தந்தனத்தோம்
தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, இந்தக் கதையைக் கேளுங்கள். யாரும் அறியாமல் மறந்துவிட்ட கதை இது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தத் தீவில் புலவரெல்லாம் பாடி, இன்று எவர் செவியிலோ நாவிலோ எஞ்சியிருக்காத அரிய பாடல் இது. அன்னையரின் பாடல். ஏழு அன்னையரின் பாடல். இதைக் கேட்பதால் உங்கள் ஏழு பிறவியும் நலன் பெறும். அன்னையரால் உலகம் ஆளப்பட்ட பழங்காலத்தில் இது நடந்தது. பஃறுளி ஆறு பாயும் பன்மலை அடுக்கத்து உச்சியில் பேரன்னை ஒருத்தியால் ஆளப்பட்ட குமரி நாடு இருந்தது. அவள் ஆட்சியில் மண் செழித்தது. மாதர் சிறந்தனர். மழலைகள் திகழ்ந்தன. ஆனால் பகலவனையும் பால்நிலவையும் கொண்டு அவர்கள் அளந்த காலத்தில் அணுவளவு தவறு இருந்தது. பேரன்னை மேற்குக் கடல் தாண்டி வந்த வணிகர்களிடமிருந்து திருத்திய வான் கணிப்பை தெரிந்து கொண்டாள். அவர்கள் விண்மீன்களைக் கொண்டு காலம் கணித்தனர். அவள் உருட்டிய சோழிகளில் எழுந்து எதிர்காலத்தை சொல்லி அச்சமூட்டின கோள்கள். கிழக்கே நாகர்கள் வாழும் பெரும் தீவில் அவளது சந்ததியர் எஞ்சவேண்டும் என்று கூறின நாள்கள். பேரன்னை தன் நாட்டி...