வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 03)

மட்டக்களப்பு எட்டுப்பகுதியின் தேசத்துக்கோவில் !



இலங்கையின் பிறபகுதியைச் சேர்ந்த நண்பன் ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பேச்சோடு பேச்சாக, “இலங்கையில் இன்று வழிபாட்டுக்குத் தகுதியாக எஞ்சியிருக்கும் புராதனமான சைவசமயக் கட்டுமானங்கள் மூன்றே மூன்று தான். ஒன்று இரண்டாம் சிவாலயம் என்று இனங்காணப்படும் பொலனறுவை வானவன் மாதேவீச்சரம்; இரண்டாவது திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்; மூன்றாவது சிலாபம் முன்னேச்சரம். மூன்றிலும் திருக்கோவிலும் முன்னேச்சரமும் தான் இன்றும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த இரண்டில் கூட திருக்கோவிலே பழைமையானது.” என்றேன். அவன் “போடா” என்றான். “பொலனறுவையும் முன்னேச்சரமும் சரி. திருக்கோயில எப்பிடி பழைய கோயிலெண்டு சொல்லுவாய்?” என்று அவன் கேட்டான். “கோட்டை, கண்டி மன்னர்களுடன் தொடர்புறும் வரலாறு அதற்கும் உண்டு.” நான் ஊர்ப்பற்றால் மிகைப்படுத்திப் பேசுகிறேன் என்ற அவநம்பிக்கை, அவன் முகத்தில் தெரிந்தது. “திருக்கோயில் மட்டக்களப்பெல்லோ? அங்கெப்பிடி கோட்டை – கண்டி மன்னனெல்லாம் வந்திருப்பான்?”

நம் கோவில் கட்டிடக்கலையில் காலத்தை ஓரளவு கணிப்பதற்கான அமைப்பு ஒன்று இருக்கிறது. அதன் பெயர் போதிகை. கருவறைச் சுவரில் பாதி புதைந்தது போன்ற தூண்களைக் கண்டிருக்கிறீர்களா? பாதி மறைந்திருப்பதால், அவற்றுக்கு ‘அரைத்தூண்’ என்று பெயர். இந்த அரைத்தூண்கள், சுவரின் மேற்பகுதியைச் சேரும் புள்ளியில் அமைந்திருக்கும் அலங்கார அமைப்பு தான் போதிகை. போதிகைகளை வைத்து, அவை எந்த மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் என்று காலத்தைக் கணிக்கமுடியும்.


திருக்கோவிலின் கருவறைச் சுவரில் தென்படுபவை, முதலாம் இராஜராஜரால் (கி.பி 985 - 1014) அறிமுகப்படுத்தப்பட்ட வெட்டுப்போதிகைகள். அவை பிற்காலச் சீமெந்துப் பூச்சால் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றில் மலர் அலங்காரம் இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அவை இரண்டாம் இராஜராஜர் (கி.பி 1146 - 1173) காலத்துக்குப் பிந்தியவை. ஆனால், முன்னேச்சரத்தில் இருப்பவை, விஜயநகரப் பேரரசின் (கி.பி 1336 - 1646) கலைப்பாணியில் அமைக்கப்பட்ட பெரிய பூமொட்டுப் போதிகைகள். ஆக, போதிகைகளின் அமைப்பின் மூலம், திருக்கோவிலின் இன்றைய கட்டுமானம், முன்னேச்சரத்தின் இன்றைய கட்டுமானத்தை விடப் பழையது என்பது நிரூபணமாகிறது.

எவ்வாறெனினும் போதிகைகளை வைத்துக் காலத்தைக் கணிக்கும் போது, நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. அவற்றை அறிமுகப்படுத்தியவன் குறிப்பிட்ட மன்னனாக இருக்கலாம் என்று ஊகித்தாலும், அவனது காலத்திலேயே இது நிச்சயமாக எழுந்தது என்று கூறமுடியாது. அதே கலைப்பாணியில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் கூட ஒரு கோவிலைக் கட்டிவிட்டு, இது அந்த மன்னன் அமைத்தது என்று வாதாடலாம் அல்லவா? எனவே கோவிலின் ஏனைய கட்டுமானங்களையும் சேர்த்தே ஆராயவேண்டும். அந்த வகையில், பேராசிரியர்.கா.இந்திரபாலா, பேராசிரியர்.எஸ்.பரணவிதான, பேராசிரியர்.சி.பத்மநாதன், என்று நிறையப்பேர் நமக்கு உதவிக்கு வருவதால், திருக்கோவில் கட்டுமானம், கி.பி 13ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது தான் என்று சொல்வதில் நாம் இறும்பூது எய்தலாம்.

அது இருக்கட்டும். திருக்கோவிலுடன் கோட்டை – கண்டி மன்னர் உறவு பற்றி பிறகொருமுறை பார்க்கலாம். திருக்கோவிலை ஆவணப்படுத்திய ஒரு ஒல்லாந்தரை, ஒரு போர்த்துக்கேயரை கடந்த வாரங்களில் பார்த்தோம். இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது ஒரு பிரித்தானியரை. பெயர் தோமஸ் கிறிஸ்ரி. பிரித்தானிய ஆளுநரான பிரடரிக் நோர்த், 1803ஆமாண்டு திருக்கோணமலையிலிருந்து கிழக்குக் கரையோரமாக மாத்துறைக்குப் பயணித்த போது, அவரோடு உதவியாளராகச் சென்றவர் இவர். 1803ஆமாண்டு மே 6ஆம் திகதியிட்ட அவரது நாட்குறிப்பில் பின்வரும் வரிகள் இருக்கின்றன.

“காலை ஐந்து மணிக்கு கருங்கொட்டித்தீவிலிருந்து புறப்பட்ட நாங்கள், ஏழே கால் அளவில் திருக்கோவிலை அடைந்தோம். இந்தப் பயணத்தின் முதல் அரைவாசித்தூரம் சிறிது விவசாயம் செய்யப்படும் திறந்தவெளியாகவும், அடுத்த அரைவாசித்தூரம் கடற்கரை ஓரமாகவும் அமைந்தது. ஒரு அளவான கிராமமான திருக்கோவிலில் மிகப்பழைமைவாய்ந்த இந்துக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. சுண்ணம் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்ட இக்கோவில் ஓரளவு பெரியது. பழைமைவாய்ந்தது. ஆனால் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. அதன் சுவரில் பல வகையான தேய்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. அதைச்சுற்றியுள்ள இரு வீதியிலும் நாங்கள் நடந்தோம். ஆனால் கோவிலுக்குள் நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வீதிக்கு வெளியே ஒரு குடிலில் வைக்கப்பட்டிருந்த சுவாமியின் தேரில் இயற்கைக்கு மாறான பல மரச்சிற்பவேலைப்பாடுகள் காணப்படுகின்றன.”

இந்த விவரணத்தில் ‘கருங்கொட்டித்தீவு’ என்று சொல்லப்படுவது, இன்றைய அக்கரைப்பற்று நகர். திருக்கோவிலின் விமானம் பழுதடைந்து செங்கல் – சுண்ணம் என்பன வெளித்தெரிவதையும், சிற்பங்கள் தேய்ந்து போய் ஒழுங்கற்ற நிலையில் இருப்பதையும் தோமஸ் கிறிஸ்ரி அவதானித்திருக்கிறார் என்பது இருநூறு ஆண்டுகளுக்கு முன் திருக்கோவில் எப்படி இருந்திருக்கிறது என்பதைச் சொல்லப்போதுமானதாக இருக்கிறது. ஆனால் அங்கு தேரோட்டம், உற்சவம் எல்லாம் குறைவின்றி இடம்பெற்றிருக்கிறது என்பதற்கான ஆதாரம், அவர் குறிப்பிடுகின்ற தேர். அந்தத் தேரைக் காணும் பேறு நமக்கு இன்று கிடைக்கவில்லை.

இந்த இடச்சு – போர்த்துக்கேய – பிரித்தானிய சான்றுகளோடு ஐரோப்பிய ஆவணங்களை மூட்டை கட்டி வைத்துவிடுவோம். சொல்லுங்கள், நம்மிடம் திருக்கோவில் பற்றிய என்னென்ன ஆவணங்கள் இருக்கின்றன? உப்புச்சிரட்டைக்குள் தான் தலையைப் புகுத்தவேண்டும். சத்தியமாக இன்று ஒன்றுமே இல்லை. 2004 கடற்கோள், காணாமல் போதல் என்று கோவில் தொடர்பான பெறுமதி மிக்க நிறைய ஆவணங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன. ஆபத்பாந்தவனாக ஒரேயொருவர் கைநீட்டுகிறார். உண்மையில் அவருக்குத் கோவில் அருங்காட்சியகத்தில் ஒரு சிலை அமைத்துக் கும்பிட்டாலும் தகும். அன்னார் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த பெருமகனார் அமரர்.சி.கணபதிப்பிள்ளை.



அவரது “பூர்வீக சப்தஸ்தலங்கள்” என்ற நூல் இன்று கிடைக்காவிட்டால், மிக அருமையான வரலாற்றுத் தகவல்களை இழந்திருப்போம். கி.பி 1803இற்கும் 1820இற்குமிடையே திருக்கோவிலில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச்சம்பவம் தோற்கடிக்கப்பட்டதையும், அதில் மீட்கப்பட்ட பெருமளவு செல்வங்களையும் ஒரு ஏட்டுச்சுவடியில் கண்டபடி அப்படியே பதிவுசெய்திருக்கிறார் அவர். 1823இல் கோவிலில் ஒரு தீவிபத்து இடம்பெற்றதையும், 1826 நவம்பர் 06ஆம் திகதி, குடமுழுக்கு இடம்பெற்றமையும், 1851 ஒக்டோபர் 30ஆம் திகதி இன்றுள்ள மகாமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டதும் அவரது நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

“சுத்துப்பட்டு எட்டுக்கிராமத்துக்கும் நாட்டாமையாக” இருந்தவர்கள் பற்றி தமிழ்த் திரைப்படங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள். நமது சித்திரவேலாயுதனும் அப்படி பெரிய நிலப்பரப்புக்கு ‘நாட்டாமை’’ தான். அதனால் தான் சுத்துப்பட்டு எட்டுப்பகுதியை – சுற்றியுள்ள எட்டுப்பற்றுக்களை - ஆள்கின்ற அவன் கோவில் தேசத்துக்கோவில் ஆனது. இன்று மட்டக்களப்பு, அம்பாறை என்று இரு மாவட்டங்களாகப் பிரிந்துள்ள பழைய மட்டக்களப்புத் தேசம், பதினொரு பற்றுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில், ஏறாவூர், மண்முனை, போரதீவு, எருவில், கரைவாகு, சம்மாந்துறை, அக்கரை ஆகிய ஏழு பற்றுக்களே காலனிய ஆட்சியில் மட்டக்களப்பு என்று குறிப்பாக அறியப்பட்டன. பாணமை, நாடுகாடு, கோரளை, விந்தனை ஆகிய எஞ்சிய நான்கு பற்றுகளும் மட்டக்களப்பின் ஆட்சியின் கீழேயே வந்தாலும், சனச்செறிவு மிக்கவையாக முற்சொன்ன ஏழு பற்றுகளே விளங்கின. அந்த ஏழு பற்றுகளில் ஏறாவூர்ப்பற்றைத் தவிர்த்து, நாடுகாடுப்பற்றையும் பாணமைப்பற்றையும் சேர்த்து, திருக்கோவிலை தேசத்துக்கோவிலாகக் கொண்டாடியவர்கள் “மட்டக்களப்பு எட்டுப்பகுதி மக்கள்” என்று அறியப்பட்டார்கள்.


மட்டக்களப்பு எட்டுப்பகுதி மக்கள் ஒன்றுகூடி 1870இல் இங்கு தேரோட்டத் திருவிழா செய்திருக்கிறார்கள். 28.12.1952 திகதியிட்ட கோவில் ஆவணமொன்றில், அவ்வாறு திருக்கோவிலில் உரிமை கொண்டாடிய இந்த எட்டுப்பகுதியைச் சேர்ந்த முப்பது வட்டாரங்கள் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. பாணமை, பொத்துவில், கோமாரி, திருக்கோவில், தம்பிலுவில், தம்பட்டை, பனங்காடு, கோளாவில், அக்கரைப்பற்று, பனையடிப்பிட்டி, மல்வத்தை, அம்பாறை, மல்லிகைத்தீவு, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருதூர், கல்முனை, சவளக்கடை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, மகிழூர், எருவில், களுதாவளை, பெரிய போரதீவு, கோவிற்போரதீவு, பழுகாமம், வெல்லாவெளி, நாவற்குடா என்பவை அவை. கிழக்கிலங்கையின் குடித்தொகைப் பரம்பல் தொடர்பாகவும், இந்த வட்டாரத்தகவல் இன்னொரு விதத்தில் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகின்றது. உதாரணமாக இன்று - வெறும் அறுபதாண்டுகளில் - பனையடிப்பிட்டி என்ற ஒரு ஊரே இல்லை. பின்னாளில் மீனோடைக்கட்டு என்று அறியப்பட்டு, இன்று அடியோடு மறைந்துவிட்ட தமிழ்க்கிராமம் அது.

தற்போது மேற்படி முப்பது வட்டாரங்களில் பல விலகி, சில புதிதாக இணைந்துள்ளன. பொத்துவில், கோமாரி, தாண்டியடி, விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில், தம்பட்டை, கோளாவில், பனங்காடு, நாவற்காடு, கண்ணகிபுரம், அக்கரைப்பற்று, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, பெரிய நீலாவணை ஆகிய பதினெட்டு வட்டாரங்களே இன்று திருக்கோவிலில் பூசையுரிமை கொண்டுள்ளன. பழைய வட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்பு போல் பூசைகளில் பங்கேற்பதில்லை என்றாலும், இன்றும் வந்து வழிபடுகின்றனர். ஆடி அமாவாசையையொட்டி பதினெட்டு நாள் திருவிழா இடம்பெறுகின்றது. திருவிழாவிலும் பெரும்பாலான நாட்கள் தனியார் குடும்பங்களின் உபயமாகவே இடம்பெறுகின்றது. அது காலத்தின் கோலம். அதில் தவறொன்றும் கூறமுடியாது.

காலம் நிறையவே மாறிவிட்டது. திருக்கோவில், தொடர்ந்தும் தேசத்துக்கோவிலாகக் கட்டிக்காக்கப்படும் போதே அதன் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பேணமுடியும். மெல்ல மெல்ல ஒரு சிலர் கைகளுக்குக் கோவில் செல்லும்படி அனுமதித்துவிட்டு, அதற்குப் பின்பும் அது தேசத்துக்கோவிலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அப்படி நடக்கக்கூடாதது நடந்த பின்னர், கோவிலின் புகழ் மழுங்கடிக்கப்படுகிறதே, அதைச் சீண்டுவார் யாருமில்லையே என்று வருந்துவதில் பலனில்லை. திருக்கோவில் வேலவனின் தொல்புகழும் சரித்திரப்பிரசித்தியும் தொடர்ச்சியாகக் காப்பாற்றப்படவேண்டும். நிர்வாகமும், ஊர்ப்பொதுமக்களும், கூடவே பண்டைய மட்டக்களப்பு எட்டுப்பகுதி மக்களும் கைகோர்த்து, அந்த வரலாற்றுக்கடமையை நிறைவேற்றவேண்டும் என்பதே இக்கட்டுரையாளனின் வேணவா. திருக்கோவில் வடிவேற்படையுடையான் அதற்கு மனம் வைப்பானாக.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner