ஒரு பன்றியின் சிலையும் சில அக்கரை மாடுகளும்



கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் தேரோட்டம்  கடந்த மாதம் இடம்பெற்றது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அக்கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழமை தான் என்றாலும், உற்சவத்தில் இதுவரை பங்குபற்றியதில்லை. இவ்வாண்டு எப்படியும் தவிர்ப்பதில்லை என்ற திட்டத்துடன் கடந்த செப்டம்பர் 27 வியாழக்கிழமை கோவிலுக்குப் புறப்பட்டேன்.

கோவிலுக்குள் நுழைந்ததுமே வாசலில் கம்பீரமாக நின்ற இரு தேர்களும் கவனத்தைக் கவர்ந்தன. அந்தத் தேர்களைப் பற்றி, ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பரும் ஆய்வாளருமான திரு.சொ.பிரசாத் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். பழைமைவாய்ந்த அத்தேர்களின் சிற்பங்கள் அறியாமையால் ஆண்டுக்காண்டு இழக்கப்பட்டு வருகின்றன என்பதையும், அந்தச் சிற்பங்களை ஆவணப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கொக்கட்டிச்சோலைத் தேர்களிலுள்ள சிற்பங்கள் பற்றி, ஆலயத்தின் 1998 குடமுழுக்கின் போது வெளியான சிறப்பு மலரான “தேரோட்டத்தில்”  கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலைவாணி கந்தசாமியால் எழுதப்பட்ட அருமையான கட்டுரையையும் முன்பு படித்திருந்தேன்.  எனவே ஆர்வம் தூண்ட தேர்களை நெருங்கி அவதானிக்கத் தொடங்கினேன்.

முதலில் பிள்ளையார் தேரை நெருங்கிப் பார்த்தேன். இப்போது தேரிலுள்ள வேலைப்பாடுகள் பல எளிமையானவை, கலை நுணுக்கங்கள் குறைவானவை.  தேரின் பழைய சிற்பங்களின் கதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.  குடமுழுக்கு மலரில் வெளியான கட்டுரைக்கும் தேரிலுள்ள சிற்பங்களுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சித்திரத்தேர் என்று அழைக்கப்படும் பெரிய தேரை நெருங்கினேன். கைபேசி வெளிச்சத்தில் கண்ட முதலாவது சிற்பமே அதிர்ச்சியை ஊட்டியது. சைவநெறியில் மிக அரிதாகக் கூறப்படும் சிவ வடிவம் அது. சிவனின் வராக அவதாரம்!
கொக்கட்டிச்சோலைத் தேர் சிவ வராகர்!

பாடசாலையில் சைவநெறி படித்த எல்லாருக்குமே "சிவபெருமான் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்த கதை" தெரியும். வேடன் தாய்ப்பன்றியைக் கொன்றுவிட, அதன் குட்டிகள் பசியில் அழுவதைக் கண்டு இரங்கி ஈசன் தாய்ப்பன்றி உருவில் வந்து பால்கொடுக்கின்றான்.  சிவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றாகப் பதிவான கதை இது.  மணிவாசகரும் இச்சம்பவத்தை "ஏனக்குருளைக்கருளினை போற்றி" (ஏனம் + குருளை =  பன்றி +குட்டி) என்று போற்றித்திருவகவலில் பாடியிருக்கிறார். இந்தக்கதை, சைவமரபில் இறைவன் தாயுமானவன் என்பதையும், அவன் அளப்பருங்கருணையையும் சுட்டிக்காட்டச் சொல்லப்படும் இரண்டு கதைகளில் ஒன்று.  (மற்றையது, ஏழைக் கர்ப்பிணி ஒருத்திக்கு ஈசனே அவளது தாயின் வடிவில் வந்து பிரசவம் பார்த்த கதை). 


திருப்பரங்குன்றத்து சிவவராகர்.
 
சிவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றாகச் சொல்லப்படும் இக்கதை, மிக அரிதாகவே சிவாலயங்களில் இடம் பிடித்திருக்கிறது. பாண்டிய நாட்டு மதுரையிலும் திருப்பரங்குன்றத்திலும் உள்ள "ஏனக்குருளைக்கருளி" சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அறியாமையால் இவை தற்போது ‘வராகி அம்மன்' என்று பக்தர்களால் வழிபடப்படுகின்றன. இந்த வடிவில், திருமாலின் வராக அவதாரம் போல,  மாந்தவுருவகப் பன்றியாக (anthropomorphic) ஈசன் சித்தரிக்கப்படுவதே சிறப்பு. கொக்கட்டிச்சோலையிலுள்ள இந்த வடிவமும் பன்றி முகமும் மனித உடலும் கொண்டிருந்தது. நான்கு கரங்கள். முன்னிரு கரங்களும் பன்றிக்குட்டிகளை அணைத்துப் பாலூட்ட, பின்னிரு கைகளும் மானும் மழுவும் தாங்கியிருந்தன. இந்த வகையிலுள்ள அரிதான சிற்பம் இலங்கையில் வேறெங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை.


இருளில் சரிவரத் தெரியாவிட்டாலும் தேரைச் சுற்றிவந்த போது, திருமாலின் தசாவதாரச் சிற்பங்கள்,  முப்புரம் எரித்தான், ஆனையுரி போர்த்தான், மாதொருபாகன், வீரபத்திரன், முதலான சிவனின்  சிற்பங்கள். தேவியின் பல வடிவங்கள் தென்பட்டன.  எல்லாமே இணையத்தில் கண்டு வியந்த தமிழகத்தின் பல அரிய சிற்பங்களை ஒத்தவை. 

தான்தோன்றீச்சரத்தின் தேர்கள் மிகப்பழையவை. குறைந்தது முந்நூறு நானூறு ஆண்டுகள் பழைமையானவையாக இருக்கவேண்டும். “சிலோன் கசெற்றியர்” எனும் புகழ்பெற்ற நூலை 1834இல் எழுதிய சைமன் காசிச்செட்டி,  “கொக்கட்டிச்சோலை ஸ்கந்தன் கோவில்” என்று குறிப்பிட்டு அந்நூலில் தான்தோன்றீச்சரம் பற்றி எழுதியுள்ளார். அக்குறிப்பில் இங்கு நிகழும் தேரோட்டம் பற்றிய விவரணமும் வருகின்றது. "புல்லுண்ட கல் நந்தி" கதை மூலம், தான்தோன்றீச்சரம் போர்த்துக்கேயரால் இடிக்கப்படவில்லை என்பது வாய்மொழியில் பதியப்பட்டுள்ளதால் அத்தேர்கள் மேலும் பழைமையானவையாகவும் இருக்கலாம். அங்கு முன்பு மூன்று தேர்கள் இருந்தனவென்றும், ஒன்று தானாகவே ஓடி மட்டக்களப்பு வாவியில் வீழ்ந்து மறைந்தது என்றும் சொல்லி, கோவிலின் அருகே வாவியில் இருக்கும் "தேர் தாண்ட பள்ளம்" எனும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார்கள்.  

கிழக்கில் தனது உற்சவ காலம் “தேரோட்டம்” என்று அறியப்படும் பெருமையைப் படைத்தது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஒன்றே. ஆனால் அந்தப் பெருமைக்குக் காரணமான இரு தேர்களும் இன்று நம் கண் முன்னே சிதைந்து வருகின்றன. பிள்ளையாரும் முருகனும் பவனி வரும் "பிள்ளையார் தேரில்" இப்போது பெருமளவு பழைய சிற்பங்கள் இல்லை.  சித்திரத் தேரும் அவ்வாறே. கவனிப்பின்மையால் செல்லரித்து உதிர்ந்து கொண்டிருப்பவை அதிகம். 


சிற்பக்கலை மனிதகுலம் கண்டுகொண்ட மகத்தான உன்னதங்களில் ஒன்று. அது தனியே ஒரு சமயத்துக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. அரிதான மரச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ள இத்தேரின் பாகங்கள், சைவம் தாண்டி, தமிழினம் தாண்டி காலமுள்ள வரை காப்பாற்றப்பட வேண்டியவை. அதிலும் கோணேச்சரம், கேதீச்சரம், நல்லூர், தேனவரை நாயனார் கோவில், திருக்கோவில் முதலான கலைப்பொக்கிஷங்களை அந்நியர் ஆக்கிரமிப்பில் இழந்து நிற்கும் நாம், எஞ்சியிருக்கும் இது போன்ற  கலைச்செல்வங்களை நம் அறியாமையாலோ கவனயீனத்தாலோ இழந்துவிடக்கூடாது.


எனக்குத் தெரிந்த பலர், பெருமையாகத் தமிழகத்துக்கு சுற்றுலா சென்று மாமல்லபுரம், தஞ்சை, மதுரை என்று சுற்றிவந்து இன்ஸ்ராகிராமிலும் பேஸ்புக்கிலும்  புகைப்படம் போட்டிருப்பார்கள். என்ன பார்த்தாய் என்று கேட்டால் பதில், "சும்ம கோவிலுகள் தான். அங்க ஒண்டும் இல்ல!". இருப்பது எப்படித் தெரியும்? சிற்பங்களைத் திருடி வெள்ளைக்காரனுக்கு விற்று கோடி கோடியாக உழைக்கிறார்கள் என்று செய்தி வாசிக்கும் போது மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் தானே நாம்?  தமிழகத்தில் கூட அரிதான ஏனக்குருளைக்கருளி சிற்பம், இந்த ஈழமண்ணிலே, நமக்கு மிக அருகிலே ஒரு கோவிலில் இருக்கிறது என்பதும், இலங்கையின் மிகப்பழைய சிற்ப வடிவங்களில் சிலவற்றை நம்மூர்க் கோவிலொன்றின் தேரில் கண்டு மெய்சிலிர்க்க முடியும் என்பதும் தெரியாத நமக்கு, "தெரிந்து என்ன ஆகப்போகிறது?" என்று கேட்கும் நமக்கு, கலைச்செல்வங்களின் பெறுமதி எங்கே புரியப்போகிறது? 

ஆற அமர சிற்பங்களை இரசிக்கும் அளவுக்கு நேரம் இருக்கவில்லை. நடுங்கும் கரங்களால் சிவப்பன்றியைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். “எல்லாரும் வித்தியாசமா பாக்கிறாங்கள், கெதியா வாங்க அத்தான்” என்று முணுமுணுத்தபடியே அருகில் நின்ற மைத்துனனுக்கு கைபேசியில் அழைப்பு. கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த அவனது நண்பனொருவன் "என்னடா, தேர் எண்ட ஒண்ட இப்ப தான் முதமுதலா பாக்கிறேலாக்கும்" என்று கேட்டான். நான் போவோம் என்று கையசைத்தபடியே பெருமூச்சு விட்டபடி கிளம்பினேன். பின்புறம் இரண்டு தேர்களும் என்னை விட்டு வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன.


(அரங்கம் பத்திரிகையின் 2018.10.26 இதழில் வெளியான கட்டுரை)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner