கிழக்கிலங்கையின் தமிழ்ப் பாரம்பரியங்களில் ஒன்றான 'கொம்புமுறி விளையாட்டு' பற்றி முன்பு 'உவங்களில்'
எழுதியிருக்கிறேன். கண்ணகி வழிபாட்டோடு இணைந்த மழை வேண்டும் கலையாடல் அது. இங்கு கொம்பு என்பது மரக்கிளை ஒன்று. அதை செவ்வாய்க்குற்றி, தாய்மரம் எனப்படுகின்ற இருவகை தாவரப்பாகங்களின் நடுவே உரிய முறையில் பொருத்தி இரு தரப்பினராகப் பிரிந்து வடத்தால் (கயிற்றால்) இழுக்கும் போது விசையால் ஒரு கொம்பு முறியும். முறியாத கொம்பு வென்ற கொம்பு என்று கொள்ளப்படும். சிங்களவர் மத்தியிலும் 'அங்கெலிய' என்ற பெயரில் வழக்கில் இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகவே அருகி வருகிறது. என் பிறந்தகம் தம்பிலுவில் கிராமத்தில் இடம்பெற்ற கொம்புமுறி நேற்று நிறைவுக்கு வந்தது. தம்பிலுவில்லின் கொம்புமுறிக்கு பல தனித்துவங்கள் உண்டு.
முதலாவது, கிழக்கிலங்கை பொதுவாக
தாய்வழிச் சமுதாயம் தான் என்றாலும், கொம்புமுறியில் மட்டும், தந்தைவழியைப் பார்ப்பார்கள். தம்பிலுவில்லில் கொம்புமுறியிலும் கூட தாய்வழி தான் பார்க்கிறார்கள். எப்படி என்றால், கொம்பு முறிப்பதற்காக பிறப்பின் அடிப்படையில் அம்மாளுக்கு (கண்ணகி), சாமிக்கு (கோவலர்) என்று இரு சேரியாக ஊர் மக்கள் பிரிக்கப்படுவார்கள். இப்படி பிள்ளைகள் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படும் போது, தந்தையின் சேரியைக் கருத்தில் கொள்வது ஏனைய ஊர்களின் வழமை. அதற்கும் தாயின் சேரியையே கருத்தில் கொள்வது இந்த ஊரின் வழமை.
|
வழக்கமான கொம்புமுறிக் கட்டமைப்பு. இடப்புறம் பூமராங் வடிவில் வட்டத்தினுள் காட்டப்பட்டிருப்பவை இரு கொம்புகள். வலப்புறம் வட்டத்தில் காட்டப்பட்டிருப்பவை கொம்புகள் கொழுவிய நிலையிலான தோற்றம். இதைச் சுற்றி மரக்கட்டைகளாலான துணை அமைப்புக்கள் மறைத்திருக்கும். (படத்தில் கொம்புகள் உங்களுக்குத் தென்படாது.) |
இரண்டு, இங்கு பயன்படுகிற கொம்பு முறிக்கும் கட்டமைப்பு மிக எளிமையானது. கிழக்கின் ஏனைய தமிழ் ஊர்களிலும் சிங்கள ஊர்களிலும் பயன்படும் சிக்கலான அமைப்பு இங்கு பயன்படுவதில்லை.
|
வடம் தாங்கி, அடை, தாய்வளையம் முதலிய சிக்கலான துணை அமைப்புகள் கொண்ட வழக்கமான கொம்புமுறிக் கட்டமைப்பு, முனைக்காடு, கொக்கட்டிச்சோலை. |
|
வடம் தாங்கி, அடை, தாய்வளையம் முதலிய சிக்கலான துணை அமைப்புகள் கொண்ட வழக்கமான கொம்புமுறிக் கட்டமைப்பு, தேற்றாத்தீவு. |
|
தம்பிலுவில் கொம்புமுறி. இடப்புறம் (காட்டப்படவில்லை) செவ்வாய்க்குற்றி. அதிலிருந்து வரும் வடத்தில் இரு கொம்புகளையும் கொழுவி, இந்தப்புறம் இரு சேரியினரும் இழுக்கும் போது கொம்பு முறியும் |
கொம்புமுறிக் கட்டமைப்பு எளியது என்பதால் இங்கு பயன்படும் கொம்புகள் மிகச்சிறியவை. இவை பொதுவாக
கரையாக்கன் அல்லது எக்சோரா (Ixora spp.) தாவரத்திலிருந்து பெறப்படுகின்றன. எனினும் ஏனைய ஊர்களில் பயன்படும் கொம்புகளில் பருமனில் மிகப்பெரியவை. அவற்றை முறிப்பதற்கு மனித வலுவும் மிக அதிகமாகவே தேவைப்படும். இவை பொதுவாக புளி (
Tamarindus indica), விளினை (
Vitis labrusca), விடத்தல் (
Mimosa cinerea) போன்ற தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றன.
90ஸ் கிட்ஸின் வீதியோர கிரிக்கெட் போல, தங்கள் இளவயதுப் பொழுதுபோக்குகளில் ஒன்று சிறுவர்கள் இரு சேரிகளாகப் பிரிந்து கொம்பு முறிப்பது தான் என்று அப்பா சொல்லுவார். இந்த வாய்ப்பு சிக்கலான கட்டமைப்பைக் கொண்டிருந்த ஏனைய கொம்புமுறிக்கும் ஊரவர்களுக்கு அரிதாகவே கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
|
கரையாக்கன் மரச் சிறு கொம்புகள், தம்பிலுவில். |
|
பருமனான கொம்புகள், முனைக்காடு
|
|
பருமனான கொம்புகள், அங்கெலிய, பாணமை. |
அதேபோல தாய்மரம் என்ற அமைப்பே இங்கு இல்லை. செவ்வாய்க்குற்றியும் ஏனைய ஊர்களோடு ஒப்பிடும் போது மிகவும் உயரம் குறைவாகவே அமைக்கப்படுகிறது.
|
உயரமான செவ்வாய்க்குற்றி, தாய்மரம் பின்னணியில் தென்படுகிறது, பாணமை. |
|
உயரம் குறைந்த சிறிய செவ்வாய்க்குற்றி, தம்பிலுவில். |
மூன்றாவது 'பள்ளுக்கு வளைதல்' எனும் கலையாடல். 'அம்மன் பள்ளு' எனும் கிராமிய இலக்கியத்தைப் பாடியபடி தென்னோலையை எரித்து ஆண்கள் அதைச் சுற்றி வட்டமாகக் கைகொட்டி ஆடுவது தான் பள்ளுக்கு வளைதல். அந்த அம்மன் பள்ளும் இந்த ஆட்டமும் இவ்வூருக்கு மட்டும் விசேடமானவை. கொம்புமுறியில் மட்டுமன்றி, வைகாசி சடங்கு அம்மன் ஊர்வலத்தின் போதும் பள்ளுக்கு வளைவார்கள். பெயரில் பள்ளு இருந்தாலும் அங்கு பாடப்படுவது பள்ளு இலக்கியம் அல்ல. ஒருவகை வசந்தன் பாடல் எனலாம். 'வசந்தன்' தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் கூட ஒரு காலத்தில் விளங்கிய ஆண்களின் கோலாட்டக் கலை.
நான்காவது, வடசேரிக்கோவில் அல்லது 'சாமி' கோவில். நானறிந்து கிழக்கில் கோவலன் தெய்வமாக வழிபடப்படும் இரண்டாவது கோவில் இது. முதலாவது பாணமை பத்தினி அம்மன் கோவிலின் அருகே உள்ள 'அளுத்தெவியோ' தேவாலயம். 1980களில் கொம்புமுறி இடைநிறுத்தப்பட்டபோது தம்பிலுவில் வடசேரிக் கோவில், முழுமையாக ஆகமவிதிக்குட்பட்ட சித்திவிநாயகர் கோவிலாக மாறிவிட்டது. இன்று உள்ளது 2014இல் அமைக்கப்பட்ட புதிய கோவில்.
|
வடசேரிக் கோவலர் கோவில், தம்பிலுவில். |
|
அளுத்தெவியோ (கோவலர்) கோவில், பாணமை. |
மானுடவியல் மற்றும் சமூகவியல் ரீதியில் முக்கியமான பொக்கிஷங்கள் இந்தத் தகவல்கள். ஏதோ இயன்றவரை ஆவணப்படுத்தி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுத வேண்டும்.
0 comments:
Post a Comment