சாகாமம் எங்கள் ஊரை அடுத்திருக்கும் கிராமம். போக்குவரத்து வசதிகள் பெரிதாக இல்லாத, குறைந்தளவிலான மக்கள் வாழும் பின்தங்கிய கிராமம். ஆனால் அது இலங்கை வரலாற்றில் முக்கியமாகப் பதிவான இடம். மகாவம்சத்திலேயே பதிவாகி இருக்கிறது. சோழர் காவலரணாக.
மகாவம்சத்தின் 58ஆம் அத்தியாயத்தில் விஜயபாகு சோழர்களை நோக்கிப் படையடுத்தது இப்படிச் சொல்லப்படுகிறது. "சோழர்களின் ஆணவத்தை அழிப்பதற்காக, (விஜயபாகு) மன்னனின் இன்னும் இரு திறமை வாய்ந்த அதிகாரிகள் கரையோர 'வெள்ள மகாபத' பெருஞ்சாலை வழியே அனுப்பப்பட்டார்கள்...... அவர்கள் சாக்காமத்திலும் அதன் அருகே அங்குமிங்கும் இருந்த (சோழர்) காவலரண்களை சூறையாடினார்கள்." (மகாவம்சம் 58:41 - 47).
சோழர்களின் ஆதிக்கம் கிழக்கிலங்கையில் சாகாமம் வரை பரந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இதைக் கொள்வார்கள். சாகாமத்துக்குக் கிழக்கே உள்ள திருக்கோவில் ஆலயத்தை சோழர்களுடன் இணைக்கும் மரபுரைகளையும் இங்கு இணைத்து நோக்கலாம்.
விஜயபாகுவுக்கு நூறாண்டுகள் பிந்திய மகா பராக்கிரமபாகு மன்னனும் சாகாமத்தில் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறான் என்பதையும் அதே மகாவம்சம் பதிவுசெய்திருக்கிறது. அதன் 75ஆம் அத்தியாயத்தில் இபப்டி வருகிறது. "இப்போது (மகா பராக்கிரமபாகுவின்) சகல பிரமுகர்களும் தலைவர்களும் தீகவாபிமண்டலத்தைக் கைப்பற்ற பெரும் படையுடன் வந்தார்கள். சவனவியளத்திலிருந்த பன்னிரு வாயில் கொண்ட அரணையும், கோமயகாமத்தையும் சாக்காமத்தையும், பின்னர் பலபாசாணத்தையும் அவர்கள் நிர்மூலமாக்கினார்கள்." (மகாவம்சம் 75:1-4.
இதில் சொல்லப்படும் தீகவாபிமண்டலம், அம்பாறை மாவட்டம் இறக்காமத்துக்கு கிழக்கே அமைந்திருந்தது. கோமயகாமம் இன்று பொத்துவிலுக்கு வடக்கே உள்ள கோமாரி ஆகலாம். சவனவியளம், பலபாசாணம் ஆகிய மற்ற இடங்கள் எங்கெங்கு இருந்தன என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், தீகவாபிமண்டலத்தில் இருந்தவர்கள் தொடர்ச்சியாக ஏனைய சிங்கள அரசரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கவிரும்பவில்லை என்பதற்கு இந்தக் கிளர்ச்சி பற்றிய தகவல்கள் முக்கியமான ஆதாரங்கள்.
சாகாமத்துக்கு வடக்கே சுமார் ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ள மொட்டையாகல்லு மலை இன்னொரு விதத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வயல் நிலங்களின் மத்தியில் கம்பீரமாக எழுந்து நிற்கும் அந்தக் குன்றின் கம்பீரம் வார்த்தைகளால் விளக்க முடியாதது. அது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் நடமாடிய இடம் என்பதற்கான ஆதாரம் அங்குள்ள பிராமிக் கல்வெட்டு.
"ஸ்ரீமத் சங்கபோதி வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகளான சிவஞானசங்கரிகள் ஸ்ரீவிசயவாகு தேவருக்கு யாண்டு 10வதில் தை மாசத்தில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவில்கு கிழக்கு கடல் மேற்கு களி[காமமலை தெற்கு அறுகமனப்பூமுனை வடக்கு அன்பிலான்துறை]" என்பது சிதைந்த கல்வெட்டு வாசகம். கோட்டை அரசின் மன்னன் விஜயபாகு பொ.பி 1519இல் பொறித்ததாகக் கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment