கீழைக்கரையின் தனித்துவம்: தேசத்துக்கோவிலும் திருப்படைக்கோவிலும்
இந்தக் கட்டுரை கொஞ்சம் நீளமான கட்டுரை. கிழக்கின் சாதியம், பிரதேசவாதம், கோவில் வழிபாட்டு முறைகள், தனித்துவமான மரபுகள் என்று ஓரளவு அலுப்படிக்கலாம் என்பதால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகிறேன். ஆனால் கிழக்கிலங்கை, வரலாறு, சமூகவியல், மானுடவியல், ஓரளவு சர்ச்சை என்பவற்றில் ஆர்வம் கொண்டவர்களை நிச்சயமாக ஏமாற்றாது. 😀 நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். மானுடவியல் பேராசிரியர் மார்க். பி.விட்டாகரின் "Amiable Incoherence" என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அந்தத் தலைப்பே கவித்துவமானது. நமக்கு சில நண்பர்கள் இருப்பார்கள் அல்லவா? நேரில் கண்டால் காது வரை சிரிப்பார்கள், தோளில் கை போடுவார்கள், அத்தனை அன்பாகப் பேசுவார்கள். ஆனால் அடியாழத்தில் எங்கோ நம் மீது கசப்பு இருக்கும். நாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உணர்த்திக்கொண்டே இருப்பார்கள். அது தான் Amiable Incoherence. நெருக்கமில்லாத நட்பு என்று மேம்போக்காக மொழிபெயர்க்கலாம். ஓரளவு உள்ளூர் மொழியில் சொல்வதென்றால் "பளக்கம் போல படம் காட்றதுகள்" 😄 இலங்கைத்தமிழ...