பின்னை எனும் நித்தியகன்னி

  

"கண்ணம்மா" என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?
பெரும்பாலும், நீங்கள் கொஞ்சும் காதலியின் நினைப்பு வரலாம். திரை இசை இரசிகர்களுக்கு "கண்ணம்மா கண்ணம்மா அழகுப்பூஞ்சிலை"யோ, காலா "கண்ணம்மா"வோ, "கண்ணம்மா உன்ன"வோ (இஸ்பேட் ராஜா) நினைவுக்கு வரலாம். "கண்ணம்மா" என்று யூடியூப்பில் தட்டினால் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் வந்து விழுகின்றன. இன்னும் சிலருக்கு விஜய் டிவியில் ஓரிரு வாரங்களுக்கு முன் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடையாய் நடந்து சிரிக்க வைத்த பாரதி கண்ணம்மா நினைவுக்கு வரலாம்.
🤭

எத்தனை கண்ணம்மாக்களும் வரட்டும். ஒரிஜினலுக்கு ஈடாகுமா எந்த டூப்ளிகெட்டும்? கண்ணம்மாவைப் படைத்த பாரதியின் பாடல்கள் தரும் கிறக்கத்துக்கு முன் இது எதுவுமே அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை என்றே சொல்லவேண்டும்.
"நின்னையே இரதி என்று" எனக்கு மிகப்பிடித்த கண்ணம்மாப் பாடல்களில் ஒன்று. "Kannamma - Eternal Love" என்ற சைந்தவி பாடிய இசைத்தொகுதியில் தான் அதை முதன்முதலில் கேட்டேன். 1986இல் வெளியான "கண்ணே கனியமுதே" என்ற திரைப்படத்தில் எம்.எஸ்.வியின் இசையில் ஜேசுதாசும் வாணி ஜெயராமும் இதே பாடலைப் பாடியிருக்கிறார்கள். இசைநிகழ்ச்சியொன்றில் பாடப்பட்ட இதன் கீழ்வரும் வடிவமும் நன்றாயிருக்கிறது. (அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பன்
Natharuban
😉)
ஏனைய கண்ணம்மாப் பாடல்களோடு ஒப்பிடும் போது, "நின்னையே இரதி என்று" அப்படி ஒன்றும் சிறப்பான பாடல் இல்லை தான்.
"புராணங்கள் சொல்லும் கட்டழகி இரதி நீயாகத் தான் இருக்கவேண்டும். எனக்கு உன்னை விட்டால் தோழி என்று யாரும் இல்லை. பொன் போன்ற உடலும் மின்னலின் சாயலும் கொண்டவள் நீ. மன்மதனின் அம்புகள் உன்னால் என் மீது பாய்கின்றன. கொஞ்சம் கண் பார், என்னோடு சேர வா. எங்கு பார்த்தாலும் முனிவர்களுக்கு இறைவனே தெரிவது போல, எனக்கு நீ தான் தெரிகிறாய்." இவ்வளவும் தான் அந்தப்பாடலின் சாரம்.
என்றாலும், இறுதி வரியில் கொஞ்சம் கவித்துவ அழகு இருப்பதாகச் சொல்லலாம். "யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே"
சுகமுனி வேதவியாசரின் மகன். எல்லாவற்றிலும் பரம்பொருளையே கண்டதால், சுகப்பிரம்மம் என்று அவரை புராணம் அழைக்கும். சுகமுனிக்கு எல்லாமே ஈசனாகத் தெரிந்தது. எனக்கு எல்லாமே நீயாகத் தெரிகிறது என்கிறான் பாரதி.
ஆனால், அந்தப் பாடலின் "தன்னையே சகி என்று சரணம் எய்தினேன்" எனும் இரண்டாம் வரியில் "சகி" (தோழி) என்ற சொல்லுக்கு "சசி" என்று பாடபேதம் இருக்கிறது.
சசி என்றால் இந்திராணி என்றும் சந்திரன் என்றும் பொருள் உண்டு. இந்திரனின் தேவியான இந்திராணி, புராணங்களின் படி பேரழகி. முதல் வரியில் மன்மதனின் தேவியான இரதியைப் பாடுவதால் இரண்டாம் வரியில் இந்திராணியை பாரதி பாடியிருக்கலாம் என்பர் சிலர். அல்லது"உன்னையே என் நிலவாக எண்ணி சரண் புகுந்தேன்" என்ற பொருளிலும் பாடியிருக்கக் கூடும். "பாயும் ஒளி" பாட்டிலும் "வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நானுனக்கு" என்றல்லவா அவன் உருகுகிறான்?
ஆனால்"தூண்டில் புழுவினைப் போல்" முதலிய தன் வேறு பாடல்களிலும் பாரதி சகி பற்றிப் பாடுவதால் சகி என்பதே பொருத்தமான பாடபேதமாகப் படுகிறது. நண்பியை "தோழி" என்று அழைப்பதை விட "சகி" என்று அழைக்கும் போது கொஞ்சம் நன்றாக இருக்கிறதல்லவா?
🙂
சகி ஆண்பாலுக்கும் பொருந்துவதால், இன்று கழுவி ஊற்றப்படும் "Bestie" என்ற ஆங்கிலச்சொல்லுக்கான கலைச்சொல்லாக சகியைப் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.
😉
வழமை போல ஒரு நாள் சைந்தவியின் "நின்னையே இரதி என்று" பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தான் அந்த வரியை திகைப்போடு கவனித்தேன். "பின்னையே நித்யகன்னியே"
நித்யகன்னி என்றால், என்றென்றும் இளங்கன்னி என்று பொருள். காதலியோ நாயகியோ, அடுத்தடுத்த நாட்களில் பழையவர்களாகி விடுவார்கள். ஆனால் இந்தக் கண்ணம்மா நித்யகன்னி. ஒவ்வொரு நாளுமே புத்தம்புதிதாகத் தெரிகிறாள், கன்னி என்று எண்ணச் செய்கிறாள் என்று 'மார்க்கமாக' விளக்கம் கொடுக்கலாம். சரி. பின்னை?
வடநாட்டு இராதைக்கு பலநூறாண்டுகள் முன்பே தமிழ் இலக்கியங்களில் தோன்றி, இன்று முற்றாக மறக்கடிக்கப்பட்டு விட்ட கண்ணனின் காதலியான "நப்பின்னை" பற்றி முன்பும் எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்திலிருந்து வைணவ - சைவ பக்தி இலக்கியங்கள் வரை, திருமாலின் தேவியாகத் தமிழர் கொண்டாடிய நப்பின்னை, வடநாட்டு பண்பாட்டு ஆதிக்கத்தால் புகழ் பெற்று விட்ட "ராதா - கிருஷ்ண"ருக்கு முன் காணாமலே போய் விட்டாள்.
தமிழ்ப் பண்பாட்டில் நப்பின்னையின் மறைவு படிப்படியாகத்தான் நடைபெற்று முடிந்தது என்றே எண்ணி இருந்தேன். ஆனால் "நின்னையே இரதி என்று" பாடலில் பாரதி எடுத்தாளும் படி, இருநூறாண்டுகளுக்கு முன் கூட, பின்னை புகழ் பெற்றுத் தான் இருந்திருக்கிறாள்.
இதில் சுவாரசியம் என்னவென்றால், இருநூறாண்டுகளுக்கு உட்பட்ட நப்பின்னை பற்றிய இன்னொரு இலக்கியக் குறிப்பை, என் தாயகத்திலேயே என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது என்பது தான்.
கிழக்கிலங்கையில் உள்ளூர் செவிவழிச் செய்திகளை, கல்வெட்டு, காவியம், அகவல் என்ற பெயர்களில் செய்யுள்களாக எழுதிக் கோவில்களில் பேணும் வழக்கம் நிலவி வந்திருக்கிறது. அவற்றில் கற்பனையும் உயர்வு நவிற்சிகளும் அதிகம் என்றாலும், வரலாற்று நம்பகத்தன்மை இல்லாமல் இல்லை. இப்படிப் பேணப்பட்ட சில பாடல்கள் தான் உரைநடையில் எழுதி இணைக்கப்பட்டு "மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்" என்ற பெயரில் ஏட்டுப்பிரதியாக தொகுக்கப்பட்டிருந்தன.
அதில் ஒரு பகுதியை சிற்சில திருத்தங்களோடு கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் "மட்டக்களப்பு மான்மியம்" என்ற பெயரில் எப்.எக்ஸ்.சி.நடராசா வெளியிட்டார். இப்போது கிடைக்கும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தின் முழுமையான வடிவம் 2005இல் வித்துவான் கமலநாதன் தம்பதியினரால் அச்சு வாகனமேறியது. இப்போதைக்கு கிழக்கிலங்கை வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கான தவிர்க்க முடியாத ஆதாரங்களில் ஒன்று, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூல்.
ஆனால், மட்டக்களப்புப் பிராந்தியத்தில் வழக்கத்தில் இருந்த எல்லா பாடல்களும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்வதற்கில்லை. ஆனைகட்டுக் காவியம், பண்டுபரவணிக் கல்வெட்டு, ஊரெழு காவியம், சோனக வரலாற்றுக் காவியங்கள் பற்றி வாய்மொழியில் மட்டும் அறிய முடிகிறது. களுதேவாலயக் கல்வெட்டு, துறைநீலாவணை சீர்பாதச் செப்பேடு, குகன்முறை அகவல் முதலியன வெவ்வேறு இடங்களில் ஏட்டுப்பிரதிகளாகக் கிடைத்திருக்கின்றன. கமலநாதன் தம்பதியினரே, தங்களுக்குக் கிடைத்த பூர்வ சரித்திர ஏட்டுப்பிரதியிலிருந்த அன்பிலாலந்துறைச் சரித்திரம், அயோத்திகாசி பூர்வ சரித்திரம், கலிங்கதேசச் சரித்திரம் முதலியவற்றை "பொருட்பொருத்தம் கருதி தவிர்த்து விட்டோம்" என்று சொல்கிறார்கள். அவை அச்சில் வெளிவராததால் ஏற்பட்டு விடுகின்ற இடைவெளி பூர்வ சரித்திரத்தை ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு புரியும்.
இப்படி பூர்வ சரித்திரத்தில் வெளியாகாத "குகன்முறை அகவல்" எனும் பாடலைப் படிக்கும் வாய்ப்பு, அண்மையில் கிடைத்தது. மட்டக்களப்பின் முதன்மைக் குடிகளில் ஒருவரான முக்குகர், தமிழகத்திலிருந்து வந்து குடியேறியதைச் சொல்லும் பாடல் அது. கண்டி மன்னர் பற்றிய குறிப்பு வருவதால், அது பெரும்பாலும் கடந்த இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்குள் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
குகன்முறை அகவலில் ஓரிடத்தில் இப்படி வருகிறது.

"இராம இராம அரிராமா என்று
சேமமுடனே செங்கோலோச்சி
நாராயணனை தொழுது அடிபணிந்து
காரார் குழலி கணவனை வணங்கி"
முக்குகர்கள் இங்கு குடியேறும் போது பரம வைணவர்கள். அவர்கள் பழுகாமத்தில் தங்கள் குலதெய்வமான திருமாலுக்கு கோவில் கட்டி வணங்கியதை ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். மேற்படி வரிகளை வாசிக்கும் போது ஒருகணம் என்னை தரித்து நிற்கச் செய்தது இந்தச் சொல். "காரார் குழலி கணவனை வணங்கி". திருமால் காரார்குழலியின் கணவனா? யார் அது?
கண்ணனின் தமிழ் நாயகி நப்பின்னைக்கு, அப்பெயர், நல்ல கூந்தலைக் கொண்டவள் (நல்+பின்னை) என்ற பொருளில் வந்தது தான். அவளை வேறு இலக்கியங்களும் கூந்தல் மலர் மங்கை, பிஞ்ஞை, உபகேசி என்றெல்லாம் அழைக்கின்றன. பிஞ்ஞை, கேசம் எல்லாம் கூந்தலைக் குறிக்கும் சொற்கள். குழல் என்றாலும் கூந்தல் தான். காரார்குழலி = கார்+ஆர்+குழலி. கார்மேகம் போல கறுத்த கூந்தலை உடையவள்.
குகன்முறை அகவல் கூறும் காரார்குழலி, நப்பின்னை தவிர, வேறு யாராக இருக்க முடியும்? வெறும் இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்குள் இலங்கையின் கிழக்குக் கரையில் எங்கோ ஒரு மூலையில் எழுந்த நாட்டார் இலக்கியத்தில் பதிவாகி இருக்கிறாள், அந்தத் தமிழர் மறந்த தலைவி. நமக்குத் தலைவி அல்ல; அந்தத் தலைவி பதிவாகி இருக்கும் பாட்டைப் பற்றியே தெரியாது. மண்ணின் மரபு தெரியாமல் இருக்கிறோம் என்ற குறைந்தபட்ச குற்றவுணர்ச்சி கூட நமக்கு இருப்பதில்லை.
🙁
ஒரு சாரார் சொல்வதன் படி, கண்ணம்மா என்பது பாரதி கற்பனையில் கண்ட கண்ணனின் பெண் வடிவம் என்பது உண்மையானால் கண்ணம்மா, நப்பின்னையே தான். உங்களுக்குத் தெரியாமல் இருப்பதாலோ, அல்லது தமிழ் கூறு நல்லுலகம் என்னை மறந்து விட்டதாலோ, நான் இல்லாமல் போவதில்லை. சின்னஞ்சிறு கிளியாய், சுட்டும் விழிச்சுடராய், காற்று வெளியிடையாய், ஏன் "றெக்க" - "காலா"விலிருந்து ஊரூராய் நடந்து சிரிக்க வைத்த சின்னத்திரை கண்ணம்மா வரை, நீங்கள் செல்லம் கொஞ்சும் காதலியர் வரை, என்றென்றும் நீடிப்பேன் நான் என்று நப்பின்னை புன்னகைக்கிறாள் போலும்.
"யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம், எனக்கு உன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே"
சந்தேகமென்ன,
தமிழ் உள்ளவரை
பின்னை, நித்ய கன்னி தான்.
அவள் வாழி.
❤

 

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner