அறவாழி

- 1 -

காலை நேரத்தின் மெல்லிய சலனத்தைக் கிழித்துக்கொண்டு அந்த செம்மண்பாதையில் பாய்ந்துசென்ற குதிரை, கனைத்தபடி  இரத்தளை மாளிகையின் முன் மெல்ல நின்றது. குதிரையிலிருந்து தாவி இறங்கிய காவலன் சீரான அடிகளுடன் நடந்துசென்று மாளிகையின் வாசலில் நின்றான். மாளிகை மறுபடியும் மென்சலனத்தைச் சூடிக்கொள்ள, குதிரையின்  கால் மாற்றும் ஓசையும் அதனால் சேணத்தில் தொங்கிய சிறுமணிகள் அசைந்த இன்னோசையும் மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.

இரத்தளை வமிசத்தாருக்கே உரிய கம்பீரமான மாளிகை அது. கண்டி நாட்டின் அரசவையில் வீற்றிருக்கும் அதிகாரங்களையும் திசாவைகளையும் பிரசவிக்கும் பெருங்குடி இரத்தளை. அதன் மாளிகை எளிமையாகவும் சிறிதாகவும் இருந்தால் தானே வியக்கவேண்டும். சுற்றிவரப் பார்வையை ஓடவிட்ட காவலன், மெல்லிய அசைவு தென்பட பார்வையைத் திருப்பினான். மாளிகை வாசலை நோக்கி உள்ளிருந்து அவள் வந்துகொண்டிருந்தாள்.

வாசலை அடைந்ததும் அவள் புருவங்கள், என்ன என்று கேட்பது போல் சற்றே சுருங்கின. இடையில் சுமந்திருந்த கைக்குழந்தை, பாலூட்டியதை நிறுத்திவிட்ட கோபத்தில் அவள் மார்புக்கச்சையை இழுத்துச் சிணுங்கிக்கொண்டிருந்தது. அதை அழுத்திப் பிடித்தவாறு  நின்றதால் கொஞ்சம் தடுமாறிய அவள், அலங்காரம் எதுவுமின்றியே கம்பீரமாகத் தெரிந்தாள். முன்புறம் கிடந்த நீள்கூந்தல் அந்த நிமிர்வுக்கு இன்னும் எடுப்பாக இருந்தது. நெற்றிமயிரை இயல்பாக இழுத்து காதோரம் சொருகிய கைகள், கதிர்காமன் தேவாலயத்து கணிகையைப் போல அபிநயம் பிடித்தன.

தன் கண்கள் அவளை மேய்ந்துகொண்டிருப்பதையும் அவள் அதை உணர்ந்தது போல அசைவதையும் கண்டு சட்டென சுதாகரித்த காவலன் பரபரப்புடன் குனிந்து வணங்கினான்.  “மொனராவில் இரத்தளை வமிசத்துச் சீமாட்டி குமாரிக்கு என் வணக்கங்கள். மகா அதிகாரம் விஜயசுந்தரரின் குடும்பத்தார் அனைவரையும் உடன் அரண்மனைக்கு அழைத்துவரும்படி மாண்புமிகு மன்னர் உத்தரவு.”

அந்தக் காவலனின் தடித்த குரலை மாளிகையின் பரந்த கூடம் ஏற்று இடியென எதிரொலித்தது. ஐயமா, மகிழ்ச்சியா, எச்சரிக்கையா என்று இனந்தெரியாத உணர்வொன்று அவள் முகத்தில் ஓடிமறைய மெல்லக் கேட்டாள். “எதற்கு?”

“எந்தச் செய்தியும் சொல்லப்படவில்லை. மகா அதிகாரம் குடும்பத்தாரை உடன் அழைத்துவரும்படி மட்டும் உத்தரவு.” அந்தப் பதிலைச் சொல்லும்போது ஒருகணம் அவள் முகத்தை நிமிர்ந்துநோக்க முடிந்ததில்  அவன் உள்ளூரத் திருப்திப்பட்டுக்கொண்டான்.

மகா அதிகாரம் என்பது மன்னருக்கு அடுத்த பதவி. அரசவையின் முதல்வர் அவர். அந்தப் பட்டத்திற்குரியவர் வீட்டில் இல்லாத நேரத்தில் எதற்காக எங்களை அழைக்கவேண்டும்?  ஒருவேளை அவர் திரும்பிவிட்டாரா? அரசர் பாராட்டுமளவு ஏதும் சாதித்துத் திரும்பியிருக்கிறாரோ?

மகா அதிகாரம் வீடு வந்தே பலநாட்கள் ஆயிற்றே. சபரகாமத்திற்குச் சென்றவர் இன்னும் திரும்பவே இல்லை. வெல்லசையில் நிற்கின்றாரென்றும் கல்லுத்துறைக்குச் சென்றுவிட்டதாகவும் பலபேர் கதை சொல்கிறார்கள். எங்கே அரண்மனையிலா இப்போது இருக்கிறார்?

மன்னர் அளித்த உத்தரவு என்னவென்று தெளிவாகச் சொல்லிவிட்டேன்.அவன் பணிவாக ஆனால், அழுத்தமாகப் பதில் சொல்லி மீண்டும் தலைகுனிந்துகொண்டான். தன் கேள்வியை அவன் தவிர்த்துவிட்டதில் அவள் புருவங்கள் இன்னும் சுருங்க, அவளைத் துணுக்குறச் செய்தது பின்னே கேட்ட குரல். “யாரடி அது?”

திரும்பிய குமாரி கதவோரம் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த சகோதரி காமினியைக் கண்டாள். “காத்திரு. இதோ தயாராகி வந்துவிடுகிறோம்.” அவனிடம் ஆணையிட்டு அவள் திரும்ப, அவன் மெல்லத் தன்னை நெகிழ்த்திக் கொண்டு குதிரையை நோக்கி நடந்தான்.

அனைவரையும் அரண்மனைக்கு உடனே வரச்சொல்லி உத்தரவாம். ஏனென்று தெரியவில்லை.” காமினி முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. “ஒருவேளை உன் கணவனுக்கு வேறேதும் பதவி உயர்வு கிடைத்திருக்கிறதோ? கடைசியாக அவர் மகா அதிகாரம் பதவியேற்றபோது தானே எல்லோரையும் ஒன்றாக அரண்மனைக்கு அழைத்தார்கள்?”

ஆனால் அப்போது அனைவரையும் வரச்சொல்லி அரண்மனைத் தேரை அல்லவா அனுப்பியிருந்தார்கள்!” ஒரு எளிய காவலனை ஒற்றைக் குதிரையில் அனுப்பி, மகா ஸ்ரீலஸ்ரீ இரத்தளைக் குடும்பத்தாரை வரச் சொல்லுவது என்ன நீதி?

பொறுத்துப் பொறுத்து இருந்த குழந்தை இப்போது வீறிட்டு அழுதது. “ஐயோ, பால் தருகிறேனடி  இதைப் பெற்று நான் படும் பாடுபுலம்பியபடியே வரவேற்பு மண்டபத்தின் ஓரமாக இருந்த மாடிப்படியில் அமர்ந்த குமாரி அதற்குப் பாலூட்ட ஆரம்பித்தாள். “மூன்று பெற்ற பின்னும் சும்மா இருக்காமல் இதைப் பெற்றெடுத்த உன்னையும் அத்தானையும் சொல்லவேண்டும்.” சொல்லிய காமினி குபீரென்று சிரித்தாள்.

போடி அந்தப் பக்கம்அக்காளிடம் பேசும் பேச்சைப் பார்..” குமாரிக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. “போய் அத்தை ஆட்களைத் தயாராகச் சொல்லிவிட்டுவா. ஆமாம் எங்கே அவன் மத்துமன்?” மாளிகையின் தாழ்வாரத்தில் மூத்தவன் பண்டாரனும் இளையவள் டிங்கிரியும் விளையாடுவதைக் கண்ட காமினி அப்போது தான் மத்துமன் இல்லாததைக் கவனித்தாள்.

பண்டார, எங்கேடா உன் தம்பி?” மூத்தவன் பண்டாரனுக்குப் பத்து வயது தான். டிங்கிரி அவனுக்கு ஐந்து வயது இளையவள். இரண்டு பேருக்கும் மிச்சம் நடுவிற் பிறந்த மத்துமன். அவன் வாய்த்துடுக்கைப் பார்த்தால் யாரும் எட்டு வயது என்றே நம்பமாட்டார்கள். எங்காவது போய் அளந்துகொண்டு இருப்பான். எங்கு போனானோ?

மத்துமனைத் தேடி  வெளியே நடந்தாள் காமினி. “ஐயோ அன்னையே.. அந்த இயக்கனைக் கண்டுபிடிப்பதென்றால் போதும் போதுமென்று ஆகிவிடுமே. அவனைத் தேடிப்பிடித்து மூன்றையும் குளிப்பாட்டி எடு. எல்லோரும் சீக்கிரம் புறப்பட்டாக வேண்டும்.” கூடத்துக்குள்ளிருந்து கத்திய குமாரியின் குரல் பின்புறம்  கேட்டுக்கொண்டிருந்தது.

- 2 –



வெள்ளையரால் முற்றுகை இடப்பட்டு கண்டி நாடு கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. சுற்றிவர உரோகணம், கோட்டை, வன்னி, யாழ்ப்பாணாயன் பட்டினம், வடக்கே சோழமண்டலம் எல்லாம் இப்போது வெள்ளையர் கைகளில். சிலாபத்துறை, தேவன்துறை, மாத்துறை, காலி, திருக்கோணமலை, மட்டக்களப்பு என்று, கண்டி நாடு கொண்டாடிய துறைமுகங்கள், வாணிபமையங்கள் எல்லாமே கைநழுவிப் போயிற்று.



பத்தாண்டுகளுக்கு முன் அடிவாங்கிப் புறங்காட்டி ஓடியபின்னும் வெள்ளைக்காரன்  திருந்தவில்லை. அந்தப் பூனைக்கண்ணன் எந்தவழியால் நுழையலாம் என்று கண்டியைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறான். பூனை… வந்தேறிப் பூனை…. அதை விரைவிலேயே கிழித்துக் கடலில் போடும் இந்தக் கண்டிச்சிங்கம். யாரென்று நினைத்தான் எங்களை!   பெருமூச்சு உறுமலாக வெளிவர போகம்பரைக் குளத்தின் கரையில் தவிப்புடன் நின்றுகொண்டிருந்தார் கெப்பட்டிப்பொலை அதிகாரம். கண்டி அரசின் ஆளுகைக்குட்பட்ட ஊவாவிற்குப் பொறுப்பான அதிகாரம் அவர்.



கண்டி போகம்பரைக்குளம் காலைச்சூரியன் ஒளியில் பளபளத்துக்கொண்டிருந்தது. நீலவானில் பரவும் வெண்மேகங்களின் கண்ணாடி விம்பமென, குளத்தின் கருநீலத் தண்ணீரில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அன்னப்பட்சிகளின் கூட்டம். ஏதோ ஒரு கணத்தில் அவையனைத்தும் ஒன்றாய்க் கிளம்பி வானுக்கு எழுந்த காட்சி வெண்சேலை படபடத்து காற்றில் பறந்து மேகமாய் மாறிவிட்டது போல் தோற்றமளித்தது.

இயற்கையின் பேரழகில் ஈடுபடமுடியாமல் அலைந்த கண்களைத் தூரத்தே தெரிந்த தலதா மாளிகையில் பதித்தார் அவர். அலைகளின் சலனத்தில், அக்கரையில் தெரிந்த தலதா மாளிகையின் எண்கோண வடிவப் பார்த்திருப்பு மண்டபம் ஓர் ஓடத்தில் மிதப்பது போல் தோன்றியது. சில ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த பரந்த நெல்வயலை எண்ணிப்பார்த்தார். பார்த்திருப்பு மண்டபத்தையும், வயல்வெளியை நிரப்பி இந்தக் கண்டிக்குளத்தையும் கட்டியதற்காக மன்னன் இழந்தவை தான் எத்தனை! இராசகாரியத்தில் உயிரிழந்த மக்கள்தொகை தான் எத்தனை! அத்தனை உயிரையும் குடித்து மர்ம அழகியென, கரையில் நீர்முட்டி களுக்கென்று சிரித்து நிற்கின்றது இன்று போகம்பரைக் குளம். 

பாற்கடல் என்று பெயர்சூட்டித் தான் இந்தக் குளத்தைக் கட்டினான் விக்கிரமன்.  குடிமக்களின் உயிரைக்கொட்டி, வரிப்பணத்தைக் கொட்டிக் கடைந்து உருவாக்கிய பாற்கடல். கிரி முகுடம்.   ஆம் பாற்கடலே தான். அன்னப்பட்சிகளின் வெண்ணிறகுகளால் மூடப்பட்ட பாற்கடல்.

அதில் பள்ளிகொள்ளும் திருமால் அங்கே தெரிகின்றான். அவனது பாம்புப்படுக்கை பத்தி விரித்து அதோ தெரிகின்றது பார்த்திருப்பு மண்டபமாய். பளிச்சிடும் நாகமணி அதன் உச்சிக்கலசம். அது நஞ்சு கக்கக்கூடும். அது விழுந்து, பலர் உயிரைக் குடித்த இந்தப் பாற்கடல் ஆலகாலத்தை எழுப்பவும் கூடும்.

இலங்காத்துவீபத்தில் பௌத்தத்தின் காவலன் திருமால். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு புத்த சாசனத்தைக் காப்பதாக உறுதியளித்துத் தென்கரையில் கோயில் கொண்ட தெவிநுவரன். ஐயாயிரம் ஆண்டுகள் என்னத்துக்குஇதோ வந்துவிட்டது பேரழிவு….. எப்படிக் காக்கப்போகிறான் பௌத்தத்தை…. மும்மணிகளே!” ஏக்கப் பெருமூச்சுடன் தலைகுனிந்தார் கெப்பட்டிப்பொலை அதிகாரம்.

பின்புறம் கேட்ட குதிரைவண்டியின் சத்தம் அவரைக் கனவுலகிலிருந்து மீட்டு திரும்பிப் பார்க்கவைத்தது. மகா அதிகாரம் மொல்லிகொடை அங்கு நின்றுகொண்டிருந்தார். வண்டியில் இருந்தபடியே அவர் கையசைக்க ஒன்றும் சொல்லாமல் நடந்துவந்து வண்டியில் ஏறிக்கொண்டார் கெப்பட்டிப்பொலை. வண்டி புறப்பட்டது.

அழைத்துவர வீடுவரை சென்றிருந்தேன். ஏற்கனவே கிளம்பிவிட்டதாகச் சொன்னார்கள்.” மொல்லிகொடை அதிகாரம் மௌனத்தைக் கலைத்தார். கண்டி அரசின் ஒவ்வொரு ஆட்சிப் பிரிவும் ஒவ்வொரு அதிகாரத்தின் ஆளுகையின் கீழ் இருக்கின்றது. மொல்லிகொடை வடமேற்கு ஆட்சிப் பிரிவான ஏழுகோரளையின் அதிகாரம். இப்போது மன்னன் அவரை அதிகாரங்களுக்கான தலைமைப்பதவியில், ‘மகா அதிகாரமாகநியமித்திருந்தான்.

மன்னன் கடுங்கோபத்தில் இருக்கிறான். எகலப்பொலையைப் பழிவாங்காமல் அடங்கமாட்டேன் என்று கொதிக்கிறான்பெருமூச்சோடு சொன்னார் கெப்பட்டிப்பொலை. எகலப்பொலை அவரது மைத்துனன். அவன் தான் முன்பு மகா அதிகாரமாக இருந்தவன். சபரகாமத்திலும் வெல்லசையிலும் ஏற்பட்ட கலவரங்களை அடக்கிவிட்டு கல்லுத்துறைக்குச் சென்றவன் திரும்பவில்லை. அவன் கொழும்பில் ஆங்கிலேயருடன் சேர்ந்துவிட்டதாகக் கதை உலவுகின்றது.

மொல்லிகொடை பார்வையை வெளியே திருப்பிச் சொன்னனர் மன்னனும் நம்பிக்கைத் துரோகத்தை எத்தனைக்குத் தான் பொறுத்துக்கொள்வது. முன்பு பிலிமத்தலாவை. இப்போது எகலப்பொலை...” அவர் பேச்சை இடைவெட்டி சீற்றத்துடன்உளறாதீர்கள் மொல்லிகொடை. சபரகாமத்துக் கலவரத்தை அடக்க மன்னனே முன்னின்று வழியனுப்பி வைத்தவன் என் மைத்துனன். அவனை இராசத்துரோகி என்று பேச்சுக்கும் சொல்லாதீர்கள்.” என்றார் கெப்பட்டிப்பொலை. மொல்லிகொடைக்கும் எகலப்பொலைக்கும் ஆகாது என்பது அவர் ஏற்கனவே அறிந்த விடயம் தான். அவனிடம் மன்னன் பறித்த மகா அதிகாரம் பதவியை இப்போது இவர் பெற்றிருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.  எகலப்பொலைக்கு எதிராக மன்னனைத் திருப்புவதே இந்த ஆள் தானோ! கெப்பட்டிப்பொலை சற்று உஷாரானார்.  

எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் மொல்லிகொடை அவர் பக்கம் திரும்பினார் புரிகிறதல்லவா? குலப்பெருமையா  ராஜவிசுவாசமா என்று இப்போதாவது முடிவெடுத்துக் கொள்ளுங்கள்கண்களில் சற்றுக் குழப்பத்தைக் காட்டிய கெப்பட்டிப்பொலை பதிலேதும் சொல்லவில்லை.

வண்டிச் சக்கரங்களின் ஓசையை மீறிய மெல்லிய குரலில் இரத்தளை வமிசம் தனக்கு எதிராகச் சதி செய்கிறது என்று மன்னன் சந்தேகிக்கிறான். அந்தப் பேச்சு ஏன் வருகிறது என்ற காரணங்களை ஆராயாமல் கொலைகளாலும் தண்டனைகளாலும் நம்மை அச்சுறுத்தப் பார்க்கிறான். அதன் விபரீதம் அவனுக்குப் புரியப்போவதில்லை.” என்றார் மொல்லிகொடை.

குமரப்பா தெருவில் மலபாரிகளின் ஆட்டம் அளவுக்குமீறிச் செல்கின்றது. ஒன்று இந்தக் கண்டியில் உயர்குடிகள், இரத்தளை வமிசத்தார் நாமாக இருக்கவேண்டும், இல்லை அந்த நாயக்கர்களாக இருக்கவேண்டும்.  இராசகுடும்பத்தினர் என்ற ஒரே காரணத்துக்காக, அவர்களைப் பொறுத்துக்கொண்டு போவதற்கும் ஒரு எல்லை இருக்கின்றது.”  மொல்லிகொடையின் கண்களில் அனல் தெறித்தது.

அவர் சொல்லவருவதைப் புரிந்துகொண்ட கெப்பட்டிப்பொலை குமரப்பா தெருவில் வாழும் தமிழர்களின் ஆட்டம் இப்போது கொஞ்சம் அதிகம் என்பது உண்மை தான். ஆனால் எனக்கு வெள்ளைக்காரனைப் பிடிக்கவில்லை. மலபாரிகளிலும் வெள்ளையன் பரவாயில்லை என்று நாம் எடுப்பது சரியான முடிவு தானா? தெரியாத தேவதைக்குத் தெரிந்த பேய் பரவாயில்லை என்பது பழமொழி.” என்றார் தயக்கத்துடன்.

மொல்லிகொடை திரும்பினார். “நீங்கள் இதுவரை வெள்ளையரோடு பழகியதில்லை, கெப்பட்டிப்பொலை. ஆங்கிலேயர் நாகரிகம் அறிந்தவர்கள். இந்த வடுகர்கள் போல் பண்பாடு தெரியாதவர்கள் இல்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு, வெள்ளையருடன் பிலிமத்தலாவை அதிகாரம் இணைந்ததற்காக, கண்டி மாநகர் கொடுத்த விலை கொஞ்சநஞ்சமல்ல. இப்போது ஏற்பட்டுள்ள நிலைமையும் அப்படித்தான். நாம் பொறுத்திருந்து தான் காய்நகர்த்த வேண்டும்.”

வெள்ளையர் பற்றிய பேச்சிலிருந்து விலக நினைத்த கெப்பட்டிப்பொலை,  அதை விடுங்கள். இப்போது பிரச்சினை வடுகர்கள் அல்ல. அஸ்கிரிய பீடத்திலிருந்து வாரியப்பொல சுமங்கல தேரர் சென்று பேசியும் எந்தப் பயனும் இல்லையாம். எகலப்பொலையைத் தண்டித்தே ஆகவேண்டும் என்று மன்னன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறான். அதன் விளைவுகள் அஞ்சக்கூடியவை. உடனடியாக எகலப்பொலை குடும்பத்தாரை அரண்மனைக்கு வரச்சொல்லி அவன் ஆணையிட்டிருக்கிறான்.” என்றார், மெல்லிய பதற்றத்தோடு.

வெள்ளம் கரைகடந்துவிட்டது அதிகாரம். இரத்தளைகள் உட்பட, யாராக இருந்தாலும் துரோகிகள் அனைவரையும் கூண்டோடு ஒழிப்பேன் என்று வஞ்சினம் உரைத்திருக்கிறான் ராஜசிங்கன். என் ஏழுகோரளைப் பகுதியில் கலகம் செய்த இருநூறு பேர் என் படையினரால் கைதுசெய்யப்பட்டு இப்போது இழுத்துவரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்மொல்லிகொடை உணர்ச்சியேதுமின்றிச் சொன்னார்.

இன்று இரவு அவர்கள் இங்குவந்து சேரக்கூடும். பெரும்பாலும் சிரச்சேதம் தான். ஏழுகோரளையின் அதிகாரமான என்னை அச்சுறுத்தவும், அதுவே சிறந்த வழி.” கெப்பட்டிப்பொலை அதிர்ந்துபோய் மொல்லிகொடையைப் பார்த்தார். “என்றால் எகலப்பொலை அதிகாரம்….?”

இப்போதைக்கு அவனுக்கு ஆபத்தில்லை. ஆனால் அவன் குடும்பத்தாரை மன்னன் அழைத்துவரச் சொல்லியிருக்கிறான் அல்லவா?” கெப்பட்டிப்பொலையின் இதயத்துடிப்புக் கூடியது. மொல்லிகொடை பெருமூச்சு விட்டுத் தொடர்ந்தார்  எனக்கு சொல்லத்தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு இரத்தளை வமிசத்தார், நாம் எல்லோருமே அவன் எதிரிகள்.”

இன்னொன்று கெப்பட்டிப்பொலை, அவன் கோபம் எகலப்பொலை மீது மட்டுமல்ல. மொனராவில இரத்தளை வமிசத்துக் கெப்பட்டிப்பொலை அதிகாரம் உங்கள் மீதும் தான். ஏனென்றால் நீங்கள் எகலப்பொலையின் மைத்துனன். அவன் மனைவி உங்கள் தங்கை.”

வண்டிச்சக்கரம் ஒரு கல்லில் ஏறி இறங்கிக் குலுங்கியது. எகலப்பொலையின் மனைவி குமாரிகாமியும் அவளது அழகான நான்கு குழந்தைகளும் கெப்பட்டிப்பொலையின் நினைவில் ஒருகணம் மின்னி மறைந்தார்கள். அடிவயிற்றில் ஊசி ஏற்றியது போல் அவர் நடுங்கினார். “ஐயோ புத்தபகவானே.. அவர்களைக் காப்பாற்றும்.” கெப்பட்டிப்பொலை பதற்றத்துடன் நெஞ்சைப் பிடிக்க, தூரத்தே நெருங்கிவந்தது பார்த்திருப்பு மண்டபம்.

- 3 –


தலதா மாளிகையின் வடமேற்கே இருந்த நாத தேவாலயம் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. அதன் முன்றலில் விஷ்ணு தேவாலயத்திற்கு எதிரே இருந்த செண்டுவெளியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. ஒருபுறம் மொல்லிகொடை, கெப்பட்டிப்பொலை முதலான அதிகாரங்களும் திசாவைகளும் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிர்ப்புறம் நாயக்க குலத்துப் பிரமுகர்கள் தங்களுக்குள் கூடிப்பேசியபடி நின்றுகொண்டிருந்தார்கள். நாத தேவாலயத்து நுழைவாயிலில், தலதா மாளிகையின் தியவதன நிலமையான கப்புவத்தை அதிகாரம், கையில் நீர்ப்பாத்திரமேந்தி தடுமாற்றத்துடன் காணப்பட்டார். அவருக்கு அருகே பிக்குகளுக்கும் பிராமணர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த இடம் காலியாக இருந்ததையும், அங்கு வாரியப்பொல சுமங்கல தேரர் மாத்திரம் சஞ்சலத்துடன் வேறொரு இளம்பிக்குவுடன் உரையாடிக் கொண்டிருந்ததையும் கூட்டம் கவனிக்கத் தவறவில்லை.

காமினியும், குமாரியும், குழந்தைகள் லொக்கு பண்டாரன், மத்தும பண்டாரன், டிங்கிரி மெனிக்கே ஆகியோரும் எகலப்பொலை விஜயசுந்தர மகா அதிகாரத்தின் ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் நாத தேவாலயத்தின் எதிர்ப்புறம், பொதுமக்களின் முன்னணியில் நின்றிருந்தார்கள். எகலப்பொலைக்கு ஏதோ விழா எடுக்கப் போகிறார்கள் என்றெண்ணி வந்திருந்த அவர்கள், நாத தேவாலய முன்றலில் எல்லோரும் கூடியிருப்பதாலும், மன்னன் வருகை அங்கேயே அறிவிக்கப்பட்டிருந்ததாலும் சற்றுக் குழம்பிப் போயிருந்தனர்.

எதிர்பாராத கணத்தில் முழங்கிய தம்பட்டமும் கடப்பறையும் மன்னன் வந்துவிட்டதை அறிவித்தன. அனைவரும் முழந்தாளிட்டுப் பணிய, வெற்றி வருக, வெற்றி வருக என்ற வாழ்த்தொலி விண்ணைப் பிளக்க, நாத தேவாலயத்தின் மாடத்தின் மீது கண்டி உயர்நாட்டு மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தோன்றினான்.

குப்பென வீசிய புளித்த கள் நாற்றம், மன்னனின் மாடத்தை நெருங்கியிருந்த அரசவைப் பிரமுகர்களை மூக்கைச் சுழிக்கவைத்தது.  முகம் சோபையிழந்து கண்மடல்கள் வீங்கிச் சிவந்து, அரசன் தன் இயல்பான கம்பீரத்தை இழந்து காணப்பட்டான். கிரீடத்தை அணிந்திருந்த அலட்சியமும்,  ஆடையணியில் தெரிந்த நேர்த்தியின்மையும், அவன் நின்றபோது தென்பட்ட மெல்லிய தள்ளாட்டமும் அவன் நிதானமாக இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லின.

மன்னன் ஏதோ சொல்லிக் கத்துவதை உணர்ந்ததும், மண்டியிட்டவர்கள் மெல்ல எழுந்தனர். வாழ்த்துக்கோஷங்கள் அடங்கி பலத்த அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அவனது குரல் ஓங்கியொலித்தது. “எங்கே அவள்எங்கே அவள்விலைமகள் எகலப்பொலை குமாரிகாமி எங்கே!”

கெப்பட்டிப்பொலை தன்னுடலில் கடந்துசென்ற மெல்லிய மயிர்கூச்செறிவை உணர்ந்தார். மன்னன் வருகையைக் கண்டு மலர்ந்திருந்த எகலப்பொலை குடும்பத்தாரிடையே மெல்லிய சலசலப்பு ஏற்பட்டது. குமாரிகாமி நெஞ்சில் கைவைத்து நின்றாள்.

தன்னை அப்படி அழைப்பது உண்மையிலேயே அரசர் தானா. மொனராவில இரத்தளை வமிசத்துச் சீமாட்டி குலகலா கெப்பட்டிப்பொல குமாரிகாமியை அப்படி அழைப்பது உண்மையிலேயே இந்தக் கண்டி நாட்டு மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தானா!”

அவன் அவளைக் கண்டுவிட்டான். மாடத்திலிருந்து பாய்ந்து கீழிறங்கிக் கூச்சலிட்ட மன்னனைக் கண்டு கூட்டமே அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றது. “பஞ்சமாபாதகி, உன் கணவன் பேடி எகலப்பொலை என்ன செய்தான் தெரியுமா…. கணிகையே, உன்னைக் கொன்றொழித்தாலும் என் கோபம் தணியாது!” அதிகாரங்களும் திசாவைகளும் ஆடிப்போய் நிற்க, நிலைமையைச் சுதாகரித்துக்கொண்ட வாரியப்பொலை சுமங்கல தேரர் ஓடோடிச் சென்று மன்னன் முன் நின்றார்.

அரசேசினத்தை ஆற்றிக்கொள்ளுங்கள். இது நாத தேவாலயம். கருணையின் இறைவர் மைத்திரி தேவரின் கோயில். புத்தபிரானின் தர்மச்சக்கரம் சுழலும் தேவஸ்தானம். எங்குமே சினத்தோடும் வஞ்சத்தோடும் செய்யப்படும் விசாரணையில் நீதி கிடைப்பதில்லை.”

சட்டென நின்ற மன்னன் போதையேறிய கண்கள் இடுங்க அவரைப் பார்த்தான். அச்சமற்ற விழிகளுடன் காவியுடையில் நிமிர்ந்து நின்றார் சுமங்கல தேரர். ஒருகணம் அவர் எகலப்பொலையின் நெருங்கிய நண்பர் என்ற எண்ணம் தோன்றி மறைய அவன் பற்களைக் கடித்தபடி கூவினான்.

குடிமக்களே….. செங்கடகலைக் கண்டி உயர்நாட்டின் ஆன்றோர்களே, சான்றோர்களே! என் முன்னாள் மகா அதிகாரத்துக்கு நான் கொடுத்த இடம், எங்கு போய் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா? நாயைப் போல் என்னைச் சுற்றிவந்து வாலாட்டிய அந்த எகலப்பொலை இன்று நிற்கும் இடம் அந்த வெள்ளையனின் பாசறை!”

அடியே குமாரிகாமிஉன் கணவன் எனக்கெதிராகக் கலகமூட்டப் போகிறானாம்.. கண்டி உயர்நாட்டின் முன்னாள் மகா அதிகாரம், எகெலப்பொல விஜேசுந்தர விக்கிரமசிங்க சந்திரசேகர செனவிரத்ன முதியான்சே, அந்த வெள்ளைக்கார நாய்களுடன் இணைந்து கண்டியைக் கைப்பற்றப்போகிறானாம். ஹாஹா

குமாரிகாமி திடுக்கிட்டாள். அவள் தோளைப்பற்றிய காமினிஎன்னடி சொல்கிறார் அரசர்? சபரகாமத்துக் கிளர்ச்சியை அடக்கத்தானே சென்றார் உன் கணவர்? வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்து விட்டாரா?” என்று நடுங்கும் குரலுடன் கேட்டாள்.

அவன் அவளை விரல்சுட்டி அலறினான். “நம்பவில்லையடி நான். எத்தனையோபேர் சொன்னபோதும், நான் அவன் அப்படிச் செய்யக்கூடியவன் என்று துளியும் நம்பவில்லை. உடனே என்னை வந்து சந்திக்கும்படி ஆணையிட்டேன். இன்றோடு இரண்டுவாரம்…. பயந்து ஒளிந்தே விட்டான்.. துரோகி…. மடியில் கனம் இல்லாமல் பயம் எதற்கு? நன்றிகெட்ட நாய்!”

அவன் அதிகாரங்கள் பக்கம் திரும்பினான். கெப்பட்டிப்பொலையும் மொல்லிகொடையும் அருகருகே தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தனர். “பாடம் கற்பிக்கிறேன், அந்த இழிந்த பெண்குறியின் புத்திரனுக்குப் பாடம் கற்பிக்கிறேன். அவன் மட்டுமல்லஇங்குள்ள எந்த நரியாவது நாயக்க மன்னனுக்கெதிராக எழுந்தால் அவன் குடும்பத்துக்கு என்ன நிகழும் என்று செய்து காட்டுகிறேன்.”

அவன் தியவதன நிலமையைக் கைசுட்டினான். “சொல்லும் தியவதன நிலமைஇராசத்துரோகிகளின் குடும்பத்தாருக்கு என்ன தண்டனை?” கூட்டத்துக்குள் மெல்லிய சலசலப்பு ஏற்பட்டது. தியவதன நிலமை அசையாமல் நின்றார்.

கலவரம் படர்ந்த முகத்துடன் தன் குழந்தைகளைத் தன்னோடு அணைத்துக்கொண்டாள் குமாரிகாமி. மன்னருக்கு சித்தம் கலங்கிவிட்டதா? என்ன செய்யப்போகிறார் எங்களை? கடவுளேஇது மட்டும் ஏன் கனவாக இருந்துவிடக்கூடாது?

ஏய் தியவதன நிலமைஉம்மைத் தான், சொல்லும்! நீதிநூல்கள் என்ன சொல்கின்றன?” “தவறு செய்த இராசத்துரோகியை தண்டிப்பதே கண்டி நாட்டு வழக்கம் மன்னவா, செங்கடகலையின் எந்த மன்னரும் இதுவரை அவன் குடும்பத்தை தண்டித்ததில்லை.” என்று மெல்லச்சொன்னார் தியவதன நிலமை.

இப்போது தண்டிக்கப்போகிறான் நிலமை! மதிப்பு, கௌரவம், அன்பு என்று எல்லாவற்றையும் இராசத்துரோகியோடு பகிர்ந்துகொள்ளும் குடும்பத்தார் தண்டனையையும் ஏன் பகிர்ந்துகொள்ளக் கூடாது? சொல்லும், இராசத்துரோகிகளின் குடும்பத்தாருக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது?” அரசனின் குரலில் இருந்த சீற்றமும் கடுமையும், தியவதன நிலமையைத் தடுமாற வைத்தது. அவர் உமிழ்நீரை விழுங்கியபடி தலைதாழ்த்திச் சொன்னார்இராசத்துரோகியின் வாரிசுகளைத் தலையரிந்து கொல்லவேண்டும். அவன் குடும்பத்தவரைக் கல்லோடு கட்டி நீரில் வீச வேண்டும்.”

பித்துப் பிடித்தவன் போல் விடாமல் சிரித்தபடியே அதிகாரங்களை மெல்ல நெருங்கினான் மன்னன். “ஹாஹா..… அருமையான தண்டனைஅது மட்டும் போதுமாமலை போல நம்பினேனே! அந்த இழிமகன் எனக்குச் செய்த துரோகத்துக்கு அதையெல்லாம் விடப் பெரிய தண்டனை தரவேண்டாமா? சொல்லுங்கள் அதிகாரம்?” பழைய கள்ளின் முடைநாற்றம் மூக்கைத் துளைக்க கெப்பட்டிப்பொலையின் அருகே குனிந்தான் மன்னன். அவருக்கு வியர்த்துக் கொட்டிக்கொண்டிருந்தது.

பெரிய அரிவாளுடன் மரணதண்டனை நிறைவேற்றும் கஹல குலத்தவன் ஒருவன் அங்கே வந்தான். உரலும் உலக்கையும் கொணர்ந்து மைதான மத்தியில் வைக்கப்பட மக்கள் நடுவே சலசலப்புக் கூடியது. நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்தும் செய்வதறியாத சுமங்கல தேரர், கெப்பட்டிப்பொலையையும் குமாரிகாமியையும் மாறிமாறிப் பரிதாபமாகப் பார்த்துக் கைகளைப் பிசைந்துநின்றார். என்ன நிகழப் போகின்றது என்பதை உணர்ந்துகொண்ட திசாவைகளும் அதிகாரங்களும் பதற்றமடைந்தார்கள். நாயக்க குலத்தவர்கள் அங்கில்லாதவர்கள் போல வெறித்த விழிகளுடன் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தனர்.

குமாரிகாமி வீறிட்டு அலறினாள். “மன்னவா, கருணைகொள்ளுங்கள். எங்கள் மீது கருணைகாட்டுங்கள். யாரோ தவறான செய்தி தந்திருக்கிறார்கள். என் கணவன் குற்றமற்றவர். சபரகாமத்துக் கிளர்ச்சியை அடக்க அவரை முன்னின்று அனுப்பியதே தாங்கள் தானே! அவருக்கு மகா அதிகாரம் பதவிசூட்டி விழாக் கொண்டாடியதும் தங்கள் இந்த இரு திருக்கரங்கள் தானே.”

அவள் புலம்பியபடியே குழந்தையை காமினி கையில் கொடுத்துவிட்டு மத்துமனையும் லொக்கு பண்டாரனையும் அணைத்துக்கொண்டாள்.  இதோ என் இருமக்கள். உங்கள் அரண்மனையில் விளையாடி வளர்ந்தவர்கள். இவர்கள் மீது கருணைகாட்டுங்கள். உங்கள் மீது தெய்வம் இறங்கிப் பலிகேட்கிறதென்றால், என்னுயிரை எடுத்துக்கொள்ளுங்கள்இவர்களை விட்டுவிடுங்கள் அரசே!”

வாயை மூடடி விலைமகளே. உனக்கு மட்டுமல்ல, உன் குடும்பத்துக்கே நான் வழங்கப் போகும் தண்டனையைக் கேட்டு,  உன் ஆசைக் கணவன் கணம் கணம் துடித்துச் சாகவேண்டும். இனி வாழ்நாளில் கண்டி மன்னனுக்கு கனவிலும் தீங்கு நினைக்கக்கூடாது என்ற எண்ணம் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். வரும்... வந்தே தீரும். யாரங்கே…. வெட்டடா அவள் மக்களை!”

கொலையாளன் அவளை நெருங்கி லொக்கு பண்டாரனை இழுத்தான். “புத்தபகவானேஎன்று ஓலமிட நினைத்த கெப்பட்டிப்பொலையின் குரல் தொண்டைக்குள்ளேயே அடைத்து நின்றது. “அன்னையே விட்டுவிடுங்கள்.. ஐயோ என் புத்திரா..” அலறியபடியே அவன் காலில் விழுந்தாள் குமாரிகாமி.

ம்ம்சீக்கிரம்! நான் பார்த்திருப்பு மண்டபத்துக்குச் செல்வதற்குள் இது முடிந்துவிடவேண்டும்ஆணையிட்டுவிட்டு பரிவாரங்கள் சூழ  தலதா மாளிகை நோக்கி நடக்கலானான் மன்னன். கூட்டத்துக்குள் பலர் வாய்விட்டு அழ ஆரம்பித்தார்கள். குழந்தைகள் பல அச்சத்துடன் தங்கள் தாய்மாரின் கால்களுக்குள் புகுந்துகொண்டன. முதிர்ந்த ஆடவர்களும் விசும்ப ஆரம்பித்தார்கள்.

லொக்கு பண்டாரன் அச்சத்துடன் தாயைப் பற்றிக்கொண்டான். கொலையாளன் அவனை இழுக்க, மறுபக்கம் தன் தாயின் பிடியை உதறி விலக்கி அவன் முன் வந்து நின்றான் மத்தும பண்டாரன். “அண்ணா, வெட்கமாக இல்லை உனக்கு? மரணம் வந்தால் அஞ்சாமல் எதிர்கொள்ள வேண்டும் என்று தந்தை சொல்லவில்லை? என்றோ போகும் உயிர் தானே? நான் எப்படித் தைரியமாகச் சாகிறேன் என்று பார். உம்.. என்னைக் கொல்லுங்கள்.” என்றான்.

ஐயோ மத்துமபைத்தியமா உனக்கு!” குமாரிகாமி அவனைப் பற்றுவதற்குள், கொலையாளன் அவனைப் பிடித்து மைதானத்தின் நடுவே கொண்டு சென்றான். ஒரே வெட்டு… “புத்திரா!” அந்தப் பிஞ்சுக் கால்கள் துடிப்பதைப் பார்த்து வீறிட்டலறினாள் அவள்.

கூடியிருந்த தாய்மார் விம்மியழுதனர். சிலர் கண்களைப் பொத்தினர். சிலர் தங்கள் குழந்தைகளை முந்தானைகளால் மூடி விசும்பினர். சிலர் தங்கள் பிள்ளைகளுக்கும் ஏதும் நடக்குமோ என்றஞ்சி அவர்களை அள்ளியணைத்துக் கொண்டு வீடுகளுக்கு ஓடினர். கெப்பட்டிப்பொலை உடல்குலுங்க அழுதபடியே சாய, அருகிலிருந்த அதிகாரம் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார்.

நாயக்கர்கள், நின்ற இடத்திலேயே பொறுமையின்றி அசைந்தனர். ஒரு காவல்வீரன் கைதளர விழுந்த ஈட்டியை மீண்டும் பற்றிக்கொண்டான். அதற்குள் மண்டபத்தைச் சென்றடைந்துவிட்ட விக்கிரம ராஜசிங்கன், கொடூரம் படிந்த கண்களுடன் அடுத்தது என்று கைகளை அசைத்தான்.

தேசிக்காய்கள் நறுக்கப்படுவது போல், ஒவ்வொன்றாக லொக்கு பண்டாரன், டிங்கிரி மெனிக்கே என்று தலைகள் மைதானத்தில் வீழ்ந்தன. எகலப்பொலையின் தம்பி தலையும் அறுத்தெறியப்பட்டது. மைதானத்தின் நடுவே கொழுத்த குருதி பாகாக ஊறியோடியது.  

அழுகைகளும் கேவல்களுமாக விசும்பிய கூட்டத்தின் ஒலி பேரோலமாக ஓங்கியொலித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பெண்கள் மயங்கிவீழ்ந்தனர்.  குமாரிகாமியோ கண்ணீர் பொலபொலத்து வழிய வாய்பிளந்து உறைந்துபோய் நின்றாள்.

ம்ம்.. நடக்கட்டும். அவன் வம்சத்தின் இறுதி வாரிசு. அந்தக் குழந்தையைக் கொன்றுவீசு.” கொலையாளனே திடுக்கிட்டுப் போய் நின்றான். “அறுத்தெறி முட்டாளே! அறுத்து அதன் தலையை அந்த உரலில் போடு. இழிகலவியில் பிறந்தவளே, உலக்கையை வாங்கி அதை இடி!”

என்ன!” குமாரிகாமி அதிர்ந்தாள். “போதும் அரசே போதும். என் மூன்று குழந்தைகளைக் கண்முன்னே பலிகொடுத்து விட்டேன்என்னையும் கொன்றுவீசி உங்கள் கோபத்தை ஆற்றிக் கொள்ளுங்கள். பெண்குழந்தை இது. எங்கள் குலக்கொடி. இவள் மட்டுமாவது மிஞ்சட்டும்.” காமினியிடமிருந்து குழந்தையைப் பறித்து மார்போடு அணைத்த அவள் விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

அந்தக் குழந்தையைக் கொடுக்காவிட்டால் இழிகுலத்தான் ஒருவனை அனுப்பி உன்னைப் புணரச்செய்வேன்.” குரூரம் நிறைந்த கண்களுடன் மன்னன் கூவ, விக்கித்துப் போய் திகைத்து நிமிர்ந்தாள் அவள். அந்த இடைவெளி கொலையாளனுக்குப் போதுமானதாக இருந்தது.

அந்தப் பச்சிளம்பாலகி, இருதுண்டாகி உரலில் கிடந்தாள். “புத்தபெருமானேஎன்றலறியபடியே நிலைகுலைந்து வீழ்ந்தாள் குமாரிகாமி. கூட்டத்தில் நின்றவர்கள்  கதறியழுது கண்ணீர்மல்கினர். மூதாட்டியர் மண்ணள்ளி வீசித் தூற்றினர். முன்னே ஓடிவந்து காறி உமிழ்ந்த ஒரு கிழவியை, அருகில் நின்ற காவலன் தடுத்துத் தள்ளிவிட்டான். கீழே விழுந்த அவள் எழுந்தமர்ந்து மாரிலும் வயிற்றிலும் அடித்து அழுதாள்.

சரிந்த வாழைமரமெனத் தரையில் கிடந்தாள் குமாரிகாமி. அவள்மீது பார்வையை நாட்டி நின்ற இராஜசிங்கன், இதழ்கள் ஏளனத்தில் விரியக் கூவினான் இழுத்து வாடா அவளை. உலக்கையைக் கொடு. இடிக்கட்டும் அவள் பெற்ற ஆசைமகளின் தலையை!” அவனது ஏவலை ஏற்று நாத தேவாலயம் பெருங்குரலில் எதிரொலித்தது.

தலதா மாளிகையின் மேல் கரிய மழைமேகங்கள் தோன்றின. சூரியன் ஒளி மங்கிவிட்டது போலிருந்தது.  கீழே சுருண்டுகிடந்த குமாரிகாமி சட்டென எழுந்தாள். அவள் முகத்தில் புதிதாக வந்து கூடியிருந்த வெறிப்பைக் கண்டதும் மக்களின் ஓலம் மெல்ல அடங்கியது. அவிழ்ந்த கூந்தல் காற்றில் பறக்க தளர்நடை இட்டுவந்து அவள் உரலை நெருங்கினாள். 

கொடுங்கோலனே..  ஒரு தாயின் வலியை நீ கணம் கணம் அனுபவிக்கப் போகிறாய். இந்த இடி உனக்கு…. இனி உன் வாழ்வில் மகிழ்ச்சி என்பதே இல்லை. கொடுந்துயர் உன்னை வாழ்நாளெல்லாம் வாட்டும். வாட்டி உன் உடலை உருக்கும். உன்னுடல் உருகிவழியும். துடித்துச் சாவாய் நீ!”

உலக்கையை ஓங்கி இடித்தாள் அவள். தேங்காய் சிதறும் சத்தத்துடன் உள்ளிருந்த தலை சிதறி குருதி பழச்சாறாய் வெளியே தெறித்தது. மைதானம் முழுவதும் பேரமைதி சூழ்ந்திருந்தது. எங்கோ ஒரு விம்மல் எழுந்து அடங்கியது.

இது உன் மனைவியரின் வயிற்றுக்குஉன் வம்சத்துக்குஎன் தலைமுறையையே சிதைத்த உன் கொடிவழி  வேதனையில் வாடி வறுமையில் உழன்று நாதியற்றுப் போகும். நாசமாய்ப் போகும்.” இடி! மட்குடம் மண்ணில் விழுந்து சிதறும் ஒலி! அந்த இடி உரலில் இறங்குவதை வெறித்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தான் விக்கிரம ராஜசிங்கன். கூடியிருந்தவர்கள் கைகூப்பிக் கண்ணீர் வடித்தனர். காற்றில் ஆடைகளின் படபடப்பு மட்டும் தொடர்ந்து கேட்க எங்கும் மயான அமைதி நிலவியது.

மாபாதகா நன்கு கேள்இந்த இடி இந்த நாட்டுக்குஇந்தப் பாவபூமிக்கு.. தேவி பத்தினி மாணிக்கம் மேல் ஆணை. இந்த மண் பரம்பரை பரம்பரையாய் எத்தனை மைந்தரின் குருதியைக் குடித்தாலும் அடங்காதுஅடங்கக்கூடாதுபெற்ற வயிறு பற்றி எரிவதன் வலியை இந்தக் கொடுங்கோலன் ஆண்ட இலங்காதீபத்தின் ஒவ்வொரு தாயும் அனுபவிப்பாள்காலாகாலத்துக்குஆமாம்.. காலாகாலத்துக்குகதிர்காமக் கந்தகுமாரா!”

உயரத் தூக்கி அவள் ஓங்கி உரலை இடிக்க, தண்ணீரில் கல் விழும் ஓசையுடன்  சதைக்குருதி அவள் முகத்தில் தெறித்தது. கண்ணைப் பறிக்கும் மின்னலொன்று மின்னிமறைய வானில் படபடவென பட்டாசு வெடிக்கும் ஒலியுடன் ஆயிரம் இடிகள்ஆம்என்று உறுமின. கூடியிருந்த ஒவ்வொருவரும் அந்த இடியைத் தங்கள் தங்கள் வயிற்றில் உணர்ந்து விதிர்விதிர்த்தனர்.

எங்கிருந்தோ சருகுகளை அள்ளி வீசியபடியே சுழற்காற்று ஒன்று சுற்றிவந்தது. தலதா மாளிகையின், நாத தேவாலயத்தின், விஷ்ணு தேவாலயத்தின் கோவில் மணிகள், சொல்லிவைத்தாற் போல் ஒன்றாகக் கணீரொலி எழுப்பின. கூடியிருந்த சிலரின் மேலாடைகளுக்குள் நுழைந்து அவற்றைச் சுழற்றி வீசிய காற்று, தென்மேற்கே இருந்த பத்தினி தேவாலயத்தின் மணிகளை ஒலிக்கச் செய்தபடி எங்கோ சென்று மறைந்தது.

மெல்லிய கேவலுடன் குமாரிகாமி மயங்கிச் சரிந்தாள். நெகிழ்ந்திருந்த அவள் மார்புக்கச்சை அவிழ, இரு தனங்களிலும் தாய்ப்பால் பெருகியோடியது. “அன்னையே கிரியம்மாஎன்று கைகூப்பிக் கண்ணீர் மல்கினர் பெண்கள். காமினி அலறியபடியே ஓடிவந்து அவளைத் தூக்கிக்கொண்டாள்.

சட்டென சுயநினைவு வந்தவன் போல் விக்கிரம ராஜசிங்கன் எழுந்துநின்றான். “ஒருவர் எஞ்சக்கூடாது, அந்த எகலப்பொல குடும்பத்தில். இந்தக் குமாரிகாமியையும் அவன் குடும்பத்தினர் எல்லோரையும் கல்லோடு கட்டிக் கண்டிக்குளத்தில் வீசுங்கள்.” ஆணையிட்ட அவன் மெல்லத் தள்ளாடியபடியே பார்த்திருப்பு மண்டபத்திலிருந்து இறங்கி மறைந்தான்.

கிழவிகள் அங்கேயே வட்டமாய் அமர்ந்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினர். குழந்தையில்லாத சில பெண்கள் ஓடோடிவந்து குமாரிகாமியின் கால்களில் விழுந்து புலம்பினர். ஏதோ எண்ணம் வந்ததுபோல, கால்களில் தொற்றிக்கொண்டு பயத்தில் ஒடுங்கி நின்ற குழந்தைகளைத் தூக்கி, கண்ணீர் வழிய முத்தமிட்டு அணைத்தனர் சிலர். ஆண்களும் முதியவர்களும் செய்வதறியாது வாய்பொத்திக் குலுங்கி அழுதனர்.

காவலர்கள் வந்து எகலப்பொல குடும்பத்தாரைச் சூழ்ந்துகொண்டனர். கதறிய மக்களை ஒதுக்கித் தள்ளி, அனைவரையும் வரிசையாகச் சீர்படுத்தினர். குமாரிகாமியும் காமினியும் உறைந்துபோனவர்களாக முன்னணியில் நிற்க, அந்த நீண்ட வரிசை, போகம்பரைக்குளம் நோக்கி நகரத் தொடங்கியது. மீண்டும் அழுகைகள், கேவல்கள், விசும்பல்கள், மண்ணள்ளித் தூற்றல்கள், காறி உமிழல்கள், சாபமிடல்கள்.

வாரியப்பொல சுமங்கல தேரர் ஏதோ முணுமுணுத்தபடியே இரு கைகளையும் அசைத்தபடி விஷ்ணு தேவாலயப் பக்கமாக நடந்தார். அசையத் திராணியற்றவராக நின்ற கெப்பட்டிப்பொலையை கைத்தாங்கலாகத் தூக்கியபடி, ஏனைய அதிகாரங்கள் அங்கிருந்து நீங்கினர். கொஞ்சத்தூரம் விசும்பியபடியே நடந்த அவர், சட்டெனத் தன்னை மீட்டுக்கொண்டு உறுதியான கால்களுடன் நடந்து செல்வதை மொல்லிகொடை கண்டார். நாயக்க குலத்தவரைப் பார்த்து அப்பாலிருந்து ஒருவன் காட்டிய சைகையைக் கண்டு அவர்கள் எல்லோரும் அந்தப் பக்கமாகச் சென்றார்கள்.

மெல்ல மெல்ல மைதானம் வெறுமையாகியது. எஞ்சிக்கிடந்த சடலங்களைத் தூக்கிக்  காவலர்கள் அப்புறப்படுத்தினர். வானமே பொத்துக்கொண்டது போல், ஓவென்ற இரைச்சலுடன் பெருமழை பொழிய ஆரம்பித்தது. வெள்ளம் மைதானத்தில் படிந்திருந்த குருதியைக் கழுவிக்கொண்டு செந்நிறமாகப் பரவியது. பின் அதுவும் நிறம் மங்கித் தெளிந்த நீராக ஓடியது. பேய்மழை தணிந்து தூவானமாகிப் பின் மெல்ல ஓய்ந்தது.

கொஞ்சநேரத்திற்கு முன் நடந்த விபரீதங்களின் சிறு தடயம் கூட இன்றி, எதுவுமே நிகழாத தோரணையில், நாத தேவாலயம் பளிங்குத்தரையுடன் நிர்மலமாகக் காட்சியளித்தது. தேங்கியிருந்த வெள்ளநீரில் தலைகீழாகத் தெரிந்தது, தூரத்தே நின்ற தலதா மாளிகையின் பார்த்திருப்பு மண்டபக் கூரை.

(உவங்கள் இணைய இதழில் [சனம் 01 ஆள் 02] வெளியான சிறுகதை)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner