“நாம் இந்து அல்ல; சைவர்கள்”

இலங்கை சைவநெறிக் கழகம் நிகழ்த்திய “சைவம் போற்றுதும்” எனும் கலைவிழாவானது கடந்த ஏப்ரல் ஏழாம் திகதி (சனிக்கிழமை) கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் மாலை 3.30 மணி முதல் கோலாகலமாக இடம்பெற்றது. அங்கு கவனிப்பதற்கு இரு விடயங்கள் இருந்தன.


முதலாவது, அவ்விழாவில், இலங்கைச் சைவம் யாழ்ப்பாணத்தையும் சாதியத்தையும் முன்னிலைப்படுத்துவது என்ற வாதம் பொய்யாகும் படி, பல காட்சிகள் அரங்கேறின. யாழ்ப்பாணத்துக்கு வெளியே, மலையகம் சார்ந்து கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகளின் கிராமிய நடனமும், கீழைக்கரை சார்ந்து திருக்கோவில் விநாயகபுரம் சிவகாமி தமிழ் அருங்கலைக்கூடத்தின் நாட்டுக்கூத்தும் அங்கு  மேடையேற்றப்பட்டன என்பது அவற்றில் முக்கியமான சாட்சியம். இன்னொரு சாட்சியம், அங்கு இலங்கைச் சைவச்சான்றோராகப் பிரகடனப்படுத்தப்பட்ட பத்துப்பேரில், மட்டக்களப்பைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ காசிநாத அருணாச்சல தேசிகமணியும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான யாழ்ப்பாணத்துப் பெரியார் கா.சூரன் அவர்களும் உள்ளீர்க்கப்பட்டிருந்தார்கள். (இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட பத்து பேரையும் பற்றி இலங்கையின் ஒவ்வொரு சைவனும் அறிந்திருக்கவேண்டும். அதைப் பிறகொரு முறை விரிவாகப் பார்க்கலாம்.)

இரண்டாவது, இலங்கையில் இந்து என்பதற்கு மாற்றாக சைவம் என்ற பதத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்று ஒலித்த அக்கழகத்தினரின் குரல். இந்தக் குரல் சமீபகாலமாகவே உரத்து ஒலிப்பதாகத் தோன்றுகிறது. எனவே இதை நாம் சற்று ஆழமாக ஆராயவேண்டிய தேவை இருக்கிறது. 

இந்து என்று அழைக்கப்படுவது சைவம், வைணவம், சாக்தம் என்று பல்வேறு சமயங்களின் கூட்டமைப்பு. அது அத்துவைதம், துவைதம், சைவ சித்தாந்தம் என்று பல்வேறு மெய்யியல்களின் தொகுதி. இப்படி நூற்றுக்கணக்கான தரப்புகளைக் கொண்ட “இந்து” என்ற பன்மைத்துவ மையத்தை எதிர்த்து, அதன் பலநூறு கிளைகளுள் ஒன்றான “சைவம்” என்ற ஒரே ஒரு தரப்பை மாத்திரம் முன்வைப்பது அடிப்படைவாதம் ஆகாதா என்பது மிக எளிமையான கேள்வி. இக்கேள்விக்கு நூறு வீதம் திருப்தியாக நம்மால் “இல்லை” என்று பதிலளிக்க முடிந்தால்,  இலங்கையில் இந்து வேண்டாம், சைவம் போதும் என்ற முடிவுக்கு இலகுவாக வந்துவிடலாம்.

அதற்கு முன், இக்கேள்விக்கு “ஆம்” என்று பதில் சொல்பவர்கள் என்னென்ன வாதங்களை அடுக்குவார்கள் என்று பார்ப்போம். அவர்களுக்கு வாய்ப்பாக மூன்று வாதங்கள் இருக்கின்றன. இலங்கையில் சிவன் தவிர விஷ்ணு முதலான ஏனைய தெய்வங்களை வழிபடுவோர் இருக்கிறார்கள் என்பது முதலாவது வாதம். இரண்டாவது, தங்கள் குருதேவரைக் கடவுளாக வழிபடும் இந்து மறுமலர்ச்சி அமைப்புக்களை எப்படி சைவர்களாகக் கருதமுடியும் என்பது. மூன்றாவது, நாட்டார் தெய்வங்கள் சைவத்துக்குள் வரமுடியாது எனும் வாதம். 

வைகுண்டக் காவலரும் விபூதிபூசிகளே இங்கு!
தம்பிலுவில் மகாவிஷ்ணு ஆலயம்.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம். வைணவம், சாக்தம் முதலான பிற எந்த இந்துக்கிளை நெறிகளின் தெய்வங்களையும் சைவத்துக்குள் அடக்கமுடியும். பிள்ளையார், முருகன், சக்தி ஆகிய மூவரும் சைவத் தெய்வங்கள் அல்ல என்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். சக்தியைப் புகழும் திருமந்திரம், முருகனைப் புகழும் முருகாற்றுப்படை, பிள்ளையாரைப் புகழும் மூத்தநாயனார் இரட்டைமணிமாலை என்பன இல்லாமல் சைவம் இல்லை என்பது, சைவத்திருமுறைகளில் அறிமுகமுள்ள எவருக்கும் தெரியும். திருமாலும் அப்படித்தான்.  திருமால் வைணவத்துக்கு மட்டுமே உரியவர் அல்லர். இலங்கையில், திருமால், முழுக்க முழுக்க சைவ வரன்முறைக்கு உட்பட்டே வழிபடப்படுகிறார். சிவாகமங்களிலே கூட, திருமாலுக்கு இடம் இருப்பது பலருக்கும் தெரியாது. சந்தேகமிருப்பவர்கள், உங்கள் ஊரிலுள்ள ஒரு கோயிலின் கருவறையின் மேற்குப் பக்கம் எட்டிப் பார்த்து விட்டு வாருங்கள். ஆதிசேடன் மடியில் ஹாயாகப் படுத்திருக்கும் ஆதிமூலம் தெரிகிறாரா? 

ஆக, இந்து என்ற மதக்கூட்டமைப்பின் எந்த வழிபடு தெய்வங்களும் சைவத்தால் நிராகரிக்கப்படவில்லை. எனவே இலங்கையில், மேற்படி தெய்வங்களை வழிபடுகின்ற எவனும் சைவனே. மெய்யியல் ரீதியாக இலங்கையில் வீரசைவமும் சித்தாந்த சைவமும் மட்டுமே நிலவி வருகின்றன. அவை சைவ மெய்யியல்கள் தான். (கடந்த நூற்றாண்டு வரை, அத்வைதமோ ஏனைய இந்து மெய்யியல்களோ இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டன என்பதற்கு போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை) ஆக சைவ அடையாளத்துக்கு வெளியே இருக்கும் ‘இந்து’ எவனும் இங்கு இருந்ததில்லை.  

சிவன் இடத்தில் ஷீர்டி,
நல்லூர் ஷீர்டி சாய்பாபா மந்திர்
இரண்டாவது சிக்கலாக வருவது, கடந்த ஐம்பது அறுபது ஆண்டு காலத்துக்குள் இங்கு வேரூன்றியுள்ள சத்திய சாயி சமிதி, அம்மா பகவான், பிரம்மகுமாரிகள், ஹரே கிருஷ்ணா முதலான இந்து மறுமலர்ச்சி அமைப்புக்கள். ஆனால், இவற்றைப் பின்பற்றுவோர் கூட திருவிழா என்றால், திருநீறு பூசி, உள்ளுர்க் கோயிலுக்குப் போகத் தயங்குவதில்லை. பிரம்மகுமாரிகள் வேறொரு விதத்தில் சிவனைப் பரம்பொருள் என்பதையும், யாழ்ப்பாணத்தில் சீரடி சாயிபாபாக்கு அமைக்கப்பட்டுள்ள சிவாலயத்தையும் மரபார்ந்த சைவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்கு வெளியே, இந்த அமைப்புகளால் கூட சிவனைத் தவிர்த்து இயங்க முடியவில்லை என்பதாகவே அவற்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆக, இவர்கள் எல்லோரும் சைவர்கள் தான். 

இறுதியாக, இன்னும் கொஞ்சப்பேர், நாட்டார் தெய்வங்கள் எதுவும் சைவத்துக்குள் வரமுடியாது; நாட்டாரியலின் தனித்துவத்தை சைவம் அழிக்கிறது என்கிறார்கள். மிகத்தவறான புரிதல் அது. இந்தியாவுக்கெல்லாம் போகவேண்டாம். இலங்கையில், நமக்கு நன்கு தெரிந்த காளி, கண்ணகி, மாரி, திரௌபதி, வைரவர், பெரியதம்பிரான், ஐயனார், கடல்நாச்சி, பேச்சி, இந்த நாட்டார் தெய்வங்;களில் எந்தத் தெய்வத்தின் கதையோடு சிவன்  சம்பந்தப்படவில்லை என்று கூறுங்கள் பார்ப்போம்? ஒருவரைக் காட்டமுடியாது நம்மால்!
முழுசா உமை!
கல்லாறு கடல்நாச்சி அம்மன்

புவியியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் தனித்துப்போயுள்ள சிறு சிறு குழுக்கள் உடைந்து, உலகமே சமத்துவமான ஒரு தனிக்குடும்பமாக மாறுகின்ற முயற்சியைத் தான் இன்று நாம் வளர்ச்சி, அபிவிருத்தி என்று சொல்கிறோம். வரலாற்றுக் காலத்திலிருந்தே சைவம் அதைத்தான் செய்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நந்தனார், அதிபத்தர், திருக்குறிப்புத் தொண்டர் என்போரெல்லாம்  நாயன்மாராக மாறியது சைவத்தின் இந்த முயற்சியில் தான். மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் வருகின்ற ‘சாதித்தெய்வக் கல்வெட்டு’, ஒரு சமூகத்தின் வெவ்வேறு சாதிகளை, அவற்றின் தெய்வம் சார்ந்து ஒன்றிணைத்து மையப்படுத்தும் தேவை இருந்திருக்கிறது என்பதற்கான சிறந்த ஆதாரம். 

சைவத்தின் இந்த முயற்சியில் நாட்டார்; தெய்வங்கள் சிவனின் அவதாரங்களாக, சிவனின் மனைவிகளாக, சிவனின் பிள்ளைகளாக உருமாறுகிறார்கள். ஆனால்,  இந்தக் கலப்பும் ஒன்றிணைவும் பலரும் எண்ணுவது போல யாரோ சிலரால் திட்டமிட்டு வஞ்சகமாக செய்யப்படும் ஒன்றல்ல. சிறுதெய்வங்களின் கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்களாக மாறுவதன் கீழ் சிலரது ‘இலுமினாட்டித்தனம்’ இருப்பதாகக் கருதி அதை “சமஸ்கிருதமயமாக்கம்” என்று அழைத்த நாட்டாரியல் ஆய்வாளர்கள் கூட, அது இயல்பாக நிகழ்வதை உணர்ந்து, அந்தக் கலைச்சொல்லை இன்று “மேல்நிலையாக்கம்” என்றே ஆள்கிறார்கள். 

நம் மத்தியிலேயே ஒரு உதாரணம் இருக்கிறது. சில நரசிங்க வைரவர் கோயில்கள் கும்பாபிஷேகம் நடந்து இப்போது நரசிங்கர் கோயில்களாக மாறியிருப்பது.  உண்மையில் நரசிங்க வைரவர், நரசிங்கரை அழித்த சிவமூர்த்தம். திட்டமிட்டு வியூகம் வகுப்பதாக நம்பப்படும் சமஸ்கிருதமய வாதிகள் உண்மையிலேயே இருந்திருந்தால், அழித்தவரின் கோயிலை அழிக்கப்பட்டவரின் கோயிலாக மாற்ற அனுமதித்திருப்பார்களா?

ஆக, இந்து மதக்கூட்டமைப்பில் இன்னொரு பெருங்கிளையான  வைணவத்தையே சைவம் தனக்குள் அனுமதித்திருக்கும் போது, தனக்கெனத் தனித்துவத்தைக் கொண்டிருக்கும் ஈழத்துச் சைவத்தை, இந்து என்று வேறொரு பெயர் கொண்டழைப்பது தவறு என்ற முடிவுக்கே நாமும் வரமுடியும். 

இறுதியாக இதை எதிர்க்கக்கூடியது ஒரே ஒரு தரப்பு மட்டுமே. இந்திய இந்துத்துவ அரசியலின் அழுத்தத்தால், இலங்கைச் சைவத்தையும் இந்துத்துவமாகவே மாற்ற முயலும், பலம் வாய்ந்த நான்காவது தரப்பு அது. உண்மையிலேயே அவர்களுக்கு இலங்கையில் இந்தியப் பண்பாடு செழித்தோங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், ‘வேற்றுக்குறிப்புப் பாராமல்’ உள்ளுர்ச் சைவத்தையே வளர்க்கவேண்டும். இல்லை, ஹிந்து என்ற பெயர் இருந்தால் தான் உதவுவோம் என்றால், அதற்குப் பெயர் அக்கறை அல்ல் உள்நோக்கம். அது இங்கு கனவிலும் நிறைவேறப் போவதில்லை. ஏனென்றால், இந்த நாடு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிவபூமி!  

(அரங்கம் பத்திரிகையில் வெளியான கட்டுரை)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner