அரம்பையர் நகரம் | தாய்லாந்து 01
தாய்லாந்தில் ஒரு பயிற்சி நெறி. அறிவித்தல் கிடைத்துவிட்டாலும் பாங்கொக் செல்லப் போவதில்லை என்பதை அறிந்தபோது சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது. எங்கள் பயிற்சிநெறி தாய்லாந்தின் ஈசான் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈசான் என்றால் ஈசானமூலை. வடகிழக்குப் பகுதி. அங்கு நிகழ்வைப் பொறுப்பேற்றிருந்த ஊபன் ரச்சதானிப் பல்கலைக்கழகத்துக்கும் பாங்கொக்கிற்கும் சுமார் 600 கிமீ தூரம். உள்ளூர் வானூர்திச் சேவை இருந்தது.
ஆனால் பயணச்சீட்டு கையில் கிடைத்ததும் மகிழ்வாக இருந்தது. பாங்கொக் வானூர்தியகம் சென்று "ஊபன்" உள்நாட்டு வானூர்தி ஏறும் வரை இடைத்தங்கல் நேரம் 10 மணித்தியாலங்கள்!
பாங்கொக் சுவர்ணபூமி வானூர்தியகத்திலிருந்து பாங்கொக் நகருக்கு 32 கிமீ தூரம். ஆனால் நெரிசலால் பயணம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் எடுக்கலாம். போக வர இரண்டு மணிநேரம். பன்னாட்டுக் குடிவரவில் ஒன்றரை மணிநேரம். உள்ளூர் குடிவரவுக்கு ஒன்றரை மணிநேரம் என ஐந்து மணிநேரம் கழித்தாலும், ஐந்து மணித்தியாலம் எஞ்சியிருக்கிறது. ஆகா, நன்கு திட்டமிட்டால் பாங்கொக்கை சுற்றி விட்டு வரலாம் என்று தெரிந்தது. உடனே செய்தெண்மை, கூகிள் வரைபடம் உதவியோடு எங்கெங்கு போய் வரலாம் என ஒரு உலாவரைவு போட்டேன்.
பாங்கொக்கிற்கு காலை 6 மணிக்கு வந்தடைய வேண்டிய வானூர்தி, அதிகாலை ஐந்தே காலுக்கு வந்தடைந்த போது என் நல்வாய்ப்பு, இன்னும் நேரம் உள்ளது என்று மகிழ்ந்தேன். ஆனால் என் கெடுவாய்ப்போ என்னவோ பயணப்பெட்டி வந்துசேரப் பிந்திவிட்டது. குடிவரவிலிருந்து வெளியேறி நேரத்தைப் பார்த்தால் ஏழு மணி. உடன் வந்த அம்மையார் தான் வானூர்தியகத்திலேயே தங்கியிருப்பதாகவும் விரைவாக வந்துசேருமாறும் கூறி விடைபெற்றார்.
வானூர்தியகத்தில் நான் செய்த அடுத்த வேலை, தாய்லாந்துச் சிம் அட்டையொன்றை வாங்கியது தான். வேறெதுவுமே இல்லாவிட்டாலும் இணைய இணைப்பு இருப்பது அயல்நாட்டில் மிகப்பெரும் வசதி என்பது இந்தியப் பயணத்தில் நான் கண்டுகொண்ட அனுபவம். கடவுச்சீட்டை வழங்கி 699 தாய் பாத் பெறுமதியான இரு வாரங்களுக்கான சுற்றுலாப் பொதிச் சிம் அட்டையொன்று பெற்றுக்கொண்டேன். இலங்கை மதிப்பில் 7000 ரூபாய். பரவாயில்லை. இலங்கைத் தொலைத்தொடர்பு வழங்குநர்களின் அலைதல் roaming சேவையை விட இது இலாபகரமானது தான்.
இந்தச்சிறுபயணத்தில் பயணப்பெட்டிகளைத் தூக்கி அலைந்து திரிவது கடினம். வானூர்தியகத்திலேயே பயணப்பெட்டிகளை வைத்துச்செல்லும் சேமிப்பகங்கள் உள்ளன. மணித்தியாலங்களுக்கு அல்லது நாளுக்கு என கட்டணம் அறவிடுகிறார்கள். என் பயணம் அரைநாளைத் தாண்டும் என்பதால், பெறுமதியான பொருட்களை முதுகுப்பைக்கு மாற்றிவிட்டு, 200 பாத்திற்கு (இல. ரூ. 2000) இரண்டாம் மாடியிலிருந்த சேமிப்பகத்தில் பெரிய பயணப்பெட்டியை வைத்துவிட்டு வெளியேறினேன்.
நேரம் மட்டுப்படுத்தப்பட்டது என்பதால், பொதுப்போக்குவரத்தையோ தொடருந்தையோ நம்பமுடியாது. பாங்கொக்கில் முச்சக்கரவண்டிகளும் இல்லை. இதுபோன்ற பயணங்களுக்கு ஊபர், பிக்மீ போல, தென்கிழக்காசியாவில் புகழ்பெற்ற Grab எனும் செயலியே சிறந்தது என்றது செய்தெண்மை. அதைத் தரவிறக்கி நிறுவிக்கொண்டேன்.
இனிப் பயணத்தைத் தீர்மானிக்கவேண்டும். முதலில் ஏதாவது கடைத்தெருவுக்கும் போகலாமா என்றால், இடம் வலம் தெரியாத வெளியூர் ஒன்றில் நேரம் குறைவாக இருக்கும் போது சுற்றுலாத்தலமா, கடைவலமா என்றால், இரண்டில் ஒன்றைத் தேர்ந்து கொள்வதே புத்திசாலித்தனம் என்று பட்டது. பாங்கொக் என் கனவு நகரங்களில் ஒன்று. அங்கு கட்டாயம் சென்று பார்க்கவேண்டிய பட்டியலில் குறைந்தது மூன்று இடங்களை ஏற்கனவே குறித்து வைத்திருந்தேன். எனவே கனவுப்பட்டியலையே தேர்ந்துகொண்டேன். தேவத்தானம் எனும் சிவன் கோவில், அதனருகே திருவெம்பாவை விழா கொண்டாடப்பட்ட பேரூஞ்சல். இரண்டுக்கும் சற்று தள்ளி அமைந்திருந்த சீலோம் உமாதேவி மாரியம்மன் கோவில்.
செய்தெண்மையிடம் கேட்டபோது ஐந்து மணிநேரத்துக்குக் கச்சிதமானது என்று வேறொரு பட்டியலைத் தந்திருந்தது. பாங்கொக் செல்வோர் தவறாமல் செல்லும், வத் அருண், வத் பிரான் கேவ், வத் போ, தங்கமலை எனும் நான்கு விகாரங்கள். நான் பாங்கொக் நகரினூடே பாயும் சவோ பெரியாறு ஆறையும் பார்க்க ஆசைப்பட்டதால், “வத் அருணிலிருந்து வத் போவிற்கு படகில் போ, பக்கத்தில் தான்” என்றது.
வத் அருண், Chao Phraya ஆற்றின் அக்கரையில் உள்ள பெருவிகாரம். சீனப்பளிங்குப் பீங்கான் துண்டுகள் பொறிக்கப்பட்டு காலையும் மாலையும் சூரிய ஒளியில் பளபளக்கும் வானுயர்ந்த 70 அடி உயரமான தூபி கொண்ட விகாரம் அது. பாங்கொக்கின் நிலக்குறிகளில் ஒன்றாகவும் போற்றப்படுவது. மற்ற இடங்களெல்லாம் ஆற்றின் கிழக்கே இக்கரையில் “பிரான் நகர்” (Phra Nakhon) எனும் தலைநகர்ப் பகுதியில் அமைந்துள்ளன.
ஆற்றைப் படகில் கடந்து இக்கரை வந்தால், வத் போ பழைய அரண்மனைக்கருகில் உள்ளது. 150 அடி நீளமான பள்ளிகொள்ளும் புத்தர் சிலைக்காகப் புகழ்பெற்றது. பக்கத்திலே அரண்மனை வளாகத்திலுள்ள கோவில் வத் பிரான் கேவ் (Wat Phra Kaew). அது தான் தாய்லாந்தின் அரசக்கோவில். அங்கு தாய்லாந்தின் அரச அடையாளமான மரகதப் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றிலிருந்து சற்றுத்தள்ளி கிழக்கே இரண்டு கிமீ தொலைவில் நான் பார்க்க ஆசைப்பட்ட பேரூஞ்சலும் தேவத்தானம் கோவிலும் உள்ளன. அங்கிருந்து இன்னும் கிழக்கே ஒரு கிமீ சென்றால் பொன்மலை விகாரம். அங்குள்ள சிறுகுன்றில் ஏறினால் பாங்கொக் நகரை முழுமையாகக் காணலாம்.
ஆனால் ‘இவ்வளவும் பார்த்துவிட்டு சீலோம் மாரியம்மன் கோவிலுக்குப் போவது நல்ல முடிவல்ல’ என்று எச்சரித்தது செய்தெண்மை. அது பிரான் நகரிலிருந்து சுமார் ஏழு கிமீ தொலைவில் தென்கிழக்கே அமைந்திருந்தது. பாங்கொக்கின் வாகன நெரிசல் எதிர்வுகூற முடியாதது என்பதால் ‘நீ உள்நாட்டு வானூர்தியைத் தவறவிடலாம். விரைவாக வானூர்தியகம் திரும்ப யோசி’ என்றது.
இறுதியாக என் பயணத்திட்டத்தை மாற்றிக்கொண்டேன். எப்படியேனும் என் கனவு இடங்கள் மூன்றுக்கும் போவது. சீலோம் போகும் வழியில் பொன்மலை விகாரத்துக்குப் போவது. நேரம் கிடைத்தால் மட்டும் அருகருகே இருக்கும் வத் அருண் முதலான இடங்களுக்குச் செல்வது. உள்நாட்டு வானூர்தியைத் தவறவிடும் பிழையான முடிவுக்குச் செல்லவே கூடாது. கூடியது மதியம் 1 மணிக்கு பாங்கொக்கிலிருந்து கிளம்பிவிடவேண்டும்.
வானூர்தியக வாசலில் கிராப் செயலிக்கான முனையம் இருந்தது. அங்கு சென்று பாங்கொக் பேரூஞ்சலுக்கு மகிழுந்தைப் பதிவுசெய்தேன். பத்து நிமிடத்தில் ஓட்டுநர் வந்து “சவந்தி காப்” என வணக்கம் கூறி வரவேற்றார். வண்டி பாங்கொக் நோக்கி நகர்ந்தது.
சைவமும் வைணவமும் புத்தமும் அவ்வப்போது ஊடியும் கூடியும் கீழை உலகை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் தாய்லாந்து "சியாமம்" என்று அழைக்கப்பட்டது. பின்பு சயாம். சயாமின் பாங்கொக் 17ஆம் நூற்றாண்டு வரை சவோ பெரியாறு ஆற்றின் மேற்குக்கரையில் இருந்த ஒரு சிற்றூர். "பாங்கொக்" என்பது "அம்பழங்கா அல்லது புளிமா ஊர்" என்ற தாயிமொழிச் சொல்லின் திரிபு.
18ஆம் நூற்றாண்டுச் சீன பர்மியப் போரில் சயாம் நாட்டின் பழைய தலைநகரான அயோத்தியா (அயுத்தயா) அழிந்தபோது, சிதறிக்கிடந்த இன்றைய தாயிலாந்தின் பாகங்கள் இணைக்கப்பட்டு பாங்கொக் அருகே தனபுரி (தோன்புரி) அரசு உண்டாக்கப்பட்டது. சிறிது காலமே நீடித்த தனபுரியின் இறுதிக்காலத்தில் "முதலாம் இராமர்" மன்னராகி, பெரியாற்றின் கிழக்குக்கரையில் இரத்தனகோசின் அரசுக்கென புதிய நகரை உருவாக்கினார்.
இரத்தனகோசின் என்றால் "இரத்தினகோச இந்திரம்". இந்திரனின் இரத்தினப் பாத்திரமாக வருணிக்கப்பட்ட நகரம். இதற்கு சூட்டப்பட்ட புதிய உள்ளூர்ப்பெயர் குருங்தெப் (அரம்பையர் நகரம்). ஆனால் பொதுவழக்கில் அக்கரையில் இருந்த ஊரின் பழைய பெயரான பாங்கொக் என்பதே நிலைத்துவிட்டது. ஆனால் தாயி மக்கள் குருங்தெப் என்றே தங்கள் தலைநகரை அழைக்கிறார்கள்.
அஞ்சிய அளவுக்கு வாகன நெரிசல் இருக்கவில்லை. அன்று வியாழக்கிழமை என்றதால் இருக்கலாம். தட்பவெட்பம் கூட அவ்வளவு வித்தியாசம் இல்லை. இலங்கை போலத்தான். அதே மரங்கள். அதே பறவைகள். ஆனால் பெருந்தெருக்கள் நல்ல அகலமானவை. ஓரங்களில் கொன்றையும் வேங்கையும் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்தன. அதே வேனில் காலம். அங்கும் சித்திரைப்புத்தாண்டு தான் கொண்டாடுகிறார்கள். சங்கிராந்தி அல்லது சொங்கிரான் பண்டிகை நிறைவுற்று இரு வாரங்கள் கடந்திருந்தன. பதாதைகள், தட்டிகள் சிலவற்றில் சொங்கிரான் விளம்பரங்களும் இருந்தன.
ஆனால் பாங்கொக்கை நெருங்க நெருங்க வானளாவிய கட்டடங்கள் எழுந்துவந்து சூழ்ந்தன. ஐரோப்பிய நகரமொன்றில் நுழைகிறோமா எனும் திகைப்பு. இடையிடையே மஞ்சள், சிவப்பு நிறங்களில் பூத்துக்குலுங்கும் பசுஞ்சோலைகளும் என்று அத்தனை இரம்மியமாக இருந்தது பாங்கொக் நகரம்.
நாற்பது நிமிடப் பயணத்தில் காலை 8.20இற்கு பேரூஞ்சல் அருகே மகிழுந்தைக் கொணர்ந்து நிறுத்தினார் ஓட்டுநர். வீதியின் நடுவே ஒரு சிறுமுற்றத்தில் எழுபதடி உயரத்தில் செந்நிறத்தில் கம்பீரமாக நின்றது பேரூஞ்சல். ஒருகாலத்தில் திருவெம்பாவை இசைக்கப்பட்ட மண்ணில் கால் பதிக்கிறேன்.
திருவெம்பாவையை பத்து நாள் விழாவாகக் கொண்டாடுவதும் அதன்போது ஊஞ்சலாடுவதும் அயோத்தியா அரசு காலத்திலிருந்தே நீடித்த வழக்கம். பாங்கொக் நகரம் முதலாம் இராம மன்னரால் உண்டாக்கப்பட்டபோது, தேவத்தானம் எனும் சிவாலயமும் அதன் முன் பேரூஞ்சலும் 1784இல் அமைக்கப்பட்டன. திருவெம்பாவை ஊஞ்சல் விழா பன்னிரு அரச விழாக்களில் ஒன்றாகத் தொடர்ந்துவந்தது. (கார்த்திகையும் புத்தாண்டும் அவற்றில் இன்றும் நீடிக்கின்றன). மன்னர் தேர்ந்தெடுக்கும் ஒருவர் சிவனாக தான்னை அலங்கரித்து இந்த ஊஞ்சலில் ஆடுவார். அது நாட்டுக்கு நற்பேறைக் கொணரும் எனும் நம்பிக்கையில் பெருந்திரளான மக்கள் கூடிக் கண்டுகளித்து வந்தனர். ஆனால் இதில் விபத்துகளும் உயிர்ச்சேதங்களும் நீடித்து வந்தன. மின்னல் தாக்கத்தால் ஊஞ்சல் சேதமடைந்ததும் உண்டு. 1935இல் இறுதியாக நிகழ்ந்த ஊஞ்சல் விழா பின்னர் இரண்டாம் உலகப்போர், பெருஞ்செலவு, உயிர்ச்சேதம், ஊஞ்சல் சேதம் முதலிய பல்வேறு காரணங்களால் அதன்பிறகு நிகழ்த்தப்படவில்லை.
பேரூஞ்சலுக்கு அருகே சுதர்சன தேவாரராமம் (வத் சுதத் தெபரவாரம் - Wat Suthat Thepwararam) எனும் அழகான புத்தவிகாரமொன்றுள்ளது. தாய்லாந்தின் எழிலார்ந்த சரிந்த கூரைகள் கொண்ட விகாரக் கட்டுமானக்கலை. வெண்ணிறச் சுவர்களும் பளிங்குத்தரையும் காலை இளவெயிலில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. 1848ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இவ்விகாரத்தில் 14ஆம் நூற்றாண்டு சுகோதை அரசின் இடிபாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 25 அடி உயரமான வெங்கலப் புத்தர் படிமம் நிறுவப்பட்டுள்ளது. தாய்லாந்தின் தலைமைப் பிக்குவின் வாசத்தலம் இவ்விகாரம். வெளிநாட்டினருக்கு நூறு பாத் நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறார்கள்.
வாயிலில் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்தில் தமிழ்க்கிரந்த ஓம் உள்ளது. தேவத்தானம் சிவாலயத்தில் தாயி கட்டுமானக்கலையில் கூரை வேய்ந்த மூன்று சன்னதிகள் உள்ளன. முதலாவது தாயி கலைப்பாணியில் அமைந்த சிவன் சன்னதி. மூலவராக சிவன், பார்வதி வீற்றிருக்க, தமிழக நடராசர் சிலையும் வேறு சில சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அடுத்து இருப்பது பிள்ளையார் சன்னதி. மூலவராக தாயி கலைப்பாணிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார். அடுத்தது நாராய் சன்னதி. அங்கும் தாயி கலைப்பாணித் திருமால் தன் இரு தேவியருடன் வீற்றிருக்கிறார்.
சிவன் சன்னதிக்கும் பிள்ளையார் சன்னதிக்குமிடையே சிவலிங்கமொன்று நிறுவப்பட்டுள்ளது. வாயிலில் தாயி மரபுப்படி பிரமன் சன்னதியும் உள்ளது. எங்கும் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.
சிவன் சன்னதியில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையின் முதல் பதினொரு பாடல்களையும் திருமால் சன்னதியில் மீதி ஒன்பது பாடல்களையும் பாடி திருவெம்பாவை விழா இன்றும் கொண்டாடுகிறார்களாம்.
பொன்மலை விகாரம் பேரூஞ்சல் வளாகத்திலிருந்து ஒரு கிமீ தூரத்திலுள்ள சிறு குன்று. நான் கூகிள் வரைபடத்தைப் பார்த்து குறுக்கு வழியில் நடந்து சென்றேன்.
பொன்மலை எனப்படும் குன்று இயற்கையானதல்ல. மூன்றாம் இராம மன்னர் இங்கு ஒரு பெரிய தூபி கட்ட முனைந்தபோது, மென்மையான மணல், கட்டுமானத்துக்கு இடம்கொடுக்காது தூபி சிதைந்து மண்மேடானது. நான்காம் ஐந்தாம் இராம மன்னர்கள், மேலும் மண்ணரிக்காது தடுக்க அதைச்சுற்றிச் சுவரெழுப்பி படிகளும் அமைத்து, உச்சியில் இலங்கையிலிருந்து பெற்ற புனிதச்சின்னங்களை வைத்து சிறு தூபி கட்டினர். அதுவே இன்று பொன்மலை விகாரம் எனப் புகழ்பெற்று விளங்குகின்றது. இதன் உச்சியில் நின்று பார்த்தால் பாங்கொக்கின் முழு அழகையும் இரசிக்கலாம் என்பதால் இது சுற்றுலாத்தலமாகவும் விளக்குகின்றது. அருகில் இலங்கை அனுரைப் போதிமரத்தின் கிளை ஒன்றும் நட்டுப் பராமரிக்கப்படுகின்றது.
அப்போது நேரம் பத்துமணி. மேலே ஏதோ புத்தச்சடங்கு இடம்பெற்றுக் கொண்டிருந்தது. உச்சித்தூபிக்கு பதினொன்றரை மணிக்குப் பிறகே செல்லலாம் என்றார்கள். அனுமதிக்கப்பட்ட இடம் வரை சுற்றிப் பார்த்துவிட்டு நேரம் கருதி திரும்பிவிட்டேன். அங்கிருந்து கிராப் செயலியில் சீலோம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்ல விண்ணப்பித்தேன்.
சீலோம் மாரியம்மன் கோவிலை தாயி மக்கள் வத் கெக் (இந்தியர் கோவில்) என்றும் வத் மகா உமாதேவி என்றும் அழைக்கிறார்கள். அவர்களுக்கு மாரியம்மன் புதுத்தெய்வம். ஆனால் உமாதேவியைத் தெரியும். முன்னாள் சைவர்கள் சிலர் இருந்தார்களே. சிங்களவர்கள் எல்லா அம்மன்களையும் பத்தினித் தெய்வம் கண்ணகியாகப் பார்ப்பது போல என்று பின்பு புரிந்துகொண்டேன்.
அது தமிழ்நாட்டிலிருந்து பாங்கொக் சென்ற வைத்தி படையாட்சி என்பவரின் தலைமையில் அங்கு குடியிருந்த ஏனைய தமிழரால் 1879ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவில். மூலவராக மாரியம்மன் வீற்றிருக்க முன்புறம் சிறு சிவாலயமும் அமைக்கப்பட்டுள்ளது. பரிவாரங்களாக பிள்ளையார், முருகன், கண்ணன், காடேறி, காத்தவராயன் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருக்கிறார்கள். பின்னாளில் தாயி மரபுப்படி பிரமன் சன்னதியும் முன்புறம் இராசகோபுரமும் கம்பீரமாக நிற்கின்றது.
சீலோம் மாரியம்மன் கோவில் எனக்கு விந்தையான அனுபவமொன்றைத் தந்தது. வெளியே கோவிலின் பெயர்ப்பலகையும் கோபுரம் கட்டடக்கலைகளும் தமிழ் உணர்வைத் தந்தாலும், உள்ளே பெயர்ப்பலகைகள் பெரும்பாலும் தாயி மொழியில் தான். உள்ளே பூசகர் இரு தென்னிந்தியர் தவிர, அங்கு வழிபட்ட சகலரும் தாயி மக்களும் சீன மக்களும். சாமந்திப் பூக்களும் தேங்காய், பழங்களும் முன்புள்ள கடைகளில் வாங்கி அதற்கென வைக்கப்பட்டுள்ள நிறுத்தியில் வைத்து வணங்குகின்றார்கள்.
ஒரு இளம்பெண், சம்மணம் கொட்டி அமர்ந்து கையில் தாயி மொழியில் எழுதிய ஏதோ ஒரு மந்திரத்தை அல்லது வேண்டுதலை வாய்விட்டுப் படித்துக் கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தாள். கண்ணீர் மல்க, “ஓம் சக்தி ஓம்” என்றும், வேறு சங்கத மந்திரங்களை உணர்ச்சிப் பெருக்குடன் உச்சரித்தபடியும், மாரியம்மன் முன் கைகுவித்து நின்ற தாயி இளைஞர்களையும் தாயி இளம்பெண்களையும் அந்த நாளும் அதற்குப் பின்னும் எந்தத் தாயி வழிபாட்டிடத்திலும் நான் காணவில்லை. அவர்கள் எல்லோருடைய இளவயதும் எனக்கு உறுத்தலாக இருந்தது. அத்தனை பத்திமையுணர்வுடன் சொந்தநாட்டிலோ தமிழகத்திலோ இளம் தமிழர்களை, சிங்களவர்களைக் கூடக் கண்டதில்லை.
சீலோம் மாரியம்மன் திருமணம், காதல், குழந்தைப்பேறு முதலான வரங்களை அருள்பவள் என்ற நம்பிக்கை தாயி மக்களிடமும் ஆழ வேரூன்றியிருப்பதை அங்கு அறிந்துகொண்டேன். கொஞ்சநேரம் அந்தப் பரவசத்தில் ஆழ்ந்து கோவிலில் நின்றுகொண்டேன்.
சீலோம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா சுற்றுலாப்பயணிகளை ஈர்ர்குமளவு புகழ்பெற்றது. இறுதி நாளிரவு ஐந்து தேர்களில் பிள்ளையார், முருகன், கண்ணன், காத்தவராயன், உமாதேவி என்போர் நகர்வலம் வருவார்களாம். வீதிவலத்தில் வட இந்தியா போல துர்க்கா பந்தல்கள் பல அமைக்கப்பட்டிருக்கும் என்றும் அங்கெல்லாம் தாயி, சீன மக்கள் குவிந்து நின்று வழிபடுவார்கள் என்றும் இணையத்தில் படித்தேன். உமாதேவிக்கு முன் சிதறுதேங்காய் உடைத்து நேர்த்திமுடிக்கும் யூடியூப் விழியமொன்றையும் பார்த்து வியந்தேன். தாயிலாந்துப் புத்தசமயிகளிடையே உமாதேவி வழிபாடு பெற்று வரும் முக்கியத்துவத்தை ஆராயும் சுவையான ஆய்வுக்கட்டுரைகளும் உள்ளன.
சீலோம் மாரியம்மன் கோவிலருகே சீலோம் வீதியில் நடந்தால் ஆனந்தபவன் என்ற தமிழ்ப்பெயர் பலகையோடு ஒரு கடை தென்பட்டது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. வேறெதையும் யோசிக்காமல் போய் உட்கார்ந்துகொண்டேன். உள்ளே போய் அமர்ந்ததும் அருகில் வந்த இளைஞரிடம் “சாப்பிட என்ன இருக்கு?” என்று கேட்டேன். அவர் இந்தியில் ஏதோ பதிலளித்தார். பிறகு தான் கடையில் ஒலித்துக்கொண்டிருந்தது ஏதோ பிள்ளையாரின் இந்திப்பாடல் என்பதை செவி உணர்ந்தது.
உணவுப்பட்டியலில் தெற்கு, வடக்கு பேதமின்றி எல்லா இந்திய உணவுகளும் இருந்தன. பிறகு வந்து மேசையைத் துடைத்த இளம்பெண்ணும் வடநாட்டவர் என்பதைக் கண்டேன். கொஞ்சம் முந்தித் தான் ஒரு தமிழ்க்கோவிலில் தாய் மக்கள் கசிந்துருகி வழிபடுவதைக் கண்டு நெஞ்சம் நிறைந்து வந்திருந்த எனக்கு, பெரிய ஆச்சரியம் இருக்கவில்லை.
சப்பாத்தியும் தேநீரும் சொன்னேன். கொஞ்சம் தாமதமாகவே வந்தாலும் சுடச்சுட நன்றாகத் தான் இருந்தன.
ஆனால் கடையில் உண்டுகொண்டிருந்த இரு குடும்பத்தவருமே தமிழர்கள் தான் என்பதை உடையிலும் பேச்சிலும் கண்டுகொண்டேன். ஒரு குடும்பத்தினர் புன்னகையுடன் விடைபெற்றனர். அடுத்து இருந்தவர்கள் தமிழா, எந்த ஊர், எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று ஆதூரமாக விசாரித்தனர். நானும் சொன்னேன். தமிழ்நாட்டினர். தொழில் விடயமாக இங்கு வந்திருக்கிறார்களாம். அந்தப் பெண்மணி “தன் தந்தை இலங்கைக்குத் தோட்டத்தொழிலுக்குச் சென்று திருப்பி அனுப்பப்பட்டவர்” என்றார். இலங்கைத் தமிழரைச் சந்தித்தது மகிழ்ச்சி என்றார்.
தேநீர் சூடாக உள்ளே இறங்கியது. மணி பன்னிரண்டாகி இருந்தது. அதற்குப் பிறகு ஏனைய இடங்களுக்குச் செல்ல மனமிருக்கவில்லை. கிராப்பில் சுவர்ணபூமி வானூர்தியகத்துக்கு விண்ணப்பித்தேன்.
வண்டியில் ஏறிக்கொண்டேன். நெற்றியில் குங்குமத்தோடு ஒரு சீனத்தம்பதி வீதியைக் கடந்துகொண்டிருந்தது. வெளியே மெல்லிய தூறல். ஆனந்தபவன், அருள்மிகு மகாமாரியம்மன் கோவில் என்ற தமிழ் எழுத்துக்கள் வலப்புறம் தெரிந்தன. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் என் முப்பாட்டன்கள் பாடிய வரிகளை நினைந்துகொண்டேன். ஏனென்று தெரியாமல் உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கசிந்தன. அந்த வண்டி சீலோம் தெருவில் மாரியம்மன் கோவிலைத் தாண்டிச் செல்லத்தொடங்கியது.







Comments
Post a Comment