இணைய அடிமையாதல்




இந்தக் கட்டுரையை வாசிக்க முன், இந்தக் கட்டுரையாளனாக ஒரு சுய விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். சைவ சமயம் மற்றும் அதன் வரலாறு பற்றிக் கூறுகின்ற கடந்த ஒக்டோபர் மாதம் வெளியான "அலகிலா ஆடல்" எனும் நூலின் ஆசிரியன் நான். "இருந்திற்றுப் போ, எங்களுக்கென்ன" என்று நீங்கள் கேட்கலாம். ஊகூம். அதில் தான் விடயமே இருக்கிறது.

பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்த ஐந்தாறு மாதங்களின் பின்னர், பகுதி நேர வேலையொன்றை வீட்டிலிருந்து செய்து கொண்டிருந்த காலத்தில் தான் அலகிலா ஆடலை எழுத ஆரம்பித்தேன்.நூற்றுக்கணக்கில் தரவிறக்கி வைத்திருந்த ஆங்கில ஆய்விதழ்களை வாசிப்பது, அவற்றை தமிழில் மொழியாக்குவது, பின்னர் தலைப்புக்கேற்ப வகைப்பிரிப்பது, இறுதியாக மொழியாக்கத்தை கொஞ்சம் மாற்றி, நூலின் ஒழுக்கு சிதையாத விதத்தில் திருத்தி எழுவது என்று அந்த நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.


ஒரு விடயத்தில் ஆர்வம் ஏற்பட்டு விட்டால், அது நம்மை எப்படி முழுமையாக ஆட்கொண்டு விடும் என்பதை நான் உணர்ந்துகொண்ட நாட்கள் அவை. காலையில் ஏழரை, எட்டு மணியளவில் தான் எழுவேன். நான் செய்துகொண்டிருந்த பகுதிநேர வேலைக்கு ஒரு நாளில் இரண்டு மணித்தியாலம் அல்லது குறைவான நேரமே எடுக்கும். எப்படியும் ஒன்று, ஒன்றரை மணிநேரத்தில் அதை செய்து முடித்து விட்டு மடிக்கணினியில் அமர்ந்தால், பெரும்பாலும் மாலை வரை அசைவதில்லை. 


இரண்டு வேளைச் சாப்பாடும் இடையிடையே தேநீரும் அம்மா தயவில் மேசைக்கே வரும். "ஒரே கொம்பியுட்டருக்கு முன்னுக்கு இரிக்காத தம்பி. கண் பழதாப்போயிரும்" என்ற பல்லவியோடே அவர் வந்து சாப்பாட்டை வைத்து விட்டுப் போவதும் நான் ஒற்றைக்கையால் தட்டச்சிக்கொண்டே சாப்பிடுவதும் இயல்பாக நடந்து முடிக்கும். ஒருநாள் மடிக்கணினியைத் திறந்தால் விசைப்பலகை முழுவதும் எறும்புகள். பூந்தி சாப்பிட்டுவிட்டு கை கழுவ மறந்துபோய் அப்படியே தட்டச்சிக்கொண்டு இருந்திருக்கிறேன். 


மாலையில் வழக்கமான நண்பர் கூட்டத்துடன் சிறு குலாவல். அல்லது கடற்கரையில் கொஞ்ச தூரம் நடை. இரண்டையும் அவசர அவசரமாக முடித்து விட்டு மீண்டும் ஓடி வந்து மடிக்கணினி முன் அமர்ந்து விடுவேன். "இருடா எங்க அவசரமா ஓடுறாய்" என்று கேட்பார்கள் நண்பர்கள். என் அவசரம் அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. புத்தகத்தை எழுதி முடிக்க வேண்டுமே!


மாலையில் அமர்ந்தால், இரவு ஒன்பது, பத்து மணி வரை மீண்டும் எழுத்துப்பணி. இரவுச் சாப்பாட்டுக்கு மட்டும் மண்டபத்தில் குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பேன். அந்த இடைவேளையில் இரண்டு வயதாகும் மருமகளுடன் நேரத்தை அளந்து கொஞ்சம் விளையாட்டு. "வீட்ட சும்ம தானே இருக்காய் இவள்ற முகத்த பாத்துக்கொண்டு கொஞ்ச நேரம் கூட தூக்கி விளாடாமல் கொம்பியூட்டர்ட்ட ஓடுறியே" என்று திட்டுவாள் அக்கா. அதைக் காதிலே போட்டுக்கொள்ளாமல் மீண்டும் கணினி முன் அமர்ந்துவிடுவேன்.

இரவு இரண்டு மணி வரை கூட எழுத்து தொடரும். சில வேளை அதிகாலை மூன்று, மூன்றரை மணிக்கு அப்பா அறைக்குள் நுழைந்து போய்த்தூங்கு என்று சொல்லித் திட்டி விட்டுப் போனதும் நடந்திருக்கிறது. அடுத்த வளவில் இருக்கும் அம்மம்மாவும் சித்தியும் "விடிய விடிய அறைக்குள லைற் பத்துது. இவன் படுக்கிறதே இல்ல" என்று வீட்டில் வந்து குற்றப்பத்திரிகை வாசித்து விட்டுச் சென்றதுண்டு. அப்போது அவர்கள் யாருக்குமே நான் ஏன் அப்படி கண் விழித்து கணினி முன் அமர்ந்திருந்தேன் என்பது தெரியாது. 

பல்கலைக்கழகம் போய் துரும்பாய் மெலிந்த உடலை, உட்கார்ந்தபடி பழையபடி மீட்டேன். கண்களின் கீழ் கருவளையம் வந்தது. கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போலத்தான். இருபத்து நான்கு மணிநேரமும் "சைவம், வரலாறு, சைவம், வரலாறு" என்றே மூளை உச்சரித்துக் கொண்டிருந்தது.  

சுமார் மூன்று மாதங்களின் பின், சுகாதார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டமொன்றில் முழுநேர வேலை கிடைத்தது. அப்போது நூல் வேலையும் பெருமளவு நிறைவுபெற்றிருந்தது. இனி மெய்ப்புப் பார்ப்பது, உசாத்துணைகளை படங்களைச் சேர்ப்பது என்பன மட்டுமே எஞ்சியிருந்த வேலை. எனவே பழையபடி மீள ஆரம்பித்திருந்தேன். 

அந்த நூல் பிறகு வெற்றிகரமாக வெளியான நாள், கொழும்பிலும் மட்டக்களப்பிலும் விமரிசையாக இடம்பெற்ற அந்த நூல் வெளியீடு, அதற்குத் தோள் கொடுத்த நண்பர்கள், உறவினர்கள், எல்லோரையும் எல்லாவற்றையும் இப்போதும் ஓய்வு நேரங்களில் எண்ணிப்பார்த்து இறும்பூது எய்துவதுண்டு. ஆனால், அதற்கெனச் செலவழித்த மேற்படி நாட்கள் இன்றும் எனக்கு அச்சமூட்டுகின்றன.

ஒன்றை நேசிப்பதற்கும் ஒன்றுக்கு அடிமையாவதற்கும் மிகச்சிறிய நூலிழை வேறுபாடு தான் இருக்கிறது. அந்த மூன்று மாதங்களும் நான் எழுத்துக்கு அடிமையாகி இருந்தேன். அது இன்பமூட்டுவதாக இருந்தது. மிகப்பெரிய போதையைத் தந்துகொண்டிருந்தது. புதிய புதிய விடயங்களை வாசித்து அறிந்துகொண்ட போது உடல் சிலிர்க்கும். "அப்படியா, இப்படியா" என்று மகிழ்ச்சி வெள்ளம் பெருகியோடும். வரலாற்று மர்மங்களை சிந்தித்த போது மூளையில் மின்னல் வெட்டும். வரலாற்றின் சிண்டு முடிச்சுகளை நானாகவே அவிழ்த்த போது, "ஆஹா, கண்டுபிடித்து விட்டேன்" என்று உள்ளம் குதூகலிக்கும். 

நாளெல்லாம் போதையில் திளைப்பவன் ஒருவனை அழைத்து நாலு சாத்து சாத்தி, "பைத்தியக்காரா, உன்னுடையது என்ன போதை, இதை வாசி, இதை விட இன்ப மயக்கம் தரும் வேறொன்று உள்ளதா இந்த உலகில்? இது தெரியுமா உனக்கு? இதை அறிந்திருக்கிறாயா? ஐயோ, முட்டாள், இந்த சொர்க்கத்தைத் தெரியாமல் இருக்கிறாய் தெரியுமா?" என்று கூவவேண்டும் போல் இருக்கும்.

இப்போதும் அந்த நாட்களை எண்ணும் போது, குலை நடுங்குகிறது. ஆம், அந்த மூன்று மாதங்களின் உழைப்பு வீண் போகவில்லை என்பது உண்மை தான். நூலை இயல்பான வாழ்க்கையில் சாதாரணமாக முடிக்க அதற்குப் பிறகு மேலதிகமாக ஏழெட்டு மாதங்களே எடுத்துக்கொண்டன. "எழுதி முடிக்க ஓராண்டு கூட எடுக்கவில்லையா?" என்று நூலை வாசித்த பலர் கேட்டு வியந்து கொண்டார்கள் தான். ஆனால், அதற்காக நான் கொடுத்த விலை? எத்தனை இரவு - பகல்கள்? எத்தனை முழுநிலவின் அழகுகள்? எத்தனை அதிகாலைகள்? எத்தனை நண்பர்கள்? எத்தனை பொழுதுபோக்குகள்? 

இன்று உளநலன், உளவியல் சுகாதாரம் பற்றிய விவாதங்களில் "அடிமையாதல்" ( ஆங்கிலத்தில் "Addiction") என்பது முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த உலகில் எந்தப் பழக்கத்துக்கும் மனிதன் இலகுவில் அடிமையாகலாம். ஆம், வாசிப்பவனை பூரணமாக்கும் வாசிப்பினால் கூட ஒரு மனிதனை அடிமையாக்க முடியும்!

மது, மாது, போதை, என்று பல விடயங்களுக்கு அடிமையானவர்கள் பற்றி பல இடங்களிலும் நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனால் இப்போது மிக மோசமாக இளைய தலைமுறையினரை மோசமாக்கும் அடிமையாக்கல் பற்றி நாம் யாரும் அலட்டிக்கொள்வதில்லை. அது இணையத்தின் அடிமையாக்கல். 

என் நண்பர்களில் கணினி விளையாட்டுக்கு அடிமையானவர்களை எனக்குத் தெரியும்.  கைபேசி, பேஸ்புக், வட்சப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நம்மில் பலர், சொல்லப்போனால் ஒவ்வொருவருமே அடிமையாகி இருக்கிறோம். 

அதில் தவறேதும் இல்லை. கணினி, இணையம், காணொளி விளையாட்டுக்கள் உருவாக்குகின்ற மெய்நிகர் உலகமானது (Virtual World) நம்மால் கனவுகளில் மட்டுமே உலவ முடிந்த ஒன்று. இன்றைய தொழிநுட்பம், அந்தக் கனவுகளில் உண்மையாகவே உலவி வரும் வாய்ப்பை இலகுவாக்கி இருக்கிறது. நம் கனவு தருகின்ற சுவாரசியமும் மெய்யான உணர்வுகளும் அங்கும் உருவாகின்றன. எனவே அதில் திளைக்கிறோம், மகிழ்கிறோம், வெளியேறியதும் மீண்டும் அது வேண்டுமென்று ஏங்குகிறோம், கிடைத்ததும் குதூகலிக்கிறோம். அது மெல்ல நம்மை ஆட்கொள்கிறது. இறுதியில் அடிமையாக்குகிறது. 

ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை அறிய என்ன வழி? அது நம் அன்றாட இயல்பான வாழ்க்கைக்கு தடையாக இருக்கும். அதன் காரணமாகவே நீங்கள் செய்ய வேண்டிய ஒரு வேலையை காலதாமதமாகச் செய்வீர்கள். பிறருடன் கலந்து மகிழ்வதில் இருந்து விலகி இருப்பீர்கள். அருகில் மனதுக்கு இனியவர்கள் அமர்ந்திருக்கும் போதும், உங்களை அடிமையாக்கிய பழக்கத்தைச் சுற்றியே மூளை சிந்தித்துக்கொண்டிருக்கும். களைப்பு, அலுப்பு, பொறுமையின்மை முதலிய உணர்வுகள் ஏற்படும் போது, உடனே அதைத் தேடி ஓடுவீர்கள், அல்லது அதை மீண்டும் அடைய ஏங்குவீர்கள். இவற்றில் ஏதாவதொன்று உங்களிடம் இருந்தால், உங்கள் கதை முடிந்தது. ஆம் நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள்.

இன்றைய தலைமுறையினருக்கு உளரீதியான மெய்நிகர் இணைய உலகமும் மிகப்பெரிய அடிமையாக்கல் மூலமாக மாறியிருக்கிறது. அதில் சோகம் என்னவென்றால், தாம் இலத்திரனியல் அடிமைகள் என்பது அவர்களில் யாருக்குமே தெரிவதில்லை. ஒரு ஐந்து நிமிடம் சும்மா இருந்தால், போனை எடுத்து நோண்டாதவர்கள் இங்கு யார் இருக்கிறார்கள்? அவர்கள் எவருக்காவது தாங்கள் அதற்கு மெய்நிகர் அடிமைகள் என்பது தெரியும் என்றா நினைக்கிறீர்கள்?

சரி, இதிலிருந்து எப்படி மீள்வது? நீங்கள் ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறீர்கள் என்பதை விட, அதை ஒப்புக்கொண்டு மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது முக்கியமானது. நான் ஒரு நோயாளி என்பதை ஏற்காத ஒருவன் எப்படி மருந்தெடுத்து குணமடைய முடியும்?

இப்போதெல்லாம் நான் ஒரு வழிமுறையைக் கையாள்வதுண்டு. முகநூலை பெருமளவு குறைத்து விட்டேன். வட்சப்பில் அரட்டைகளில் கொஞ்சம் நேரம் கழிப்பது, ஏதாவது மின்னூல்கள் கிடைத்தால் வாசிப்பது என்று மட்டும் இப்போது கைபேசிக்கான நேரத்தை மட்டுப்படுத்தியிருக்கிறேன். அதைத் தவிர, அருகில் நண்பர்கள் இருந்தால் தவிர, கைபேசியைத் தொடுவதை இயன்றளவு தவிர்ப்பேன். நண்பர்களின் அருகே கைபேசியுடன் இருக்கும் போது எப்படியும் அவர்கள் பொறுமையிழப்பார்கள். "போன வை" என்று அவர்கள் திட்டும் போது உணர்ந்து கொண்டு மீள்வேன். அது ஓரளவுக்கு மெய்நிகர் உலகிலிருந்து வெளியேறுவதற்கு எனக்குக் கைகொடுத்திருக்கிறது. உங்களுக்குரிய மீட்சியை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

ஆம். அது மிகக்கடினம் தான். நான் கைபேசியில் மூழ்கியிருந்த நாளில் "அடிக்ட் ஆகிற்றாய் அடிக்ட் ஆகிற்றாய்" என்னை எப்போதும் திட்டிக்கொண்டிருக்கும் நண்பனொருவன் புதிதாக தனக்கென்று திறன்பேசி ஒன்று வாங்கிய பின்னர், இப்போது என்னை வென்றுவிடும் அளவுக்கு மோசமாக கைபேசியில் மூழ்கி முத்தும் எடுத்து விட்டதை (க்கும்!) கண்டபோது தான் இந்தக் கட்டுரையின் முதல் வரியை எழுதினேன். 

ஆயிரம் தான் சொன்னாலும், தொழிநுட்பம், மெய்நிகர் உலகம், இந்த இணையம் இது எதுவும் இல்லாமல் இந்தக் கணினி யுகத்தில் எதுவும் சாத்தியம் இல்லை தான். தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால், அடிமையாகும் அளவுக்கு அதிலேயே ஊறித்திளைக்க வேண்டாமே? 

ஆங். முடிப்பதற்கு முன் ஒன்றைச் சொல்லவேண்டும். இந்தக் கட்டுரையில் வாசிப்புக்கு அடிமையான என் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது, ஒரு பழக்கம் அதிலேயே திளைக்கும் போது எப்படி நம்மை முழுமையாகத் தன்மயப்படுத்தக்கூடியது என்பதை இங்கு சுட்டிக்காட்டத்தான். அதை அப்படியே தலைகீழாகப் புரிந்துகொள்ளக் கூடாது. வாசிப்புக்கு அடிமையாக இருந்தால், நிச்சயம் சொல்லிக்கொள்ளும் படி பலன் கிடைக்கும் - ஏதோ எனக்கு சிறிய அளவிலாவது கிடைத்த அங்கீகாரம் போல. ஆனால், இணைய அடிமையாதலோ, போதை அடிமையாதலோ நமக்கு எதுவுமே தரப்போவதில்லை. மெல்லக் கொல்லும் விஷம் அது. கெடுதி நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சூழ்ந்திருக்கும் நம் அன்புக்குரியவர்களுக்கும் தான். சும்மாவா சொன்னார்கள், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்று?

(அரங்கம் பத்திரிகையின் 67ஆவது இதழில் வெளியான கட்டுரை)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner