இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகத்திலும் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற "சுராங்கனி" பாடலை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இலங்கையின் பொப்பிசை மன்னன் ஏ.ஈ.மனோகரனால் 1970களில் எழுதப்பட்ட இப்பாடல், இலங்கை வானொலியால் தமிழகத்திலும் களை கட்டியது. பிற்காலத்தில் இந்தி மற்றும் கொங்கணியிலும் மொழிமாற்றப்பட்டு பட்டையைக் கிளப்பியது. சில ஆண்டுகளுக்கு முன், விஜய் அண்டனி, தினேஷ் கனகரட்ணத்தின் தயவில் மீண்டும் பரவலாக பேசப்பட்டது.
இப்போது விடயம், சுராங்கனி பாட்டு அல்ல, அந்தப் பாட்டில் வரும் "சுராங்கனி"யைத் தெரியுமா? யார் அந்த சுராங்கனி?
அதைப் பார்ப்பதற்கு முன் சுராங்கனி இடம்பெறுகின்ற ஒரு சிங்கள நாட்டார் கதையொன்றை நாம் பார்க்கவேண்டும்.
ரவிவர்மாவின் மோகினி ஓவியம் |
ஊஞ்சலில் அமர்ந்து சந்தோசமாக பாடல் பாடி ஆடிக்கொண்டிருந்தாள் சுராங்கனி. தூரத்தில் யாரோ தன்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு. "யாரது?" என்றபடியே திரும்பினாள். மரத்தின் மறைவில் இருந்து வெளியேறினான் அந்த இளைஞன்.
பேரழகன். அவள் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு கேட்டாள் "யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?" அவன் புன்னகைத்தான். "என் பெயர் ஈஸ்வரன். உன்னைப் பார்க்கவே ஒளித்திருந்தேன்." அவள் பொய்க்கோபத்துடன் திரும்பினாள் "என்ன வேண்டும் உனக்கு?" "எனக்கு என்ன வேண்டுமென்று உனக்குத் தெரியாதா என்ன?" அவன் அவளை நெருங்கி கைகளை நீட்ட அவள் திடுக்கிட்டு மெல்ல விலகினாள் "நீ திருமணமானவன்". அவன் வியப்படைந்தான். "எப்படித் தெரியும் உனக்கு?" அவள் அவன் பக்கம் திரும்பாமலே "குழந்தைகள் இருக்கிறதா?" என்று கேட்டாள். "ஒரு மகன்" சொல்லும் போது அவன் தலை குனிந்திருந்தது.
திரும்பிய அவள் கண்களில் மாறாத காதல். "எனக்கொன்றும் தடை இல்லை. என்னால் உன் குடும்ப வாழ்க்கை சிதையக்கூடாது. போய் இப்படி ஒரு பெண்ணை மாற்றாளாக ஏற்க உன் மனைவி தயாரா என்று கேட்டு வா." அவன் கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தன. "நிஜமாகவா சொல்கிறாய்?" "இதில் விளையாட்டு ஒன்றும் இல்லை. அவள் சம்மதம் பெற்று என்னை வாழ்நாள் முழுவதும் உன் வீட்டில் ஒன்றாக வைத்திருப்பாய் என்றால் மட்டுமே நான் உனக்கு இணங்குவேன்". "அவள் சம்மதிப்பாள்" ஈஸ்வரன் மெதுவாகச் சிரித்தான்.
அவன் மனைவி உமையாங்கனி, கண்ணகியைத் தூக்கிச் சாப்பிடுமளவு பத்தினி. கணவன் சொன்னதை பொறுமையாகக் கேட்ட அவள் மறுப்பெதுவும் சொல்லவில்லை. ஈஸ்வரனுக்கோ மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதே வேகத்தில் சுராங்கனியிடம் ஓடினான்.
அங்கு அவனுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி. சுராங்கனி கர்ப்பிணியாக இருந்தாள். அவளது தயக்கம் தீரவில்லை. "ஒரு பெண் தன் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணுக்கு இடம் கொடுப்பதே பெரிய விடயம். ஆனால் கர்ப்பிணியான ஒருத்தியை சக கிழத்தியாக ஏற்க யாருக்குத் தான் மனம் வரும்? உன் மனைவியின் அனுமதி கிடைக்காமல் நான் வரமாட்டேன்" ஈஸ்வரன் தயங்காமல் மீண்டும் போய் அனுமதி வாங்கி வந்தான்.
வந்தவனுக்கு இன்னொரு அதிர்ச்சி. ஒரு வயது மகனுடன் அவள் மீண்டும் கர்ப்பமாக இருந்தாள். "நானென்றால் கர்ப்பிணியை மாற்றாளாக ஏற்றாலும், இரண்டு பிள்ளைக்குத் தாயை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். அதிலும் உன் மனைவிக்கே ஒரே ஒரு மகன் தான். என்னை அவளால் எப்படி சரிசமமாக நடத்த முடியும்?" சுராங்கனி மூக்கைச் சிந்தும் போது ஈஸ்வரனாலும் என்ன தான் செய்ய முடியும், பாவம்? மீண்டும் உமையாங்கனியிடம் அனுமதி பெறச் சென்றான் அவன்.
இப்படி ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல, ஏழு தடவைகள் உமையாங்கனியிடம் ஈஸ்வரன் சென்றதும், சுராங்கனிக்கு ஏழு ஆண் குழந்தைகள் பிறந்ததும் நடந்தது. ஏழாவது தடவை செல்லும் போது ஈஸ்வரனுக்கே கொஞ்சம் சந்தேகமாகத் தான் போய்விட்டது. இதென்ன அதிசயம் இப்படி ஏமாற்றுகிறாள்? அவள் ஏதும் வன தேவதையா? மோகினிப்பிசாசா? பார்ப்போம் நீயும் வா என்று உமையாங்கனியையும் அழைத்துக்கொண்டு திரும்பினான் ஈஸ்வரன்.
ஆனால் அங்கு சுராங்கனி இருக்கவில்லை. உமையாங்கனியின் அண்ணன் உற்பலவண்ணன் ஆறு குழந்தைகளுடனும் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். "நீங்கள் எப்படி இங்கே? சுராங்கனி எங்கே? ஆறு பேர் தானே உங்களோடு நிற்கிறார்கள்? மூத்தவன் எங்கே?" ஈஸ்வரன் பரபரப்படைந்தான். உற்பலவண்ணன் உதட்டை மடித்து குறும்புச்சிரிப்பு சிரித்தார். "அவன் பூப்பறிக்கப் போய் விட்டான் அத்தான்."
உமையாங்கனியோ வைத்த கண் வாங்காமல் ஆறு குழந்தைகளையும் விழுங்குவது போல் பார்த்துக்கொண்டிருந்தாள். "என் குழந்தைகள் தானடி தங்கச்சி" உற்பலவண்ணன் சொல்லும் போதே அவளது கண்கள் மகிழ்ச்சியில் குளமாகி விட்டன. "அனே மகே ஐயாகே கந்த குமாரயா" (ஐயோ, என் அண்ணாவின் மலை [போல் வளர்ந்த] மக்களே) என்று அழுதபடியே ஆறு பேரையும் கட்டியணைத்தாள் உமையாங்கனி. அப்போது தான் அந்த விந்தை நிகழ்ந்தது. அறுவரும் ஒருவராகினர். ஆறு பேருக்குப் பதில் அங்கு ஒருவன் - கந்தகுமாரன் நின்று கொண்டிருந்தான். ஈஸ்வரன் திகைத்தபடி நிற்க, விழுந்து விழுந்து சிரித்தபடியே உற்பலவண்ணன் சொன்னான் "ஐயோ அத்தான், நான் தான் அந்த சுராங்கனி!"
கதை எங்கு போய் முடிகிறது என்று ஊகித்திருப்பீர்களே! ஆம். அதே கந்த புராணத்தில் தான். சிவன் - மோகினி கதை தான் சிங்கள நாட்டார் வழக்கில் மாற்றமுற்று இப்படி ஈஸ்வர தெவியோ - சுராங்கனி கதையாக மாறி நிற்கின்றது! உபுல்வன் தெவியோ என்று சிங்களத்தில் அழைக்கப்படும் உற்பலவண்ணன் திருமாலும் அப்படியே வருகிறார் இங்கு. கந்தன் திருமாலுக்குப் பிறப்பது தான் கதையில் சுவாரசியமே!
ஆம். சிங்களத்தில் சுராங்கனி என்றால் தேவதை அல்லது மோகினி என்று தான் பொருள். சுரா என்பதற்கு மது என்ற அர்த்தமும் உண்டு. மயக்கும் சுராபானம் போன்றவள் சுராங்கனா. கொசுறுத்தகவல் இரண்டு சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு சிங்கள நண்பியின் பெயர், உமையாங்கனா. இன்னொருத்தியின் பெயர் அதே சுராங்கனி. மரபு!
ஆங். எத்தனை பேர் கவனித்தீர்கள்? ஒரு விடயத்தை நான் சொல்லவே இல்லை. சுராங்கனியின் ஏழு பிள்ளைகளில் பூப்பறிக்கப் போன மூத்த மகன் எங்கே?
அவன் தான் மூத்த தலைவன். அண்ணாவை சிங்களத்தில் 'ஐயா' என்பார்கள். எனவே மூத்ததலைவனின் சிங்களப்பெயர் ஐயநாயகன். வேறு யார்? சிவனுக்கும் மோகினிக்கும் மகனான சாட்சாத் நம் ஐயனாரே தான்!
அய்யநாயக்க, சிங்கள ஐயனார் |
சில இடங்களில் ஈஸ்வரனும் சுராங்கனியும் சந்திப்பதற்கு முன், சைவ - வைணவப்புராணங்களில் கூறப்படும் பஸ்மாசுரன் கதை, முற்சேர்க்கையாக வருகின்றது. அவற்றில் ஒரு சில கதைகளில் சுராங்கனிக்கு ஐயநாயகன் மட்டுமே பிறக்கிறார். பெருங்கருணை கொண்டவளான சுராங்கனி, அதன் பின் குழந்தைகளைக் காக்கும் "கிரி அம்மா" (கிரி = பால்) எனும் தெய்வம் ஆகின்றாள்.
சிங்கள மரபில் சில இடங்களில் பத்தினிக்குச் சமனாகவும், சில இடங்களில் பத்தினியை விட மேம்பட்டவளாகவும், 'கிரி அம்மா' எனும் தெய்வம் வழிபடப்படுவது இங்கு நினைவுகூரத்தக்கது. கிரி அம்மா என்று ஒன்றுக்கு மேற்பட்டவர்களை அழைக்கும் வழக்கமும் சிங்கள நாட்டார் மரபிலுண்டு.
இலங்கையில் பத்தினி வழிபாட்டோடு இணைந்தாற்போலவே ஐயனாரும் வழிபடப்படுகிறார். பத்தினிக்காக நிகழும் "கம்மடுவ" சடங்கில், கதிர்காமக் கடவுளுக்கான "கால பந்தம" எனும் தீப்பந்தம் ஏற்றும் பூசையின் போது ஈஸ்வர தெவியோ - சுராங்கனியின் கதை சிங்களப்பூசாரியான கப்புறாளையால் பாடப்படுகிறது.
சிங்கள மரபில் சில இடங்களில் பத்தினிக்குச் சமனாகவும், சில இடங்களில் பத்தினியை விட மேம்பட்டவளாகவும், 'கிரி அம்மா' எனும் தெய்வம் வழிபடப்படுவது இங்கு நினைவுகூரத்தக்கது. கிரி அம்மா என்று ஒன்றுக்கு மேற்பட்டவர்களை அழைக்கும் வழக்கமும் சிங்கள நாட்டார் மரபிலுண்டு.
இலங்கையில் பத்தினி வழிபாட்டோடு இணைந்தாற்போலவே ஐயனாரும் வழிபடப்படுகிறார். பத்தினிக்காக நிகழும் "கம்மடுவ" சடங்கில், கதிர்காமக் கடவுளுக்கான "கால பந்தம" எனும் தீப்பந்தம் ஏற்றும் பூசையின் போது ஈஸ்வர தெவியோ - சுராங்கனியின் கதை சிங்களப்பூசாரியான கப்புறாளையால் பாடப்படுகிறது.
சேரநாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு பலராலும் மீண்டும் மீண்டும் சமூகவியல் ஆய்வுகளுக்கான களமாக சுட்டிக்காட்டப்படும் ஒன்று. கேரளத்தை ஆளும் தெய்வங்கள் இரு வகை. பகவதிகளும் சாஸ்தாக்களும். பகவதி உருத்திரிந்த கண்ணகி. சாஸ்தா உருத்திரிந்த சாத்தன், அதாவது நம் ஐயன். சிங்களவரிடம் இன்றும் பத்தினி இருக்கிறாள். கூடவே மருவிப்போனவனாக ஐயநாயகனும் விளங்குகின்றான்.
தமிழ் மரபும் பண்பாடும் எங்கெல்லாம் போய்த் திரும்பி, இன்று எப்படியெல்லாம் உருமாறித் திரிந்து நிற்கின்றன என்று பார்த்தீர்களா?
(அரங்கம் இதழின் 22 மார்ச் 2019 இதழில் வெளியானது.)
(அரங்கம் இதழின் 22 மார்ச் 2019 இதழில் வெளியானது.)
0 comments:
Post a Comment