தைத்திருநாளும் தமிழுலகும்
வழக்கமாக தைப்பொங்கலன்று பேஸ்புக் வந்தாலே "சித்திரையா, தையா, எது தமிழர் புத்தாண்டு?" என்று, 'உலக தமிழ்ப்புத்தாண்டு பாதுகாவலர் சங்கம்' சார்பாக பொங்குவது தான் என் வழக்கம். இம்முறை அந்தச் 'சங்கம் முக்கியமில்லை; சாப்பாடு தான் முக்கியம்' என்ற சரித்திர முக்கியத்துவம் மிக்க முடிவை எடுத்திருப்பதால் ஒரு 'பொங்கல்' சாப்பாட்டுப் பதிவு. 😊 'பொங்கல்' என்ற சொல்லுக்கு சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை "கொதித்து மேலெழல்" அல்லது "செழித்தல்" என்ற பொருள் மட்டும் தான் உண்டு. அது ஒரு உணவுப்பொருளின்பெயராக முதன்முதலாக சீவக சிந்தாமணியில் தான் வருகிறது. "மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்" என்கிறார் திருத்தக்கதேவர். சிந்தாமணியின் காலம் 9ஆம் நூற்றாண்டு என்று கொள்ளப்படுகிறது. அதற்கு முன் பொங்கல் என்று ஒரு சாப்பாடு இருக்கவில்லையா? என்று கேட்டால், சரியாகச் சொல்லமுடியாது. சம்பந்தர் தன் மயிலைப் பதிகத்தில் தைப்பூசத்தில் பெண்கள் தயாரிக்கும் " நெய்ப்பூசு ஒண்புழுக்கல்" எனும் உணவு பற்றிப் பாடுகிறார். ...