இல்லிறப்பு: காற்சிலம்பியா? கார்வண்ணனா?

 இரண்டு பதிவுகளைக் கடந்துவர முடிந்தது.ஒன்று இராவணனை தங்கள் முப்பாட்டனாகப் புகழ்ந்து இராமனை இகழும் பதிவு. அது சூர்ப்பனகை மூக்கறுப்பு, வாலிவதம், சீதையின் தீக்குளிப்பு என்று இராமனை விமர்சித்தபடி சென்றது.
இன்னொன்று, சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பாத்திரப்படைப்பை கேலி செய்வது. மாற்றாளிடம் சென்று திரும்பிய கணவனை கையாலாகாமல் ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, வெளியூர் போய் அங்கும் பிரச்சினை ஏற்படுத்திய கண்ணகியை வெட்கமில்லாமல் கொண்டாடுகிறார்கள் என்றது அது.
அதிகம் உறுத்தியது அந்தப்பதிவுகள் அல்ல. அவை இரண்டின் சாராம்சமும் என்னவென்றால், சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற வசனம். இரண்டுமே இன்றுவரை தமிழின் மிகச்சிறந்த படைப்புகளில் வைத்து எண்ணப்படுபவை. இவர்கள் சொல்வது போல, இந்த இரு நூல்களும் காலாவதியாகி விட்டனவா? இவற்றை தமிழர்கள் கொண்டாடத் தேவையில்லையா?
இவற்றில் சரிபிழை கூற முன்பு, இரண்டு இலக்கியங்களும் சந்திக்கும் முக்கியமான புள்ளி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. மணவாழ்க்கை.
இரு துணைகளுக்கிடையிலான கலவி, திருமணம் மூலமே சமூக அங்கீகாரம் பெறுகிறது. திருமணத்துக்கு முந்திய உறவும், திருமணத்துக்கு அப்பாலான உறவும் சமகாலத்திலும் பரவலாக நீடிக்கின்ற போதும், அவை சமூக அங்கீகாரம் பெறாமல், இழிவாகவே பார்க்கப்படுகின்றன.
சற்று முற்போக்காகவே சிந்திப்போம். இந்த இரு துணைகளுக்கிடையிலான உறவு என்பது இரு எல்லைகளுக்கிடையிலேயே நீடிக்க முடியும். ஒரு எல்லை, மூன்றாமவர் ஒருவரை அனுமதிக்கக்கூடாது எனும் புரிதலுடன், இருவர் திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல். உலகெங்கும் பரவலாக சமூக அங்கீகாரம் பெற்றது இதுவே.
அடுத்த எல்லை, இணைந்து வாழும் இருவரும், அல்லது இருவரில் ஒருவர், மற்றவரின் ஒப்புதலுடன், மூன்றாமவருடன் கலவி கொண்டு வாழ்தல். இங்கு இணைந்து வாழ்தல் எனும் போது, திருமணம் என்பது கட்டாயமான நிபந்தனையாக இருப்பதில்லை.
இதில் இரண்டாவது எல்லை, நம்மில் பலருக்கு நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கலாம். அசௌகரியத்தைக் கொடுக்கலாம். "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதை மட்டுமே நாகரிகமாகக் கருதும் பண்பாட்டில் வளர்ந்தவர்கள் நாம். திருக்குறள் காலத்திலிருந்தே "பிறனில்விழையாமை" என்பதை முக்கியமான அறமாக தமிழ்ப் பண்பாடு முன்வைத்து வந்திருக்கிறது.தமிழருக்கு மட்டுமன்றி உலகெங்குமே அது அறப்பிழை தான். பிறனில் விழைதலுக்கு ஆங்கிலத்தில் "Adultery" என்று பெயர். அது மேற்குலகிலும் கூட பல நாடுகளில் ஒழுக்கமீறலாக சட்ட, சமய, சமூக, கோணங்களில் இன்றும் பரவலாக விவாதிக்கப்பட்டே வருகிறது.
(பிறனில் விழைதல், பிறன்மனை நோக்கல் என்ற சொற்கள் ஏற்கனவே தமிழில் வழக்கில் இருக்கின்றன. இவை ஆண்பால் மையச் சொற்கள். பிறன்மனை நாடுபவனை "அடுத்தவன் வீட்டுக்கு செல்பவன்" என்ற பொருளில் "இல்லிறப்பான்" என்கிறார் வள்ளுவர். இல்+இறத்தல் = [அடுத்தவன்] இல்லத்துக்கு இறங்குதல். சொற்சுருக்கம், பொருத்தம், எளிமை கருதி Adultery என்ற கலைச்சொல்லுக்கு "இல்லிறப்பு" என்ற சொல்லையே இனிப் பயன்படுத்துகிறேன்.)
ஆனால், யதார்த்தத்தில் இத்தகைய உறவுகள் நீடித்துத் தான் வருகின்றன என்பதைக் காண்கிறோம். ஒரு இணையின் வாழ்க்கையில் குறுக்கிடும் மூன்றாவது நபரால் பாதிப்பேதும் வரவில்லை எனும் போது, அல்லது அந்த உறவை மற்றைய இணை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் போது, அந்த உறவு சமூக அங்கீகாரம் பெறுகிறதோ இல்லையோ, அடிப்படை அறத்தினடிப்படையில் அங்கீகரிக்கத் தகுதி பெற்று விடுகிறது.
சற்று அதிர்ச்சியாக இருக்கும், இல்லையா? ஒரு மணவுறவில் மூன்றாம் நபரின் இடையீட்டை ஏன் எதிர்க்கிறோம்? முந்தைய இருவரில் ஒருவர் பாதிக்கப்படலாம் என்பதால் தானே? தனக்கு மேலதிகமான தன் துணையின் இன்னொரு உறவை ஏற்கும் பக்குவம் மற்றைய துணைக்கு இருந்தால், அத்தகைய இருவரின் அல்லது மூவரின் படுக்கையறையில் மூக்கை நுழைக்க வேண்டிய தேவை சமூகத்துக்கு இல்லை என்பதே அடிப்படை அறம். சரியான முற்போக்கு.
2016இல் இந்திய உச்ச நீதிமன்றம் இல்லிறப்பை குற்றம் அல்ல என்று தீர்ப்பளித்தது. இந்தியாவில் மணமான ஒருத்தி இல்லிறந்தால், அவள் கணவனின் - ஒரு ஆணின் - உடைமையாக இருந்து தவறிழைத்து விட்டாள் என்ற கோணத்திலேயே தண்டிக்கப்பட்டாள். சட்டரீதியாக ஒரு தவறுக்கு பால் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதே அத்தீர்ப்பின் பொருள். இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவையிலும் இல்லிறப்பு குற்றமாகச் சொல்லப்படவில்லை. சட்டம் எவ்வாறு சொன்னாலும், சமூகம் எவ்வாறு சொன்னாலும், தன் கையாலாகாத்தனத்தால், அல்லது 'அவன் ஆண் தானே' என்று காரணம் சொல்லி, பெண்ணொருத்தி தன் கணவனின் இல்லிறப்பை ஏற்றுக்கொள்வது இந்த முற்போக்குக்குள் வராது.
இனி சிலப்பதிகாரத்துக்கு வாருங்கள். வேறுவழியில்லாமல் அல்லது தான் பெண் என்பதால் தான், கண்ணகி கோவலனின் இல்லிறப்பை ஏற்றுக்கொள்கிறாளா?
மாதவி - கோவலன் இணைவால் கண்ணகி வருந்துகிறாள். துடிதுடித்துப் போகிறாள். "மங்கல அணி தவிர பிற அணிகள் அவள் அணியவில்லை" என்று தொடங்கி சிலம்பு கண்ணகியின் வேதனையைச் சொல்லும் வரிகள் நீள்கின்றன. ஆனால் கோவலன் தன் முன் வந்து வருத்தத்துடன் நிற்கும் போது, ஊடலோ கோபமோ எதையும் காட்டிக்கொள்ளாமல், "முறுவல் நகைமுகம் காட்டி சிலம்புள, கொண்ம்" (புன்னகைத்தபடி சிலம்புகள் தான் இருக்கின்றன. எடுத்துக்கொள்ளுங்கள்) என்கிறாள்.
கண்ணகிக்கு முன்பின்னாக சங்க கால - பக்தி இலக்கிய கால தலைவியர், தன் தலைவர்கள் இல்லிறந்து மீண்டும் தன்னிடம் வரும்போது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதில் இருக்கிறது, கண்ணகியின் ஆளுமைப்படைப்பு . கோவலன் திரும்பி வரும்போது, கண்ணகி கத்தி கூப்பாடு போடவில்லை. கட்டிலில் குப்புறப்படுத்து விம்மி அழவில்லை. "வெளியே போடா நாயே" என்று சத்தமிட்டு கதவை அடைக்கவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால், கண்ணகிக்கு இருந்தது இன்றைய துரோகமிழைக்கப்பட்ட ஆணுக்கோ பெண்ணுக்கோ இருக்க இயலாத மிகப்பெரும் மனத்திடம்.
அது சாத்தியமா? சாத்தியம். இன்றைய முற்போக்கு வரைவிலக்கணத்தின் படி, துணையின் கலவிச்சுதந்திரத்தில் நம்மில் பலர் எண்ணிப்பார்க்கவே அஞ்சும் இரண்டாவது எல்லையில் நிற்கிறாள் கண்ணகி.
அதற்காக கண்ணகி கோவலனின் இல்லிறப்பு பற்றி பேசாமல்இருக்கவும் இல்லை. அவள் மதுரையில் கோவலனுக்கு உணவு பரிமாறும் போது, அவனுக்கு தன் தவறு நினைவுவருகிறது. அப்போது மெதுவாக ஆனால் அழுத்தமாக "போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன்" (நீ செய்தது இழிவான செயல் தான். ஆனால் நான் என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நினைக்கவில்லை) என்கிறாள் கண்ணகி. கோவலனைக் குத்திக்காட்டவும் வேண்டும். தன் சமநிலையில் பிறழவும் கூடாது. "சூரரைப்போற்று" பொம்மி, "பாகுபலி" தேவசேனா இவர்களின் பாத்திரப்படைப்பெல்லாம் கண்ணகிக்கு கிட்டே வரத்தான் முடியுமா?
🙂
இனி இராமனை எடுத்துக்கொள்ளுங்கள். சூர்ப்பனகை மூக்கறுக்கப்பட்டது, அவள் இராமன் மீது ஆசைப்பட்டு அவனை அடைவதற்காக சீதையை சிறைப்பிடிக்க (அல்லது கொல்ல?) முயன்றதால். வாலிவதம் நிகழ்ந்தது, அவன் தன் தம்பி சுக்கிரீவனின் மனைவியைக் கவர்ந்து கொண்டதால். இராவணன் கொல்லப்பட்டது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதுவரை ஆண்களுக்குச் சொல்லப்பட்ட பிறனில் விழையாமையை சூர்ப்பனகை மூலம் பெண்களுக்கும் வரையறுத்து புரட்சி செய்தவன் கம்பன். சூர்ப்பனகை மூக்கறுந்ததும் அவள் முதலில் கண்ணீரும் இரத்தமும் வழிய உதிர்க்கும் முதல் வசனமே "பெண் பிறந்தேன் பட்ட பிழை" (நான் பெண்ணாய்ப் பிறந்து தான் பிழை) என்பது தான். கம்ப இராமாயணம் தலையில் அடித்து அடித்து சொல்லும் அறம் ஒன்று தான், "இல்லிறத்தல் தவறு". கம்பனுக்கும் ஆயிரமாண்டுகள் முன்பு வாழ்ந்த வள்ளுவனின் அதே குரல். பிறனில் விழையற்க.
உண்மையில் பாத்திரப்படைப்பில் இராமன் ஆசாபாசங்களும் கோபதாபங்களும் கொண்ட சாதாரண மானுடனாகத் தான் வலம் வருகிறான். காந்தி, கலாம் உட்பட மாபெரும் சமகால ஆளுமைகளும் முன்னுதாரண அறிஞர்களும் கூட வாழ்க்கையில் சறுக்கிய இடங்களைப் பார்த்திருக்கிறோம். இராமன் வாழ்வை அப்படிக் கொண்டு, இலக்கியப் பார்வையிலோ சமகால அற மதிப்பீடுகளின் அடிப்படையிலோ விமர்சிக்கும் உரிமை இங்கு அத்தனை பேருக்கும் உண்டு. எதிர்மறைப் பாத்திரமான இராவணனின் தரப்பு நியாயங்களைச் சொல்லவும் எவருக்கும் இயலும். (அதற்காக இராவணனை முப்பாட்டன் என்பதும், அவனை வரலாற்றுப் பாத்திரமாக கொண்டாடுவதும் ஓவர். அதைத் தனியே பேசுவோம்)
ஆனால் எல்லாம் சரி. இராமனின் பாத்திரத்திலுள்ள குறைபாடுகளுக்காக இராமாயணத்தையே நிராகரிக்கவேண்டும் என்பது? நூறு வீதம் ஒரு சிறு பிழை கூட விடாமல் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்த - வாழும் ஒரு வரலாற்று நாயகரைக் காட்ட முடியுமா இவர்களால்? நடிகர்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று நம் ஆதர்ச நாயகர்கள் அத்தனை பேருமே சிறிதளவாவது வாழ்க்கையில் தவறிழைத்தவர்கள் தானே? அதற்காக அவர்களை கொண்டாடாமல் தவிர்க்கிறோமா?
இவர்கள் உண்மையிலேயே முற்போக்கு பேசுபவர்கள் என்றால், வாழ்க்கைத்துணை விடயத்தில் ஒரு நிலைப்பாடு எடுக்கவேண்டும். ஏகபத்தினி விரதன் இராமன் போல ஒரு எல்லை. கணவனின் இல்லிறப்பை பக்குவத்தோடு ஏற்கும் கண்ணகி போல மறு எல்லை. இரண்டுமே பிழை என்றால் இவர்கள் சொல்லும் முற்போக்குத் தான் என்ன? என்ன அறத்தைச் சொல்லவருகிறார்கள் இவர்கள்?
இன்று இந்தியாவில், இலங்கையில் இல்லிறத்தல் சட்டப்படி குற்றம் அல்ல. ஆனால் சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தை சிதைக்கும் வல்லமை இல்லிறப்புக்கு உண்டு என்பதை அவை உட்பட பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. மேலைநாடுகள் பலவற்றில் கூட, இல்லிறத்தல் குற்றமில்லை என்றாலும், அது மணமுறிவுக்கு வலுவான சட்டக்காரணம் தான். இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான போதே, "அவர்கள் சொன்னபடி அச்சட்டத்தில் பாலினப்பாகுபாட்டை நீக்கியிருக்கலாம். ஆனால் அதைக் குற்றமில்லை என்றாக்கியது தவறு" என்று வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருந்தன.
சட்டத்தை விடுங்கள். வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆசாபாசமுள்ள சாதாரண மனிதர்கள் நாங்கள். "துணையின் இல்லிறப்பை ஏற்றல்" எனும் எல்லை அத்தனை சீக்கிரம் நம்மால் அடையப்படமுடியாதது. கண்ணகி போன்ற ஓரிரு ஆளுமைகளுக்கே அது கைவரக்கூடும். தொழிநுட்பம் எத்தனை வளர்ந்தாலும் அதற்கு நீண்டகாலம் தேவை. ஏனெனில் இது இயந்திரவழு அல்ல; பாகத்தை மாற்றித் திருத்துவதற்கு. மானுட உணர்வு சார்ந்த விடயம். அதை இயல்பாக ஏற்கும் தைரியம் பெரும்பாலானோருக்கு வரும் வரை, சமூகத்தில் "குடும்பம்" எனும் அடிப்படை அலகின் நிலைத்திருத்தலுக்கு இல்லிறப்பு ஒரு அச்சுறுத்தல் என்றே கற்பிக்கப்படவேண்டும். அது ஒரு ஒழுக்கமீறலாகவும் அறப்பிழையாகவும் தொடரவேண்டும். வள்ளுவர், இளங்கோ, கம்பர் எனும் தமிழ் மூவரும் ஒரேகுரலில் வலியுறுத்திய "பிறர்மனை விழையாமை" எனும் விழுமியத்தை சமூகம் கொண்டாடவேண்டும்.
கோவலன் இல்லிறக்காமல் சிலப்பதிகாரம் இல்லை. சூர்ப்பணகையும் இராவணனும் பிறர்மனை விரும்பாமல் இராமாயணம் இல்லை. இரண்டுமே பிறர்மனை விழைதலின் பயங்கர விளைவுகளைச் சொன்ன இலக்கியங்கள். ஒன்று அவற்றையெல்லாம் "ஊழ்" என்று சொல்லி அமைதி அடைகிறது. இன்னொன்று "அவதாரநோக்கம்" என்று சொல்லி புன்னகைக்கிறது. அவை தமிழின் மகத்தான காப்பியங்கள். அவை என்றென்றும் திகழட்டும்.
பிகு: இராமாயணம் என்று இப்பதிவில் நான் குறிப்பிட்டது கம்பராமாயணத்தை மாத்திரமே. தமிழ்நிலம் இன்று கொண்டாடுவது கம்ப ராமனையே. வேறு இராமர்களை அல்ல.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner