தென்னம்பிள்ளைக் கலியாணம்

 “தென்னம்பிள்ளைக் கலியாணம்” என் நைண்டிஸ் கிட் நினைவுகளில் மறக்க முடியாத ஒன்று. புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுந்த பின்னர், முதலில் வைக்கப்படும் தாவரங்களில் ஒன்று, தென்னை. அப்படி ஒரு வளவில் வளர்ந்து நிற்கும் தென்னை ஒருத்தி ஓலைக்கூந்தல் விரித்து மதர்த்து நிற்கத்தொடங்கிய நாளிலிருந்து வீட்டிலுள்ள பெண்கள் அவளை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அவளைக் கடக்கும் போதெல்லாம் ஆண்கள் படபடப்புடன் பார்வையாலேயே உச்சி முதல் பாதம் வரை அளந்து நகர்ந்து செல்வார்கள். அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்துவிடும். கூரிய மடல் பாளை அவளில் தோன்றி வெட்கத்தில் தலைகுனிந்து நின்றிருக்கும். அதைக் கண்ட முதல் நாளில் பெண்கள் குரவையிடுவார்கள். வீட்டு ஆண்கள் வெடி சுடுவார்கள். ஆம், அந்த வீட்டில் ஒரு குலமகள் வயதுக்கு வந்துவிட்டாள்.


“எங்கட தென்னம்பிள்ளை பெரியாளாகித்து. இத்தின மணிக்கு தண்ணி வாக்கிற. எல்லாரும் வாருங்கோ” என்று அடுத்த வீட்டு எல்லைமானச் சனங்களுக்கு வட்டா வைக்கப்படும். அவசர அவசரமாக பெண்கள் கூடி பலகாரம் சுடுவார்கள். குரவையிட்டபடியே தென்னம்பிள்ளைக்கு குடம் குடமாக தண்ணீர் வார்த்து ஒரு நல்ல சேலையொன்றை எடுத்துவந்து சுற்றுவார்கள். இருபுறமும் நிறைகுடம் விளக்கு வைத்து தெங்குமகளுக்கு ஆலாத்தி எடுத்து கண்ணூறு கழிப்பார்கள். மஞ்சளும் குங்குமமும் அப்பி, தன் பிறந்த வீட்டின் தாயுடைய, தமக்கையுடைய தங்க நகைகளைத் தரித்த தென்னைப்பெண் நாணத்தில் இலைக்கரம் அசைத்துச் சிரிப்பாள்.

நாங்கள் குஞ்சுகுராலுகள் சுற்றிவர விரிக்கப்பட்ட பாய்களில் அமர்ந்து வரிசையாக வரும் பலகாரம், வாழைப்பழம், தேநீரை ஒருகை பார்ப்போம். பக்கத்தில் அமர்ந்து ஒரு கிழடு பொக்கைவாய் விரித்து “சா, சோக்கான பாளைகா, ஒரு பன்ரண்டு குலை தள்ளப்போகுது”என்று சொல்லி மோவாயில் கைவைத்து வியந்து நடிக்கும்.

இன்னொன்று இரு விரல்களை உதட்டில் வைத்து 'புளிச்' என்று தாம்பூலத்தைத் துப்பியபடி, “வைக்கக்கொள தெம்பிலி எண்டான் நினைச்சிரிக்கிதுகள். ஆனா எனக்கெண்டா கெவுளி மாதிரி தான் படுது. நெடுப்பத்த பாரன். உப்பிடி எங்கயும் உசந்து நிண்டிரிக்கோ தெம்பிலி." என்று கேட்டபடி ஒருக்களிந்து உட்காரும். மூன்றாவது ஒன்று, "எதத்தான் கதைச்சாலும் நசிவிக்கிட்ட வரொண்ணாகா. இளனி தேவாமுறுதம். இனிப்பெண்டா இனிப்பு, அப்பிடி ஒரு இனிப்பு. நசிவிர இலை சொட்டு கூரா இரிக்கிம். கண்டயோ” என்று தனது தாவரவியல் அறிவை கூடியிருப்பவர்களுக்கு விலாசம் காட்டும். அப்படியே பேச்சு கேலி, கிண்டல்கள், ஊர்வம்புகள், கிசுகிசுக்கள் பக்கம் நகரும். நாங்கள் கொஞ்ச நேரத்தில் சலித்து தத்தக்கா பித்தக்கா, கிள்ளிக் கிள்ளிப்பிராண்டி, ஓரம்மா என்று எங்கள் அப்போதைய “கேம்” செயலிகளை இயக்கி விளையாடத்தொடங்கி விடுவோம்.

தமிழில் தென்னை, கமுகின் இளம் தாவரங்களைத் தான் “பிள்ளை” என்கிறோம். தென்னம்பிள்ளை என்ற பெயரே தென்னை ஒரு பிள்ளையாகத் தான் கருதப்பட்டது என்பதைச் சொல்வது தான். வீட்டில் ஒரு தென்னை இருந்தால் போதும், உணவுக்கும், உறைவிடத்துக்கும் அது போதும். தென்னையில் மனிதனுக்குப் பயன்படாத பாகங்களே இல்லை. “கற்பகவிருட்சம்” என்ற செல்லப்பெயர் தென்னைக்கும் உண்டு.

Cocos nucifera என்பது தென்னையின் தாவரவியல் பெயர். தென்னையில் ஒரே தாவரத்தில் ஆண்பூவும் பெண்பூவும் காணப்படுவதால், இது ஓரில்லத் தாவரம் (Monoecious) தென்னம்பாளையில் குரும்பை எனும் பெண்பூக்களும், சுற்றிவர தளிரில் ஆண்பூக்களும் இருக்கும். அவை இணைந்து கருக்கட்டல் இடம்பெற்று குரும்பை குரும்பட்டியாகும். தேங்காய் என்பது வித்து அல்ல. அது தாவரவியலின் படி ஒரு “உள்ளோட்டுச்சதையம்” (drupe). வித்தைச் சுற்றி ஓடும், கனியப்படையும் சூழ்ந்தவை இவை. நடுவில் நீர் கொண்ட ஒரே உள்ளோட்டுச்சதைய தாவரம் தேங்காய் மட்டும் தான்.

தேங்காய் நம் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் தாவரம். சங்க இலக்கியங்களில் தென்னை என்ற பெயர் இல்லை. பெரும்பாணாற்றுப்படை முதலிய ஓரிரு இடங்களில் “தெங்கு” என்ற பெயர் வருகிறது. அதைத் தவிர பெரும்பாலும் தாழை என்றே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்று நாம் தாழை (Pandanus fascicularis) என்று அழைக்கும் தாவரத்துக்கும் "தாழை, கைதை" என்ற பெயர்கள் அக்காலத்தில் புழங்கியிருக்கிறது. சங்க இலக்கியத்தில் "தாழை" என்ற பெயர் வருமிடங்களிலெல்லாம் தொடர்கின்ற ஏனைய வருணனைகளைக் கொண்டே அது தென்னையா, இன்றைய தாழையா என்று ஊகிக்க முடியும்.

உதாரணமாக "தாழை இளநீர் விழுகுலை உதிர" என்று வருகின்ற திருமுருகாற்றுப்படை வரியில் (307) இளநீர்க்குலை வருவதால் அங்குள்ள தாழை தென்னை. அதுவே "மடல் தாழை மலர் மலைந்தும்” என்ற பட்டினப்பாலை வரிகளில் (88) அது இன்றைய தாழை.

தாழைமரத்தின் (தேங்காய்) குலை சிதறி அருகிலுள்ள கமுக மரத்தின் குலையில் விழ, அது உதிர்ந்து வாழைக்குலையில் விழ, அவற்றின் பாரத்தால் நைந்த வாழைப்பழங்களிலிருந்து சீறும் சாறு பரவி அருகிலுள்ள வயல் நிலம் இனிய சேறாக மாறும் அழகான வர்ணனைக் காட்சி திருஞானசம்பந்தரின் திருவைகாவூர்ப் பதிகத்தில் இடம்பெற்றுள்ளது (திருமுறை 3.71.1)

இப்படித் தென்னையைத் தாழை என்று அழைக்கும் வழக்கம் நீண்ட நாட்கள் நீடித்திருப்பதற்குச் சாட்சியாக பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சீறாப்புராணத்தில் "தெள்ளுநீர்க் குரும்பை குலைபல சுமந்து செறிதரு தாழை" (1.21.1) என்று வரும் வரியைச் சொல்லலாம். மலையாளத்தில் உயரம் குறைந்த தென்னை இனமொன்று இன்றும் தாழை என்று அழைக்கப்படுவதை எழுத்தாளர் ஜெயமோகன் பதிவுசெய்திருக்கிறார்.

தெங்கின் ஒத்தகருத்துச் சொல்லாக தென்னை என்பது பத்தாம் நூற்றாண்டு பிங்கல நிகண்டிலேயே (9:100) முதன்முதலாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதும், தமிழ் இலக்கியம் முழுவதும் “தெங்கு” என்ற பெயர் தான் வருகிறது. இன்று தெங்கு என்ற பெயரை தேங்காயில் மட்டுமே (தெங்கு+காய்) தக்கவைத்திருக்கிறோம். ஆனால் தென்னை பேச்சுவழக்கில் நீடித்திருக்கவேண்டும். சொற்பிறப்பியலின் படி, தென்னுதல் என்றால் நீண்டு வளைதல். அப்படி தென்னிய மரம், தென்னமரம். அதைத் தென்றிசை மரமாகவும் சொல்வார்கள். தமிழகத்தின் தென்பகுதியிலும், தென்கேரளம், இலங்கையிலும் தான் தென்னை செறிந்து வளர்கிறது.

ஹரப்பாவில் தென்னை பயன்பட்ட சான்றுகள், தமிழகம், கேரளத்தில் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேங்காய் உயிர்ச்சுவடுகள் என்பன கிடைத்துள்ளபோதும் மரபணுவியல் சோதனைகளின் அடிப்படையில் தென்கிழக்காசியாவே தென்னையின் தாயகமாகச் சொல்லப்படுகின்றது.

அயனமண்டலத் தாவரமான தென்னை, வாஸ்கோடகாமாவின் வருகைக்கு பின்னர் தான் ஐரோப்பியரிடம் பரவலாக அறியப்பட்டது. 1500களில் எழுதப்பட்ட சில ஐரோப்பியக் குறிப்புகளில் அது "தேங்ஙா" என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. சாவக (ஜாவா) மொழியில் அதற்கு க்லபா (Kelapa) என்று பெயர். அச்சொல்லைக் கடன் வாங்கிய ஒல்லாந்தர் அந்த மரத்தைக் “கிளாப்பஸ்” (Klappus) என்றார்கள். ஆனால் இன்றைய கோகோநட் (Coconut) என்ற பிரபலமான பெயருக்குச் சொந்தக்காரர்கள் போர்த்துக்கேயர்கள் தான். அவர்கள் மொழியில் கோக்கஸ் (Cocos) என்றால் தலை. தேங்காயின் மூன்று துளைகள் ஒரு முகத்தை நினைவூட்டுவதால், அதற்கு அந்தப் பெயர்.

தேங்காயைத் தலையாக உருவகிக்கும் மரபு இந்தியத் துணைக்கண்டத்துக்கும் உரியது தான். மூன்று கண்களைக் கொண்டிருப்பதால் அது முக்கண்ணனான சிவன். இன்னொரு நாட்டார் கதையின் படி, தேங்காய் என்பது விசுவாமித்திரரால் மனித உடலோடு விண்ணுலகுக்கு அனுப்பப்பட்ட திரிசங்கு. அவன் இந்திரனால் வெளியேற்றப்பட்டபோது விசுவாமித்திரரால் உருவாக்கப்பட்ட தண்டு மூலம் அந்தரத்தில் - திரிசங்கு சொர்க்கத்தில் தாங்கப்பட்டான். அது தான் தென்னை மரம். தேங்காய் என்பது திரிசங்கு தான். உரித்த தேங்காயில், அவன் உங்களை ‘அந்தரப்பட்டு’ வாய் திறந்து விழித்துப் பார்ப்பதைக் காணலாம்.

தேங்காய், உரிமட்டை, சிரட்டை, தேங்காய்ப்பூ, தெங்கெண்ணெய், தென்னங்கள்ளு, கொப்பறா என்று தென்னையின் பல்வேறு பயன்களைக் கண்டுகொண்ட ஆங்கிலேயர் அதன் செய்கையை இலங்கையில் ஊக்குவித்தனர். இலங்கையில் பொருளாதார ரீதியில் தென்னை பெருமளவு பயிரிடப்படும் புத்தளம், சிலாபம், குருநாகல் மூன்று இடங்களும் 'தெங்கு முக்கோணம்' என்று அழைக்கப்படுவதுண்டு. ஆனால் இலங்கை முழுவதும் தென்னை பரவலாகப் பயிரிடப்பட்டு வந்திருக்கிறது. பிரித்தானியருக்கு முன்பேயே இங்கு தென்னந்தோட்டங்கள் பரந்து நின்றிருக்கின்றன.

வட இலங்கையில் இளநீரைக் குடித்து தாகத்தைப் போக்குமளவுக்கு மழைவீழ்ச்சி குறைவு என்று பதிவு செய்திருக்கிறார் இடச்சு பாதிரியார் பால்டியஸ். மட்டக்களப்புக்கு தெற்கே 'கிளாப்பஸ்' மரங்கள் பயிரிடப்பட்டிருந்ததை இடச்சு வரைபடமொன்று குறிப்பிடுகிறது. ஒல்லாந்தர் 1602இல் முதன்முதலாக மட்டக்களப்புக்கு வந்தபோது, அங்கிருந்த திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், 'கோக்கஸ்' மரங்களுக்கு மத்தியில் நின்றதை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டு வரை எங்கள் ஊர்ப்பகுதி முழுவதும் தென்னந்தோட்டங்கள் தான். இங்கு ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் படிப்பிக்கும் போது மாணவர்களைத் திட்ட “கோமாரித்தோட்டத்தில் தேங்காய் ஆய்வது போல” என்றோர் பழமொழி வழக்கில் இருந்திருக்கிறது. கோமாரி ஊரிலிருந்த தென்னந்தோட்டம் பெரியது. அங்கு வரிசையாக நிற்கும் தென்னை மரங்களில் தேங்காய் பறித்தபடி சென்றால், கடைசிமரத்தில் தேங்காய் பறிக்கும் போது, முதல் மரத்தில் மீண்டும் குலை தள்ளிவிடும். 'மறுபடியும் முதலிலிருந்து ஆயவேண்டும். பாடம் படிப்பது சிலநேரங்களில் அப்படித்தான்.

சிங்கள மரபிலும் தென்னைக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிங்களத்தில் அதன் பெயர் “பொல்”. சிங்கள அறிஞர் வில்லியம் கைகர், அது “உள்ளீடற்றது, கோறையானது” என்ற பொருள் கொண்ட “புல அல்லது புட” என்ற சங்கதச் சொல்லிலிருந்து வந்தது என்கிறார். இப்படியெல்லாம் சுற்றி வளைக்காமல், உள்ளீடற்றது, கோறையானது, பிளக்கப்படுவது என்றெல்லாம் அர்த்தம் கொண்ட போழ், பொள் முதலிய சொற்கள் ஏற்கனவே தமிழில் உள்ளன.

முதல் அக்கிரபோதி (மவ 42:15), முதல் பராக்கிரமபாகு (72:12) உள்ளிட்ட சிங்கள மன்னர்கள், தென்னந்தோட்டங்களை அமைத்துப் பராமரித்திருக்கிறார்கள். எனினும் சில சிங்கள மரபுரைகளில், தென்னை ஒரு வந்தேறித்தாவரம் தான் என்பது பதிவாகி இருக்கிறது. தென்னிலங்கையில் காலிக்கு அருகே இருக்கும் வெலிகம கடற்கரையில் குட்ட நோயால் பீடிக்கப்பட்ட குஷ்டராஜா எனும் அரசன் தேங்காயைக் கண்டெடுத்து அதன் எண்ணெயை உருக்கிப் பூசி சுகமடைந்தான் என்பது அங்குள்ள ஐதிகம். இந்தக் குஷ்டராஜா யாரென்று தெரியவில்லை. ஆனால் மகாவம்சத்தின் படி, தென்னை மரம் துட்டகைமுனுவின் காலத்திலேயே இருக்கிறது. எல்லாளனின் படைகள் திரண்டிருந்த விஜித நகரத்தை துட்டகாமணியின் படைகள் கைப்பற்றியபோது அவனது படைத்தலைவர்களில் ஒருவனான கோதையன், தென்னை மரத்தைத் தோண்டித் தூக்கி தமிழ் எதிரிகளை அடித்துக்கொன்றான் (மகாவம்சம் 25:44-46)

வேறொரு சிங்கள நம்பிக்கையின் படி, தன்னை வஞ்சித்து ஏமாற்றிய குவேனியால் விஜயன் சபிக்கப்படுகிறான். அவளது சாபத்திலிருந்து தப்ப, ஏழு கடல்களுக்கு அப்பால் இருக்கும் ரன் தெம்பிலி (செவ்விளநீர்) மரம் ஆனந்த தேரரால் இலங்கைக்குக் கொணர்ந்து நடப்படுகிறது. விஜயனால் தேங்காய் இலங்கைக்கு அறிமுகமான கதை, பேய் விரட்டுவதற்காக நிகழும் “சன்னி யக்கும” சடங்கில் பாடப்படும் நாட்டார் பாடல்களில் இடம்பெற்றிருக்கிறது. இதை சிங்கள இலக்கியத்தின் கவியரசரில் ஒருவரான தோட்டகமுவை ஸ்ரீ ராகுலதேரர் (1408 - 1491) இயற்றியதாகச் சொல்கிறார்கள். இந்தப்பாடலில் பாடப்படும் இன்னொரு கதை சுவையானது.

“ஏழு கடல்களுக்கு அப்பால் இருந்த இருகல் நாட்டு அரசியின் மகன் கணதெவி. அவன் பிறந்த ஏழு நாளுக்குப் பிறகு இடம்பெற்ற விழாவில் அவன் தலை இசிவரனால் கொய்யப்பட்டது. அந்தத்தலையை மூன்று காத தூரத்தில் இருந்த தன் தோட்டத்தில் எறிந்தான் சக்கரதேவன். அந்தத் தலையிலிருந்து நாளிகேர மரம் முளைத்தது. மூன்று மாதங்களில் ரன் தெம்பிலி, கொன் தெம்பிலி, நவிசி, போதிரி முதலான ஐந்து கனிகள் அம்மரத்தில் காய்த்தன.

இப்படி, சடாமகுடம் கொண்ட முக்கண் தெய்வம், கணதெவியைத் தந்தான். கணதெவி பொல் மரத்தைத் தந்தான். இசிவர தெய்வத்தாலேயே பொல்லிற்கு மூன்று கண்கள் கிடைத்தது. பொல் மரத்தின் அடியில் பூமாதேவி வசிக்கிறாள். அதன் தண்டில் வீற்றிருப்பவன் மகாகாளன் எனும் நாகராஜன். அதன் உச்சியில் வாழ்பவன் யானைகளின் அரசனான கணபதி. அதன் விதையில் வாழும் தெய்வம் விஷ்ணுவும் தேவேந்திரனும். கேளுங்கள். அத்தனை பெருமை படைத்தது ரன் தெம்பிலி மரம்”

இந்தக் கதையில் இசிவர தெவி என்பது ஈஸ்வரதேவன் - சிவன். அப்போது மனிதத்தலையோடு இருந்த பிள்ளையார் பார்வதியைச் சந்திக்கவிடாது தன்னை எதிர்த்தபோது சிவன் அவரது தலைகொய்தார் என்பது ஒரு சைவ புராணக்கதை. பிறகு தான் விநாயகருக்கு யானைத்தலை உண்டானது. கணதெவியின் - பிள்ளையாரின் வெட்டப்பட்ட தலையே தேங்காய் என்கிறது இப்பாடல். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் சைவத்தமிழரிடம், பிள்ளையாருக்கும் தேங்காய்க்குமான தொன்மத் தொடர்பு என்ன என்பது மொழி வழியிலோ, சமய வழியிலோ எங்கும் பதிவாகவில்லை. முரண்நகையாக அதை பதிவுசெய்து வைத்திருப்பவர்கள் சிங்களவர்கள்.

இன்னொரு சம்பவத்தைச் சொல்லவேண்டும். இளநீர் நம்மில் பெரும்பாலானோருக்குப் பிடித்த பானம். குளிர்பானங்களுக்குப் பதிலாக இளநீரைக் குடியுங்கள் என்பது இன்றும் பல இயற்கையுணவு விரும்பிகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அளவுக்கு மீறினால் இளநீரும் நஞ்சு. இளநீரிலுள்ள மிகைப் பொட்டாசியம், சிறுநீரகத்தைப் பாதித்து உயிரையும் பறிக்கக்கூடியது. இதைக் கண்டறிந்து இளநீரை ஒரு கொலைப்பானமாகப் பயன்படுத்தியதும் நம் அதே முன் தோன்றிய மூத்தகுடி தான். தெரியுமா?

பல ஆண்டுகளுக்கு முன் அது நடந்தது. தென் தமிழகத்தின் ஊரொன்றில் நேரங்கெட்ட நேரத்தில் அரக்கப்பரக்க ஓடிவந்து பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருக்கிறார் ஒரு முதியவர். தன்னை தன் வம்சாவழியினர் கொல்லப்போகிறார்கள். தன்னைக் கொன்ற பின் சொத்தைப் பிரிப்பது எப்படி என்பதைப் பற்றி அவர்கள் பேசுவதை தான் ஒட்டுக்கேட்டேன் என்றாராம் அவர். எப்படிக் கொல்ல முயன்றிருக்கிறார்கள்? அளவுக்கு மிஞ்சி இளநீரைப் பருகக்கொடுத்து. பொலிஸ் துருவித்துருவி விசாரிக்கத் தான் விடயம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. அது அங்கு “தலைக்கு ஊத்தல்” என்ற பெயரில் வெகுநாள் நீடித்து வந்த மரபு.

தலைக்கூத்தல் பெரும்பாலும் கருணைக்கொலையாகத் தான் அங்கு வழக்கிலிருந்து வந்திருக்கிறது. வாழ்ந்து முடித்தவர்களின் வாரிசுகளோ, அல்லது வாழ்ந்து முடித்தவரே தானாகக் கேட்டுக்கொண்டோ இது இடம்பெற்றிருக்கிறது. குறித்த முதியவரை நீராட்டி அலங்கரித்து சுற்றம் சூழ சாகும் வரை இளநீரை வெட்டி வெட்டிக்கொடுப்பார்கள். இந்த தலைக்கூத்தல், ஒரு கோலாகலச் சடங்காகவே இடம்பெற்று வந்திருக்கிறது. இந்தச் சம்பவத்துடன் பொலிசும் சமூக அமைப்புகளும் விழித்துக்கொண்டுவிட்டதால், தலைக்கூத்தல் இப்போது அருகி மறைந்துவிட்டது என்கிறார்கள்.

“இந்த மனிதனைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. வந்தேறித் தாவரமான தன்னை சொந்தப் பிள்ளை போல் பாவித்து சடங்கு செய்து பார்க்கிறான். ஆனால் தனக்குள் பூர்வீகம், இனப்பெருமை பேசி ஒருவனோடொருவன் வெட்டிச்சாகிறான். கோடையில் தன் நீரை அமிர்தமாக அருந்தி தன்னை தெய்வமாக வணங்குகிறான். அதே. இளநீர் மூலம் தன்னவர்களையே கொலையும் செய்யத் துணிந்திருக்கிறான். இந்த மனிதன் தான் எத்தனை விசித்திரமானவன்.”

பாவம் தேங்காய். நூறு நூறாண்டுகளாய் முக்கண்களை விரித்து வியந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் வியப்பை கவனிக்காமலே தொட்டுக் கும்பிட்டு விட்டு பிள்ளையாரின் முன் ஓங்கி அடிக்கிறான் மனிதன். தேங்காய் துண்டு துண்டாகச் சிதறுகிறது. சிறுவர்கள் ஓடிவந்து தேங்காய்ப்பாதிகளை பொறுக்கிக் கொள்கிறார்கள். எஞ்சிய ஒரு துண்டை ஒரு பிச்சைக்காரன் பொறுக்கிக் கொள்கிறான். அருகே வந்து வாலாட்டும் தெருநாய்க்கு புன்னகைத்தபடி அதன் பாதியைப் போடுகிறான். இது எதையும் கவனிக்காமல் “பிள்ளையாரப்பா, தேங்காய் உடைத்துவிட்டேன். என் வேண்டுதலை நிறைவேற்றிவிடு” என்று நேர்ந்தபடி சுற்றி நடக்கிறான் அடியவன். தேங்காய் சிதறிய கல்லில் சொட்டி வழியும் இளநீரைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்கிறார் யானைத்தலைப் பிள்ளையார்.

“தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்”

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner