வெல்கம் வேரத் தேவர்

அரசியல், சூழ்நிலைக் காரணங்களால், புத்தபிரான் இன்று தமிழராலும் வெறுக்கப்படுபவராக மாறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர் நம் முப்பாட்டன்மாருக்கு எத்தனை நெருக்கமானவராக இருந்தார் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. அப்படியும் அதில் சிறிது ஐயமிருந்தால், நீங்கள் செல்லவேண்டிய இடம் ஒன்று இலங்கையில் இருக்கிறது. சிங்கள வரலாற்றாசிரியர்களே தமிழ்ப்பௌத்த விகாரை என்று சான்றிதழ் கொடுத்த இடம். திருக்கோணமலையின் வெல்கம் விகாரை.
வெல்கம் வேரத் தேவர்
 கடந்த வாரம் நண்பர்களோடு திருக்கோணமலை சுற்றுலா சென்றபோது அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சரித்திரப்புகழ் வாய்ந்த கன்னியா வெந்நீரூற்றுக்கு வடக்கே பத்து கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது வெல்கம் விகாரை. சோழர் படையெடுப்பின் பின் 'ராஜராஜப்பெரும்பள்ளி'.

அது தெற்கு நோக்கியதாக சதுரமான அமைப்பில் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மையத்தில் சுண்ணக்கல்லாலான புத்ததேவரின் திருவுருவம் நின்ற நிலையில் காட்சியளிக்க, சுற்றி வந்து வணங்கும் வகையில் கருவறை அமைக்கப்பெற்றிருந்தது. கருவறையின் முன்பு, வலம் இடமாக இரு சிறிய கருவறைகள் ஒன்றை ஒன்று நோக்கிய நிலையில் அமைந்திருக்கின்றன. இந்த இரு அறைகளிலும் கூட புத்தர் படிமங்கள் இருந்திருக்கக்கூடும். 'திரிகாயம்' எனும் மகாயானக் கோட்பாட்டுக்கேற்ப, இப்படி மூன்று புத்தர்களை வழிபடுவது வழக்கமாகும்.
(தமிழ் ஆதாரம் கிடைக்கின்ற வெல்கம் விகாரை, பொலனறுவை தலதாய்ப்பள்ளி உள்ளிட்டவை மகாயான பிரிவுக்கு உரியவை. இன்று சிங்களவரால் கடைப்பிடிக்கப்படுவது தேரவாதம் எனும் மற்றொரு பௌத்தப்பிரிவு.)
பள்ளியின் இடப்புறம் தாதுகோபம் ஒன்றும் வலப்புறம் பிரதிமாகாரம் (புத்த திருவுருவங்கள் வழிபடப்படும் அறை) ஒன்றும் இடிபாடுகளாகக் காணப்படுகின்றன. பள்ளியின் வாயிலில் தீர்த்தக்கேணி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் தள்ளி சிறிய குன்றொன்றில் இடிபாடாக இன்னொரு தாதுகோபம் அமைந்துள்ளது. அதனருகே நின்று பார்த்தால் நிலாவெளிக் கடற்கரையின் அழகான காட்சி தெரியும் என்றார்கள். வழிகாட்டிப்பலகை இல்லாமல் எங்களால் போக முடியவில்லை.
வெல்கம் வேரத் தமிழ்க் கல்வெட்டுக்கள்
அந்தப்பகுதியில் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தீர்களென்றால், வாசலில் சார்த்தி வைக்கப்பட்டுள்ள இரு தமிழ்க் கல்வெட்டுகளை நீங்கள் காணலாம். ஓரளவேனும் வாசிக்கக்கூடியவை தான். "ராஜராஜப்பெரும்பள்ளி", "ராஜேந்த்ர சோழ தேவர்க்கு" என்ற சொற்களை அவற்றில் வாசிக்க முடிந்தபோது ஒருகணம் உடல் சிலிர்த்துத் தான் போனது.
அதில் ஒரு கல்வெட்டு, இராஜேந்திர சோழனின் 15ஆம் ஆட்சியாண்டில் (பொ.பி 1027) பொறிக்கப்பட்டது. "திருமன்னி வளர" என்று தொடங்கும் அவரது மெய்க்க்கீர்த்தியுடன் ஆரம்பமாகும் இக்கல்வெட்டின் முன்பாகம் முழுமையாக வாசிக்கப்பட்டுள்ள போதும், தற்போது அந்தப் பாகங்களைக் காணமுடியவில்லை. இந்த எஞ்சிய துண்டம், பானாவாசத்துளாகாமம் ஊரைச் சேர்ந்த பாத்தரவிதராமன் என்பவர், வெல்கம் வேரம் அல்லது ராஜராஜப்பெரும்பள்ளியின் புத்தர் புண்ணியத்துக்காக 35 பசுக்களும் 5 எருமைகளும் கொடுத்ததைச் சொல்கிறது.

1……….…
2. (ஸ்ரீ ராஜேந்த்ர சோழ தே
3. வற்கு யாண்டு க௰௫ சாவது)
4. மும்முடி சோழ மண்டல
5. த்து மேலாநங்ங னாட்டு
6. (வீ)ரபரகேசரி வளநாட்டு
7. பனாவாசத்துளாகாமத்து
8. பாத்தரவிதராமந் வெல்கம்
9. வேரமான ராஜராஜ பெரும்
10. பள்ளி புத்தர்க்குப் புண்ணி
11. யத்துக்கு வைத்த பசு
12. ௩௰௫ எருமை ௫.

கோடிடப்பட்டிருப்பது: வெல்கம்
வேரமான ராஜராஜ பெரும்பள்ளி.

க௰௫ = தமிழ் எண் 15
௩௰௫ = தமிழ் எண் 35
௫ = தமிழ் எண் 5


இந்தக் கல்வெட்டின் இன்றைய தமிழிலான வாசகம் வருமாறு: ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரின் 15ஆவது ஆட்சியாண்டில், மும்முடிச் சோழ மண்டலத்து மேலாநங்ங நாட்டு / வீரபரகேசரி வளநாட்டு பிரிவில் உள்ள 'பனாவாசத்துளாகாமம்' கிராமத்தின் 'பாத்தரவிதராமன்' என்பவர், வெல்கம் வேரமான ராஜராஜ பெரும்பள்ளியின் புத்தரின் புண்ணியசேவைக்காக பசு 35உம் எருமை 5உம் கொடுத்தார்.

தலைகீழாக நாட்டப்பட்டுள்ள அடுத்த கல்வெட்டு, ஸ்ரீ பலவன் புதுக்குடியான் ஆதித்தப்பேரரையன் என்பவரால் இராஜராஜப்பெரும்பள்ளிக்கு ஒரு நந்தாவிளக்கும், 84 பசுக்களும் வழங்கப்பட்டதைச் சொல்கிறது. தொடர்ந்து செல்லும் இன்னொரு கல்வெட்டின் படி, இராஜேந்திர சோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் (பொ.பி 1024) கேரளத்து உதறிய (?!) நன்புவனதேவன் என்பவரால் வெல்கவேரத்து தேவருக்கு ஒரு நந்தாவிளக்கும் நான்கு காசும் காணிக்கை கொடுக்கப்பட்டது,

1. ஸ்ரீ பலவன் புதுக்கு
2. டியான் ஆதித்தப்
3. பேரரையன் ஸ்தவ்யா
4. றாமயனா மானாவதிளானா
5. ட்டு வெல்க வேரான இ
6. ராஜராஜ பெரும்பள்ளிக்கு
7. வைத்த னொந்தா வி
8. ளக்கு க பசு ௮௰
9. ௪. | கோப்பரகேசரி
10. பத்மராந ஸ்ரீ ராஜேந்த்ர
11. சோழ தேவர்க்கு யா
12. ண்டு க௰௨ டாவதில் கேர
13. லத்து தரிப நன் புவன
14. (தே)வன் வெல்கவேரத்
15. து தேவர்க்கு வை
16. ச்ச னந்தா விளக்கு
17. க காசு ௪ இப்பள்ளிச்
18. சங்கத்தார் விள
19. க்கெண்ணெயு(ம்)
20. (வை)ப்பதாகவு
21. ம்

பெட்டி: ராஜராஜப்பெரும்பள்ளி
கோடிடப்பட்டது: ஸ்ரீ ராஜேந்த்ர சோழ தேவர்க்கு




கல்வெட்டு 01:
புதுக்குடி ஊரைச் சேர்ந்த 'பலவன் ஆதித்தப் பேரரையன்' என்பவர் 'ஸ்தவ்யாராம மானாவதிளா' நாட்டில் வெல்கவேரம் என்று அழைக்கப்படும் இராஜராஜ பெரும்பள்ளிக்கு ஒரு நந்தா விளக்கும் 84 பசுக்களும் அளித்தார்.

கல்வெட்டு 02:
கோப்பரகேசரி வர்மரான ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரின் 12ஆவது ஆட்சியாண்டில் 'கேரலத்து தரிப நன் புவனதேவன்' என்பவர், வெல்கவேரத்திலுள்ள (புத்த) தேவருக்கென்று கொடுத்த நந்தா விளக்கு ஒன்றும் காசு நான்கும். இந்த விகாரையின் சங்கத்தார் (அந்தக்காசுக்கு) விளக்கெண்ணெய் வைக்கவும்.

இராஜராஜப்பெரும்பள்ளியில் இன்னும் மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கிறதாம். நாங்கள் பார்க்கவில்லை. அதில் ஒரு கல்வெட்டு, ராஜேந்திரனின் 25ஆம் ஆட்சியாண்டில் (பொ.பி 1037) ‘பணிமகன்’ என்ற பதவியிலிருந்த ‘காயாங்குடையான் அமுதன் சாத்தன்' நந்தாவிளக்கெரிக்கத் தேவையான மூன்று உழக்கு எண்ணெயைப் பெற்றுக் கொள்வதற்காக, பத்து எருமைகளை வெல்காமப்பள்ளிப் புத்தருக்கு காணிக்கை அளித்ததைச் சொல்கிறது. ஒரு உழக்கு என்பது இன்றைய அளவீட்டில் 336 மிலீ.

நன்கு சிதைந்த இன்னுமிரு கல்வெட்டுகளும் பெறப்பட்டுள்ளன. ஒன்றில் "ஏறாநாடன் கண்டன் யக்கன் இட்ட திருநுந்தாவிளக்கு" என்ற வசனமும், இன்னொன்றில் "அஞ்சாம் பக்கத்துப் பூசம் பெற்ற வியாழக்கிழமை நாளில் இட்ட இருபது சாண் நாலு விரல் நீளமான தாராநிலை விளக்கு" என்ற வசனமும் வாசிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தமிழ். கிரந்தம் கலந்த தனித்தமிழ்!

சோழர்கள் தங்கள் ஆட்சியில் எல்லா இடங்களுக்கும் தங்கள் பெயரையே சூட்டியபோதும், பழைய பெயரையும் மாற்றாது பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். உதாரணமாக பொலனறுவை ஜனநாதபுரம் என்ற சோழப்பெயரை பெற்றபின்னர், அங்குள்ள தமிழ்க்கல்வெட்டுக்கள், அதை "புலநரியான ஜனநாதபுரம்" என்றே அழைக்கின்றன. புலநரி என்பது புலத்திநகரி என்பதன் தமிழ் வடிவம். அது சிங்கள 'பொலன்னரு'வுக்கு நெருக்கமானது. மாந்தை “மாதோட்டமான ராஜராஜபுரம்” என்றும், குருநாகல் நிக்கவரெட்டிக்கு அருகில் உள்ள மாகல “மாகலான விக்கிரமசலாமேகபுரம்” என்றும் தமிழ்க்கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுவதை மேலும் நாம் ஒப்பிடலாம்.
தமிழில் விகாரம் என்பது வேரம் என்று மாறும். சிட்டிவேரம், வேரத்துப்பிட்டி போன்ற தமிழ் ஊர்கள் இன்றும் அமைந்துள்ளன. இன்றைய வெல்கம் விகாரை, சோழராட்சிக்கு முன்பும் தமிழில் வெல்கவேரம், வெல்கம் வேரம் என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டுகள் சொல்கின்றன. கல்வெட்டுக்களில் வருகின்ற பானாவாசத்துளா காமம், மானாவதுளா நாடு என்பன ஒரே இடத்தைக் குறிப்பதாகலாம்.
இன்று இலங்கையின் ஆட்சி நிர்வாகப் பிரிவுகள், மாகாணம், மாவட்டம், பிரதேசம் என்று பிரிக்கப்பட்டுள்ளது போல சோழர் காலத்து ஆட்சி நிர்வாகப் பிரிவுகள், மண்டலம், வளநாடு, நாடு, கூற்றம் என்றவாறு பிரிக்கப்பட்டிருந்தன. இவை ஒரே காலத்தில் வசதிக்கேற்ப வெவ்வேறு பெயர்களை அல்லது வெவ்வேறு எல்லைகளைப் பெற்றுக்கொண்டமை கல்வெட்டுக்களிலிருந்து தெரிகின்றது. "மும்முடிச்சோழமண்டலம்" என்று தனி மண்டலமாக அழைக்கப்பட்ட இலங்கையிலும் பல வளநாடுகள் காணப்பட்டன. வெல்கம் விகாரை அமைந்திருந்த பகுதியானது, மேலாநங்க நாடு, வீரபரகேசரி வளநாடு, மானாவதுளா நாடு, இராஜேந்திரசிங்க வளநாடு, அபயாஸ்ரய வளநாடு போன்ற பல்வேறு நாடு/வளநாடுகளில் அடங்கியிருந்தமை இந்தக் கல்வெட்டுக்களிலிருந்து தெரியவந்திருக்கிறது.

வாசிக்க முடியாதிருந்த கல்வெட்டு

வாசிக்க முடியாமல் அங்கு கிடந்த இன்னொரு கல்வெட்டின் தேய்ந்த எழுத்துக்கள் ஒரேநேரத்தில் சிங்கள எழுத்துக்கள் போலவும் தமிழ் எழுத்துக்கள் போலவும் மாயம் காட்டிக்கொண்டிருந்தன. அதைப் படமெடுத்துக்கொண்டிருந்த போது ஒரு இளைஞர் நெருங்கிவந்தார். நெற்றியிலிருந்த திருநீற்றைப் பார்த்துவிட்டு "தமிழா?" என்று கேட்டார். "படம் எடுக்கிறதெல்லாம் சரி. கவனம். தொல்பொருள் பிரதேசம். அங்க இங்க ஏறவோ நடந்து திரியவோ வேண்டாம். பிரச்சினை காலம் தெரியும் தானே" என்று சிங்களத்தில் சொல்லிய படியே நகர்ந்தார். அப்போது ஒப்பிடுவதற்காக நான் கைபேசியில் திறந்து வைத்து வாசித்துக்கொண்டிருந்த அமுதன் சாத்தன் கல்வெட்டின் "சந்திராதித்தவல் நின்றெரிய வைத்த திருநொந்தாவிளக்கு" என்ற வாசகத்தில் கண்கள் குத்திட்டு நின்றன. சூரியன் சந்திரன் உள்ள வரை இவை இங்கு நின்று எரியவேண்டும் என்ற நிபந்தனையுடன் நந்தாவிளக்குகளைத் தானம் செய்வது அன்றைய வழக்கு. இன்று நந்தாவிளக்கும் இல்லை. ராஜராஜப்பெரும்பள்ளியும் வழிபாட்டில் இல்லை. புறப்படுவோம் என்று நிமிர்ந்தபோது, ஏதோ சொல்ல முயன்று பின்வாங்கியவர் போன்ற முகபாவத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தார் வெல்கவேரத்துத் தேவர். ♥️

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner