"குடி" - கீழைக்கரையின் தாய்வழிப் பாரம்பரியம்


சில வாரங்களுக்கு முன் கொம்புமுறி பற்றிய உரையாடலொன்றில் ஈடுபட்டிருந்தோம். அப்போது வடபுல நண்பர்கள் சிலர், கிழக்கில் தாய்வழி பார்ப்பது எப்படி என்று கேட்டிருந்தார்கள். தமிழகமோ, இலங்கையோ, எங்குமே தந்தை வழியில் பூர்விகம் பார்ப்பதே வழக்கமாக இருக்க, கிழக்கில் தாய்வழியை வைத்துத் தான் பரம்பரை, பூர்வீகம் எல்லாம் பார்க்கிறார்கள் என்று நான் சொன்னது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. பரம்பரை பற்றி பேசவேண்டுமென்றால், சாதியம் பற்றியும் பேசியாக வேண்டும். பொதுவெளியில் அது போன்ற உணர்திறன் மிக்க விடயங்களைப் பகிர்வதில் தயக்கம் இருந்தாலும், சமூகவியல் மானுடவியல் ரீதியில் முக்கியமான இந்தக் கேள்வியை தவிர்க்கமுடியாமல், மேலோட்டமாக மட்டும் இதை எழுதுகிறேன்.

கிழக்கிலங்கை, கீழைக்கரை என்று பொதுவாகச் சொன்னாலும் இங்கு குறிப்பாகச் சொல்லப்படும் நடைமுறைகள் இன்றைய மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை, அதிலும் ஓரிரு தமிழ் – முஸ்லீம் பழம்பெரும் கிராமங்களில் மாத்திரமே வழக்கத்திலிருப்பவை, பல இடங்களில் அருகிப்போய் விட்டவை என்பதையும் நாம் நினைவில் இருத்த வேண்டும்.

கிழக்கின் சாதிகள், ‘குடிகள்’ என்ற பெயரில் உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு தனிச்சாதியாகவே கருதப்பட்ட முஸ்லீம்களுக்குள்ளும் குடிகள் உண்டு. தமிழகத்தில் சொல்லப்படும் ‘கோத்திரம்’ என்ற பதத்தோடு குடியை ஒப்பிடலாம். மரபாக ஒவ்வொரு சாதியிலும் ஏழு குடிகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகின்றது என்றாலும், இதில் திருத்தமான எண்ணிக்கையொன்றைப் பெறுவது கடினம். ஒரே சாதி வாழ்கின்ற இரு வேறு ஊர்களுக்குப் போனாலும், அங்கே இந்த ‘ஏழு’ எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பதைக் கவனிக்கலாம். சில ஊர்களில் ஒரே சாதியில் 20 வரையான குடிகளும் இருக்கின்றன. ஆக, குடிகளின் பெயர்கள், அவற்றின் எண்ணிக்கை, அதில் உள்ள குடித்தொகை, அதில் அதிகாரத்தில் உள்ள குடி என்பன ஊருக்கு ஊர் வேறுபடும். 

சாதிய உட்பிரிவுகளான ‘குடி’கள் முன்பு இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வழக்கில் இருந்திருக்கவேண்டும். இதற்கு சான்றாக யாழ்ப்பாணம் ஞானப்பிரகாச சுவாமிகளின் (17ஆம் நூற்றாண்டு) பரம்பரையைச் சொல்லும் போது, கார்காத்த வேளாளரில் பாண்டிமழவன் குடியில் பிறந்தவர் என்ற குறிப்பைச் சொல்லலாம். சமூகப்பெறுமானமின்மையால் இந்தக் குடிகள் பின்னாளில் ஏனைய இடங்களில் வழக்கிழந்து போயிருக்கின்றன. என்றால் அவை கிழக்கில் மட்டும் முனைப்படையக் காரணம் என்ன? 

கீழைக்கரையில் பல சாதிகள் கலந்து வாழும் ஊர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலான கீழைக்கரை ஊர்கள் தனியொரு சாதியையே பெரும்பான்மையாகக் கொண்டவை. எனவே ஒவ்வொரு ஊரினதும் சமூக இயங்கியலை, அங்கங்கே இருந்த சாதிய உட்பிரிவுகளான குடிகளே பங்குபோட்டுக்கொண்டன. இலங்கையின் ஏனைய இடங்களை விட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களிலும் அன்றாட வழமைகளிலும் குடிமுறைமை தொடர்ச்சியாக முக்கிய இடத்தைப் பெற்று வந்ததால், குடி வழக்கம் இங்கு தொடர்ச்சியாக நீடித்து வருகின்றது என்று ஊகிக்க முடிகிறது. 

மட்டக்களப்பில் ஒரு குழந்தையானது, அதன் தாயின் குடி சார்ந்தே இனங்காணப்படுகிறது. அந்தக் குழந்தையின் தாயின் குடி, அதன் அம்மம்மாவுடையது. இந்த வகையில், நான், என் அம்மா, என் அம்மம்மா, அவரது அம்மா, அவரது அம்மம்மா எல்லோருமே ஒரே குடியில் அடங்குகிறோம். இதில் தந்தைமாரின் எவ்விதப் பங்களிப்பும் பிள்ளைகளுக்கோ பேரர்களுக்கோ இருப்பது இல்லை. 

வெவ்வேறு சாதியினர் மணமுடிக்கக்கூடாது என்பதை விட, ஒரே குடியினர் மணமுடிக்கக்கூடாது என்பதே கிழக்கின் கிராமப்புறங்களில் பொதுவாக எழுந்த - எழுகின்ற சாதியச்சிக்கல். ஏனென்றால் குடிகள் ஒரே பரம்பரையில் வந்தவை என்பதால், குடிகளுக்குள் அகமணம் தடை செய்யப்பட்டிருக்கிறது. புரிகிற மாதிரிச் சொன்னால், ஒருவன், தனது தாயின் அதே குடியில் பெண்ணெடுக்க முடியாது. அதே தாயின் குடியைச் சேர்ந்த அவனது மாமன் வேறு குடியிலேயே பெண்ணெடுக்க முடியும் என்பதால் மாமியும் மைத்துனியும் வேறொரு குடியைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள். எனவே ‘முறைமச்சினர்களை’க் கட்டலாம். அது இங்கு பரவலான இயல்பான வழக்கமாக இருந்திருக்கிறது.

அதைத்தவிர, தாய்மாமனுக்கு இங்கு கொடுக்கப்படும் மரியாதை, எல்லாத் தமிழ்ப்பகுதிகளிலும் சாதாரணமாகக் கொடுக்கப்படுவது தான். மருமக்கட்தாயம் என்பதற்காக, கேரளம் போல, தாய்மாமனுக்கு முன்னுரிமை உள்ள காரணவர், தறவாடு முதலிய கட்டமைப்புகள் இங்கு இருந்ததாகத் தெரியவில்லை. மட்டக்களப்பின் முக்குவச்சட்டத்தில் அப்படி ஏதும் தாய்மாமன் உறவுக்கு கூடிய முன்னுரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றதா என்றும் தெரியாது. தேடிப்பார்க்க வேண்டும்.

பெண்ணுக்கு முன்னுரிமை என்பதால், கீழைக்கரையின் திருமணங்களில் ‘மாப்பிள்ளை பார்த்தலே’ முதன்மை பெறுகிறது. ஏனைய இடங்களில் இருப்பது போல் ‘பெண் பார்க்கப் போவது’ இங்கு நடைமுறையிலில்லை. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு வருவது தான் முதன்மையான நிச்சயதார்த்தச் சடங்கு இங்கு. அதை ‘கேட்டுப்போதல்’ அல்லது ‘(கொழுக்கட்டைப்)பெட்டி கொண்டு போதல்’ என்பார்கள். 

இப்படி பெண்ணுக்கே முன்னுரிமை உள்ளதால், தமிழகத்தில் ‘வீட்டோடு மாப்பிள்ளை’ என்று நகையாடப்படும் வழக்கம் தான் மட்டக்களப்பின் இயல்பான வழக்கமாக இருந்து வருகிறது. பிறந்த வீடு, புகுந்த வீடு எல்லாம் இங்கு ஆணுக்குத் தான். மணம் முடித்த பின்னர், மாப்பிள்ளை, பெண் வீட்டில் தான், அவள் பெற்றோரோடு நிரந்தரமாகத் தங்குவார். மாமியார் – மருமகள் சண்டைகளை விட, இங்கு இடம்பெறும் மாமனார் – மருமகன் சண்டைகள் சுவாரசியமானவை. கீரியும் பாம்புமாக நிற்கும் இருவருமே ஆண்கள் என்பதால் கொஞ்சம் தாறுமாறானவை கூட. அல்லது நல்ல படியாக நடந்து கொண்டு மாமனாரிடம் அன்பைச் சம்பாதித்துக் கொண்ட ‘பொடியன்’களும் இங்கு உண்டு. (இலக்கியத்துக்கு அருமையான கதைக்களம். இந்தக் கருவை மையமாக வைத்து கிழக்கிலங்கையின் ‘எழுத்தாளர்கள்’ யாரும் இதுவரை சிறுகதையோ நாவலோ முயன்றிருக்கிறார்களா, தெரியவில்லை)

சாதிய அகமணத்தைக் கட்டுப்படுத்தும் இன்னொரு வினோதமான காரணியும் இங்கு வழக்கில் இருக்கிறது. அது ‘சகோதரக்குடி - மச்சினக்குடி’ வழக்கம். இந்த வழக்கத்தின் படி, இரு வேறு குடிகளை ஒன்றுக்கு ஒன்று சகோதர உறவாகவும், இன்னுமிரு குடிகளை மச்சினக்குடியாகவும் கருதுவார்கள். 

உதாரணத்துக்கு இக்கட்டுரையாளனின் பிறந்தகமான தம்பிலுவில்லை எடுத்துக்கொள்வோம். அங்கு கண்டன் குடி, கட்டப்பத்தன் குடி, செருவிலி குடி என்பன முதன்மையான மூன்று குடிகள். கண்டன் குடிக்கு ஏனைய இரு குடிகளும் ‘மெச்சினக்குடிகள்’ என்று சொல்லப்படுகின்றன. கண்டன் குடியில் பிறந்த பெண், இந்த இரு குடியில் எதிலும் மாப்பிள்ளை எடுக்கலாம். ஆனால் சருவிலி குடியும் கட்டப்பத்தன் குடியும் சகோதரக்குடிகள். இவற்றில் ஒன்றில் பிறந்த பெண் இன்னொரு குடியில் மாப்பிள்ளை எடுத்தல் ஆகாது. எப்படி இந்த இரண்டு குடிக்கும் தத்தமக்குள் அகமணம் தடை செய்யப்பட்டிருக்கிறதோ, அதேயளவு மற்றக் குடியில் மாப்பிள்ளை எடுப்பதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கிழக்கின் சமூகக்கட்டமைப்பில் சுவையான மற்றொரு மரபும் இருக்கிறது. சாதியொன்றின் தனிநபர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதன் உபபிரிவுகளான குடிகளுக்குள்ளும் நுண்பிரிவுகள் தோன்றுவதற்கான ஏதுக்கள் ஏற்பட்டன. இந்த நுண்பிரிவுகளுக்கு வகுத்துவார், தத்தி, கத்தறை என்று பல பெயர்கள். குடிகளுக்குள், இந்த நுண்பிரிவுகள் இன்னும் நெருக்கமடைந்து தமக்குள்  ஆழமான உறவைப் பகிர்ந்து கொள்வதைக் காணலாம். 

வகுத்துவார் (>>வயிற்றுவார் - ஒரே வயிற்றில் பிறந்தவர்கள்), கத்தறை (>>கோத்திரம்?) என்பன நேரடியாகவே, ஒவ்வொரு குடிகளுக்குள்ளும் உள்ள சந்ததிகளை அல்லது பரம்பரைகளைக் குறிப்பிடுகின்றன. ‘தத்தி’ என்ற பதத்தின் பயன்பாடு சற்று விரிவானது. இது ஒரு பரம்பரையை மாத்திரமன்றி, அந்தப் பரம்பரையில் பெண் எடுத்தோர், கொடுத்தோர், அவர்களது சுற்றத்தார், என்று ஒரு பரந்த கூட்டத்தாரைக் குறிக்கின்றது. எனவே வகுத்துவார், கத்தறை என்ற பதங்களை விட, தத்தி கொஞ்சம் விரிவான சொல்லாடல். தத்தி என்பதற்கு தமிழில் பகுதி, அல்லது தொகுதி என்பது பொருள். தத்தெடுத்தல் என்ற சொல்லுக்கும் ‘தத்தி’க்கும் தொடர்பு இருக்கலாம்.

நூலகம் நிறுவனத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டத்தின் கீழ், இந்தக் கட்டுரையாளனின் பிறந்தகம் தம்பிலுவில் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் அவ்வூரின் சில குடிகளில் இன்றும் வழக்கிலுள்ள நுண்பிரிவுகளை ஆவணப்படுத்த முடிந்தது. இங்கு அவற்றை ‘பாகை’ என்றே பிரதானமாக அழைக்கிறார்கள். பெரும்பாலான பாகைகளின் பெயர்கள் மறைந்துவிட்டன. கிடைத்த பாகைகளின் பெயர்கள் பெரும்பாலும் பட்டப்பெயர்களையோ, செல்லப்பெயர்களையோ கொண்டிருந்தன. உதாரணமாக கட்டப்பத்தான் குடியின் நான்கு பாகைகள்: வண்ணக்கர் பாகை, சீனியம்பி கத்தறை, பல்லு வயிரர் தத்தி, கொட்டான் அழகன் தத்தி என்றும், கண்டன் குடியின் நான்கு பாகைகள்: வண்ணக்கர் தத்தி, தெய்வகண்டாப்போடி வகுத்துவார், நெடிய முருகச்சீயா வகுத்துவார், நாகமுத்துச் செட்டியார் தத்தி என்றும், அழைக்கப்படுகின்றன. 

இந்தப் பாகைகளுக்கு இன்றும் சமூகப்பெறுமானம் இருக்கிறதா? ஓரளவு இருக்கிறது எனலாம். தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நிகழும் வைகாசிச் சடங்கில், கட்டப்பத்தன் குடியின் நான்கு பாகையினரும் தனித்தனியே சடங்கு செய்யும் உரிமை பெற்றிருக்கிறார்கள். மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலை நிர்வகிக்கும் வண்ணக்கர், கண்டன் குடியின் வண்ணக்கர் தத்தியிலேயே பிறந்திருக்கவேண்டும். தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவிலை நிர்வகிக்கும் வண்ணக்கர், கட்டப்பத்தன் குடியின் வண்ணக்கர் பாகையிலேயே பிறந்திருக்கவேண்டும். இந்த நடைமுறைகளில் நெகிழ்வுப்போக்கைக் கடைப்பிடிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டிருப்பதை சமகாலப் போக்குகள் சுட்டிக்காட்டுகின்றன. 

தாய்வழிச்சமூகமான கிழக்கிலங்கையில், பெரும்பாலான குடிகள் மட்டுமன்றி, வகுத்துவார், கத்தறை, தத்தி என்பன கூட ஆண் பெயரிலேயே அறியப்படுகின்றமை விந்தை தான். அது அந்த வகுத்துவாரை அல்லது கத்தறையை ஆரம்பிக்கும் குறித்த பெண்ணின் தந்தை பெயராகவோ அல்லது கணவன் பெயராகவோ அமைகிறது. இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்த மானுடவியலாளர் டெனிஸ் மக்கில்வ்ரே, அக்கரைப்பற்று முஸ்லீம்கள் மத்தியில் இரு வேறு பெயரில் அறியப்பட்ட தத்திகள், ஒரே பெண்ணின் கணவன் பெயராலும் தந்தை பெயராலும் அழைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியிருக்கிறார். 



இதனால் சந்ததியொன்றை ஆரம்பிக்கும் பேரன்னை ஒருத்தி அடையாளமில்லாமல் மறைந்து போகும் சூழல் ஏற்படுவதுண்டு. அதைச் சுட்டிக்காட்ட இந்தக் கட்டுரையாளன் தன் சொந்த வம்ச வரிப்படத்தை இங்கு இணைத்திருக்கிறான். 

என் தனிப்பட்ட ஆவணம் என்றாலும், சாதாரணமாகவே ஏழு தலைமுறைக்கும் மேல், தாய் வழியிலும் தந்தை வழியிலும் நீளும் வம்சவரிப்படத்தை வைத்திருக்கும் பல ஈழத்து நண்பர்களுக்கு இது மிகச்சாதாரணமான ஒன்றாகத் தெரியலாம் என்று தெரிந்தும், அதை இங்கு பகிர்ந்து இந்தச் செய்தியைச் சொல்வதற்குக் காரணம் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் நாம் எவ்வளவு அக்கறை எடுக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டத்தான். இந்த வம்ச வரிப்படத்தில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? கீழைக்கரைத் தாய்வழிப் பாரம்பரியத்தின் அப்பட்டமான ஆதாரம் இது. தந்தைவழியை விட தாய்வழிகள் ஒப்பீட்டளவில் தெளிவாக நினைவுகூரப்படுபவையாக இருப்பதை இந்த வம்ச வரிப்படத்திலேயே நீங்கள் கண்டு கொள்ளலாம். 

எனது குடி, எனது தாய், அம்மம்மா, அவர் பாட்டி, அவர் பாட்டியின் தாய் செம்பாத்தை என்ற வழியில் வருகின்றது. இந்தக் குடி நுண்பிரிவை உள்ளூரில் ‘அருணம்பொலியானை தத்தி’ என்று அழைக்கிறார்கள். அருணம்பொலியானை என்பது செம்பாத்தையின் தந்தை அருணாசலத்தின் செல்லப்பெயர் (படத்தில் பார்க்க. செம்பாத்தைக்கும் இயற்பெயர் வேறு. செம்பகநாச்சி. தம்பிலுவில் கண்ணகை அம்மனை செண்பகநாச்சியார் என்று அழைப்பதுண்டு.) பொலியானை என்றால் காலனித்துவ காலத்தில் இலங்கையில் சிறிது காலம் வழக்கில் இருந்த கிராம மட்ட காவல்துறை அதிகாரி பதவியைக் குறிக்கும். 

அருணம்பொலியானை தத்தியில் என் தலைமுறை வரை வாழ்ந்தோர் - வாழ்வோர் எண்ணிக்கை தோராயமாக ஐநூறைத் தாண்டுகிறது. அந்த ஐநூறு பேருக்கும் தன் கணவன் பெயரால் அடையாளம் கொடுத்த மூதன்னை அருணம்பொலியானையின் மனைவி. அவரது பெயரென்ன, அவர் பெற்றோர் பெயரென்ன, அவருக்கு சகோதர சகோதரியர் இருந்தார்களா, எதுவுமே தெரியாது. அதை அறிவதற்கு சுமார் இரண்டரையாண்டுகள் நான் பட்ட பாடெல்லாம் விழலுக்கிறைத்த நீர். ஆவணங்களைப் பேணுவதில் இங்குள்ள எவரும் அத்தனை சிரத்தை எடுத்ததில்லை. 

கீழைக்கரையின் தாய்வழிச் சமூகம் பற்றிய தகவல்களைப் பெருமையாகப் பகிர்ந்து கொள்ளும் இந்த இடத்தில், என்னை உருவாக்கிய ஒரு ஆணிவேர் - அன்னைவேர், அடையாளமின்றி தன்னை மண்ணுள் புதைத்து மறைந்து விட்டிருக்கிறது என்பதை வேதனையுடன் தான் சொல்லவேண்டியிருக்கிறது. காலப்பெருவெள்ளத்தில் எப்போதும் அப்படித் தானே? அந்தப் பெருமாட்டியை மானசீகமாக வணங்கிக் கொள்கிறேன்.

9 comments:

  1. Though I havenot been in the East, have heard about the family traditions from my students (teacher trainees)
    But your article is more vivid.Thank you.
    Also I have read your book ( Alakilla Aadal).
    Highly impressed!
    You have covered a vast area in that ‘small book. May God Shiva shower His choicest Blessings on you.
    Excuse for not writing in mother tongue,

    ReplyDelete
    Replies
    1. மொழியை அல்ல; தங்கள் மனங்குளிர்வையே கண்டேன். அது போதும். :) மனப்பூர்வமான நன்றிகளும் கடப்பாடும் தங்கள் வாழ்த்துக்கு.

      Delete
  2. இவ்வம்சம் தொடர்பில், ஆய்வலரின் வயதொத்தகாலத்தில், ஆங்கிலேய, ரோமன் டச்ச போன்ற சட்டங்கள் தொடர்பான கற்கைகளோடு சம்பந்தப்பட்டிருந்ததனால், அக்காலத்தில் வாழ்ந்த, நன்கு கற்ற அரச தொழில்புரியும் எம்மூர் ஒருவரிடம் இந்த கேள்வியினை; அதாவது ‘ஏன் தகப்பனின் மரபு பேணப்படாமல் தாய்வழி இங்கு பேணப்படுகின்றது?’ என கேட்டதற்கு அவர் சொல்லிய பதில் மிகவும் சுவாரசியமாகவும் அதே வேளை அதை புறக்கணிக்க முடியாததாகவும் இருந்தது.
    போத்துக்கேய காலத்தில், கண்டிய, தேசவழமை சட்டங்களால் உள்வாங்கப்பட்ட பிரதேசங்கள் போக மீதி பிரதேசங்கள் யாவும் ‘ரோமன் டச்’ சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டனவாம்.
    .
    கரையோர தென்பகுதி சிங்கள பிரதேசங்களில் மணம்முடித்த பெண்ணை கணவன் வீட்டிக்குகூட்டிவந்து அங்கே குடும்பம் நடத்தும் சம்பிரதாயத்துடன், அவருடன் கணவனின் தம்பிமார்களும் சேர்ந்துகொள்வதை அவரின் மாமியாரே அனுமதிப்பதாகவும், பிறக்கும் குழந்தையின் Biological Father உயிரியல் தகப்பன் யார் என்பதில் தாய்க்கே சரியாக சொல்வது கஷ்டமாக இருந்ததால், மரணித்தவரின் சொத்துக்களை வாரிசுகளுக்கு மாற்றுவதில் போத்துக்கேய ஆட்சியாளர்களுக்கு சிரமமாக இருந்ததாம்.
    அதே வேளை பெற்றவள் தொடர்பில் ஐயம் இல்லாததனால் இம்முறையினை அக்கால ஆட்சியாளர்களே கொண்டுவந்ததாக கூறினார்.
    கரமட்டிய, யட்டிப்பலாத, அம்பேகஸ்துவா போன்ற மிக பின்தங்கிய கிராமிய அம்சங்களை கொண்டிருந்த இடங்களில் 70ன் பிற்பகுதிகளில் தொழில்ரீதியாக தங்கி இருந்தபோது, அவ்வூர் வயோதிபர்களுடன் இவ்விடயம் பற்றி சுவாரசியமாக பேசியபோதும் ….அவர்கள் கற்பு என்பது ஒரு பெரிய விடயமென்றோ, அன்றி இந்நடைமுறை இல்லை என்றோ மறுத்துரைக்கவில்லை!
    எமது தாய்வழி, குடிவழி பேணும் பிரதேசங்களும் கண்டிய, தேசவழமை சட்ட எல்லையுள் உள்வாங்கப்படாத பிரதேசங்களே!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது தான் கேரளத்து மருமக்கட் தாயம். மாமனின் தலைமையில் வாழும் தமக்கையரின் ஒரு வீடு தறவாடு. குழந்தைகளைப் பேணும் தாய்மாமனுக்கு காரணவர் என்று பெயர் அங்கு. தவிர இலங்கையில் பல்கொழுநமும் (ஒரே பெண் சகோதரர்களுக்கு பொது மனைவியாதல்), பல்தாரமணம் (ஒரு ஆண் பல பெண்களை மணத்தல்) கடந்த நூற்றாண்டு வரை இயல்பாக இருந்தது தான். ஆனால் அதே கேரள மருமக்கட்தாயம் தான் மாற்றமேதுமின்றி கிழக்கிலும் வழக்கில் இருந்ததா என்பதில் இன்னும் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. தேடிப்பார்க்கவேண்டும். உங்கள் தகவலுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  3. எனது சொந்த கிராமமான களுதாவளையில் இன்றும் தத்தி என்ற வழக்கம் இருக்கிறது
    இதற்கு இவ்வளவு முக்கியதும் இருப்பதை இன்று தான் உணர்ந்தேன்

    ReplyDelete
    Replies
    1. கிழக்கில் பெரும்பாலான இடங்களில் அச்சொல் வழக்கில் இருந்தது. இன்று அருகி வருகிறது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  4. பெரிய கல்லாறு எனும் ஊர் தொடர்பான தகவல்கள், விவரங்கள் தொடர்பில் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? உங்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு கதைக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. பெரியகல்லாறு பற்றிய விபரங்கள் தற்போது எதுவும் கைவசம் இல்லை. இது என் மின்னஞ்சல் vthula27@gmail.com, முகநூலில் https://www.facebook.com/V.Thulanch/ தொடர்புகொள்ளுங்கள்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner