நாதனைச் சுவாதி

"அண்ணன், சுவாதி அம்மன் கோயில் எவடத்த இருக்கு?" திடீரென்று நான் கை நீட்டி மறித்த படபடப்பில் சற்றுத்தூரம் சென்று வண்டியை நிறுத்தி திரும்பிப் பார்த்த அவர் "சுவாதியம்மனோ? தெரியாதே?" என்றார். தாடியைச் சொறிந்தபடி "இது பிள்ளையார் கோயில். அம்மன் கோயில் இல்லே?" என்றார். நானும் "அதானே, இல்லே!" என்று இசைப்பாட்டு போட்டேன். இப்போது தலைக்கவசத்துக்கு மேலால் தலையைச் சொறிந்துவிட்டு "அந்தக் கடையடில கேட்டுப்பாருங்களன்" என்றபடி அவர் நகர, மீண்டும் கூகிள் வரைபடத்தை எடுத்து சரி பார்த்தேன்.  

நான் நின்றுகொண்டிருக்கும் இடம்  கல்லடிப் பிள்ளையார் கோவில் என்று தான் காட்டுகிறது. நிச்சயமாக சுவாதி அம்மன் கோவில் அருகில் தான் எங்கோ இருக்கவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் கூகிள் வரைபடத்தை நம்ப முடிவதில்லை. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்பதும், கூகிள் மெப் பிழையா இடம் காட்டாது என்பதும் இப்போது ஒத்த பழமொழிகள் ஆகிவிட்டன. 

கடையடியில் கேட்டேன். ஒரு முதியவர் எழுந்து வந்தார் "இந்தப் புள்ளையார் கோயிலுக்கு கொஞ்சம் முன்னுக்கு போங்க மகன். அங்கால தெரியிர மலையடிலான் கோயில் இரிக்கி" என்றார். நன்றி கூறி அந்த இடத்தில் போய் வண்டியை நிறுத்தினால், வயலுக்கு நடுவே பற்றைகள்  மண்டி வேம்பும் ஆலும் அடர்ந்து  வளர்ந்து நின்ற சிறிய பாறை ஒன்று அது. அக்கம் பக்கம் கோவிலுக்கான சிறு தடயத்தையும் காண முடியவில்லை. வீதியோரத்தில் வயலுக்குள் இருந்து இன்னொருவர் தலையைக் காட்ட அவரிடமும் கேட்டேன் "சுவாதியம்மன் கோயில்...?" 

"நீங்க நிக்கிரது தான்" என்றார் அவர். நான் சுற்றுமுற்றும் பார்க்க, அவர் சிரித்தார் "கோயிலெண்டு பெரிசா ஒண்டுமில்ல. மத்தப்பக்கம் போய் பாருங்க" என்று சொல்லிவிட்டு அவர் மீண்டும் வயலுக்குள் இறங்கி மறைந்தார்.

இந்தச் சிறுகுன்றைத் தானா கோவில் என்கிறார்கள்? மெல்ல நடந்தேன். புதருக்குள் திரிசூலம் ஒன்று தென்பட்டது. ஓ, கோவில் தான். நம்பிக்கை பிறந்து விட்டது. தொடர்ந்து நடந்தால், மற்றப்புறம் அந்தக்குன்று சீராக இறங்கி செங்குத்தாக நின்றது. அங்கு ஒரு சிறுமேடை. முன்புறம் யாரோ வந்து தரையை நன்கு கூட்டிப்பெருக்கிய தடமும் பக்கத்திலேயே விளக்குமாறும் தெரிந்தது. கீழே கிடந்த பட்டுத்துணியொன்று காற்றில் படபடத்தது. மேடையில் திருநீறு சாற்றப்பட்ட ஒரு கல். அதன் முன்னே காய்ந்த பூக்கள். சுவாதியம்மன்!  ஒருகாலத்தில் மட்டக்களப்பு முழுவதும் போற்றிய நாதனைச் சுவாதியம்மன்!
சுவாதியம்மன் பாறை, நாச்சிமார் கல்லடி, நாதனை.

நான் நிற்குமிடம் கல்முனைக்கு  வடமேற்கே 20 கிமீ தொலைவில், மட்டக்களப்பு வாவியின் மேற்குக்கரையில் அமைந்துள்ள வெல்லாவெளி. வெல்லாவெளியில் இந்தக்கோவில் அமைந்திருக்கும் பகுதிக்கு நாதனைவெளி என்று பெயர். இன்று நாதனைவெளி, வெல்லாவெளி எல்லாமே போரைதீவுப்பற்று பிரதேசத்தில் அடங்குகின்றன. ஆனால் வரலாற்றுக்கால மட்டக்களப்பில் நாதனை தனக்கென ஒரு வன்னியனை ஆட்சியாளனாகக் கொண்ட ஒரு தனித்த 'பற்று' பிரிவாக விளங்கியது. நாதனை வன்னியருக்கு குலதெய்வமாகவும், முழு மட்டக்களப்பும் ஆண்டுக்கொருமுறை கூடி வழிபடும் பெரும் தெய்வமாகவும் விளங்கியவள் தான் நாதனைச் சுவாதியம்மன்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிடைக்கும் குறிப்புக்களில் மட்டக்களப்பு வன்னியர் அனைவரிலும் நாதனைப்பற்று வன்னியனே முதன்மை பெற்றதாக சொல்லப்படுகிறது. மட்டக்களப்புத் தேசத்தில் நிகழ்ந்தது வன்னியர்களின் கூட்டாட்சி. அங்கு எப்போதும் ஒரே வன்னியர் முதனிலை பெற்றதில்லை; அல்லது ஐரோப்பியர் வருகையோடு முதன்மை என்பது வெவ்வேறு பேருக்கு கைமாறியிருக்கிறது. போர்த்துக்கேயர் வரும் போதும், அதற்கு முன்பும் சம்மாந்துறை வன்னியன் முதல் நிலையாளனாக விளங்கினான். ஒல்லாந்தர் காலத்தில் பழுகாமம் மற்றும் போரதீவு வன்னியர்கள் கை ஓங்கியதாகத் தெரிகிறது. பிரித்தானியர் காலத்தின் ஆரம்பத்தில் கரைவாகு மற்றும் மண்முனை வன்னியர்கள் இந்த முன்னிலையைப் பெற்றதோடு வன்னிமை ஆதிக்கம் மெல்ல மெல்ல மறைந்துபோகிறது.



இந்த இடைக்காலத்தில் நாதனை வன்னியன் எந்தக் காலவேளையில் முதன்மை பெற்றிருந்தான் என்று தெரியவில்லை.  ஒல்லாந்தர் காலத்து நிர்வாகத்தில் நாதனையும் தெற்கே இறக்காமம் - மல்வத்தை உள்ளடங்கிய நாடுகாடும் இணைந்து தனித்த "நாதனை நாடுகாடுப்பற்று" பிரிவாக கருதப்பட்டன.  1804 பிரித்தானிய சிலோன் அறிக்கையில், வேடர் தலைவர் (Head of Vidos) என்ற குறிப்புடன் நாதனை வன்னியர் அம்பகப் பண்டார வேலப்பன் பட்டியலிடப்பட்டிருக்கிறார். அது பிரித்தானியரின் கீழ் பொலிச விதானையாகக் கடமையாற்றி, ஆனால் கண்டி அரசுக்கு விசுவாசமாக நடந்துகொண்டோரை துரோகிகளாகப் பிரகடனப்படுத்தும் தீர்மானத்தின் அறிக்கை.

1842இல் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஒத்துழைப்போடு நாதனையில் வேடர்களுக்கென ஒரு கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுவாதி அம்மன் இந்த வேடர்களின் அல்லது வேடர்களாக இனங்காணப்பட்ட பழங்குடியினரின் தாய்த்தெய்வமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கீழைக்கரை நாட்டார் இலக்கியங்களில் அவள் பொதுவாக "வதனமார்" எனும் தெய்வங்களோடு  இணைக்கப்படுகிறாள். 

பாலாவதனன் மேடை, நாச்சிமார் கல்லடி, நாதனை.
ஆனால் நாதனையில் சுவாதியம்மன் வழிபாடு பற்றிய முதலாவது தகவல், வெஸ்லியன் மடத்தைச் சேர்ந்த பாதிரிமாரின் 1893ஆமாண்டு குறிப்பில் தான் கிடைக்கிறது. நாதனை, வன்னியரின் பூர்வீகக் குடியிருப்பு. ஆனால் அப்போது பாழ்பட்டுக் கிடக்கிறது. அங்கு "நாச்சிமார் கல்லு" எனும் இடத்தில் பத்து நாட்கள் பிரமாண்டமான திருவிழா இடம்பெறுவது வழக்கம். அதில் மட்டக்களப்பின் எல்லாக் குலத்தினரின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கிறார்கள் என்று செல்கிறது அத்தகவல். 

சுவாதியம்மனோடு இணைத்துச் சொல்லப்படும் வதனமார் என்போர் குழுமாடு (காட்டுமாடுகளும் காட்டெருமையும்) பிடித்தோராகச் சொல்லப்படுகின்றனர்.  அவர்களது வழிபாட்டுக்கு நாதனையில் "வில்லை கட்டிச்சடங்கு" என்று பெயர். இன்றும் கால்நடைகளின் நலனுக்காக வதனமாரை வழிபடும் வழக்கம் கீழைக்கரையின் பல ஊர்களில் நிலவுகிறது.

விவசாயம், உணவுத்தேவைக்கு மாடுகள் அவசியமாக இருந்ததால், நாதனை போன்ற அடர்காடுகளில் அலைந்த குழுமாடுகள் இப்படி பிடித்து அடக்கப்பட்டு நாட்டு மாடுகளாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. உயிராபத்தும் வீரமும் நிறைந்த அருஞ்செயல் என்பதால், குழுமாடு பிடித்தல், இப்பகுதியை ஆண்ட சிற்றரசரின் ஆதரவில் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. பிற பகுதிகளிலிருந்து இதைக் கேள்வியுற்று வந்து இவ்விழாவில் குழுமாடு பிடித்தபோது இறந்த வீரர்கள் பின்னாளில் வதனமாராக தெய்வ நிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பின்னாளில் இது மருவினாலும், இவ்விழா வில்லைகட்டுச் சடங்காக எஞ்சி நிற்கிறது. 

நாம் நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் தான் இந்த "நாச்சிமார் கல்லு". இன்று சுவாதியம்மன் பாறை என்றும் அழைக்கிறார்கள். அந்த பத்து நாள் திருவிழா இன்றில்லை என்றாலும் வெல்லாவெளி மாரியம்மன் சடங்கில் ஒருநாள், இந்த இடத்தில் சுவாதி அம்மன் வழிபாடும் வதனமார் சடங்கும் இடம்பெறுகிறது. வதனமார் சடங்கில் முக்கிய இடம் வகித்த பிள்ளையார் பாறை, சற்றுத்தள்ளி இன்று கல்லடிப் பிள்ளையார் கோவிலாக வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால் சுவாதியம்மனுக்கு இங்கு தொடர்ச்சியான வழிபாடு இல்லை. நாதனை வன்னியரின் இரு பெண்குழந்தைகள் நாச்சிமார் கல்லில் இருந்த கல் வாயிலுக்குள் தவறுதலாக நுழைந்து அக்கதவு திறக்கப்படாமல் போனபின்னர் இங்கு வழிபாடற்றுப் போனது என்று ஒரு கதை சொல்கிறார்கள். இங்கிருந்து ஒன்றரைக் கிமீ தொலைவில் இருநூறாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வெல்லாவெளி மாரியம்மன் கோவிலிலேயே மக்கள் வணங்குகிறார்கள்.

வெல்லாவெளி முத்துமாரி அம்மன் கோவில்

கண்டி மன்னனும், மட்டக்களப்பு வன்னியரும் வருகை தர, கீழைக்கரை மக்களெல்லாம் திரண்டு குழுமிய பத்து நாள் திருவிழாவான நாதனை வில்லைகட்டிச் சடங்கு இன்றில்லை. அந்தச் சடங்கு இடம்பெற்ற நாச்சிமார் கல்லடியில், வயல்களின் நடுவில், காற்றில் ஆடும் பெருமரங்களின் மெல்லிய சலசலப்பில், வானமே கூரையாக அமைதியாக அமர்ந்திருக்கிறாள் சுவாதி அம்மன். எப்போதோ ஒருமுறை மட்டக்களப்பில் முதன்மை பெற்றிருந்த நாதனை வன்னியரின் குலதெய்வம். நேற்று முளைத்த எத்தனையோ கோவில்களைக் கொண்டாடுகிறோம். கோவில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அந்த வீதியில் சாதாரணமாகப் போய் வரும் பலருக்கே அவளை இன்று தெரியவில்லை. சரி தான். தெய்வங்களால் கூட சில நேரங்களில் காலத்தை வெல்ல முடிவதில்லை.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner