ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 2020 நவம்பர் 21இல் "ஈழத்தில் கண்ணகி வழிபாடு" என்ற தலைப்பில் இடம்பெற்ற சூம் கலந்துரையாடல் யூடியூப்பில் ஏற்றப்பட்டிருக்கிறது. உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. வாய்ப்பளித்த லம்போதரன் ஐயாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
(உரை- 4:45 - 47:00 தொடர்வது: கலந்துரையாடல்)
அந்த உரையின் தொடர்ச்சியாக ஒரு விடயத்தைப் பதிவுசெய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். இது கிழக்கிலங்கையை மையமாக வைத்த கருத்து என்றாலும், முழு தமிழ் கூறு நல்லுலகுக்கும் பொருந்தும்.
தமிழகத்திலும் வட இலங்கையிலும் முழு முன்னெடுப்பில் எடுத்துச் செல்லப்படும், தனித்தமிழ் வழிபாடு என்ற கோட்பாடு கிழக்கிலங்கையில் அவ்வளவாக எடுபடவில்லை என்பது முக்கியமான சமூகவியல் அவதானிப்பு. காரணம் எளிமையானது தான். இங்கு தனித்தமிழில் வழிபாடு செய்வது புதுமை இல்லை. தமிழ்ப் பத்ததிகளின் வழியில், தமிழ் மந்திரங்களும் அகவல் காவியங்களும் பாடி , சடங்கு இடம்பெறும் மரபார்ந்த நாட்டார் தெய்வக் கோவில்கள் இங்கு ஏற்கனவே ஊருக்கு ஊர் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
ஆனால் (வட) இலங்கையில் கண்ணகி வழிபாடு மருவியதற்குக் காரணமாக பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு, நாவலரின் தலைமையில் கண்ணகி கோவில்கள் சைவத்தேவியரின் பெருங்கோவில்களாக மாற்றப்பட்டன என்பது. அந்தக் குற்றச்சாட்டில் முழுமையாக உண்மை இல்லை. ஒரு சமூகத்தின் இயல்பான "மேல்நிலையாக்க" மனநிலையின் முகவராக நாவலரின் தரப்பு செயற்பட்டது என்பதே சரி.
தனித்தமிழ் வழிபாடு இடம்பெற்று வந்த எல்லா நாட்டார் கோவில்களும் தற்போது ஆகமக்கோவில்களாக மாறி வருகின்றன. இப்படி தமிழ் முறை வழிபாடு விலக்கப்பட்டு, வடமொழிப் பூசை வழிபாட்டுக்கு இடம் கொடுப்பதை, பொதுவாக "சமஸ்கிருதமயமாக்கம்" என்று அழைத்து வந்தனர் நாட்டாரியல் ஆய்வாளர்கள். ஆனால் அது சமூகத்துக்கு உள்ளிருந்தே நடத்தப்படுவதும், அவ்வாறு செய்வது சமூகத்தில் பெரும்பான்மையினரால் வரவேற்கப்படுவதும் பரவலாக கவனிக்கப்பட்டதால், இப்போது "மேல்நிலையாக்கம்" என்ற சொல்லாடலையே ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள்.
எளிமையான வாய்ப்பாடு இது தான். பாமர மனதுக்கு தமிழில் வழிபடுவதும், தம்மில் ஒருவர் பூசகராக இருப்பதும், சாதாரணமாக அமைந்த கோவிலின் மடாலயக் கட்டிடமும், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றன. அந்தணரை நியமித்து, வடமொழி வழிபாடு நிகழும், ஆகம விதிப்படி அமைந்த பெருந்தெய்வக் கோவில்களே நியமமானவை (Standard) - இலட்சியமானவை (ideal) என்ற பொதுப்பார்வை, பாமர மனதுக்கு உள்ளது. கோவில்கள் கௌரவம், அந்தஸ்து என்பவற்றுக்கான போட்டிக்களங்களாக இன்று எஞ்சியிருப்பதால், இலட்சிய - நியமக் கட்டமைப்புக்கு தாங்கள் மாறினால் தமக்கு/தம் குடும்பத்துக்கு/தம் சாதிக்கு/தம் ஊருக்கு, கௌரவமும் அந்தஸ்தும் கிடைத்து விடும் அல்லது இன்னும் அதிகமாகக் கிடைக்கும் என்றே பாமர மனது எதிர்பார்க்கிறது .
உண்மையில் நாவலர் சொன்னதை சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், அல்லது நடைமுறைப்படுத்தியிருந்தால், இந்த முரண் இடம்பெற்று இருக்காது. கண்ணகி உமையவளாக முடியாது என்பது நாவலரின் தரப்பு. இன்னொரு பக்கம், 'உமையவளுக்கே பெருங்கோவில் கட்ட முடியும் - ஆகம விதிப்படி மகோற்சவம் முதலியன நிகழ்த்த முடியும்' என்று சொன்னதும் அவரது தரப்பே. நம்மவர்கள் இரண்டையும் இணைத்து விளங்கிக் கொண்டு, கண்ணகி கோவில்களை ஆகம விதிப்படி மாற்றி அமைத்து, அவளை அகற்றி மூலவராக உமையவளை அமர்த்தி, ஆகம விதிப்படி திருவிழா செய்ய முன்வந்து விட்டார்கள். அது தான் அவர்களுக்கும் வசதியாக இருந்தது என்பதே உண்மை.
என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? நாவலர் சொன்னபடி உமையவளுக்கு தனிப்பெருங்கோவில்கள் புதிதாக அமைத்திருக்கலாம். மகோற்சவமும் நடாத்தியிருக்கலாம். ஆனால் கண்ணகியை 'உமையவளாக' மாற்றாமல் வைத்திருக்கலாம். எப்படி? அவள் கோவிலை இடித்து ஆகமவிதிப்படி தூபி, கோபுரத்துடன் அமைத்திருக்கத் தேவையில்லை. பழையபடி மடாலயமாகவே மீளக்கட்டியிருக்க முடியும். ஆகம விதிக்குள் அடங்காத திருக்குளிர்த்தி முதலிய சடங்குகளை தொடர்ச்சியாக செய்திருக்கவும் முடியும்.
"கண்ணகி உமையவள் அல்ல" என்று நாவலர் சொன்னதை "கண்ணகியை மேல்நிலைப்படுத்தாதீர்கள்" என்று புரிந்துகொண்டிருக்க முடியும். அப்படி புரிந்து கொண்டிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்காது. நகைமுரணாக நாவலரையே வட இலங்கையில் மேல்நிலையாக்கத்தை துரிதப்படுத்தியவராக அடையாளம் காண்கிறோம். அவர் சொன்னது ஒருவிதத்தில் சரி, ஆனால் அதை நாம் செயற்படுத்தியது முற்றாகப் பிழை.
ஆனால் இந்த மனப்போக்கை மாற்றியாகவேண்டியது கட்டாயம். இன்றைக்கு குக்கிராமங்களில் எல்லாம், கோவில்கள் இடிக்கப்பட்டு ஆகமவிதிப்படி பெருங்கோவில்களாக மாற்றப்படுகின்றன. அதன் முதலாவது எதிர்விளைவு தமிழ் வழிபாடு அங்கிருந்து இயல்பாகவே அகன்று போவது தான். கிழக்கிலங்கையைப் பொறுத்தவரை தமிழ் முறை சடங்குக்கோவில்கள், வடமொழி மந்திரபூசைக்கு மாறுவதற்கான முதல் படி இதுவே. மடாலயக் கோவில்கள் இடிக்கப்பட்டால், அவை ஆகமவிதிப்படி பிரஸ்தரம், சிகரம், தூபியுடன் அமைக்கப்படுவது தான், தமிழ் வழிபாட்டை அங்கிருந்து அகற்றும் முதன்மையான காரணம்.
ஏனென்றால், சிகரம் - தூபியுடன் அமைந்த ஆகமக்கோவிலொன்றே நம் நியமக் (Standard) கோவில் என்று நம் ஆழ்மனது நம்புகிறது. ஓட்டுக்கூரை வேய்ந்த மடாலயமொன்று, அம்மனதுக்கு "இது நம் கோவில்" என்ற பிடிப்பை உருவாக்கவில்லை. அல்லது, சிற்ப அலங்காரங்கள் கொண்ட கண்டம் -சிகரம் - தூபியே தங்கள் கோவிலுக்கு அந்தஸ்தையும் பெருமிதத்தையும் தருகிறது என்று பாமர மனது எண்ணுகிறது. மேல்நிலையாக்கம்!
செய்யவேண்டியது ஒன்று தான். ஆகமவிதிப்படி அமையாத மடாலயங்களும் நம் கோவில்களே என்பதை நம் ஆழ்மனதை நம்பச் செய்ய வேண்டும். கேரளக்கோவில்கள் அத்தனையும் ஓடுவேய்ந்த கூரையமைப்பைக் கொண்டவை. இலங்கையில் பதினான்காம் நூற்றாண்டில் 'ஸ்தபதி ராயர்' எனும் தென்னகச் சிற்பியால் அமைக்கப்பட்ட பௌத்தக் கோவிலான இலங்காதிலகம், கூரை வேய்ந்தது தான். அதே காலப்பகுதியில் கம்பளை அரசின் அனுசரணையுடன் தேவேந்திர மூலாச்சாரியார் என்பவரால் அமைக்கப்பட்ட எம்பக்கே முருகன் கோவில், அதன் அற்புதமான கூரை வேலைப்பாடுகளால் புகழ்பெற்றது. ஆக, கூரை வேய்ந்த கோவில்களையும் நியமமாக அமைக்கச் சொல்லும் சிற்ப நூல்கள் தென்னகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.
ஒரு உதாரணம் கிடைக்கிறது. அண்மையில் வாசித்த ஒரு குறிப்பின் படி, பாரமேஸ்வர ஆகமத்தில், ஓட்டுக்கூரை வேய்ந்த அமைப்பில் கருவறையை அமைப்பதற்கான விதிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு அங்கு "சூர்ப்பாகாரம்" என்று பெயர். தஞ்சைப்பெருங்கோவிலின் சோழர் கால ஓவியங்களிலிருந்து சிதம்பரத்தில் இத்தகைய விமானமே முன்பு இருந்திருக்கிறது என ஊகிக்க முடியும். பாரமேஸ்வரம், உப சிவாகமங்களில் ஒன்று என்பதால்,அதில் சூர்ப்பாகாரம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள ஓட்டுக்கூரை வேய்ந்த கோவில்களை, மடாலயங்கள் என்று ஒதுக்காமல், சைவர்கள் நியமமாக ஏற்றுக்கொள்ளமுடியும்.
நியாயமாகப் பார்க்கப் போனால், நூறு நூறாண்டுகளாக தென்னகத்தின் எளிமையான எந்தவொரு தங்குமிடமுமே கூரை வேய்ந்தது தான் என்பதால், கோவில்களையும் கூரை வேய்ந்தவையாக அமைப்பதில் தவறிருக்க முடியாது. எனவே நம் கோவில்களின் கருவறை கூரை வேய்ந்திருந்தால் , அதற்கு வெட்கப்படத் தேவையில்லை. அவற்றை தூபி - சிகரத்தோடு அமைத்தால் தான் அவை நியமக்கோவிலாகும் என்று அவற்றை மாற்றியமைக்கவும் தேவையில்லை.
ஆனால், மேல்நிலையாக்கத்துக்கு ஆதரவளிப்பவர்கள் கூறும் ஒரு வலுவான வாதம் மட்டும் இலேசாக இடிக்கின்றது. "எந்தத் தமிழ் அடையாளத்தைக் காப்பாற்ற, கோவில்கள் ஓட்டுக்கூரைகளோடு நீடிக்கலாம் என்று சொல்கிறாயோ, அதே ஓட்டுக்கூரைகளே தமிழ் அடையாளத்தை முற்றாக இல்லாதொழித்து பிற்கால ஆக்கிரமிப்புகளுக்கு இடமளிக்கலாம்" என்பது அது. மடாலயமாக அமைந்த காரணத்தாலேயே கதிர்காமத்தின் நிர்வாகம் முற்றாகப் பெரும்பான்மையினருக்குக் கைமாறியதையும், ஆகம விதிப்படி அமைந்ததால் முன்னேச்சரத்தில், கோணேச்சரத்தில், அது இன்றுவரை கைகூடாமல் இருப்பதையும் அவர்கள் உதாரணமாகக் காட்டுவார்கள்.
இது நம் பிழை. கேரளமும் சிங்களமும் ஓட்டுக்கூரைகளை தம் தனித்துவமான சமயக் கட்டிடக்கலை அம்சமாக முன்வைக்க, அதை சமயக் கட்டிடக்கலையில் முற்றாகத் தவிர்த்தது நம் தவறே. ஆனால் அதைத் தொடரமுடியும். இது சைவக்கோவில் / வைணவக்கோவில் என்று காண்பிப்பதற்கான நுணுக்கமான கட்டிடக்கூறுகளை உள்ளீர்த்து ஓட்டுக்கூரைகளோடு கோவில்களை அமைப்பதொன்றும் பெரிய வேலையில்லை. கருவறைச் சுவரை மட்டும் அதிஷ்டானம், பாதம் முதலிய தென்னக கட்டிடக்கலைக்கூறுகளோடு அமைத்து, பிரஸ்தரம் - சிகரம் - தூபிக்குப் பதில் மேலே கூரை வேய்ந்துவிடலாம். அங்கு ஆகமவழிப்படி வழிபாடு நடைபெறப் போவதில்லை என்பதால், இதில் ஆகமமீறல் என்று அஞ்சத்தேவையில்லை . கிழக்கைப் பொறுத்தவரை, கட்டிடக்கலை அம்சம் ஒன்றும் இல்லாமலேயே கூட மண்டூர் முருகன் கோவிலும், கல்லடி பேச்சியம்மன் கோவிலும் இன்றும் புகழ்வாய்ந்த சைவ மடாலயங்களாக நீடிக்கின்றன. இதில் பின்னையது கீற்றுக்கொட்டகை.
ஆகமப்பெருங்கோவில்கள் எப்படியும் அமைக்கப்படட்டும். என் தனிப்பட்ட நப்பாசை ஒன்றே. இலங்கையில், நாட்டார் கோவில்கள் இடித்துக் கட்டப்படுகின்றதென்றால், அவை ஓட்டுக்கூரையோடே மீளக் கட்டப்படவேண்டும். அதன் மூலம் அங்கு சடங்குவழித் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்படும் முதன்மையான அச்சுறுத்தல் நீங்க வேண்டும்.
இலங்கையின் கிராமப்புறங்களூடே பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அங்குள்ள நாட்டார் கோவில்களுக்குச் சென்று பாருங்கள். "நல்லாப் பேசின சாமி இது," "துடியான அம்மாள் தம்பி இது", "ஏனோ தெரியா, இப்பல்லாம் ஒண்டும் காட்டுது இல்ல" என்று பெருமூச்சு விடும் பலரைக் காண்பீர்கள். கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் தெரியும், ஓட்டுக்கட்டிடம் அல்லது ஓலைக்குடிசை ஒன்றில் அந்த நாட்டார் தெய்வம் பரிதாபமாக வீற்றிருக்க, அருகே ஆகமப்படியான கருவறை, செங்கல்லில் பிரமாண்டமாக எழுந்து கொண்டிருக்கும். அந்தத் தெய்வத்தை விழுங்குவதற்காகத் தவம் தொடங்கும் அரக்கன் போல! அந்தக் கருவறையில் அமர்ந்து நித்திய பூசையை ஏற்கத் தொடங்கும் ஐயன், கண்ணகி, மாரி முதலிய நூறு நூறு தெய்வங்கள், அதன் பிறகு ஒன்றும் பேசுவதில்லை. அல்லது, அவை பேசுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை. அவை என்றைக்குமென அமைதியாகிவிடுகின்றன.

0 comments:
Post a Comment