிக்கீழ் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்" என்றே சாதாரணமாகச் சொல்லலாம். அதிலும் மதங்கடந்த பரந்த மனப்பான்மையே போதும் என்று விரும்பினீர்கள் என்றால் மேலே சொன்ன அதே "ஆழ்ந்த இரங்கல்கள்" போதும்.

2 comments:

  1. ஜெயமோகன் வலைதளம் வழியாக "து" வலைப்பூ வந்து
    நேற்று ஆழ்ந்த இரங்கல்கள்-RIP,தைத்திருநாளும் தமிழுலகும்
    பதிவுகள் படித்தேன்.இன்று தினக் குரல் நேர்காணல்.ஆழ்ந்த சிந்தனை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களால் மகிழ்ந்தேன். அன்பும் மனமார்ந்த நன்றிகளும்.

      Delete

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner