உடுராஜமுகி



ஒரு 18+ பதிவு.

பிடியன்ன மென்னடை கட்டுரையில் 'உடுராஜமுகி' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2009,2010 காலத்தில் எங்கள் பகுதியில் பிரபலமாக இருந்த கைபேசி அழைப்போசைகளில் ஒன்று அது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து ஊர் திரும்பியிருந்த யாரோ ஒருவர் தன் மலையாள நண்பரிடமிருந்து அப்பாடலை இங்கு பரப்பியிருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் அதை ஏதோ பக்திப் பாடல் என்று தான் நினைத்திருந்தேன். சுப்ரபாதத்தைத் தொடரும் 'வெங்கடேச ஸ்தோத்திரம்' பாடப்படும் மெட்டின் சாயலில் அது இருந்தது முதன்மையான காரணம். 



2008இல் ஸ்டீபன் தேவஸியால் சமஸ்கிருத சுலோகங்களுக்கு இசையமைத்து வெளிவந்து கொண்டிருந்த "சாக்ரெட் சாண்ட்ஸ்' அல்பத்தின் மூன்றாம் தொகுதியில் இடம்பெற்ற 'தோடகாஷ்டமும்' இதே மெட்டில் இசையமைக்கப்பட்டிருந்தது இன்னொரு காரணம்.


2010களில் யூடியூப்பிற்கு அறிமுகமான போது விழுந்தடித்து நான் தேடிய பாடல்களில் ஒன்றாக 'உடுராஜமுகி' இருந்தது. அப்போது தான் அது ஆபிரகாம் அண்ட் லிங்கன் எனும் மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதை அறிந்தேன். ஜோய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடிகை நேகா பாண்ட்சே ஆடுவது போலமைந்த காட்சியமைப்பு. படு மோசமான நடனக்காட்சி. 

உடுராஜமுகி - ஆண் வேற்றம்

பாடலை எழுதியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. பாடல் வரிகளின் அர்த்தம் ஓரளவு புரிந்து பின்னர் அந்தப் பாடல் என் கைபேசி பாடல் பட்டியலில் தவிர்க்க முடியாத இடம்பெறத் தொடங்கியது. திரைப்படத்தில் இடம்பெற்றது மதுபாலகிருஷ்ணன் பாடிய ஆண் வேற்றம் (version). ஆனால் எனக்குப் பிடித்தது மஞ்சரி பாடுகின்ற பெண் வேற்றம் தான். 

உடுராஜமுகி - பெண் வேற்றம்

இந்தப் பாட்டின் பொருளை அறிந்தது உண்மையில் ஒரு சோகக்கதை. நான் முறைப்படி சமஸ்கிருதமோ மலையாளமோ கற்றவன் அல்லன். பாடலில் வந்த "சமுத்ரசுதா' (அலைமகள்) என்ற சொல்லை மட்டும் புரிந்து கொண்டு 'மகாலட்சுமியின் பக்திப் பாடல் போல. நன்றாக இருக்கிறது. நவராத்திரி காலத்தில் பாடுவோம்' என்று தான் இணையத்தில் பொருள் தேடிப் பாடமாக்கினேன். பிறகு தான் தெரிந்தது, வெறுமனே பெண்ணைப் பாடும் பாடல்தான் அது என்று. எப்படியோ பாடலாசிரியன் மகாரசிகன் என்று மட்டும் தெரிகிறது.
 ‌
ஏனென்றால் இது சிருங்கார ரசம் பொருந்திய இனிய பாடல். பொருளைப் பார்த்துவிட்டு நீங்கள் தலைதெறிக்க ஓடக்கூடாது என்று தான் முன்னெச்சரிக்கையாக ஒரு 18+ போட்டுவைத்தேன். (ம்கும். இவன் அப்படி என்ன 18+ எழுதியிருக்கிறான் என்று பார்க்கத்தான் நீங்கள் வந்தீர்கள் என்று எனக்கு தெரியாமலில்லை.) சரி, யூடியூப்பில் பாட்டை இயக்கியபடியே பாருங்களேன் பொருளை. 

"‌நிருபம ப்ரஹ்மாண்ட சம்மோஹினி
நிகில நித்யானந்த மந்தாகினி"
 ‌
நிகரின்றி பிரம்மாண்டத்தை மயக்கும் மோகினி.
முழுமையான பேரின்பத்தை தரும் மந்தாகினி ஆறு. 

மந்தாகினி என்பது, மெதுவாக ஓடுவதால் அந்த நதி பெற்ற பெயர். பெண்ணை, நீராடும் நதிக்கு - அதுவும் மெதுவாக ஓடும் நதிக்குச் சொல்லும் அந்த ஒப்பீடே சிருங்காரம் கொப்பளிப்பது தான்

‌"உடுராஜமுகி ம்ருகராஜகடி"
 ‌
உடு என்றால் நட்சத்திரம். உடுராஜன் நட்சத்திரங்களின் அரசனான சந்திரன். உடுராஜமுகி என்பது நமக்கு பழக்கமான பெயர் தான். சந்திரமுகி. சந்திரன் போன்ற முகத்தைக் கொணடவள்.

கடி என்றால் இடுப்பு. மிருகராஜன் சிங்கம். மிருகராஜகடி. சிங்கம் போன்ற இடுப்பைக் கொண்டவள். சிங்கம் பிடரி மயிராலும் ஊனுண்ணுவதாலும் பெயர் பெற்றது. தோற்ற ஒப்பீட்டில் மட்டுமன்றி அது எப்படி பெண்ணின் இடுப்புக்கு உவமையாகிறது என்று நான் சொல்லப்போவதில்லை.‌

"கஜராஜ விராஜித மந்தகதி"

இந்த வரிக்கு விளக்கம் தேவையில்லை. பிடியன்ன மென்னடை. அரசியர்க்கு உரிய நடை. அந்த நடையுடைய இவள் பேரரசி.

"கணஸார சுகந்தி விலாசினி நீ‌"
‌கணசாரம் என்பது சந்தனம். அதன் சுகந்தத்தைக் கொண்ட விலாசினி. விலாசினி என்றால் விளையாட்டுக்களால் மகிழ்விப்பவள் (என்ன விளையாட்டுக்களால் என்றெல்லாம் கேக்கப்படாது). ஆந்திரத்து நடனவகைகளில் ஒன்றுக்குப் பெயர் "விலாசினி நாட்டியம்". அதன் "ஆஸ்தான சம்பிரதாயம்" எனும் பிரிவு அரண்மனையிலும் அந்தப்புரங்களிலும் ஆடப்பட்டது தான்.

"கனகாங்கி விகார ஸமுத்ரஸுதே‌" 
சமுத்ரசுதே ஏற்கனவே பார்த்தது தான். "வந்தாள் மகாலக்‌ஷ்மியே" என்று பாடுவதில்லையா? இவளை திருமகள் என்கிறான் கவிஞன். கனகாங்கி? கனகம் என்பது தங்கம். தங்கம் போன்ற அங்கங்களைக் கொண்டவள். இதைத்தான் அண்மைக்காலத்தைய புலவரான விவேகா, தனது "டாடி மம்மி வீட்டில் இல்லை" எனும் மகத்தான காவியத்தில் "தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே, தன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே" என்று பாடியிருக்கிறார். 
 ‌
"‌நயனங்களில் அஞ்சன காந்தகடம்"
இனி வருவது மலையாளம். அவள் கண்களில் மை காந்தம் போல் கவர்கின்றது. அஞ்சனம் என்பது மை. சிங்களத்தில் எனது துலாஞ்சனன் எனும் பெயருக்கு அர்த்தம், 'ஒளியையே கண்மையாகக் கொண்டவன்" என்பது இங்கு உங்களுக்குத் தேவையில்லாத - ஆனால் சின்ன விளம்பரமாக கொடுக்க வேண்டிய ஒரு கொசுறுத்தகவல்.

"அதரத்தில் அனந்தம் அருந்த ரசம்"
இந்தப் பெண்ணின் உதடுகளில் அருந்த அனேக இனிய பானங்கள் உள்ளன.

"ப்ரணயோஜ்வல காவ்ய கலாவதி நீ"
பிரணயோஜ்வல என்றால் எனக்கும் என்னவென்று தெரியாது. அடுத்து வருவது. காவியக்கலைகளில் வல்லவள் நீ.

"சுரலோக விஹாரிணி சாருலதே"
சுரலோகம் - தேவலோகம். விகாரிணி - இன்பத்துக்காக அங்குமிங்கும் அலைபவள். சாருலதா - அழகிய கொடி. அங்குமிங்கும் அலைந்து சொர்க்கத்தைக் காட்டும் பூங்கொடியே என்று ஒரு 'மார்க்கமாக' மொழிபெயர்க்கலாம்.

‌"கலரஞ்சித காஞ்சன காந்திமயம்
ஸ்தனகும்ப தரங்கித சஞ்சலனம்" 

"மன்மதனைப் போல் மயக்கும்படி ஒளிவீசுபவள். அவள் குடங்களை ஒத்த மார்புகள் அலைகளைப் போல் அசைந்தாடுகின்றன. வாயைத் துடைத்து விட்டு அடுத்த வரிக்கு வாருங்கள். 

"மணிமேகல பூண்ட நிதம்ப தடம்
நவ பத்மதளாப புணர்ந்ந பதம்"
ஒட்டியாணம் பூண்ட அல்குல். புத்தபுதுத் தாமரையிதழ்கள் இணைந்தது போன்ற பாதங்கள்.

இவ்வளவையும் பாடிவிட்டு மீண்டும், ‌நிகரின்றி பிரம்மாண்டத்தை மயக்கும் மோகினியே,‌ முழுமையான பேரின்பத்தை தரும் மந்தாகினி ஆறே என்று கூவியபடி முடிகிறது பாடல்.

பாடல் இவ்வளவும் தான். ஆனால் பொருள் புரிந்து இந்த இன்னிசையை இரசித்தபடி கேட்கும் போது என்னவோ செய்யத்தான் செய்கிறது, இல்லையா?

மொழியறிஞர்கள் சமஸ்கிருத - மலையாள மொழிபெயர்ப்புகள் தவறென்றால், (இங்கு கூறப்பட்ட அர்த்தத்தில் சிருங்காரக்குறைவு இருந்தால் மாத்திரம்) திருத்தவும். இறுதியாக, 18+இற்காக மட்டும் என் முழுநீளப்பதிவை முதன்முறையாக வாசித்த மற்றும் 'பெரிதாக' எதிர்பார்த்த உங்களில் சிலர் "எங்கடா இதில நீ சொன்ன 18+" என்று என் கொலரைப் பிடிப்பதற்கு முன், தங்களிடம் வணக்கம் கூறி விடைபெறும் நான்... 


0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner