மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே!



கார்த்திகை விளக்கீடு கடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. (இவ்வாண்டு தமிழ்ப்பஞ்சாங்கங்களைப் பொறுத்து நவம்பர் 22, 23 ஆகிய தினங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது). ஆனால்,  அதுவும் தீபாவளியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பண்டிகைகள் தான். இரண்டிலும் விளக்கு வழிபாடும் முன்னோர் வழிபாடுமே முதன்மை பெறுகின்றன. தனித்துவம் என்னவென்றால், விளக்கீடு தமிழர் மத்தியில் மட்டுமே வழக்கில் இருக்கின்றது.

தீபாவளி, தமிழர் மத்தியில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் தமிழகத்தில் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் (பொ.பி 17ஆம் நூற்றாண்டு) பரவலாகக் கிடைக்க ஆரம்பிக்கின்றது என்பது பொதுவான தகவல். ஆனால் தீபாவளி தொடர்பான மிகப்பழைய தமிழ்ச்சான்று எங்கு கிடைக்கின்றது தெரியுமா? இலங்கையில்.

தம்பைமாநகர் (குருணாகல் - தம்பதெனியா) அரசனான (3ஆம் அல்லது 4ஆம்) பராக்கிரமபாகு முன்னிலையில், போசராச பண்டிதரால் பொ.பி 1310இல் அரங்கேற்றப்பட்ட சோதிட நூல் சரசோதிமாலை. இதன் ஏழாவது தெய்வவிரதப் படலத்தில் தீபாவளி கடைப்பிடிப்பது எப்படி என்பது பற்றிய செய்யுளொன்று காணப்படுவதுடன், அதில் "பிதிர்கள் இன்பமுறு தீபாவலி" என்ற வரியைக் காணமுடிகின்றது. (அடுத்த செய்யுளில் 'ஆரல் நலமாமதி' என்று கார்த்திகை தீபம் சொல்லப்படுவதால், அதுவும் இதுவும் அப்போதே தனித்தனியாகவே வழக்கில் இருந்தமை தெரிகின்றது).

ஒரு சோதிட நூலாக இருந்த போதும், 13ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி பல்வேறு சுவையான தகவல்களைத் தரும் நூல், சரசோதிமாலை. ஆர்வமுள்ளோர் இங்கு தரவிறக்கிப் படிக்கலாம்: 



சரி. அதை விட மேலதிகமாக, மூன்று குறிப்புகளை நாம் கவனிக்கவேண்டும். 

குறிப்பு 01:
தமிழில் "குன்றில் இட்ட தீபம் போல" என்றோர் உவமை இருக்கிறது. பலர் காண, அல்லது பலர் புகழ வாழும் ஒருவரைக் குறிப்பிட இந்த மரபுத் தொடர் பயன்படுவதுண்டு. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி "குன்றில் கார்த்திகை விளக்கீட்டென்ன" என்று இதே உவமையை எடுத்தாண்டிருக்கிறது. இன்றும் கார்த்திகைத் தீபமன்று, திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் விளக்கு புகழ்பெற்ற ஒன்று. திருப்பரங்குன்றம் போன்ற வேறு சில கோவில்களிலும், கார்த்திகை விளக்கீடன்று மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகின்றது.

குறிப்பு 02:
இலங்கையில், குறிப்பாக எங்கள் ஊர்ப்பக்கம் மூதாட்டிகள் வாழ்த்தும் போது, "கதிரமலைல வச்ச விளக்குப் போல வாழுங்கோ" என்று வாழ்த்துவார்கள். கதிரமலை, கதிர்காமத்திலுள்ள மலை. அங்கு இன்று விளக்கேதும் எரிவதாகத் தெரியவில்லை. ஆனால், கார்த்திகை விளக்கீட்டின் தொடர்ச்சியாக, இப்போதும் கதிர்காமத்தில் "இல் மஹ கச்சி பெரகரா" இடம்பெறுகிறது. பொதுவாக நவம்பரில் (தமிழ் கார்த்திகை) வருகின்ற முழுநிலவைத் தான் சிங்களப் பஞ்சாங்கம் 'இல்' என்று அழைக்கிறது. மூன்று நாட்கள் இடம்பெறும் இத்திருவிழா, வருடாந்த ஆடிவேல் விழாவுக்கு அடுத்தபடியாக கதிர்காமத்தில் புகழ்பெற்ற ஒன்று.

குறிப்பு 03:
கிழக்கிலங்கைத் தொன்மங்களின் தொகுப்பான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் "ஆடகசௌந்தரியின் மகன் சிங்ககுமாரன் ஆடித்திங்கள், அமாவாசை இருநாளும் இராவணேஸ்வரன் பெயரில் உக்கந்தத்திருப்பணியில் பெரிய தீபம் ஏற்றும்படி திட்டம்செய்தான்" என்ற குறிப்பு உள்ளது. இங்கு சொல்லப்படுவது கீழைக்கரையின் தென்கோடியிலுள்ள உகந்தமலை.

இப்போது கேள்வி இது தான். மலையுச்சியில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம், குறிப்பாக முன்னோர் வழிபாடாக மலையுச்சியில் தீபமேற்றும் வழக்கம், பண்டு தொட்டே நம் மத்தியில் இருந்திருக்கிறதா? பலர் காண மலையுச்சியில் தீபம் ஏற்றுவதற்கு, ஏற்றியதற்கு, சடங்கு - மரபு தவிர்ந்த வேறேதும் காரணங்கள் இருந்திருக்கக்கூடுமா? பழந்தமிழ் இலக்கியங்களில் வேறு எங்கேனும் இத்தகைய தகவல்கள் பதிவாகி இருக்கின்றனவா? எல்லாவற்றுக்கும் மேல், என்றோ நம் தொல்மூதாதை ஒருவர் கண்ட எரிமலை வெடிப்பு, அல்லது மலைச்சரிவுக் காட்டுத்தீ தம் முன்னோரை அழித்ததை நினைவுகூரவே இது நோன்பாக மாறித் தொடர்ந்ததா? 

அறிந்தவர் விளக்கினால், விளக்கெனத் தொழுவேன்.
பிந்திய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner