சிங்களக் கல்வெட்டில் கலி ஆண்டு
கலியாண்டுத் தொடரின் பாவனையை இலங்கையில் தேடிக்கொண்டிருந்தபோது முக்கியமான தொல்லியல் சான்று ஒன்று கிடைத்தது.
கண்டி நகருக்கருகே மாவலியாற்றின் கரையில் "கம்பளை" ஊரில், கண்டி அரசு தோன்றுவதற்கு முன்னர் “கங்காசிறீபுர அரசு” நூறாண்டுகள் நீடித்திருந்தது. அந்தக் கங்காசிறீபுரத்தின் பழைமைவாய்ந்த விகாரங்களில் ஒன்றான நியங்கம்பாய (Niyamgampāya) இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள அதன் கட்டுமானம் இருநூறாண்டுகள் பழைமைவாய்ந்தது என்றபோதும், அவ்விகாரம் அதற்கும் பல நூறாண்டுகள் தொன்மையானது என்கிறார்கள். கண்டியின் கடைசி மன்னன் சிறீ விக்கிரம இராசசிங்கன் காலம் வரை (1804) இடம்பெற்ற தொடர்ச்சியான திருப்பணிகளால் அங்கிருந்த தொல்பொருட்கள் பல மறைந்தொழிந்துவிட்டன.
அப்படி, நியங்கம்பாய விகாரத்தில் இருந்த கம்பளை அரசன் மூன்றாம் விக்கிரமபாகுவின் (1357 - 1374) சிங்களக் கல்வெட்டொன்று இன்று மறைந்துவிட்டது. ஆனாலும் நல்லூழாக ஏட்டில் எழுதிவைக்கப்பட்ட அதன் பிரதி கிடைத்திருக்கிறது. இலங்கையில் கலி ஆண்டின் பயன்பாடு பற்றிய மிகப்பழைய சான்றுகளுள் ஒன்று அது.
விக்கிரமபாகு அரசனின் ஆட்சியாண்டு மூன்று ஆண்டுக்கணக்குகளில் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
“சக ஆண்டு 1295, புத்த ஆண்டு 1916, கலியாண்டு 4474 மாசி மகம் நவம் மாதத்தில்" விக்கிரமபாகு அரசரின் பதினேழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டானது, அளகைக்கோன், ஆரிய வீரர்களை அழித்ததையும் ஏனைய அரச அலுவலருடன் இணைந்து, செயமகாலேனன் பிரிவேனா, நியங்கம்பாய விகாரங்களுக்கு திருப்பணி செய்து மானியங்கள் அளித்ததையும் சொல்கின்றது. (அழித்ததையும், அளித்ததையும்... ஆகா.. கவிதை!
)
வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கல்வெட்டைப் பொறிக்கும் ஆணையில் பின்வருவோர் கையெழுத்திட்டுள்ளனர்.
- விக்கிரமபாகு தேவ[ர்]
- விசயவாகு மாப்பா (இளவரசன்)
- பராக்கிரமபாகு மாப்பா (இளவசரன்)
- அளகைக்கோனார்
- செயமகாலே சிடான (செட்டியார்)
- முதலிமார்.
- மூல அகம்படி நெற்றி அகம்படி உள்ளிட்ட தமிழ், சிங்கள சேவையாளர்கள்.
- பிராமணர்கள்.
- செட்டிமார்.
குறிப்பு 1:
விக்கிரமபாகு அரசரின் ஆட்சியின் ஆரம்பத்தில் தான் யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தி கம்பளை அரசு மீது போர் தொடுத்து இலங்கையின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ஆட்சிசெலுத்தினார். கொழும்பு கோட்டை அருகே குடியிருந்த அளகைக்கோனின் உதவியுடன் அவரிடமிருந்து கம்பளை அரசை மீளக் கைப்பற்றினார் விக்கிரமபாகு.
முரண்நகையாக இக்கல்வெட்டில் “ஆரிய வீரர்கள்” என்று சொல்லப்படுவோர் வட நாட்டவர் அல்லர்; கம்பளைக்கு வடக்கே இருந்த யாழ்ப்பாணாயன் பட்டினத்து ஆரியச் சக்கரவர்த்தியின் வீரர்கள்! அவர்களைத் தோற்கடித்த அளகைக்கோன் சேரநாட்டுத் தமிழன். கிட்டத்தட்ட 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆரம்பித்த கம்பளை அரசரின் மூலமரபும் தமிழ் யாழ். அரசரின் மூலமரபும் ஒன்று தான் என்ற கருத்தும் உள்ளது.
குறிப்பு 2:
கலியாண்டை நிகழ் ஆண்டு, கடந்த ஆண்டு என்று இரு வகையில் குறிப்பிடலாம். கடந்த ஆண்டுக் கணக்கை விட நிகழாண்டுக் கணக்கு ஒரு ஆண்டு அதிகமாயிருக்கும். இலங்கைப் பஞ்சாங்கங்களும் சில தமிழகப் பஞ்சாங்கங்களும் மொரீசியசு நாட்டினரின் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் “நிகழாண்டுக்” கணக்கில் கலியாண்டுத் தொடரைக் குறிப்பிடுகின்றன. தமிழகத்தின் வேறு சில பஞ்சாங்கங்கள் ஏற்றுக்கொள்ளும் மரபார்ந்த “கடந்த ஆண்டுக்” கணக்கை தமிழகத்தவரும் தென்னாபிரிக்க நாட்டுத் தமிழரும் பின்பற்றுகின்றனர். எனவே 2026 ஏப்ரல் 14இல் தமிழுக்குப் பிறப்பது நிகழும் கலியாண்டு 5128 / கலிகடந்து 5127ஆம் ஆண்டு.
படம்:
சிவனொளிபாத மலை உச்சி. 1860 பிரித்தானியப் பயணி ஒருவரின் கோட்டு வரைபடத்திலிருந்து செய்தெண்மை (AI) மூலம் மீள்கட்டமைக்கப்பட்டது. புத்தாண்டு தினத்தன்று சமனொளிபாத மலையிலேறி வழிபடுவது சிங்களவரின் வழக்கமாக இருந்தது என்பதை 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்சு பதிவுசெய்துள்ளார்.
மூன்றாம் விக்கிரமபாகுவின் ஆட்சிக்கு சற்று முன்பு இலங்கை வந்த இசுலாமியப் பயணி இபன் பதூதாவின் ஆதம் மலைப் பயணத்திற்கு வழிகாட்ட, அங்கு ஆண்டுதோறும் யாத்திரை செல்லும் நான்கு சைவ சமய யோகிகளுடன், பிராமணர் அடங்கிய தன் பல்லக்குக் குழுவை யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தி துணைக்கு அனுப்பியிருந்தார்.

Comments
Post a Comment