கைலாசபுராணத்தை அடுத்து உருவான கோணேசர் கல்வெட்டும், திரிகோணாசலபுராணமும் 17 - 18ஆம் நூற்றாண்டில் உருவாகி இருக்க வேண்டும். கோணேசர் கல்வெட்டில் பாட்டு வடிவிலும், எழுத்து நடையிலும் சொல்லப்படும் செய்திகளைத் தொகுத்து இலக்கிய நயத்தோடு சொல்வது திரிகோணாசல புராணம். எனவே கோணேசர் கல்வெட்டைப் பின்பற்றியே திரிகோணாசல புராணம் தோன்றியிருக்கிறது எனலாம். அவை இரண்டும் தம்பலகாமம் ஆதிகோணைநாயகர் கோவில் பற்றியும் குறிப்பிடுகின்றன. திருக்கோணேச்சரம் 1624இல் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட பின்னரே, தம்பலகாமத்தில் ஆதிகோணை நாயகர் கோவில் உருவானது. எனவே கோணேச்சரம் இடிக்கப்பட்டு ஒரு சில தசாப்தங்கள் கழிந்தே இவை பாடப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.
கோணேசர் கல்வெட்டின் பத்தாம் பாடல் “வார் குலவு களப முலைப் பிடிநடையை” குளக்கோடன் வழிபட்டதைப் பாடுகிறது. திரிகோணாசல புராணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பிடியன்ன மென்னடை என்ற பெயர் வந்திருக்கிறது. அதன் கடவுள் வாழ்த்திலும் மாதுமை அம்மையின் இடத்தில் “பிடியன்ன மென்னடை”யைத் தான் காண்கிறோம். மூன்றாவது திருநகரப் படலத்தில் “மங்கையாள் பிடியன்ன மென்னடையுடன் மருவி” என்றும், நான்காவது கோணவரைப் படலத்தில் “பெண்ணினுக்கரசாகிய பிடியன நடையும்” என்றும் வந்திருக்கிறது.
இந்தப் பட்டியலில் கடைசியாக இணையும் நூல்கள் வெருகல் சித்திரவேலாயுதர் காதலும் கோணமலை அந்தாதியும். வெருகல் சித்திரவேலாயுதர் காதல், பதினேழாம் நூற்றாண்டில் தம்பலகாமத்து வீரக்கோன் முதலியாரால் பாடப்பட்டது. இதன் கடவுள் வாழ்த்திலும் இறுதிப்பாடலான வாழியிலும் “பிடியன்ன மென்னடை” தான் போற்றப்படுகிறாள்.
கோணமலை அந்தாதி 1806ஆம் ஆண்டு திருக்கோணாசல சைவ ஆதீனத்தைச் சேர்ந்த புலவர் சுப்பிரமணியர் ஆறுமுகத்தால் பாடப்பட்டது. இன்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் நல்லை ஆதீனத்தை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் தமிழகத்தில் திருவாவடுதுறை, பேரூர், மதுரை முதலிய சைவ ஆதீனங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆதீனங்கள், சைவ சமயம் சார்ந்த கோவில் நிர்வாகத்திலும் சமூக மேம்பாட்டிலும் ஈடுபட்டு வருபவை. திருக்கோணமலையில் சில ஆண்டுகளுக்கு முன் தென்கைலை ஆதீனத்தை தாபித்திருக்கிறார்கள். ஆனால் பன்னெடுங்காலமாக அங்கு திருக்கோணாசல சைவ ஆதீனம் இருந்ததென்பது பலருக்கும் தெரியாது. உப்புவெளியிலுள்ள சின்னத்தொடுவாய் பிள்ளையார் கோவிலடியில் இயங்கி வந்த இந்த ஆதீனத்தைச் சேர்ந்தவர் தான் புலவர் சுப்பிரமணியர் ஆறுமுகம்.
ஆறுமுகப் புலவரால் பாடப்பட்ட கோணை அந்தாதியின் முப்பத்தைந்தாம் பாடல் “பிடியன்ன மென்னடைப் பெண்ணரசே” என்று தான் உமையை விளிக்கிறது. இந்த எல்லா நூல்களிலும் கிடைக்கின்ற திருக்கோணேச்சரம் பற்றிய தொன்மங்களனைத்தையும் தொகுத்து “திரிகோணாசல வைபவம்” எனும் நூலை 1889இல் எழுதிய புலவர் திருமலை வ.அகிலேசபிள்ளை அவர்களும் மூலங்களில் உள்ளபடியே “பிடியன்ன மென்னடை” என்ற பெயரைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்.
ஆக, இத்தனை சான்றுகளாலும், கோணேச்சரத்தில் வீற்றிருந்த அம்மனின் பெயர் “பிடியன்ன மென்னடை” தான் என்பது தெளிவாகப் புலனாகின்றது. பின்பு மாதுமை என்ற பெயர் எப்படி வந்தது? அது தான் கோணேச்சரத்து இறைவியின் பெயர் என்று யார், எப்போது கதை கட்டி விட்டிருக்கிறார்கள்?
போர்த்துக்கேயர் அழித்த பின்னர் மீளத் திருப்பணிகள் ஆரம்பமாகி, 1963இல் இன்றைய கோணேச்சரத்துக்கு முதலாவது குடமுழுக்கு இடம்பெற்ற போது வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாதுமையம்மையார் என்ற பெயர் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பெயரை அதற்கு முன்பு யார் எப்போது முதன்முதலாக பாவித்தார்கள் என்பது தெரியவில்லை. எனவே 1889இற்கும் 1963இற்கும் இடையில் இந்தப் பெயர் யாராலோ சூட்டப்பட்டிருக்க வேண்டும். அல்லது அம்மையின் பழைய பெயர் வழக்கிழந்த பின் திருக்கோணேச்சர இலக்கியங்களில் தேடிய சிலர் இப்பெயரை அங்கு கண்டடைந்திருக்கலாம். உமையைப் பலவாறாக வருணிக்கும் போது ‘மாதுமை’ என்ற பெயர் திரிகோணாசல புராணத்திலும் கோணமலை அந்தாதியிலும் சில இடங்களில் வந்திருக்கிறது. ஆனால் அப்பெயர் கோணேச்சர இறைவியின் பெயராக இல்லாமல், இமயமலையில் தோன்றிய மலைமகள் உமையைக் குறிப்பிடவே எடுத்தாளப்பட்டிருக்கிறது.
மாதுமை என்பது பிற்காலத்தில் அறியாமல் சூட்டப்பட்ட பெயராகவே இருக்கட்டும். மாது + உமை. அதுவும் அழகான தமிழ்ப் பெயர் தான். ஆனால் பிடியன்ன மென்னடை என்ற பெயரை அன்றாட வழக்கத்தில் கொண்டு வருவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உங்களில் சிலருக்கு சந்தேகம் வரலாம். நம் சமயத்திலும் இனத்திலும் மாற்றுவதற்கும் தீர்ப்பதற்கும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, கோணேச்சர இறைவி மாதுமையின் பெயரை ‘பிடியன்ன மென்னடை’ என்று பழையபடி மீட்பது தான் முக்கியமான பிரச்சினையா இப்போது? இந்தப் பெயரை விட அந்தப் பழைய பெயருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கேட்டால், காரணம் இருக்கிறது, மொத்தம் நான்கு காரணங்கள்.
முதலாவது அதன் தமிழ் அழகு. ‘பிடியன்ன மென்னடை’ என்பது அசாதாரணமான ஒரு தமிழ்ப்பெயர். நாம் முன்பே பார்த்த யாழைப்பழித்த மொழி, பண்ணினேர்மொழி, சுரும்பார்குழலரிவை என்பன போல, பொருள் உள்ள, நயம் பொருந்திய இனிய பெயர். உச்சரிப்பின் இடையே ‘ஷ்’ஓ ‘ஸ்’ஓ வராத பெயர்கள் ஓசைநயமற்றவை என்று கண்டபடியெல்லாம் பெயர் வைக்கின்ற நாம், இனி எதிர்காலத்தில் கூட இப்படி ஒரு பெயரை குழந்தைகளுக்குச் சூட்டப்போவதில்லை. அந்தப் பெயர் ஒரு மறைந்த பாரம்பரியத்தின் அடையாளமாக எஞ்சியிருக்கட்டும். எஞ்சியிருக்கவும் வேண்டும். அந்தப் பெயரையும் வடமொழிக்கு மாற்றி உச்சரிக்க சிலர் விரும்பலாம். அதற்கு அனுமதிக்கவேண்டிய அவசியம் இப்போது இல்லை.
இரண்டு, அதன் பண்பாட்டுத் தொடர்ச்சி. குறைந்தது 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஒரு பெயர், தமிழ் ஞானசம்பந்தன் திருவாய் மலர்ந்த ஒரு பெயர், நூறாண்டுகளுக்கு முன் வரை வழக்கில் இருந்த பெயர், மறக்கடிக்கப்பட்டு, யாரோ ஒருவரால் முன்மொழியப்பட்ட பெயரொன்றால் இன்று அங்குள்ள தேவியை அழைக்கிறோம். அது அறியாமல் மரபில் ஏற்பட்டு விட்ட ஒரு இடைவெளி. அந்த வரலாற்றுச் சரடு அறுபட்டு விடக்கூடாது. அவள் பழைய பெயரிலேயே அறியப்பட வேண்டும்.
மூன்று, அப்பெயரின் வரலாற்று முக்கியத்துவம். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வணிக மையமாக, இயற்கைத் துறைமுகமாக, முக்கியமான அரசியல் களமாக, இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது திருக்கோணமலை. இலங்கைப் பண்பாட்டின் அடையாளமாக முன்வைக்கப்படும் சின்னங்களில் யானையும் ஒன்று. வரலாற்றுக் காலத்திலிருந்து பிரித்தானியர் காலம் வரை இலங்கையின் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் முக்கியமானவை யானைகளும் யானைத்தந்தங்களும் யானைத்தந்தங்களில் விளைந்த முத்துக்களும். வியாபாரம், படையெடுப்பு என்று இங்கு பெருமளவு யானைகள் ஒருகாலத்தில் கூடியிருக்கும். ஆக, கோணமலைத் துறைமுகத்தின் கரையில் வீற்றிருக்கும் உமையவள் பிடிநடையாக இனங்காணப்பட்டதன் பின்னுள்ள கவித்துவம் அற்புதமானது. அப்படி அவளை கண்டவன் மகத்தான ஒரு கவிஞனே தான்.
மிக முக்கியமானது இறுதிக் காரணம். அந்தப் பெயரை வெறுமனே இலக்கிய அழகு, பெண்ணின் நடை அழகு என்று சுருக்காமல், அந்தப் பெயரின் பின்னுள்ள குறியீட்டை புரிந்துகொள்வது. சோழர் காலத்தில் கொடை அளிக்கப்படும் நிலங்களை பெண் யானைகளைக் கொண்டு அளந்து கொடுப்பது வழக்கமாக இருந்தது. இலங்கையில் கூட அந்த வழக்கம் இருந்திருக்கிறது. கந்தளாயில் கிடைத்த இரண்டாம் கஜபாகுவின் கல்வெட்டொன்றில் “கந்தளாய்ப் பிரமதேயம் பிடி நடந்த பூமி” என்ற வரிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பிடி நடந்த பூமியைக் கொடையளிப்பது அரச வழக்கம். எனவே ஒரு மறைந்து போன வழக்கத்தின் சாட்சி நம் பிடியன்ன மென்னடை அம்மை.
கோணமாமலையில் வீற்றிருக்கும் மாதரசி, பிடி போல நடப்பவள். அவள் நடக்கும் இடமெல்லாம் தானம் அளிக்கத் தகுதி பெற்று விடுகின்றன. இலங்கைத்தீவின் தொன்மையான நகரொன்றில் பிடியானையின் மதர்ப்போடு நின்றிருக்கும் அந்த மூதன்னை மிக மெதுவாகத் தான் நடை பயில்கிறாள். இல்லாதவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தை அளந்து அளந்து அள்ளிக் கொடுத்துக்கொண்டே செல்கிறாள். நிலத்தை, நிம்மதியை, நீதியை இழந்து கொண்டிருப்பவர்கள் சென்று கையேந்த வேண்டியது அந்தப் பிடியானையிடம் அல்லவா? அந்த யானையோடு மண்ணாளும் கோணை மன்னனிடம் அல்லவா?
அருமை, நிறைவாய் உணர்கிறேன்
ReplyDeleteஅருமை, நிறைவாய் உணர்கிறேன்
ReplyDeleteமனம்நிறை நன்றிகள். பிடியன்ன மென்னடை அருள்வாளாக
Delete