பேரூஞ்சல், பாங்கொக் |
இன்றைக்கெல்லாம் “இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா”, “என்ன
தவம் செய்தேன் தமிழனாய்ப் பிறப்பதற்கு” என்றெல்லாம்
தமிழுணர்வுடன் கூடிய நூற்றுக்கணக்கான
பதிவுகளைக் கடக்காமல், முகநூலில்
நம்மால் உலாவமுடியாது. இப்போது
நாம் காண இருப்பதும்
அத்தகைய தலைப்புகளின் கீழ் வாசிக்கவேண்டிய
விடயம் தான் என்றாலும்,
இது கொஞ்சம் புதுமையானது. முகநூல்
பதிவுகள் போல, சீதையைத்
தேடிச்சென்ற இராமனிடம் மாரீசனை ஞாபகப்படுத்தி, “அந்த
மான், நிக்கோ பார்?”
என்று கேட்டு தமிழனே
அத்தீவுகளுக்குப் பெயர் சூட்டினான்,
“கட்டுகிறேன் அங்கு ஓர்
கோயில்” என்று சொல்லி
தமிழனே கம்போடியாவில் “அங்கோர்”
கோயிலைக் கட்டினான் – என்றெல்லாம்
சும்மா அடித்து விடாமல், கொஞ்சம்
வரலாற்று ரீதியாகச் சென்று புளகாங்கிதம்
அடைய இருக்கிறோம். :)
கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே, இந்தியத்
துணைக்கண்டத்துடன் ஆழமான பண்பாட்டு
உறவைப் பேணியவை தென்கிழக்காசிய நாடுகள். அதற்குப்
பிரதியுபகாரமாக, இந்தியப் பண்பாட்டுச் செல்வங்களான சைவமும் பௌத்தமும் அந்நாடுகளைச் சென்று சேர்ந்தன.
13ஆம் நூற்றாண்டளவில் அரேபிய வணிகர்கள்
மூலம் இஸ்லாமும், காலனித்துவ
நாடுகள் மூலம் கிறிஸ்தவமும்
அங்கெல்லாம் செழித்தோங்க முன்பு, இந்தோனேசியா,
தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம்
முதலான நாடுகளின் இருபெரும் நெறிகளாகக் கோலோச்சியவை சைவமும் பௌத்தமும் தான். அதற்கெல்லாம்
மேலாக சைவத்துக்கோ, அதுசார்ந்த
வைதிக நெறிக்கோ மட்டுமன்றி, ஒட்டுமொத்த
தமிழர்க்கே பெருமை சேர்க்கும்
பாரம்பரியமொன்றை – தாய்லாந்தில் அரசகுடும்பத்தாரின் மரியாதையைப் பெற்றிருந்த, அந்நாட்டு
மக்களால் கடந்த நூற்றாண்டின்
நடுப்பகுதி வரை போற்றப்பட்ட
தமிழர் மரபொன்றை இன்றைக்குப் பார்க்க இருக்கிறோம்.
எதற்காக இத்தனை பீடிகை?
என்னவென்று தான் சொல்லித்தொலையேன்
என்று பொறுமை இழந்திருப்பீர்கள்.
சரி சரி. சொல்கிறேன். தாய்லாந்தில்
கடல் கடந்து வாழும்
அந்தத் தமிழர் பாரம்பரியம்
– திரியம்பாவை!
திரியம்பாவை… ஆம்
நம் மார்கழித் திருவெம்பாவை நோன்பின் தொடர்ச்சி தான் அது.
தாய்லாந்தில், ஒன்றல்ல, இரண்டல்ல,
பதினான்கு நாட்கள் கொண்டாடப்பட்டிருக்கிறது - அதுவும் தாய்லாந்தின் அரசகுடும்பத்தார் முன்னின்று நடத்தும் பன்னிரண்டு பெருநிகழ்வுகளில் ஒன்றாக அது
இருந்து வந்திருக்கின்றது என்பது எத்தனை
வியப்புக்கும் பெருமைக்கும் உரிய விடயம்?
திருவெம்பாவை
தாய்லாந்துக்குள் செல்வதற்கு முன், நாம்
திருவெம்பாவை பற்றி முழுமையாக
அறிந்திருக்க வேண்டும். திருவெம்பாவை,
சங்ககாலத்தில் (கி.மு
3 முதல் கி.பி
3 ஆம் நூற்றாண்டுகள்) வழக்கத்தில் இருந்த “அம்பா
ஆடல்” எனும் பாவை
நோன்பின் தொடர்ச்சியாகும். சங்க இலக்கியங்களில்
இது “தைந்நீராடல்” என்ற
பெயரில் பதிவாகி இருக்கின்றது. தமக்கு
நல்ல கணவன் வேண்டி,
இளம்பெண்கள் நோன்பிருந்து, அதிகாலையில்
நீராடி மண்ணில் பாவை செய்து
வழிபட்டார்கள் என்பது நற்றிணை,
பரிபாடல், ஐங்குறுநூறு முதலான நூல்கள்
தரும் செய்தி.
அது மார்கழி
மாதத் திருவாதிரையில் துவங்கி முப்பது
நாட்கள் இடம்பெற்று தைப்பூசம் அன்று நிறைவுற்றதைப்
பரிபாடலின் பதினோராம் பாடல் சொல்கின்றது.
அம்பா
ஆடலுக்காக அதிகாலையில் நீராடச் செல்லும் பெண்கள், ஒருவரை
ஒருவர் துயிலெழுப்பி, தமக்குள்
கேலி செய்தும், பாவையைப்
போற்றியும், பாவைப்பாடல்கள் பாடுவது வழக்கமாக இருந்திருக்கின்றது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் பாடப்படும் மூன்று பாவைப்பாட்டுக்களே
இன்று நமக்கு கிடைக்கின்றன.
ஒன்று மணிவாசகரின் சைவத் திருவெம்பாவை.
இன்னொன்று ஆண்டாளின் வைணவத்திருப்பாவை. மற்றொன்று நாம் பெரிதும்
அறியாத சமணத் திருவெம்பாவை.
அது சமணரான அவிரோதி
ஆழ்வாரால் இயற்றப்பட்டது. ஒவ்வொரு
பாட்டின் இறுதியிலும் “எம்பாவாய்” என்று
முடிவதே பாவைப்பாட்டுகளின் பொதுவான இயல்பு. இவற்றைத்
தவிர, நாட்டார் வாய்மொழியில் இருந்து வழக்கற்றுப் போன பாவைப்பாட்டுக்களும்
இருந்திருக்கலாம்.
தைந்நீராடல் = மார்கழி நோன்பு?
தைப்பூசத்தில் முடிவடைந்த அம்பா ஆடலின்
எச்சம், சம்பந்தர் காலத்திலும் (கி.பி 7ஆம்
நூற்றாண்டு) தொடர்ந்திருக்கின்றது என்பதற்குச் சான்றாக,
“நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”
என்று தைப்பூசத்தைப்
பெண்களே கொண்டாடுவதை சம்பந்தர் பதிவு செய்வதைக்
காணலாம். ஆண்டாள், தன்
திருப்பாவையை “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்” (மார்கழிப்
பூரணை - திருவாதிரை) என்றே
ஆரம்பிப்பதுடன், நாச்சியார் திருமொழியில் “தையொரு
திங்களும் தரைவிளக்கி” என்றும்
பாடுவதால், அவள் காலமான
கி.பி 8ஆம்
நூற்றாண்டிலும் தைந்நீராடல் பெரிதாக மாற்றமின்றி அப்படியே தொடர்ந்திருக்கின்றது என்றே கொள்ளமுடிகின்றது.
பழங்காலத்தில்
பாவைநோன்பும், அதன் இறுதி
நாளான தைப்பூசமும் பெண்களாலேயே கொண்டாடப்பட்டிருக்க, இன்றைக்கு அது முழுத்தமிழராலும்
கொண்டாடப்படும் பெருவிழாக்களாக வளர்ந்திருக்கின்றன என்பது பிற்காலத்தில்
இயல்பாக ஏற்பட்ட மாற்றம்.
இன்றைக்கு சைவர்கள், மார்கழித்
திருவாதிரையிலும், அதற்கு முன்வரும்
ஒன்பது நாட்களும் திருவெம்பாவை நோன்பு அனுட்டிக்கிறார்கள்.
வைணவ ஆலயங்களில் மார்கழி முப்பது நாளும், மார்கழி
உற்சவம் எனும் பெயரில்
திருப்பாவை விழா இடம்பெறுகின்றது.
இப்படி, சங்க கால
அம்பா ஆடலானது, தைந்நீராடலாக
இருந்து, மார்கழி நீராடலாக மாறியது எப்போது?
இன்றைக்கு சூரியனின் இயக்கத்தை வைத்தே நாம்
தமிழ் மாதங்களைக் கணிக்கின்றோம். ஆனால்,
தமிழரின் பழைய நாட்காட்டி,
முழுக்க முழுக்க சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மதிவழி
(சாந்திரமான) நாட்காட்டி ஆகும். ஒரு
பூரணையிலிருந்து அடுத்த பூரணை
வரையான முப்பது நாட்களே, மதிவழி
நாட்காட்டியில் ஒரு மாதம்.
முழுமதி தினங்கள் பெரும்பாலும் இன்றைக்கும் சமயரீதியில் முக்கியமானவையாக இருப்பது, இந்தப்
பழைய மதிவழி நாட்காட்டியின்
எச்சம் தான்.
உதாரணமாக, கார்த்திகைப்பூரணை
- விளக்கீடு,
மார்கழிப்பூரணை – திருவாதிரை, தைப்பூரணை
– தைப்பூசம், பங்குனிப்பூரணை – பங்குனி
உத்தரம், சித்திரைப்பூரணை – சித்திராபௌர்ணமி, வைகாசிப்பூரணை – வைகாசி
விசாகம் என்று பெரும்பாலான
முழுநிலா நாட்கள் இன்றும் முக்கியத்துவமிக்க நாட்களாகவே மிளிர்வதை நாம் காணலாம்.
இப்படிப் பார்த்தால், மார்கழிப்
பூரணையில் (திருவாதிரை நட்சத்திரத்திலேயே பெரும்பாலும் வரும்) ஆரம்பித்த
மார்கழி மாதம், தைப்பூரணையில்
(அன்று தைப்பூசம்) முடிந்ததால்
அம்பா ஆடல், தைந்நீராடல்
என்று அழைக்கப்பட்டது. ஆனால்
தமிழ் மாதங்கள் இன்று உள்ளது
போல், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கதிர்வழியில்
(சௌரமானம்) கணிக்கப்பட ஆரம்பித்த காலத்தில், மார்கழி
– தைப்பூரணைகள் முக்கியத்துவம் இழந்திருக்கின்றன. எனவே தான்,
மீண்டும் மார்கழி மாதத்திலேயே கொண்டாடப்பட ஆரம்பித்த பாவை நோன்பு,
தையில் முடிவடையும் நூலிழைத் தொடர்பும் அற்றுப்போக, முழுக்க
முழுக்க மார்கழி நீராடல் ஆக மாறி
இருக்கின்றது.
தாய்லாந்துத் திரியம்பாவை
பெரும்போர்கள், அரசியல்
பூசல்கள் காரணமாக தம் நாடு பலவீனமுறும்
போதெல்லாம், அரச
குடும்பத்தின் ஆதரவைப் பொறுத்து, அயல்நாடுகளிலிருந்து
சமயகுருக்களை வரவழைத்து, வைதிகநெறியை
அல்லது பௌத்தத்தை மறுமலர்ச்சிக்குள்ளாக்குவது தெற்கு – தென்கிழக்காசியாவின்
வரலாறு முழுவதும் நாம் காணும்
வழமை. இலங்கையில் பௌத்தம் நலிவுற்றபோதெல்லாம், தாய்லாந்து, மியன்மார்
முதலான
இடங்களிலிருந்து பிக்குகள் வரவழைக்கப்பட்டு பௌத்தம் செழிக்கச் செய்யப்பட்ட சம்பவங்கள் மகாவம்சத்தில் பதிவாகி இருக்கின்றன. அது
போலவே, வைதிக நெறியைச்
சார்ந்தவர்களாக தாய்லாந்து அரச குடும்பத்தினர்
விளங்கிய ஒரு காலத்தில்,
தமிழகத்திலிருந்து அந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்ட வைதிகர்கள் மூலம் திருவெம்பாவை
நோன்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது எனக் கொள்ளலாம்.
இந்திய உபகண்டத்திலே
மிகப்பெரும் கடலோடிகள் தமிழரும் கலிங்கரும் (இன்றைய
ஒடிசா) தான். சோழர்
ஸ்ரீவிஜயம், கடாரம், மாபப்பாளம்,
மாநக்கவரம் முதலான தென்கிழக்குத்
தேசங்களை வென்ற கதைகளை
அவர்களது மெய்க்கீர்த்திகள் பாடி நிற்கின்றன.
எனவே, திருவெம்பாவை தாய்லாந்துக்கு அறிமுகமானது, பெரும்பாலும்
சோழப்பேரரசு காலத்தில் (கி.பி 10 முதல்
13ஆம் நூற்றாண்டு வரை) என்றே
கொள்ளமுடிகின்றது.
அதற்கு ஆதாரமாக,
திருவெம்பாவை பற்றிய மிகப்பழைய
தாய்லாந்துக் குறிப்பு, கி.பி 1348ஆம் ஆண்டைச்
சேர்ந்ததாகக் கிடைக்கின்றது. தாய்லாந்தில்
அப்போது இருந்த சுகோதை
(Sukhothai) அரசின் கோப்பெருந்தேவி "நங் நோப்பமாசியால்"
(Nang Noppamas) எழுதப்பட்ட "தம்ரப் தாவோ
சிறிச்சுலாலக்" (Tamrab Tao
ShriChulalak) எனும் நூலில், சுகோதை
அரச குடும்பத்தாரின் குலதெய்வக் கோயிலில், ஆண்டின்
முதல் மாதமன்று, திரியம்பாவை
கொண்டாடப்பட்டதையும், மக்கள் புத்தாடை
பூண்டு அதில் கலந்து
கொண்டதையும், அன்று ஊஞ்சல்
திருவிழா இடம்பெற்றதையும், அன்றிரவு, சிவபெருமான்
மற்றும் நாராய் (நாராயணன்)
ஆகியோரின் ஊர்வலம் இடம்பெற்றதையும், அவர் விவரித்துள்ளார்.
பொ.பி
1461இல்
“அயூத்தயா”
(Ayutthaya) நகரிலிருந்து சயாம் நாட்டை
ஆண்ட "பரம் திரிலோகநாத்"
(Baromtrilokanat) மன்னர்
காலத்தில் அரச நீதிநூலாக
விளங்கிய "கொட்மந்தியம்பன்" (Kodmanthienben) ஆண்டின் முதல் மாதத்தில்,
பிராமணர்கள் திரியம்பாவைப் பிரசாதமான நெற்பொரி, மலர்கள்
என்பவற்றுடன் அரண்மனைக்குள் நுழைவதற்கான சடங்குகளை விவரிப்பதுடன், திரியம்பாவையை
அரசவிழாவாகவும் பிரகடனப்படுத்தி இருக்கின்றது. அதையடுத்து,
1455இல் எழுதப்பட்ட
"கொத்மய சக்தினா" (Kodmay Sakdina) நீதி நூல்,
திரியம்பாவை அன்று நிகழும்
ஊஞ்சல் திருவிழாவுக்குப் பொறுப்பாக இருந்த "குன்
புரோமசாமாய்" எனும் பிராமணருக்கு
நானூறு ராய் பரப்பிலான
நிலம் தானம் வழங்கப்பட்டதைச்
சொல்கின்றது. இன்னொரு குறிப்பில், அயூத்தயா
அரசன் மூன்றாம் இராமாதிபோதி மன்னன் (கி.பி 1656-1688) திரியம்பாவையில், சிவனும் திருமாலும் கலந்துகொண்ட ஊர்வலத்தைச் சிறப்பிப்பதற்காக, அரண்மனையிலிருந்து வருகை தந்ததைச்
சொல்கின்றது.
சுகோதை, அயூத்தயா
ஆகியவற்றுக்கு சமகாலத்தில், சிறிது
காலம் இன்னொரு
அரசாக விளங்கிய "சவங்கலோக்"கிலும்
திரியம்பாவை
கொண்டாடப்பட்டிருக்கின்றது. "சிறிசட்சனாலை" என்ற
பெயரில் அங்கு ஓர்
புதிய நகரை எழுப்பியபோது,
பிராமணர்கள் ஏழு நாள்
நோன்பு நோற்று, திரியம்பாவையை
அனுட்டித்ததாக ஒரு குறிப்பு
சொல்கின்றது. பிட்சானுலோக் Phitsanulok) எனும் இன்னொரு
நகரம் புதிதாக அமைக்கப்பட்டபோதும், பிராமணர்கள் ஏழு நாட்கள்
திரியம்பாவை நோன்பு நோற்ற
குறிப்புகள் கிடைக்கின்றன.
சுகோதையிலும் அயூத்தயாவிலும் திரியம்பாவை ஒரு விழாவாகக்
கொண்டாடப்பட, சவங்கலோக், பிட்சானுலோக்
என்பவற்றில், அது ஒரு
நோன்பு அளவிலேயே அனுட்டிக்கப்பட்டது என்ற தகவல்கள்
முக்கியமானவை. தமிழ்நாட்டிலிருந்து தாய்லாந்துக்குக் குடியேறிய பிராமணர்களால் திருவெம்பாவை நோன்பு நோற்கப்பட்டதையும்,
ஊஞ்சலாடுதல் முதலான சில தனித்துவமான
மரபுகளை அது உள்வாங்கிக்
கொண்டு, அது மெல்ல
மெல்ல ஒரு அரசவிழா
அளவுக்கு வளர்ந்ததையும், இவை மறைமுகமாக
சுட்டுகின்றன.
பழைய குறிப்புகள்
கிடைக்காவிடினும், சிவனை மகிழ்விக்க
ஊஞ்சலாடுதல் எனும் மரபு,
தாய் நாட்டாரியலில் ஏற்கனவே வழக்கிலிருந்திருக்கலாம். அது திருவெம்பாவையின்
அறிமுகத்துடன் அதோடு இணைந்து
அரச விழாவாக மேனிலையாக்கம் பெற்றது என்று கொள்வது
பொருத்தம்போல் படுகிறது. எவ்வாறெனினும்,
திரியம்பாவையானது ஐநூறு ஆண்டுகளுக்கும்
மேலாக தாய்லாந்தில் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
திரியம்பாவைக் கொண்டாட்டங்கள்
தாய்லாந்தில் இன்றைக்கு திரியம்பாவை மரபுகள் அருகிவிட்டபோதும், மன்னர் ஆறாம்
இராமர் வச்சிராவுத் காலத்தில் (Rama VI Vajiravudh: 1910 - 1925) வெகுவிமரிசையாக இடம்பெற்ற திரியம்பாவைக் கொண்டாட்டங்கள் பற்றிய தகவல்கள்
நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றின் படி, ஆண்டின்
முதல் மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாள்
முதல் பத்து நாட்கள்,
சிவன் கயிலையிலிருந்து உலகுக்கு இறங்கி வருவதால்,
அவரை வரவேற்பதற்காக பத்து நாட்கள்
எடுக்கப்பட்ட விழாவே சயாம்
நாட்டின் திரியம்பாவை விழாவாகும். சிவன்
நீங்கும் பத்தாம் நாளன்று, அவரது
தோழரான திருமால் உலகுக்கு வருவதாகவும், அவர்
இன்னும் ஐந்து நாட்கள்
தங்கியிருப்பதாகவும் அவர்கள் நம்பினர்.
ஆண்டுதோறும் அரசவிழாவாக இடம்பெற்ற திரியம்பாவையில் சுமார் நூறு
பிராமணர்கள் வரை கலந்துகொண்டனர்.
மக்களும் மன்னனும் சூழ அவர்கள்,
மரக்கறிகள், கரும்பு, பழங்கள்,
மலர்கள் படைத்து சிவனை வழிபட்டனர்.
சங்கு ஊதுவதும் 'பாண்டோ'
எனும் உடுக்கையை ஒலிப்பதும், திருவெம்பாவை
ஓதுவதும், ஊஞ்சல் திருவிழா
கொண்டாடுவதும் இவ்வழிபாட்டின் போது இடம்பெற்றது.
விழாவின் ஒன்பதாம் நாள் (பௌர்ணமி)
அன்று, சிவனும் கணபதியும் ஆலயத்தைச் சுற்றி திருவுலா
வந்தனர். அடுத்த நாளிலிருந்து
ஐந்து நாட்கள் திருமாலுக்கு திருவீதியுலா இடம்பெற்றதுடன், பௌர்ணமி
அன்று அவர்கள் படைக்கும் உணவு பழுதடைந்தால்,
திருமாலின் கோபத்துக்கஞ்சி, அவருக்கான
வீதியுலா நிறுத்தப்பட்டது. இவ்வாறு திரியம்பாவை கொண்டாடப்படும் பதினான்கு நாட்களும் நகரம் விழாக்கோலம்
பூண்டிருந்தது.
ஊஞ்சல் திருவிழா
1926ஆமாண்டு ஊஞ்சல்
விழாவில்
உயிரைப்
பணயம்
வைத்து
ஊஞ்சலாடும்
பிராமண
இளைஞர்கள்.
ஆடியபடியே
எதிரே
மூங்கில்
கம்பில்
கட்டியிருக்கும் பொற்கிழியை அவர்கள்
பறித்தால்
நாட்டுக்கு
நலம்
என்று
கருதப்பட்டது.
திரியம்பாவையன்று ஊஞ்சல் திருவிழா
கொண்டாடுவது என்பது சுகோதை,
அயூத்தயாவில் தொடங்கி, தாய்லாந்தில்
பெருமரபாகவே இருந்து வந்திருக்கின்றது. இதற்கென பிரமாண்டமான ஊஞ்சலை அமைப்பது
தாய்லாந்தின் பெரும்பாலான நகரங்களில் வழக்கமாக இருந்தது. மன்னர்
முதலாம் இராமர் பாங்கொக்கை
ஆண்டபோது
1784இல்
தேக்கு மரத்தால் அமைக்கப்பட்ட பேரூஞ்சல் அவற்றில் முக்கியமான ஒன்று.
தாய்லாந்தின் பன்னிரு அரசப் பெருவிழாக்களில்
ஒன்றான திரியம்பாவை ஆண்டுதோறும் கொண்டாடப்படும்போது, மன்னரால் தெரிவுசெய்யப்படுவோர், சிவனாகக் கருதப்பட்டு, அந்த
ஊஞ்சலில் ஆடுவது வழக்கமாக
இருந்து வந்தது. 1800களில்
பேரூஞ்சலில் ஏற்பட்ட மின்னல் தாக்கம், 1935இல்
ஊஞ்சல் விழாவில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் என்பன காரணமாக
ஊஞ்சல் திருவிழா பிற்காலங்களில் அடிக்கடி நிறுத்தி வைக்கப்பட்ட போதும், இரண்டாம்
உலகப்போரின் பின், பெருஞ்செலவை
ஏற்படுத்தும் ஊஞ்சல் திருவிழாவை
முற்றாக நிறுத்துவதற்கு அரசு தீர்மானித்தது.
எனினும் சிதைவுற்ற ஊஞ்சல் கடந்த
2007இல்
திருத்தப்பட்டு, அண்மையில் காலமான தாய்லாந்து
மன்னர் ஒன்பதாம் இராமரால் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. தாய்லாந்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகப் போற்றப்படும் "சவோ
சிங்க்ச்சா" (Sao Ching cha)
எனப்படும் அறுபதடி உயரமான பேரூஞ்சலை,
இன்றும் பாங்கொக்கில் காணமுடியும். அது
மறைந்துபோய்க் கொண்டிருக்கும் வரலாற்றுப்புகழ் மிக்க மரபொன்றின்
அடையாளச் சின்னமும் கூட!
பிராமணக் கோயில்
ஊஞ்சல் விழா
நிறுத்தப்பட்டபோதும், தாய்லாந்தில் இன்றளவும் திரியம்பாவையைக் கொண்டாடும் ஒரே ஆலயமாக,
பாங்கொக்கிலுள்ள பிராமணக் கோயில் அல்லது
“தேவசாதன்” (Devasathan) மாத்திரமே விளங்குகின்றது.
“தேவசாதன்” (வடமொழி
தேவஸ்தானத்தின் திரிபு) என்று
அழைக்கப்படும் பாங்கொக் பிராமணக் கோயில், சிவன்,
கணபதி, நாராய் (விஷ்ணு)
ஆகியோரின் மூன்று சன்னதிகளைக்
கொண்டது. அதன் நுழைவாயிலில்
பிரம்மனின் சிற்பமும் பக்கத்தில் ஒரு சிவலிங்கமும்
நிறுவப்பட்டிருக்கின்றது. தேவசாதன் சன்னதிகளிலுள்ள மூன்று இறைவர்களின்
திருவுருவங்களும், அழிந்துபோன சுகோதை நகரின்
பிராமணக் கோயிலிலிருந்து முதலாம் இராமரால் இங்கு கொண்டுவரப்பட்டதாகச்
சொல்லப்படுகின்றது.
இக்கட்டுரை முழுக்க மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் தாய்லாந்துப் “பிராமணர்கள்”,
இந்து சமய அந்தணர்களிலிருந்து
வேறுபட்டவர்கள். தமிழ்நாட்டு வேரைக் கொண்டுள்ள
போதும், அவர்கள் தாய்லாந்தின் மரபார்ந்த பௌத்தத்துடன் தம்மைப் பிணைத்துக்கொண்டவர்கள் என்பதுடன், வைதிகக்
கருமங்களைப் பெருமளவு கைவிட்டவர்களும் கூட. தாய்லாந்து
மன்னரின் அரசகுருவாக அமர்ந்திருப்பதும், “தேவசாதன்” கோயிலைப்
பராமரித்தல் உள்ளிட்ட நியமிக்கப்பட்ட சில கடமைகளைச்
செய்வதுமே அவர்களது பணி. பல
நூறு ஆண்டுகள் கடந்தும், திருவெம்பாவை
நோன்பை தாய்லாந்தில் நீடிக்கச் செய்து வருபவர்கள்
என்ற வகையில் அவர்கள், உலகத்தமிழர்
யாவரினதும் நன்றிக்குரியவர்கள்.
தேவசாதன்
பிராமணக்
கோயில்
திரியம்பாவையும் திருவெம்பாவையும்
தாய்லாந்துத் திரியம்பாவைக்கும், தமிழ்த் திருவெம்பாவைக்குமிடையே சில, குறிப்பிடத்தக்க
வேறுபாடுகள் உண்டு. திருவெம்பாவையானது,
நல்ல கணவன் வேண்டி
இளம்பெண்கள் நோற்ற நோன்பாக
இருக்க, திரியம்பாவையோ, சிவனை
மகிழ்விப்பதற்காகவும், மழைவளம் வேண்டியும் கொண்டாடப்படுகிறது. திரியம்பாவையுடன் இணைந்த “ஊஞ்சல்
திருவிழா” எனும் மரபை,
தமிழர் மத்தியில் காணக்கூடவில்லை. திருவெம்பாவை
மார்கழித் திருவாதிரைக்கு ஒன்பது நாட்கள்
முன் தொடங்கி, பத்து
நாட்கள் இடம்பெறுகின்றது. திரியம்பாவை, தாய்
பஞ்சாங்கத்தின் படி, முதலாம்
மாதம் (தமிழ் மார்கழி
மாதத்தில் – தாய் நாட்காட்டியின்
படி மாறக்கூடியது) பூரணைக்கு முன் தொடங்கி,
பதினான்கு நாட்கள் இடம்பெற்றது. திரியம்பாவைக்
கொண்டாட்டங்கள் மாலையிலேயே இடம்பெற, திருவெம்பாவை
அனுட்டானங்கள் அதிகாலையிலேயே நிகழ்கின்றது. இரு
நோன்புகளிலும் மாணிக்கவாசகர் அருளிய தமிழ்த்
திருவெம்பாவை இருபது பாடல்களும்
பாடப்பட்டன என்பதே முக்கியமான
ஒற்றுமை ஆகும்.
சயாமிய "திரியம்பாவையில்"
சிவன், திருமால் இருவருமே முதன்மைப்படுத்தப்பட்ட போதும், சிவன்
ஊஞ்சலாடும் விளையாட்டுப்பிள்ளை, திருமால் உணவு பழுதடைந்தால்
கோபிக்கும் உக்கிரமூர்த்தி என்று தாய்லாந்தார்
கருதிக்கொள்வது சுவையான தகவல். வழக்கமான
இந்துப்பண்பாட்டில் கூறப்படும் சிவன், திருமால்
ஆகியோரின் இயல்புகள், இங்கு
இருவருக்கும் எதிர்மறையாகக் கருத்திற்கொள்ளப்படுவதை காணலாம். எவ்வாறாயினும், பல
இந்திய ஆய்வாளர்கள் கூறுவது போல், திரியம்பாவையின்
போது திருமால் முன்னிலையில் “திருப்பாவை”
பாடப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.
இன்றைக்கு தேவசாதனில் பாடப்படும் திரியம்பாவையானது நாலடி கொண்ட
இருபது பாடல்களையும் இரு பாகங்களையும்
கொண்டிருக்கின்றது. ஒன்று முதல்
பதினொன்று வரையான பாடல்கள்
"பொத்முறை யாய்" என்றும்,
மீதி ஒன்பதும் "பொத்முறை
க்ளாங்" என்றும் அழைக்கப்படுகின்றன. பொத்முறை யாய், பிராமணக்
கோயிலின் சிவன் சன்னதியிலும்,
பொத்முறை க்ளாங், திருமால்
சன்னதியிலும் பாடப்படுகின்றன. பொருட்சிதைவும்
சொற்சிதைவும் காணப்படும் போதும், திரியம்பாவை
இருபது பாடல்களும், மணிவாசகரின்
திருவெம்பாவையே என்பதில் எந்த ஐயமும்
இல்லை. எடுத்துக்காட்டுக்கு
பொத்முறை யாயின் முதலாம்
பாடலைப் பார்ப்போம்:
“ஆதியுமந்தமுமில்லாவருன்பெருன்யோ திபையம்பா கட்கேட் டயும்வாட் கடன்கண்ணமாமே
வன்லருதியோ வஞ்சவியோநெஞ்சவிதான் மாதேவன்ராவட்கலன்லகன் வாட்டிவஸ்துல்ரிபோய்
மீதிவாய்த்தகேக்தலுமே ரம்மிம்மிரெய் ரண்டேபோதாரமலியிம்மேனெண்டிரும்புரண்டின்
கண்ணேய்
யேதேனுமாதா கிரித்திதந்தான் தென்னேயென்னே யேதேயின்தோனிப்படிசே லோரிம்பாவாய்”
திருவெம்பாவையை மந்திரம் என்று எண்ணியே
ஓதிவந்த தாய்ப் பிராமணர்,
அதைக் கிரந்த வரிவடிவில்
எழுதித் தான் நெட்டுருப்பண்ணி
வந்திருக்கிறார்கள் என்பது சுவாரசியமான
செய்தி. தமிழுக்கு முற்றிலும் அந்நியமான மொழியைப் பயிலும் உதடுகளால் அதில் ஏற்பட்டுள்ள
ஒலிப்பு மாற்றங்கள் நம்மைப் புன்னகைக்க வைத்தாலும், அங்கு
ஒளிந்து நின்று சிரிக்கும்
தமிழ்ச்சொற்கள், ஐநூறாண்டுகள் கடந்து எங்கோ
கடல்கடந்த ஒரு நாட்டில்
நீடித்து வாழும் தமிழர்
பண்பாட்டைத் தரிசிக்கச் செய்து, நம்மை
மெய்சிலிர்க்க வைக்கின்றன.
திரியம்பாவையும் தமிழர் தொடர்பும்
அண்மைக்காலத்தில் தமிழ்த் திருவெம்பாவைக்கும், தாய்த் திரியம்பாவைக்கும்
இடையிலான உறவை மிக
விரிவாக ஆராய்ந்தவர், தாய்லாந்து
நாட்டவரான பேராசிரியர். பன்னிபா
கவீதாநாதம் (Pannipa Kaveetanathum). இவரது முனைவர்
பட்ட ஆய்வேடு திரியம்பாவை தொடர்பான சுவையான பல தகவல்களைக்
கொண்டதாகக் காணப்படுகின்றது. இரு பண்பாடுகளுக்கும்
இடையிலான உறவைத் திண்ணமாக
உறுதிசெய்தவர் என்ற வகையில்
அவ்வம்மையார் நம் நன்றிக்கும்
பாராட்டுக்கும் உரியவர்.
கடந்த 2011ஆம்
ஆண்டு, ஈழத்துத் தமிழறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தன் திருவெம்பாவையைத் தாய் மொழியில்
ஒலியும் – மொழியும் பெயர்த்து தேவசாதன் பிராமணர்களுக்கு அன்பளிப்புச் செய்து அரும்பெரும்
தொண்டாற்றி இருக்கின்றார். அவரும்
தமிழக ஆய்வறிஞர் தஞ்சை கோ.கண்ணனும் தாய்லாந்தின் தமிழ்ப் பண்பாட்டு உறவு தொடர்பான
ஆய்வுகளை நடத்தியவர்கள் என்ற வகையில்
நன்றியுடன் நினைவுகூரப்படவேண்டியவர்கள். யூரியூப்பில் திரியம்பாவை தொடர்பான அவர்களது விழியங்கள் கிடைக்கின்றன. ஆர்வமிருந்தால்
பாருங்கள்.
இன்றும் மன்னராட்சி நீடிக்கும் தாய்லாந்து, பௌத்தத்தை
அரசமதமாக ஏற்றுக்கொண்டபோதும், இராஜகுருவாக விளங்கிய பிராமணர்களின் சமயமான சைவத்துக்கு
(பிராமண மதம் என்றே
அங்கு சொல்லப்படுகின்றது) உரிய மரியாதை
வழங்கத் தவறவில்லை. ஊஞ்சல்
விழாவில் மட்டுமன்றி, மன்னர்
முடிசூட்டு விழாவிலும் திருவெம்பாவையும் தேவாரமும் பாடும் மரபு
அங்கு காணப்பட்டதாக அறியமுடிகின்றது. உலகின் மிக
நீண்டநாள் அரசாண்ட மன்னர் எனும்
பெருமையுடன், கடந்த ஒக்டோபர்
13ஆம் திகதி மறைந்த
தாய்லாந்து மன்னர் ஒன்பதாம்
இராமரின் முடிசூட்டுவிழாவிலும்
(1950 மே 10) திருவெம்பாவை இசைக்கப்பட்டதாம்.
தற்போது பத்தாம் இராமராக ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் அவர் மகன்
வச்சிலாரங்கோர்ன் (Vajiralongkorn)
அடுத்த ஆண்டு இறுதிக்குள்
முடிசூட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மரபுகள் மாற்றமின்றித் தொடர்ந்தால், அந்த
முடிசூட்டுவிழாவின் போதும் திருவெம்பாவை
இசைக்கப்படும். அவ்வாறு இசைக்கப்பட்டால், சேர – சோழ
- பாண்டியருக்குப் பின்னர், .நம்
தாய்த்தமிழுக்கு, தாயின் பெயரையே
சூடிய சகோதர நாடொன்றின்
சிம்மாசனம் வழங்கும் மகத்தான மரியாதையைக் கண்கூடாகக் கண்டு ஆனந்தக்கண்ணீர் வடிக்கும் அரிய வாய்ப்பும்
நம் சமகாலச் சந்ததிக்குக் கிட்டும்.
அது நடக்குமா? தமிழறிஞரும்
தமிழக அரசியல்வாதிகளும் அதற்கான காத்திரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா? பொறுத்திருந்து
பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உசாத்துணைகள்:
1. Pannipa
Kaveetanathum, (1995), "A comparative study of Tiruvempavai: Tradition in
Thailand and Tamil Nadu in Historical and musical contexts", Khairagarh
Indira Kala Sangeet Vishwavidyalaya.
2. சங்க இலக்கியங்கள் - பரிபாடல்
, குறுந்தொகை , நற்றிணை, ஐங்குறுநூறு.
3. சைவத்திருமுறை – சம்பந்தர் தேவாரம் (2:47:05), திருவாசகம் (பதிகம் 7, பாவை)
4. வைணவப் பிரபந்தம் – பாவை
(பாசுரம் 473 - 503), நாச்சியார் திருமொழி (பாசுரம் 504)
5. அவிரோதி நாதர் திருவெம்பாவை.
6. BBC News, 1st Dec. 2016, “Thai Crown PrinceMaha Vajiralongkorn proclaimed king”, accessed on 2016.12.25
(உவங்கள் இதழில் [ஆள் 1 சனம் 03] வெளியான கட்டுரை)
0 comments:
Post a Comment