அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்

சங்க இலக்கியமான கலித்தொகையைப் புரட்டவேண்டி வந்தது. கண்ணில் பட்டது இந்த வரி. “புறம் புல்லின் அக்குளுத்து புல்லலும் ஆற்றேன்; அருளிமோ, பக்கத்துப் புல்லச் சிறிது. ” (கலி.94)


கூன் கொண்ட நாயகியிடம், “உன்னை முன்பக்கமும் அணைக்கமுடியவில்லை. கூச்சம் காட்டி பின்புறமாகவும் தழுவமுடியவில்லை. பக்கவாட்டாக அணைக்கவிடுகிறாயா” என்று கெஞ்சுகிறான் நாயகன். (இதுக்குத் தான் மாச்சல் பாக்காம சங்க இலக்கியங்களப் படிக்கோணும் எண்டுற, கேட்டாத்தானே 😊 )

அப்போது 13, 14 வயது இருக்கும். மருத்துவப் பரிசோதனை ஒன்றுக்காக அப்பாவுடன் அந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். மருத்துவர் என்னைக் கட்டிலில் சாயச் சொல்லி வயிற்றிலும் இடுப்பிலும் அழுத்திப் பரிசோதித்தார். “ஹிஹிஹி” என்றேன். “என்ன?” என்று கேட்டார் மருத்துவர். 
“அக்குளுக்குது!”
“விளங்கேல்ல?”
“ஹிஹி. அக்குளுக்குது!”
அவர் புரியாமல் அப்பாவைப் பார்த்தார். “என்ன சொல்றார் இவர்?”
“கூச்சமா இரிக்காம் என்றாரு” அப்பா சொல்லிச் சிரித்தார்.
“என்ன அது? கக்குளு…..?”

எங்கள் பக்கம் வெகு சாதாரணமாக புழங்கும் சொல் அது. கக்கத்திலோ இடுப்பிலோ கிச்சு கிச்சு மூட்டுவதை, அக்குளுக் குத்தல் என்று தான் சொல்லுவோம். அந்தச்சொல் அந்த மருத்துவருக்குத் தெரியாதது எனக்கு வியப்பாக இருந்தது. “வட்டார வழக்கு” என்பதன் தனித்துவத்தை நான் முதன்முதலாக உணர்ந்தது அன்று தான்!

அதே “அக்குளுக்கலை”, “அக்குளுத்து” என்று கலித்தொகையில் கண்டதும் திடுக்கிட்டேன். இன்றைக்கெல்லாம் பொதுவெளியில் பேசத்தகாதது, நாகரீகமற்றது என்று ஒதுக்கப்படும் வட்டார வழக்கில் தான், சங்க இலக்கியத்தில் புழங்கும் எத்தனையோ சொற்கள், உயிர்ப்போடு விளங்குகின்றன. மறுகா (பிறகு), புக்கை (பொங்கல்), ஒண்ணா (இயலாது), வளுதினங்காய் (கத்தரி), வயா (மசக்கை) இதெல்லாம் எங்கள் வட்டாரவழக்கில் தனித்துவமாக உள்ள சில சங்கத்தமிழ்ச் சொற்கள். வேறு தமிழ் வட்டார வழக்குகளில் இன்னும் எத்தனையோ பழஞ்சொற்கள் இப்படி வழக்கிலிருக்கலாம்.

இன்று கலைச்சொல்லாக்கத்தின் போதாமையை உணரும் எவரும் வட்டாரவழக்குகளை நாடும்போது அங்கு அதற்கான சொற்கள் ஏற்கனவே இருப்பதைக் கண்டுகொள்ளமுடியும். இரவுநேரத்தில் வாவியின் அடியில் தென்படும் வெளிச்சத்தை “கவிர்” என்று சொல்லும் மட்டக்களப்புத்தமிழ். இன்றைக்கு Bioluminescence என்பதை தமிழில் “உயிரொளி உமிழ்வு” என்று நீட்டி முழக்கிக்கொண்டிருக்கிறோம். இலகுவாகக் “கவிர்” என்றே சொல்லலாம்.

திரைப்படங்கள், முகநூல் அரட்டைகள் என்று, இன்று ஆங்கிலம் கலந்த பொதுத்தமிழையே புழங்குகிறோம். வட்டார வழக்குகள் மறையும் போது, அவை தம்வசம் கொண்டிருக்கும் தனித்துவமான சொற்களஞ்சியம், அந்தக் களஞ்சியம் கட்டிக்காத்த பண்பாடு ஒட்டுமொத்தமாக அடியோடு மறைகின்றது. காலம் மாறும்போது அது இயல்பு தான் என்றாலும், அந்த இழப்பு புறக்கணித்துச் செல்லக்கூடியதல்ல. குறைந்தபட்சம், பேச்சில் இல்லாமற்போனாலும், வட்டார வழக்குகளை எழுத்திலாவது ஆவணப்படுத்தவாவது செய்யவேண்டும்

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner