கடந்த
மாதம் சமூக வலைத்தளங்களில் மிகுந்த உக்கிரத்துடன் எழுப்பப்பட்ட வினாவாக மேலுள்ள தலைப்பு அமைகின்றது. அந்த
வினாவைத் தூண்டியது எது என்பது, இக்கட்டுரையைப்
படிக்கும் உங்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். பல
சலசலப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த அருளினியனின் ‘கேரள டயரீஸ்’ நூல். இக்கட்டுரை கேரள டயரீஸ் பற்றியோ, அதன்
நம்பகத்தன்மை பற்றியோ ஆராயப்போவதில்லை. ஆனால் அந்த நூலின் வெளியீட்டை அடுத்து எழுப்பப்பட்ட இரண்டு முக்கியமான வினாக்களுக்கு விடைகாண முயல இருக்கின்றது. ஒன்று, மேலுள்ள
தலைப்பு. இந்த
விவாதம் சார்ந்து உருவான இன்னொரு துணைக்கேள்வியான “சமூக வரன்முறைகளை கேள்விக்குள்ளாக்கும் அல்லது உணர்வுகளைப் புண்படுத்தும் வரிகளைக் கொண்ட நூலொன்றை ஒரு சமூகம் எவ்வாறு முகம்கொள்வது?” என்பதை இரண்டாவது வினாவாக சுட்டிக்காட்டலாம்.
இனி
முதலாவது வினாவுக்கான விடை. எழுத்தாளன்
தான் நினைப்பதை எல்லாம் எழுதலாமா என்ற கேள்விக்குத் திட்டவட்டமான ஒருவரிப் பதில் ‘ஆம்’ என்பது
தான். அதற்குக்
கொடுக்கக்கூடிய ஒருவரி விளக்கம், ‘கருத்துச் சுதந்திரம்’. கருத்துச் சுதந்திரம் என்பது சனநாயக அடிப்படை உரிமை. நல்லதோ, கெட்டதோ தன் சிந்தனையில் உருவாகின்ற எந்தவொரு விடயத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு எந்தவொரு தனிமனிதனுக்கும் உரிமை உண்டு. நீ
இதை இதை பேசக்கூடாது என்று அவன் குரல்வளையைப் பிடிப்பதற்கான உரிமை இங்கு உண்மையில் யாருக்கும் இல்லை.
கருத்துச்
சுதந்திரத்தின் விளைவுகள் பாரதூரமாக இருக்கலாம். தனிநபருக்கு
அல்லது குறித்த குழுமத்துக்கு ஆபத்தாக அமையலாம். ஆனால்
அப்படியான சந்தர்ப்பங்களில் அதே கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அந்தச் சிந்தனையாளனை மறுதலிக்க வேண்டும். அவனது
தரப்பு முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட வேண்டியது என்பதற்கான தெளிவான ஆதாரங்களை அடுக்கவேண்டும்.. கருத்து கருத்தால் மட்டுமே எதிர்கொள்ளப்பட வேண்டும். அதை
விடுத்து வன்முறையில் இறங்குவது என்பது, நாகரிகம்
அற்ற செயல்
கருத்துச்
சுதந்திரம் எனும் போது எழுகின்ற மறுக்கமுடியாத சிக்கல் ஒன்றும் உள்ளது. கருத்துச்
சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள், பெரும்பாலும் அதிகார பீடத்தில் சொகுசாக அமர்ந்துகொண்டு நச்சுக்கருத்துக்களை சமூகத்தில் விதைப்பவர்கள் தான். அவர்களிடம்
அதிகாரம் இருக்கின்றது என்பதாலேயே அக்கருத்துக்களை சமூகத்தால் நிராகரிக்கமுடியாமல் போகும். இத்தகைய
சந்தர்ப்பங்களில் சனநாயகம், அடிப்படை
உரிமை என்றெல்லாம் பல்லவி பாடுவது கொஞ்சம் அதிகப்படியானது தான். இத்தகைய
சந்தர்ப்பங்களில் மிகப்பலமான -
அதேவேளை மிக இறுக்கமான நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட்டு அக்கருத்தை போராடியேனும் வெல்லவேண்டி வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், அதிகாரம் எதுவும் இல்லாமலே கருத்துச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவோரை நாம், அதிகளவில்
விமர்சனம் செய்து, கவனிப்புக்குரியவர்களாக
மாற்றிவிடுகிறோம். அவர்களது கருத்துக்களுக்கு எதிராக மிகையாக உணர்ச்சிவசப்பட்டு அவர்களை நாமாகவே அழைத்து ஒரு அரியாசனத்தில் அமர்த்துகிறோம். அந்த ஆசனம் அதிகாரபீடத்தை விட மிக வலுவானது. அங்கிருந்து
அவர்களது குரல், ஒடுக்கப்படுபவர்களின்
பதைபதைப்புடன் ஓங்கி ஒலிக்கிறது. இயல்பாகவே
கிசுகிசுக்களில் ஆர்வமுள்ள நம் சமூகம் அப்படி என்ன தான் அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று ஆர்வத்துடன் அவர்களுக்கு செவிசாய்க்கின்றது. இறுதியில், நாம்
அவர்களது எந்தக் கருத்து சமூகத்துக்குச் சென்று சேரக் கூடாது என்று போராடினோமோ -
அது வெற்றிகரமாக சமூகத்துக்குள் நுழைகின்றது. அவர்கள் எதிர்பார்த்தது வெகு எளிதாக நடந்துமுடிகின்றது.
கடந்த
மாதம் முழுவதும் முகநூலில் ஏ.கே. 47ஐத் தூக்காத குறையாக ஓலமிட்டவர்கள், அருளினியனின் நூலில் இருக்கின்ற தகவல் பிழைகள், முன்முடிவுகள்
எத்தனை அபத்தமானவை என்பதை சுட்டிக்காட்டி இருக்கலாம். அதற்கான ஆதாரங்களைக்
கொட்டியிருக்கலாம். அதன் மூலம் அந்நூலின் பெறுமதியை வறிதாக்கி இருக்கலாம். அது
பெரும்பாலும் நடக்கவில்லை, அல்லது மிகக்குறைவாகவே நடந்தது. ஆனால்
முரண்நகையாக அந்நூலுக்கு ஆதரவான விளம்பரப்படுத்தல்கள் எதிர்த்தரப்பாளர்களால் படுசுறுசுறுப்பாக நடந்தன. யாழ்ப்பாணத்தில்
எதிர்ப்புச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. யாழ் மற்றும் கொழும்பின் பிரசித்தமான இரு இடங்களில் நிகழ இருந்த நூல் வெளியீடுகள் பலவந்தமாகத் தடுக்கப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டன. ஆர்ப்பாட்டங்களும் கொடும்பாவி எரிப்புகளும் நடந்தன. முகநூலில்
விமர்சனம் அல்லது கண்டனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் நிலைப்பதிவுகள் பறந்தன.
விளைவு ஒன்றே. கடந்த
மாத நடுப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அதிகளவு விற்கப்பட்ட தமிழ் நூலாக கேரள டயரீஸ் சாதனை படைத்திருக்கிறது (ஆதாரம்: கண்காட்சிக்கு
வருகை தந்த நேரடி சாட்சியங்கள்).
சரி. இரண்டாவது வினாவுக்கு வருவோம். சமூகத்தைச்
சீண்டுகின்ற நூல்கள் வெளியிடப்படும் போது, அவற்றை
எவ்வாறு எதிர்கொள்வது? புண்படுத்துகின்றது என்று சொல்லி அதை எதிர்க்கலாமா? அல்லது சமூக விழுமியங்களை கேள்விக்குள்ளாக்கும் அவற்றுக்கெதிராக போர்க்கொடி தூக்கலாமா?
“உணர்வுகளைப் புண்படுத்துகிறது” என்று பொங்கியெழுந்து திரைப்படங்களைத் தடை செய்யும் காலத்தில் வசிக்கின்ற நாம், அதுபோலவே
நூல்களும் தடை செய்யப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு தான். ஆனால், கொஞ்சம் சிந்தியுங்கள். இன்று இதைப் படிக்கின்ற நீங்கள் ஒவ்வொருவருமே சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டவர்கள் தான். அவற்றில்
எத்தனை கடந்தகாலச் சிந்தனைகள் நிகழ்காலத்தில் பொய்யாகி இருக்கின்றன? உங்கள் எத்தனை பழைய கருத்துக்களை இன்று தவறென்று உணர்ந்து திருத்தியிருக்கிறீர்கள்? நமது இன்றைய சிந்தனை என்பது நாம் முன்பு கொண்டிருந்த கருத்தைச் சிதைத்தே நம்மைக் மீளக்கட்டமைத்திருக்கும்.
பாடசாலையில்
கற்கின்றபோது, சூரியன் கிழக்கில் உதிக்கின்றது என்று கற்கின்ற மாணவன், அது
சூரியனைப் பூமி சுற்றுவதால் ஏற்படுகின்ற ஒரு காட்சிமயக்கம் என்பதை மேல்வகுப்புகளில் அறியும் போது, அதிர்ச்சி
தான் அடைகின்றான். உலகம் தட்டையானது என்று நம்புகின்ற சமயவாதி, உலகம்
உருண்டை என்று விஞ்ஞானம் ஆதாரபூர்வமாகச் சொல்வதை, தன்
உணர்வுகள் புண்படுத்தப்பட்ட பின்பே ஏற்றுக்கொள்கிறான். சிந்தனை
என்பது உடைத்தல்கள் மூலமும், சிதைத்தல்கள்
மூலமுமே நிகழமுடியும். அதில் புண்படுத்தல் நிகழக்கூடாது என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம்.
ஆனால்
இலக்கியத்தில் ஒரு நல்ல அம்சம் உண்டு. இலக்கியத்துக்கான
வாசகர் வட்டம் இங்கு மிகக்குறைவு. இங்கு யாரும் இலக்கியத்தைத் திணிப்பதில்லை. தான் விரும்புகின்ற நூல்களைப் படிக்கின்ற சுதந்திரம் உள்ளதுபோலவே, தனக்குப் பிடிக்காத நூல்களை நிராகரிக்கின்ற சுதந்திரமும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ளது. வன்முறை, ஆபாசம் என்று தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய படைப்புகளை ஒரு வாசகன் நிராகரிக்கலாம். ஆனால், அதை
முழு சமூகமுமே நிராகரிக்கவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கக் கூடாது. அப்படைப்பு
அவன் ஒருவனைத் தான் புண்படுத்துகின்றது. ஆனால், அந்நூலால்
திருப்தி அடைவோர் அவனை விட நூற்றுக்கணக்கில் அதிகமாக இருக்கக்கூடும்.
இலக்கிய
உலகுக்கும் யதார்த்த உலகுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கின்றது. இலக்கிய உலகு மானுட அறம், சமூகம், அதன் நீதிகள் என்பவற்றை மறுபரிசீலனை செய்கின்ற தனிமனிதத் தேடலின் விளைவுகளால் ஆனது.. எழுத்தாளனின்
மதிப்பீடுகளைப் பொறுத்து அவனது இலக்கியம் மாறுபடும். அந்த
மதிப்பீடு சமூக ஒழுக்கங்களுக்கு எதிரானது என்றால், அவனது
படைப்பும் சமூகத்தை அறைகூவுகின்ற ஒன்றாகவே அமையும்.
உதாரணத்துக்கு
ஈழத்தை எடுத்துக்கொண்டாலே, ஈழத்தமிழ் இலக்கியவாதிகளின் படைப்புகள் இரண்டு விடயங்களையே பிரதான பேசுபொருட்களாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ஈழப்போர். மற்றையது
காமம். இலங்கையின்
புவியியலை, இங்குள்ள
மக்களின் அன்றாட வாழ்வியலை, அதிலுள்ள
பன்மைத்துவத்தின் அழகியலைப் பேசும் படைப்புகள் மிகக்குறைவு என்பது ஈழத்து இலக்கிய வாசகர்களின் முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கின்றது. இலங்கைப் படைப்பாளிகள் இவ்வாறு மாறுபட்ட கோணங்களிலும் எழுதவேண்டும் என்பது அவர்களது முக்கியமான கோரிக்கையாக இருக்கின்றது.
உண்மையில், வன்முறையையும்
காமத்தையும் விட்டால் எழுதுவதற்கு முக்கியமானவை எதுவுமே இல்லை என்பதே நிதர்சனம். மனிதனில்
எஞ்சியுள்ள முக்கியமான ஆதிவிலங்கு இச்சைகள் இவை இரண்டுமே. இன்றும்
மனிதனின் உள்ளாழத்தால் வன்முறையையும் காமத்தையும் முழுமையாகத்
அனுபவிக்கும் மிருகவெறியிலிருந்து முற்றாக விடுபடமுடியவில்லை. யுத்தங்களும், பிஞ்சுகளைக் கூட இரக்கமின்றிச் சூறையாடும் காமுகர்களும், இன்றுவரை நீடிப்பதே அதற்கு தெள்ளத்தெளிவான சான்று. வன்முறையையோ
காமத்தையோ அவ்வளவு எளிதில் மனிதனிலிருந்து அகற்றமுடியாது என்பதைக் கண்டுகொண்ட சமூகம், அவற்றை
வீரம் என்றும் காதல் என்றும் முறையே வரையறைப்படுத்திக் கொண்டது. சங்க
காலத்து ஆதித் தமிழ்ச்சமூகம் அவற்றை புறம், அகம்
என்று பாடித்தீர்த்து மகிழ்ந்தது. அதைச்சுற்றியே
பண்பாடு, ஒழுக்கம்
முதலான எண்ணக்கருக்களை உருவாக்கி மேலும் முன்னகர்ந்தது.
எல்லையை
மீறும்போது சமூகமொன்றை சிதைக்கும் வல்லமை படைத்தவை என்ற வகையில் காமமும் வன்முறையும் தொடர்ச்சியாக ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். மானுடப்
பேரறம் என்பதே வன்முறை, காமம்
என்பவற்றின் மீது மனிதனால் செய்யப்பட்ட சுய விசாரணையின் விளைவுகள் தான். பாரதப்போரில்
கீதையும், கலிங்கப்போரில்
அசோகனுக்கு பௌத்தம் தொடர்பான பிரக்ஞையும், இரண்டாம் உலகப்போரில் அணுவாயுதங்கள் – உலகசகோதரத்துவம் தொடர்பான ஆக்கபூர்வமான கோட்பாடும்
உருவானது என்பதை இங்கு ஒப்பீட்டுக்கு முன்வைக்கமுடியும். இந்தியாவின் நிர்பயா, இலங்கையின்
வித்தியா, சேயா
ஆகியோரின் வன்புணர்வுப் படுகொலைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள பாலியல், கலவியியல்
தொடர்பான விவாதங்களும் - இதுவரை
எந்தப் பயனும் தரவில்லை என்றாலும் கூட - இந்திய
உபகண்டத்தில் நிலவிய பெண்கள் பற்றிய மரபார்ந்த கருத்துருவுக்கு பல்வேறு மாற்றுப்பார்வைகளை முன்வைத்துள்ளன என்பதை நாம் மறுக்கமுடியாது.
இந்தக்
கோணத்திலேயே நாம் இலக்கியத்தில் வன்முறை மற்றும் காமத்தின் வகிபாகத்தை ஆராயவேண்டும். தன் புனைவில் தான் படைக்கும் பாத்திரங்களைக் கொண்டு படைப்பாளி, தன்
தேடலுக்கான விடைகளைக் கண்டுகொள்ள முயல்கிறான். சமூக அறங்களை மீள்பரிசீலனை செய்கின்றான். அது சமூகம் மீதான பரிசோதனை என்பதால், நிச்சயம்
சமூகத்தை அறைகூவியே தீரும். அந்தப்
படைப்பு பொருட்படுத்தக் கூடியது தான் என்றால், அதைக்கொண்டு
மானுட சுய ஒழுக்கங்களை மதிப்பீடு செய்வதே ஒரு வாசகன் செய்யவேண்டியது. அடித்தட்டு மக்களின் அன்றாடக் காமத்தைப் பேசும் ஜி.நாகராஜனின் “நாளை மற்றுமொரு நாளே” நாவலையும், தன் தாயின் முறையற்ற உறவை அறிந்துகொண்ட மகனின் பரிதவிப்பைச் சொல்லும் தி. ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” நாவலையும், இங்கு உதாரணமாக முன்வைக்கலாம்.
இதற்கு
வெளியே, வேண்டுமென்றே
தன் இச்சைக்கான வடிகாலாக எழுத்தைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். அத்தகைய பேர்வழிகள் இனங்கண்டு ஒதுக்கப்படவேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர்களைத் தனித்துப்போகச் செய்யலாம். முற்றாகப்
புறக்கணிக்கலாம். ஆனால், அவர்களிடம்
கூட “நீ
இதை எழுதக்கூடாது” என்று ஆணையிடும் உரிமை அவர்களது வாசகர்களுக்கோ சக படைப்பாளிகளுக்கோ
இல்லை என்றே சொல்வேன். எழுத்தாளனின்
பேனாவைப் பிடிக்கின்ற அதிகாரம் வாசகனுக்கு இருக்கமுடியாது. முன்பே சொன்னது போல அவனது கருத்துச் சுதந்திரத்தில் கைவைப்பது அது.
இத்தகைய
மூன்றாம் தர எழுத்தாளர்கள்
பல நூறு
ஆண்டுகளாக ஒழுக்கம், நியதி, பண்பாடு என்ற வட்டங்களுக்குள் சமூகம் அடைத்திருக்கும் மிருக உணர்வுகளைத் துகிலுரித்து அம்மணமாக்கி வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். மிகையான எதையும் கட்டுப்படுத்துவதற்கே பயிற்சியும் பண்படுதலும் தேவை. எதையும்
அது வெளிப்படும் இயல்பான வடிவிலேயே காட்டுவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. அதற்கு
வரன்முறைகளை உடைக்கும் அசட்டுத்தனமான அறியாமை இருந்தால் போதும். தம்
உணர்ச்சிக்கு வடிகாலாக ஆபாசத்தை எழுதுபவர்கள், அதை முற்போக்குத்தனம் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் போது தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பதே பரிதாபத்துக்குரிய உண்மை.
ஆக, இந்தச்சிக்கல்களுக்கான பதிலை
இப்படி தொகுத்துக்
கொள்ளலாம். எழுத்தாளன்
என்று
சொல்லி எழுந்துவரும்
எவனுக்கும் தன்
சிந்தனையை, தன்
கருத்துக்களை பொதுவெளியில்
வைப்பதற்கான பூரண
உரிமை
உண்டு.
அதற்கான கருத்துச்
சுதந்திரத்தை இச்சமூகம்
அவனுக்கு வழங்கியே
ஆகவேண்டும். ஒருவேளை
அவன்
முன்வைக்கும் சிந்தனை
தவறாக
இருந்தால், அதனை
கருத்துத் தளத்தில்
தகுந்த ஆதாரங்களுடன்
முழுமையாக நிராகரிக்கலாம்.
அதன்
விளைவுகள் பாரதூரமானவை
என்றால், முற்றாக
அந்த
எழுத்தாளனையே நிராகரிக்கலாம்.
ஆனால்
எக்காரணம் கொண்டும்
அதிகாரத்தைக் கொண்டோ, பலத்தைக்
கொண்டோ அவனை
அச்சுறுத்தி இதைச்
செய்யக்கூடாது. ஒரு
அறிவார்ந்த சமூகமாக
தன்னை
அடையாளப்படுத்திக் கொள்ளும்
தமிழ்ச் சமூகத்திற்கும்
அது
அழகல்ல.
சுய
அரிப்புகளுக்காக சிலர்
தமது
எழுத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்
போது,
அவர்களை இனங்கண்டு
ஒதுக்கலாம் அல்லது
புறக்கணிக்கலாம். மேலும், சமூகத்தை, சமூக
விழுமியங்களை அறைகூவும்
படைப்புகள் வெளிவரும்
போது,
எதிர்ப்பு, விமர்சனம்
என்ற
பெயரில் அவற்றுக்கு
எதிர்மறை விளம்பரத்தை
ஏற்படுத்தாது, அவற்றை
முற்றாகப் புறக்கணிப்பதே
செய்யவேண்டியது. வன்முறையும்
காமமும், சமூகம்
சார்ந்த உளவியலில்
முக்கியமானவை என்பதால், அவை
தொடர்ச்சியாக எழுதப்பட்டே
ஆகவேண்டும். அவற்றை
எழுதக்கூடாது என
ஆணையிடும் உரிமை
வாசகராகவோ, விமர்சகராகவோ
நம்
யாருக்கும் இல்லை.
ஈராயிரம்
ஆண்டுகள் பழைமையான
நம்
பண்பாடு யாரோ
ஒருவரின் தவறான
அல்லது மொண்ணைத்தனமான
ஐந்து
வரிகளால் சிதைந்தொழிந்து
போகுமளவுக்கு அத்தனை
மெல்லியது அல்ல. கருத்துச்
சுதந்திர வெளியை
முழுமையாகத் திறந்து
வைப்போம். அதைத்
தவறாகப் பயன்படுத்த
முனைவோருக்கு தகுந்த
பதிலடி கொடுப்போம். தக்கன
பிழைக்கும் தகாதன
மறையும் எனும்
அறிவியல் கோட்பாடு
இலக்கியத்துக்கும் பொருந்தும். தக்கன
எவையென்று காலம்
தீர்மானிக்கட்டும்.
(உவங்கள் இதழில் [சனம் 01 ஆள் `12] வெளியான கட்டுரை)
0 comments:
Post a Comment