கச்சியப்பத் தமிழ்!

படம்: ரமேஷ் ஹரிகிருஷ்ணசாமி
தமிழில் உருவான புராணங்களில் ஒன்று கந்தபுராணம். பன்னிரண்டு தொடக்கம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை வெவ்வேறு காலங்களை இதற்குச் சொல்வதுண்டு. இதைப் பாடிய கச்சியப்பர், வடமொழி ஸ்காந்தபுராணத்தின் ஒரு பாகத்தையே தமிழில் கந்தபுராணமாகத் தான் பாடுவதாகச் சொல்லியிருந்தாலும், தமிழ் மரபுக்கேற்ப இதில் அவர் பல மாற்றங்களைச் செய்திருப்பது வெளிப்படை. இந்தப் புராணம், பெரிய புராணம் மற்றும் திருவிளையாடல் புராணத்தோடு இணைத்து,  தமிழ்ச்சைவர்களின் முப்பெரும் புராணங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

நாவலரின் சைவமறுமலர்ச்சியின் பின்னணியில், தமிழகத்தை விட, இலங்கையில் கந்தபுராணம் சிறப்பிடம் பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணப் பண்பாட்டையே "கந்தபுராணக் கலாசாரம்" என்று மெச்சும் படி, அந்நூல் யாழ்ப்பாணத்தார் வாழ்வியலில் செலுத்துகின்ற தாக்கம் அதிகம். கந்த சஷ்டி விரதகாலம் முழுவதும் கந்தபுராணத்தை பாராயணம் செய்வது ஈழத்துச் சைவக்கோவில்களில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது. 

உண்மையில் கந்தபுராணத்தைப் படித்தால், அதற்கு இலங்கையில் கிடைக்கும்  முதன்மையில் தவறே சொல்ல முடியாது என்றே சொல்லத்தோன்றும். கம்பராமாயணத்தின் செல்வாக்குக்கு உள்ளான நூலாகச் சொல்லப்படுகின்ற கந்தபுராணத்தில், கம்பனை மிஞ்சிய மொழி விளையாட்டுக்களுக்கும் குறைவில்லை. 

சூரபதுமனுக்கும் முருகனுக்கும் பெரும்போர். இறுதியில் சூரன் கடல் நடுவே மாமரமாக நின்றதை, கந்தபுராணத்தின் யுத்தகாண்டத்தில் சூரபதுமன் வதைப் படலத்தில் நான்கு பாடல்களில் வருணிக்கிறார் கச்சியப்பர்.  தமிழிலக்கியத்தின் மிக அழகான இடங்களில் ஒன்று அது. 

சூரன் மாவாக மாறுகிறான். மா என்ற ஓரெழுத்துச் சொல்லுக்கு மிருகம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.  இந்த சூர மிருகத்தைக் கண்டு  கலை (குரங்கு) , முயல், மான், புலி, கோ (பசு), யாளி, கரி (யானை), (ஆட்டுக்)கடா, மடங்கல் (சிங்கம்) முதலான விலங்குகள் பயந்து ஓடுகின்றனவாம். 

நெடும் கலை முயல்மான் கொண்டு நிலவும் அம்புலியும் நீத்தம்
அடும் கதிர் படைத்த கோவும் அளகையை யாளி தானும்
கடம் கலுழ்கின்ற ஆசைக் கரிகளுங் கடாவிற் செல்லும்
மடங்கலும் வெருவச் சூரன் மாவுருக் கொண்டு நின்றான்.  (471)

ஆனால், இதில் இன்னொரு சிலேடைப் பொருள் உண்டு. நிலவில் முயல் தெரிகிறது, மான் தெரிகிறது என்று காட்டி சிறுபிள்ளைகளுக்கு உணவூட்டுவது தாய்மாரின் வழக்கம்.  நிலவுக்கு இன்னொரு பெயர், அம்புலி. குபேரனின் நகரம் அளகாபுரி. எனவே அளகையை ஆளும் குபேரனுக்கு அளகையாளி என்று பெயர் இருக்கிறது. புராண மரபில் எட்டு யானைகள் எட்டுத்திசைகளையும் தாங்கிக்கொண்டிருப்பதாக சொல்லப்பட்டு வருகின்றது. இயமனை 'மடங்கல்' என்றும் அழைப்பர். இந்தப் பொருள்களோடு இதே பாடலை நெருங்கினால்,

தன் களங்கத்தில் முயல், மான் என்பனவற்றைக் கொண்ட அம்புலியாகிய சந்திரனும், கதிர்களை வீசும் சூரியனும், அளகையாளி குபேரனும், மதம் பொழியும் எட்டு திக்கு யானைகளும், எருமைக்கடாவில் செல்லும்   இயமனும் அச்சமடைய சூரன் மாமரமாகி நிற்கிறான். தேவர்களுக்கு சிம்மசொப்பனம் அல்லவா சூரபதுமன்?

சூர மாமரம்
(ஓவியம்: மதுரை திரு. சந்திரசேகரன்)

மிருகங்களுக்கு அச்சமூட்டிய சூரன் இப்போது அதே மாமர வடிவில் பறவைகளுக்கும் அச்சமூட்டுகிறான். எப்படி? மாமரத்துக்கு ஒத்தகருத்துச் சொற்களில் ஒன்று கொக்கு என்பது. இந்தக் கொக்கு ஏனைய பறவைகளை பயம் காட்டுகிறது. உவணம் (கருடன்), எகினம் (அன்னம்), குயில், சேவல், மயூரம் (மயில்), வலியன் (ஆக்காட்டி), பூவை (மைனா), கோழி முதலிய பறவைகளை அஞ்சி ஓடச் செய்யும் படி சூரன் கொக்கு வடிவம் எடுத்திருக்கிறான்.   

மிக்குயர் உவணம் அன்ன மிசைப்படும் எகினப் புள்ளும்
மைக்குயில் சேவலாகிய மயூரமாம் வலியன் தானும்
புக்கமர் தெரிக்கும் ஆடல் பூவையுங் கொடியதான
குக்குட முதலும் அஞ்சக் கொக்கு உருவாகி நின்றான்.      (472)

கச்சியப்பர் பாடுவது வெறும் பறவைகளைத் தானா? அதைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு கொஞ்சம் புராணங்கள் தெரிந்திருக்க வேண்டும்.  கருடனும் அன்னமும் முறையே விஷ்ணு மற்றும் பிரமனின் வாகனங்கள். அவர்கள் இருவருமே முன்பொருமுறை அன்ன வடிவம் எடுத்தவர்கள். விஷ்ணு ஹம்சமாக (அன்னம்) பிறந்து வேதங்களை அருளினார் என்றும், பிரமன் அடிமுடி தேடிய கதையில் அன்னமாக மாறினார் என்றும் புராணங்கள் உண்டு. 

அதே போல தக்க யாகத்தை வீரபத்திரர் அழித்த போது குயிலாக மாறி தப்பிப் பறந்து ஓடியவன்  இந்திரன். அவனே சேவல் வடிவெடுத்து  கூவி, கௌதமரைக் காலைக்கடன் கழிக்க வெளியே அனுப்பிவிட்டு அகலிகையோடு திருட்டுத்தனமாக சேர்ந்தான். முருகனுக்கு சூரன் போருக்குப் பிறகு தான் மயில் வாகனமும் சேவல் கொடியும் கிடைத்தது என்றில்லை. சூரன் போர் முடியும் வரை, அதே இந்திரன் மயில் வடிவில் முருகனைத் தாங்க, அக்கினி தேவன் சேவல் வடிவில் முருகனின் கொடியில் நின்று கொண்டிருந்தான். மேலும் சூரபதுமனுக்கெதிரான முருகனின் போரில் காளியும் தன் பூதப்படையுடன் கலந்து கொண்டிருந்தாள் என்கிறது கந்தபுராணம். 

இப்போது மீண்டும் பொருளைப் பாருங்கள். கருடனையும் அன்னத்தையும் வாகனங்களாக உடைய எகினங்களான விஷ்ணுவும் பிரமனும், முன்பு குயிலாகவும், சேவலாகவும், இப்போது மயிலாகவும் மாறி இருக்கிற வலியவனான இந்திரனும், போரில் புகுந்து (புக்கு) போர் (அமர்) புரியும் பெண் (பூவை) ஆகிய காளியும், ஆண் கோழி (குக்குடம்) வடிவக்  கொடியான (கொடி+அது+ஆன) அக்கினி தேவனும் அச்சம் அடைய மாமரமாகி நிற்கிறான் சூரபதுமன்.

கச்சியப்பனின் தமிழ் அச்சமூட்டுகிறது இப்போது! இதெல்லாம் போகட்டும். அடுத்த சிலேடைப் பாடல் தான்  கச்சியப்பரைப் பார்த்து "வேற லெவல்" சொல்ல வைக்கிறது. மாமரத்துக்கு சேகரம் என்ற ஒத்தகருத்து உண்டு. சேகரம் என்பதற்கு 'தலை' என்பதும் பொருள்.  சூரன் இப்போது தலையாக மாறியிருக்கிறான். அது எப்படிப்பட்ட தலை? கால்  வெட்கமடைய, கண்ணும் செவியும் சோர்ந்து கவிழ, வால் எனும் பெருமை ஏக்கமடைய, கைகள் உதற,  வலது நாசியும் (வெய்யோன்) இளம் உடம்பும் வியர்ந்து நிற்க, பருத்த மார்புகளும் நீண்ட விழிகளும் வெட்கப்பட்டு மூட, எல்லா உறுப்புகளையும் வென்ற தலை, இந்தத் தலை.

காலெனும் மொய்ம்பன் உட்க கட்செவி கவிழ்ந்து சோர
வாலிய வசுக்கள் ஏங்கி மலர்க்கரம் மறிக்க வெய்யோன்
பாலர் மெய் வியரா நிற்பப் பணைமுலை அரிவைமார்கள்
சேலெனும் விழிகள் பொத்தச் சேகரம் ஆகி நின்றான்.     (473)

இதற்கும் சிலேடைப் பொருள் வேறு தான்.  காற்றாகிய (கால்)  வாயு தேவன் வெட்கமடைய, ஆதிசேடனாகிய கட்செவி (பாம்பு) கவிழ்ந்து சோர்வடைய, சிறந்த வசுக்கள் ஏக்கத்துடன் தங்கள் கைகளை அசைக்க, சூரியனின் (வெய்யோன்)  பாலகர்களான அசுவினி தேவர்கள் உடல் வியர்த்து நிற்க, பருத்த மார்புகளைக் கொண்ட தேவமகளிர் மீன் (சேல்) போன்ற கண்களைப் பொத்த சூரன் சேகரமாக நிற்கிறான். 

இத்தோடு முடியவில்லை! சூர மாமரம் ஏனைய மரங்களுக்கும் அச்சமூட்டுகிறது. அத்தியும் அரசும் பெயர, ஆலமரமும், எருக்கும் (முந்து + எருக்கில்) ஏக்கமடைய, வாகையும், வன்னிமரமும் மெலிய, வீரையும் இருப்பையும் (இலுப்பை) விலக,  நீபம் (கடம்பு), வேலை ஆகிய மரங்கள் முன்பு மாமரமாக மாறி நிற்கிறான் சூரன்.

அத்தியின் அரசு பேர ஆலமும் தெரிக்கில் ஏங்க
மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவும்
தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன்
உய்த்திடு தனிவேல் முன்னர் ஒருதனி மாவாய் நின்றான்.    (474)

உண்மையில் இந்தச் சிலேடையிலும் தேவர்களையே பாடுகிறார் கச்சியப்பர். அத்தி என்றால் கடல். கடலின் அரசன் வருணன். ஆலம் என்பது ஆலகால நஞ்சைக் குறிக்கும். வன்னி என்றால் நெருப்பு. சைவ வைணவப் புராணங்களில் கடலுக்குள் உறங்குகின்ற நெருப்பொன்று அடிக்கடி வரும். அதற்கு வடவைத்தீ என்று பெயர். உலகம் அழியும் போது அது வெளிவருவதாக புராணங்கள் சொல்லும். வீரை என்றாலும் கடல் தான். நீபத்தார் என்றால் கடம்ப மலர்களால் ஆன மாலை. அதை அணிந்தவன் கடம்பன்.  முருகன். ஆகவே அதன் இன்னொரு பொருள் இது. 

"கடலரசனான வருணன் கலங்கவும், அந்தக் கடலில் முன்பொருமுறை தோன்றிய ஆலகாலமே அச்சமடையும் படியும், எதையும் வெல்லும் வல்லமை படைத்த வடவை நெருப்பு மறையவும், கடல்கள் நிலைபெயரவும், கடம்ப மாலை அணிந்த முருகப்பெருமானின் தனி வேலாயுதத்தின் முன்பு அச்சமில்லாமல் மாமரமாகி நின்றான் சூரன்." 

இதற்குப் பிறகு முருகன் வேலை வீசியதும், மாமரம் சேவலும் மயிலுமானதும், இறுதியில் தேவயானையை முருகனுக்குக் கட்டிக்கொடுத்து 'சுபம்' போட்டதும் நமக்கெல்லாம் தெரியும். கதை பின்பு எப்படித் தொடர்ந்தாலும்  கந்தபுராணத்தில் மணத்துக்கொண்டே இருப்பது தமிழ் மட்டும் தான். கந்தன் தமிழ்! கச்சியப்பத் தமிழ்! 

4 comments:

  1. நீ கொடுத்த தமிழ் அல்லவா புகழ் எடுத்தது -அந்த
    தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது

    ReplyDelete
    Replies
    1. முத்தமிழும் அல்லவா முருகெழுந்தது - அந்த
      மூத்த தமிழ் அல்லவா நமைப் படைத்தது :)

      Delete
  2. வடமொழியில் இருந்து எந்த புராணமும் படேவேற்றம் செய்யப்படவில்லை ; நக்கீரன் போன்ற தமிழியல் அறத்துக்கு அவ்வாறான தேவை தமிழில் ஏற்படாது ; சித்தர்கள் போற்றிய முருகன் ..கந்தபுராணம் தமிழில் இருந்தே பிற மொழிக்கு மொளிபெயக்கப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. வடமொழியில் இருப்பது கந்தபுராணம் அல்ல; ஸ்காந்தபுராணம். ஸ்காந்தபுராணத்தின் ஒரு பாகத்தை தான் தமிழில் பாடுவதாக கச்சியப்பரே சொல்கிறார். ஆனால் தமிழ்க் கந்தபுராணத்தில் தமிழ் நிலத்தின் பண்பாட்டுக்கூறுகள் இருப்பது உண்மை.

      Delete

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner