"இனம் என்பதற்கு வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் ஏன் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழ் இனமாக இல்லை?” என்பது வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வி. முகநூலில் இவ்வினா தொடர்பான ஒரு நண்பனின் பதிவுக்கு அளிக்கப்பட்ட பதில் இந்தப் பதிவு.
"இலங்கை முஸ்லீம்கள் ஏன் தமிழர் இல்லை?" என்ற இந்தக் கேள்வியை வேறு விதமாக இரண்டாகக் கேட்கலாம். ஒன்று, “மதம் சார்ந்து இனத்தை வரையறுக்கலாமா?” இரண்டு, “ஒரே மொழி பேசுவோர் எல்லோரும் ஒரே இனம் தானே?”
உண்மையில் “இனம்” எனும் வரையறை சிக்கலானது. மொழியா, பண்பாடா, பொது முன்னோரா, நாடா, எது இனம் என்பதை வரையறுக்கிறது என்ற விவாதம் இன்னும் முடிந்தபாடில்லை. பொத்தாம்பொதுவாகச் சொன்னால், “இவற்றுள் ஏதாவது ஒன்றால் உருவான பொதுமைப்பாடால் வரையறுக்கப்படுவதே இனம்” எனலாம்.
மதம் சார்ந்து இனத்தை வரையறுக்கலாமா? ஆம். முடியும். மானுடவியலில் இனங்கள் மொழியும் சமயமும் சார்ந்து, “இனமொழிக்குழுக்கள்” (Ethnolinguistic groups) என்றும் ”இனச்சமயக் குழுக்கள்” (Ethnoreligious groups) என்றும் தான் பிரதானமாக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. (பொது முன்னோர் சார்ந்து இனமரபினக் குழுக்கள் என்றும், தாய்மண்ணைச் சார்ந்து இனப்பிராந்தியக்குழுக்கள் என்றும் இவை மேலும் பல வகைப்படும்).
யூதரும், இந்தியாவின் சீக்கியரும் பார்சிகளும் மொழியை விட, தம்மை மதம் சார்ந்தே இறுக்கமாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்லாமியப் பண்பாட்டை முன்னிறுத்தி, மியன்மார் ரொஹிங்கியாக்கள் தம்மை தனி இனமாக அடையாளப்படுத்துகிறார்கள். இலங்கைச் சோனகர்கள், இதே விதிப்படி ஒரு தனி இனச்சமயக்குழு ஆகமுடியும்.
அடுத்த கேள்விக்கு வந்தால், இனத்தை தீர்மானிக்கும் பிரதான காரணியாக மொழி எப்போதும் இருப்பதில்லை. பலமொழி பேசுவோர் ஒரு இனமாகவும், ஒரே மொழி பேசுவோர் பல இனங்களாகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உலகில் உள்ளன.
சில உதாரணங்களைச் சொல்லலாம். சூடானிய பேஜா மக்களில் பேஜா, அரபு, திக்ரே ஆகிய மூன்று மொழிகளைப் பேசும் குழுக்கள் உண்டு. ஆனால் இவர்கள் எல்லோருமே தம்மை ஒரே இனமாகவே கூறிக்கொள்கிறார்கள். ருவாண்டா இனப்படுகொலையோடு தொடர்புபட்ட டுட்சி, ஹூடு ஆகிய இரு இனக்குழுமத்தினருமே ருவாண்டா ருண்டி என்ற ஒரே பேசுமொழிக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான். யூகோஸ்லாவிய பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்த சேர்பிய மற்றும் குரோஷிய மொழிகள், உண்மையில் ஒரே மொழி அல்லது ஒரே மொழியின் வட்டார வழக்குகள் என்று சொல்லப்படுகிறது. பல இனங்கள் பேசுகின்ற இந்தியும் உருதுவும் ஒரே மொழியின் இரு வடிவங்களா என்ற விவாதமும் தொடர்கிறது. அங்கெல்லாம் ஏன் போவான், இன்று மலையாளிகளுக்கு தனி இன அடையாளத்தைக் கொடுத்ததே சேரத்தமிழ் சார்ந்த ”அகன்ற தமிழ்” பண்பாடு தானே?
“இனம்” என்பதை, மொழியை விட வேறு காரணிகள் சார்ந்து வரையறுக்கும் வாய்ப்பை வரலாறே வழங்குகிறது. இன்றைய இலங்கையின் மூவினத்தார் சிங்களீஸ், மலபார், மூர் என்று காலனிய ஆட்சியாளர்களால் மேம்போக்காக குறிப்பிடப்பட்டு வந்த காலத்தில் (19ஆம் நூற்றாண்டு வரை), மொழி சார்ந்தோ பண்பாடு சார்ந்தோ ”இனம்” என்ற தெளிவான வரையறை இலங்கையில் நடைமுறையில் இருக்கவில்லை. அதற்கான சிறந்த உதாரணம், 1824இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரிக் குடித்தொகைக் கணக்கெடுப்பு . அதில் சிங்களச் சாதிகள் தனித்தனியேயும், தமிழ்ச்சாதிகள் தனித்தனியேயும், ”மூர்கள்” தனிச்சாதியாகவும் கொள்ளப்பட்டிருந்தனர்.
தமிழரிடமும் சிங்களவரிடமும் சாதிய மனநிலையே நிலவிவந்ததையும், இந்த இருதரப்பாருமே முஸ்லீம்களை தனிச்சாதியாகத் தான் கணித்தார்கள் என்பதையும் கூட சிந்திக்கலாம். இன்றைக்கும் தமிழரும் முஸ்லீம்களும், தாம் தவிர்ந்த இரு இனத்தாரையும் குழூஉக்குறியாக “மாறுசாதி” என்று தான் அழைக்கிறார்கள்.
இனம் தொடர்பான நவீனக் கொள்கைகளை உள்ளீர்த்து, 1871இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது குடித்தொகைக் கணக்கெடுப்பிலேயே முஸ்லீம்கள் தனி இனமாகக் கருதப்பட்டிருக்கின்றனர். இதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று, தம்மைப் போலவே ஆபிரகாமியச் சமயமாக, தமக்கு வலுவான போட்டியாளராக விளங்கிய இஸ்லாமியரை, கிறிஸ்தவம் சார்ந்த காலனிய ஆட்சியாளர் தெளிவாகப் பிரித்தறியவேண்டிய தேவை இருந்தது என்பதே. சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய குடித்தொகைக் கணக்கெடுப்புகளிலும் இதையொத்த வகைப்பாடே பயன்பட்டதைக் காணலாம். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின், முஸ்லீம்கள் மொழியை உதறி மதம் சார்ந்து முனைவாக்கமடைய வேண்டிய அவசியம், பெருமளவு ஏற்படவில்லை அல்லது குறைவாகவே ஏற்பட்டது. ஆனால்,தனிநாடாகி விட்ட இலங்கையில், முஸ்லீம்கள் மூன்றாவது இனமாக எழுவதற்கான வாய்ப்பை அரசியலும், சமூகமும் அவர்களுக்கு வழங்கியிருந்தன.
மதம் சார்ந்து அவர்கள் தம்மைத் தனி இனமாக அடையாளப்படுத்துவதற்கான தேவையைப் பூர்த்தி செய்திருக்கும் போது, பேசுமொழியை மாத்திரம் வைத்து, “நீங்களும் தமிழரே” என்று வாதாடுவது பொருத்தமல்ல. “எங்களுக்குத் தமிழர் என்ற அடையாளம் வேண்டாம்” என்று முஸ்லீம்களே சொல்கிறார்கள். அதற்குச் சமனாக, எல்லா இலங்கைத் தமிழரும், இலங்கைச் சோனகரை தமிழராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியும் முக்கியமானது.
இன்று தனி இனமாகக் கருதப்படும் எந்தவொரு இனமும் எதிர்காலத்தில் பல இனக்குழுமங்களாக சிதறுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் மறுக்கமுடியாது. ஏனென்றால், “நாங்களும் அவர்களும்” (Us and them) என்ற சமூகவியலின் பிரபலமான சொலவடை, ஒரே இனக்குழுமங்களுக்குள் கூட உண்டு. கண்டிச்சிங்களவரும் கரையோரச்சிங்களவரும் எப்படி ஒரே இனம் ஆனார்கள், இலங்கைச் சோனகரும் இந்தியச்சோனகரும் எப்படி ஒரே இனம் ஆனார்கள், ஈழத்தமிழரும் மலையகத்தமிழரும் எப்படி இன்றும் இரு இனங்களாக நீடிக்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் அதையும் தாண்டி விரிவடையக்கூடியது.
வரலாற்றின் துயர்மிகுந்த பக்கங்களாக, முஸ்லீம்கள் மூலம் தமிழர் அனுபவித்தவையும், தமிழர் மூலம் முஸ்லீம்கள் அனுபவித்தவையும் தான் இந்த இடைவெளி வரை இருவரையும் இட்டு வந்திருக்கிறது. எது எப்படியோ, கசப்பான உண்மை ஒன்றே. வரலாறு எப்போதும் திரும்புவதில்லை. இனிமேலும் புட்டு புட்டு தான். தேங்காய்ப்பூ தேங்காய்ப்பூ தான்.
0 comments:
Post a Comment