ஒல்லாந்தரை ஏமாற்றிய பாதிரியாரின் முக்காடு


மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் படுவான்கரைக் கிராமங்களை இணைத்தபடி ஓடுகிறது B18 வழித்தட எண் கொண்ட வீரமுனை - அம்பிளாந்துறை வீதி. மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும் இடையே அதன் எட்டாம் கிமீ மைல்கல்லுக்கு (மைல்கல்லா கிலோமீட்டர் கல்லா? 🤔) அருகில் நின்று மேற்கே பார்க்கும் போது இந்த மலையைக் காணலாம். இங்கிருந்து மட்டுமல்ல. மேகமூட்டம் இல்லாத நாளொன்றில் கீழைக்கரையில் தெற்கே கோமாரியிலிருந்து வடக்கே மட்டக்களப்பு நகரம் வரை மேற்குப்பக்கம் திரும்பி நின்றால் இதைக் காணலாம் என்கிறார்கள். அம்பாறை மாவட்டம் உகணைக்கு அருகே உள்ள வெலிம்பே ஹெல (Walimbe Hela) என்ற மலை தான் இது.
 வெலிம்பே ஹெல


வெலிம்பே ஹெல இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய மலை.  655 மீ உயரமானது. ஆங்கிலத்தில் Fraiar's Hood என்று பெயர். பொருள் பாதிரியாரின் முக்காடு. தூரத்தில் நின்று பார்க்கும் போது சில குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவுகளின் மதகுருமார் அணியும் தலையணி போல் தென்பட்டதால் இதை வெள்ளையர்கள் அப்படி அழைத்திருக்கிறார்கள். 

பாதிரியாரின் முக்காடு மலை, ஒரு கிட்டிய தோற்றம்
(Credits: lakdasun.lk)

இந்தத் தலையணியே சில கிறிஸ்தவப் பிரிவுகளில் மதகுருவின் முக்காடு

இப்போது அதற்கென்ன என்று கேட்கிறீர்கள் இல்லையா? சொல்கிறேன் பொறுங்கள். இலங்கையின் பெரும்பாலான மலைமுகடுகளுக்கு ஐரோப்பியப் பெயர் ஒன்று இருக்கிறது. மொனராகல்லுக்கு வடகிழக்கே அமைந்திருப்பது 570 மீ உயரமான கோவிந்த ஹெல எனும் மலை. மகாவம்சத்தில் கோவிந்தஷிலா என்று குறிப்பிடப்பட்ட இம்மலையை கீழைக்கரைத் தமிழர்கள் கழிகாம மலை என்று அழைத்தார்கள். அதன் ஆங்கிலப்பெயர் வெஸ்ட்மினிஸ்டர் அபே (Westminister Abbey). இலண்டன் மாநகரிலுள்ள பெருந்தேவாலயம் ஒன்றின் பெயர் அது.

கழிகாமமலை -  Westminister Abbey

கழிகாம மலைக்கு கிழக்கே அமைந்திருப்பது கொந்துருஹெல என்கின்ற 348 மீ உயரமான மலை. அதற்கு ஆங்கிலத்தில் அகனிஸ் பீக் (Aganis Peak) என்று பெயர். பொத்துவில்லுக்கு மேற்கே உள்ள நிலக்கல் ஹெலவின் (194 மீ) ஆங்கிலப்பெயர் சேடல் பீக் (Saddle Peak). குதிரைச் சேண வடிவ மலை. இதே பெயரில் ஒன்று அந்தமான் தீவுகளிலும் இருக்கிறது. இலங்கையின் உயரமான மலைகளில் ஒன்றான நமுனுகுலத்தின் ஆங்கிலப்பெயர் ஜூபிலி ஹில்ஸ் (Jubilee Hills). ஜூபிலி ஹில்ஸ் இங்கிலாந்திலும் உள்ள மலை. அவ்வளவு ஏன், இலங்கையில் யாழ் குடாநாடு தவிர்த்து, தெற்கே பெரும்பாலான பாகங்களில், மேகமூட்டமில்லாத நாளில், இலகுவாகக் காணக்கூடிய சிவனொளிபாதமலையை சீனிக்குவியல் - Sugarloaf என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே பெயரில் ஒரு மலை பிரேசிலில் இருக்கிறது.



ஏன் வெள்ளையர்கள் இப்படி மலைகளுக்கெல்லாம் பெயர் சூட்டிக்கொண்டிருந்தார்கள்? அவற்றில் பெரும்பாலான பெயர்கள் ஏன் தங்கள் சொந்த அல்லது தாங்கள் குடியேறிய இன்னொரு நாட்டின் மலைகளின் பெயராக இருந்தது?

அதற்கு முன் இன்னொரு கேள்வி. வானூர்தி இல்லாத 1500களில் ஐரோப்பியர் எப்படி இலங்கைக்குள் நுழைந்தார்கள்?  திசைகாட்டிகள், வரைபடங்கள், துறைமுக கலங்கரை விளக்கங்கள் மூலம். சரி. மூன்றும் இல்லாத - கிடைக்காத இன்னும் பழைய காலத்தில்? அதிலும் சுற்றிவர வெறும் தண்ணீரே இருக்கும் நடுக்கடலில்?


தரைத்தோற்றங்கள்! மலைகள், சமநிலங்கள், கழிமுகங்கள், முனைகள், குடாக்கள். கரையோரத்தில் இவற்றைப் பார்த்துத் தான் கடற்பயணிகள் கடலில் தங்கள் அமைவிடம் சரியா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். உலகின் மிகப்பழைய துறைமுகங்கள், நதிகளின் கழிமுகங்களிலேயே அமைந்திருந்தது ஆழம் முதலிய அனுகூலங்களைக் கண்டுகொண்டதால் மட்டுமல்ல; ஆற்றின் கழிமுகங்களை கடலிலிருந்தே இலகுவாக இனங்காணலாம் என்பதாலும் தான். நம் நாட்டின் இயற்கைத் துறைமுகம் திருக்கோணமலை வளர்ச்சி கண்டதும் அதன் அருகில் ஓங்கி நின்ற கோணமாமலை எனும் இடக்குறியால் (Landmark) தான்.

பழைய கடலோடிக் குறிப்புகளில் இப்படி மலைகளை அடையாளமாக வைத்து அவர்களது சேருமிடங்களுக்கு வழிகாட்டிக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை, பெரும்பாலான பிரித்தானியக் குறிப்புகளில் வரைபடங்களின் துணையுடன் இந்த மலைகளையும் தாங்கள் சென்று சேரும் இடங்களையும் கண்டறிவது எப்படி என்பதை அகலாங்கு நெட்டாங்கு குறிப்புகளுடன் பதிவு செய்திருக்கிறார்கள். 


இந்த மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு வரலாற்றுச் செய்தி இடச்சுக் குறிப்புகளில் கிடைக்கிறது. ஒல்லாந்தர்கள் முதலில் இலங்கைக்கு வந்தது மட்டக்களப்புக்கு என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி வந்த ஒல்லாந்தர்கள் முதலில் மட்டக்களப்பென்று நினைத்து தவறாக வேறொரு இடத்துக்குத்தான் சென்றார்கள். திருக்கோவில் முருகன் ஆலயம்! அதற்குக் காரணம் இந்த மலைகள் ஆடிய ஆள்மாறாட்டம் தான்.


பட்டேவியாவில் (இந்தோனேசிய நகரொன்று) சோழமண்டல மற்றும் விஜயநகர வணிகர்களை 1600ஆமாண்டு சந்திக்கிறார்கள் ஒல்லாந்து அதிகாரிகள் சிலர். இலங்கைத்தீவில் கறுவா கிடைக்கிறது, ஆனால் அத்தீவைச் சுற்றிவர போர்த்துக்கல் பிடித்துவிட்டது. கிழக்குக்கரையில் மட்டக்களப்பு ஊடாக மட்டுமே இலங்கை மன்னனைத் தொடர்பு கொள்ளமுடியும் என்றும் அறிந்து கொள்கிறார்கள் அவர்கள்.

1602ஆமாண்டு கீழைக்கரைக்கு வரும் ஒல்லாந்தர்கள் மட்டக்களப்பு என்று தவறாக நினைத்து தென்னந்தோப்புக்கு மத்தியில் நின்ற திருக்கோவில் முருகன் ஆலயம் அருகே கப்பலை விடுகிறார்கள். அங்கிருந்த மக்கள் மட்டக்களப்பு இன்னும் வடக்கே இருப்பதைச் சொல்லி ஒரு ஆளையும் துணையாக அனுப்புகிறார்கள். அவர்களுக்கு அன்பளிப்பாக சில கத்திகளை வழங்கிவிட்டு தாங்கள் மட்டக்களப்பு வந்து சேர்ந்ததை ஒல்லாந்தர்கள் எழுதியிருக்கிறார்கள். 


அவர்கள் மட்டக்களப்பு என்று சொல்வது இன்றைய சம்மாந்துறை நகர் என்பதும், அவர்கள் எதிர்பார்த்து வந்த கழிமுக முகத்துவாரம் காரைதீவின் கரைச்சைக் களப்பு என்பதும் இங்கு மேலதிகமாக உங்களுக்கு நினைவூட்டவேண்டிய விடயங்கள். ஆனால் முக்கியமாகச் சொல்லவேண்டியது என்ன தெரியுமா? திருக்கோவிலில் உள்ளூர் மக்களைச் சந்தித்த ஒல்லாந்தர்கள் முதலில்  கேட்கும் கேள்வி "கெபல்லோ டி ப்ரேட் (Capello De Frade) மலையைக் காட்டுங்கள்" என்பது தான். அவர்களும் அப்படி ஒரு மலையைக் காட்டுகிறார்கள். அது ப்ரையர்ஸ் ஹூட் என்பதன் போர்த்துக்கேய  வடிவம். ஆம் வெலிம்பே ஹெல மலையைத் தான் காட்டும் படி கேட்கிறார்கள். அது ஏன்?


கடலோடிகளுக்கு நிலக்குறிகளைக் காட்டும் அதே தரைத்தோற்ற அம்சங்கள் தான். மட்டக்களப்புக்கு முதன்முறையாக வந்த ஒல்லாந்தருக்கு அறிந்திருந்தது இரண்டே இரண்டு விடயங்கள். அங்கு ஒரு கழிமுகம் ஒன்று இருக்கிறது என்பதும், பாதிரியாரின் முக்காடு போன்ற மலை ஒன்று மட்டக்களப்புக்கு மேற்கே தென்படும் என்பதும் தான். அந்த இரண்டையும் அடையாளம் வைத்துத் தான் இங்கு வந்திருக்கிறார்கள் ஒல்லாந்தர்கள் என்பது அவர்களது விவரணையிலிருந்து தெரிகிறது. (சம்மாந்துறைக்கு அருகே கடலில் இருந்த கழிமுகம், காரைதீவின் கரைச்சைக் களப்பு முகத்துவாரம். அது சொரட்ஜன் கொண்டாவே என்ற பெயரில் பின்பு ஒல்லாந்தரின் கிழக்குக்கோட்டையாக இருந்தது. திருக்கோவிலுக்கு அவர்கள் தவறாக கப்பலை விடுவதற்கு, அதன் வடக்கே இருக்கும் பெரியகளப்பு முகத்துவாரமும் காரணமாக இருந்திருக்கவேண்டும்.)


பனிமூட்டமில்லாத நாளில் திருக்கோவிலில் வெலிம்பே ஹெல தென்படும். என்றாலும் கடலில் நின்று பார்த்த போது, ஒல்லாந்தர்களை ஏமாற்றிய சூத்திரதாரி இன்னொருவர். திருக்கோவிலுக்கு மேற்கே தெரிவது வடினாகல் மலை. கிட்டத்தட்ட வெலிம்பே எல்லையின் உயரமும் வடிவமும் கொண்ட இதன் ஆங்கிலப்பெயர் ஃபோல்ஸ்ஹூட் (False Hood). ஒல்லாந்தருக்குப் பிறகு வந்த பிரித்தானியர்கள் வடினாகல்லைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் தெரியுமா?

"பிரையர்ஸ் ஹூட்டுக்குத் தெற்கே, ஆனால் வெஸ்ட்மினிஸ்டர் அபேக்கு வடக்கே ஒரு மலை இருக்கிறது. அதற்குப் பெயர் ஃபோல்ஸ் ஹூட். தூரத்தில் நின்று பார்க்கும் போது பொய்யாக பிரையர்ஸ் ஹூட் போல தோற்றமளிப்பதால் அதற்கு ஃபோல்ஸ் ஹூட் என்று பெயர். இதைப் பார்த்து தவறாக பிரையர்ஸ் ஹூட் என்று எண்ணி விடக்கூடாது."

False Hood - வடினாகலை, மேற்குப்புறமிருந்து பார்க்கும் போது போலி முக்காடு.

ஆம். இவர் தான் ஒல்லாந்தரை தடுமாறச் செய்த சூத்திரதாரிகளில் முதன்மையானவர். போலி பாதிரியாரின் முக்காடு - வடினாகலை.  ஃபோல்ஸ் ஹூட்டால் முதலாவதாக ஏமாற்றப்பட்டவர்கள் ஒல்லாந்தர்கள் தான். போலி பாதிரியாரின் முக்காடான ஃபோல்ஸ் ஹூட் அமைந்திருப்பது திருக்கோவிலுக்கு மேற்கில். உண்மையான பாதிரியாரின் முக்காடு பிரையர்ஸ் ஹூட் அமைந்திருப்பது சம்மாந்துறைக்கு மேற்கில். ஃபோல்ஸ் ஹூட்டையும் பெரிய களப்பு முகத்துவாரத்தையும் பார்த்து ஏமாந்து தான் அன்றைய மட்டக்களப்பு என்று நினைத்து திருக்கோவில் வந்து சேர்ந்தார்கள் ஒல்லாந்தர்கள்.


மலைகள், ஆறுகள், இயற்கையின் ஒவ்வொரு கோட்டோவியங்களும் எத்தனை முக்கியமானவை? இன்று நாம் மலைகளைப் பார்ப்பதில்லை.  விண்மீன்களை இரசிப்பதில்லை. சூழல் மீது அக்கறை என்பதே இல்லை. இந்த சுற்றாடல் அறிவு கிஞ்சித்தும் இல்லாமல்,  வேலை, படிப்பு, உறக்கம் என்று இயந்திரமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.நம் முன்னோர் அனுபவித்த  எத்தனையைத் தான் உண்மையில் இழந்து கொண்டிருக்கிறோம்?

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner