தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, இந்தக் கதையைக் கேளுங்கள். யாரும் அறியாமல் மறந்துவிட்ட கதை இது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தத் தீவில் புலவரெல்லாம் பாடி, இன்று எவர் செவியிலோ நாவிலோ எஞ்சியிருக்காத அரிய பாடல் இது. அன்னையரின் பாடல். ஏழு அன்னையரின் பாடல். இதைக் கேட்பதால் உங்கள் ஏழு பிறவியும் நலன் பெறும்.
அன்னையரால் உலகம் ஆளப்பட்ட பழங்காலத்தில் இது நடந்தது. பஃறுளி ஆறு பாயும் பன்மலை அடுக்கத்து உச்சியில் பேரன்னை ஒருத்தியால் ஆளப்பட்ட குமரி நாடு இருந்தது. அவள் ஆட்சியில் மண் செழித்தது. மாதர் சிறந்தனர். மழலைகள் திகழ்ந்தன. ஆனால் பகலவனையும் பால்நிலவையும் கொண்டு அவர்கள் அளந்த காலத்தில் அணுவளவு தவறு இருந்தது.
பேரன்னை மேற்குக் கடல் தாண்டி வந்த வணிகர்களிடமிருந்து திருத்திய வான் கணிப்பை தெரிந்து கொண்டாள். அவர்கள் விண்மீன்களைக் கொண்டு காலம் கணித்தனர். அவள் உருட்டிய சோழிகளில் எழுந்து எதிர்காலத்தை சொல்லி அச்சமூட்டின கோள்கள். கிழக்கே நாகர்கள் வாழும் பெரும் தீவில் அவளது சந்ததியர் எஞ்சவேண்டும் என்று கூறின நாள்கள்.
பேரன்னை தன் நாட்டின் ஆறு குலங்களை ஆளும் ஆறு அன்னையருக்கு செய்தியைச் சொன்னாள். பேரன்னையின் ஆணையின் படி, ஆறு வள்ளங்களில் ஆறு குடியினர் கிழக்கே புறப்பட்டனர். பேரன்னை கணித்தபடி, ஆறு வான் நட்சத்திரங்களில் பிறந்த இளங்கன்னியரே அந்த ஆறு வள்ளங்களைத் தலைமை தாங்கிச் சென்றனர். அனுராதை, உரோகிணி, அசுவினி, உத்தரை, மிருகசீரிடை, சுவாதி என்பது அவர்கள் பெயர். ஏழாவது ஒருத்தி வானிலிருந்து இறங்கி வருவாள் என்றும் அவள் அரசமரத்தை குலச் சின்னமாகவும் சுளகைக் கொடியாகவும் கொண்டிருப்பாள் என்றும், அவளே பின்னாளில் நாகநாட்டின் முதல்வி ஆவாள் என்றும் பேரன்னை கணித்திருந்தாள்.
பஃறுளி ஆற்றங்கரையில் வாழ்ந்த குமரி நாகர் குலத்தில் உதித்த இருவர் அவர்களுக்கு வழிகாட்டியாக வந்தனர். ஆறு வள்ளங்களுக்கு முன்னே சென்ற குமரிநாகன் கேதன், தம் மூத்தோர் சொன்ன கடல் வழியை விண்மீன்களைக் கொண்டு உறுதி செய்து, நாகநாட்டின் மேற்குக் கரையை அடையாளம் காட்டினான். அங்கு மூன்று குடியினர் இறங்கிக் கொண்டனர். செம்பு நிறத்தில் அங்கு மண் இருப்பதைக் கண்டு வியந்து அந்த இடத்தை "தாமிரவண்ணம்" என்று அழைத்தார்கள். அங்கிருந்து தள்ளி பால் நிறத்தில் ஓடிய நதியை "பாலாவி" என்றனர்.
ஆறு வள்ளங்களுக்குப் பின்னே சென்ற குமரி நாகனான கோணன், நாகர்களின் மூத்தோரான அசுரர்கள் வாழும், நாகத்தீவின் கிழக்குக் கரைக்கு, ஏனைய மூன்று குடியினரை அழைத்துச் சென்றான். அந்த இடம் மாட்டின் காது போன்று வளைவாக இருந்ததால் அது கோகர்ணம் எனப்பட்டது. அங்கு கடலில் கலந்த நதி அசுரரின் மூதாதை மாவலியின் பெயரால் அழைக்கப்பட்டிருந்தது.
குமரியின் குடிகள் கோகர்ணத்தில் இறங்கிய போது, பத்து சகோதரர்களுக்குப் பிறந்த "இராவண்ணர்" எனும் அசுரக்குடியினர் அங்கிருந்த மலைச்சாரலில் வாழ்ந்து வந்தனர். பத்து சகோதரர்களுக்கு பிறந்ததால், அவர்களுக்கு பத்தர்கள் என்றும் பதர்கள் என்றும் பெயர் இருந்தது.
பத்தர்களில் மூத்த சகோதரனுக்குப் பிறந்த குலத்தின் தலைவன் தசைமுகன் குமரியின் மக்களை தன் நாட்டில் குடியமர அனுமதிக்கவில்லை. ஆனால் மாயங்கள் அறிந்த குமரிநாகன் கோணன் கால் பெருவிரலால் எற்றி தசைமுகனைக் கொன்றான். தசைமுகனின் பேருடல் அங்கிருந்த மலையொன்றின் அடிவாரத்தில் தாழியில் புதைக்கப்பட்டது. அங்கு ஏனைய ஒன்பது சகோதரர்களின் வழிவந்த குலத்தாரின் ஒன்பது தலைவர்களும் அமர்ந்து மூன்று நாள் யாழ் இசைத்து துக்கம் கொண்டாடினார்கள். அவர்களது குலவழக்கப்படி இராவண்ணர் தங்கள் மூத்த தலைவனாக தசைமுகனை வென்ற கோணனையே ஏற்றுக்கொண்டனர். குமரிக்குடிகளால் அம்மலை அன்றிலிருந்து கோணமலை என்று அறியப்பட்டது.
பத்தர்களில் மூத்த சகோதரனுக்குப் பிறந்த குலத்தின் தலைவன் தசைமுகன் குமரியின் மக்களை தன் நாட்டில் குடியமர அனுமதிக்கவில்லை. ஆனால் மாயங்கள் அறிந்த குமரிநாகன் கோணன் கால் பெருவிரலால் எற்றி தசைமுகனைக் கொன்றான். தசைமுகனின் பேருடல் அங்கிருந்த மலையொன்றின் அடிவாரத்தில் தாழியில் புதைக்கப்பட்டது. அங்கு ஏனைய ஒன்பது சகோதரர்களின் வழிவந்த குலத்தாரின் ஒன்பது தலைவர்களும் அமர்ந்து மூன்று நாள் யாழ் இசைத்து துக்கம் கொண்டாடினார்கள். அவர்களது குலவழக்கப்படி இராவண்ணர் தங்கள் மூத்த தலைவனாக தசைமுகனை வென்ற கோணனையே ஏற்றுக்கொண்டனர். குமரிக்குடிகளால் அம்மலை அன்றிலிருந்து கோணமலை என்று அறியப்பட்டது.
நட்சத்திரங்கள் சொல்வதன் படி நடக்கவேண்டும். இறங்கிய ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு குலத்தினரை குடிபதிய விடுத்து ஏனைய குடிகள் நாகத்தீவின் உள்ளே நுழைய வேண்டும் என்பது பேரன்னையின் ஆணையாக இருந்தது. முடப்பனைக் குலத்தில் பிறந்த தேள் கொடியைக் கொண்ட மூத்தவள் அனுராதையும், குதிரைக் குலத்தில் பிறந்த யாழ் கொடியைக் கொண்ட மூன்றாமவள் அசுவினியும் பாலாவியின் கரை வழியே உள்ளே நுழைந்தனர்.
பாம்பைக் கொடியாகக் கொண்ட சூரியக் குலத்து உத்தரை தன் குடியினரை தாமிரவண்ணத்திலேயே நிறுத்திக் கொண்டாள். அவர்களை அங்கிருந்த நாகர் வரவேற்று ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பதினோராம் மாதத்தின் அமாவாசை நாளில் நாகத்தீவு நாகர்கள் பாலாவியில் நீராடி தங்கள் இறைவன் மணிநாகனுக்கு நோன்பு நோற்பது வழக்கமாக இருந்தது. அதைத் தூய இருளில் நட்சத்திரங்களை வணங்கும் மகாதீர்த்த விழாவாக உத்தரை மாற்றியமைத்தாள். அதனால் அவ்விடம் மகாதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது.
பாம்பைக் கொடியாகக் கொண்ட சூரியக் குலத்து உத்தரை தன் குடியினரை தாமிரவண்ணத்திலேயே நிறுத்திக் கொண்டாள். அவர்களை அங்கிருந்த நாகர் வரவேற்று ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பதினோராம் மாதத்தின் அமாவாசை நாளில் நாகத்தீவு நாகர்கள் பாலாவியில் நீராடி தங்கள் இறைவன் மணிநாகனுக்கு நோன்பு நோற்பது வழக்கமாக இருந்தது. அதைத் தூய இருளில் நட்சத்திரங்களை வணங்கும் மகாதீர்த்த விழாவாக உத்தரை மாற்றியமைத்தாள். அதனால் அவ்விடம் மகாதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது.
கீழைக் கரையின் கோகர்ணத்தில், இராவண்ணர்கள் கண்டடைந்த வெந்நீரூற்றுக்களின் அருகே சந்திரக் குலத்தில் பிறந்த கன்னி மிருகசீரிடை குடிபதிந்தாள். இராவண்ணரை வென்ற அடையாளமாக அவளது மூன்று மீன் கொடி கோண மலையில் ஏற்றப்பட்டது. எனவே அதற்குத் திரிகோணம் என்றும் மச்சமலை என்றும் பெயர் உண்டானது. அவளிடம் விடைபெற்று, சக்கரத்தைக் குலச்சின்னமாகவும், உருளையைக் கொடியாகவும் கொண்ட உரோகிணியும், விளக்குக் குலத்தில் நுகத்தடிக் கொடியைக் கொண்ட சுவாதியும் மாவலிக் கரை வழியே உள்ளே நுழைந்தனர்.
நான்கு மாதங்களின் பின், உள்நுழைந்த நான்கு குலத்தினரும், பாலாவியாற்றின் கரையின் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர். விண்மீன்களைக் கண்டு பேரன்னை விடுத்த ஆணைப்படி மூத்தவள் அனுராதை அங்கேயே குடிபதிந்தாள். தொடர்ந்து விண்மீன்கள் சொன்னபடி, மூன்றாமவள் அச்சுவினி வடக்கேயும் உரோகிணியும் சுவாதியும் தெற்கேயும் சென்றனர். அவர்களெல்லோரும் உள்ளூர் நாகர்களுடன் கலந்து குமரிநாட்டுக் குருதியை மண்ணில் நீடிக்கச் செய்து விட்டிருந்தனர்.
தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, கேளுங்கள். அனுராதையின் பரம்பரையில் பின்பு அங்கு அனுராதைபுரம் என்றோர் பெருநகரம் உண்டானது. ஒரு கடற்கோளில் குமரி நாடு அழிந்தபிறகும் இரண்டாயிரம் ஆண்டுகள் அவள் நகரம் பலரும் புகழ செழிப்போடு மிளிர்ந்தது.
வடக்கே மணிபல்லவம் எனும் தீவில் குடியேறி வாழ்ந்த குதிரைக் குலத்து அச்சுவினி, தன் இறுதிக்காலத்தில் "இவை அனைத்தும் மாறும். மாறியதை மாற்ற மீண்டும் பிறப்பேன்" என்று வஞ்சினமுரைத்து இறந்தாள். அவளுக்கு, குதிரை முகத்துடனான தோற்றத்தில் சிலை வடித்து, தம்பலை என்ற இடத்தில் பள்ளிப்படை அமைத்தனர். அச்சுவினியின் சந்ததியில் தோன்றிய யாழ்க்கொடியினர் வாழ்ந்த இடம் பின்பு சிங்கை என்று அறியப்பட்டது.
தெற்கே நாகத்தீவின் தென்முனையில் உரோகிணியின் வம்சத்தார் அமைத்த தேசம் உரோகண நாடு என்றானது. உரோகிணி வயிற்றில் பிறந்த கந்தன், குமரி நாட்டு வழக்கப்படி அவள் தமையன் நீலத்தேவனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தான். ஒருமுறை வேட்டைக்குச் சென்ற போது, பத்தர்களில் கடைசிச் சகோதரன் வம்சத்தில் வந்த கதிரர் எனும் குலத்தாரின் நாட்டு எல்லையைக் கடந்த கந்தன் பின்பு திரும்பி வரவில்லை. கதிரர் குலப் பெண்ணொருத்தியிடம் மயங்கி கந்தன் கதிரை நாட்டில் வாழ்ந்து வருவதாக நீலத்தேவனுக்குச் செய்தி வந்தது. தான் வளர்த்த மருகன், குலமரபைக் காக்காத பழி தீர்க்க, நீலத்தேவன், உரோகிணியின் நாட்டுக்குள் நுழையாமல் கடலோரத்திலேயே நோன்பிருந்து மறைந்தான். அங்கு குலச்சின்னமான சக்கரத்தை நிறுவி அவனைத் தம் தெய்வமாகக் கொண்டனர் உரோகிணி நாட்டினர். தேவன் உறைந்த அவ்விடம் தேவனுறை என்று பின்னாளில் அறியப்பட்டது.
ஆறாமவள் சுவாதி தென்கிழக்கே சென்றாள். அவள் சந்ததி செழித்த ஊர் தெற்குவாவி மண்டலம் என்று அறியப்பட்டது. அவளது பரம்பரையில் பிறந்த "உதியன்" என்பவனது காலத்தில் தான், குடியைக் காக்கும் பொறுப்பு பெண்களிடமிருந்து ஆண்களுக்கு கைமாறியது. உதியனுக்கு பிறகு தந்தை வழியில் கைமாறப்பட்ட ஆட்சி உரிமையைப் பெற்ற சுவாதியின் வம்சத்தவர்கள் "உத்தியாக்கள்" என்று அழைக்கப்பட்டனர்.
தெற்குவாவியின் மக்கள் உதியனை சுவாதியின் மைந்தர் என்ற பொருளில் 'குமாரர்' என்று அழைத்தார்கள். குமாரரின் மூத்த மகன் நாதன் காலத்திலே தான் நீர்நிலைகளுக்கு அணைக்கட்டு கட்டி நீர் தேக்கி வேளாண்மை செய்யும் நடைமுறையை மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். அவ்வாறு தெற்குவாவியில் நாதன் அமைத்த முதல் அணைக்கு நாதனணை என்று பெயர்.
தெற்குவாவியின் மக்கள் உதியனை சுவாதியின் மைந்தர் என்ற பொருளில் 'குமாரர்' என்று அழைத்தார்கள். குமாரரின் மூத்த மகன் நாதன் காலத்திலே தான் நீர்நிலைகளுக்கு அணைக்கட்டு கட்டி நீர் தேக்கி வேளாண்மை செய்யும் நடைமுறையை மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். அவ்வாறு தெற்குவாவியில் நாதன் அமைத்த முதல் அணைக்கு நாதனணை என்று பெயர்.
பேரன்னை கணித்தபடி, நெடுங்காலத்துக்கு பிறகு நாகத்தீவின் வேறெங்கோ ஏழாமவள் வந்திறங்கினாள். அரசு மரத்தைக் குலச்சின்னமாகவும், முறத்தைக் கொடியாகவும் கொண்ட அவள் பெயர் விசாகை. பேரன்னை சொல்லியிருந்த படி வந்திருப்பது அவள் தான் என்பதை அவள் கையிலும் காலிலும் அணிந்திருந்த சிலம்புகளைக் கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டனர். பத்தர்களே அவளை முதலில் அடையாளம் கண்டு கொண்டதால் விசாகையைப் பத்தினி என்றும் அழைத்தார்கள். நாகத்தீவின் நடுவிலிருந்த சமனொளி மலையில் குடியிருந்த அவள், வானத்திலிருந்தே இறங்கியிருக்க வேண்டும் என்று எல்லோரும் நம்பினர். அங்கு கல்லில் பதிந்திருந்த பாதங்கள் அவளுடையவை என்றும் மணிநாக தெய்வத்துடையவை என்றும் கதைகள் உருவாகி வழிபாட்டுக்கு உரியவை ஆயின.
விசாகையால் நாகநாடு முழுவதும் ஆளப்பட்ட போது கோகர்ணத்தில் மாட்டை குலச்சின்னமாகவும் நுகத்தடியைக் கொடியாகவும் கொண்ட பரதர் என்னும் குலத்தார் வந்து இறங்கினர். பரத குலத்தாரை வடமொழியில் ஆரியர் என்றும் தமிழில் ஆயர், ஐயர் என்றும் அழைத்தார்கள். கோகர்ணத்து பத்தர்களின் ஐயர் - மூத்தோர் என்ற பொருளில் அவர்கள் பத்தண்ணமார் என்று அழைக்கப்பட்டார்கள். கால்நடை வளர்த்து ஊரூராகத் திரிந்த ஆய் குலத்து பத்தண்ணமார் பின்னாளில் வதனமார் என்று அழைக்கப்பட்டார்கள்.
ஆயரின் தெய்வம் அவ்வை எனும் அன்னை. தங்கள் மூதன்னையரை அவ்வை என்று அழைக்கும் வழக்கம் ஆயருக்கு இருந்தது. சுவாதிக்கும் அவ்வைக்கும் ஒரே கொடி. வதனமார் தங்கள் அதே கொடி கொண்ட சுவாதியின் நாடு பற்றிக் கேள்வியுற்று அங்கு சென்று தங்கலாயினர். வதனமாரோடு வந்த பாணர்கள் அவ்வையே சுவாதி, சுவாதியின் மறுபிறப்பே விசாகை என்று தெற்குவாவி மண்டலத்தில் பாடிப் பரவினார்கள்.
இறுதிக்காலத்தில் வேங்கை மரத்தடியில் துறவு பூண்டு விண்ணேகிய விசாகையை பத்தினித்தெய்வம் என்று போற்றினர் நாகத்தீவு மக்கள். விசாகையும் அவள் ஆறு சகோதரிகளும் மீண்டும் மீண்டும் பத்தினித்தெய்வங்களாகப் பிறப்பார்கள் என்று நாகத்தீவில் கதைகள் உலாவத்தொடங்கின. அந்தக்கதைகள் சொன்னபடியே நடந்தது. சப்தபத்தினியர் மீண்டும் உதித்தார்கள். ஏழு பத்தினியர் வாழ்க. ஏழு அன்னையர் வாழ்க.
தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, நீங்கள் இனிதே கேட்டது உலகம் மறந்து போன ஏழு அன்னையரின் கதை. தெற்குவாவி நாட்டை தோற்றுவித்த சுவாதியம்மையின் கதை. குமார தெய்வத்தின், உத்தியாக்களின், வதனமாரின், சத்பத்தினியரின் கதை. சுவாதியம்மையை போற்றுங்கள். அவள் வீற்றிருக்கும் நாதனை வெளியைப் பாடுங்கள். நான்கு திக்குகளையும் பாடுங்கள். இந்த நாகத்தீவைப் பாடுங்கள்.
தகவலுக்காக:
புகைப்படங்கள் - நாதனை சுவாதியம்மன் கோவில், வெல்லாவெளி.
புகைப்படங்கள் - நாதனை சுவாதியம்மன் கோவில், வெல்லாவெளி.
நட்சத்திரங்களின் மறுபெயர்கள்
அச்சுவினி - பரிநாள், யாழ்
அனுராதா - அனுசம், முடப்பனை, தேள்
உத்தரம் - அரவம், பரிதிநாள்
உரோகிணி - சகடை, உருளை
மிருகசீரிடம் - மும்மீன், மதிநாள்
சுவாதி - விளக்கு, நுகத்தடி
விசாகம் - முறம்
அனுராதா - அனுசம், முடப்பனை, தேள்
உத்தரம் - அரவம், பரிதிநாள்
உரோகிணி - சகடை, உருளை
மிருகசீரிடம் - மும்மீன், மதிநாள்
சுவாதி - விளக்கு, நுகத்தடி
விசாகம் - முறம்
ஆய் / அய / ஆர்ய / ஐயன் - பிராமிக் கல்வெட்டுக்களில் பதவிப் பெயராகக் காணப்படும் ஒரு பெயர். இதன் பெண்பாற்பெயர் அபி / அவ்வை.
பத்த அல்லது பத: கிழக்கிலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் பெருமளவில் குறிப்பிடப்பட்ட ஒரு இனக்குழு.
பத்து சகோதரர்கள் - கிழக்கு, தென்கிழக்கில் ஏறாவூர் முதல் கதிர்காமம் வரை ஆண்ட அரச வம்சத்தினர். இவர்களை பிராமிக்கல்வெட்டுக்கள் "தச பாதிய" என்கின்றன.
மணிநாகன்: ஈழத்து நாகர்களின் தெய்வமாக சொல்லப்படும் இறைவன். பிராமிக்கல்வெட்டுக்களிலும் குறிப்பு உண்டு.
குமாரர், உத்தியாக்கள், வதனமார்: கீழைக்கரை நாட்டார் தெய்வங்கள்
தொன்மமும் புனைவும் கலந்த உணமைக் கதைபோல இருக்கிறது. வலு சுவராஸ்யமாகவும்
ReplyDeleteஇருக்கிறது. இதன் உள்ளார்த்தம் விளங்க ஓர் புலமைப் பின்னணியும் வேண்டும்