பிடியன்ன மென்னடை 01



திருக்கோணேச்சரப் பக்கம் போயிருக்கிறீர்களா? போகாவிட்டாலும் பரவாயில்லை. அது சம்பந்தமாக கேள்வி ஒன்று. திருக்கோணமலையில் கோவில் கொண்டிருக்கும் சிவனையும், உமையையும் என்னென்ன பெயர்களைக் கொண்டு அழைக்கிறார்கள்?

கொஞ்சம் யோசித்துவிட்டு பதினோராம் ஆண்டு படித்த சமய பாடத்தை ஞாபகப்படுத்தி “மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரர்” என்று நீங்கள் பதில் சொல்லலாம். இன்னும் கொஞ்சம் பேர் இது பெரிய கஷ்டமான கேள்வியொன்றும் இல்லையே என்று புன்னகைக்கலாம். இல்லை. உங்கள் விடை பிழை. கோணேச்சரத்தில் வீற்றிருக்கும் சிவன் - உமையின் பெயரை நீங்கள் சரியாகச் சொல்லவில்லை.

அதை ஒரு பக்கம் வையுங்கள். நாம் முதலில் தலைப்புக்கு வருவோம். பிடியன்ன மென்னடை. ஏதாவது புரிகிறதா? பிடி + அன்ன + மெல் + நடை. பிடி என்றால் பெண் யானை. அன்ன என்றால் ‘போல’ என்று பொருள். பெண் யானையைப் போல மென்மையாக நடப்பது அல்லது நடப்பவர் தான் பிடி அன்ன மென்னடை.

ஆண்கள் கவிழ்வது பெரும்பாலும் பெண்களின் நடையில் தான். இக்காலப் பாடலாசிரியர்களே கூட “நடையா இது நடையா” என்று தான் பாடித் தீர்க்கிறார்கள். தமிழ் இலக்கியங்களும் பெண்களின் நடையை பலவாறு வருணிக்கின்றன. அப்படி வர்ணிக்க நினைக்கும் போது தமிழ்க் கவிஞர்களை அதிகம் பித்துப் பிடிக்கச் செய்தவை அன்னமும் யானையும் தான். திருக்குற்றாலக் குறவஞ்சியில் “மட அன்ன நடையிலொரு சின்ன நடை பயிலும் நடையினாள்” ஆடி வருகிறாள். சகலகலாவல்லி மாலையில் “நற்குஞ்சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத்தாள்” என்று பாடுகிறார் குமரகுருபரர். சரஸ்வதியின் நடையழகைப் பார்த்து பெண் யானையும், அரச அன்னமும் வெட்கப்படுகின்றனவாம்.

நீங்கள் அன்னமோ யானையோ நடப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? பக்கத்தில் கைபேசி இருந்தால் யூடியூப்பில் போய் தட்டித் தேடிப் பாருங்கள். பார்க்கப் பார்க்கத் தீராது. விலங்குகளிலேயே ஒய்யாரமாகவும் கவர்ச்சியாகவும் நடந்து செல்பவை அன்னமும் யானையும் தான். முதன் முதலாக எழுந்து நடக்கப் பயிலும் குழந்தையின் நடையின் அழகை மட்டும் தான் அவற்றின் நடைக்கு ஒப்பிட முடியும். 



ஆனால் இரண்டின் நடைக்கும் சிறிய வேறுபாடு இருக்கிறது. அன்னம் நடை பயிலும் போது அதில் குழைவும் மென்மையும் தென்படும். யானையின் நடையில் ஒரு ஒயில் இருந்தாலும் கூடவே கம்பீரம் இருக்கும். அன்னநடையை எல்லா வயதுப் பெண்களுக்கும் சொன்னாலும்,  யானை நடை பேரிளம்வயதுப் பெண்களுக்குத் தான் அதிகம் ஒப்பிட்டு சொல்லப்படுகிறது. யானை உருவத்திலும் வயதிலும் பெரியது. இலக்கியத்தில் அன்னையரும் அரசியருமே யானை நடைக்கு ஒப்பிடப்படுகிறார்கள். யானையின் நடை கம்பீரமான பெண்களின் நடைக்கு ஒப்பிடப்படுவதை தமிழ் மரபில் மாத்திரமல்ல,  ஏனைய இந்திய மொழி இலக்கியங்களிலும் கூட காணலாம்.

அயிகிரி நந்தினி என்று துவங்கும் மகிஷாசுரமர்த்தினி தோத்திரம் பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதன் 12ஆம் பாடலில் “மத்தமதம் கஜராஜ பதே” என்று தேவி போற்றப்படுகிறாள். மதயானையின் ராஜநடை கொண்டவளாம். இங்கு திறன்பேசிகள் அறிமுகமான 2010களின் ஆரம்பத்தில் நம்மவர் பலரின் கைபேசி அழைப்போசையாக இருந்தது “உடுராஜமுகி” எனும் பாடல். மலையாளத்தில் 2007ஆமாண்டு வெளியான ஆப்பிரகாம் லிங்கன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் அது. அதில் “கஜராஜ  விராஜித மந்தகதி” என்றோர் வரி வருகின்றது. யானையரசனின் இணையற்ற மந்தமான நடையைக் கொண்டவள். இந்த வரி கவி காளிதாசனின் வடமொழி சுலோகமொன்றிலிருந்து பெறப்பட்டது என்கிறார்கள்.


உடுராஜமுகி ம்ருகராஜகடி கஜராஜ விராஜித மந்தகதி

சரி, இப்போது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பெண்களின் நடை பற்றிய இந்த ஆராய்ச்சி எல்லாம் எதற்கு? கடைசியில் என்ன தான் சொல்ல வருகிறாய்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒன்றுமில்லை. இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் கேட்டிருந்த கேள்விக்கு விடை இது தான். திருக்கோணமலையில் வீற்றிருக்கும் தம்பதியரின் பெயரில் நீங்கள் சொன்ன பாதி விடை சரி. கோணேசர் – கோணைநாயகர் - கோணேச்சரர். ஆனால் அம்மையின் பெயர் மாதுமை அல்ல. பிடியன்ன மென்னடை!

கேள்விப்பட்டதே இல்லையா? ஆம். வியப்பாகத் தான் இருக்கும். திருக்கோணேச்சரம் மீது பாடப்பட்ட எந்தவொரு பழைய இலக்கியங்களிலுமே கோணேஸ்வரரின் தேவியின் பெயர் மாதுமை இல்லை. அவை எல்லாமே ஒரே பெயரையே மீண்டும் மீண்டும் சொல்கின்றன. “பிடியன்ன மென்னடை”, “பிடியன்ன நடை”, “பிடிநடை”, பெண்யானை போல் நடை பயில்பவள்.

சரி. உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், ஒவ்வொரு இலக்கியமாகவே போய் பார்த்து விட்டு வருவோம், வாருங்கள். அதற்கு முன், அவற்றை காலத்துக்கேற்ப ஒழுங்குமுறைப்படுத்துவது அந்தப் பெயர் விடயத்தில் நாம் சொல்வது சரி தானா என்பதை உறுதி செய்ய உதவலாம்.

திருக்கோணேச்சரம் பற்றிய மிகப்பழைய இலக்கியச் சான்று சம்பந்தர் தேவாரம். அது பொ.பி 7ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. (பொ.பி என்றால் பொது ஆண்டுக்குப் பின். கி.மு, கி.பி என்ற சுருக்கங்களுக்குப் பதிலாக இப்போது பொ.மு, பொ.பி என்று பயன்படுத்துகிறார்கள்).

தமிழகத்தின் பாடல் பெற்ற தலங்களிலுள்ள அம்மன்களின் பெயர்கள் பெரும்பாலும் தேவாரங்களில் இடம்பிடித்த பெயர்களாகவே இருக்கின்றன. உதாரணமாக மதுரைப்பதிகத்தில் “அங்கயற்கண்ணி”,  இராமேஸ்வரப் பதிகத்தில் “மலைவளர்காதலி”, திருவண்ணாமலைப் பதிகத்தில் “உண்ணாமுலை”, இப்படிப் பல பெயர்களைக் காணலாம். இன்றும் இந்தப் பெயர்களே அங்கங்கு உள்ள அம்மன்களை அழைக்க பயன்படுகின்றன. என்ன, நமது வடமொழி மோகத்தால் அழகிய தமிழ்ப் பெயர்களைக் கொஞ்சம் மாற்றிவிட்டோம்.

அங்கயற்கண்ணி ‘மீனாட்சி’ ஆகிவிட்டாள். உண்ணாமுலை அம்மைக்கு இன்று ‘அபீதகுஜாம்பாள்’ என்று பெயர். மலைவளர்காதலி ‘பர்வதவர்த்தனி’ ஆகிவிட்டாள். தேவாரங்களில் நாயன்மார் பதிவு செய்த வண்டார்குழலி (சூடிய மலர்களின் நறுமணம் காரணமாக வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்டவள்), சுரும்பார் குழல் அரிவை (அதே பொருள் தான். சுரும்பு என்றால் வண்டு), யாழைப்பழித்த மொழி (பேச்சின் இனிமையில் யாழை வெட்கப்பட வைத்தவள்) முதலிய அருமையான பெயர்களை இன்றும் அரிதாக தமிழகத் தலங்களில் காண முடிகின்றது.

இதே நியதிப்படி, பாடல் பெற்ற தலமான கோணேச்சரத்து அம்மனின் பெயர், அந்தத் தலம் மீது பாடப்பட்ட தேவாரத்தில் இடம்பெற்றிருக்கவேண்டும். ஆனால், மாதுமை என்ற பெயரை சம்பந்தரின் பதிகத்தில் காணமுடியவில்லை. அப்படி என்றால் பிடியன்ன மென்னடை? அது இருக்கிறது. இரண்டாம் பதிகத்திலேயே. “பிடியன நடையாள் பெய்வளை மடந்தை”

தேவாரத்தை அடுத்து, காலம் இன்னதென்று சரியாகக் கூறமுடியாத கோணேச்சர இலக்கியங்கள் பல கிடைக்கின்றன. அவற்றின் மொழிநடை, பாடல் பொருத்தம், கூறப்படும் செய்திகள் என்பன கருதி, அவை 15ஆம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடையே உருவானவை என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவற்றில் மிகப்பழையதாகக் கருதப்படுவது கைலாச புராணம். இதை சிலர் ‘தட்சிணகைலாச புராணம்” என்று அழைக்கிறார்கள். இதன் .காலம் 16ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். கைலாச புராணத்தின் கடவுள் வாழ்த்தின் ஐந்தாம் பாடல் மாதுமை அம்மையைத் துதிக்கின்றது. ஆனால் பாடலில் மாதுமை என்ற பெயர் இல்லை. “சீர்புரந்த பிடியன்ன மென்னடை அம்பிகை பாதம் சிந்தை செய்வாம்!” என்றே பாடுகிறது அது. அதன் ஏழாவது திருநகரச் சருக்கப் படலத்தில் “பிரை செய்த அமுதமொழிப் பிடியன்ன மென்னடைக்கு”, “அமையனைய திருத்தோளின் அணங்கு பிடி அன்ன நடை”க்கு குளக்கோட்டன் கோவில் அமைத்த செய்தி வருகிறது.

(தொடரும்)




0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner