ஆயிரங்கால் மண்டபம் (கதை)
நன்கு விடிந்திருந்தது. இரவெல்லாம் அழுது வீங்கிச் சிவந்த கண்களுடன் மனைவி வாசற்படியில் அமர்ந்திருந்தாள். உறவினர்களெல்லாம் கூடிநின்றார்கள். தூரத்தில் அவரைக் கண்டதுமே தலைவிரிகோலமாக ஓடிவந்து கட்டியணைத்து அழுதவள், தோளில் அறைந்து திட்டினாள்.
"ஐயோ மனுசா... எங்க கிடந்து வாறாய்.. உன்னக் காணாம எங்கெல்லாம் தேடுற...."
அவள் நன்கு பயந்திருந்தாள். அவர் பெருமிதத்துடன் தொண்டையைச் செருமினார். நடந்ததெல்லாம் சொல்ல மகிழ்ச்சியோடு வாயைத் திறந்தவருக்கு அடுத்தகணம் அந்த எச்சரிக்கை நினைவுக்கு வந்தது.
" இங்கு நடக்கும் எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இது என் கட்டளை"
"அது.... அது ஒண்டுமில்ல... சிவலை காணாத்துப் பொயித்து. தேடிக் கொண்டு சங்கமக்கண்டிக் காட்டுக்குள போன நான் வழி மாறித்தனே..."
"எண்ட தலே.. அங்கென்னத்துக்கு தனிய திரிஞ்ச நீ..... தலை தப்பின தம்புரான் புண்ணியம்..."
"செரி கண்ணத் துறை.. அதான் வந்தித்தனே... எல்லாரும் பாத்து சிரிக்குதுகள் ஒள்ளம் தள்ளி நில்லு..." அவர் சிரித்தபடி தன்னை அணைத்திருந்த அவள் கைகளை விடுவித்தார். வெட்கத்துடன் நெளிந்த அவள் "செரி செரி... பக்கத்துக் காளயடி பொடியனிட்டயாவது சொல்லிவுட்டிரிக்கலாமே.. நானும் வேறங்கயும் பொய்த்தயோண்டு நினைச்சி பயந்துத்தன்" என்றாள் நிம்மதியுடன்.
"எங்க போற நான் உன்ன வுட்டு.."
"கொஞ்சின காணும். போய் குளிச்சி மாத்துடுத்து வா.. சாப்பாடு எடுத்து வக்கிரன்.." அவள் திரும்பவும் அவர் தோளில் அடித்து வீட்டின் உள்ளே நுழைந்தாள்.
"என்ன ஆளே.. ராவு சொல்லாம கொள்ளாம நீ இல்லண்டோண, உண்ட மனிசி அடிச்சிச் சொல்லிக் கத்தினாவு.. நீ அயலூரில வேறங்கயோ கொளுவித்தாயாம் எண்டு.."
பக்கத்து வீட்டு மச்சான்காரன் கண்ணடித்தான்.
"ஓ அதொண்டு தான் குறைச்சல் உப்ப.. நட நீ முதல்.."
"எனக்கெண்டா தெரியாப்பா...."
அவர் முறைக்க அவன் சிரித்தபடி நடந்தான். சூழ்ந்து நின்றவர்கள் எல்லாம் மெல்லக் கலையத் தொடங்கினார்கள்.
கிணற்றடிக்கு குளிக்கப் போனவர் வேட்டியை அவிழ்த்த போது, அங்கு இருந்த அந்தத் துணி முடிச்சில் அவர் கைபட்டது. உடலெங்கும் புல்லரித்தது. முந்தைய நாள் இரவு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. உண்மையிலேயே கண்டதெல்லாம் கனவா இல்லை நனவா.....
***********
முந்தைய நாள் மாலை. அவரது மந்தையில் சிவலை மாட்டை மட்டும் காணவில்லை. அந்தி சாயும் நேரம் வந்தபோது இன்னும் கொஞ்ச தூரம் போய் தேடுவோம் என்று தான் காட்டுக்குள் நுழைந்தார். கொஞ்சம் பயமாக இருந்தாலும் சித்திரா பௌர்ணமி தானே! நிலவு எறிக்கும். வெளிச்சத்தில் திரும்பிவிடலாம் என்று நம்பிக்கை இருந்தது. வேகமாக நடந்தவருக்கு கொஞ்சநேரம் கழித்துத் தான் மாட்டிக்கொண்டது புரிந்தது.
அந்தக் காட்டைப் பற்றி அவர் நிறைய கேள்விப்பட்டிருந்தார். அங்கும் இங்கும் வனவிலங்குகளின் ஓலம். தூரத்தே இடிந்த மண்டபம் ஒன்று தென்பட்டது. அங்கே ஓடிச்சென்று ஒதுங்கிக்கொண்டார். வீட்டில் தனக்காக உணவு சமைத்துக் காத்திருக்கும் மனைவி, பிள்ளைகளின் முகம் கண்முன் எழுந்தது. "இங்கிருந்து எப்படி வெளியேறுவது, எப்படி ஊர் திரும்புவது, சிவசிவா வழிகாட்டு" இதயம் படபடக்க இறைவனைப் பிரார்த்தித்தார். கண் திறந்தபோது திடுக்கிட்டார். வெள்ளையாடையும் தாழ்வடக்க மாலையும் அணிந்த ஒருவர் அவர் முன் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தார்.
"வழிதவறிவிட்டாய் என்பது தெரிகிறது. உனக்கு இரண்டு வாய்ப்புகள். திரும்பிப்பார்க்காமல் நேரே நடந்தாயென்றால் கொத்து முறித்துப் போட்டிருக்கும். அந்த வழியில் சென்றால் மலையடிவாரம் வரும். அங்கிருந்து உன் ஊருக்குச் செல்லும் வழி உனக்குக் தெரிந்திருக்கும். நாளை காலை வந்து மீண்டும் உன் மாட்டைத் தேடி பிடித்துச் செல்லலாம். அல்லது இங்கேயே இரவு தங்கியிருக்கலாம். காலையில் உனக்கு மாடு கிடைக்கும். என்ன செய்யப்போகிறாய்?"
அவர் தான் பேசுகிறாரா, இல்லை குரல் வேறெங்குமிருந்து வருகிறதா? ஐயோ..... கால் நிலத்தில் படுகிறது. திருநீறு எல்லாம் பூசியிருக்கிறார். அப்பாடா... முனிவர் தான் பேய் இல்ல.....
இந்த ஆள் துணையை விட்டு கும்மிருட்டில் தனியே காட்டுக்குள் நடப்பதை நினைக்க அவருக்கு குலை நடுங்கியது. "தனியப்போக பயமாய் இரிக்கி. காலமே மாட்டோடயே போறன்.. நீங்க இஞ்ச நிப்பேல் தானே?"
அவர் முகத்தில் மாறாத புன்னகை.
"சரி. இங்கு இன்றிரவு தங்கிவிட்டுச் செல். ஆனால் ஒரு நிபந்தனை"
முனிவர் சிரித்துக் கொண்டல்லவா நிற்கிறார். எங்கிருந்து இந்தக் குரல் வருகிறது. ஒருவேளை கருக்கல் இருட்டில் முகம் சரியாகத் தெரியவில்லையோ.....
"இங்கு நடக்கும் எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இது என் கட்டளை!"
அவர் ஒப்புக்கொண்டு தலையாட்டினார்.
முழுநிலவு எறிக்கத் தொடங்கியது. நல்ல அகிற்புகை வாசம் வீசியது. நேரம் ஆக ஆக, அந்த இடத்தில் மெல்ல மெல்ல நிலவு வெளிச்சம் பரவுவதையும் தனக்கு வழிகாட்டியவர் போலவே ஏராளமான சாமியார்கள் அங்கு ஒன்றுகூடுவதையும் அவர் கண்டார். யாரோ வரிசையாக தாமரையிலைகளைப் பகிர, பந்தியில் அமர்ந்து உணவுண்ணுமாறு அவர் அழைக்கப்பட்டார். அருகிலிருந்த மடுவில் கை கழுவி நிலவொளியில் பரிமாறப்பட்ட உணவைக் குழைத்து வாயில் வைத்தார். அப்பப்பா! அப்படி ஒரு உருசியான உணவை அவர் உண்டதே இல்லை. இதென்ன இப்படி தேவாமுறுதம் போல தித்திக்கிறது!
ஒருகணம் அவரில் சராசரிக் குடும்பத்தன் எழுந்தான். அடடே, வீட்டில் மனைவி பிள்ளைகள் இந்த அமுதை உண்டால் என்னென்னவெல்லாம் சொல்லி மகிழ்வார்கள். அரைக்கண்ணால் இருபுறமும் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துவிட்டு மெல்ல தன் வேட்டித்துணியில் அந்த சாப்பாட்டைக் கிள்ளி வைத்து முடிந்துகொண்டார். அருகில் இருந்தவர் எதையோ எண்ணி சத்தமிட்டுச் சிரித்தார். இவரோ ஒன்றும் நடவாதது போல் இலையை வழித்து உண்டு கைகழுவினார்.
மடுவின் தண்ணீரைக் கைகளால் அள்ளி ஒரு மிடறு அருந்தினார். அந்தத் தண்ணீர் சாப்பாட்டின் உருசியை இன்னும் கூட்டியது போல் இருந்தது. கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. இரத்தநாளங்களில் ஏதோ சுற்றிச்சுற்றி போதை போல் ஏறி தலைக்குள் வெப்பமான நீர்க்குமிழிகள் வெடித்தன. பளிச்சென்று மின்னல் போல் ஏதோ வெட்ட, கண்ணை மூடித் திறந்தவர் திகைத்தார்.
தான் அமர்ந்திருப்பது ஒரு இடிந்த கட்டடமா? அல்ல; இது ஆயிரங்கால் மண்டபம்! பொன்னும் மணியும் பூட்டி தகதகவென மின்னிக்கொண்டிருந்த தூண்கள், வண்ண மலர் மாலைகள், நட்சத்திரங்களென மின்னிக்கொண்டிருந்த பாவை விளக்குகள். தன்னிருபுறமும் அமர்ந்திருந்தவர்கள் அணிமணி ஆபரணங்கள் சூடிய தேவர்கள் என்பதை அவர் கண்டார். தானும் பட்டாடை சூடியிருப்பதை, தேவவடிவம் கொண்டிருப்பதை உணர்ந்தார். இதென்ன அதிசயம்!
வானிலிருந்து அரம்பையர் வந்திறங்கினர். ஆடலும் பாடலும் தொடங்கியது. கிண்கிணி துந்துபி முழங்கியது. அவர் என்றும் முகர்ந்திராத சுகந்தத்துடன் மலர்கள் சொரிந்தன. சட்டென அரகர ஓசை எழ, ஆயிரங்கால் மண்டபத்தின் மறு அந்தத்தில் திரை விலக தீபாராதனையில் ஓங்கி உயர்ந்த சிவலிங்கம் ஒளிப்பிழம்பென மின்னித் தெரிந்தது. பறையும் தம்பட்டமும் உச்சகதியில் ஒலித்தன. அவர் விக்கித்துப் போனார்.
அந்த இன்ப அதிர்ச்சியைத் தாங்கமாட்டாமல் மேனிசிலிர்த்து சிவசிவா என்று கண்ணீர் விட்டுக் கதறினார். கைகூப்பித் தொழுது அரற்றினார். தேவகணங்களுடன் இணைந்து ஆடிப்பாடினார். பறை! தம்பட்டம்! மேளம்! தாளம்! இசை! அரோகரா!
ஆடிக்கொண்டிருந்த அவர் மெய் சோர்ந்து மெல்லச் சரிந்தார். கண்கள் சொக்கி மூடின.
*****
முகத்தில் சூரிய ஒளி சுட்டு அவர் எழுந்தபோது, பயங்கரமாகத் தலைவலித்துக் கொண்டிருந்தது. அவருக்கு அருகே அவரது காணாமல் போன சிவலை "அம்மா" என்று முக்காரமிட்டு கழுத்து மணி அசைய தலையாட்டிக்கொண்டிருந்தது.
திடுக்கிட்டு எழுந்து அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். நன்கு விடிந்திருந்தது. அவர் அதே உடைந்த மண்டபத்தின் தூணொன்றில் சாய்ந்திருந்தார். முதனாள் அணிந்திருந்த கல்லும் முள்ளும் கிழித்த அதே வேட்டி. சுற்றிவர அதே காடு, அதே நிழல். அதே சில்லூறு. அவர் இரவு அனுபவித்த விடயங்கள் நடந்ததற்கான தடயங்கள் எதையுமே காணோம். ஆனால் அவருக்கு முன்புறமாக யாரோ "கொத்து முறித்துப்" போட்டிருந்தார்கள்.
நான் கனவேதும் கண்டேனா? யார் இந்த மாட்டைக் கொணர்ந்து விட்டார்கள்? அந்த முனிவர் சொன்னமாதிரி எனக்கு வழி காட்டுவதற்காக காட்டுமரக் கிளைகளைப் பறித்து கொத்துமுறித்துப் போட்டிருக்கிறதே!
சட்டென ஏதோ நினைவு வர, தன் இடுப்பைத் தடவிப் பார்த்தார். அடிவயிறு சில்லிட்டது. அங்கு அவர் முதனாள் இரவு முடிந்துவைத்த அமுது முடிச்சு இருந்தது!
என்றால்.... என்றால்.... அது உண்மை, அத்தனையும் உண்மை! தான் இரவு அங்கு வந்தது, அந்த முனிவர் தன்னை அமரச்சொன்னது, இன்னும் பல முனிவர்கள் வந்தது, எல்லோரும் சுவையான அமுதுண்டது... இதோ பக்கத்திலே அந்த பாசி படிந்த மடுவும் இருக்கிறதே... ஆனால்... அமுதுண்ட பின்னர் கண்ட அந்த மயிர்க்கூச்செறியும் காட்சிகள்.... தேவர்கள், அரம்பையர், முனிவர்கள், வாத்தியங்கள், நடனங்கள், அதெல்லாம் உண்மை இல்லையா? ஆகா, சோதிப்பிழம்பொன்றை கண்ணால் கண்டேனே... அது உண்மை இல்லையா? ஐயோ தலைவலிக்கிறதே!
அவருக்கு அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு அச்சமாக இருந்தது. வேகமாக மாட்டை இழுத்துக்கொண்டு "கொத்து முறித்துப்" போடப்பட்டிருந்த வழியில் வேகமாக ஓடினார். சீக்கிரமே சங்கமன்கண்டி மலையடிவாரத்தை வந்தடைந்தார். வேகவேகமாக மாட்டை காளையடியில் கட்டிவிட்டு வீட்டுக்கு சிட்டாகப் பறந்தார்.
*******
கிணற்றடியில் அவர் இடுப்பிலிருந்து வேட்டி முடிச்சைத் தடவிக்கொண்டிருந்தார். மனைவிக்குக் கொடுப்பதா, பேசாமல் எறிந்துவிடுவதா..... சே சே எறிவதற்கா இவ்வளவு தூரம் மினக்கெட்டு எடுத்துவந்தோம். சரி தான்... நடந்த ஒன்றையும் சொல்லக்கூடாது என்று தானே சாமியார் சொன்னார், சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லையே!
"இஞ்சே கேட்டயோ..."
"ஆ.. என்ன..."
"இஞ்சொள்ளம் வாவன், இத சும்ம சாப்புட்டுப் பாரு, புள்ளேலுக்கும் கிள்ளிக்குடு"
"இதென்னது... எங்கால இது உனக்கு.."
"அதென்னத்துக்கு உனக்கு, சொன்னா சாப்புட்டுப் பாரன்"
தூக்கிய புருவங்களுடன் மனைவி அந்த அமுதை வாங்கி கேள்விக்குறி மறையாத முகத்துடன் வாயிலிட்டு உமிழ்ந்து பார்த்தாள்.
"ஆய்..இதென்ன உவளவு ருசியாரிக்கி.. புள்ளே இஞ்ச வா!"
அமுதை உண்ட குழந்தைகள் வியப்புடன் அம்மாவைப் பார்த்தன. அப்படி ஒரு சுவையான உணவை அம்மா அதற்கு முன்பு செய்ததே இல்லையே!
"சரி, அங்கிட்டுப் போய் விளாடுங்கோ"... பிள்ளைகளை வேகமாக அந்தப்பக்கம் அனுப்பிய அவள் விடுவிடுவென்று கிணற்றடியில் குளிக்கத் தயாராகிக்கொண்டிருந்த கணவனை நெருங்கினாள்.
"இஞ்செண்டுறன்... அம்மாளறிய உண்மையச் சொல்லு.. இது உனக்கு ஆரு செஞ்சி தந்த.... ராவு நீ எவள் வீட்ட கிடந்து வந்த நீ" சொல்லும் போதே அவளது நாக்குளறியது.. "கண் மூடுற வரைக்கும் நீ எனக்குத் துரோகம் செய்யமாட்டாயெண்டு தான் சீவிச்சித்திருக்கன் நான்.. நீ என்ன ஏமாத்திறாயெண்டா எண்ட உடம்புல சீவன் இரியாது.." அவள் விம்மியழத் தொடங்கினாள்.
"ஏ.. ஏ.... பைத்தியமோ உனக்கு.. என்ன பேய்க்கத கதைக்கிராய் நீ உப்ப"
"அம்மாளறிய சொல்லு நீ.... ஆரு வீட்ட நிண்டண்டு மட்டும் சொல்லு நேத்து ராவு...."
மனைவியின் அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.. எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் கெஞ்சினார், ஒரு கட்டத்தில் "தயவுசெஞ்சி அத மட்டும் கேக்காதை... சொல்லக்கூடாத ரகசியம் எண்டு சத்தியம் செஞ்சிரிக்கன்..." என்றும் சொல்லிவிட்டார். அவள் ஓவென சத்தமிட்டு தொடங்கினாள். கணவன் யாரோ சககிழத்தி வைத்திருக்கிறார், அவள் செய்து கொடுத்த சாப்பாடு தான் அது, தங்கள் உறவு ஊருக்குத் தெரிந்துவிடும் என்பதால் சத்தியம் வாங்கியிருக்கிறாள். அவள் உறுதி செய்தே விட்டாள். குய்யோ முறையோ என்று மாரிலும் வயிற்றிலும் அடித்து அரற்றத் துவங்கினாள். தன் வாழ்வைக் கெடுக்க வந்த அந்தப் பெயர் தெரியாத இரண்டாமவளுக்கு மண்ணள்ளி வீசித் தூற்றினாள்.
சத்தம் கேட்டு கிடுகுவேலிகளுக்கப்பால் தலைகள் எட்டிப் பார்ப்பதை அவர் கண்டுவிட்டார். இனி மறைத்து பிரயோசனம் இல்லை. நடப்பது நடக்கட்டும்!
"இஞ்சே நீ கொம்புறத நிப்பாட்டு... நான் நடந்தத சொல்லுறன்..."
அவரது குரலிலிருந்த தீர்க்கத்தைக் கண்டதும் மனைவி அழுவதை நிறுத்தி அவரை வெறித்துப் பார்த்தாள். வேலியால் எட்டி விடுப்புப் பார்த்த கிழவிகள் கிடுகு வேலிகளுக்கு அப்பால் மணலைக் காலால் ஒதுக்கி, காதைத் தீட்டிக்கொண்டு தரையில் குந்தினார்கள்.
அவர் நடந்த முழுக்கதையையும் ஒரு வரி விடாமல் சொன்னார். குடும்பப் பாசத்தால் ஒரு பிடி அமுதை முடிச்சில் இட்டுக் கொண்டு வந்ததையும் அது இன்று தன்னை இவ்வளவு பிரச்சினைக்கு ஆளாக்கியதையும் அவரது மனைவியும் பிள்ளைகளும் நம்பியும் நம்பாமல் பேந்தப் பேந்த விழித்தார்கள். கடைசியாக அவர் சற்று சத்தமாகச் சொன்னதை அக்கம்பக்கம் ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த கிழவிகள் நன்றாகவே கேட்டார்கள்.
"எண்ட தலையறியச் சொல்லுறன், இந்த ஒருவாய் அமுது நேத்து ராவு அந்த சாமியாராக்களோட சாப்புட்டது... சத்தியமா வேறொருதரும் தரல" ஏதோ சன்னதம் வந்ததுபோல் கிணற்றுக்கட்டில் இருந்த முடிச்சில் கடைசிப் பிடி அமுதை அள்ளித் தன் வாயிலிட்டார். அதை அவர் வாயிலிட்டு மெல்லும் சத்தம் மட்டும் கொஞ்சநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. மனைவி தரையில் அமர்ந்து அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். காற்றும் அப்போது வீசாமல் நின்றது போலிருந்தது. கிடுகுவேலிக்கு அந்தப்பக்கம் ஒட்டுக்கேட்ட ஒரு கிழவி பெருமூச்சு விட்டு காய்ந்த சருகு ஒன்றை எடுத்து தரையில் படம் வரைந்தாள்.
மனைவி எழுந்து அவிழ்ந்த கூந்தலை முடிச்சிட்டுக் கொண்டையிட்டாள்.
"செரி, ஒண்ட மட்டும் சொல்லு... இத ஏன் அந்த சாமியார் ஊட்ட போய் ஆருக்கும் சொல்லக்கூடா எண்டு சத்தியம் வாங்கினாரு... நான் எப்புடி நம்புற இத"
அவர் அவளை ஏறிட்டுப் பார்த்துச் சொன்னார்..
"பே... பே.."
"என்ன?"
"பே... பே...."
"என்ன பெப்பே எண்டுறாய்... இத நான் எப்பிடி நம்புற எண்டு சொல்லு..."
"பே... பே...." அவர் கண்ணீர் வழிய தொண்டையைக் காட்டி கைகளை விரித்தார். மனைவிக்கு அப்போது தான் புரிந்தது..
"ஐயோ சங்கமக்கண்டியானே... எண்ட மனுசண்ட நாக்கு இளுத்துத்தே... "
******
சங்கமன்கண்டிக் காட்டில் சாமியாருக்குக் கொடுத்த வாக்கை மீறி மனைவியிடம் நடந்ததைச் சொன்ன அவருக்கு வாய் பேசமுடியாமற் போன கதை ஊர் முழுக்கப் பரவியது. ஒன்றிரண்டு பேராசைக்காரர்கள் தங்கத்தாலான ஆயிரங்கால் மண்டபத்தைத் தேடி காட்டில் அலைந்து வெறும் கையோடு திரும்பிவந்தார்கள். ஊர்ச் சண்டியர்கள் சிலர் அவர் சொன்னது பொய்யென்று நிரூபிக்கிறோம் என்று அந்தக் காட்டுக்குப் போய் ஓரிரவு தங்கித் திரும்பி வந்தார்கள். அதெல்லாம் பொய், அவர்கள் காட்டில் தங்கவில்லை. துவட்டா மலை எல்லையில் யானையும் சிறுத்தைப் புலியும் துரத்தியடித்து பின்னங்கால் பிடரியில் பட ஓடிவந்ததாக அவர்களது நண்பர்கள் கேலி செய்தார்கள். அங்கு முனிவர்கள் வசிப்பது உண்மை என்றும், அது தெய்விக பூமி என்பதையும், இதையெல்லாம் சோதித்துப் பார்க்காதீர்கள் என்றும் நம்பிக்கையுள்ள சிலர் சொன்னார்கள். எது எப்படியோ சங்கமக்கண்டி மலை ஆயிரங்கால் மண்டபத்தின் மகிமைக்குச் சாட்சியாக அவர் இறுதிவரை வாய் பேசாதவராகவே வாழ்ந்து மடிந்ததாக அவர் காலத்தவர்கள் கதை கதையாகச் சொல்லுவார்கள்.
*****
அம்பாறை சங்கமன்கண்டி மலைக்குமரன் கோவிலில் கடந்த 2016.01.31 தைப்பூசமன்று கருங்கல் வேல், அருணகிரியார், பாம்பன் சுவாமிகள் திருவுருவச்சிலைகள் நிறுவியதை முன்னிட்டு தென்னாடு மாத இதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி. முழுக்கட்டுரை இங்கே:

Comments
Post a Comment