வள்ளுவ நெறி - 01

வள்ளுவர் பற்றி மூன்று விடயம் சொல்லவேண்டும்.


ஒன்று, கடவுள் வாழ்த்தில் தன் கடவுள் இன்னார் தான் என்று அவர் எங்கும் சொல்லவில்லை. அதில் கூறப்படும் வரைவிலக்கணங்கள், ஒரேநேரத்தில் சைவத்துக்கும்  சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் பொருந்துவன தான். அவரே 'தன் இறைவன் இன்னார்' என்று வெளிப்படையாகக் கூற விரும்பாத போது, அவரது இறைவன் இவர் தான் என்று வாதிடுவது பயனற்ற செயல்.

இரண்டு, வள்ளுவருக்கும் நமக்கும் அண்ணளவாக இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம்.  அன்றுள்ள சைவம் அல்ல, இன்றுள்ளது. அன்றுள்ள சமணம் அல்ல இன்றுள்ளது.  இன்றுள்ள சைவம், வைணவம், சமணம், பௌத்தம் இவையெல்லாம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் அடைந்த மாற்றம் மிகப்பெரியது. அதைச் சரிவரத் தெரியாமல் -  புரியாமல், வள்ளுவரின் சமயத்தைத் தீர்மானிக்க முடியாது. அப்படி கஷ்டப்பட்டு தீர்மானிக்க அவசியமும் இல்லை. 

மூன்று, என் தனிப்பட்ட கருத்து. வள்ளுவர் தமிழின் சொத்து. தமிழன் எவனும் அவரைத் தன் சமயத்தவனாக உரிமைகோர முழு உரிமையும் உண்டு - அதற்கு பண்பாட்டிலும் மரபிலும் இடம் இருக்கும் பட்சத்தில்! வள்ளுவரைக் குந்தகுந்தாசாரியார் என்று சமணரும், மாதானுபங்கி என்று சைவரும் தத்தம் மரபில் போற்றுவதற்கு உரிமை உண்டு. அவரவர் தத்தம் சமயத்தவராக அவரைக் கருதி இன்புற்றுக் கொள்ளலாம்.

ஆனால் தமது உரிமையை நிலைநாட்ட மாற்றுச் சமயத்தாரை வாதுக்கு அழைக்கவோ மற்றைய சமயத்தவர் அல்லர் என்று நிரூபிக்கவோ வேண்டிய தேவை தற்போது இல்லை என்பதே நிதர்சனம். சமயம் என்பது உணர்வுபூர்வமான விடயம். வள்ளுவரின் சமயம் தெரியத்தான் வேண்டுமென்றால், இந்தக் காலத்தில் நடுநிலை நின்று ஆய்ந்தறியக் கூடிய ஒரு ஆய்வாளன் கையில் அந்தப்பணியை ஒப்படைத்து இரு தரப்பாரும் ஒதுங்கி நிற்பதே அழகு. ஆனால் இங்கு இரு தரப்பினர் அல்ல; தொடர்பே இல்லாத மாற்றுமதத் தரப்புகள்,  அரசியல் கொள்கைவாதிகள், இறைமறுப்பாளர்கள் இவர்களெல்லாம் கூட வரிந்துகட்டிக் கொண்டு நிற்கிறார்கள்! பாவம் வள்ளுவன்!

உண்மையில், வள்ளுவரை சைவரோ -  சமணரோ உரிமை கோருவதை எதிர்ர்த்தரப்பினரோ அல்லது இன்னொரு தரப்பினரோ எக்காரணம் கூறியும்  கேள்வி கேட்க இயலாது. 'இயேசுவை நீங்கள் ஈஸா (அலை) நபியாக ஏற்கக் கூடாது' என்று கிறிஸ்தவர் இஸ்லாமியரிடம் கூறமுடியாது என்பது போல! 'புத்தரை நீங்கள் திருமாலின் அவதாரமாகக் கொள்ளக்கூடாது' என்று பௌத்தர் வைணவரிடம் வாதாட முடியாது என்பது போல! எந்த மரபு இப்படி மதங்கடந்த உறவுகளை அனுமதிக்கிறதோ, அதே மரபே வள்ளுவரை சைவரும் சமணரும் ஒரே நேரத்தில் சொந்தம் கொண்டாடவும் அனுமதிக்கும். 

சமண நூல்களெதையும் நான் படிக்கவில்லை என்பதால், அவர்களிடம் திருக்குறளின் தாக்கத்தை  அளந்துகூற முடியாது. எனினும் சிலப்பதிகாரத்தில் திருக்குறள் எடுத்தாளப்பட்டுள்ளதை சான்றாகக் கொள்ளலாம். சிலம்பு சமண நூல் என்பது உண்மையானால்  அதன் காலத்திலிருந்தே (பொபி 1 - 5ஆம் நூற்.) திருக்குறளுக்கு சமணத்தில் தார்மீக உரிமை உண்டு. (சிலம்பும் திருக்குறள் போலவே மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய நூல் என்பதால் இதில் மேலதிக வாதங்களுக்குள் நுழைய விரும்பவில்லை).

எனினும் சைவத்துக்கு திருக்குறளிலுள்ள தார்மீக உரிமை சுந்தரரின் தேவாரத்தில் (அண்ணளவாக பொ.பி 812 - 844) முதன்முதலாக முனைப்பாகத் தெரிகிறது. திருநெல்வாயில் அரத்துறை மீதான சுந்தரர் பதிகத்தின் 2,3,4, 7ஆம் பாடல்களில் பொறிவாயில் ஐந்தவித்தான், பிறவிப் பெருங்கடல் நீந்துவார், உறங்குவது போலும் சாக்காடு, அகரமுதல எழுத்தெல்லாம் ஆகிய நான்கு குறள்களும் எடுத்தாளப்பட்டுள்ளன (திருமுறை 7: 3 )  தமிழ்ச் சைவ சித்தாந்தத்தின் மெய்யியலுக்குப் பிரமாண நூல்களில் ஒன்றான திருக்களிற்றுப்படியார்ம, சைவ ஔவையாரின் பாடல்கள், மயிலை  வள்ளுவர் கோவில் முதலியன பிற்கால திருக்குறள் ஆதரவுச் சைவச் சான்றுகள். 

பக்கச்சார்பற்ற ஆய்வுகளும் ஒழுங்கான காலவரிசைப்படுத்தலும் தொடர்ந்தால் வள்ளுவர்  சமணரா சைவரா என அறியலாம். ஆனால் அதில் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. வள்ளுவரின் சமயத்தைத் ஆராய்பவர்கள், அதற்கு முன் குறளின் படி வாழ்க்கையை நடாத்த முயலலாம். திருக்குறளை நடைமுறையில் கொண்டாடத் தெரியாமல்  அவர் மதத்தை அறிந்து அல்லது மதத்தை மறுத்து அதில் இன்பம் காண்போர் போல் பயனற்றவர்கள் யாருமில்லை. ,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (355)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner