அம்பாறை மாவட்டம் பிறந்த கதை!


இலங்கையின் இளைய வயதுடைய நான்கு மாவட்டங்களில் ஒன்று அம்பாறை மாவட்டம். அதற்கு இன்று வயது வெறும் ஐம்பத்தேழு தான். அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி, 1961ற்கு முன்பு,  மட்டக்களப்பு மாவட்டத்துக்குச் சொந்தமாக இருந்தது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டம் பிரிந்து உருவாகக் காரணமாக இருந்த  உள்ளூராட்சிப் பிரிவுகள் எவை, அது உருவான பின்னணி என்ன என்பதை நாம் இங்கு சுருக்கமாகப் பார்க்க இருக்கிறோம். அப்படிப் பார்ப்பதென்றால் மட்டக்களப்பிலிருந்து தான் தொடங்கவேண்டும்.


இலங்கையின் கிழக்கே "மட்டக்களப்பு" எனும் பிராந்தியம் இருப்பதையும், அதில் வன்னிமைகள் ஆண்ட மூன்றுக்கு மேற்பட்ட  ஆட்சிப்பிரிவுகள் இருந்ததையும் போர்த்துக்கேயர் குறிப்புகள் தான் முதன்முதலாகச் சொல்கின்றன. 1600களின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட போர்த்துக்கேய ஆவணங்களின் படி அங்கு பழுகாமம், சம்மாந்துறை, ஏறாவூர், பாணமை ஆகியவற்றில் மூன்று அல்லது நான்கு ஆட்சி உபபிரிவுகள் நிலவியிருக்கின்றன. மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமும் உன்னரசுகிரி, மட்டக்களப்பு, மண்முனை ஆகிய மூன்று ஆட்சிப்பிரிவுகளைப் பற்றிச் சொல்வதை நாம் இங்கு ஒப்புநோக்கலாம். அதே கால ஒல்லாந்து ஆவணங்களில், பழுகாமம், சம்மாந்துறை, பாணமை, போரதீவு முதலியவற்றின் வன்னிமைச் சிற்றரசர்கள் பற்றிய தகவல்கள் வருகின்றன.  பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகியிருக்கக்கூடிய  நாடுகாடுப்பற்று எனும் புதிய குடியேற்றப்பிரிவு பற்றி,' நாடுகாடு பரவணிக்கல்வெட்டு'  விலாவாரியாகச் சொல்கிறது.

குடித்தொகை நெருக்கம், வன்னிமைகளிடையேயான அரசியல் முரண்கள் என்பன காரணமாக, இப்படி படிப்படியாக எண்ணிக்கையில் கூடிய மட்டக்களப்பின் உட்பிரிவுகள்,  பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பதினொன்றாக வளர்ச்சி கண்டுவிட்டன. கோறளை, கரவெட்டி ஏறாவூர், மண்முனை, போரதீவு, கரைவாகு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பாணமை, நாடுகாடு (மற்றும் நாதனை),  என்று இந்தப் பதினொரு உட்பிரிவையும் 1794இல் பட்டியலிடுகிறார் ஜாகொப் பேர்னாட் எனும் ஒல்லாந்து ஆளுநர். இற்றுடன், மேற்கே வேடுவர்கள் செறிந்து வாழ்ந்த விந்தனைப்பற்றும் மட்டக்களப்பின் பகுதியாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் முழு இலங்கையையும் கைப்பற்றிய போது, இன்றைய  அம்பாறை, தமணை பிரதேச செயலாளர் பிரிவுகள் நாடுகாடுப்பற்றாகவும், உகணை பிரதேச செயலாளர் பிரிவு நாதனைப்பற்றாகவும்  அடர்ந்த காடாகக் கிடந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக வேடர்களும் தமிழர்களும் முஸ்லீம்களும் அவற்றில் வசித்து வந்தார்கள்.

1815இல் கண்டியைக் கைப்பற்றிய பின், தாம் பெற்ற வரிகளுக்கு மேலாக,  இலங்கையரின் பாரம்பரியத் தொழிலான விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம்  கூடிய வருமானம் பெற நினைத்தார்கள் பிரித்தானியர்கள். அதே கோணத்தில் சிந்தித்த மட்டக்களப்பு ஆளுநர் ஜே.டபிள்யூ ப்ரிச்சின் (J.W.Brich) பார்வை நாடுகாடுப்பற்றில் விழுந்தது. அங்கிருந்த அம்பாறைவில், கொண்டைவெட்டுவான்வில், இறக்காமவில், குடுவில் ஆகிய நான்கு ஏரிகளும் பெருமளவு தண்ணீர் கொள்ளக்கூடியவை என்பதை அவதானித்த அவர், தன் 1856ஆமாண்டு அறிக்கையொன்றில் ஒல்லாந்து அதிகாரிகள் அவற்றின் மீது காட்டிய அக்கறையையும், அந்தக்குளங்கள் மூலம் நீர்ப்பாசன வசதியை அதிகரிக்கலாம் என்பதையும், விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.  இதன்போது அம்பாறைவில்லை அண்டி தமிழ்க்குடும்பங்களே வசித்து வந்தன.  1911இல் இடம்பெற்ற இலங்கை சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி, அம்பாறையானது, ஆறு ஐரோப்பியர் உட்பட 66 தமிழரையும் 7 முஸ்லீம்களையும் மாத்திரம் கொண்ட தனித்தமிழ்க் கிராமம்!

காலம் வேகமாக நகர்ந்தது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்கியது. இன்றிருக்கும் பாராளுமன்றம் போல, 1931 டொனமூர் யாப்பின் படி அரசாங்க சபையே (State Council) இலங்கைத்தீவின் மிகப்பெரும் அரசியல் மன்றம். அதில் எருவில் - போரதீவுப்பற்று முதல் பாணமைப்பற்று வரையான "மட்டக்களப்புத் தெற்கு" தேர்தல் தொகுதி ஒரு பிரதிநிதியைத் தேர்வு செய்து வந்தது.  1944 சோல்பெரி யாப்புத்திருத்தத்தில் அரசாங்க சபையானது பாராளுமன்றமாக மாற்றப்பட்ட போது, இந்த மட்டக்களப்புத் தெற்கு தேர்தல் தொகுதியானது, பழைய பற்றுக்களின் எல்லை வரையறைகளை மீறி, பொத்துவில், கல்முனை, பட்டிருப்பு எனும் மூன்று தேர்தல் தொகுதிகளாக உடைக்கப்பட்டது.
 
இன்றைய அம்பாறை மாவட்டம்
1948 சுதந்திரத்தின் பின், தென்கிழக்கிலங்கையின் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் கல்லோயாத் திட்டத்தை இலங்கை அரசு முன்மொழிந்தது. 1949இல் ஆரம்பித்த அத்திட்டம், 1953இல் முடிவடையும் வரை, பெருமளவான சிங்களக் குடியேற்றம், சம்மாந்துறை தென்பகுதியில் ஏற்பட்டது. 1959இல் மீண்டும் தேர்தல்தொகுதிகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்ட போது , பழைய நாடுகாட்டுப் பகுதியில், 19.03.1960 அன்று, "அம்பாறை" எனும் புதிய தேர்தல் மாவட்டம் உருவானது. இவ்வாறு 1960இன் பின்னரையாண்டில், மட்டக்களப்பின் தென்பகுதியில், பட்டிருப்பு, பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாறை எனும் ஐந்து தேர்தல் மாவட்டங்கள் அமைந்திருந்தன.

10.04.1961 அன்று  பட்டிருப்பு தவிர்ந்த நான்கு தேர்தல் மாவட்டங்களையும் ஒன்றிணைத்து, புதிய நிர்வாக மாவட்டமொன்றை இலங்கை அரசு பிரகடனம் செய்தது. இதன்மூலம், பாரம்பரியமிக்க தமிழர் தாயகமான மட்டக்களப்புத் தேசம், மட்டக்களப்பு, அம்பாறை எனும் இரு மாவட்டங்களாகத் துண்டாடப்பட்டது. இதேவேளை, 1978 இரண்டாம் குடியரசு யாப்பின் படி ஓரங்கத்தவர் தெரிவாகும் தேர்தல் மாவட்டங்கள் அகற்றப்பட்டு, பல்லங்கத்தவர் தெரிவாகும் தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இப்படி உருவானதே இன்றைய திகாமடுல்ல தேர்தல் மாவட்டமும் அம்பாறை நிர்வாக மாவட்டமும் ஆகும்.  சிறிதுகாலம் மட்டக்களப்பிலிருந்து பிரிக்கப்பட்டு பதுளையுடன் இணைக்கப்பட்டிருந்த "தெகியத்த கண்டி" பிரதேசம், இடைப்பட்ட காலத்தில் பல சிங்களக்குடியேற்றங்களைக் கண்டிருந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தின் உருவாக்கத்தின் பின்னர்,  மீண்டும் பதுளையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறையுடன் இணைக்கப்பட்டு இன்றைய அம்பாறை மாவட்டம் முழுமை பெற்றது.

மிகப்பழைமை வாய்ந்த பற்று எனும் நிர்வாகப்பிரிவுகளை இன்றைய மட்டக்களப்பில் ஓரளவுகேனும் காணமுடியும் எனினும்,  புதிய அம்பாறை மாவட்டத்தில் இனப்பரம்பல் வேற்றுமைக்கேற்ப அவை பிரிந்தொழிந்து போயுள்ளன.  கொஞ்சம் முயன்றால், அம்பாறை மாவட்டமாக உள்ள பழைய பற்றுகளையும் அவற்றின் இன்றைய வடிவங்களையும் சரியாக இனங்காண முடியும்.


பழைய பற்று
இன்றைய பிரதேசங்கள்
இன்றைய தேர்தல் தொகுதிகள்
பாணமைப்பற்று
பொத்துவில்லகுகலை
பொத்துவில்
அக்கரைப்பற்று
அக்கரைப்பற்றுஅட்டாளைச்சேனைஆலையடிவேம்புதிருக்கோவில்
கரைவாகுப்பற்று
காரைதீவு,  
கல்முனை தமிழ்கல்முனை முஸ்லீம் சாய்ந்தமருதுநாவிதன்வெளி
கல்முனை
சம்மாந்துறைப்பற்று
சம்மாந்துறைநிந்தவூர்
சம்மாந்துறை
நாடுகாடுப்பற்று
இறக்காமம்
அம்பாறைதமணை
அம்பாறை
நாதனைப்பற்று
உகணை
விந்தனைப்பற்று
மகாஓயா,  பதியத்தலாவைதெகியத்தகண்டி
(அரங்கம்  இதழில் வெளியான கட்டுரை)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner