தமிழ்ப் புத்தாண்டும் மரபுக்குறியீடுகளும்
புத்தாண்டு வாழ்த்துப் பரிமாறியபோது அவதானித்தது இது.
இவையா தமிழ்ப்புத்தாண்டின் அடையாளம்? புத்தாண்டுக்கான வாழ்த்து அட்டை, புத்தாண்டு மரபுகளைக் காண்பிக்க வேண்டாமா?
- சாமந்திப்பூக்கள் கொண்ட தோரணம் (சாமந்தி / marigold நம் மண்ணின் மலர் அல்ல; அது தென்னாசியாவில் தோன்றவில்லை; அமெரிக்காவிலிருந்து இறக்குமதியானது).
சாமந்திப்பூ நம் மண்ணின் மலர் அல்ல
- சுவசுதிகா சின்னம் பொறித்த நிறைகுடம் (வடநாட்டு மரபு, தமிழ் மரபில் திருநீறு சாற்றியிருப்பது அல்லது திலகம் தரித்தது)
நிறைகுடத்திற்கு திருநீறு சாற்றுவதே தமிழ்மரபு.
- நாமம் தரித்த சூரியன் (சமயக்குறி எதுவுமற்ற சூரியன், சைவத்தமிழ் மரபில் திருநீறு தரித்த சிவசூரியன்),
இப்படிப்பல. சரிதான் சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்.
பிற இனக்குழுக்கள், தங்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நிலம் சார்ந்த அல்லது நம்பிக்கை சார்ந்த மரபுகளைக் காண்பிப்பதில் எத்தனை வெற்றி பெற்றிருக்கின்றன என்பதற்குச் சான்றாக இணையத்தில் காணக்கிடைத்த பர்மிய, சயாமிய, சிங்கள, கலிங்க, சேரல இனக்குழுக்களின் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை இணைத்துள்ளேன்.
பர்மா - ஏழு மலர்கள், ஏழு இலைகள் வைத்த திங்க்யான் பானை. வியட்நாமிய தேசிய மலரான படௌக் (Padauk) - நம் வேங்கை.
தாய்லாந்து - தாய்லாந்தின் தேசிய மலரான ரட்சாபிருக் (பொருள்: இராசமரம்) வேனில் காலத்தில் பூக்கும் திருக்கொன்றை.
ஒடிசா - வெல்லம், தயிர், பால், விளா, மாம்பழங்கள் சேர்த்த “பனா பானம்” எனும் புத்தாண்டுப் பானம். இதையோ தண்ணீரையோ துளசிமாடத்தின் மீது துளையிட்ட பானையில் ஊற்றி துளசியை குளிப்பாட்டுதல் முதன்மையான சடங்கு.
இலங்கை - சிங்களவரின் புத்தாண்டு மலரான கல்யாண முருங்கை, சூரியன், குயில், (இன்னும் புத்தாண்டில் பால்பொங்கும் மரபு, றபான் இசைக்கருவி).
கேரளம்: மலையாளத்தில் கனிக்காணும் மலரான “கொன்றை”, அதிகாலையில் கண்விழித்ததும் விசுக்கனி காண வைக்கப்படும் மங்கலப்பொருட்கள், கைநீட்டம், (“விசுக்கட்டை” முதலான புத்தாண்டு உணவுகள்..)
சரி, இப்படி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து அட்டையில் இடம்பெறவேண்டிய முதன்மையான மரபு அடையாளங்கள் என்னென்ன?
நான் என் பிறந்தகத்தில் - (கிழக்கு) இலங்கையில் அவதானித்த மரபுகளைக் கொண்டு பட்டியல் இட்டிருக்கிறேன். இவை நிலம் சார்ந்தவை, பண்பாடு சார்ந்தவை என்பதால் நமக்கு அருகிலேயே வாழும், நம் நெருங்கிய, தூரத்து, ஒன்றுவிட்ட பண்பாட்டுப் பங்காளிகளிடமும் இவை இருக்கலாம்.
தமிழருக்குள்ளே கூட நிலம் சார்ந்து சிற்சில வேறுபாடுகள் இருக்கக் கூடும். அதனால் குறையொன்றுமில்லை. பரந்த தமிழ் உலக அடையாளத்தில் வேறு என்னென்ன மரபுகள் தவறவிடப்பட்டுள்ளன, எவ்வெவற்றைச் சேர்க்கலாம் என்பதை நீங்களும் கூறலாம். அவை அனைத்தையும் திரட்டியபின்னர் அதற்குள்ளிருந்து நமக்குத் தனித்துவமான மரபுகளை வெளிக்கொணர முடியும்.
இவ்வுரையாடலை ஆரம்பித்து வைத்த Nadesapillai Sivendran அண்ணா கூறியது போல், அடுத்த ஆண்டு புத்தாண்டிலேனும் இவ்வாறு பொதுமையான அட்டைகளைப் பயன்படுத்தாது, நாம் நம் மரபு அடையாளங்கள் இணைத்த வாழ்த்து அட்டைகளைப் பகிர்ந்துகொள்வது நமக்கான தனித்துவத்தை நிலைநிறுத்த உதவும்.
தமிழ்ப்புத்தாண்டு மரபு அடையாளங்கள்:
1. கொன்றை மலர்
2. சூரியன்
3 குயில்
4. ஊஞ்சல் (புத்தாண்டில் இங்கு முதன்மை விளையாட்டு)
5. மருத்துநீர்
6. கைமுழுத்தம் / கைவியளம் / கைநீட்டம் (கைவிசேடம் என்ற திசைச் சொல் வேண்டாமே! )
புத்தாண்டு அடிசில்கள்:
7. முக்கனி
8. அரியதரம் / பலகாரம்
9. முறுக்கு
10. பயற்றம் உருண்டை
11. இனிப்பு இடியப்பம் (சிங்களம். அசுமி, Asmi)
12. சர்க்கரைப் பொங்கல்
13. வேப்பம்பூ வடகம் / வேப்பம்பூ பச்சடி
மேலும் பரிந்துரைக்கப்பட்டவை:
14. பொன்னேர் பூட்டுதல் / நல்லேர் கட்டுதல் (திரு.கத்திவாக்கம் நவீனன்)
15. தமிழர் மரபு விளையாட்டுகள் - கிளித்தட்டு, பல்லாங்குழி, (போட்டியாக வைக்கலாம்) - (திரு.நடேசபிள்ளை சிவேந்திரன்)
அருகிவிட்ட மரபுகள்:
16. கனிகாணல்
17. வேங்கை, கலியாண முருங்கை முதலிய ஏனைய வேனில் மலர்கள்.






.jpeg)



Comments
Post a Comment