கொழும்பு - தெரிந்த பெயர்கள், தெரியாத கதைகள்!

இலங்கைத்திருநாட்டின் தலைநகரான கொழும்பு, ஈழத்தில் மாத்திரமன்றி, தென்னாசியாவிலேயே பல்லாண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்திருந்த துறைமுகப் பெருநகர்! அதன் சில இடப்பெயர்களே அதன் வரலாற்றைத் தன்னுள் உட்பொதித்திருப்பதைக் காணலாம். இங்கே அத்தகைய சில இடப்பெயர்களின் பின்னே மறைந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம் தேடுவோம், வாருங்கள்!
 காலிமுகத்திடல் - அன்றும் இன்றும்
                         (நன்றி: roar.lk)


இலங்கையின் முக்கியமான சாலைகளில் ஒன்றான "காலி வீதி" துவங்கும் இடம் என்பதாலேயே, காலிமுகத்திடலுக்கு அப்பெயர் வந்தது. முன்பு சதுப்புநிலமாக இருந்த இது, ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் முயற்சியால் இன்று போல், மாபெரும் களியாடுகளமாக மாற்றப்பட்டிருக்கின்றது


பிரித்தானியர் காலத்தில் கொழும்பின் முதன்மையான வணிகர்களுள், தமிழ்நாட்டுச் செட்டியார்கள் இடம்பிடித்திருந்தனர். அவர்கள் வசித்த இடம் தமிழ்வழக்கில் புறநகர்ச் சந்தையைக் குறிக்கும் "பேட்டை" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அது "பெற்றா" என்று மருவியது. அதேபொருளிலேயே சிங்களத்தில் "பிட்டக்கொட்டுவ", புறக்கோட்டை!
       1950களில் பேட்டை  பெற்றா!
             (நன்றி: lankapura.com)


இலங்கையின் மிகப்பழைமையான தேவாலயங்களில் ஒன்று, பம்பலப்பிட்டி மிலாகிரிய புனித பவுல் தேவாலயம். போர்த்துக்கேயரால் இது முதன்முதலில் அமைக்கப்பட்டபோது, அற்புத அன்னை ஆலயமாக (Nossa Senhora dos Milagres - Our Lady of Miracles) விளங்கியது. "மிலாக்ரஸ்" எனும் அந்தப் போர்த்துக்கேயச் சொல்லின் சிங்களத் திரிபு தான் "மிலாகிரிய"!

கோட்டை அரசின் ஒரு "முற அட்டுவ" (காவலர் கண்காணிப்புக் கோபுரம்) அமைந்திருந்த இடம் தானாம் இன்றைய "மொரட்டுவை"!

பம்பலப்பிட்டியின் பெயர், “பம்பளிமாஸ் பழத்திலிருந்து” (Grape fruit) வந்ததாக நம்பப்படுகின்றது. அதன் சிங்களப்பெயர், ஜம்புல. 

தமிழகத்திலிருந்து வந்து குடியேறி, கம்பளை அரசுடன் உறவு கொண்டாடிய "அழகக்கோன்" (1397-1411) எனும் தமிழ்ப்பௌத்தன் தான் (ஜயவர்த்தனபுரக்) கோட்டையை அமைத்து, கோட்டை இராச்சியம் புதிதாக உருவாகக் காரணமானவன். இன்று "அத்துல்கோட்டே" என்று அறியப்படுவது தான் அப்பகுதி. யாழ்ப்பாணத்து ஆரியச்சக்கரவர்த்திகளின் மேலாதிக்கத்திலிருந்து இன்றைய கொழும்புப் பகுதியை இவன் விடுவித்ததாக வரலாறு கூறும். 
 1853இல் மிலாகிரிய தேவாலயம்
(நன்றி: canon-corea-tribute.com

கொழும்பு வணிகத் தலைநகராக விளங்கியபோதும், இலங்கையின் உத்தியோகபூர்வத் தலைநகராக ஜயவர்த்தனபுரக்கோட்டை பிரகடனப்படுத்தப்படக் காரணம், அதுவே பண்டைய கோட்டை இராச்சியத்தின் தலைநகர் என்பது தான். இன்றைய "கோட்டை" ஐரோப்பியர்கள் அமைத்த கோட்டை அமைந்திருந்த இடமாகும்.

கோட்டை அரசின் சமையற்கூடம் அமைந்திருந்த இடமே பத்தரமுல்லை. தியவன்னை ஓயாவின் அக்கரையில் இருந்த அது, ஆரம்பத்தில் பத்கொடமுல்ல (சோறு வந்திறங்கும் மூலை) என்று அழைக்கப்பட்டிருந்ததாம்!

புதுக்கடை அல்லது கோட்டடி என்று அறியப்படும் பகுதியின் ஒல்லாந்துப்பெயர் "Hulftsdorp" (ஹல்ஃப்ஸின் ஊர்). ஹல்ஃப்ஸ் என்பவன் ஒல்லாந்துத் தளபதி. கோட்டையைக் கைப்பற்ற, போர்த்துக்கேயருடன் இடம்பெற்ற போரில் அவன் இறந்ததன் நினைவாக அவ்விடம் அப்பெயர்பெற்றது. 

கோட்டைப்பகுதிச் சிறுகாடுகளில் உலவிய நரிகளை ஓநாய் என்று தவறாகக் கருதிய ஒல்லாந்தர், அதற்கு வைத்த பெயர் தான் "Wolfendhal" (இடச்சு:Wolvendaal, ஓநாய்ப்பள்ளத்தாக்கு), இன்றைய ஸ்ரீ ரத்னஜோதி மாவத்தைப்பகுதி. 

வெள்ளவத்தை என்றால் "கடற்கரைத் தோட்டம்" என்று பொருள். இப்படியே, "கொஸ்வத்தை" (பலாத்தோட்டம்),  "கெசல்வத்தை" (வாழைத்தோட்டம்), "கடவத்தை" (எல்லைத்தோட்டம்), "பெலவத்தை" (குடில் தோட்டம்), என்று பல வத்தைகள் உண்டு.  

வாதுமை / பாதாம் மரங்களின் தோட்டம் அமைந்திருந்த இடம் கொட்டாஞ்சேனை. கொட்டான்/கொட்டம்ப என்பது வாதுமையின் (Indian almond) சிங்களப்பெயர். அதுவே கொட்டஹேன. 

17ஆம் நூற்றாண்டளவில் கண்டிமன்னன் இரண்டாம் இராசசிங்கனுக்கெதிராக, கிளர்ச்சி செய்து, தப்பியோடி வந்த அம்பன்வெல அப்புகாமி, ஒல்லாந்தரின் நட்பைப்பெற்று, “பரதெனிய” என்ற கிராமத்தில் பிழைப்புக்காக தெங்குத்தோட்டம் நடத்தலானான். மெல்ல மெல்ல, அவன் செல்வாக்கு அதிகரித்து, அவனால் உள்ளூர்வாசிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அந்நிலங்கள் அமைந்த பகுதி, அவர்களால் ஆற்றாமையுடன் “கொள்ளையிடப்பட்ட பூமி” என்ற பொருளில், சிங்களத்தில் “கொல்லன் பிட்டிய” என்றழைக்கப்பட்டன. அது பரதெனியவின் பெயரையே மாற்றியது – கொள்ளுப்பிட்டி என்று! 
மெய்ட்லாண்டும் லவினியாவும் 
(நன்றி:dailynews.lk)

கோட்டை அரசுக்குத் தேவையான எலுமிச்சைகள் பயிரிடப்பட்ட பகுதி "தெகிவளை". "தெஹி" என்றால் எலுமிச்சை என்று பொருள். பல நீர்நிலைகள், குளங்கள் அமைந்திருந்த "தியவல" (நீர்க்குழி/பூவல்) என்பதே திரிந்து தெகிவல ஆனது என்பாரும் உண்டு. தெகிவளையில் உள்ள, "களுபோவில" (களு+போ+வில் = கருப்புப் போதிமரத்தடிக் குளம்) முதலான இடப்பெயர்கள் இக்கருத்துக்கு வலுச்சேர்க்கும்.

இறுதியாக…… கல்கிசைக்குப் பெயர் தந்த காதலி. 😊

இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்களுள் ஒருவரான தோமஸ் மெய்ட்லாண்ட், தன் மனங்கவர் ஆடலரசியான லவினியாவின் பெயரைக் கல்கிசையில் தன் மாளிகை அமைந்திருந்த சிறுகுன்றுக்குச் சூட்டினார்…. மவுண்ட் லவினியா என்று! ஆங்கிலேய அரசுடனான தன் உத்தியோகபூர்வக் கடித முகவரிகளில், அதே பெயரையே அவர் பயன்படுத்தியதால், அதுவே ஆங்கிலத்திலும் நிலைபெற்று விட்டது.


இப்படி நிறைய இருக்கிறது. ஏன் வீதிகளின் பெயர்களின் பின்னேயும் கதைகள் இருக்கின்றன. ஆர்வம் இருந்தால் விசாரித்துப் பாருங்கள்! 

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner