மாகோன் மகளார்


வரலாற்றறிஞரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி. கதிராமன் தங்கேஸ்வரி நேற்று 26 ஒக்டோபர் சனிக்கிழமை தன் அறுபத்தேழாவது வயதில் காலமானார். இலங்கை வரலாற்றுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் இவர்.  கலிங்க மாகோன் பற்றியும் திருக்கோணமலையின் தொன்ம நாயகனான குளக்கோட்டன் பற்றியும் இவர் செய்த ஆய்வுகளே இவரை தமிழுலகுக்கு குறிப்பாக இனங்காட்டின எனலாம்.

மட்டக்களப்பு கன்னங்குடாவில் 1952ஆம் ஆண்டு  கதிராமன் - திருவஞ்சனம் தம்பதியரின் மகளாகப் பிறந்த தங்கேஸ்வரி அம்மையார், அதே ஊரின் மகாவித்தியாலயம்,  ஆனைப்பந்தி இராமகிருஷ்ணமிஷன் பெண்கள் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் பாடசாலையின் பழைய மாணவி. களனிப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் பட்டம் பெற்றவர். மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தார். 'விபுலானந்தரின் தொல்லியல் ஆய்வுகள்' என்பது 1982இல் வெளியான இவரது முதல் நூல். தொடர்ந்து குளக்கோட்டன் தரிசனம் (1985), மாகோன் வரலாறு (1995), கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (2007) முதலியவை இவரது குறிப்பிடத்தக்க நூல்கள். அவற்றில் பலத்த வரவேற்பைப் பெற்ற குளக்கோட்டன் மற்றும் மாகோன் பற்றிய இரு நூல்களும் மணிமேகலைப் பிரசுரத்தால் மீள்பதிப்புக் கண்டன.


தங்கேஸ்வரி அம்மையாரின் குளக்கோட்டன் தரிசனம் நூலை சில ஆண்டுகளுக்கு முன் எங்களூர் நூலகத்தில் படித்தேன். ஆனால் "மாகோன் வரலாறு" நூலை அதற்கும் முன் என் பன்னிரண்டு வயதில் வாசித்தேன். அம்மப்பாவின் தனிப்பட்ட நூலகத்தில் நான் மீண்டும் மீண்டும் விரும்பி  வாசிக்கும் நூல்களில் ஒன்றாக அது இருந்தது. அதில் தான் திருக்கோவிலில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன என்ற தகவல் இருந்தது. இன்றைய என் வரலாற்றார்வத்தைத் தூண்டிய முதல் படிகளில் ஒன்று அந்த நூல். 

தங்கேஸ்வரி அம்மையாரின் ஆய்வு முறைமை சுவாரசியமானது.  முதலில் தான் ஆய்வு செய்கின்ற ஆளுமையைக் குறிப்பிடுகின்ற எல்லா வரலாற்று இலக்கியங்களையும் தொகுத்துக்கொள்வார். பின் அந்த ஆளுமை பற்றி அந்தந்த நூல்கள் என்ன சொல்கின்றன என்று பட்டியலிடுவார்.  பின்பு அந்தப் பட்டியலில் எவற்றை ஏற்கவேண்டும், எவற்றை விலக்க வேண்டும், காரணம் என்னென்ன என்று தர்க்கரீதியாகச் சொல்வார். பிறகு அனைத்தையும் சுருக்கி இறுதியில் இதுதான் இவர் என்ற முடிவுக்கு வருவார். எனவே இந்த முடிவு அத்தனை இலகுவாக மறுக்க முடியாததாக இருக்கும். 

தமிழகத் தமிழரை விட இலங்கைத் தமிழருக்கு வரலாற்றுத்தேவை அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாகவே தமிழரிடம் தொடர்ச்சியான வரலாற்றுச் சான்றுகள் இல்லை.  நீண்ட ஆவணப் பாரம்பரியம் கொண்ட சிங்களவரின் மகாவம்ச மனநிலையை வெற்றி கொள்ள, கருத்தியல் ரீதியாக, தமிழரிடம் நம்பகரமான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே யாழ்ப்பாண வைபவமாலை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் முதலான தொன்மக்கதைகளின் தொகுப்புகளே வரலாறாக முன்வைக்கப்பட்டன. கடந்த நூறாண்டில் வடகிழக்கில் எழுந்த 'வரலாற்று' நூல்கள் எல்லாமே  இவற்றில் ஒன்றையோ பலவற்றையோ வழிமொழிந்து எழுந்திருப்பதை நாம் காணலாம். 

கிழக்கிலங்கையில் வரலாற்றாய்வு செய்பவர்களிடம் உள்ள முதன்மையான குறைபாடும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தை அல்லது மட்டக்களப்பு மான்மியத்தை அறுதியும் இறுதியுமான வரலாற்றுச் சான்றாகக் கொள்வது தான். அந்தக் கருத்தை உடைத்து முன்வந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் என்று அம்மையாரைச் சொல்லலாம். இன்னின்ன காரணங்களால் இந்த இடத்தில் இதை ஏற்கலாம் என்று கூறியே அவர் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தை மேற்கோள் காட்டுவதுண்டு. தொன்மத்துக்கும் வரலாற்றுக்கும் உள்ள வேறுபாட்டை அவர் அடிக்கடி சுட்டிக்காட்டியிருக்கிறார். "நமது ஆதாரங்களில் கதை அதிகம், வரலாறு குறைவு. கதை குறைவான, ஆனால் வரலாறு அதிகமான சான்றுகளையே நாம் உற்றுப்பார்க்கவேண்டும்" என்பது அவரது பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகளில் இடம்பெறுகின்ற வரியாக இருக்கிறது. 

சிங்கள அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக 1215இல் படையெடுத்த வீர சைவனான கலிங்க மாகோன், விஜயபாகு என்ற பெயரைச் சூடிக்கொண்டு பொலனறுவையிலிருந்து அரசாண்டான், பிற்காலத்தில் அவனே வடக்கே சென்று யாழ்ப்பாண அரசை தோற்றுவித்தான் என்பதும், அவனுக்கு துணையரசனாக 'ஜயபாகு' எனப் பட்டம் சூடியிருந்த  சோழகங்கதேவனே குளக்கோட்டன் என்பதும் அவரது இருபெரும் நூல்களும் சொல்லும் ஆய்வு முடிவுகள். இதற்கு இன்னோரன்ன  நூல்களை அவர் ஆதாரத்துக்கு எடுத்துக்கொள்கிறார். 

இன்றைய சூழ்நிலையில் வைத்து நோக்கும் போது, அவரின் ஆய்வுகளில் சில இடங்களில் மயக்கங்கள் இருந்தாலும், அந்த இரு நூல்களும் இலங்கைத் தமிழ் ஆய்வுலகைப் பொறுத்தவரை மாபெரும் பொக்கிஷங்கள். கடந்த நூற்றாண்டில் இலங்கையில் உருவான தமிழ் வரலாற்று நூல்களில் முதன்மையானது யாழ் பல்கலைக்கழக வெளியீடான "யாழ்ப்பாண இராச்சியம்". தங்கேஸ்வரி அம்மையாரின் நூல்கள், அதற்கு அடுத்த இரு இடங்களையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவை.

இத்தனைக்கும் மாகோன் பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடரவேண்டும் என்ற கோரிக்கையோடே தன் மாகோன் வரலாறு நூலின் இறுதி அத்தியாயத்துக்கு "முற்றுப் பெறாத காவியம்" என்று தலைப்பிட்டிருக்கிறார் அவர்.  மாகோன் அப்படியே க வனிப்பாரற்றுக் கிடக்கிறான். குளக்கோட்டன் கிறிஸ்துவுக்கு முந்தையவன் என்றும் எட்டாம் நூற்றாண்டினன் என்றும் நிரூபிப்பதற்கான முயற்சிகள் இன்றைய ஈழத்து வரலாற்றுலகில் தொடர்கின்றன.  

இன்றைய அரசியல் சரிநிலைகளில் நின்று, தமிழர் இலங்கையில் வாழும் காலத்தை முன்னே கொண்டு செல்லவேண்டும் என்ற கரிசனை இருப்பது சரி தான். அதற்காக வரலாற்று மாந்தர்களை அவர்கள் வாழ்ந்த காலத்திலும் மிக அதிக தூரம் முன்னே கொண்டு சென்று வைப்பதிலோ, பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய சோழ நாட்டு - பாண்டிய நாட்டு உறவுகளை மறைத்து அவற்றை மிகப்பழையவையாக சித்தரிப்பதிலோ எவ்வித அர்த்தமும் இல்லை. இதன் விளைவுகள் எந்த நோக்கத்துக்காக இந்த ஆய்வுகள் செய்யபப்டுகின்றனவோ அந்த நோக்கத்தை சிதறடித்து வாசகரிடத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும் என்பதை ஆய்வாளர்கள் உணர வேண்டும்.

எல்லா ஆளுமைகளுமே ஏதோ ஓரிடத்தில் காலத்திடம் தோற்கவேண்டியது கட்டாயமாக இருக்கிறது. அம்மையாருக்கு அரசியல். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக வந்தார். பின் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  வரலாற்று, இலக்கிய உலகோடு அவர் தொடர்பு நீங்கவில்லை எனினும் அரசியல் அவரை ஓரளவு தடுமாறச் செய்து விட்டது எனலாம்.


தங்கேஸ்வரி அம்மாவை  2014இல் எங்களூரில் இடம்பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழாவில் முதன்முதலில் சந்தித்தேன். தம்பிலுவில் கண்ணகி வழிபாடு பற்றி அங்கு நான் ஆற்றிய உரை நன்றாயிருந்ததென்று சொல்லி கூப்பிட்டுப் பாராட்டினார்.. ஓரிரு ஆண்டுகள் கண்ணகி கலை இலக்கிய விழாவுக்கு தவறாமல் சென்று கொண்டிருந்ததால், அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. ஒருமுறை அந்நிகழ்வின் ஆய்வரங்கொன்றில் கண்ணகி வழக்குரையின் காலம் பற்றி ஒரு ஆய்வாளர் தவறான கருத்தொன்றைக் கூறியிருந்தார். அது பற்றி விவாதம் எழுந்த போது, அவர் சொன்ன கருத்தை அவர் முன்பும் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருப்பதை அவரது நூல்களை மீள வாசிக்கும் போது உணர்ந்தேன். இது அவரது "குளக்கோட்டன் தரிசனம்" நூலின் முன்னுரையில் அவர் கூறுவது:

"வரலாற்று ஆய்வுத்துறையில் எதையும் முடிந்த முடிபாகக் கொள்வதற்கில்லை. காலப்போக்கில் வெளிவரும் பல புதிய தகவல்கள் அடிப்படையில் பல முடிவுகளை மாற்றவும், மீளாய்வு செய்யவும், ஏன் நிராகரிக்கவும் வேண்டும். உதாரணமாக இலங்கையின் பிரபல வரலாற்று ஆய்வாளர் பரணவிதான அவர்களின் பல கருத்துக்கள் இன்று நிராகரிக்கப்படுவதை வரலாற்று அறிஞர்கள் அறிவர்.

வரலாற்று ஆய்வு நூல்களில் இன்னுமொரு பெரிய ஆபத்து உள்ளது.சில வரலாற்றாசிரியர்கள் தாம் வரித்துக்கொண்ட கருத்துகளை இலகுவில் மாற்றிக் கொள்ளமாட்டார்கள். கிடைக்கும் தகவல்களை எல்லாம் தமது கருத்துக்கு மாற்றிக்கொள்வதற்குப் பெரும் பிரயத்தனம் செய்வார்கள். அதனால் உண்மை வரலாற்றை அறிந்துகொள்வதில் இடர்பாடுகள் ஏற்படுவது உண்டு.

(இந்நூலில்) நிறுவப்பட்ட பல உண்மைகள் அனுமானத்திலும், ஊகத்திலும், இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்தவை. இவற்றுக்கு மாறான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் அவை மாற்றப்பட வேண்டிவை அல்லது திருத்தப்படவேண்டியவை என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்."

போன ஆண்டு இறுதியில் மட்டக்களப்பில் இடம்பெற்ற அலகிலா ஆடல் நூலறிமுக விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பதற்காக நானும் ஆய்வாளர் திரு.சொ.பிரசாத்தும் இரண்டு தடவை அவரைச் சென்று சந்தித்தோம். நோயில் மிகவும் நலிந்து போயிருந்தார். ஆனால் சமயம், வரலாறு என்று தொடங்கியதும் உற்சாகமாகப் பேசினார். நிகழ்வுக்கு அவரால் வரமுடியவில்லை. அடுத்தநாள் வேறொரு காரணத்துக்காக அழைத்து "ஏலுமெண்டா பிறகு வந்து சந்திங்க" என்றார். இறுதி வரை சந்திக்க முடியாமலே போய் விட்டது.  

மாகோன், குளக்கோட்டன் ஆகிய இருவரைப் பற்றியும் பிரக்ஞை பூர்வமான ஆய்வுகளைத் தொடக்கி வைத்து, இலங்கைத் தமிழர் வரலாற்றை புதிய திக்கில் மடைமாற்றி விட்டவர் என்ற விதத்தில் என்றென்றும் நினைவுகூரத்தக்கவர் தங்கேஸ்வரி அம்மையார். கிழக்கிலங்கை பற்றிய ஆய்வுகள் அறிவியல் பூர்வமாகத் தொடரவேண்டும் என்றே அவரும் விரும்பியிருந்தார். அவர் விரும்பிய வழியில் ஆய்வு வரன்முறைகளை மீறாமல் ஆய்வுகளைத் தொடர்வதும், அவர் சொல்வது போலவே வரலாற்றின் புதிய பக்கங்களை ஆதாரபூர்வமாக எழுதுவதுமே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.


இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் மாகோனையும் குளக்கோட்டனையும் முழு ஈழவளநாடும் கொண்டாடும். அன்று வரலாற்றில் தொலைந்த அவர்களை மீட்டெடுத்து உலகுக்கு முன் வைத்தவர் என்ற புகழ்மாலை தங்கேஸ்வரி அம்மையாருக்கே சூட்டப்படும். வரலாறு மறைத்த ஒரு மூதாதையை மீட்ட பெருமாட்டி அவர். மாகோன் மகளாருக்கு என் பிரியாவிடைகள்.

1 comments:

  1. அன்னாருக்கு எமது அஞ்சலி !
    தமிழர் வரலாற்றில் அன்னார் கொண்ட ஈடுபாடும் , அன்னாரின் எழுத்துக்களும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை .
    அன்னார் பற்றி அறியத் தந்த துலாஞ்சனனுக்கு நன்றி .

    ReplyDelete

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner