தினக்குரல் செவ்வி
"அலகிலா ஆடல் : சைவத்தின் கதை" என்ற உங்கள் நூலின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இந்தப் பெயர் பற்றியும் அதன் பொருத்தப்பாடு பற்றியும் கூற முடியுமா? தமிழக எழுத்தாளர் ஜெயமோகன், சைவ சித்தாந்த முன்னோடியான ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை பற்றிய கட்டுரையொன்றில், சிவசக்தியின் முடிவிலா நடனம் எனும் சைவக் கோட்பாட்டை விவரிக்க இந்த “அலகிலா ஆடல்” என்ற சொல்லாடலை எடுத்தாள்கிறார். சிறு வயதிலிருந்தே "அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்" என்ற பெரியபுராண வரிகள் ஏற்படுத்திய ஆர்வ உந்துதலே இப்பெயரைச் சூட்டவேண்டி நேர்ந்தது. நூலின் ஐந்து அத்தியாயங்களையும் ஐந்தொழில்களாலேயே அழைக்கலாம் என்ற சிந்தனை ஏற்பட்டதும் இந்நூல் இயல்பாக சிவநடனத்தை நோக்கியே செல்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்துவது போல் இருந்தது. சிவனின் எல்லையற்ற திருவிளையாடல், முடிவற்ற நடனம் என்ற கோணத்தைக் காணும் எவருக்கும், அந்நடனம், அந்த ஆடல், இந்நூல் விவரிக்கும் சைவத்தின் வரலாற்றோடு எப்படிப் பொருந்துகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். “அலகிலா ஆடல்: சைவத்தின் கதை” நூலில் எத்தகைய விடயங்களை முக்கியமாகக் கூறியிருக்கிறீர்கள்? ...